Author: மயூரேசன்

  • கூலி திரை விமர்சனம் – No Spoiler

    கூலி திரை விமர்சனம் – No Spoiler

    இன்று சிங்கையில் கூலி திரைப்படத்தைச் சென்று கண்டு களித்தேன். அனைத்து திரையரங்குகளிலும் சுமார் 75% காட்சிகள் விற்றுத் தீர்த்திருந்தன. கிடைத்த ஒரு ஆசனத்தை எடுத்துக்கொண்டு திரையரங்கினுள் சென்று அமர்ந்து கொண்டேன்.

    திரைப்படம் ஆரம்பித்து சற்றே வேகமெடுக்க முதல் 40 நிமிடங்கள் கடந்துவிட்டன. அதன் பின்னர் திரைக்கதை மெல்ல மெல்ல வேகமெடுத்து ஒடத் தொடங்கியது. திரையெங்கும் ரஜினியின் உச்சக் காட்சிகள் நிறைந்திருந்தன.

    கூலி திரைப்பட விளம்பரம்

    திரையெங்கும் ரஜினி நிறைந்திருக்கின்றார் அது போலவே திரைக்கதையெங்கும் லோகேஷ் நிறைந்திருக்கின்றார். லொகேஷின் முத்திரைக் காட்சிகள் மற்றும் திருப்பங்கள் கதையெங்கும் நிறைந்திருக்கின்றன.

    அனிருத்தின் இசை பயங்கரமாக அதிர்கின்றது. அனியின் இசையில்லாமல் இந்த திரைப்படம் இவ்வளவு இலயித்திருக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    திரைப்படத்தில் நாகார்ஜூணா, அமீர் கான், உபேந்திரா, சத்தியராஜ், சுருதி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நிறைந்திருந்தது. நட்சத்திரங்கள் நிறைந்ததால் என்னவோ அவ்வளவாக அனைவரையும் பயன்படுத்தவில்லை. தன்னைச் லியோ படத்தில் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று சஞ்சே டத் குறை சொன்னது நினைவில் வந்து சென்றது.

    சந்தியராஜ் கூட திரைப்படத்தில் ஊறுகாய் போலவே வந்து போகின்றார். அவரும் ரஜினியும் ரெட்ரோ காட்சிகளில் அபாரம். திரையரங்கே விசில் பறக்க அதிர்ந்தது. உபேந்திரா சிறு அளவான காட்சிகளில் வந்து சென்றாலும் சண்டைக் காட்சிகளில் நெருப்புத் தெறிக்க விட்டுள்ளார். சுருதியின் பாத்திரம் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தது. அரிதாரம் ஏதும் பூசாமல் நடித்துள்ளார் ஆனாலும் அந்தப் பாத்திரத்திற்கு அவர் அவ்வளவாக ஒட்டவில்லை.

    ரஜினியைத் தவிர மலையாள நடிகர், எங்கள் மஞ்சுமேல் பாய்ஸ் புகழ் சுபின் அடித்துப் பின்னியுள்ளார். பகத் பாசிலைத்தான் இவர் பாத்திரத்திற்கு ஆரம்பத்தில் அணுகினாலும் அவர் வேறு திரைப்படங்களில் பணியாற்ற ஏலவே ஒத்துக் கொண்டுவிட்டதால் இந்த திரைப்படத்தை ஏற்றுக் கொள்ளவில்லையாம்.

    கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் திரையில் கண்டு களிக்கக்கூடிய திரைப்படம். தயங்காமல் பெரிய எதிர்பார்ப்புகளைத் தவிர்த்துச் சென்று பாருங்கள்.

    கூலி – கெட்ட பையன் சார்!

  • சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளராக விண்ணப்பிக்க முன்னர் இதைப் படித்துவிடுங்கள்

    சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளராக விண்ணப்பிக்க முன்னர் இதைப் படித்துவிடுங்கள்

    சிங்கப்பூரில் வசிப்பவர்கள் சிறிது காலம் இங்கே வசித்த பின்னர் தொடர்ந்து இந்த மாண்பு மிகு நாட்டிலேயே தங்கிவிடலாம் என்று எண்ணுவர். ஆனால் இது அனைவரிற்கும் கைக்கூடுவதில்லை. 

    சிங்கப்பூரில் நிரந்தரவாசியாக (Permanent Resident) SPass, EPass ஆகிய வேலை அட்டையை வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது மென்பொருள் வல்லுனர், பொறியியளாளர் போன்ற தொழில்சார் புலமையுடையோரிற்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும். தகமைகள் இருந்தாலும் நிரந்தரவாசிக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. 

    இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல தனியார் நிறுவனங்கள் தங்களைத் தாங்களே குடியேற்ற விற்பனர்கள் என்று சந்தைப்படுத்தி மக்களிடம் பணத்தை வாங்கி வயிறு நிரப்பிக்கொண்டு இருகின்றனர். குறிப்பாக நாங்கள் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உத்தரவாதம் என்று கூறுவதெல்லாம் பொய்யிலும் பொய். 

