Tag Archives: 2010

A Cat in Paris (2010)

கார்டூன் திரைப்படங்களை நாம் பொதுவாக இரசித்துப் பார்ப்பதுண்டு. இன்று வெளியாகும் பல ஹாலிவூட் திரைப்படங்கள் கார்ட்டூன் திரைப்படங்களாக இருப்பதை நாம் காணலாம். குங்பு பண்டா, டின் டின், டோய் ஸ்டோரி, ஷ்ரெக் என்று பட்டியல் நீளம்.

ஆனால் இந்த அ கட் இன் பரிஸ் எனும் கார்ட்டூன் திரைப்படம் வித்தியாசமானது. சிறுவயதில் இரசிய மொழிபெயர்ப்பு சிறுவர் புத்தகங்கள் படித்திருகின்றீர்களா? உ+ம் நெருப்புப் பறவை போன்றவை?? இந்த பிரஞ்சுக் கார்ட்டூனில் வரும் சித்திர அமைப்பு ஏனோ அதையே எனக்கு ஞாபகப் படுத்தியது.

ஒரு தொழில்முறை திருடன் அவனுடன் ஒரு பூனை அவன் செல்லும் இடம் எல்லாம் செல்கின்றது. நகரின் மறுபக்கம் ஒரு பொலீஸ் அதிகாரியும் அவளின் மகளும். இந்தப் பெண் பொலீஸ் காரியையும் சிறுமியையும் வில்லனையும் திருடனையும் ஒரு கோட்டில் இணைப்தற்கு இந்தப் பூனை பயன்படுகின்றது.

வித்தியாசமான சித்திரங்களையும் அதனோடு ஒட்டிச் செல்லும் கதையும் மனதை வருடிச் செல்கின்றது.

இந்த கிருஸ்மஸ் விடுமுறைக்கு குடும்பமாக இருந்த டிவிடியில் போட்டுப் பார்க்க ஒரு நல்ல திரைப்படம். கட்டாயம் பார்க்க வேண்டிய கார்ட்டூன் திரைப்படம்.

புள்ளி 80/100

ஹரி போட்டர் அன் த டெத்லி ஹலோவ்ஸ் – பாகம் 1

ஹரி போட்டர் என்றாலே நான் கொஞ்சம் உசாரடைந்து விடுவது வழமை. புத்தகங்களை தலைகீழாக நின்று வாசித்த காலங்களை நினைத்துப் பார்க்கின்றேன். ஏழாம் புத்தகம் வெளியானபோது புத்தகம் வாங்க கையில் பணமில்லாமல் ஈபுக்கில் படித்து அப்புறம் விலை குறைந்த பின்னர் அதை வாங்கி என்னுடைய புத்தக கிடங்கில் சேமித்துக் கொண்டதை நினைத்துப் பார்க்கின்றேன்.

ஹரி போட்டர் திரைப்படங்களை எடுத்து நோக்கினால் முதலாம் பாகம் சூப்பர், இரண்டாம் பாகம் சூப்பர், மூன்றாம் பாகம் சூப்பர், நான்காம் பாகம் பரவாயில்லை, ஐந்தாப் பாகம் மொக்கை, ஆறாம் பாகம் செம மொக்கை இப்போது ஏழாம் பாகத்தின் முதல் பாதி செம மொக்கை மற்றும் அறுவை.

ஏழாம் பாகத்தை இரண்டு பாகமாக உடைத்து திரைப்படம் ஆக்குகின்றார்கள் என்று கேள்விப்பட்ட போது மிகவும் சந்தோஷமடைந்தேன். காரணம் புத்தகத்தில் வருவதை அப்படியே திரைப்படத்தில் காட்ட முடியாது. பல சம்பவங்களை கத்தரித்து விடுவார்கள். இவ்வாறு இரண்டு பாகமாக திரைப்படம் ஆக்கினால் பல சம்பவங்களை நிச்சயமாக உள்ளடக்கலாம்.

<hr>

பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த சனிக்கிழமை ஹைதராபாத் அண்ணா தயவில் திரைப்படத்திற்குப் போனோம். ஏற்கனவே டெக்கான் குரோனிகல்ஸில் விமர்சனம் படித்த அண்ணா இந்த திரைப்படம் சிறுவர்களுக்குப் பெருத்தமில்லாத பல காட்சிகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார். நாங்கதான் பெரியவங்க ஆச்சே, பார்த்துட்டாப் போச்சு என்று புறப்பட்டாகிவிட்டது.

