Category Archives: பகுக்கப்படாதவை

Scarface விமர்சனம் (1983)

அல் பாசினோ ஹாலிவூட் கண்ட ஒரு பெருமகன் என்பதில் ஐயம் இல்லை. திரைப்படத்தைப் பற்றி எழுத முன்னர் அவரைப் பற்றி சில வரிகள் எழுதியே ஆக வேண்டும். நான் முதல் முதலாகப் பார்த்த அலபாசினோ திரைப்படம் ‘Scent of a Woman’ எனும் திரைப்படம். கண் தெரியாத ஒரு வயதான நபராக வந்து திரைப்பட முடிவில் அனைவர் மனதையும் அள்ளிச் செல்வார். சில ஆண்டுளின் பின்னர் இவர் நடித்த உலகப் புகழ் பெற்ற திரைப்படமான ‘The Godfather’ திரைப்படத்தைப் பார்த்தேன். இள வயதில் எத்தனை துடிப்பான ஆண் அழகுடன் மிடுக்காக நடித்து இருக்கின்றார். அதைத் தொடரந்து பார்த்ததே இந்த ‘Scarface’ திரைப்படம்.

எங்கள் கொலிவூட் அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த படம் பில்லா 2 கூட இந்த திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகவே கூறப்பட்டது. இன்னும் பில்லா 2 திரைப்படத்தைப் பார்க்காத காரணத்தால் அதை உறுதிசெய்ய முடியவில்லை.

1980ம் ஆண்டு கியூப அதிபர் பிடல் காஸ்டோ கியூபாவில் தங்க விருப்பம் இல்லாத அனைவரும் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று உத்தரவிட்டார். ஏப்ரல் 1980 முதல் அக்டோபர் 1980 வரை சுமார் 125,000 கியூபர்கள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை வந்தடைந்தனர். இந்த அகதிகள் வருகையை அமெரிக்கா அவரசமாக நிறுத்தியதன் காரணம் வந்து சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் சிறைச்சாலையில் இருந்து வெளியேறியவர்களும் மனோநிலை சரியில்லாதவர்களுமாவர்.

இந்த நிகழ்வை மையமாக வைத்து பல ஹாலிவூட் திரைப்படங்கள் இயக்கப்பட்டன (The Perez Family (1995), and Before Night Falls (2000)). இந்த ஸ்கார்பேஸ் திரைப்படமும் இவ்வாறு படகில் அமெரிக்கா வந்த ஒரு அகதியைச் சுற்றி நடக்கும் கதையையே களமாகக் கொண்டுள்ளது.

படகில் வரும் கியூப அகதிகள்

1980 இல் அகதியாக அமெரிக்க மண்ணில் கால் பதிக்கின்றார் டொனி (அன் பாசினோ) மற்றும் அவர் நண்பர்கள். பீரீடம்டவுன் எனும் அகதி முகாமில் அடைக்கப்படுகின்றான். போதைப் பொருள் கடத்தும் ஒருத்தன் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே அகதி முகாமிற்கு அடைக்கலம் தேடி வரும் முன்னாள் கியூப அரச அதிகாரி ஒருத்தரை கொலைசெய்கின்றான் டொனி. இதற்குப் பரிகாரமாக டொனிக்கும் அவன் நண்பனிற்கும் கிரீன் கார்ட் சட்டத்திற்குப் புறம்பாகக் கொடுக்கப்படுகின்றது.

இயக்கம் :Brian De Palma
தயாரிப்பு : Martin Bregman
வசனம் : Oliver Stone
நடிப்பு : Al Pacino
தொடுப்புகள் : IMDB
: Rotten Tomatoes
: Wiki

இதன் பின்னர் ஒரு உணவகத்தில் டொனியும் அவன் நண்பனும் வேலைசெகின்றனர். வாழ்க்கையில் பெரிதாக எதையும் செய்ய வேண்டும் என எண்ணும் டொனி தனது நண்பன் உதவியுடன் உணவக வேலையை விட்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றான்.

இந்த தொழிலில் மெல்ல மெல்ல உச்சிக்கு செல்லும் டொனி இறுதியில் என்ன ஆகின்றான். அவன் காதலித்த பெண், உறவினர்கள் கதி என்னாகின்றது என்பதை மிகுதிப் படம் காட்டுகின்றது.

வன்முறை வன்முறை வன்முறை

படம் தொடங்கும் போதும் முடியும் போதும் “”The World is Yours”” எனும் வார்த்தை படத்தில் வந்து போகும். உண்மையிலேயே இந்த உலகம் எங்களுடையது இல்லை என்று சொல்லாமல் சொல்கின்றார்கள் போலும்.

அந்த்காலத்திலேயே இத்தனை வன்முறைகளுடன் படம் எடுத்து சக்கை போட்டிருக்கின்றார்கள். நின்றால் குத்து இருந்தாள் துப்பாக்கிச்சூடு என படம் முழுக்க திரும்பும் இடம் எலாம் வெட்டுக் குத்தது மற்றும் கண்ணே காதலி என்று படம் இருக்கின்றது.

பணத்தால் வாங்கிய காதலி

இந்த திரைப்படம் வெளியான வேளையில் வன்முறைக்காக இந்த திரைப்படம் கடும் எதிர்ப்பை வாங்கிக்கட்டிக்கொண்டது. அத்துடன் மியாமியில் இருக்கும் கியூப குடியேற்ற வாசிகள் தங்கள் சமூகத்தை போதைப்பொருள் கடத்துபவராகவும் கொள்ளைக்காரர்களாகவும் காட்டுவதாகக் கூறி இந்தத் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

திரைபடம் வெளியிடப்பட்ட காலத்திலே அவ்வளவாகப் பெயர் பெறாவிட்டாலும் காலப்போக்கில் படத்திற்கு நல்ல பெயர் கிடைக்கத் தொடங்கியது. அந்தக்காலத்தில் சுமார் 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளது. இக்காலப் பெறுமதியில் இது 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிகம்.

சுமார் 30 வருடம் பழமையான திரைப்படம். ஆகவே திரைப்படம் பார்க்கும் போது இந்த வருடம் வெளியான அதிரடி திரைப்படம் போல வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஆனால் கிரைம் கதைகளை இரசிப்பவரானால் உங்களை ஏமாற்றாது இந்த திரைப்படம்.
.