    இப்படியாக ஒரு நிறுவனம் பல பொய் உறுதிகளை வழங்கி இறுதியில் நிரந்தக்குடியுரிமையையும் வாங்கிக் கொடுக்கவில்லை. இதற்காக சிங்கப்பூர் பணம் 10,000 வெள்ளி வரை வாங்கி நிரந்தரக்குடியேற்றவாசியாக விழைந்த மக்களை ஏமாற்றியுள்ளனர். இது சம்பந்தமாக இன்று சிஎன்ஏ செய்திச் சேவையில் செய்தி வெளியாகியுள்ளது. சிங்கை அரசின் ஒரு அமலாக்கப்பிரிவு இந்த நிறுவனத்தின் ஏய்ப்பு நடவடிக்கை பற்றி மக்களுக்கு அறியத் தந்துள்ளது. 

    insecurities and unfamiliarity with Singapore’s immigration system were exploited by the three firms, misleading them into paying substantial sums of money. – Alvin Koh (Competition and Consumer Commission of Singapore)

    சிங்கையில் நிரந்தரக்குடியேற்ற வாசியாக மாற என்ன செய்யவேண்டும் என்பது யாராலும் கணிக்க முடியாமல் உள்ளது. அது சிங்கை குடிவரவு குடியகலவு அதிகாரசபைக்கே வெளிச்சம். 

    ஆனாலும் நானும் சிங்கையின் ஒரு நிரந்தரக் குடியேற்றவாசி என்ற ரீதியில் என்னால் கூறக்கூடியதெல்லாம் ஒன்றுதான். நீங்கள் சிங்கை நாட்டுடன் உண்மையாகவே இணைந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டதைக் காண்பிக்க வேண்டும். குறிப்பாக சிங்கையின் குடிமக்களுடன் நீங்கள் இணைந்து பழக ஆரம்பித்துவிட்டீர்கள், சிங்கை நாட்டின் இன்பதுன்பங்களின் பங்கெடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள் போன்றவற்றைக் உள சுத்தியுடன் காண்பிக்கவேண்டும். அனைத்திற்கும் மேல் கட்டாயமாக நீங்கள் சிங்கை அரசிற்கான வரிப்பணங்களைத் தவறாமல் செலுத்தியிருக்க வெண்டும். சின்னதாகக்கூட குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடாது. மேலும் உங்கள் கல்வித் தகமையை உயர்த்திக்கொள்ளுங்கள். பட்டப்படிப்புடன் நின்றுவிடாமல் பட்டப்பின்படிப்பையும் கட்டாயம் செய்துகொள்ளுங்கள்.

    இது பற்றி பிரபல சிங்கை யூரியூப்பர் திரு ஈஸ்வரன் அவர்களும் தமிழில் தமது யூரியூப் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் கருத்துக்களையும் கேட்டுவிடுங்கள்.

    திருட்டு மற்றும் பொய் சொல்லி நாங்கள் பிழைக்கக்கூடாது. அதுபோலவே இது போன்று பொய் புரட்டு சொல்லி வாழ்க்கை நடத்துவோரிடம் சிக்கியும் விடக்கூடாது.

    சிங்கப்பூர் நிரந்தரக்குடியேற்றவாசியாக விண்ணப்பம் செலுத்த உங்களுக்கும் விரும்பம் இருந்தால் நீங்களாகவே செய்துவிடுங்கள். யாரிடமும் தேவையில்லாமல் பணம் கொடுத்து ஏமாந்துவிடாதீர்கள். குறிப்பாக உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட நாங்கள் உத்தரவாதம் என்று பொய்கூறும் பொய்யர்களிடம் சிக்கிவிடாதீர்கள். 

  • 3BHK திரைப்பட விமர்சனம்

    3BHK திரைப்பட விமர்சனம்

    தற்போதெல்லாம் தரமான தமிழ் திரைப்படங்களைப் பார்பதே அபூர்வமாக உள்ளது. ரூரிஸ்ட் பமிலி, மட்ராஸ் மட்டினி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே என்னைக் கவர்ந்த படங்களாக இந்த வருடம் 2025 இல் இருந்தது.

    இன்று நீண்ட நாட்களின் பின்னர் 3BHK எனும் தமிழ் திரைப்படத்தைப் பார்ததேன். சரத்குமார், தேவயாணி மற்றும் சித்தார்த் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வீடு வாங்கும் கனவை மையமாகக் கொண்டே இந்த திரைப்படம் அமைந்து இருந்தது.