திரைப்படம் PG 13 என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தாலும் பல சிறுசுகள் திரையரங்கு எங்கும் ஓடித் திரிந்தன. கொரிக்க பண்டங்களை வாங்கி உள்ளே நுழைந்தோம். கடைசில் திரைப்படமும் ஆரம்பமாகியது.

புத்தகம் கிடைத்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்புடன் திரைப்படத்தை பார்த்தால் ஒரே அறுவை. ரொம்பவும் நொந்து போயிட்டோம். புத்தகத்தில் நடக்கும் மயிர்கூச்செறியும் மந்திரச் சண்டையெல்லாம் உப்புச் சப்பில்லாமல் இருந்தது.

நமக்குப் பிடித்த பாத்திரம் மடியும் போது மிகவும் மனம் உடைந்துவிடுவது வழமை அல்லவா. புத்தகம் வாசிக்குப் போது நான் அழுது இருக்கின்றேன். நம்பினால் நம்புங்கள் திரைப்படத்தில் அப்படி ஒரு உணர்வுமே இல்லை. எல்லாம் வெறுமையாக இருக்கின்றது.

முன்னைய பாகங்களில் கலக்கிய ஹரி இப்பாகத்தில் ரொம்பவும் சுமாராகவே நடிக்கின்றார். ரொன் அதைவிடக் கேவலம். ஹார்மானி.. அப்பா.. அவர் இப்போது ஹர்மானியாக நடிப்பதை விட ஒரு நாயகியாக நடிப்பதற்குத் தயாராகி விட்டதாகத் தெரிகின்றது. ரொம்பவுமே ஒல்லியாக அசிங்கமாக இருக்கின்றார். எனக் கென்றால் பிடிக்கவில்லை. ஒரு காலத்தில் மூர்க்கத்தனமாக எம்மா வாட்சன் பின்னால் எப்படிச் சுத்தினேன் என்று ஓவியனிடமும், அன்பு இரசிகனிடமும் கேட்டால் சொல்வார்கள். அந்தப் பெட்டை இப்ப இல்லை.

திரைப்படத்தில் வரும் காட்சிகள் நிச்சயமாகச் சிறுவர்களுக்கு ஏற்ற திரைப்படம் அல்ல என்று சொல்லுகின்றது. குறிப்பாக சில வன்முறை நிறைந்த காட்சிகள். அதைவிட அரை நிர்வாணக் காட்சிகளும் வந்து சேர்ந்துவிடுகின்றது.

காட்சி அமைப்புகள், ஒளியமைப்புகள் பிரமாதம். அவற்றைக் குறைசொல்வதற்கில்லை. நிலவறை போன்ற காட்சிகள் அபாரமாக உள்ளது. ஆனால் யாருக்கு தங்கத் தட்டில் வைத்த தவளைக் கறி பிடிக்கும்???

எதற்காகவோ தெரியவில்லை ஹரி போட்டர் என்ற பெயரிற்காக இருக்கலாம், உலகம் எங்கும் திரைப்படம் நன்றாகவே ஓடுகின்றது. முதல் வாரத்தில் உலகம் எங்கும் $US205 million பணத்தை வாரியுள்ளது திரைப்படம். ஜமாக்சில் பார்த்த முதல் மொக்கைத் திரைப்படம் இதுதான்.

இப்படியான ஒரு அருமையான புத்தகத்தை இப்படியா சீரழிக்க வேண்டும். நீங்கள் ஹரி புத்தக இரசிகரானால் தயவு செய்து இந்த திரைப்படத்தைப் பார்க்க வேண்டாம்.

விரிவான விமர்சனம் எழுதவும் ஏதோ பிடிக்கவில்லை.

நான் மகான் அல்ல – விமர்சனம்

கார்த்தி & கஜல் அகர்வால்

காதல் கதையா க்ரைம் கதையா என்று யோசித்து முடிப்பதற்குள் படம் முடிந்து விடுகின்றது. முதல் பாகம் காதல் கதையாகவும் கார்த்தியின் கிளு கிளு காதல் நகர்வுகளுடன் நகர்கின்றது. அதே முரட்டுப் பொடியனாகத்தான் இன்னமும் கார்த்தி வலம் வருகின்றார்.

