When Life Gives You Lemons, Make Limoncello – புத்தக விமர்சனம்

ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு “When life gives you lemons, make lemonade”. இத்தாலியில் இந்த லெமனேட்டை விட Limoncello எனும் குடிபானம் பிரபலமாம். அத்துடன் Limoncello செய்ய லெமன் தோலைப் பயன்படுத்துகின்றார்கள். ஆகவே ஆசிரியர் இந்தப் பெயரை சூட்டியுள்ளார் தன் முதலாவது புத்தகத்திற்கு.

முதலில் ஒரு விடயம். ஒரு சீரியசான புத்தகம் தேடி நீங்கள் அலைபவர் என்றால் இத்துடனே இந்த விமர்சனத்தை வாசிக்காமல் வெளியேறலாம். ஏன் எனில் இந்தப் புத்தகம் ஒரு ஆங்கில ஆசரியரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை தொகுத்த ஒரு கோவையே.

புத்தக முன் அட்டை
புத்தக முன் அட்டை

அண்மையில் ODEL பல்லங்காடியில் உலாவித் திரிந்த போது இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது. இந்தப் புத்தகம் பற்றி முன்பே சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நண்பன் சிலாகித்துக் கூறியிருந்த காரணத்தால் இரண்டு தடவை யோசிக்காமல் 750 ரூபா (Approx $7) கொடுத்து வாங்கிவிட்டேன். புத்தகம் வாசித்து முடிந்த பின்னர் கொடுத்த பணத்திற்காக வருந்தவில்லை. புத்தகத்தில் எழுத்தாளர் கைப்பட கையெழுத்திட்டு என்ஜாய் என்று எழுதியிருந்தார் 😉

அருண எனும் இலங்கையர் தனது 18வது வயதில் இலங்கையில் இருந்து மேற் படிப்பிற்காக அமெரிக்கா செல்கின்றார். அங்கே தனது பட்டப்படிப்புகளை முடித்தபின்னர் அங்கேயே ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார். செப்டம்பர் 11 தாக்குதலிற்குப் பின்னர் தனது தொழிலையும் இழந்து இருந்த அருண ஒரு நாள் New York Times இல் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்க்கின்றார்.

“இத்தாலியில் உள்ள ஒரு ஆங்கிலப் பள்ளிக்கு ஒரு ஆங்கில ஆசிரியர் தேவை” வேலையின்மை, விவாகரத்து என்று சலித்திருந்த அருண இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இத்தாலி செல்கின்றார். இங்கிருந்துதான் இந்த புத்தகம் சூடு பிடிக்கத் தொடங்குகின்றது.

முதல் சந்திப்பிலேயே தான் ஒரு முன்னாள் FBI Agent என்று புருடா விடும் ஆங்கிலப் பள்ளி முதலாளியுடன் கதை ஆரம்பிக்கின்றது. முதலில் அருண இத்தாலியை குறிப்பாக உரோமா புரி நகரை ஒரு வளர்ந்து வரும் நாட்டின் தலைநரத்துடன் ஒப்பிட்டு கடித்துக் குதறுகின்றார். ஆயினும் புத்தகம் முடியும் போது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இறவா வரம் பெற்ற இந்த நகரை ஏன் மக்கள் ஏற்றிப் புகழ்கின்றார்கள் என்று உணர்கின்றார்.

முதலே சொன்னபடி ஆசிரியர் மனதில் வந்த அனைத்தையும் எழுதி தள்ளியுள்ளார். இத்தாலியில் தனது காதலிகள், இத்தாலி மக்களின் மூடப் பழக்க வழக்கங்கள், தரமற்ற வைத்தியசாலைகள், மோசமான உணவு வகைகள், குளிக்காத ரோமாபுரி மக்கள் என்று நகைச்சுவைப் பட்டியள் நீள்கின்றது. ஆனாலும் சில இடங்களில் மனம் கனக்கும் வண்ணமான சம்பவங்களையும் இவர் குறிப்பிடத் தவறவில்லை.

தற்போது அருண ஒன்லைன் ஆங்கிலப் பாடசாலையினை நடத்தி வருகின்றார். சீனா, இத்தாலி, இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து இவரது தளத்திற்கு வந்து மாணவர்கள் பாடம் படிக்கின்றார்களாம்.

நீங்களும் என்னைப் போல மற்றவர் விடயங்களை அறியும் ஆர்வம் உள்ளவர் என்றால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துவிடுங்கள். இலங்கையில் விஜித யாப்பா, ஓடெல் போன்ற பிரபல புத்தக சாலைகளில் கிடைக்கும். நீங்கள் ஒன்லைனிலும் இந்தப் புத்தகத்தை வாங்கலாம் ஆனால் விலை அதிகமாக உள்ளது.

நேரம் போக்காட்ட அருமையான ஒரு புத்தகம். அத்துடன் வாழ்வில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகள் எமது வாழ்க்கையை எவ்வாறெல்லாம் மாற்றம் போகின்றது என்பதற்கு இந்த சுயசரிதைப் புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு.

Leave a Reply