Tag Archives: Google

Google Buzz இல் நண்பர்களை வதைப்பதெப்படி!

1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள்

2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள்

3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!)

4. அப்புறம் என்ன, கலாயுங்க

எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள்.  எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்! 😉

Google Buzz பாவிக்கிறீங்களோ???

Google Buzz பற்றி நேற்று மற்றும் இன்று இணையத்தில் பர பரப்பாகப் பேசப் படுகின்றது. அனைவரும் தமக்கும் Google Buzz உயிர்ப்பூட்டப்பட்டுவிட்டது என்று பிதற்றுவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைய முயலும் போது கூகிள் Buzz ஐ உயிர்ப்பூட்டுமாறு ஒரு செய்தி உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.

கூகிள் வேவ் பற்றி பயங்கரமாக கூகிள் பிரச்சாரம் செய்தது ஆனால் அது அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. இம்முறை சிறிய குறுகிய அறிவித்தலுடன் கூகிள் இந்த Buzz சேவையை ஜிமெயிலினுள் அனுமதித்துள்ளது.

கூகிள் Buzz என்றால் என்ன?

கூகிள் Buzz எனப் படுவது Twitter, FaceBook, Friendfeed போன்றவற்றை பிரதி செய்து (அதாங்க, காப்பி அடிச்சு) ஜிமெயில், கூகிள் ரீடர் போன்ற கூகிளின் சேவைகளுக்குள் உள்ளமைக்கப்பட்ட ஒரு சேவையே ஆகும்.

உங்களுக்கு ட்விட்டர் பரிச்சயம் என்றால் கூகிள் பஸ் பற்றிப் புரிவதற்கு அவ்வளவு நேரம் ஆகாது. நீங்கள் இணையத்தில் பார்க்கும் விடையம் ஒன்றையோ அல்லது உங்கள் மனதில் தோன்றும் ஒரு கருத்தையோ நீங்கள் வெளியிட அதில் மற்றவர்கள் பதில் போட்டு தங்கள் கருத்தையும் தெரிவிக்க கூடிய ஒரு மேடையை அமைத்துத் தரும் தன்மையே இதன் அடிப்படைச் செயற்பாடு.

இதைவிட Flickr, Twitter போன்ற தளங்களில் நீங்கள் செய்யும் மாற்றங்களையும் நிகழ் நேரத்தில் இங்கே காட்டமுடியும்.

மேலதிக தகவலிற்கு இந்த யூடியூப் காணொளியைக் காணுங்கள்

எனக்கு இன்னும் Buzz இல்லையே??

நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் புகுபதிகை செய்யும் போது Google Buzz ஐ உயிர்ப்பிக்குமாறு ஒரு வேண்டுகோள் வரவில்லையாயின் உங்கள் கணக்கிற்கு இன்னமும் கூகிள் பஸ் வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.

வரும் நாட்களில் அனைவருக்கும் இந்த வசதி வழங்கப்படும் என்று எண்ணலாம்.

மயூரேசனை Google Buzz இல் பின் தொடர

கூகிள் – சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா??

இதற்கு முன்னர் கூகிள் மற்றும் சீனா இடையில் ஏற்பட்ட கசப்பு பற்றி இரண்டு பதிவுகள் இட்டேன். இப்போது புதிய தகவல்கள் வந்துள்ளதால் மூன்றாவது பதிவும் தயார். கூகிள் மற்றும் சீன அரசுக்கிடையிலான தகராறு பற்றித் தெரியாதவர்கள் பின்வரும் இரண்டு பதிவுகளையும் வாசித்துவிட்டு இந்தப் பதிவை வாசிக்கவும்.

  1. தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்
  2. கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது

அண்மையில் கூகிளின் மின்னஞ்சல் சேவைக் கணக்கில் கைவைக்க முயன்ற சீன ஹக்கர்சால் பிரச்சனை ஆரம்பமாகியது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கூகிள் கடந்த டிசம்பர் மாதம் சீன மனித உரிமைக்காகப் போராடும் தனி நபர்களின் மின்னஞ்சல் கணக்குகளை சீன Hackers கைப்பற்ற முயன்றதாகத் தெரிவித்துள்ளது. இதன் விழைவாக தமது செயற்பாட்டை சீனாவில் நிறுத்த வேண்டி ஏற்பட்டாலும் அதற்கும் எதிர்பார்ப்பதாக கூகிள் அறிவித்தது.