இரண்டாம் பாதி வன்முறையில் நனைகின்றது. முதல் பாதியிலேயே வன்முறை தொடங்கிவிட்டாலும் இரண்டாம் பாகத்தில் முற்றிவிடுகின்றது.

கதை என்னவென்றால் கல்லூரி மாணவர்கள் மது, போதை வஸ்துக்கள் மற்றும் பெண்களைக் கற்பழிப்பு என்று அலைகின்றது. இவ்வாறு பாதிகப்பட்ட ஒரு பெண்ணைக் கடத்த அதை கார்த்தியின் தகப்பனார் பார்த்துவிடுகின்றார்.

பொடியள் பட்டாளம் கொலைக்குச் சாட்சியான கார்த்தியின் தந்தையை போட்டுத்தள்ள முயல்கின்றார்கள். போட்டுத் தள்ளினார்களா?? கார்த்தி அந்த பாவிகளை என்ன செய்தார்?? பொலிஸ் என்ன செய்தது?? என்பவற்றிற்கு விடை திருட்டு விசிடியிலோ அல்லது அருகில் உள்ள திரையரங்கிலோ கிடைக்கலாம்.

இயக்குனர் சுசீந்திரன் புதிய கள்ளை பழைய மொந்தையில் தந்துள்ளார். ஆனாலும் படம் மோசமில்லை. படம் ஆரம்பித்து முடிக்கும் வரை விறு விறு என்று கதை நகர்கின்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் வெறுப்பேற்றுகின்றது. முடிவு அடியேனுக்குப் பிடித்திருந்ததே.

கஜல் அகர்வால் படத்தில் என்ன செய்கின்றார் என்று யாராவது சொன்னால் ஒரு இலட்சம் பரிசு வழங்கப்படும். சும்மா ஏதோ ஒரு கதாநாயகி தேவை என்பதற்காக வந்து போகின்றார். சில சிலுமிசங்கள் மட்டுமே கார்த்தியுடன் செய்து விட்டு மறைந்து போய்விடுகின்றார்.

யுவனின் இசை இலயிக்கின்றது. கார்த்தி கோபம் கொள்ளும் கிளைமாக்ஸ் காட்சிகளில் ராக் இசை அபாரம். அதைவிட “இறகைப் போல” பாடல் மனதில் நச் என்று பதிந்து விடுகின்றது.

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகளும் அருமை. மொத்தத்தில் கார்த்தி அண்ணனை விஞ்சப்போகும் பந்தையக் குதிரை. சூரியா உங்கள் கதிரையை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

Robin Hood (2010) விமர்சனம்

ஏழைகளிடம் திருடி பணக்காரனிடம் கொடுப்பவன் துரோகி. பணக்கானிடம் இருந்து திருடி ஏழைகளிடம் கொடுத்தால் அவன் ஹீரோ. இவ்வகையான ஹீரோக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் ஏழைகளின் தோழன் ரொபின் ஹூட். ரொபின் ஹூட் நொட்டிங்காம் எனும் பிரதேசத்தில் வாழ்ந்து அங்கே மக்களுக்கு எதிராக கொடுங்கோல் ஆட்சி புரிந்த செரீபை எதிர்த்து மக்களுகுச் சேவை செய்ததாக வரலாறு.

இவ்வகையில் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வெளிவந்துள்ளன. என் உள்ளத்தை என்றும் விட்டு நகராத ரொபின் கூட் தொலைக்காட்சித் தொடர் 80களில் வெளியானது பின்னர் இலங்கை ரூபவாகினியில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் 90 களில் ஒளிபரப்பானது.

இலங்கையில் உள்ள எந்த வொரு குழந்தையும் அக்கால கட்டத்தில் இந்த ரொபின் கூட் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. ரொபின் கூட்டினால் உந்தப்பட்டு மரத்தில் வாள் தீட்டியதையும் ஈர்க்கில் எடுத்து அதில் அம்பும் வில்லும் செய்து குருவியை சரி குறிவைத்து அடிக்க முயன்றதும் மறக்க முடியாத காலங்கள். இதைப் பற்றி சில இலங்கைப் பதிவர்கள் கூட பதிவிட்டிருந்தார்கள்.