Project X (2012) விமர்சனம்


காலம் காலமாக பதின்ம வயதுப் பசங்கள் அடிக்கும் கூத்தை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவருவது வழமை தானே. 70 வதுகளில் ஆரம்பித்த ‘American Graffiti’ தொடக்கம் 2000ம் களில் வெளிவந்து சக்கை போடு போட்ட ‘American Pie’ வரை இந்த இரக திரைப்படங்களே. இதில் வரும் நகைச்சுவைக் காட்சிகளை எல்லாரும் நகைச்சுவையாக ஏற்க்கொள்வதில்லை ஆனால் அந்த வயது உடையோரிற்கு மெகா ஹிட் திரைப்படம் அது.

இந்த வரிசையில் 2010 களில் கலக்கவென்றே வந்த திரைப்படம்தான் ‘Project X’. உயர் பள்ளியில் கல்விகற்கும் 3 மாணவர்கள். அவ்வளவாக பாடசாலையில் பிரபலம் இல்லாதவர்கள். தானுண்டு தன் படிப்பு உண்டு என்று இருக்கும் மாணவர்கள். இந்த மூன்று நண்பர்களில் ஒருத்தனிற்கு பிறந்தநாள் வருகின்றது. பிறந்தநாளைக் கொண்டாட முடிவெடுகின்றனர் நண்பர்கள்.

இயக்கம் : Nima Nourizadeh
தயாரிப்பு : Todd Phillips
வசனம் : Matt Drake
: Michael Bacall
கதை : Michael Bacall
நடிப்பு : Thomas Mann
: Oliver Cooper
: Jonathan Daniel Brown
: Kirby Bliss Blanton
: Alexis Knapp
தொடுப்புகள் : IMDB
: Rotten Tomatoes
: Wiki

பொதுவாகவே பாடசாலையில் பிரபலம் இல்லாத இவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள். ஆகவே நண்பர்களை எல்லாம் அழைத்து பெரிய கொண்டாட்டம் ஒன்றை நடத்த இந்த மூன்று நண்பர்களும் திட்டம் போடுகின்றனர். இதை இன்னும் ஒரு நண்பர் தனது வீடியோ கமிராவினால் படம் பிடிப்பது போல காட்சிகள் அமைகின்றன. தோமசின் பிறந்தநாள் களியாட்டத்தை கொஸ்டா எனும் மற்றைய நண்பன் அமைக்கின்றான். ஆரம்பத்தில் பயந்தாலும் பிறகு தோமசும் ஒத்துக்கொள்ள களியாட்ட நிகழ்வுக்கான ஆரம்ப பணிகளை கொஸ்டா தொடங்குகின்றான்.

மும் மூர்த்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம் நினைத்தது போலவே நிதானமாக ஆரம்பித்து பின்னர் பிழையாகத் தொடர்கின்றது. கட்டுக்கடங்காமல் எல்லை மீறிப் போகின்றது. என்ன நடந்தது எப்படி நடந்தது என்று எதையுமே சொல்லப் போவதில்லை நீங்களாகவே பார்த்து இரசித்து சிரித்துக்கொள்ளுங்கள்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

இங்கே முக்கியமான விடையம் குடும்பத்தாருடன் பார்க்க முடியாத திரைப்படம் இது. கட்டாயமாக சிறுவர்களிற்கு ஏற்ற திரைப்படம் இல்லை.

இந்த திரைப்படத்தை பார்க்கும் போது அடிக்கடி ‘The Hangover’ திரைப்படம் ஞாபகத்திற்கு வருவதைத் தடுக்க முடியாது. என்ன காரணமாக இருக்கும் என்று தேடியபோதுதான் ஒரு குட்டு வெளிப்பட்டது. ‘The Hanover’ திரைப்பட இயக்குனர் ‘ Todd Phillips’ இந்தை திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பதே.

சுமார் 12 மில்லியன் பட்ஜட்டில் தயாரானாலும் வசூலில் 100 மில்லியனிற்கு மேல் சம்பாதித்து சாதனை புரிந்துள்ளது இந்த திரைப்படம். தயாரிப்பாளர் இந்த திரைப்படம் ஒரு பரிசோதனை முயற்சியே என்று கூறினார். தயாரிப்பு வேலைகளும் மிக இரகசியமாக நடத்தப் பட்டது. ஒரு பாத்திரத்தில் நடிப்பவரிற்கு அவர் பாத்திரம் சார்ந்த திரைக்கதை வசனம் என்பவை மட்டுமே பகிரப்பட்டது.

திரைப்படம் வெற்றியடைந்தாலும் திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் தாறுமாறாக அமைந்தன. பலர் இதை தனித்துவம் இல்லாத திரைப்படம் என்று திட்டித் தீர்த்துக் கூட இருந்தனர். எது என்னவாகினும் திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றியடைந்துள்ளது.
.

The Hunger Games (2012) விமர்சனம்

The Hunger Games புத்தகத்தை கடந்த வருடம் வாசித்து முடித்தேன். ஹரி போட்டர் விட்ட இடத்தை ட்வைலைட் நிரப்ப பின்னர் ட்வைலைட் விட்ட இடத்தை இந்த ஹங்கர் கேம்ஸ் தொடர் நிரப்பியது என்பதே அடியேனின் எண்ணம். இந்த ஹங்கர் கேம்ஸ் திரைப்படம்/புத்தகத்தின் கதைகள் எதிர்காலத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது வட அமெரிக்கா சின்னாபின்னப்பட்டு பல பாகங்களாகப் பிரிகின்றது. அழிவின் மத்தியில் இருந்து புதிய நாடு ஒன்று பிறக்கின்றது. அதுவே பனம் (பிணம் இல்லை) ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு பெயர் டிஸ்ரிக்ட் 1 – 12 வரை மாவட்டங்கள். இத்தனை மாவட்டங்களின் தலையாய மாவட்டம் மற்றும் தலைநகரம் கபிடொல் (Capitol). தலைநகர் கப்படிட்டலுக்கு எதிராக நடந்த புரட்சி முரட்டுத் தனமாக அடக்கப்படுகின்றது. இனி இவ்வாறு ஒரு தப்பை மாவட்டங்கள் செய்யாது தடுப்பதற்காக புரட்சி நசுக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்க ஹங்கர் கேம்ஸ் எனும் இந்த விபரீத விளையாட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது.