பின்னர் டிசம்பர் 15ம் திகதி இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் தன் பங்கிற்கு சீனாவைச் சாடினார். இந்திய அரசின் கணனிகளை சீன ஹக்கர்கள் PDF கோப்புகள் மூலம் Trojan முறையில் ஹக் செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார்.

இரண்டு குற்றச்சாட்டுகளையும் சீன அரசு வழமைபோல மறுத்திருந்தது. ஆனாலும் பின்னர் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக அறியக் கிடைக்கின்றது. கூகிள் ஒரு அமெரிக்க கம்பனி என்பதாலும் அமெரிக்க அரசுடன் இணைந்து கூகிள் நடவடிக்கை எடுத்த காரணத்தாலும் அமெரிக்கா இவ் விடையம் சம்பந்தமாக சீனாவுடன் மிக கடுமையான தொனியில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகின்றது.

இது சம்பந்தமாக ஏற்கனவே ஹில்லாரி கிளிண்டன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

“It is also the case that we take this matter very seriously and, as Secretary of State Hillary Clinton said last week

இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்தாலும் இதற்கு சரியான பதிலைத் தரக்கூடிய பொறுப்பு சீனாவிடமே உள்ளது என்று அமெரிக்கா விடாப்பிடியாக உள்ளது. தொடர்ந்து அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்து வருகின்றது. இதன் விபரங்கள் வரும் வாரங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

கூகிளின் Nexus One தொலைபேசி

இதேவேளை தனது புதிய இரண்டு வகை கையடக்க தொலைபேசியை சீனாவில் வெளியிட்டு வைப்பதை கூகிள் தள்ளிவைத்துள்ளது. கூகிளின் எதிர்காலம் சீனாவில் என்ன வென்று தெரியாத இந்த நிலையில் பெரும் செலவில் வெளியிட்டுவைப்பதை கூகிள் விரும்பாமல் போனமை அதிசயம் இல்லை. சீனாவில் 700 மில்லியன் கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்கள் இருப்பதையும், சீனா இந்த துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றது என்பது இங்கே குறிப்பிடப் படவேண்டிய விடையம்.

இந்த பிரைச்சனையில் கூகிளுக்கு யாகூ ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளை மைக்ரோசாப்ட் இவ்வாறு கூகிள் வெளியேறுவதை அவ்வளவு நல்ல விடையமாகப் பார்க்கவில்லை என்றும் தொழில் நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் கம்பனிகளின் உட்கட்டுமானங்களை கைப்பற்ற ஹக்கர்ஸ் முயல்வது வழமைதான் என்று கூறியுள்ளது.

இதே வேளை சீனாவின் பிரபலமான தேடல் இயந்திர சேவை வழங்குனர் Baidu அமெரிக்க டொமைன் பதிவு செய்யும் கம்பனி ( Register.com Inc) மீது வழக்கைத் தொடுத்துள்ளது. சனவரி 12ம் திகதி இராணிய இராணுவம் என்ற பெயரில் இவர்களின் தளத்திற்கு வரும் பயனர்களை சில ஹக்கர்ஸ் திசை திருப்பி வேறு தளத்திற்கு அனுப்பினர். இவ்வாறு அனுப்ப Register.com தளத்தின் கவனையீனமே காரணம் என்று பாய்டு அறிவித்துள்ளது. Baidu விடம் சீனாவின் தேடல் பொறி சந்தையின் 60 வீதம் உள்ளது. சுமார் 30 வீதத்தையே கூகிள் தன் வசம் வைத்துள்ளது. ஆனாலும் கூகிள் வேகமாக ஆண்டுதோறும் வளர்ந்து வந்துள்ளமையையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

எது என்ன ஆனாலும் கூகிளின் பங்குகள் நல்ல நிலையிலேயே பங்குச் சந்தையில் உள்ளனவாம். தொடர்ந்தும் விலை சரியாமல் உள்ளமையுடன் 1.6% பங்கு விலைகள் கூடியுள்ளனவாம்.

