Tag Archives: 2011

Mission: Impossible – Ghost Protocol

மிசன் இம்பொசிபிள் திரைப்படங்கள் உலகப் புகழ் பெற்றவை. ஈதன் ஹன்ட் எனும் துப்பறிவாளனையும் அவனைச் சுற்றி இருப்போரையும் சுற்றிக் கதைகள் நகரும். உலகின் பெரும் நகரங்களில் கதைகளின் களம் அமையும். முதல் மூன்று பாகங்களும் உலக ரீதியில் வர்த்தக ரீதியில் வெற்றியடையவே இப்போது நான்காம் பாகத்தையும் வெளியிட்டுள்ளனர். வழமை போல டொம் குரூஸ் திரைப்படத்தின் நாயகன்.

அமெரிக்க ருசியா உறவு முறை இப்போது ஒரளவு நன்றாக இருந்தாலும் பனிப் போர் காலத்தில் மிக மோசமாக இருந்த்து. குறிப்பாக ருசியா கியூபாவில் ஏவுகணைத் தளங்களை அமைத்த போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக மிக மோசமான நிலையை அடைந்தது. ருசிய கப்பல்கள் பசிபிக் கடலைத் தாண்டி வரும் போது தாக்குதல் நடத்துமாறு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக உத்தரவிடுமளவிற்கு நிலமை தலைகீழாய் இருந்தது.

தற்போது MI4 திரைப்படத்தில் மீண்டும் அமெரிக்க உருசிய உறவுகள் மோசமடைகின்றது. இதற்கு முக்கியகாரணமாக கிரெம்பிளின் மாளிகையில் நடக்கும் குண்டுவெடிப்பும் அதற்கு பொறுப்பாக்கப்பட்ட டொம்குரூஸ் மற்றும் அவர் குழுவினருமாகும் (IMF).

துபாய்

அமெரிக்க அரசு IMF ஐ இடை நிறுத்துகின்றது. தற்போது டொம் குரூசும் அவர் குழுவினரும் கிரம்ளின் மாளிகையில் தொலைந்த ஆவணங்களை மீளக் கைப்பற்றி நடக்க இருக்கும் அணுகுண்டு ஏவுகணைத் தாக்குதலைத் தவிர்க்க முயல்கின்றனர்.

சாதாரணமான கதை ஆனால் சிறப்பான நடிப்பு அருமையான சண்டைக் காட்சிகள் படத்தை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. குறிப்பாக டுபாயின் உயர்ந்த கட்டிடத்தில் நடக்கும் காட்சிகள், மண் புயலினூடு நடக்கும் கார் துரத்தல் காட்சிகள் எல்லாம் அபாரம். டிவிடியில் இந்த திரைப்படம் பார்ப்பதெல்லாம் வேஸ்ட்டு, கட்டாயம் திரையரங்கில் பார்த்துவிடுங்கள்.

மண் புயலினூடு வில்லனைத் தேடும் ஈதன் ஹன்ட்

கதை என்னவோ அமெரிக்காவில் ஆரம்பித்தாலும் இறுதியில் முடிவடைவது இந்தியாவின் ஒரு தானியங்கி கார் தரிப்பிடத்தில். மும்பாய் என்று அவர்கள் சொன்னாலும் கட்டடங்கள் எங்கும் சண் டீவி இலச்சினையும் தெலுங்கு எழுத்துக்களுமே தெரிகின்றன. ஹைதராபாத்தில் காட்சிகளைச் சுட்டிருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

ஜெரமி ரைன்னர் காட்சிகள் எங்கும் நடிப்பில் கலக்குகின்றார். வழமையாக ஹீரோ மட்டும் செய்யும் சாகச காரியங்களை அவரும் செய்கின்றார். அதே வேளை சிமொன் பெக் கல கல திணைக்களத்தை குத்தகைக்கு எடுத்து சிரிக்க வைக்கின்றார். மொக்கை காமடிகள் இல்லாமல் போனமை மனதிற்கு ஆறுதல். போலா பட்டன் அழகுப் பதுமையாக வருகின்றார். சண்டைக் காட்சிகளில் சீற்றம் கொண்ட வேங்கையாக மோதுகின்றார். பிறகு அணில் கபூரை பேச்சில் மயக்கி படுக்கை வரை அழைத்து அங்கே வைத்து மொத்துகின்றார். பாவம் அணில் கபூர் ஒரு மொக்கை இந்தியப் பணக்காரன் வேடத்தில் வந்து சில நிமிடங்கள் சிரிக்கவைத்து விட்டுப் போகின்றார்.