இந்த ரொபின் கூட் தொலைக் காட்சித் தொடரில் நடித்த பலரும் திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஹீரோ வாக இரண்டு ரொபின்கள் வருவார்கள். முதல் பாகத்தில் வரும் ரொபின் கொலை செய்யப்பட்ட பின்னர் ரோபேர்ட் எனும் ஒரு பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர் வருவார். அவர் மீளவும் ரொபினின் கூட்டத்தை ஒன்றிணைப்பார்.

80 களின் வெளியான தொலைக்காட்சி ரொபின்

திரைப்பட விமர்சனம் என்று ஆரம்பித்து தொலைக்காட்சித் தொடர் விமர்சனம் அல்லவா செய்கின்றேன். 😉


இங்கனம் ரொபின் கூட்டின் தோற்றம் வரலாறு பற்றிப் பலவிதமான கருத்துக்கள் கதைகள் உலாவுகின்றன. சிலர் ரொபின் கூட் என்று ஒரு நபர் இருந்ததே இல்லை என்கின்றார்கள் ஆனால் நிச்சயமாக இருந்தார் என்று இன்னுமொரு கூட்டம் அடித்துச் சொல்கின்றது.

எது எவ்வாறாயினும் இந்த திரைப்படம் ரொபின் கூட்டின் வரலாறு பற்றிப் புதுக் கதை கூறுகின்றது. பேசாமல் இந்த திரைப்படத்திற்கு Origin of Robin Hood என்றோ Rise of Robin Hood என்றோ வைத்திருக்கலாம். பலரும் ரொபின் கூட் துரோகியாக அக்சன் பண்ணுவார் என்று எதிர்பார்க்கும் போது ரொபின் எப்படித் தோன்றினார் என்று மட்டுமே இங்கே காட்டப்படுகின்றது. இதனால் தான் என்னவோ பல இரசிக உள்ளங்களுக்கும் இந்த திரைப்படம் பிடிக்கவில்லை.

இரண்டாம் சிலுவை யுத்தம் நடத்த புனித பூமி சென்று திரும்பும் வழியில் நடக்கும் யுத்தம் ஒன்றில் இங்கிலாந்தின் மிகப் பெரிய மன்னன் சிங்க மனசுக் காரன் ரிச்சார்ட் (Richard the Lion Heart) பலியாகி விடுகின்றான். ரிச்சாட்டின் படையில் வில்வித்தையில் தேர்ந்த போர் வீரனாகப் பணியாற்றுகின்றான் ரொபின்.

அரசனின் மரணத்தின் பின்னர் நடக்கும் சில நிகழ்வுகளினால் அரசனின் முடி மற்றும் லொக்ஸ்லி பிரபுவின் மகனின் உடைவாள் என்பன ரொபின் கைகளில் மாட்டி விடுகின்றது. இதை மீள உரியவர்களிடம் ஒப்படைக்கத் திட சங்கர்ப்பம் பூண்டு புறப்படும் ரொபின் இங்கிலாந்தின் வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் யுத்தத்தில் நேரடியாகப் பங்கு பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான். இங்கிலாந்தின் துரோகி கொட்பிரேயையும் எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான்.

இறுதி யுத்தத்தில் ரொபின்
இறுதி யுத்தத்தில் ரொபின்

கதையை முழுமையாகச் சொல்லாமல் சொதப்பலா சொல்லியிருக்கன் அப்போதுதான் நீங்கள் திரையிலோ டிவிடியிலோ பார்க்கும் போது அருமையாக இருக்கும்.

இந்த திரைப்படம் மேல் பெரும் ஆர்வர் மேலிட இன்னுமொரு காரணமும் இருந்தது. கிளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கி பெரும் பாராட்டுக்களைக் குவித்த அதே இயக்குனர் அதே நாயகன் றசல் குரோவை வைத்து இயக்கிய திரைப்படம். ஆதலினால் திரைப்படம் பற்றிக் கடும் எதிர் பார்ப்பு மக்களிடம். கிளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கிய ரிட்லியின் பிரமாண்டத்தை இங்கேயும் காணலாம் குறிப்பாக பிரஞ்சுப் படைகளை ஆங்கிலப் படைகள் எதிர்கொள்ளும் காட்சி.

அமெரிக்க திரைப்பட வரிசையில் கிடு கிடு என கீழே இறங்கி விட்டாலும் பிரித்தானியாவில் தர வரிசையில் மேலே சில காலம் நின்றது. அவர்கள் ஊர் லெஜண்ட் பற்றிய கதை என்பதால் என்னவோ அவர்கள் பிடித்து நிறுத்திவிட்டார்கள்.