உலகுடன் சேர்ந்து ஓட தயங்கும் சீனாவிற்கு எதிர் காலம் அவ்வளவாக சிறப்பாக அமையும் என்று தெரியவில்லை. தகவல்களைப் பெறுவது ஒரு மனிதனில் தனிமனித உரிமை. இதைக்கூட ஏற்க மறுக்கும் சீனாவை என்ன வென்பது?? அவதார் திரைப்படம் மூலம் மக்கள் தூண்டப்படலாம் என்று அந்த திரைப்படங்களையே தூக்கிய மகா மக்களாட்சி நடக்கிறது சீனாவில்.

மக்களை ஏமாற்றி மக்களாட்சி நடத்துவதாக பீற்றும் எந்த அரசும் நிலைத்து நீடித்ததாக சரித்திரம் இல்லை. சீனப் பேரரசு இதை உணரப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது

தனது ஜிமெயில் வழங்கிகளை சீனாவில் இருந்து கொந்தளர்கள் (Hackers) கைப்பற்ற முயன்றதாகவும் அதன் மூலம் இனி தங்கள் அலுவலகம் சீனாவில் மூடபட்டாலும் மூடப்படாலாம் என்றெல்லாம் கூகிள் பேசியதைப் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தேன். இப்போது கூகுளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. டிசம்பர் 15ம் திகதி இந்திய அரசின் வழங்கிகளையும் கைப்பற்ற சீனாவில் இருந்து ஹக்கர்ஸ் முயன்றதான நாராயணன் தெரிவித்துள்ளார்.

இது போல பலதடவை இந்தியாவின் மீது சைபர் யுத்தம் நடத்தப்பட்டுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார். இதைவிட தற்போது பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இணைந்து இப்படியான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எதிர்க்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஒரு மின்னஞ்சலில் PDF கோப்பாக இணைக்கப்பட்டிருந்த ட்ரோஜன் வகை வைரசு ஒன்றைக் கண்டுபிடித்ததாகவும் அந்த PDF கோப்பு மூலம் தமது கணனிகளைக் கைப்பற்று முயன்றதாகவும் நாராயணன் தெரிவித்தார்.

இப்படியாக இந்திய கணனிகளைக் கைப்பற்ற வேண்டிய தேவை தமக்கு இல்லை என்றும், சீனாவில் ஹக் செய்வது சட்டப்படி குற்றம் என்றும் சீனா பதிலுக்கு அறிவித்துள்ளது. சீனாவே ஹக்கிக்கிற்கு அடிக்கடி இலக்காகுவதாகவும் சீனா தெரிவுத்துள்ளது.

1962ல் நடந்த இந்தோ சீனா யுத்தத்தில் இந்திய மொக்கையடி வாங்கியபின்னர் அண்மைய காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பகை மெல்ல மெல்ல மூண்டுவருகின்றது. அண்மையில் தனது இரண்டு இராணுவ டிவிசன்களை இந்தியா நிறுத்தியுள்ளதுடன் ஜெட்விமானங்களையும் கிழக்கு எல்லைக்கு இந்தியா நகர்த்தியுள்ளது.

ஒரு யுத்தம் மூண்டால் இந்தியாவிற்கு உதவி செய்யக்கூடிய அமெரிக்க தலமையிலான மேற்குலகமும் பொருளாதார நெருக்கடியில் உழல்கின்றவேளையில் இந்தியாவை வாட்ட சீனாவிற்கு இது மிகப்பெரிய பொருத்தமான தருணம் என்பதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பதிவு எழுதிய பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து அடுத்த பதிவும் எழுதியாகிவிட்டது. கூகிள் – சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா?? என்ற பதிவையும் வாசித்துப் பயன்பெறுங்கள்.

Google Wave ஒரு அறிமுகம்

இன்று அனைவரும் Google Wave பற்றிப் பேசி கொண்டு இருக்கின்றார்கள். 2009 இல் நடந்த கூகிள் ஐ/ஓ வில் இந்த தொடர்பாடல் கருவி அறிமுகப் படுத்தப்பட்டது. பொதுப்படையாகச் சொல்வதானால் கூகிள் வேவ் இணையத்தில் தொடர்பாடல் நடக்கும் விதத்தை மாற்றி அமைக்க போவதாகச் சொல்கின்றார்கள்.

