இன்று சிங்கையில் கூலி திரைப்படத்தைச் சென்று கண்டு களித்தேன். அனைத்து திரையரங்குகளிலும் சுமார் 75% காட்சிகள் விற்றுத் தீர்த்திருந்தன. கிடைத்த ஒரு ஆசனத்தை எடுத்துக்கொண்டு திரையரங்கினுள் சென்று அமர்ந்து கொண்டேன்.
திரைப்படம் ஆரம்பித்து சற்றே வேகமெடுக்க முதல் 40 நிமிடங்கள் கடந்துவிட்டன. அதன் பின்னர் திரைக்கதை மெல்ல மெல்ல வேகமெடுத்து ஒடத் தொடங்கியது. திரையெங்கும் ரஜினியின் உச்சக் காட்சிகள் நிறைந்திருந்தன.

திரையெங்கும் ரஜினி நிறைந்திருக்கின்றார் அது போலவே திரைக்கதையெங்கும் லோகேஷ் நிறைந்திருக்கின்றார். லொகேஷின் முத்திரைக் காட்சிகள் மற்றும் திருப்பங்கள் கதையெங்கும் நிறைந்திருக்கின்றன.
அனிருத்தின் இசை பயங்கரமாக அதிர்கின்றது. அனியின் இசையில்லாமல் இந்த திரைப்படம் இவ்வளவு இலயித்திருக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
திரைப்படத்தில் நாகார்ஜூணா, அமீர் கான், உபேந்திரா, சத்தியராஜ், சுருதி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நிறைந்திருந்தது. நட்சத்திரங்கள் நிறைந்ததால் என்னவோ அவ்வளவாக அனைவரையும் பயன்படுத்தவில்லை. தன்னைச் லியோ படத்தில் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று சஞ்சே டத் குறை சொன்னது நினைவில் வந்து சென்றது.
சந்தியராஜ் கூட திரைப்படத்தில் ஊறுகாய் போலவே வந்து போகின்றார். அவரும் ரஜினியும் ரெட்ரோ காட்சிகளில் அபாரம். திரையரங்கே விசில் பறக்க அதிர்ந்தது. உபேந்திரா சிறு அளவான காட்சிகளில் வந்து சென்றாலும் சண்டைக் காட்சிகளில் நெருப்புத் தெறிக்க விட்டுள்ளார். சுருதியின் பாத்திரம் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தது. அரிதாரம் ஏதும் பூசாமல் நடித்துள்ளார் ஆனாலும் அந்தப் பாத்திரத்திற்கு அவர் அவ்வளவாக ஒட்டவில்லை.
ரஜினியைத் தவிர மலையாள நடிகர், எங்கள் மஞ்சுமேல் பாய்ஸ் புகழ் சுபின் அடித்துப் பின்னியுள்ளார். பகத் பாசிலைத்தான் இவர் பாத்திரத்திற்கு ஆரம்பத்தில் அணுகினாலும் அவர் வேறு திரைப்படங்களில் பணியாற்ற ஏலவே ஒத்துக் கொண்டுவிட்டதால் இந்த திரைப்படத்தை ஏற்றுக் கொள்ளவில்லையாம்.
கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் திரையில் கண்டு களிக்கக்கூடிய திரைப்படம். தயங்காமல் பெரிய எதிர்பார்ப்புகளைத் தவிர்த்துச் சென்று பாருங்கள்.
கூலி – கெட்ட பையன் சார்!
Leave a Reply