Tag Archives: குரங்குத் திரைப்படம்

War for the Planet of the Apes – தமிழ் விமர்சனம்

தலைப்பிற்கேற்றவாறு ஒரு யுத்தம் சம்பந்தமான திரைப்படம் ஆரம்பிக்கும் போது எப்படி ஆரம்பிக்குமோ அது போலவே இந்தத் திரைப்படமும் ஆரம்பிக்கின்றது. பச்சைப் பசேலென அமைந்த அடர் காடுகளின் நடுவே படை வீரர்கள் பச்சைச் சீருடையுடன் துப்பாக்கிகளை உயர்த்தியவாறே மெல்ல மெல்ல நகர்கின்றனர்.

முன்னால் சிறிது தூரத்தில் ஒரு குரங்குளின் பாசறை தெரிகின்றது. மனிதர்களின் இராணுவம் மெல்ல மெல்ல நகர்ந்து பாசறையை சுற்றி வளைத்த பின்னர் தனது காட்டுத் தனமான தாக்குதலைத் தொடங்குகின்றது. எதிர்பாரா விதமாகத் திரும்பும் சண்டையில் குரங்குகள் வெற்றியடைகின்றன. பிடிக்கப்பட்ட மனித இராணுவ வீரர்களைக் காண குரங்குகளின் தலைவன் சீசர் வருகின்றார்.

Planet of the Apes

இந்தப் பிளனட் ஓப் தி ஏப்ஸ் தொடர் திரைப்படம், நாவல், கொமிக்ஸ் மற்றுத் தொலைக்காட்டிச் தொடர் என்று பல வட்டங்களை சுற்றி வந்துள்ளது. இவை அனைத்திற்கும் மூலம் 1963இல் வெளி வந்த பிரஞ்சு நாவலான La Planète des Singes இல் இருந்தே ஆரம்பித்துள்ளது. இந்த நாவல் பிற்காலத்தில் ஆங்கிலத்தில் Planet of the Apes என்று அமெரிக்காவிலும் Monkey Planet என்ற பெயரில் ஐக்கிய இராச்சியத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் 1968 முதல் 1973 வரை Planet of the Apes எனும் கருவை மையமாக வைத்து ஐந்து திரைப்படங்கள் வெளி வந்தன.

பின்னர் Planet of the Apes (1974) மற்றும் Return to the Planet of the Apes (1975–1976) என்று இரண்டு தொலைக்காட்சித் தொடர்களும் எடுக்கப்பட்டன.

பணம் பார்க்கலாம் என்று தெரிந்தால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சும்மா இருப்பார்களா? 😉 அத்துடன் விட்டு விடாமல் 2001 இல் Planet of the Apes எனும் பெயரில் மீளவும் ஒரு திரைப்படத்தை எடுத்தனர். இதைத் தொடர்ந்து சில கணனி விளையாட்டுக்களும் அக்காலத்தில் இந்தக் கருவை மையமாக வைத்து வெளியிடப்பட்டது.

Reboot series

பொதுவாக ரீமேக் மற்றும் ரீபூட் செய்யப்படும் திரைப்படங்கள் அவ்வளவாக சோபிப்பதில்லை. ஆனால் இந்த தொடரில் செய்யப்பட்ட திரைப்படங்கள் மூன்றுமே மிகவும் அருமையாக வந்துள்ளது. இந்தத் தொடரில் இறுதியானதும் மூன்றாவதுமான திரைப்படம் பற்றிய விமர்சனமே இது.

விமர்சனம்

மனிதர்களைப் போல (அல்லது அவர்களை விட சிறிதே அதிகமாக) குரங்குள் புத்திசாதூர்யம் படைத்தவர்களாக மாறிய உலகில் மனிதர்கள் மற்றும் குரங்குகள் இடையே நடக்கும் யுத்தம் / போட்டி பற்றியதே இந்த தொடர்களின் சாரம்.