தானைத் தலைவன் ரசல் குரோவிற்கு இப்போது வயது 45ஆம். இந்த வயதில் இது தேவை தானா என்று கேட்கின்றார்களாம். அப்படியானால் 65 வயதில் அவருக்கு ஐஸ்ஸூ தேவையா?? ஹி..ஹி.. 🙂 ரொபின் பாத்திரத்தில் இது வரை நடித்தவர்களில் ரசல் குரோவிற்குத்தான் வயது கூடவாம்.

இதே வேளை பட்மான், டேர்மினேட்டர் போன்ற திரைப்படங்களில் நடித்த கிரிஸ்டியன் பேலையும் ரொபின் கூட் பாத்திரத்தில் நடிக்க வைக்க முயன்றார்கள் என்று கூறப்படுகின்றது. அம்மா மகமாயி எங்கள காப்பாத்திட்டே… நன்றி. பேல் கிட்ட டர்மினேட்டரிலயே அறுபட்டது போதும். 🙂

என்னைப் பொறுத்தவரையில் அருமையான திரைப்படம். இரசிக உள்ளங்கள் இரசிக்கலாம்.

MY RATING: 75/100
IMDB RATING: 70/100

Salt (2010) விமர்சனம்

கொஞ்ச நாளாகவே திரைப்படம் பார்த்தால் ரொம்பவும் வெறுப்பாக இருக்கின்றது. புதிதாய் வரும் திரைப்படங்களிற்குப் பதிலாக சுறா மற்றும் வில்லு போன்ற லொள்ளு வஜையின் படங்களை… சீ.. சீ.. விஜயின் படங்களைப் பார்த்துவிடலமோ என்று தோன்றுகின்றது. இன்று வேலைக்கு கல்தா கொடுத்துவிட்டதால் அமைதியாக இருந்து பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இந்த சோல்ட் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கத் தொடங்கியதால் என்னவோ படம் ஓரளவு திருப்தியாகவே அமைந்தது.

பனி யுத்தக்காலத்தில் அமெரிக்காவும் றுசியாவும் முட்டிக்கு முட்டி மல்லுக் கட்டிக்கொண்டி இருந்தன. ஒருத்தரை ஒருத்தர் அணுவாயுதம் கொண்டு அழித்துவிடுவதாககூட மிரட்டினர். இப்படியான பனி யுத்தக் காலத்தில் ஆரம்பிக்கும் கதை இன்றைய காலம் வரை வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.


நீறு பூத்த நெருப்பாக றுசிய உளவாளிகள் அமெரிக்க மண்ணில் இருக்கின்றார்கள். காலம் வரும் போது சர்வ நாசம் செய்து தம்மை அடையாளம் காட்டுவர் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப் படுகின்றது.

அஞ்சலீனா ஜூலி இந்த திரைப்படத்தில் சோல்ட் ஆக நடிக்கின்றார். அவர் ஒரு சி.ஐ.ஏ உளவாளி திரைப்படம் ஆரம்பத்திலேயே வட கொரிய சிறைச்சாலையில் வைத்து நையப் புடைக்கப்படுகின்றார். பின்னர் கைதிகள் பரிமாற்றம் மூலம் மீள அமெரிக்கா வந்து சேர்கின்றார்.

ஒரு நாள் இவர்களின் அலுவலகத்தினுள் நுழையும் ஒரு றுசிய நபர் சோல்ட் எனும் பெண் விரைவில் அமெரிக்கா வரவிருக்கும் றுசிய அதிபரை போட்டுத்தள்ளப்போவதாகக் கூறுகின்றார். அவர் சொன்ன சோல்ட்தான் நாம் பார்த்த ஹீரோயின் அஞ்சலீனா. இதைக் கேட்டு பதகளித்து தப்பி ஓடி அஞ்சலீனா என்ன செய்தார் என்பதை காட்டியுள்ளார்கள் மிகுதித் திரைப்படம் முழுவதும்.

கதையின் மையப் பாத்திரங்கள் சோல்ட் (அஞ்சலீனா), லீவ் ஸ்கிரைபர் (இவர் தான் வூல்வரீனின் அண்ணா சைபரூத்தாக வருபவர்), Chiwetel Ejiofor (மற்றோரு CIA அதிகாரி) ஆகியோரைச் சுற்றி நகர்கின்றது.