சரி ஹங்கர் கேம்ஸ் என்றால் என்ன?? அதாவது 12 மாவட்டங்களிலும் இருந்து ஒரு ஆண், ஒரு பெண் வீதம் மொத்தம் 24பேர் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்படுவர். இந்த 24 பேரும் தலைநகர் கபிடோலிற்கு அழைத்துவரப்பட்டு அங்கே ஒரு மூடபட்ட காடு போன்ற அமைப்புடைய அரங்கில் விடப்படுவர். 24 பேரும் ஒருத்தருடன் ஒருத்தர் மோதிக் கொலை செய்ய வேண்டும் மற்றப் போட்டியாளரை. எஞ்சும் ஒரு போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். இந்தப் போட்டி நாங்கள் பார்க்கும் எயார்டெல் சுப்பர் சிங்கர் போல பனமின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். தமது உறவுகள் ஒன்றொன்றாக கொல்லப்படுவதை தொலைக்காட்சியில் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு டிஸ்ரிக்ட் 1 தொடக்கம் 12 வரையான மக்கள் கட்டாயப்படுத்தப்படுவர். இதுதான் கதையின் பின்ணனி.

இந்தக் கதை வழமையான கதைகள் போல ஒரு கதாநாயகன் பின்பு அவர் காதலிப்பதற்காக ஒரு கதாநாயகி என்று அமையவில்லை. கதையின் மையைப் பாத்திரம் ஒரு பெண். ஒரு இளம் வயது யுவதி. ஒரு வேளை உணவிற்காக ஏங்கும் தனது குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு வீராங்கனை. விதியின் விளையாட்டால் இந்தப் பெண்ணும் ஹங்கர் கேம்சிற்காக டிஸ்டிக்ட் 12 இல் இருந்து தெரிவு செய்யப்படுகின்றார். கதையின் மிகுதி இந்தப் பெண்ணையும் அவருடன் டிஸ்ரிக்ட் 12 இல் இருந்து தெரிவு செய்யப்படும் மற்றய ஆடவனையும் சுற்றி நிகழ்கின்றது. ஹங்கர் கேம்சில் என்ன நடந்தது அதில் இந்த கன்டனிஸ் எனும் பெண் வென்றாளா இல்லையா என்பதை மிகுதிக் கதை சொல்கின்றது. அடுத்து வரப் போகும் இரண்டு பாகங்களிற்கும் இங்கே சிறப்பான அடித்தளம் இடப்படுகின்றது.

The Girl on Fire

கதைக்காக புத்தகத்தின் பல பாகங்களை கத்தரித்திருகின்றார்கள். புத்தகம் வாசித்து விட்டு திரைப்படம் பார்ப்பவர்களுக்கு சிறிது ஏமாற்றம் இருந்தாலும், நேரடியாக திரைப்படத்தைப் பார்ப்போரிற்கு சிறந்த ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம். வெறுமனே அம்புலிமாமா கதை என்று நினைத்துவிட வேண்டாம் விஞ்ஞான புனைகதைகளுக்கு ஒத்த கதையோட்டம் உண்டு. ஜப்பர்ஜே, ட்ரக்கர் ஜக்கட் அப்பிடி இப்படி என்றெல்லாம் மரபுரிமை மாற்றம் செய்யப்பட்ட விலங்குகள் எல்லாம் கதையில் வந்து போகும். கிளைமாக்ஸ்சில் கூட ஒரு மரபியல் விகாரம் அடைந்த (mutation) விலங்குகள் வந்து போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

முக்கோணக் காதல்

அது சரி பாஸ், காதல் ரொமான்ஸ் எல்லாம் படத்தில் இல்லையா? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கின்றது. அது இல்லாமலா? 😉 சாதாரண காதல் இல்லை முக்கோணக் காதல் இருக்கின்றது. ஒரு நாயகி இரண்டு நாயகன்கள்.. மிகுதியை நீங்களே யோசித்துக் கொள்ளலாம். காதல் தேசம் அளவிற்கு அப்பாஸ், வினித் மாதிரி இருவரும் அடித்துக் கொள்ளமாட்டாகர்கள் என்பது ஒரு ஆறுதலான தகவல் 😀

மொத்தத்தில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான திரைப்படம். இளவட்டங்களுக்கு மிகவும் பிடித்துப் போகும் இந்த திரைப்படம்.

IMDB Rating 76/100
My Rating 85/100
.

Mission: Impossible – Ghost Protocol

மிசன் இம்பொசிபிள் திரைப்படங்கள் உலகப் புகழ் பெற்றவை. ஈதன் ஹன்ட் எனும் துப்பறிவாளனையும் அவனைச் சுற்றி இருப்போரையும் சுற்றிக் கதைகள் நகரும். உலகின் பெரும் நகரங்களில் கதைகளின் களம் அமையும். முதல் மூன்று பாகங்களும் உலக ரீதியில் வர்த்தக ரீதியில் வெற்றியடையவே இப்போது நான்காம் பாகத்தையும் வெளியிட்டுள்ளனர். வழமை போல டொம் குரூஸ் திரைப்படத்தின் நாயகன்.

அமெரிக்க ருசியா உறவு முறை இப்போது ஒரளவு நன்றாக இருந்தாலும் பனிப் போர் காலத்தில் மிக மோசமாக இருந்த்து. குறிப்பாக ருசியா கியூபாவில் ஏவுகணைத் தளங்களை அமைத்த போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக மிக மோசமான நிலையை அடைந்தது. ருசிய கப்பல்கள் பசிபிக் கடலைத் தாண்டி வரும் போது தாக்குதல் நடத்துமாறு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக உத்தரவிடுமளவிற்கு நிலமை தலைகீழாய் இருந்தது.

தற்போது MI4 திரைப்படத்தில் மீண்டும் அமெரிக்க உருசிய உறவுகள் மோசமடைகின்றது. இதற்கு முக்கியகாரணமாக கிரெம்பிளின் மாளிகையில் நடக்கும் குண்டுவெடிப்பும் அதற்கு பொறுப்பாக்கப்பட்ட டொம்குரூஸ் மற்றும் அவர் குழுவினருமாகும் (IMF).

துபாய்

அமெரிக்க அரசு IMF ஐ இடை நிறுத்துகின்றது. தற்போது டொம் குரூசும் அவர் குழுவினரும் கிரம்ளின் மாளிகையில் தொலைந்த ஆவணங்களை மீளக் கைப்பற்றி நடக்க இருக்கும் அணுகுண்டு ஏவுகணைத் தாக்குதலைத் தவிர்க்க முயல்கின்றனர்.

சாதாரணமான கதை ஆனால் சிறப்பான நடிப்பு அருமையான சண்டைக் காட்சிகள் படத்தை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. குறிப்பாக டுபாயின் உயர்ந்த கட்டிடத்தில் நடக்கும் காட்சிகள், மண் புயலினூடு நடக்கும் கார் துரத்தல் காட்சிகள் எல்லாம் அபாரம். டிவிடியில் இந்த திரைப்படம் பார்ப்பதெல்லாம் வேஸ்ட்டு, கட்டாயம் திரையரங்கில் பார்த்துவிடுங்கள்.