இந்தப் பாகத்தில் குரங்குகளின் தலைவர் சீசரின் குடும்பத்தை மனிதர்கள் சிதைத்துவிடவே அதற்குக் காரணமான இராணுவத் தலைவர் கேணலைத் தேடி குரங்குகளின் தலைவர் சீசர் தன் பயணத்தை ஆரம்பிக்கின்றார். உயிரிற்கு மேலான தலைவரைத் தனியே அனுப்புவதை விரும்பாத சீசரின் போராட்டக் குணம் கொண்ட சில நண்பர்களும் சீசருடன் தமது பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

இந்தக் காட்சிகள் அனைத்துமே நாம் பார்த்த வேறு வேறு திரைப்படங்களை ஞாபகப்படுத்துவதாக இருந்தாலும் இந்தத் திரைப்படக் காட்சிகள் நம்மை அப்படியே பிணைத்துப் போட்டுவிடுகின்றன.

CGI (கணனி கிராபிக்ஸ்) திரைப்படம் முழுதும் பாவிக்கப்பட்டிருந்தாலும், காடுகளும், பனி மலைகளும் மொத்தத்தில் இயற்கை திரைப்படம் முழுவதும் நிறைந்திருந்து பார்ப்போரை நிஜமாக களத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகின்றது.

Bad Ape

படத்தில் சீசர் மற்றும் அவரது குழுவுடன் இடையில் இணைந்து கொள்ளும் ஒரு குரங்குதான் பாட் ஏப் எனப்படும் ஒரு குரங்கு. மிருகக் காட்சிசாலையில் இருந்து தப்பித்த இந்தக் குரங்கு திரைப்படத்தில் மெலிதான நகைச்சுவையைக் கொண்டுவர பாவிக்கப்பட்டுள்ளது.

சீசர் போல இந்தக் குரங்கும் ஆங்கிலத்தைப் பேசுகின்றது. பிரியாணிக்கு அளவாக உப்புப் போடுவது போல திரைப்படத்தின் போக்கை சிதைக்காமல் பாட் ஏப் எனும் இந்தப் பாத்திரம் மூலம் மெலிதான நகைச்சுவைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். படம் முடியும் போது பாட் ஏப் எமது மனதில் ஒரு இடம் பிடித்திருக்கும்.

மெதுவாக நகரும் திரைக்கதை

திரைப்படம் மிகவும் மெதுவாகவே நகர்கின்றது என்ற ஒரு குற்றச்சாட்டு இந்தத் திரைப்படத்தைப் பார்த்த சிலரிடம் உள்ளது. ஆனாலும் இந்தத் திரைப்படத்தில் வெறும் சண்டைக் காட்சிகளை மட்டும் காட்டியிருந்தால் இவ்வளவு தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்காது என்பது என் எண்ணம்.

மனிதர்களின் ஆள் மனதில் இருக்கும் வன்மம், சுயநலவாதம், எல்லையற்ற பழிவாங்கும் எண்ணம் என்பவற்றை இத்திரைப்படத்தில் அருமையாகக் காட்டியுள்ளார்கள். மனிதர்கள் போல சிந்திக்க ஆரம்பிக்கும் குரங்குகளுக்கும் இந்த இயல்புகள் மெல்லத் தொற்றுவதைத் திரைப்படத்தில் அழகாகக் காட்டியுள்ளார்கள்.

மேலும் யுத்தம் ஒன்று நடக்கும் போது மனிதர்கள் எவ்வாறான கொடூரர்களாக மாறுவார்கள் என்பதையும் காட்டுகின்றது. பெரும் யுத்தத்தைக் கடந்து வந்த எமது சந்ததியினர் இதனைப் பல இடங்களில் எம்முடன் பொருத்திப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது.

எந்த யுத்தத்திலும் கோடாரிக் காம்புகளிற்குக் குறைவிருக்காது. தன் சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கும் சந்தர்ப்பவாதிகளை வரலாற்றின் ஊடு கண்டிருக்கின்றோம். புத்தி சாதூர்யம் கூடியதும் மனிதர்கள் போல குரங்குகளும் இவ்வாறு இருப்பதைக் காணும் போது அடச் சே! என்று எண்ணத் தோன்றியது.

இவையனைத்தையும் எட்டவே அல்லது திரையில் விபரிக்க முனைந்ததாலேயே இந்தத் திரைக்கதை சற்று மெதுவாக நகர்வதாக நான் எண்ணுகின்றேன்.

முடிவு

அக்சன் மற்றும் கதை உள்ள திரைப்படங்களை பார்க்க விரும்புபவராயின் கட்டாயம் இந்தத் திரைப்படத்தை நீங்களும் பாருங்கள். உங்களை இந்தத் திரைப்படம் ஏமாற்றாது.