Tag Archives: திரைவிமர்சனம்

நான் மகான் அல்ல – விமர்சனம்

கார்த்தி & கஜல் அகர்வால்

காதல் கதையா க்ரைம் கதையா என்று யோசித்து முடிப்பதற்குள் படம் முடிந்து விடுகின்றது. முதல் பாகம் காதல் கதையாகவும் கார்த்தியின் கிளு கிளு காதல் நகர்வுகளுடன் நகர்கின்றது. அதே முரட்டுப் பொடியனாகத்தான் இன்னமும் கார்த்தி வலம் வருகின்றார்.

இரண்டாம் பாதி வன்முறையில் நனைகின்றது. முதல் பாதியிலேயே வன்முறை தொடங்கிவிட்டாலும் இரண்டாம் பாகத்தில் முற்றிவிடுகின்றது.

கதை என்னவென்றால் கல்லூரி மாணவர்கள் மது, போதை வஸ்துக்கள் மற்றும் பெண்களைக் கற்பழிப்பு என்று அலைகின்றது. இவ்வாறு பாதிகப்பட்ட ஒரு பெண்ணைக் கடத்த அதை கார்த்தியின் தகப்பனார் பார்த்துவிடுகின்றார்.

பொடியள் பட்டாளம் கொலைக்குச் சாட்சியான கார்த்தியின் தந்தையை போட்டுத்தள்ள முயல்கின்றார்கள். போட்டுத் தள்ளினார்களா?? கார்த்தி அந்த பாவிகளை என்ன செய்தார்?? பொலிஸ் என்ன செய்தது?? என்பவற்றிற்கு விடை திருட்டு விசிடியிலோ அல்லது அருகில் உள்ள திரையரங்கிலோ கிடைக்கலாம்.

இயக்குனர் சுசீந்திரன் புதிய கள்ளை பழைய மொந்தையில் தந்துள்ளார். ஆனாலும் படம் மோசமில்லை. படம் ஆரம்பித்து முடிக்கும் வரை விறு விறு என்று கதை நகர்கின்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் வெறுப்பேற்றுகின்றது. முடிவு அடியேனுக்குப் பிடித்திருந்ததே.

கஜல் அகர்வால் படத்தில் என்ன செய்கின்றார் என்று யாராவது சொன்னால் ஒரு இலட்சம் பரிசு வழங்கப்படும். சும்மா ஏதோ ஒரு கதாநாயகி தேவை என்பதற்காக வந்து போகின்றார். சில சிலுமிசங்கள் மட்டுமே கார்த்தியுடன் செய்து விட்டு மறைந்து போய்விடுகின்றார்.

யுவனின் இசை இலயிக்கின்றது. கார்த்தி கோபம் கொள்ளும் கிளைமாக்ஸ் காட்சிகளில் ராக் இசை அபாரம். அதைவிட “இறகைப் போல” பாடல் மனதில் நச் என்று பதிந்து விடுகின்றது.

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகளும் அருமை. மொத்தத்தில் கார்த்தி அண்ணனை விஞ்சப்போகும் பந்தையக் குதிரை. சூரியா உங்கள் கதிரையை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

தசாவதாரம் (2008) விமர்சனம்

ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மதியக் காட்சிக்குச் சென்று தசாவதாரம் திரைப்படம் பார்த்தாகிவிட்டது. 2.30 காட்சிக்கு 12.30 க்கே சென்று வெயிலில் காய்ந்ததும், உள்ளே நுழைய முயற்சிக்கையில் மோர் கடைபடுவது போல ஒரேயடியாக நசுங்கி பொசுங்கியதும் வேறு கதை. அடித்துப் பிடித்து மரதானை சினி சிட்டியினுள் நுழைந்து ஒரு சீட்டுப் புடிச்சு உட்கார்ந்தாகிவிட்டது.

வழமை போல விளம்பரங்களுடன் காட்சி ஆரம்பமாகியது. உள்ளே வந்த சந்தோஷத்தில் இரசிகர்கள் திரையில் காட்டுவது எல்லாத்த்துக்கும் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரேயடியாக வெயிலில் நின்று சடார் என்று ஏ/சி க்குள் விட்டால் இப்படித்தான் மண்டை குளம்புமாக்கும். விளம்பரங்களை அடுத்து சத்தியம் திரைப்பட ட்ரேயிலரும் போட்டுக் காட்டினார்கள். விஷால் கலக்கலாக அக்சன் காட்சிகளில் கலக்கியிருப்பதாகத் தெரிகின்றது.

எல்லாம் முடிந்து திரைப்படம் தொடங்கியது. கதையின் ஆரம்பம் தமிழ்நாட்டில். குலோத்தூங்க சோழனுக்கும் ஒரு விஷ்ணு பக்தருக்கும் இடையில் ஏற்படும் கல கலப்பு. சைவமா வைனவமா சிறப்பானது என்பதில் கமலுக்கும் (ராமானுஜன்) நெப்போலியனுக்கும் (குலோத்தூங்க சோழன்) கல கலப்பு. 12 ம் நூற்றாண்டில் நடந்த இந்த நிகழ்ச்சி அழகாக படமாக்கி திரைக்கதையிற்கு ஒரு தொடுப்பும் கொடுத்திருக்கின்றார்கள். இந்த காட்சிகளைப் பார்க்கும் போது பொன்னியின் செல்வனை நிச்சயமாகத் தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கை என் மனதில் அடியில் ஊற்றுப் பெற்றது.