மண் புயலினூடு வில்லனைத் தேடும் ஈதன் ஹன்ட்

கதை என்னவோ அமெரிக்காவில் ஆரம்பித்தாலும் இறுதியில் முடிவடைவது இந்தியாவின் ஒரு தானியங்கி கார் தரிப்பிடத்தில். மும்பாய் என்று அவர்கள் சொன்னாலும் கட்டடங்கள் எங்கும் சண் டீவி இலச்சினையும் தெலுங்கு எழுத்துக்களுமே தெரிகின்றன. ஹைதராபாத்தில் காட்சிகளைச் சுட்டிருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

ஜெரமி ரைன்னர் காட்சிகள் எங்கும் நடிப்பில் கலக்குகின்றார். வழமையாக ஹீரோ மட்டும் செய்யும் சாகச காரியங்களை அவரும் செய்கின்றார். அதே வேளை சிமொன் பெக் கல கல திணைக்களத்தை குத்தகைக்கு எடுத்து சிரிக்க வைக்கின்றார். மொக்கை காமடிகள் இல்லாமல் போனமை மனதிற்கு ஆறுதல். போலா பட்டன் அழகுப் பதுமையாக வருகின்றார். சண்டைக் காட்சிகளில் சீற்றம் கொண்ட வேங்கையாக மோதுகின்றார். பிறகு அணில் கபூரை பேச்சில் மயக்கி படுக்கை வரை அழைத்து அங்கே வைத்து மொத்துகின்றார். பாவம் அணில் கபூர் ஒரு மொக்கை இந்தியப் பணக்காரன் வேடத்தில் வந்து சில நிமிடங்கள் சிரிக்கவைத்து விட்டுப் போகின்றார்.

டொம் குரூசின் முகம் எங்கும் வயதான ரேகைகள் வெளிப்படையாவே தெரிகின்றது. எமது அபிமான நடிகர்கள் பலரும் வயதாகிப் போனது என்னவோ கவலைதான் தருகின்றது. ஆனால் அவர்களுக்கு வயதாகி விட்டது என்று கவலை பட உலகமே இருக்கின்றது, அவர்களுடன் சேர்ந்து எங்களுக்கும் வயதாகிக் கொண்டே போகின்றது என்று நினைக்கும் போது பக் என்கிறது இதயம் 😉

புள்ளி 70/100

மயூரேசன்


.

3.5

Robin Hood (2010) விமர்சனம்

ஏழைகளிடம் திருடி பணக்காரனிடம் கொடுப்பவன் துரோகி. பணக்கானிடம் இருந்து திருடி ஏழைகளிடம் கொடுத்தால் அவன் ஹீரோ. இவ்வகையான ஹீரோக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் ஏழைகளின் தோழன் ரொபின் ஹூட். ரொபின் ஹூட் நொட்டிங்காம் எனும் பிரதேசத்தில் வாழ்ந்து அங்கே மக்களுக்கு எதிராக கொடுங்கோல் ஆட்சி புரிந்த செரீபை எதிர்த்து மக்களுகுச் சேவை செய்ததாக வரலாறு.

இவ்வகையில் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வெளிவந்துள்ளன. என் உள்ளத்தை என்றும் விட்டு நகராத ரொபின் கூட் தொலைக்காட்சித் தொடர் 80களில் வெளியானது பின்னர் இலங்கை ரூபவாகினியில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் 90 களில் ஒளிபரப்பானது.

இலங்கையில் உள்ள எந்த வொரு குழந்தையும் அக்கால கட்டத்தில் இந்த ரொபின் கூட் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. ரொபின் கூட்டினால் உந்தப்பட்டு மரத்தில் வாள் தீட்டியதையும் ஈர்க்கில் எடுத்து அதில் அம்பும் வில்லும் செய்து குருவியை சரி குறிவைத்து அடிக்க முயன்றதும் மறக்க முடியாத காலங்கள். இதைப் பற்றி சில இலங்கைப் பதிவர்கள் கூட பதிவிட்டிருந்தார்கள்.

இந்த ரொபின் கூட் தொலைக் காட்சித் தொடரில் நடித்த பலரும் திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஹீரோ வாக இரண்டு ரொபின்கள் வருவார்கள். முதல் பாகத்தில் வரும் ரொபின் கொலை செய்யப்பட்ட பின்னர் ரோபேர்ட் எனும் ஒரு பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர் வருவார். அவர் மீளவும் ரொபினின் கூட்டத்தை ஒன்றிணைப்பார்.

80 களின் வெளியான தொலைக்காட்சி ரொபின்

திரைப்பட விமர்சனம் என்று ஆரம்பித்து தொலைக்காட்சித் தொடர் விமர்சனம் அல்லவா செய்கின்றேன். 😉


நகர் வலம் செல்லும் லேடி மரியன் & ரொபின்
நகர் வலம் செல்லும் லேடி மரியன் & ரொபின்

இங்கனம் ரொபின் கூட்டின் தோற்றம் வரலாறு பற்றிப் பலவிதமான கருத்துக்கள் கதைகள் உலாவுகின்றன. சிலர் ரொபின் கூட் என்று ஒரு நபர் இருந்ததே இல்லை என்கின்றார்கள் ஆனால் நிச்சயமாக இருந்தார் என்று இன்னுமொரு கூட்டம் அடித்துச் சொல்கின்றது.

எது எவ்வாறாயினும் இந்த திரைப்படம் ரொபின் கூட்டின் வரலாறு பற்றிப் புதுக் கதை கூறுகின்றது. பேசாமல் இந்த திரைப்படத்திற்கு Origin of Robin Hood என்றோ Rise of Robin Hood என்றோ வைத்திருக்கலாம். பலரும் ரொபின் கூட் துரோகியாக அக்சன் பண்ணுவார் என்று எதிர்பார்க்கும் போது ரொபின் எப்படித் தோன்றினார் என்று மட்டுமே இங்கே காட்டப்படுகின்றது. இதனால் தான் என்னவோ பல இரசிக உள்ளங்களுக்கும் இந்த திரைப்படம் பிடிக்கவில்லை.

இரண்டாம் சிலுவை யுத்தம் நடத்த புனித பூமி சென்று திரும்பும் வழியில் நடக்கும் யுத்தம் ஒன்றில் இங்கிலாந்தின் மிகப் பெரிய மன்னன் சிங்க மனசுக் காரன் ரிச்சார்ட் (Richard the Lion Heart) பலியாகி விடுகின்றான். ரிச்சாட்டின் படையில் வில்வித்தையில் தேர்ந்த போர் வீரனாகப் பணியாற்றுகின்றான் ரொபின்.

