Category: திரைப்பட விமர்சனம்

  • பறந்து போ – திரைவிமர்சனம்

    பறந்து போ – திரைவிமர்சனம்

    அண்மையில் பறந்து போ எனும் திரைப்படத்தை ஹாட் ஸ்டார் தளத்தில் பார்த்தேன். இயக்குனர் ராம் அவர்களின் திரைப்படம் என்று ஒரே காரணத்தினாலேயே இந்த திரைப்படத்தை நான் உட்கார்ந்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். பேரன்பு, தரமணி மற்றும் தங்க மீன்கள் போன்ற திரைப்படங்கள் என்றும் என் இதயத்திற்கு அருகாமையான திரைப்படங்கள். 

    அந்த வரிசையில் இந்தத் திரைப்படமும் இருக்கும் என்று பார்த்தால் வெறும் எரிச்சல்தான் இறுதியில் எஞ்சியது. நவீன உலகில் பெற்றோர்களின் தவிப்பு போராட்டம் மற்றும் பயணங்களும் அதன் வழி கிட்டும் வாழ்க்கைப் பாடங்களும் என்று கதை நீள்கின்றது. என் நட்பு வட்டத்தில் சிலர் இந்த திரைப்படத்தை சிலாகித்துப் பேசியிருந்தனர் ஆனால் திரைப்படத்தைப் பார்க்கும் போது பாத்திரங்களும் அவர்கள் ஓயாமல் பேசுவதும் மிகவுமே அலுப்புத்தட்டுவது போல ஆகிவிட்டிருந்தது. 

    இயக்குனர் இராம் அவர்களே இந்தத்திரைப்படத்தில் நான் கருத்தொண்டும் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தார். ஆயினும் ஐயோ சாமி படம் முழுக்க எப்படி குளந்தை வளர்ப்பு அமைய வேண்டும் என்று பாடம் எடுப்பது போலவே இருந்தது. பாத்திரங்கள் எதுவும் ஒட்டவேயில்லை வெறும் அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தது. 

    பறந்துபோ திரைப்படத்தின் மூலம் ஒரே ஓட்டமாக இருக்காமல் சற்றே ஓய்வெடுத்து வாழ்க்கையில் சில பாகங்களை ரசியுங்கள் என்று கூற வருகின்றார் என்று நினைக்கின்றேன். 

    பறந்து போ – பொறுமையுடன் உட்கார்ந்து பார்க்க முடிந்தால் பாருங்கள். 

  • Su from So திரை விமர்சனம்

    Su from So திரை விமர்சனம்

    பேய் ஒட்டுதல் பேய் வந்து ஒருத்தர் மேல் ஏறுதல் என்று காஞ்சனா முதல் அரண்மனை வரை பல திரைப்படங்களை நாங்கள் பார்த்திருப்போம். அந்த வகையிலேயே இந்தத் திரைப்படமும் இருக்கும் என்றே எனக்கு முதலில் தோன்றியது. பார்க்க பார்க்க திரைப்படத்துடன் ஒட்டிவிட்டேன். மெல்லிய இதமான நகைச்சுவை மற்றும் நடுத்தரவயதுக் காதல் போன்றவற்றை அழகாக திரைப்படமாக்கியிருந்தனர். 

    அத்துடன் திரைப்படத்தில் போக்கிரிச் சாமியார்கள், மூட நம்பிக்கைகள் போன்ற விடயங்களையும் தொட்டுச் செல்கின்றார்கள். பார்த்து முடிந்த பின்னர் ஒரு கன்னடப் படம் பார்த்த உணர்வில்லாமல் ஒரு மலையாளப் படம் பார்த நிறைவு கிடைத்தது. 

    ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும் நிச்சயமாகப் பார்த்துக் களிக்கக்கூடிய திரைப்படம். குறிப்பாக அடி வெட்டு குத்து என்று ஆகிவிட்ட தமிழ்த் திரைப்படங்கள் பார்த்து தவித்திருப்போரிற்கு இந்தத் திரைப்படம் நிச்சயமாகப் பிடித்துப் போகும். தவறாமல் OTT இல் கண்டு களியுங்கள்.

  • கூலி திரை விமர்சனம் – No Spoiler

    கூலி திரை விமர்சனம் – No Spoiler

    இன்று சிங்கையில் கூலி திரைப்படத்தைச் சென்று கண்டு களித்தேன். அனைத்து திரையரங்குகளிலும் சுமார் 75% காட்சிகள் விற்றுத் தீர்த்திருந்தன. கிடைத்த ஒரு ஆசனத்தை எடுத்துக்கொண்டு திரையரங்கினுள் சென்று அமர்ந்து கொண்டேன்.

    திரைப்படம் ஆரம்பித்து சற்றே வேகமெடுக்க முதல் 40 நிமிடங்கள் கடந்துவிட்டன. அதன் பின்னர் திரைக்கதை மெல்ல மெல்ல வேகமெடுத்து ஒடத் தொடங்கியது. திரையெங்கும் ரஜினியின் உச்சக் காட்சிகள் நிறைந்திருந்தன.

    கூலி திரைப்பட விளம்பரம்

    திரையெங்கும் ரஜினி நிறைந்திருக்கின்றார் அது போலவே திரைக்கதையெங்கும் லோகேஷ் நிறைந்திருக்கின்றார். லொகேஷின் முத்திரைக் காட்சிகள் மற்றும் திருப்பங்கள் கதையெங்கும் நிறைந்திருக்கின்றன.