டொம் குரூசின் முகம் எங்கும் வயதான ரேகைகள் வெளிப்படையாவே தெரிகின்றது. எமது அபிமான நடிகர்கள் பலரும் வயதாகிப் போனது என்னவோ கவலைதான் தருகின்றது. ஆனால் அவர்களுக்கு வயதாகி விட்டது என்று கவலை பட உலகமே இருக்கின்றது, அவர்களுடன் சேர்ந்து எங்களுக்கும் வயதாகிக் கொண்டே போகின்றது என்று நினைக்கும் போது பக் என்கிறது இதயம் 😉

புள்ளி 70/100

மயூரேசன்


.

3.5

The Walking Dead

அண்மையில் AMC தொலைக்காட்சியில் த வோல்க்கிங் டெட் என்கிற தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியது. ஏற்கனவே பாகம் ஒன்று முடிவடைந்து பாகம் இரண்டு ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்தது. நண்பன் தயவில் பாகம் ஒன்று டிவிடி கையில கிடைக்கவே ஆறு எபிசொட்டுகளையும் ஒரே நாளில் பார்த்து முடித்தேன்.

Walking Dead Poster

சாதாரண சொம்பி (Zombie) கதைகளில் இருந்து வித்தியாசமாகவும் கொஞ்சம் கிலி ஊட்டுவதாகவும் இருந்தது. அதன் பின்னர் கட்டாயம் இரண்டாம் பாகத்தையும் பார்க்கவேண்டும் என்று எண்ணி அமெரிக்காவில் ஒலிபரப்பாகி சில மணி நேரத்தில் இலங்கையில் இருந்து பதிவிறக்கிப் பார்க்கத் தொடங்கினேன்.

த வோக்கிங் டெட் கதை ஒரு பொலீஸ் காரனைச் சுற்றி நடக்கின்றது. ஒரு சிறய நகரத்தில் பொலீஸ் செரீப்பாக வேலை செய்கின்றார் ரிக். ஒரு நாள் சட்டத்தை மீறும் நபர்களை மடக்கும் நிகழ்வில் காயப்பட்டு உயிர் நண்பன் சோன் இனால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகின்றார். சில நாள் கழித்து விழித்துப் பார்க்கும் ரிக்கிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது. அவர் காயப்படும் போது இருந்த உலகமும் இப்போது இருக்கும் உலகமும் இரண்டு துருவங்களாக இருந்தன. வைத்திய சாலை எல்லாம் அடித்து நொருக்கப்பட்டு சொம்பிகள் அலைந்து திரிகின்றன. அவற்றில் இருந்து தப்பி தனது குடும்பத்தைத் தேடி தனது பயனத்தை ஆரம்பிக்கின்றார். இதற்கு மேல் கதையை சொல்ல விருப்பமில்லை. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம். 😉

வோல்க்கிங் டெட் அரிப்பு அதிகரிக்கத் தொடங்கவே அது பற்றி ஆராயத் தொடங்கியதில் இன்னுமொரு இனிப்பான செய்தி கிடைத்தது. அதாவது வோக்கிங் டெட் என்பது ஒரு கிராபிக் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆக்கியிருக்கின்றார்கள். இதற்கும் மேலும் தாங்குமா இந்த உயிர். உடனே இணைய வழி காமிக்சுகளை இறக்கியாச்சு. பாகம் பாகமாக வாசிக்கத் தொடங்கினால் அடேங்கப்பா, தொலைக்காட்சித் தொடரை விட மிகவும் அருமை. புத்தகத்திற்கு புத்தகம் அலுப்பத் தட்டாமல் வாசிக்க வேண்டும் என்று வெறி அதிகமாகி எனது அன்ரொயிட் தொலைபேசி, டாப்லெட் என்று அனைத்திலும் நிரப்பி பயன நேரங்களில் கூட வாசித்துக் கொண்டு இருக்கின்றேன்.

