Tag Archives: Rise of an Empire விமர்சனம்

300: Rise of an Empire விமர்சனம்

கல்லூரிக் காலத்தில் இரத்தம் தெறிக்கும் திரைப்படம் என்று பேசினால் முதலில் ஞாபகத்திற்கு வருவது 2007இல் வெளி வந்த 300 திரைப்படம். அக்காலத்திலேயே அந்த திரைப்படம் பற்றி விமர்சனம் எழுத அந்த திரைப்படம் தூண்டியது என்றால் பாருங்களேன்.

300 இன் முதலாம் பாகம்

300

அதாவது படையெடுத்து வரும் மாபெரும் பாரசீகப் படையை எதிர்த்துக் களமிறங்கும் கிரேக்கத்து படைவீரர்கள் 300 பேரின் கதை. லியனொய்டஸ் எனும் ஸ்பார்ட்டா நரத்தின் அரசன் (கிரேக்கம் பல நகரங்களின் கூட்டமைப்பு) தனது சிறந்த 300 வீரர்களுடன் இணைந்து ஒரு ஒடுங்கிய கணவாய் வாயிலில் பாரசீகப் படைகளை எதிர்க்கின்றான். பெரும் படை வைத்திருந்தாலும் ஒடுங்கிய கணவாயில் அவர்களை பின் தள்ள முடியாமல் பாரசீகப் படைகள் திணறுகின்றன. வீரம், விவேகம் துரோகம் என கோச்சடையான் ஸ்டைலில் கதை வேகமாக நகரும் (ஆனால் கணனி வரைகலை மோசன் கப்சன் என்ற பெயரில் மோசன் போற மாதிரி இருக்காது). அருமையான திரைப்படம். அதுவும் குறிப்பாக அந்த சண்டைக் காட்சிகள் அக்காலத்தில் ஒரு மாபெரும் புரட்சி. இரத்தம் தெறிக்கும் காட்சிகள் அப்படி அபாரமாக படமாக்கப்பட்டிருக்கும். அக்காலத்தில் அந்த திரைப்படத்திற்கு எதிராக பெரும் காரசாரமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக பாரசீக அரசரையும் அவர் படையையும் ஏதோ காட்டுமிராண்டிகள் கணக்கில் காட்டியதாக.

முதலில் முதல் பாகத்தின் ட்ரெயிலரைக் காணுங்கள்

300 இன் இரண்டாம் பாகம்

300 rise of an empire tamil poaster

இப்போது Rise of an Empire விமர்சனம்.  அனேகம் முதலாம் பாகம் வெற்றியடைந்தால் அந்தப் பெயரை வைத்து இரண்டாம் பாகத்தை எடுத்து (மொக்கையாக இருந்தாலுமே) பணம் பார்ப்பது ஹாலிவூட் காரர்களின் கைவந்த கலை. அதில் விதிவிலக்காக Toy Story, Shrek போன்றவை இருந்தாலும் பெரும்பாலும் முதல் பாகத்தில் பெயரில் பணம் சம்பாதிக்கவே பயன்படுகின்றது.

என்னைப் பொறுத்தவரையில் இந்த திரைப்படமும் அவ்வகையிலேயே அமைகின்றது. பெரும் பணச்செலவில் கணனி வரைகலையைப் பயன்படுத்தி 300 போலவே கடலில் நடக்கும் சண்டைக் காட்சிகளை பிரமாண்டமாகப் படமாக்கியுள்ளார்கள். ஆனால் திரைக்கதை?? திரைக்கதை மரண மொக்கையாக உள்ளது. முதற் பாகத்தில் திரைக்கதையில் இருந்த வேகம், பரபரப்பு, பதைபதைப்பில் அரைவாசி கூட இந்த திரைப்படத்தில் இல்லை. சிலவேளை முதல் பாகத்திற்கு கிடைத்த எதிர்ப்பின் விளைவாக இப்படியாக செய்தார்களோ தெரியாது.

இந்த திரைப்படத்தில் கதைக்களம் கிட்டத்தட்ட லியனொய்டஸ் பாரசீக அரசனை யுத்தத்தில் எதிர்கொள்ளும் அதே காலகட்டத்தில் கடல்வழியாக வந்திறங்கும் கிரேக்கப்படையை கடலில் எதிர்த்துப் போராடும் கிரேக்க படைத்தளபதி தேமிஸ்டொகில்ஸ் என்பவரின் கதை. கிரேக்கம் மீது படையெடுக்கும் டாரியஸ் எனும் மன்னனை கொல்வதன் மூலம் அவர் மகனை பரமவைரியாக மாற்றிவிடுகின்றார் தெமிஸ்டோகில்ஸ். அதனைத் தொடர்ந்து டாரியசின் மகன் தெய்வ அரசன் எனும் நிலையை அடைவது எவ்வாறு பின்னர் அவன் பழிவாங்கும் படலம் எனக் கதை தொடர்கின்றது.

முதல் பாகத்தில் பாத்திர அமைப்பு சிறப்பானது. ஒவ்வொரு சிறிய பாத்திரங்களையும் பார்த்து பார்த்தி செதுக்கியிருப்பார்கள். இந்த திரைப்படத்தில் சில முக்கிய பாத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார்கள். ஏதோ கணனி வரைகலையில் கலக்கிவிட்டால் எல்லாம் சரிஎன்று யோசித்திருப்பார்கள் போல.

ஆயினும் முன்பே கூறியபடி நன்றாக கல்லாகட்டிவிட்டார்கள். குறிப்பாக 100 மில்லியன் டாலர் அளவில் பணம் போட்டு படத்தை எடுத்து சுமார் 200 மில்லியன் அளவில் பணம்பார்த்துவிட்டார்கள். அனேகம் பாகம் 3 ஐ விரைவில் எடுத்தாலும் ஆச்சரியப்படுவிதற்கில்லை.


புள்ளி 60/100