Tag Archives: Tamil review

தி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்

தி ஏலியனிஸ்ட் எனும் ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடரை நேற்று நெட்பிளிக்சில் பார்த்தேன். சாதாரணமாக எனக்கு உளவியல் சார் பரபரப்புத் (psycho thriller) தொடர்களைப் பார்க்க விருப்பம் அதிகம். அதுவும் தொடர் கொலை போன்ற கதைகளை விடாமல் பார்த்துவிடுவேன். இவ்வகையில் யூனாபொம்பர்டெக்ஸ்டர், லூதர் போன்ற தொலைக்காட்சித் தொடர்களை விரும்பிப் பார்த்தேன்.

இந்த அனைத்துத் தொலைக்காட்சித் தொடர்களிலும் இருந்து இந்த தொலைக்காட்சித் தொடர் மிகவும் வேறுபடக் காரணம் இந்தத் தொலைக்காட்சித் தொடர் நடப்பதாகக் காட்டப்படும் காலம் இற்றைக்கு சுமார் 130 வருடங்களுக்கு முன்னராக காலப் பகுதி. நிவ் யோர்க் நகரத்தில் 1900 இன் ஆரம்பங்களில் நடப்பது போன்று திரைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் இருக்கும் நவீன நுட்பங்கள் மற்றும் profiling போன்ற எந்த வசதியும் இல்லாமலேயே கொலைகாரனைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

மேலும் இந்தத் தொலைக்காட்சித் தொடர் ஏலவே  1994 இல் வெளிவந்த ஒரு ஆங்கில நாவலைச் சார்ந்தே தயாரிக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

கதைச் சுருக்கம் (No spoilers)

பாலியல் தொழிலில் ஈடுபடும் சிறுவர்களை மர்மமான முறையில் ஒருவன் கொடூரமாகக் கொலை செய்கின்றான். யார் எவர் எதற்காக இப்படிச் செய்கின்றார்கள் என்பதை அறிய புதிதாக வந்த காவல்துறை ஆணையாளர் முயல்கின்றார்.

உளவியலாளரும் அவர் குழுவும்
உளவியலாளரும் அவர் குழுவும்

இதேவேளை நகரில் ஒரு பிரசித்தி பெற்ற உளவியலாளர் ஒருவரும் இருக்கின்றார். உளவியலாளர் மேலும் சிலரின் உதவியுடன் பொலீசாரிற்கு மேலதிகமாகத் துப்புத் துலக்கத் தொடங்குகின்றார். என்ன எது நடந்தது என்பதெல்லாம் நான் சொல்லப் போவதில்லை அவற்றை நீங்களே பார்த்து அறிந்தி கொள்ளலாம்.

நிவ் யோர்க் நகரம்

தொடரிலே நிவ்யோர்க் நகரத்தை 1900 அளவில் இருந்த வாறே காட்டியுள்ளார்கள். காங்ஸ் ஒப் நிவ்யோர்க் திரைப்படத்தில் நீங்கள் பார்த்த அதே போன்ற கட்டிட அமைப்புகளை இந்தத் தொடரிலும் பாவித்துள்ளார்கள். அக்காலத்தின் அமெரிக்காவில்ல இருந்த பணக்கார ஏழை வித்தியாசம் எவ்ளவு மோசமானது என்பதையும் ஊழல் காவல்துறையில் எவ்வாறு வேரூன்றி இருந்தது என்பதையும் காட்டியுள்ளார்கள்.

18ம் நூற்றாண்டில் நிவ் யோர்க் நகரம்
18ம் நூற்றாண்டில் நிவ் யோர்க் நகரம்

காட்சிக்கு காட்சி அக்காலத்தில் நாங்கள் வாழ்வது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகின்றார்கள். பெருமளவில் கணனி வரைகலையைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட எது உண்மை எது கணனி வரைகலை என்று புரியாதவாறு காட்சிகள் பிரமிப்பூட்டுவதாக இருந்தது.

உலகில் எந்த நகரமும் நிவ்யோர்க் அளவிற்கு திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்டப்படவில்லை என்று நினைக்கின்றேன்.

உண்மைக் கதை?

இதில் வரும் சில பாத்திரங்களைப் பார்த்தபோது இது உண்மைக் கதையாக இருக்குமோ என்ற ஒரு எண்ணம் ஏற்படவே கூகளில் தட்டியதில் உண்மையாக இருந்த சில பாத்திரங்களைக் கோர்த்து அமைக்கப்பட்ட ஒரு கற்பனைக் காவியம் இது என் புரிந்துகொண்டேன்.

காவல்த்துறை ஆணையாளர்
காவல்த்துறை ஆணையாளர்

குறிப்பாக இக்கதையில் வரும் ரூஸ்வெல்ட் எனும் காவல்த்துறை ஆணையாளர் பின்னாளில் அமெரிக்காவின் அதிபராகியவர் என்பதைக் குறிப்பிடவேண்டும். இவ்வாறு சில உண்மைப் பாத்திரங்களைப் பாவித்துள்ளார்கள்.

நடிப்பு

நடிப்பு சிறப்பு அபத்தம் என்றெல்லாம் விமர்சனம் செய்யுமளவிற்கு நான் ஒன்றும் பெரிய துறைசார் அறிஞர் கிடையாது ஆயினும் ஒரு சராசரி இரசிகனாக டானியல் புருல், லூக் இவன்ஸ், டகோட்டா பான்னிங் ஆகியோரின் நடிப்பை இரசித்தேன்.

