Tag Archives: திரைப்படம்

இலங்கையில் 3டி சினிமா

சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் காலத்தில் மைடியர் குட்டிச் சாத்தான் என்று ஒரு முப்பரிமானத் திரைப்படம் வெளியானது. இதுவே எனது வாழ்க்கையில் அல்லது பலரது வாழ்க்கையில் கண்ட முதலாவது முப்பரிமானத் திரைப்படம். ஆயினும் உலகம் முழுவதும் 3டி திரைப்படங்கள் சக்கை போடும் நேரத்தில் இலங்கையில் மட்டும் எப்போதும் 3டி திரைப்படங்கள் வெளியாவதே இல்லை.

இந்த நீண்டநாள் குறையை இலங்கையின் தலைநகரில் அமைந்துள்ள மஜஸ்டிக் சினிமா நீக்கியுள்ளது. இனிமேல் 3டி திரைப்படங்களைக் காட்டுவதற்காகவே என்று ஒரு திரையரங்கை மஜஸ்டிக் ஐந்தாம் மாடியில் அமைத்துள்ளனர். சுமார் 150 பேர் இருக்கக்கூடிய வசதி உள்ள இந்த திரையரங்கில் முப்பரிமானத் திரைப்படங்களைக் காட்டுவதாகவே உத்தேசம் செய்துள்ளனராம்.

தற்போது த்ரீ மஸ்கட்டீயர்ஸ் என்ற திரைப்படத்தைக் காட்டுகின்றார்கள். ஆரம்பக் காட்சிகளில் முப்பரிமானக் காட்சிகள் நிறைந்து இருந்தாலும் திரைப்படம் முழுவதும் 3டி காட்சிகள் இல்லை. அல்லது 3டி எபெக்டு குறைவாக இருந்தது. விரைவில் சிறப்பான 3டி திரைப்படங்களையும் இங்கே காட்டுவார்கள் என்று நம்புவோமாக.

மஜஸ்டிக் சிட்டியில் இப்போது மொத்தம் நான்கு திரையரங்குகள் நிறுவப்பட்டுள்ளன.

தற்போது காட்டப்படும் காட்சிகள்

 

  1. சுப்பீரியர் 3டி – இதுவே நான் குறிப்பிட்ட முப்பரிமான திரையரங்கம். சுமார் 150 பேர் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் நுழைவுக் கட்டனம் 600 ரூபா
  2. கோல்ட் – இது ஒரு மினிசினிமா. நுழைவுக் கட்டனம் 750 ரூபா. இலவச சிற்றுண்டி, குடிபாணம் வழங்கப்படும்.
  3. அல்ட்ரா – சாதாரண சினிமா நுழைவுக் கட்டனம் 400 ரூபா
  4. பிளாட்டினம் – பழைய மஜஸ்டிக் சினிமா
கொழும்பிற்கு ஒருவகையாக 3டியும் வந்தாச்சு விரைவில் iMax ஐயுக் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும். ஹைதராபாத்தில் 3டி ஐமாக்ஸில் திரைப்படம் பார்த்த அனுவத்தின் பின்னர் அப்படியான ஒரு திரைப்பட அனுபவம் இதுவரை அடியேனுக்கு கிடைக்கவேயில்லை.
விரைவில் நல்ல ஒரு ஐமாக்ஸ் தியட்டரும் இலங்கைக்கு கிடைக்கும் என்று நம்புவோமாக.

பையா விமர்சனம்

வழமை போல எல்லாரும் எழுதி முடித்த பின்னரே நான் இந்த திரைப்பட விமர்சனத்தை எழுத ஆரம்பிக்கின்றேன். புதுவருட விடுமுறைக்கு யாழ் சென்று சும்மா ஆணி புடுங்கிக்கொண்டு இருந்த வேளையில் சோதரன் அழைக்கவே யாழ் நகர் சென்று பையா படம் பார்க்கச் சென்றேன்.