அரசனின் மரணத்தின் பின்னர் நடக்கும் சில நிகழ்வுகளினால் அரசனின் முடி மற்றும் லொக்ஸ்லி பிரபுவின் மகனின் உடைவாள் என்பன ரொபின் கைகளில் மாட்டி விடுகின்றது. இதை மீள உரியவர்களிடம் ஒப்படைக்கத் திட சங்கர்ப்பம் பூண்டு புறப்படும் ரொபின் இங்கிலாந்தின் வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் யுத்தத்தில் நேரடியாகப் பங்கு பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான். இங்கிலாந்தின் துரோகி கொட்பிரேயையும் எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான்.

இறுதி யுத்தத்தில் ரொபின்
இறுதி யுத்தத்தில் ரொபின்

கதையை முழுமையாகச் சொல்லாமல் சொதப்பலா சொல்லியிருக்கன் அப்போதுதான் நீங்கள் திரையிலோ டிவிடியிலோ பார்க்கும் போது அருமையாக இருக்கும்.

இந்த திரைப்படம் மேல் பெரும் ஆர்வர் மேலிட இன்னுமொரு காரணமும் இருந்தது. கிளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கி பெரும் பாராட்டுக்களைக் குவித்த அதே இயக்குனர் அதே நாயகன் றசல் குரோவை வைத்து இயக்கிய திரைப்படம். ஆதலினால் திரைப்படம் பற்றிக் கடும் எதிர் பார்ப்பு மக்களிடம். கிளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கிய ரிட்லியின் பிரமாண்டத்தை இங்கேயும் காணலாம் குறிப்பாக பிரஞ்சுப் படைகளை ஆங்கிலப் படைகள் எதிர்கொள்ளும் காட்சி.

அமெரிக்க திரைப்பட வரிசையில் கிடு கிடு என கீழே இறங்கி விட்டாலும் பிரித்தானியாவில் தர வரிசையில் மேலே சில காலம் நின்றது. அவர்கள் ஊர் லெஜண்ட் பற்றிய கதை என்பதால் என்னவோ அவர்கள் பிடித்து நிறுத்திவிட்டார்கள்.

தானைத் தலைவன் ரசல் குரோவிற்கு இப்போது வயது 45ஆம். இந்த வயதில் இது தேவை தானா என்று கேட்கின்றார்களாம். அப்படியானால் 65 வயதில் அவருக்கு ஐஸ்ஸூ தேவையா?? ஹி..ஹி.. 🙂 ரொபின் பாத்திரத்தில் இது வரை நடித்தவர்களில் ரசல் குரோவிற்குத்தான் வயது கூடவாம்.

இதே வேளை பட்மான், டேர்மினேட்டர் போன்ற திரைப்படங்களில் நடித்த கிரிஸ்டியன் பேலையும் ரொபின் கூட் பாத்திரத்தில் நடிக்க வைக்க முயன்றார்கள் என்று கூறப்படுகின்றது. அம்மா மகமாயி எங்கள காப்பாத்திட்டே… நன்றி. பேல் கிட்ட டர்மினேட்டரிலயே அறுபட்டது போதும். 🙂

என்னைப் பொறுத்தவரையில் அருமையான திரைப்படம். இரசிக உள்ளங்கள் இரசிக்கலாம்.

MY RATING: 75/100
IMDB RATING: 70/100

Salt (2010) விமர்சனம்

கொஞ்ச நாளாகவே திரைப்படம் பார்த்தால் ரொம்பவும் வெறுப்பாக இருக்கின்றது. புதிதாய் வரும் திரைப்படங்களிற்குப் பதிலாக சுறா மற்றும் வில்லு போன்ற லொள்ளு வஜையின் படங்களை… சீ.. சீ.. விஜயின் படங்களைப் பார்த்துவிடலமோ என்று தோன்றுகின்றது. இன்று வேலைக்கு கல்தா கொடுத்துவிட்டதால் அமைதியாக இருந்து பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இந்த சோல்ட் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கத் தொடங்கியதால் என்னவோ படம் ஓரளவு திருப்தியாகவே அமைந்தது.

பனி யுத்தக்காலத்தில் அமெரிக்காவும் றுசியாவும் முட்டிக்கு முட்டி மல்லுக் கட்டிக்கொண்டி இருந்தன. ஒருத்தரை ஒருத்தர் அணுவாயுதம் கொண்டு அழித்துவிடுவதாககூட மிரட்டினர். இப்படியான பனி யுத்தக் காலத்தில் ஆரம்பிக்கும் கதை இன்றைய காலம் வரை வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.


நீறு பூத்த நெருப்பாக றுசிய உளவாளிகள் அமெரிக்க மண்ணில் இருக்கின்றார்கள். காலம் வரும் போது சர்வ நாசம் செய்து தம்மை அடையாளம் காட்டுவர் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப் படுகின்றது.

அஞ்சலீனா ஜூலி இந்த திரைப்படத்தில் சோல்ட் ஆக நடிக்கின்றார். அவர் ஒரு சி.ஐ.ஏ உளவாளி திரைப்படம் ஆரம்பத்திலேயே வட கொரிய சிறைச்சாலையில் வைத்து நையப் புடைக்கப்படுகின்றார். பின்னர் கைதிகள் பரிமாற்றம் மூலம் மீள அமெரிக்கா வந்து சேர்கின்றார்.

ஒரு நாள் இவர்களின் அலுவலகத்தினுள் நுழையும் ஒரு றுசிய நபர் சோல்ட் எனும் பெண் விரைவில் அமெரிக்கா வரவிருக்கும் றுசிய அதிபரை போட்டுத்தள்ளப்போவதாகக் கூறுகின்றார். அவர் சொன்ன சோல்ட்தான் நாம் பார்த்த ஹீரோயின் அஞ்சலீனா. இதைக் கேட்டு பதகளித்து தப்பி ஓடி அஞ்சலீனா என்ன செய்தார் என்பதை காட்டியுள்ளார்கள் மிகுதித் திரைப்படம் முழுவதும்.

கதையின் மையப் பாத்திரங்கள் சோல்ட் (அஞ்சலீனா), லீவ் ஸ்கிரைபர் (இவர் தான் வூல்வரீனின் அண்ணா சைபரூத்தாக வருபவர்), Chiwetel Ejiofor (மற்றோரு CIA அதிகாரி) ஆகியோரைச் சுற்றி நகர்கின்றது.