குறிப்பாக டகோட்டா பான்னிங் நடிப்பின் பின்னியெடுத்துவிட்டார். இந்தப் பாத்திரத்திற்காகவே பிறந்து வந்தாரோ என எண்ணுமளவிற்கு அவர் நடிப்பில் அசத்திவிட்டார்.

முடிவுரை

நீங்களும் உளவியல் சார் பரபர தொடர்களைப் பார்ப்பவரா? வரலாற்று சார் தொடர்களில் ஆர்வம் உள்ளவரா? அப்படியானால் உங்களுக்கும் இந்தத் தொடர் கட்டாயம் பிடிக்கும். தவறாமல் பார்த்து இரசியுங்கள்.

Pirates of the Caribbean: Dead Men Tell No Tales திரை விமர்சனம்

Pirates of the Caribbean தொடரில் இதுவரை 4 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்த திரைப்படங்களில் முக்கியமான பாத்திரங்களாக இருந்தவை கப்டன் ஜக் ஸ்பரோவ் எனும் கடற் கொள்ளைக் காரன் மற்றும் வில் டேர்ணர் எனும் காப்டன் மற்றும் அவர் காதலி / மனைவி எலிசபெத் ஸ்வான். வில் டேர்ணராக ஒலண்டா புளூம் நடித்திருந்தார் (லேர்ட் ஒப் த ரிங்ஸ் திரைப்படத்தில் லெகலாஸ் பாத்திரம் ஏற்பவர் அவர்தான்.)

முதல் நான்கு பாகங்களின் மையக் கருவே வில் டேர்ணர் மற்றும் எலிசபெத் ஸ்வான் இடையிலான காதலே.

ஐந்தாம் திரைப்படம் Dead Men Tell No Tales

ஏலவே நான்கு திரைப்படங்களை எடுத்து வில் மற்றும் எலிசபெத் இடையிலான கதையை நன்கு கலந்து கரைத்து பரிமாறிவிட்டதால் இப்பொது கப்டன் ஜக் ஸ்பரோவின் வீர தீரச் செயல்களை மையமாகக் கொண்டு புதிய ஒரு தொடரை டிஸ்னிக் காரர்கள் ஆரம்பிக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன்.

கதைச் சுருக்கம் (No Spoilers)

ஜக் ஸ்பரோவின் சிறுவயதில் ஒரு ஸ்பானிய கடற்படைக் கப்டனைத் தாக்கி ஒரு மந்திரங்கள் நிறைந்த இடத்தில் சிறை வைத்துவிடுகின்றான். சிறைப்பட்ட ஸ்பானிய கப்டன் சலசார் ஜக் ஸ்பரோவை பழிவாங்கத் துடிப்பதே கதை. மக்களுக்கு வில் டேர்ணர் மற்றும் எலிசபெத் இல்லாத கதை பிடிக்குமோ பிடிக்காதோ என்ற ஐயத்தினால் வில் டேர்ணரின் மகனையும் இந்தக் கதையில் சேர்த்துவிட்டிருக்கின்றார்கள்.

விமர்சனம்

திரைப்படம் சுமார் பரவாயில்லை இரகம். நீங்கள் ஏலவே இந்தத் தொடரைப் பார்ப்பவராயின் நிச்சயமாக இந்தப் பாகமும் உங்களுக்குப் பிடிக்கும். சிறப்பாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் கப்டன் ஜக் ஸ்பரோவின் விளையாட்டுகளுக்குக் குறைவில்லை என்று கூறிக் கொள்கின்றேன்.

இசை

இந்தத் தொடரில் உள்ள திரைப்படங்களின் மிகப் பெரிய பலம் ஹான் சிம்மர் எனப்படடும் இசையமைப்பாளரின் இசை. கீழே உள்ள பின்ணனி இசையைக் கேட்டுப்பாருங்கள்.. (இசையை முழுதாக இரசிக்க இரண்டு காதிலும் ஒலி வாங்கியை மாட்டிக் கேளுங்கள்)

இளையராஜா, இரகுமான் போல ஹொலிவூட்டில் சிங்கம் தனக்கென்று ஒரு இரசிகப் பட்டாளத்தையே வைத்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் அவர் இல்லாமை படத்தின் மிகப் பெரிய பலவீனம் என்றும் கூறலாம். இல்லை அவர் சிஷ்யன் அசத்தியிருக்கின்றார் என்றும் நீங்கள் கூறிக் கொள்ளலாம்.

முடிவுரை

திரைப்பட முடிவில் வில் டேர்ணர் மற்றும் எலிசபெத் வரும் காட்சியைப் பார்க்கும் போதுதான் அடடா.. இந்தத் திரைப்படத்தில் இவ்வளவு காலமும் இரசித்தது அந்தச் சோடியைத்தான் என்று உறைத்தது. அப்படியே 10 வயது குறைந்து போனது போல ஒர் உணர்வு.

என்னைப் பொறுத்தவரையில் ஜக் ஸ்பரோவின் நகைச்சுவைகள் மற்றும் வீர சாகசங்களை இரசிப்பவர்களுக்கு இந்தத் திரைப்படம் பிடிக்கும் மற்றவர்களுக்கு சுமார் இரகம்தான்.