அஞ்சலீனா ஜூலியை டொம் ரைடரில் பார்த்த காலத்தில் இருந்தே இயந்திரத் துப்பாக்கி, நெருப்பு, புல்லட்டு என்று பார்த்தால் அவருடன் ஒட்டிவிடுகின்றது. அவரிற்கு ஏற்ற பாத்திரத்தை அருமையாகச் செய்துள்ளார்கள். இறுதி வரை இவள் என்ன மண்ணாங்கட்டி செய்றாள் என்றே தெரியாது. படம் ஒரு 75 வீதம் ஓடியபின்னரே கதை ஓரளவு புரியத் தொடங்குகின்றது.


படங்கள் வெறுத்து எதைப் பார்ப்பது என்று இருந்தால் இந்த திரைபடம் நிச்சயம் உங்களுக்கு ஆறுதல் தரும். அட்லீஸ்ட் தலையிடி தரும் 😉

My Rating: 65/100

IMDB Rating: 67/100

The Twilight Saga: Eclipse விமர்சனம்

ட்வைலைட் முதலாம் பாகம் வெளி வந்து உலகமெங்கும் சக்கைபோடு போட்டது. அதே சூட்டுடன் இரண்டாம் பாகம் நிவ் மூன் வெளி வந்து வசமாக இரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது. ஆனாலும் வசூலில் கடும் சாதனை. பல லகரங்களில் டாலர்களை குவித்தது. இப்போது இதே தொடரில் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது. மூன்றாம் பாகமே இந்த எக்கிளிப்ஸ் எனும் பகுதியாகும். இதுவரை இந்த ட்வைலைட் திரைப்படமோ புத்தகமோ வாசிக்காதாருக்கு என்ன இது என்று ஒரே வியப்பாக இருக்கலாம்.

கதைச் சுருக்கம் என்னவென்றால் பல ஹொலிவூட் திரைப்படங்களிலும் வந்து பயமுறுத்தும் ட்ரகுலா (இரத்தக் காட்டேரி) பற்றிய கதையே இது.  இரத்தக் காட்டேரி வந்தால் அவர்களை எதிர்க்க வெயாவூல்ப் எனும் ஒநாய்களும் இருந்தேயாகும்.  இக்கதையிலும் அதற்கு குறைவில்லை. ஆனாலும் வழக்கத்திற்கு மாறாக மனிதப் பெண்ணுடன் ஒரு வம்பயர் காதலில் வீழ்கின்றது. அந்தப் பெண்ணும் காதலில் வீழ்கின்றாள். இதற்கிடையில் சாதாரணக் காதல் முக்கோணக் காதலாகின்றது ஒரு வெயாவூல்பின் அறிமுகத்தால்.  வம்பயர் காதலிக்கும் பெண்ணை இந்த வம்பயர்களை காலம் காலமாக வெறுக்கும் வெயார்வூல்பும் காதலிக்கின்றது. இவர்கள் மூன்றுபேரையும் சுற்றியே 4 புத்தகங்களும் 3 திரைப்படங்களும் (கடைசி திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை) நகர்கின்றது.


Vampires இருந்தால் திரைப்படத்தில் காதலிற்கு குறைவேயிருக்காது. வம்பயர்கள் கடும் காதல் மன்னர்கள். இந்த திரைப்படத்தில் வரும் Edward அமைதியான வம்பயர். அதாவது மனிதர்களைக் கொலை செய்யாமல் மிருகங்களைக் கொண்டு இரத்தம் அருந்தி பிழைக்கும் ஒருவர். அவருடன் அவரைப்போலவே பழக்கமுடைய ஒரு குடும்பத்தார்.

மறு பக்கத்தில் காலம் காலமாக Fork நகரில் வாழ்ந்து வரும் செவ்விந்திய வழித்தோன்றல்கள். இவர்கள் குடும்பத்தில்தான் அடுத்த நாயகன் Jacop Black பிறக்கின்றார். இவர்தான் அந்த Werewolf குடும்பத்தில் பிறந்த ஒரு பையன்.

Bella மற்றும் Edward

அப்புறம் பெல்லா எனும் பெண் இந்த போர்க் நகருக்கு வருகின்றாள்.  ஒரே நகரில் வசிக்கும் Vampire, Werewolf இந்தப் பெண்ணின் மீது காதல் கொள்கின்றனர்.

