The Hunger Games (2012) விமர்சனம்

The Hunger Games புத்தகத்தை கடந்த வருடம் வாசித்து முடித்தேன். ஹரி போட்டர் விட்ட இடத்தை ட்வைலைட் நிரப்ப பின்னர் ட்வைலைட் விட்ட இடத்தை இந்த ஹங்கர் கேம்ஸ் தொடர் நிரப்பியது என்பதே அடியேனின் எண்ணம். இந்த ஹங்கர் கேம்ஸ் திரைப்படம்/புத்தகத்தின் கதைகள் எதிர்காலத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது வட அமெரிக்கா சின்னாபின்னப்பட்டு பல பாகங்களாகப் பிரிகின்றது. அழிவின் மத்தியில் இருந்து புதிய நாடு ஒன்று பிறக்கின்றது. அதுவே பனம் (பிணம் இல்லை) ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு பெயர் டிஸ்ரிக்ட் 1 – 12 வரை மாவட்டங்கள். இத்தனை மாவட்டங்களின் தலையாய மாவட்டம் மற்றும் தலைநகரம் கபிடொல் (Capitol). தலைநகர் கப்படிட்டலுக்கு எதிராக நடந்த புரட்சி முரட்டுத் தனமாக அடக்கப்படுகின்றது. இனி இவ்வாறு ஒரு தப்பை மாவட்டங்கள் செய்யாது தடுப்பதற்காக புரட்சி நசுக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்க ஹங்கர் கேம்ஸ் எனும் இந்த விபரீத விளையாட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது.


சரி ஹங்கர் கேம்ஸ் என்றால் என்ன?? அதாவது 12 மாவட்டங்களிலும் இருந்து ஒரு ஆண், ஒரு பெண் வீதம் மொத்தம் 24பேர் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்படுவர். இந்த 24 பேரும் தலைநகர் கபிடோலிற்கு அழைத்துவரப்பட்டு அங்கே ஒரு மூடபட்ட காடு போன்ற அமைப்புடைய அரங்கில் விடப்படுவர். 24 பேரும் ஒருத்தருடன் ஒருத்தர் மோதிக் கொலை செய்ய வேண்டும் மற்றப் போட்டியாளரை. எஞ்சும் ஒரு போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். இந்தப் போட்டி நாங்கள் பார்க்கும் எயார்டெல் சுப்பர் சிங்கர் போல பனமின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். தமது உறவுகள் ஒன்றொன்றாக கொல்லப்படுவதை தொலைக்காட்சியில் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு டிஸ்ரிக்ட் 1 தொடக்கம் 12 வரையான மக்கள் கட்டாயப்படுத்தப்படுவர். இதுதான் கதையின் பின்ணனி.

இந்தக் கதை வழமையான கதைகள் போல ஒரு கதாநாயகன் பின்பு அவர் காதலிப்பதற்காக ஒரு கதாநாயகி என்று அமையவில்லை. கதையின் மையைப் பாத்திரம் ஒரு பெண். ஒரு இளம் வயது யுவதி. ஒரு வேளை உணவிற்காக ஏங்கும் தனது குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு வீராங்கனை. விதியின் விளையாட்டால் இந்தப் பெண்ணும் ஹங்கர் கேம்சிற்காக டிஸ்டிக்ட் 12 இல் இருந்து தெரிவு செய்யப்படுகின்றார். கதையின் மிகுதி இந்தப் பெண்ணையும் அவருடன் டிஸ்ரிக்ட் 12 இல் இருந்து தெரிவு செய்யப்படும் மற்றய ஆடவனையும் சுற்றி நிகழ்கின்றது. ஹங்கர் கேம்சில் என்ன நடந்தது அதில் இந்த கன்டனிஸ் எனும் பெண் வென்றாளா இல்லையா என்பதை மிகுதிக் கதை சொல்கின்றது. அடுத்து வரப் போகும் இரண்டு பாகங்களிற்கும் இங்கே சிறப்பான அடித்தளம் இடப்படுகின்றது.

The Girl on Fire

கதைக்காக புத்தகத்தின் பல பாகங்களை கத்தரித்திருகின்றார்கள். புத்தகம் வாசித்து விட்டு திரைப்படம் பார்ப்பவர்களுக்கு சிறிது ஏமாற்றம் இருந்தாலும், நேரடியாக திரைப்படத்தைப் பார்ப்போரிற்கு சிறந்த ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம். வெறுமனே அம்புலிமாமா கதை என்று நினைத்துவிட வேண்டாம் விஞ்ஞான புனைகதைகளுக்கு ஒத்த கதையோட்டம் உண்டு. ஜப்பர்ஜே, ட்ரக்கர் ஜக்கட் அப்பிடி இப்படி என்றெல்லாம் மரபுரிமை மாற்றம் செய்யப்பட்ட விலங்குகள் எல்லாம் கதையில் வந்து போகும். கிளைமாக்ஸ்சில் கூட ஒரு மரபியல் விகாரம் அடைந்த (mutation) விலங்குகள் வந்து போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

முக்கோணக் காதல்

அது சரி பாஸ், காதல் ரொமான்ஸ் எல்லாம் படத்தில் இல்லையா? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கின்றது. அது இல்லாமலா? 😉 சாதாரண காதல் இல்லை முக்கோணக் காதல் இருக்கின்றது. ஒரு நாயகி இரண்டு நாயகன்கள்.. மிகுதியை நீங்களே யோசித்துக் கொள்ளலாம். காதல் தேசம் அளவிற்கு அப்பாஸ், வினித் மாதிரி இருவரும் அடித்துக் கொள்ளமாட்டாகர்கள் என்பது ஒரு ஆறுதலான தகவல் 😀

மொத்தத்தில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான திரைப்படம். இளவட்டங்களுக்கு மிகவும் பிடித்துப் போகும் இந்த திரைப்படம்.

IMDB Rating 76/100
My Rating 85/100
.

One thought on “The Hunger Games (2012) விமர்சனம்”

  1. “ஹங்கர் கேம்ஸ்” விறுவிறுப்பான, நெஞ்சை ஊருக்கும் கதை என்று எண்ணுகிறேன். ஆனால் உங்கள் கருத்துகளில் எனக்கு சிறிய வேறுபாடு:
    ட்வைலைட் போன்ற ஒரு குப்பையை எப்படி ஹாரி பாட்டருடனும் ஹங்கர் கேம்ஸுடனும் உங்களால் ஒப்பிட முடிகிறது? வருமானரீதியாகவும், கருத்துரீதியாகவும் ட்வைலைட் தொடர் ஹாரி பாட்டரின் ஒரு புத்தகத்தின் ஒரு கால் நகத்தைக் கூட தொட முடியாது! :o. ஹங்கர் கேம்ஸ் தொடர் ஹாரி பாட்டருக்கு அடுத்து மிகவும் பிரமாதமாக எழுதப்பட்ட கதை தொடர், நான் மிகவும் நேசிக்கும் கதை தொடர். இந்த வரிசையில் ட்வைலைட்டாய் சேர்க்காதீர்கள், ப்லீஸ்!!!!!!!!!!

Leave a Reply