    திரைப்பட விளம்பர சுவரொட்டி

    பிரபு எனும் கதா பாத்திரத்தில் சித்தார்த் சிறப்பாகவே நடித்திருந்தார். பாடசாலை மாணவன் முதல் 40 வயதில் இருக்கும் நடுத்தர வயது ஆண்வரை அவர் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். இவரை விட சரத்குமார் அமைதியான நடிப்பில் ஒரு நடுத்தர வர்க்க தகப்பனாகவே நடித்திருந்தார் என்று கூறுவதை விட வாழ்ந்திருந்தார் என்றே கூறலாம். தேவயானியும் அவ்வாறே ஒரு அமைதியான குடும்பத்தலைவியாக நடிப்பில் அசத்தியிருக்கின்றார்.

    சில இடங்களில் என்னடா இது ஒரே துன்பம் மேல் துன்பமாக இந்தக் குடும்பத்தைத் தாக்குவதாகக் காட்டியிருக்கின்றார்களே என்று பார்ததபோது கதை மெல்ல மெல்ல வந்து எம்மருகில் அமர்ந்துவிடுகின்றது.

    ஒரு மென்பொருள் வல்லுனராக எம்மை எப்படியெல்லாம் நவீன நிறுவனங்கள் குளாய் போட்டு நமது இரத்தத்தை உறிஞ்சுகின்றன என்பதெல்லாம் பார்ககும் போது எமக்கும் சுடுவதாக உள்ளது.

    வீடு வாங்குவதற்காக, திருமணத்திற்காக வங்கிகளில் கடன் வாங்கி அல்லல் பட்டோர் பல யாம் அறிவோம்.

    இப்போதெல்லாம் ஜென் சீ தலைமுறையினர் பலர் இந்த அறிவுத் தெளிவு உள்ளவராகவே இருக்கின்றனர். அவரசமாக வீடு வாங்கி சமூகத்தின் வாயை அடைப்தைவிட நல்ல முறையில் பணத்தை சேமித்து முதலீடு செய்வதே மிக முக்கியமாகும்.

    இந்த திரைப்படத்தின் இசையமைப்பும் சிறப்பாக அமைந்திருந்தது. இசை திரைப்படத்தை எங்குமே மிஞ்சவில்லை. திரைப்படத்தின் முக்கியத்துவத்தை எங்கும் பாதிக்கவில்லை. மலையாளத் திரையிசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் மலையாளப் பாணியிலேயே சிறப்பாக இசையமைத்துள்ளார்.

    சற்றே பொறுமையுடன் உட்கார்ந்து பார்தது மகிழக் கூடிய திரைப்படம். எம்மைப் போன்ற மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கட்கு மிகவுமே ஒத்துப் பார்ககக்கூடிய திரைப்படம்.

  • சிங்கை நாட்டிற்கு 60 வயது

    சிங்கை நாட்டிற்கு 60 வயது

    நேற்றய தினம் சிங்கப்பூர் தனது 60ம் ஆண்டு நிறைவை ஒட்டிய கொண்டாட்டங்களை இனிதே நடத்தியது. 1965 மலாயா சிங்கப்பூ தனிநாடாக பிரித்துவைத்தது முதல் சிங்கப்பூரின் வரலாறு ஆரம்பமாகின்றது.திரு லீ குவான் யூ தலைமயில் ஆரம்பித்த அரசு இன்று திரு லாரன்ஸ் வாங் வரை வெற்றி நடை போடுகின்றது.

    சிங்கை மாநகரத்தின் நிரந்தரக் குடியாளராக இந்த நாட்டின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

    சுதந்திர தினக் கொண்டாட்டம் அன்று நான் புகைப்படங்கள் எடுக்க முடியாவிடினும் ஒத்திகை பார்ப்பின்போது எடுத்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

  • வணக்கம்

    வணக்கம்

    மீளவும் 2025 இல் எனது வலைப்பதிவை மீள ஆரம்பித்துள்ளேன். 15 வருடம் முன்னால் வலைப்பதிவுகள் கொடிகட்டிப் பறந்தன. இன்றோ அனைவரும் முகப்புத்தகத்தையும் ஏனைய சமூக வலைத்தளங்களையும் நாடிவிட்டனர்.

    எத்தனை ரீல்ஸ் விட்டாலும் உட்கார்ந்து அமைதியாக ஒரு வலைப்பதிவை வாசிப்பதே தனிச் சுவை. ஏலவே இந்த தளத்தை மீளவும் முடுக்கி விட்டுள்ளேன்.

    நான் முன்னர் எழுதிய பதிவுகள் அப்படியே வேர்ட்பிரஸ்.காம் தளத்திற்கு மாற்றிவிட்டேன். ஆனால் அதில் இருந்த படிமங்கள் (images) அனைத்தும் தொலைந்துவிட்டன.

    வேறென்ன.. புதுப் பதிவொன்றில் ஆரம்பிக்கலாம். நன்றி ❤️