அதிகமாக எதிர்பார்ப்பு வைத்திருக்கவில்லை காரணம் ஏற்கனவே பலரும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்திருந்தமையே. சூப்பர் என்று சிலரும் மொக்கை என்று சிலரும் சொல்லி வைத்திருந்த காரணத்தால் நானே சென்று பார்த்து முடிவெடுப்பதாக இருந்தேன்.

திரைப்படம் தொடங்கியதில் இருந்து திரைப்படம் முடியும் வரை நாயகன் ஓடு ஓடு என்று ஓடுவார் அவர் கூட நாயகியும் ஓடுவார். வில்லனும் விதியும் விடாமல் துரத்தும். அவ்வகையான திரைப்படங்களை நாம் இது வரை பார்த்திருக்கின்றோம். அவ்வகையைச் சார்த்த திரைப்படம்தான் இந்த திரைப்படம்.

கார்த்தி பொறுப்பற்ற ஒரு இளைஞன். வாழ்வில் வித்தியாசமாக எதையும் முயற்சித்து காலம் கடத்துபவன். விதியின் செயலால் கட்டாயத் திருமணத்தில் இருந்து தமனாவைக் காப்பாற்றும் ஒரு பொறுப்பில் வீழ்கின்றான்.

கிடைத்த இரவல் காரில் தமானாவை ஏற்றிக் கொண்டு ஊர் ஊராக ஓடுவதும் பின்னால் இரண்டு ரவுடிக் கும்பல் துரத்துவதுமாகக் கதை. இடையில் சொல்ல நினைத்தும் சொல்லாமல் தவிக்கும் ஒரு காதல் வேற.

திரைப்படத்தில் என்ன சிறப்பு என்று கேட்டீர்களானால் என்னைப் பொறுத்தவரையில் பிண்ணனி இசை மற்றும் இரண்டு பாடல்கள். சண்டைக் காட்சியில் வரும் இலக்ரோனிக் கிட்டார் இசை எங்கள் மீசையையும் முறுக்க வைக்கின்றது. என் காதல் சொல்ல நேரம் இல்லை மற்றும் துளி துளி மழைத்துளியாய் வந்தாளே பாடல்கள் மனதில் நச்சென்று பதிந்து விடுகின்றன. மற்றய பாடல்கள் ஒட்டவில்லை.

லொஜிக் இல்லாத மொக்கை சண்டைகளுக்கு குறைவில்லை. இருபது முப்பது பேரை கார்த்தி ஒத்தையாளாக அடித்து வீழ்த்தும் போது.. ஷப்பா… ஆரம்பிச்சுட்டாங்கையா என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. ஆனால் தியட்டரில் அந்த சண்டைக் காட்சிகளை விசிலடிச்சு இரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கின்றது என்பதே உண்மை.

கார்த்தி நடிப்பு ஓ.கே. தமானா நடிப்பு என்று ஒன்றும் இல்லை ஆனால் கியூட்டா இருந்தாங்க. என்றாலும் கார்த்திதான் பெஸ்ட். 😉

கார்த்தியின் நடிப்பு ஆயிரத்தில் ஒருவன் மற்றும் பருத்தி வீரன் போன்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும் போது சுமார்தான். கார்த்தி சில இடங்களில் சூர்யாவையும் சில இடங்களில் சிவ குமாரையும் ஞாபகப் படுத்துகின்றார். இன்னும் சிறப்பாக எதிர் வரும் படங்களில் நடிப்பார் என்று நம்பலாம்.

படம் சூப்பரா இல்லை மொக்கையா என்று என்னிடம் கேட்டால் என் பதில் இரண்டும் இல்லை என்பதுதான். ஒரு தடவை தியட்டரில் பார்த்து இரசிக்க கூடிய திரைப்படம். திருட்டு வீசீடியில் பார்ப்பதற்கு இந்த திரைப்படத்தில் ஒன்றும் இல்லை.

அது சரி எதற்காக இந்த திரைப்படத்திற்கு “பையா” என்று பெயர் வைத்தனர்??? பேசாமல் பெங்களூரில் இருந்து மும்பாய் வரை என்று ஒரு பெயர் வைத்திருக்கலாம்.  வர வர லிங்குசாமியிடம் சரக்கு குறைந்து போகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.