அப்படி என்னதான் இந்த கூகிள் வேவில் இருக்கின்றது என்று நீங்கள் கேட்பது நியாயமானது. பொதுவாக நாங்கள் மின்னஞ்சல் அரட்டை போன்ற தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்தும் போது அவை இரண்டு பக்க வழங்கிகளிலும் சேமிக்கப்படும். இப்போது ஒரு மின்னஞ்சலை நான் உங்களுக்கு அனுப்புகின்றேன். நான் அனுப்பியதன் ஒரு பிரதி எனது அஞ்சல் பெட்டியில் தங்கி விடுபதுடன் உங்கள் அஞ்சல் பெட்டிக்கு ஒரு பிரதி வந்து சேர்ந்து விடுகின்றது. நீங்கள் எனக்கு ஒரு பதில் போட்டால் மீள அதில் ஒரு பிரதி எனக்கு வந்துவிடுபதுடன் உங்கள் வழங்கியிலும் ஒரு பிரதி சேமிப்பாகிவிடும்.

கூகிள் வேவில் இப்படியாக இரண்டு பிரதிகள் இருக்காது. ஒரு மைய வழங்கியில் இருவரது மின்னஞ்சல் விபரங்களும் சேமிக்கப்படும். இருவரும் ஒன்லைனில் இருந்தால் மின்னஞ்சல் அரட்டை போல Real Time இல் நடைபெறும். உதாரணமாக நீங்கள் “அடே நண்பா” என்று தட்டச்சு செய்யும் போது அது எழுத்துக்கு எழுத்து அப்படியே உங்கள் நண்பணின் திரையிலும் தெரியும். சாதாரணமான அரட்டையில் நீங்கள் தட்டச்சிட்டு அனுப்பு எனும் பட்டனை அமுக்கும் வரை அரட்டையில் நீங்கள் என்ன தட்டச்சிட்டீர்கள் என்பதை பார்க்க முடியாது என்பதையும் இங்கு ஞாபகப் படுத்துகின்றேன்.

அட இம்புட்டுதானா? இதைத்தான் பெரிய பீலாவிட்டு பெரிய பில்ட்டப்பு கொடுத்து பெரிய சத்தம் போட்டார்கள் என்று நீங்கள் கேட்கின்றீர்களா? கொஞ்சம் பொறுங்க சேர்!

Robots, Gadgets என இரண்டு விடயங்களை கூகிள் வேவில் சேர்த்திருக்கின்றார்கள். அதன் படி றோபாட்டுக்கள் எனப்படுபவை நீங்களும் உங்கள் நண்பனும் உரையாடும் போது இடையில் வந்து உதவும் ஒரு தானியக்க தொடர்பு. உதாரணத்திற்கு உங்கள் நண்பனுக்கு ஹிந்தி மட்டுமே தெரியும். உங்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். இந்த நேரத்தில் றோசி எனும் தானியக்க தொடர்பை உங்கள் உரையாடலில் சேர்த்து மொழிமாற்ற தெரிவுகளை உங்கள் தானியக்க தொடர்பிற்கு சொல்ல வெண்டும். அவ்வளவுதான் உங்கள் நண்பன் ஹிந்தியில் தட்டச்சிட தட்டச்சிட றோசி உங்களுக்கு ஆங்கிலத்தில் மொழி மாற்றிக் காட்டுவா. அப்படியே றோசிக்கு நீங்கள் ஒரு முத்தம் வைக்கலாம். 😉

கூகிள் வேவ் இடைமுகம்
கூகிள் வேவ் இடைமுகம்

இதை விட பலர் ஒன்று சேர்ந்து ஒரு ஆவணத்தை தொகுப்பது எவ்வளவு கடினமான காரணம் என்று சொல்லத்தெரிய வேண்டியதில்லை. இங்கே கூகிள் வேவ் மூலம் பலரும் ஒரே நேரத்தில் ஆவணங்களை தொகுக்கலாம். ஒருத்தர் ஆவணத்தை தொகுத்துக் கொண்டு இருக்கும் போதே மற்ற பயனரும் இவர் என்னதை தொகுக்கின்றார் என்பதை தனது திரையில் பார்க்கலாம். எல்லாம் ஒரு வீடியோ போல ஓடிக்கொண்டிருக்கும்.

