Tag Archives: Robin of Sherwood

ரொபின் ஓஃப் ஷேர்வூட்


ரொபின் கூட் பார்க்காமல் வளர்ந்த குழந்தைகள் என்றால் இலங்கையில் மிக மிக குறைவாகவே இருக்கும். ஒவ்வோரு காலப்பகுதியிலும் பல விதமான ரொபின் கூட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வந்தன ஆயினும் இன்றும் என் மனதில் பதிந்து இருப்பது Robin of Sherwood எனும் தொடரே.

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு ஞாபகம் வருதா???

லொக்ஸ்லி எனும் கிராமத்தை படைகள் வந்து அழிக்கின்றன இதில் இருந்து ரொபினின் தந்தை தன் மகனைக் காப்பாற்றி விட்டு தன் உயிரை நீக்கின்றார். வளர்ந்து வரும் ரொபின் சில நலன் விரும்பிகளுடன் சேர்ந்து நொட்டிங்கம் செரீப்பை எதிர்ப்பதுதான் கதை. கதையில் இங்கிலாந்து அரசன் சிறு பாகத்திற்கு வந்து சென்றாலும் பெரும்பகுதியும் ரொபின், செரீப் இடையான போராட்டத்தை சித்தரிப்பதாகவே இருக்கின்றது.

ரொபினின் கூட்டத்திலே இருக்கும் அங்கத்தவர்களும் ஒவ்வொரு பண்பு கொண்டவர்கள். லிட்டில் ஜோன் பலசாலியும் எதையும் தூக்கியடிக்க கூடியவருமானவர். மாச் ரொபினின் உடன் பிறவா சகோதரன் கூட்டத்தில் சிறய பையன் ரொபினின் காதலியின் அன்புக்கு உரியவன். டக் என்பவர் ஒரு முந்தைய பாதிரியார் பிந்தைய போராளி அடுத்து வில் இவன் அளவுக்கதிகமாக கோவப்படக் கூடியவன். தற்போது பல ஹொலிவூட் திரைப்படங்களில் நடித்து வருகின்றான். அண்மையில் வெளிவந்த BEOWULF என்ற திரைப்பட நாயகனுக்கு இவர்தான் உருவ அசைவு கொடுத்தார்.

கடைசியாக நசீர். அரபு தேசத்தை சேர்ந்த இஸ்லாமியன். சிலுவை யுத்தம் நடந்த காலத்தில் நடந்த கதையாக சித்தரிப்பதால் பலஸ்தீனத்துக்கு சண்டையிடச் செல்வதைப் பற்றி பல பேச்சுக்கள் கதையிடையிடையே வரும். இரட்டை வாள் கொண்டு அவன் போடும் சண்டையை இரசிப்பதே தனி சுகம். மரியன் எனும் ரொபினில் காதலியை மந்திர வாதி ஒருத்தனில் கோட்டையில் இருந்த காப்பாற்றிக் கூட்டிக் கொண்டு ஓடும் போது இடை மறித்து நசீர் போடும் சண்டை இன்றும் கண் முன்னே. கறுப்பு உடையில் வரும் நசீர் மிடுக்காக வாள்வீசுவதைப் பார்த்து வீட்டில் இருக்கும் பாண் வெட்டும் கத்தியையும், மீன் வெட்டும் கத்தியையும் ஒன்றாக தூக்கிப் பிடித்து சுத்திய காலங்களை நினைத்துப் பார்க்கின்றேன்.

இதைவிட செரீப், இரக்கமில்லாத ஒரு அடக்குமுறை செய்பவன் அவனுக்கு ஒரு தளபதி கிஸ்பன். செரீப்பின் கெட்டித்தனத்திற்கு மறுபக்கமாக இருக்கும் அடி முட்டாள். முட்டாள் வேலை பார்த்து பலதடவை ரொபினிடம் அடி படுவான். எத்தனையோ தடவை ரொபின் கிஸ்பனை உயிருடன் பிடித்தாலும் ஏன் பின்னர் உயிருடன் விட்டுவிடுகின்றானோ தெரியாது.

பாடசாலையில் (இரண்டாம் ஆண்டு ??) படிக்கும் போது தொலைக்காட்சியில் மறக்காமல் பார்ப்போம். வீட்டில் எல்லாரும் இருந்து பார்க்கும் தொலைக்காட்சித் தொடர். என்னதான் தமிழ் மெகா தொடரை வீட்டில் இருந்து குடும்பமாக கும்மியடித்துப் பார்த்தாலும் இப்படியான தொடர்களை குடும்பத்தோடு இருந்து பார்ப்பதே தனி சுகம்தான்.

இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த தொடரின் முதல் இரண்டு பாகங்களிலும் ஒரு ஹீரோவும் அடுத்த பாகங்களில் வேறு ஒரு ஹீரோவும் வருவார். முதல் பாகத்தில் வரும் ஹீரோ இறந்து போய் அடுத்த ஹீரோ வருவார். ஆனால் எங்கள் பள்ளியில் நடந்த பேச்சின் படி முதல் பாகத்தில் நடித்த ஹீரோ நிசத்திலேயே இறந்துவிட்டதால் இந்த இரண்டாம் ஹீரோ வந்துள்ளார். ஆனால் நிசத்தில் அவர் இறக்கவும் இல்லை மரணிக்கவும் இல்லை. என்றாலும் IMDB யில் நடிகரின் இன்றைய தோற்றத்தைப் பார்த்தால் ஏமாற்றமாக இருக்கின்றது. எப்படி இருந்தவர் இப்ப இப்படி ஆகிட்டார்.

அண்மையில் நண்பன் டொரன் மூலம் இந்த தொடரை பதிவிறக்கி தந்தான் 2 பாகங்கள் பார்த்து முடித்தாகிவிட்டது. இனி மூன்றாம் பாகத்தைப் பார்க்கத் தொடங்க வேண்டும். மூன்றாம் பாகத்தில் இருந்து அடுத்த ஹீரோ வருகின்றார். அவர் பெயர் ரொபர்ட். செரீப்பின் தளபதி கிஸ்பனுக்கு ஒரு முறையில் சகோதரன்.

Robert of Huntingdon (Jason Connery) and his

மீண்டும் இந்த தொடர் தொடர வாய்ப்பில்லை. கடைசி அத்தியாயம் வெளியாகி இப்போது 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. என்றாலும் என்றும் இனிமையான நினைவுகளை மீட்டுத்தரக் கூடிய இந்த ரொபின் என்றும் என் மனதில் பசுமரத்தாணியாக இருப்பான்.

“ஹேர்ண் புரட்டக்ட் அஸ்”