தொலைக்காட்சிக் கதைக்கும், காமிக்ஸ் புத்தகத்தின் கதைக்கும் ஒற்றுமை இருந்தாலும் பல இடங்களில் புத்தகம் நிமிர்ந்து நிற்கின்றது. காமிக்சையும் தொலைக்காட்சித் தொடரையும் ஒப்பிடுவது தப்புத்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் காமிக்ஸ் உயர்ந்து நிற்கின்றது. தொலைக்காட்சியில் காட்ட முடியாத பல கோணங்களில் அபூர்வமாகச் சித்திரம் தீட்டியுள்ளார்கள். தொலைக்காட்சித் தொடரில் வரும் பொலீஸ் அதிகாரியை விட காமிக்சில் வரும் ரிக்கை மிகவும் பிடித்து விட்டது. 🙂

தொலைக்காட்சி Vs காமிக்ஸ்

நீங்கள் காமிக்ஸ் பிரியரானால் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகத் தொடர். உங்களுக்காக புத்தக அட்டைகள் சில இங்கே.

தொலைக்காட்சித் தொடர் 85/100
காமிக்ஸ் புத்தகம் 90/100

பி.கு: இவற்றை எல்லாம் 7ம் அறிவு எடுத்து எங்கள் 6ம் அறிவையும் கேள்விக்குறியாக்குபவர்கட்கு போட்டுக் காட்டவேண்டும். 😉
 

Kung Fu Panda 2: விமர்சனம்

2008 வெளி வந்த குங்பு பண்டா திரைப்படத்தை வெறுத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. திரையரங்குகளில் சக்கை போடு போட்ட திரைப்படம் அது. எந்த திரைப்படம் வெற்றி பெற்றாலும் அதைத் தொடர்ந்து இன்னுமொரு திரைப்படம் எடுப்பது ஹாலிவூட் வழமை. அவ்வகையில் இந்த குங்பு பண்டா 2 வெளிவந்திருக்கின்றது. குங்கு பண்டா கதை என்னவெனில் ஒரு நூடில் கடையில் பிறந்து (அப்படித்தான் முதல் நினைத்தோம் ஆனால் தத்தெடுக்கப்பட்டது) வளர்ந்த ஒரு பண்டா பெரிய குங்பு சண்டைக்காரனாக வர விரும்புகின்றது.  அதன் ஆசையும் முதலாம் பாகம் நிறைவில் முற்றும் பெறுகின்றது. அதாவது சீரோ டு ஹூரோ கதை 😉

இரண்டாம் பாகத்தில் புதியதாக ஒரு கதை முளைத்து விடுகின்றது. பண்டாவின் குடும்பம் ஒன்று இருப்பதாகவும் அதற்கு ஏதோ நடந்ததாகவும் அதற்கு ஒரு வெள்ளை மயிலே காரணம் என்றும் மெல்ல மெல்ல தெரியவருகின்றது. பண்டா தன் பூர்வீகத்தை அறிந்து கொண்டதா மயிலிற்கு என்ன ஆனது போன்ற விடையங்களுடன் திரைப்படம் நிறைவு பெறுகின்றது.

எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் அனிமேசன் திரைப்படங்களின் கதையமைப்பும் காட்சியமைப்புகளும் நாளுக்கு நாள் சிறப்பாகிக்கொண்டே வருகின்றது. நிறம் மொழி மதம் அவை எல்லாவற்றையும் விட வயது போன்றவற்றைக் கடந்து எங்களை இரசிக்க வைக்கின்றது.

Jennifer Yuh நிச்சயமாக கடும் முயற்சியையும் உழைப்பையும் இந்த திரைப்படத்தில் சிந்தி இருக்கின்றார். காட்சிக்கு காட்சி வரும் பண்டாவின் சேஷ்டைகளும், வார்த்தைக்கு வார்த்தை வரும் பகிடிகளும் படத்தை தூக்கி நிறுத்துகின்றது.

திரைப்படத்தின் முடிவு ஒரே கூத்தாக இருக்கும். பூவின் (அதான் பண்டாவின் பெயர் பூ) உள்மன அமைதியும் அதைத்தொடர்ந்த விளைவுகளும் துறைமுகத்தில் எதிரி யுத்தக்கப்பல்கள் முன்னாடி.. அட்ரா சக்கை அட்ரா சக்கை.. அதை நீங்களே பார்த்துக் கொள்ளவும்.

குடும்பத்துடன் சென்று இரசிக்க நிச்சயமாகத் தரமான ஒரு திரைப்படம். கட்டாயமாகத் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மூன்றாம் பாகத்தின் தொடக்கப் புள்ளியை இரண்டாம் பாகத்தின் முடிவில் காட்டிவிட்டார்கள்.