அஞ்சலீனா ஜூலியை டொம் ரைடரில் பார்த்த காலத்தில் இருந்தே இயந்திரத் துப்பாக்கி, நெருப்பு, புல்லட்டு என்று பார்த்தால் அவருடன் ஒட்டிவிடுகின்றது. அவரிற்கு ஏற்ற பாத்திரத்தை அருமையாகச் செய்துள்ளார்கள். இறுதி வரை இவள் என்ன மண்ணாங்கட்டி செய்றாள் என்றே தெரியாது. படம் ஒரு 75 வீதம் ஓடியபின்னரே கதை ஓரளவு புரியத் தொடங்குகின்றது.


படங்கள் வெறுத்து எதைப் பார்ப்பது என்று இருந்தால் இந்த திரைபடம் நிச்சயம் உங்களுக்கு ஆறுதல் தரும். அட்லீஸ்ட் தலையிடி தரும் 😉

My Rating: 65/100

IMDB Rating: 67/100

The Twilight Saga: Eclipse விமர்சனம்

ட்வைலைட் முதலாம் பாகம் வெளி வந்து உலகமெங்கும் சக்கைபோடு போட்டது. அதே சூட்டுடன் இரண்டாம் பாகம் நிவ் மூன் வெளி வந்து வசமாக இரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது. ஆனாலும் வசூலில் கடும் சாதனை. பல லகரங்களில் டாலர்களை குவித்தது. இப்போது இதே தொடரில் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது. மூன்றாம் பாகமே இந்த எக்கிளிப்ஸ் எனும் பகுதியாகும். இதுவரை இந்த ட்வைலைட் திரைப்படமோ புத்தகமோ வாசிக்காதாருக்கு என்ன இது என்று ஒரே வியப்பாக இருக்கலாம்.

கதைச் சுருக்கம் என்னவென்றால் பல ஹொலிவூட் திரைப்படங்களிலும் வந்து பயமுறுத்தும் ட்ரகுலா (இரத்தக் காட்டேரி) பற்றிய கதையே இது.  இரத்தக் காட்டேரி வந்தால் அவர்களை எதிர்க்க வெயாவூல்ப் எனும் ஒநாய்களும் இருந்தேயாகும்.  இக்கதையிலும் அதற்கு குறைவில்லை. ஆனாலும் வழக்கத்திற்கு மாறாக மனிதப் பெண்ணுடன் ஒரு வம்பயர் காதலில் வீழ்கின்றது. அந்தப் பெண்ணும் காதலில் வீழ்கின்றாள். இதற்கிடையில் சாதாரணக் காதல் முக்கோணக் காதலாகின்றது ஒரு வெயாவூல்பின் அறிமுகத்தால்.  வம்பயர் காதலிக்கும் பெண்ணை இந்த வம்பயர்களை காலம் காலமாக வெறுக்கும் வெயார்வூல்பும் காதலிக்கின்றது. இவர்கள் மூன்றுபேரையும் சுற்றியே 4 புத்தகங்களும் 3 திரைப்படங்களும் (கடைசி திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை) நகர்கின்றது.


Vampires இருந்தால் திரைப்படத்தில் காதலிற்கு குறைவேயிருக்காது. வம்பயர்கள் கடும் காதல் மன்னர்கள். இந்த திரைப்படத்தில் வரும் Edward அமைதியான வம்பயர். அதாவது மனிதர்களைக் கொலை செய்யாமல் மிருகங்களைக் கொண்டு இரத்தம் அருந்தி பிழைக்கும் ஒருவர். அவருடன் அவரைப்போலவே பழக்கமுடைய ஒரு குடும்பத்தார்.

மறு பக்கத்தில் காலம் காலமாக Fork நகரில் வாழ்ந்து வரும் செவ்விந்திய வழித்தோன்றல்கள். இவர்கள் குடும்பத்தில்தான் அடுத்த நாயகன் Jacop Black பிறக்கின்றார். இவர்தான் அந்த Werewolf குடும்பத்தில் பிறந்த ஒரு பையன்.

Bella மற்றும் Edward

அப்புறம் பெல்லா எனும் பெண் இந்த போர்க் நகருக்கு வருகின்றாள்.  ஒரே நகரில் வசிக்கும் Vampire, Werewolf இந்தப் பெண்ணின் மீது காதல் கொள்கின்றனர்.

இதேவேளையில் Bella வைக் கொலை செய்ய முயலும் ஒரு கெட்ட வம்பயரைக் கொலை செய்துவிட அதனால் கோவப்படும் விக்டோரியா எனும் காதலி வம்பயர் பெல்லாவைக் கொல்ல அலைகின்றது. பாகம் இரண்டிலிருந்து விக்டோரியாவிடம் இருந்து பெல்லாவைக் காப்பாற்றும் பொறுப்பு எட்வார்ட் மற்றும் யேகோப்பிடம்.

இந்த மூன்றாம் பாகத்தில் இந்த விக்டோரியா பிரைச்சனை என்ன ஆனது. இவர்களைப் பழிவாங்க விக்டோரியா என்ன செய்தார் என்பதே கதை. இதற்கு மேலும் கதையைச் சொல்ல விருப்பமில்லை.

முதலம் பாகத்தை பலரும் விரும்பிய போதும் இரண்டாம் பாகத்தை பலரும் பெரிதாகப் போற்றிப் பாராட்டவில்லை. என்னைப் பொறுத்தவரையில் முதலாம் பாகமே சிறப்பாக எடுத்திருக்கின்றனர் அதற்கு அடுத்ததாக மூன்றாம் பாகமான எக்கிளிப்ஸ் சிறப்பாக உள்ளது.

திரைக் காட்சியமைப்புகள் என்னைக் கவர்ந்தது. குறிப்பாக வம்பயர், வேர்வூல்ப் சண்டைக் காட்சிகள் அபாரம். இயல்பாகவே பன்டசி கதைகளில் நாட்டம் உள்ளோர் கட்டாயம் இந்த திரைப்படத்தை விரும்பிப் பார்ப்பர்.