இதேவேளையில் Bella வைக் கொலை செய்ய முயலும் ஒரு கெட்ட வம்பயரைக் கொலை செய்துவிட அதனால் கோவப்படும் விக்டோரியா எனும் காதலி வம்பயர் பெல்லாவைக் கொல்ல அலைகின்றது. பாகம் இரண்டிலிருந்து விக்டோரியாவிடம் இருந்து பெல்லாவைக் காப்பாற்றும் பொறுப்பு எட்வார்ட் மற்றும் யேகோப்பிடம்.

இந்த மூன்றாம் பாகத்தில் இந்த விக்டோரியா பிரைச்சனை என்ன ஆனது. இவர்களைப் பழிவாங்க விக்டோரியா என்ன செய்தார் என்பதே கதை. இதற்கு மேலும் கதையைச் சொல்ல விருப்பமில்லை.

முதலம் பாகத்தை பலரும் விரும்பிய போதும் இரண்டாம் பாகத்தை பலரும் பெரிதாகப் போற்றிப் பாராட்டவில்லை. என்னைப் பொறுத்தவரையில் முதலாம் பாகமே சிறப்பாக எடுத்திருக்கின்றனர் அதற்கு அடுத்ததாக மூன்றாம் பாகமான எக்கிளிப்ஸ் சிறப்பாக உள்ளது.

திரைக் காட்சியமைப்புகள் என்னைக் கவர்ந்தது. குறிப்பாக வம்பயர், வேர்வூல்ப் சண்டைக் காட்சிகள் அபாரம். இயல்பாகவே பன்டசி கதைகளில் நாட்டம் உள்ளோர் கட்டாயம் இந்த திரைப்படத்தை விரும்பிப் பார்ப்பர்.

MY RATING: 75/100

Clash of the Titans (2010) – விமர்சனம்

கடந்த மாதம் லைட்டனிங் தீஃப் என்ற திரைப்படம் பற்றி ஒரு குட்டி விமர்சனம் போட்டிருந்தேன். அந்தக் கதை கிரேக்க கடவுகள் பற்றியது. இன்று Clash of the Titans பார்ப்போம் என்று போய் உட்கார்ந்தால் ஒரே அதிசயம். முன்பு கூறிய திரைப்படத்தில் வந்த பல கிரேக்க கடவுகளும் ஜந்துகளும் இங்கேயும். நாயகனின் பெயர் கூட பேர்சியஸ் என்று இருக்கின்றது. முந்திய படத்தில் பேர்சி ஜக்சன் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஏற்கனவே கிரேக்க வரலாறு கடவுகள் பற்றி எதுவும் தெரியாது அப்புறம் இந்தப் படத்தில் போய் இருந்தால் ஏதோ ஏதோ எல்லாம் காட்டி வெறுப்பேத்தினார்கள். சாம் வேர்திங்கடன் இந்த படத்தில் ஒரு வேர்த்தும் இல்லாமல் மொக்கையாக நடித்திருக்கின்றார். அவதாரிலும் டேர்மினேட்டரிலும் பார்த்த வேர்த்திங்கடன் மிஸ்ஸிங். அது போதாதென்று இடைவேளை நெருங்கும் போதே சாதுவாக கொட்டாவியும் விடத் தொடங்கிவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


பல ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது மனிதனின் தோற்றத்திற்கு முதல் நடக்கும் யுத்தத்தில் டைட்டன்கள் எனப்படுவோர் சியோசிடம் தோற்கின்றனராம். இதன் பின்னர் ஆட்சியேறும் நபர்களே கிரேக்க கடவுகள்களான சியஸ், சைடன், ஹைடஸ். இவர்களில் சியஸ் மனிதர்களை உருவாக்கித் தொலைக்கின்றாராம்.

பின்னர் ஒரு நாள் ஒரு மீனவன் மிதந்து வரும் ஒரு பேளையை காண்கின்றான். அதை திறக்கும் போது அங்கே நம் நாயகன் பேர்சியஸ் இருக்கின்றார். தனது இறந்த தாயின் மேல் இருக்கும் பெர்சியசை அந்த மீனவன் காப்பாற்றி தன் மகன் போல பேணிப் பாதுகாக்கின்றான்.