இவ்வாறான பல வசதிகள் கூகிள் வேவில் உள்ளமைந்துள்ளது. எடுத்துக் காட்டிற்கு சில உதாரணங்களை உங்களுக்கு நான் எடுத்து வீசினேன்.

சில Gadgetகள்
சில Gadgetகள்

கூகிள் மப்ஸ் செய்த சகோதரர்களே கூகிள் வேவையும் அறிமுகம் செய்துள்ளனர். கூகிள் மப்சின் வெற்றிக்க்கு காரணம் அதன் Extendability, அதாவது நீட்சிகளை அமைக்க கூடிய தன்மை. அதே மாதிரி இங்கும் API க்களை வழங்கியுள்ளனர். இதனால் நீங்களும் Robots, Gadgets போன்றவற்றை அமைத்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து நீங்கள் அவர்களுடன் அரட்டை அடிக்கும் விதங்களை மாற்றிவிடலாம்.

உதாரணத்திற்கு இன்று வெள்ளவத்தை லிட்டில் ஏசியா ஹோல்ட்டுக்கு வாடா மச்சான் என்று சொன்னால் என்னைப் போல கொட்டாஞ்சேனையில் இருக்கும் நண்பர்களுக்கு அது என்னவென்று புரியாது. இந் நேரத்தில் ஒரு Google Maps Gadget ஐ எங்கள் அரட்டைக்குள் இழுத்து அந்த வரைபடத்தில் எங்கே லிட்டில் ஏசியா ஹோல்ட் இருக்கு என்று காட்டிவிடலாம். அதாவது நீங்கள் கூகிள் வரைபடத்தை அசைக்கும் போது நண்பனின் கணனியிலும் அது அசைந்தாடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அடேங்கப்பா… நான் இப்பவே போயி கூகிள் வேவ் என்ன என்று பார்த்துவிட்டு வருகின்றேன் என்று நீங்கள் புறப்படுவது எனக்கு தெரிகின்றது. பொறுமை கண்ணா.. பொறுமை….! கூகிள் இப்போது குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 30ம் திகதி சுமார் 100,000 பேரை மட்டும் கூகிள் வேவினுள் கூகிள் அனுமதித்துள்ளது. இதில் அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 8 பேரை அழைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 100,000 பேர் 8 பேர் வீதம் 800,000 பேரை கூகிள் வேவிற்கு அழைக்க முடியும். மற்றவர்கள் எல்லாரும் கூகிளிடம் ஒரு வேண்டுகோளை வைத்துவிட்டு காத்திருக்க வேண்டியதுதான்.

புளோரிடாவில் இருக்கும் எனது நண்பன் ஒருவனும் அதிஷ்ட வசமாக கூகிள் அழைத்த 100,000 பேரினுள் ஒருவனாக நுழைந்துவிட்டான். அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி அழுது இரந்து ஒரு அழைப்பிதழை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப செய்துவிட்டேன் ஆனாலும் பாருங்க கூகிள் காரணுக்கு ரொம்பவுமே குசும்பு. அழைப்பு அனுப்பினாலும் அதை உடனே எங்களுக்கு கூகிள் தருவதில்லை. தனது வழங்கிகளின் நிலைமை போன்றவற்றைப் பார்த்து கைமுறையாக ஒன்றோண்றாக அனுப்புகின்றார்களாம். நண்பன் அழைப்பை அனுப்பி இன்றுடன் 3 நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் அழைப்பு வந்து சேரவில்லை. கூகிளில் தேடிப் பார்த்தில் சிலருக்கு அழைப்புகள் 7 நாட்களின் பின்னரும் வந்து கிடைத்திருக்கின்றது.