MY RATING: 75/100

Clash of the Titans (2010) – விமர்சனம்

கடந்த மாதம் லைட்டனிங் தீஃப் என்ற திரைப்படம் பற்றி ஒரு குட்டி விமர்சனம் போட்டிருந்தேன். அந்தக் கதை கிரேக்க கடவுகள் பற்றியது. இன்று Clash of the Titans பார்ப்போம் என்று போய் உட்கார்ந்தால் ஒரே அதிசயம். முன்பு கூறிய திரைப்படத்தில் வந்த பல கிரேக்க கடவுகளும் ஜந்துகளும் இங்கேயும். நாயகனின் பெயர் கூட பேர்சியஸ் என்று இருக்கின்றது. முந்திய படத்தில் பேர்சி ஜக்சன் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஏற்கனவே கிரேக்க வரலாறு கடவுகள் பற்றி எதுவும் தெரியாது அப்புறம் இந்தப் படத்தில் போய் இருந்தால் ஏதோ ஏதோ எல்லாம் காட்டி வெறுப்பேத்தினார்கள். சாம் வேர்திங்கடன் இந்த படத்தில் ஒரு வேர்த்தும் இல்லாமல் மொக்கையாக நடித்திருக்கின்றார். அவதாரிலும் டேர்மினேட்டரிலும் பார்த்த வேர்த்திங்கடன் மிஸ்ஸிங். அது போதாதென்று இடைவேளை நெருங்கும் போதே சாதுவாக கொட்டாவியும் விடத் தொடங்கிவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


பல ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது மனிதனின் தோற்றத்திற்கு முதல் நடக்கும் யுத்தத்தில் டைட்டன்கள் எனப்படுவோர் சியோசிடம் தோற்கின்றனராம். இதன் பின்னர் ஆட்சியேறும் நபர்களே கிரேக்க கடவுகள்களான சியஸ், சைடன், ஹைடஸ். இவர்களில் சியஸ் மனிதர்களை உருவாக்கித் தொலைக்கின்றாராம்.

பின்னர் ஒரு நாள் ஒரு மீனவன் மிதந்து வரும் ஒரு பேளையை காண்கின்றான். அதை திறக்கும் போது அங்கே நம் நாயகன் பேர்சியஸ் இருக்கின்றார். தனது இறந்த தாயின் மேல் இருக்கும் பெர்சியசை அந்த மீனவன் காப்பாற்றி தன் மகன் போல பேணிப் பாதுகாக்கின்றான்.

இதே வேளை மனிதர்கள் கடவுள் மேல் கோவம் கொண்டு கடவுளுடன் யுத்தப் பிரகடனம் செய்கின்றனர்.

நரகத்தை ஆண்டுவரும் ஹைடஸ் சியசின் அனுமதி பெற்று மனிதர்களைத் தாக்கத் தொடங்குகின்றார். இதில் உச்ச கட்டமாக கிரக்கன் எனும் விலங்கையும் பாவிக்கின்றான். கிரக்கன் எனும் இந்த விலங்கை வைத்தே டைட்டன்களுடனான யுத்தமும் வெல்லப் பட்டது என்பதும் குறிப்பிட்டாக வேண்டும். அது சரி இந்த கிரக்கனை பைரேட்ஸ் ஒப் த கரிபியனிலும் பார்த்தோம் தானே 🙂

அப்புறம் விதியின் வசத்தான் மனிதர்களால் நம் நாயகன் தேர்ந்தெடுக்கப் பட்டு ஹடைசை அழிக்கப் புறப்படுகின்றார். முக்கியமான பல தகவல்களை இங்கே நான் சொல்லவில்லை. அனைத்தையும் திரையில் காணுங்கள் அல்லது டிவிடியில் காணுங்கள்.

ஏற்கனவே திரைப்படத்தில் சரக்கு கம்மி இதில் நானும் உளறிவிட்டால் 🙂

நிச்சயமாக அதி மொக்கைப் படம் இல்லை. ஆனால் எதிர்பார்ரதளவிற்கு இல்லை. இதைவிட 1981ல் வெளியான திரைப்படம் சிறப்பாக இருக்கின்றது என்று பழைய சினிமா இரசிகர்கள் அங்கலாய்த்துக் கொள்கின்றார்கள்.

காட்சியமைப்புகள், சத்தவமைப்புகள் சிறப்பாக உள்ளன. அவையே திரைப்படத்தின் நம்பிக்கைக் தூண்களாக இருக்கின்றன. இந்த விடுமுறை காலத்தில் இந்த திரைப்படம் நல்ல வசூலை அள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் பெரிய மெகா ஹிட் திரைப்படம் ஆகப் போவதில்லை.

My Rating: 50/100

IMDB Rating: 61/100

The Road (2009) விமர்சனம்

உலகம் அழிவில் வீழ்வதாகவும், அதில் மானிட இனமே அழிந்துபோவதாகவும் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அழிவிற்கு இயற்கையின் சீற்றமோ அல்லது சொம்பி போன்ற காரணங்களோ அல்லது நோய் நொடிகளோ அல்லது அணுவாயுத யுத்தமோ அல்லது வேறு ஏதாவது காரணங்களோ இதுவரை ஹொலிவூட் திரைப்படங்களில் காட்டியிருக்கின்றார்கள்.

ஆனால் மிக குறைவான திரைப்படங்களிலேயே உலகின் நாகரீகங்கள் அழிந்த பின்னர் என்ன நடக்கும் என்பதைக் காட்டுகின்றன. அவ்வகையில் இந்த த றோட் எனும் திரைப்படமும் உலகின் நாகரீக அழிவின் பின்னர், நாகரீகம் அற்ற ஒரு சமூதாயத்தின் கோரப் பிடியில் இருந்து தப்ப விழையும் ஒரு தந்தை, தனயனின் கதையே ஆகும்.

இது ஒரு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த நாவலிற்கு புலிட்சர் விருது கூடக் கிடைத்துள்ளது.


கதையின் ஆரம்பத்தில் இருந்து ஒரு தந்தையும் மகனும் ஒருமித்துப் பயனிக்கின்றார்கள். மிகவும் அழுக்கான உடைகளை அணிந்திருப்பதுடன் மிகவும் நலிவடைந்தும் இருக்கின்றார்கள். இவர்கள் யார் இவர்கள் பிரைச்சனை என்ன வென்று நாங்கள் நினைக்கும் போதே அவர்களின் பிந்தைய காலத்தையும் காட்டிவிடுகின்றார்கள்.

உலகின் நாகரீகம் அழியும் தறுவாயில் ஒரு குடும்பத்தினுள் ஒரு புதிய நபர் பிரவேசிக்கின்றார். ஒரு குழந்தை பிறக்கின்றது இந்த தம்பதியினருக்கு. சந்தோஷமாக இருக்கவேண்டிய இந்த நிகழ்வு இவர்களை மேலும் குழப்பத்திற்கு ஆளாக்குகின்றது. தாமே இந்த நிலையில் எவ்வாறு வாழ்க்கையை நடத்தப் போகின்றோம் என்று நினைக்கும் வேளையில் எவ்வாறு இந்த மகனை பொறுப்பாக வளர்த்தெடுப்பது என பெற்றோர் கலங்குகின்றனர்.