மொத்தம் பத்து வேடத்தில் கமல் நடித்திருந்தார். பத்து வேடமும் என்ன என்ன என்பது எனக்கு கூட ஞாபகத்தில் நின்ற பாடில்லை எப்படித்தான் கமல் ஞாபகத்தில் வைத்து நடித்தாரே?? 😉

திரைப்படத்தைப் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்க வேண்டாம்…

நாயகன் கமல் அமெரிக்காவில் நுன் உயிரியலில் பி.எச்.டி பட்டம் பெற்று ஒரு ஆய்வு கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகின்றார். இவர்கள் கண்டுபிடிக்கும் ஒரு உயிரியல் ஆயுதம் ஒரு பிரதேசத்தையே அழிக்க கூடியது. இதை நடுநிலைப் படுத்த NaCl பயன்படுத்த வேண்டும். அதாவது உப்பு நீர்.

இதை களவாடி வேற்றார் கையில் விற்க அதே ஆய்வு கூடத்தில் முயற்சி நடக்கிறது. இதையறிந்து அந்த உயிரியல் ஆயுதத்தை களவாடி FBI கையில் ஒப்படைக்க கமல் முயற்சிக்கின்றார். ஆனால் விதி வேறு விதமாக விளையாடி இவரை இந்தியாவிற்கு அந்த உயரியல் ஆயுதத்துடன் வர வழைத்துவிடுகின்றது. அங்கே நம்ம அசின் பொண்ணை வேறு சந்தித்து தொலைத்து விடுகின்றார்.

இந்த உயிரியல் ஆயுதத்தைக் கைப்பற்ற அமெரிக்காவில் இருந்து கமலை விடாமல் ஒரு வெள்ளைக்கார வில்லன் துரத்துகின்றார். அந்த வெள்ளைக்கார வில்லனும் கமல்தான். இந்த வெள்ளைக்கார வில்லன் கமலைத் துரத்தும் போது கமலின் நண்பன் ஒருவனின் ஜப்பானிய மனைவியைக் கொலை செய்துவிடுகின்றான். இதனால் கோவமடையும் அந்த ஜப்பானிய நங்கையின் அண்ணா வில்லன் கமலை இறுதியில் ஒன்டிக்கு ஒன்டியாக சந்திப்பது வேறு கதை. இந்த ஜப்பானிய பாத்திரமும் கமல்தான்.

இந்தியாவை வந்தடையும் கமல் அங்கே பொலீசாரால் கைது செய்யப்படுகின்றார். இவரைக் கைது செய்யும் ஒரு தெலுங்கு காரப் பொலீஸ்காரன் அடிக்கும் கூத்து ஒரே ரகளை. தெலுங்கு பேசுபவர்களின் உச்சரிப்பில் இவர் பேசும் தமிழ் ஜோராக இருந்தது. இந்த பொலீஸ் அதிகாரியும் ஒரு கமல்தான். இந்தியாவில அதிகமாக பேசப்படுற மொழி ஹிந்தி, அதுக்கடுத்ததாக பேசப்படுறது தெலுங்கு, அதுக்கடுத்ததுதான் தமிழ். இப்படியா இருக்கையில் தெலுங்கு காரனான நானே தமிழைப் படித்து பேசும் போது நீ என்ன இங்கிலீசில பேசுறாய் என்று கேட்பது நச்.

இதைவிட பாட்டி, தலித்து, புஷ், சர்தர் ஜூ என்று பல வேடங்களில் கமல். அந்த உயிரியல் குண்டு வெடித்ததா இல்லையா என்பதுதான் மிகுதிக் கதை. திரைப்படத்தில் கதை என்று சொல்வதற்கு பெரிதாக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. பிரமாண்டம், மற்றும் கமலின் புதுமையான நடிப்பு. குறிப்பாக பாத்திரத்திற்கு பாத்திரம் வேறுபடுத்தி நடிக்கும் நடிப்பு திரைப்படத்தை இலயித்து பார்க்க வைக்கின்றது.

மல்லிகா ஷெரவாத் ஒரேயடிக காற்று வாங்கிக் கொண்டே நடித்திருக்கின்றார். சில வேளைகளில் அந்நேரத்தில் இந்தியாவில் வெயில் அதிகமாக இருந்ததால் அப்படியாக உடை அணிந்தாரோ தெரியவில்லை.

சில கொலை நடக்கும் காட்சிகள் சிறுவர்களுடன் பார்க்க தகுந்தது என்று நான் நினைக்கவில்லை. ஆகவே சிறுவர்களை அழைத்துச் செல்வதானால் யோசித்துச் செல்லுங்கள். கடைசி வந்தாலும் திருட்டு சீடியில் இந்த திரைப்படத்தைப் பார்க்காதீர்கள். தியட்டர் காட்சியமைப்பு, ஒளி, ஒலி அமைப்பில் பார்க்காவிட்டால் இந்த திரைப்படம் சப்பையாக இருக்கும்.

மொத்தத்தில் கமல் தான் ஒரு வண் மான் ஆர்மி என்பதை நிரூபித்திருக்கின்றார். ஆகா ஓகே பேஷ் பலே என்றேல்லாம் பாராட்ட மாட்டேன். ஆனால் வித்தாயாசமான இந்த முயற்சியை திரையில் கண்டு களிக்கலாம்.