அடே மயூரேசா..! எனக்கு புளோரிடாவில் நண்பன் இல்லையடா…! நான் என்ன செய்யவேணும்?? அப்படி கேட்கின்றீர்களா?? அப்படியானால் கூகிள் வேவைப் பயன்படுத்த விரும்பினால் கூகிளிடம் வேண்டுகோள் வைக்கலாம். மற்றய பயனர்களுக்க திறக்க முதல் உங்களை அழைப்பார்கள் என்று நம்பலாம். அல்லது உங்களிடம் நிறைய பணம் இருந்தால் EBay இல் விற்கும் அழைப்புகளை வாங்கலாம். ஆனால் இவ்வாறு அழைப்புகளை ஈபேயில் விற்பது கூகிள் கொள்கைகளுக்கு எதிரானது.

சரி நீங்கள் கூகிளிடம் வேண்டுகோளை வைத்துவிட்டீர்கள். கூகிள் உங்களை அழைக்கும் வரை கூகிள் வேவ் மாதிரி எதையும் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று நினைக்கின்றீர்களா?? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய தளம் http://pygowave.net. கூகிள் வேவ் அடிப்படை திறந்த மூலமாக கிடைப்பதனால் யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்து உங்கள் விருப்பத்திற்கேற்ற இடைமுகம் தயாரித்து உங்கள் வேலைத்தளத்திலோ நண்பர்களுடனேயோ பயன்படுத்தலாம். இந்த பைகோவேவ் காரங்களும் அதையேதான் செய்துள்ளார்கள். பைகோவேவ் இன்னமும் அல்பா பதிப்பில் உள்ளதால் பல பிழைகள் உள்ளன அத்துடன் கூகிள் வேவ் போன்று பல வசதிகளும் இங்கு இல்லை. பைகோவேவில் நீங்கள் இணைந்தால் ஒரு புதிய வேவை உருவாக்கி அதில் “mayooresan” எனும் பயனரையும் இணைத்தால் நான் வந்து டான் என்று நிற்பேன் 😉

சந்தேகம் இருந்தால் மறுமொழி பகுதியில் கேளுங்கள்.

  1. கூகிள் வேவ் பற்றிய என் ஆங்கிலப் பதிவுகள்.
  2. கூகிள் வேவில் அலையடித்த அனுபவம் – உதய தாரகை
  3. கூகிள் வேவ் அறிமுகம் – காணோளி (ஆங்கிலம்)
  4. கூகிள் வேவ் API

பாகம் 1: வலைப்பதிவில் பணம் செய்தல்

பணம் தரும் வலைப்பதிவு
பணம் தரும் வலைப்பதிவு

பலரும் பல பதிவுகளில் பிரித்து மேய்ந்த தகவல் என்றாலும் நானும் என்பாட்டிற்கு இணையத்தில் பணம் செய்தல் பற்றிய ஒரு தொடரை எழுத இருக்கின்றேன். முதலாவது பாகம் வலைப்பதிவருக்கானது. வலைப்பதிவில் விளம்பரம் காட்டல் சம்பந்தமானது.

பலரும் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி, வலைப்பதிவில் பணம் செய்ய முடியுமா? ஆம் நிச்சயமாக முடியும். இதை இலகுவில் யாரும் நம்பத் தயார் இல்லை. டேய்.. அவனுகள் ஏமாத்திப் போடுவாங்களடா. உன்னட்டை ஆதாரம் இருக்கா? இப்படிப் பல கேள்விகளால் கணை தொடுப்பர். அவ்வாறு செய்பவர்களுக்கு நான் கடைசியாக கூகிளிடம் இருந்து பெற்ற $100 வரையிலான காசோலையைக் காட்டுவேன்.

சுடுதண்ணி ஊத்துப்பட்ட பூனைபோல ஓடிச்சென்று ப்ளாக்கரில் கணக்கு ஆரம்பித்து கட கட என்று பதிவிடுவார்கள். தமிழ் பதிவென்றால் தமிழ்மணம் போன்ற திரட்டிகளிலும் சேர்த்துவிடுவர். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக சில மாதங்களில் வலைப்பதிவு பதிவுகள் இல்லாமல் காய்ந்து கறுத்துப்போய்விடும்.

நீங்கள் தொடர்ந்து பதிவிடும் ஒரு நேயராக இருந்தால் நீங்கள் நிச்சயமாக உங்கள் வலைப்பதிவில் பணம் ஈட்டலாம்.

