Tag Archives: விமர்சனம்

நான் மகான் அல்ல – விமர்சனம்

கார்த்தி & கஜல் அகர்வால்

காதல் கதையா க்ரைம் கதையா என்று யோசித்து முடிப்பதற்குள் படம் முடிந்து விடுகின்றது. முதல் பாகம் காதல் கதையாகவும் கார்த்தியின் கிளு கிளு காதல் நகர்வுகளுடன் நகர்கின்றது. அதே முரட்டுப் பொடியனாகத்தான் இன்னமும் கார்த்தி வலம் வருகின்றார்.

இரண்டாம் பாதி வன்முறையில் நனைகின்றது. முதல் பாதியிலேயே வன்முறை தொடங்கிவிட்டாலும் இரண்டாம் பாகத்தில் முற்றிவிடுகின்றது.

கதை என்னவென்றால் கல்லூரி மாணவர்கள் மது, போதை வஸ்துக்கள் மற்றும் பெண்களைக் கற்பழிப்பு என்று அலைகின்றது. இவ்வாறு பாதிகப்பட்ட ஒரு பெண்ணைக் கடத்த அதை கார்த்தியின் தகப்பனார் பார்த்துவிடுகின்றார்.

பொடியள் பட்டாளம் கொலைக்குச் சாட்சியான கார்த்தியின் தந்தையை போட்டுத்தள்ள முயல்கின்றார்கள். போட்டுத் தள்ளினார்களா?? கார்த்தி அந்த பாவிகளை என்ன செய்தார்?? பொலிஸ் என்ன செய்தது?? என்பவற்றிற்கு விடை திருட்டு விசிடியிலோ அல்லது அருகில் உள்ள திரையரங்கிலோ கிடைக்கலாம்.

இயக்குனர் சுசீந்திரன் புதிய கள்ளை பழைய மொந்தையில் தந்துள்ளார். ஆனாலும் படம் மோசமில்லை. படம் ஆரம்பித்து முடிக்கும் வரை விறு விறு என்று கதை நகர்கின்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் வெறுப்பேற்றுகின்றது. முடிவு அடியேனுக்குப் பிடித்திருந்ததே.

கஜல் அகர்வால் படத்தில் என்ன செய்கின்றார் என்று யாராவது சொன்னால் ஒரு இலட்சம் பரிசு வழங்கப்படும். சும்மா ஏதோ ஒரு கதாநாயகி தேவை என்பதற்காக வந்து போகின்றார். சில சிலுமிசங்கள் மட்டுமே கார்த்தியுடன் செய்து விட்டு மறைந்து போய்விடுகின்றார்.

யுவனின் இசை இலயிக்கின்றது. கார்த்தி கோபம் கொள்ளும் கிளைமாக்ஸ் காட்சிகளில் ராக் இசை அபாரம். அதைவிட “இறகைப் போல” பாடல் மனதில் நச் என்று பதிந்து விடுகின்றது.

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகளும் அருமை. மொத்தத்தில் கார்த்தி அண்ணனை விஞ்சப்போகும் பந்தையக் குதிரை. சூரியா உங்கள் கதிரையை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

Salt (2010) விமர்சனம்

கொஞ்ச நாளாகவே திரைப்படம் பார்த்தால் ரொம்பவும் வெறுப்பாக இருக்கின்றது. புதிதாய் வரும் திரைப்படங்களிற்குப் பதிலாக சுறா மற்றும் வில்லு போன்ற லொள்ளு வஜையின் படங்களை… சீ.. சீ.. விஜயின் படங்களைப் பார்த்துவிடலமோ என்று தோன்றுகின்றது. இன்று வேலைக்கு கல்தா கொடுத்துவிட்டதால் அமைதியாக இருந்து பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இந்த சோல்ட் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கத் தொடங்கியதால் என்னவோ படம் ஓரளவு திருப்தியாகவே அமைந்தது.

பனி யுத்தக்காலத்தில் அமெரிக்காவும் றுசியாவும் முட்டிக்கு முட்டி மல்லுக் கட்டிக்கொண்டி இருந்தன. ஒருத்தரை ஒருத்தர் அணுவாயுதம் கொண்டு அழித்துவிடுவதாககூட மிரட்டினர். இப்படியான பனி யுத்தக் காலத்தில் ஆரம்பிக்கும் கதை இன்றைய காலம் வரை வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.


நீறு பூத்த நெருப்பாக றுசிய உளவாளிகள் அமெரிக்க மண்ணில் இருக்கின்றார்கள். காலம் வரும் போது சர்வ நாசம் செய்து தம்மை அடையாளம் காட்டுவர் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப் படுகின்றது.

அஞ்சலீனா ஜூலி இந்த திரைப்படத்தில் சோல்ட் ஆக நடிக்கின்றார். அவர் ஒரு சி.ஐ.ஏ உளவாளி திரைப்படம் ஆரம்பத்திலேயே வட கொரிய சிறைச்சாலையில் வைத்து நையப் புடைக்கப்படுகின்றார். பின்னர் கைதிகள் பரிமாற்றம் மூலம் மீள அமெரிக்கா வந்து சேர்கின்றார்.

ஒரு நாள் இவர்களின் அலுவலகத்தினுள் நுழையும் ஒரு றுசிய நபர் சோல்ட் எனும் பெண் விரைவில் அமெரிக்கா வரவிருக்கும் றுசிய அதிபரை போட்டுத்தள்ளப்போவதாகக் கூறுகின்றார். அவர் சொன்ன சோல்ட்தான் நாம் பார்த்த ஹீரோயின் அஞ்சலீனா. இதைக் கேட்டு பதகளித்து தப்பி ஓடி அஞ்சலீனா என்ன செய்தார் என்பதை காட்டியுள்ளார்கள் மிகுதித் திரைப்படம் முழுவதும்.

கதையின் மையப் பாத்திரங்கள் சோல்ட் (அஞ்சலீனா), லீவ் ஸ்கிரைபர் (இவர் தான் வூல்வரீனின் அண்ணா சைபரூத்தாக வருபவர்), Chiwetel Ejiofor (மற்றோரு CIA அதிகாரி) ஆகியோரைச் சுற்றி நகர்கின்றது.

அஞ்சலீனா ஜூலியை டொம் ரைடரில் பார்த்த காலத்தில் இருந்தே இயந்திரத் துப்பாக்கி, நெருப்பு, புல்லட்டு என்று பார்த்தால் அவருடன் ஒட்டிவிடுகின்றது. அவரிற்கு ஏற்ற பாத்திரத்தை அருமையாகச் செய்துள்ளார்கள். இறுதி வரை இவள் என்ன மண்ணாங்கட்டி செய்றாள் என்றே தெரியாது. படம் ஒரு 75 வீதம் ஓடியபின்னரே கதை ஓரளவு புரியத் தொடங்குகின்றது.


படங்கள் வெறுத்து எதைப் பார்ப்பது என்று இருந்தால் இந்த திரைபடம் நிச்சயம் உங்களுக்கு ஆறுதல் தரும். அட்லீஸ்ட் தலையிடி தரும் 😉

My Rating: 65/100

IMDB Rating: 67/100