    அனிருத்தின் இசை பயங்கரமாக அதிர்கின்றது. அனியின் இசையில்லாமல் இந்த திரைப்படம் இவ்வளவு இலயித்திருக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    திரைப்படத்தில் நாகார்ஜூணா, அமீர் கான், உபேந்திரா, சத்தியராஜ், சுருதி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நிறைந்திருந்தது. நட்சத்திரங்கள் நிறைந்ததால் என்னவோ அவ்வளவாக அனைவரையும் பயன்படுத்தவில்லை. தன்னைச் லியோ படத்தில் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று சஞ்சே டத் குறை சொன்னது நினைவில் வந்து சென்றது.

    சந்தியராஜ் கூட திரைப்படத்தில் ஊறுகாய் போலவே வந்து போகின்றார். அவரும் ரஜினியும் ரெட்ரோ காட்சிகளில் அபாரம். திரையரங்கே விசில் பறக்க அதிர்ந்தது. உபேந்திரா சிறு அளவான காட்சிகளில் வந்து சென்றாலும் சண்டைக் காட்சிகளில் நெருப்புத் தெறிக்க விட்டுள்ளார். சுருதியின் பாத்திரம் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தது. அரிதாரம் ஏதும் பூசாமல் நடித்துள்ளார் ஆனாலும் அந்தப் பாத்திரத்திற்கு அவர் அவ்வளவாக ஒட்டவில்லை.

    ரஜினியைத் தவிர மலையாள நடிகர், எங்கள் மஞ்சுமேல் பாய்ஸ் புகழ் சுபின் அடித்துப் பின்னியுள்ளார். பகத் பாசிலைத்தான் இவர் பாத்திரத்திற்கு ஆரம்பத்தில் அணுகினாலும் அவர் வேறு திரைப்படங்களில் பணியாற்ற ஏலவே ஒத்துக் கொண்டுவிட்டதால் இந்த திரைப்படத்தை ஏற்றுக் கொள்ளவில்லையாம்.

    கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் திரையில் கண்டு களிக்கக்கூடிய திரைப்படம். தயங்காமல் பெரிய எதிர்பார்ப்புகளைத் தவிர்த்துச் சென்று பாருங்கள்.

    கூலி – கெட்ட பையன் சார்!

  • 3BHK திரைப்பட விமர்சனம்

    3BHK திரைப்பட விமர்சனம்

    தற்போதெல்லாம் தரமான தமிழ் திரைப்படங்களைப் பார்பதே அபூர்வமாக உள்ளது. ரூரிஸ்ட் பமிலி, மட்ராஸ் மட்டினி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே என்னைக் கவர்ந்த படங்களாக இந்த வருடம் 2025 இல் இருந்தது.

    இன்று நீண்ட நாட்களின் பின்னர் 3BHK எனும் தமிழ் திரைப்படத்தைப் பார்ததேன். சரத்குமார், தேவயாணி மற்றும் சித்தார்த் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வீடு வாங்கும் கனவை மையமாகக் கொண்டே இந்த திரைப்படம் அமைந்து இருந்தது.

    திரைப்பட விளம்பர சுவரொட்டி

    பிரபு எனும் கதா பாத்திரத்தில் சித்தார்த் சிறப்பாகவே நடித்திருந்தார். பாடசாலை மாணவன் முதல் 40 வயதில் இருக்கும் நடுத்தர வயது ஆண்வரை அவர் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். இவரை விட சரத்குமார் அமைதியான நடிப்பில் ஒரு நடுத்தர வர்க்க தகப்பனாகவே நடித்திருந்தார் என்று கூறுவதை விட வாழ்ந்திருந்தார் என்றே கூறலாம். தேவயானியும் அவ்வாறே ஒரு அமைதியான குடும்பத்தலைவியாக நடிப்பில் அசத்தியிருக்கின்றார்.

    சில இடங்களில் என்னடா இது ஒரே துன்பம் மேல் துன்பமாக இந்தக் குடும்பத்தைத் தாக்குவதாகக் காட்டியிருக்கின்றார்களே என்று பார்ததபோது கதை மெல்ல மெல்ல வந்து எம்மருகில் அமர்ந்துவிடுகின்றது.

    ஒரு மென்பொருள் வல்லுனராக எம்மை எப்படியெல்லாம் நவீன நிறுவனங்கள் குளாய் போட்டு நமது இரத்தத்தை உறிஞ்சுகின்றன என்பதெல்லாம் பார்ககும் போது எமக்கும் சுடுவதாக உள்ளது.

    வீடு வாங்குவதற்காக, திருமணத்திற்காக வங்கிகளில் கடன் வாங்கி அல்லல் பட்டோர் பல யாம் அறிவோம்.

    இப்போதெல்லாம் ஜென் சீ தலைமுறையினர் பலர் இந்த அறிவுத் தெளிவு உள்ளவராகவே இருக்கின்றனர். அவரசமாக வீடு வாங்கி சமூகத்தின் வாயை அடைப்தைவிட நல்ல முறையில் பணத்தை சேமித்து முதலீடு செய்வதே மிக முக்கியமாகும்.

    இந்த திரைப்படத்தின் இசையமைப்பும் சிறப்பாக அமைந்திருந்தது. இசை திரைப்படத்தை எங்குமே மிஞ்சவில்லை. திரைப்படத்தின் முக்கியத்துவத்தை எங்கும் பாதிக்கவில்லை. மலையாளத் திரையிசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் மலையாளப் பாணியிலேயே சிறப்பாக இசையமைத்துள்ளார்.

    சற்றே பொறுமையுடன் உட்கார்ந்து பார்தது மகிழக் கூடிய திரைப்படம். எம்மைப் போன்ற மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கட்கு மிகவுமே ஒத்துப் பார்ககக்கூடிய திரைப்படம்.