அட்சென்ஸ் (Google AdSense)

உங்கள் தளத்தில் விளம்பரம் இட்டு சம்பாதிக்க விரும்பினால் நீங்கள் நாட வேண்டிய முதலாவது இடம், எங்கள் கூகிளாண்டவரின் அட்சென்ஸ் எனும் நிகழ்ச்சிக்கு.

கூகிள் அட்சென்ஸ் இப்போதைக்கு தமிழ் தளங்களையோ வலைப்பதிவுகளையோ அனுமதிப்பதாக உத்தேசம் இல்லை. அதனால் உங்கள் தளங்களை மதிப்பீட்டுக்கு அனுப்பினால் அவர்கள் அதை நிச்சயமாக நிராகரிப்பார்கள்.

அப்படியானால் எப்படி தமிழிஷ் போன்ற தமிழ் தளங்களில் கூகிள் அட்சென்ஸ் காட்டுகின்றார்கள் என்று நீங்கள் கேட்க முடியும்.

கூகிளைப் பேக்காட்ட இலகுவான முறையை உங்களுக்கு சொல்லுகின்றேன். ;).

முதிலில் ஒரு ஆங்கிலப் பதிவினை ஆரம்பித்து ஒரு மாதமளவிற்கு அதில் எழுதுங்கள். பின்னர் அந்த தளத்தை கூகிளிடம் அனுப்புங்கள். அதைப் பார்த்து கூகிள் ஓகே சொன்னதும் அங்கே நீங்கள் தளத்திற்கு நீங்கள் விளம்பரம் போட சிறிய JavaScript கோடுகளைத் தருவார்கள். அவற்றை உங்கள் ஆங்கிலப் பதிவில் இடுங்கள்.

அப்படியே அந்த JavaScript கோடுகளை தமிழ் வலைப்பதிவுகளிலும் இட்டுவிடுங்கள். அப்புறம் என்ன உங்கள் தமிழ் பதிவுகளிலும் அட்சென்ஸ் காட்டலாம்.

கூகிள் அடசென்சை தமிழ் தளங்களில் பயன்படுத்துவதை விட ஆங்கிலத் தளங்களில் பயன்படுத்தினால் அதிகமாக சம்மாதிக்க முடியும். இது பற்றிய என் இடுகை “அட்சென்ஸ் & தமிழ் மொழி” காண்க.

அட்சென்ஸ் மட்டும்தான் இருக்கின்றதா?

கீரைக் கடைக்கும் போட்டிக் கடை இருந்தால் தானே வியாபாரம் சூடுபிடிக்கும். அட்சென்சைப் போலவே பல்வேறு விளம்பர சேவைகள் இருக்கின்றன. இவை தமிழ் தளங்களையும் இரு கரம் நீட்டி அழைக்கின்றன. உதாரணமாக அட்பிரைட், பிட்வடைசர் போன்ற சேவைகள் இருக்கின்றன. என்னதான் சொன்னாலும் கூகிள் அட்சென்சில் உழைக்கும் அளவிற்கு இந்த தளங்கள் மூலம் பணம் பெற முடியாது உள்ளது.

நேரடி விளம்பரம்

அட்சென்ஸ் போன்ற நிறுவனங்கள் விளம்பரம் செய்ய விரும்புகின்றவரிடம் பணத்தை வாங்கி உங்கள் தளத்தில் அவர் விளம்பரத்தை காட்டிவிட்டு உங்களுக்கு தான் வாங்கிய பணத்தில் ஒரு பகுதியைத் தருவார். மிகுதியை தன்னுடைய தரகுப் பணமாக எடுத்துக் கொள்ளுவார்.

உங்கள் தளத்தில் நேரடி விளம்பரங்களை இடுவதன் மூலம் இந்த தரகுப் பணங்களை நீங்கள் தேவையில்லாமல் தரகுவேலை செய்யும் கம்பனிகளுக்காக அழத்தேவையில்லை. ஆனால் உங்கள் தளத்தில் நேரடியாக விளம்பரம் செய்ய விரும்புபவர்களை தேடிக் கண்டுபிடிப்பது சிறிது கடினமான வேலையே.

இத்துடன் முதலாம் பாகம் முற்றியது. பாகம் இரண்டில் விரைவில் சந்திப்போம்.