இதே வேளை மனிதர்கள் கடவுள் மேல் கோவம் கொண்டு கடவுளுடன் யுத்தப் பிரகடனம் செய்கின்றனர்.

நரகத்தை ஆண்டுவரும் ஹைடஸ் சியசின் அனுமதி பெற்று மனிதர்களைத் தாக்கத் தொடங்குகின்றார். இதில் உச்ச கட்டமாக கிரக்கன் எனும் விலங்கையும் பாவிக்கின்றான். கிரக்கன் எனும் இந்த விலங்கை வைத்தே டைட்டன்களுடனான யுத்தமும் வெல்லப் பட்டது என்பதும் குறிப்பிட்டாக வேண்டும். அது சரி இந்த கிரக்கனை பைரேட்ஸ் ஒப் த கரிபியனிலும் பார்த்தோம் தானே 🙂

அப்புறம் விதியின் வசத்தான் மனிதர்களால் நம் நாயகன் தேர்ந்தெடுக்கப் பட்டு ஹடைசை அழிக்கப் புறப்படுகின்றார். முக்கியமான பல தகவல்களை இங்கே நான் சொல்லவில்லை. அனைத்தையும் திரையில் காணுங்கள் அல்லது டிவிடியில் காணுங்கள்.

ஏற்கனவே திரைப்படத்தில் சரக்கு கம்மி இதில் நானும் உளறிவிட்டால் 🙂

நிச்சயமாக அதி மொக்கைப் படம் இல்லை. ஆனால் எதிர்பார்ரதளவிற்கு இல்லை. இதைவிட 1981ல் வெளியான திரைப்படம் சிறப்பாக இருக்கின்றது என்று பழைய சினிமா இரசிகர்கள் அங்கலாய்த்துக் கொள்கின்றார்கள்.

காட்சியமைப்புகள், சத்தவமைப்புகள் சிறப்பாக உள்ளன. அவையே திரைப்படத்தின் நம்பிக்கைக் தூண்களாக இருக்கின்றன. இந்த விடுமுறை காலத்தில் இந்த திரைப்படம் நல்ல வசூலை அள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் பெரிய மெகா ஹிட் திரைப்படம் ஆகப் போவதில்லை.

My Rating: 50/100

IMDB Rating: 61/100

Percy Jackson & the Olympians: The Lightning Thief (2010) விமர்சனம்

உங்களுக்கு சிறுவர் உள்ளமா?? ஹரி போட்டர் போன்ற திரைப்படங்களை விழுந்து விழுந்து பார்க்கும் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?? அப்படியானால் இந்த திரைப்படம் உங்களுக்கானது. உங்களூர் திரையரங்குகளில் இருந்து தூக்க முதல் இந்த திரைப்படத்தைச் சென்று பார்த்துவிடுங்கள். கொழும்பில் இன்னமும் சவோய், கொழும்பு – 6 திரையரங்கில் காட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.


தலைப்பை பார்த்தாலே புரிந்திருக்கும் உங்களிற்கு ஏதோ கிரேக்க கடவுள்கள் சம்பந்தப்பட்ட மாட்டரே இந்தக் கதையிலும் இருக்கின்றது என்று.

கதையின் படி கிரேக்க கடவுள்கள் இருப்பதாகவும் அவர்கள் பூமிக்கு வந்து மனிதர்களை டேட் பண்ணுவதாகவும் அவர்கள் டேட் பண்ணியவர்களுக்குப் பிறந்த குளந்தைகள் கடவுள் போன்று சக்தியுள்ளவர்களாகவும் இருப்பார்களாம் என்றும் காட்டியுள்ளனர்.

இவ்வாறாக ஒரு கிரேக்க கடவுளுக்குப் பிறந்த பேர்சி எனும் எம் நாயகன் எப்படி ஒரு செய்யாத குற்றத்தைச் செய்ததாக சாடப்படுகின்றார் என்றும் அதில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தார் என்பதையும் காட்டியுள்ளனர்.

ஹரி போட்டர் அன் த சேம்பர் ஓப் சீக்கிரட் எடுத்த அதே இயக்குனர்தான் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளாராம். அதனால் ஹரிபோட்டர் போன்ற திரைப்படங்களின் தாக்கத்தை இங்கே காணமுடியும்.

My Rating: 65/100
IMDB Rating: 60/100