நிலமை மோசமடையத் தொடங்கவே, நம்பிக்கை இழக்கும் தாயார் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் முடிவை எடுக்கின்றார். சற்றும் மனம் தளராத தந்தையோ இறுதிவரை போராடப்போவதாக் கூறுகின்றார். பின்பு இனிமேலும் தன்னால் இப்படியான வாழ்க்கையை வாழ முடியாது என்று எண்ணி தாயார் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கின்றார். இப்போது தந்தையும் மகனும் மட்டுமே குடும்பத்தில் மிச்சம்.

தனயனும் தந்தையும் பயனத்தின் போது

அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தின் இன்னமும் நாகரீகம் அழிந்துவிடாமல் இருக்கின்றது என்ற நம்பிக்கையுடன் தந்தையும் தனயனும் தமது பயனத்தை ஆரம்பிக்கின்றனர்.

இவர்களின் பயனத்தில் சந்திக்கும் இடையூறுகள பற்றியதே மீதிக் கதை. இதில் திகிலூட்டும் விடயம் என்னவெனில் மனிதர்களை உண்ணும் மனிதர்கள்.

நாகரீகம் அழிந்து அதனுடன் உணவு உறைவிடம் போன்றவற்றிற்கு தட்டுப் பாடு ஏற்படுவதனால் ஒரு கூட்டம் மனிதர்களை விலங்குகள் போல வேட்டையாட புசித்து வருகின்றது. விடியலைத் தேடும் தந்தையும் தனயனும் இவர்களிடம் மாட்டுப்பட்டார்களா இல்லையா என்று பார்க்கும் நேரங்களில் நெஞ்சம் திக் திக் என்கின்றது.

தந்தை மகன் பாசப்பிணைப்பையும் உலகம் மாறினால் என்ன ஆகும் என்பதையும் அழகாகப் படம் ஆக்கியுள்ளார்கள். நேரம் கிடைத்தால் கட்டாயம் பார்த்து மகிழுங்கள்.

My Rating: 80/100

Awake (2007) விமர்சனம்

ஒவ்வொருநாளும் கோடிக் கணக்கானோருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதில் சுமார் சில ஆயிரக் கணக்கானோருக்கு இந்த மக்க ஊசிகள் சரியாக வேலைசெய்வதில்லை என்று சொன்னால் நம்புவீர்களா??

இதில் சிக்கல் என்னவென்றால், இவர்களால் சத்தம் போட்டு பேசக்கூடியதாகவோ அல்லது சைகைகள் காட்டக் கூடியதாகவோ இருக்காவிட்டாலும், இவர்களால் தம்மைச் சுற்றி நடப்பவற்றைக் காணமுடியும் அத்துடன் சிகிச்சை வலியையும் உணரமுடியும். உங்கள் நெஞ்சில் அறுவைச் சிகிச்சை பிளேடை வைத்து நெஞ்சைப் பிளந்து இதயம் வரை பார்க்கும் வலியை உணர்ந்து அதை வாயால் கத்த முடியாத நிலைக்கு போனால் என்னாகும்?? அந்த நிலையில் உள்ள ஒருவரது கதையே இந்த திரைப்படம்.


பணம், அழகான காதலி, அன்பான அன்னையார் அனைத்தும் இருந்தும் நாயகன் கிளைட்டனுக்கு விதி சரியில்லை. இதயத்தில் கோளாறு உடைய இந்தச் செல்வந்தன் ஒரு இதய மாற்று சிகிச்சைக்கு கட்டாயம் உள்ளாக வேண்டிய நிலமை. நல்ல வேளையாக இவரின் தோழனாக ஒரு இதய மாற்று சிகிச்சை நிபுணர் அறிமுகம் ஆகின்றார்.

நட்பின் அடையாளமாக நண்பன் மேல் கடும் நம்பிக்கை வைக்கும் கிளைட்டன், நண்பரின் தயவிலேயே தனது இதய மாற்று சிகிச்சையை நடத்த முடிவெடுக்கின்றார்.

க்ளைட்டனின் தாயார் அமெரிக்காவின் சிறந்த ஒரு வைத்திய நிபுனர் மூலமே இந்த இதய அறுவை சிகிச்சையை நடத்த விளைகின்றார். ஆனாலும் நண்பன் மேல் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கையால் வைத்தியர் ஜாக்கிடமே தான் இதய மாற்று சிகிச்சை செய்ய விரும்புவதாக தனது கோடீஸ்வர தாயாரிடம் அறுதியாகக் கூறிவிடுகின்றான் இந்தத் தனயன்.

ஒரு நாள் மாற்று இதயச் சிகிச்சைக்கு ஏற்ற ஒரு இதயம் கிடைக்கின்றது. சந்தோஷமாக நண்பன் ஜாக்கின் உதவியுடன் அன்னையாரின் எதிர்ப்பையும் புறக்கணித்து சத்திர சிகிச்சை நடக்கின்றது.

இங்கே தான் கிளைட்டனுக்கு Anesthesia awareness, ஏற்படுகின்றது. இதன் பின்னரே கதை சூடுபிடிக்கத் தொடங்குகின்றது. இதய மாற்று சிகிச்சை நடைபெறும் போது நடக்கும் சம்பாஷணை அனைத்தையும் கேட்கும் நிலமைக்கு கிளைட்டன் தள்ளப்படுகின்றான்.

இவ்வடமே கதையின் திருப்பு முனை. இதன் பிறகு கதையில் என்ன நடக்கின்றது என்பதைச் சொல்வதும் அழகல்ல.

திரைப்படம் பார்த்து முடித்த பின்னர் அருமையான ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி மனதில் கிடைத்தது. டாக்டரைக் காட்டி ஆரம்பிக்கும் திரைப்படம் டாக்டரை காட்டியே முடிகின்றது. வைத்திய முறைகளை தப்பாக இந்த திரைப்படத்தில் காட்டினார்கள் என்று குறைகள் முன்வைக்கப் பட்டாலும் அமெரிக்காவில் திரைப்படம் சூப்பர் ஹிட்டாம்.

அழகான காதல் கதை யூ டேர்ண் போட்டு அதகளப் படும் இடைவேளையின் பிறகு. பார்த்து இரசிக்கக்கூடிய திரைப்படம் ஒன்று.

My Rating: 75/100