Tag Archives: இலங்கை

இலங்கையில் 3டி சினிமா

சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் காலத்தில் மைடியர் குட்டிச் சாத்தான் என்று ஒரு முப்பரிமானத் திரைப்படம் வெளியானது. இதுவே எனது வாழ்க்கையில் அல்லது பலரது வாழ்க்கையில் கண்ட முதலாவது முப்பரிமானத் திரைப்படம். ஆயினும் உலகம் முழுவதும் 3டி திரைப்படங்கள் சக்கை போடும் நேரத்தில் இலங்கையில் மட்டும் எப்போதும் 3டி திரைப்படங்கள் வெளியாவதே இல்லை.

இந்த நீண்டநாள் குறையை இலங்கையின் தலைநகரில் அமைந்துள்ள மஜஸ்டிக் சினிமா நீக்கியுள்ளது. இனிமேல் 3டி திரைப்படங்களைக் காட்டுவதற்காகவே என்று ஒரு திரையரங்கை மஜஸ்டிக் ஐந்தாம் மாடியில் அமைத்துள்ளனர். சுமார் 150 பேர் இருக்கக்கூடிய வசதி உள்ள இந்த திரையரங்கில் முப்பரிமானத் திரைப்படங்களைக் காட்டுவதாகவே உத்தேசம் செய்துள்ளனராம்.

தற்போது த்ரீ மஸ்கட்டீயர்ஸ் என்ற திரைப்படத்தைக் காட்டுகின்றார்கள். ஆரம்பக் காட்சிகளில் முப்பரிமானக் காட்சிகள் நிறைந்து இருந்தாலும் திரைப்படம் முழுவதும் 3டி காட்சிகள் இல்லை. அல்லது 3டி எபெக்டு குறைவாக இருந்தது. விரைவில் சிறப்பான 3டி திரைப்படங்களையும் இங்கே காட்டுவார்கள் என்று நம்புவோமாக.

மஜஸ்டிக் சிட்டியில் இப்போது மொத்தம் நான்கு திரையரங்குகள் நிறுவப்பட்டுள்ளன.

தற்போது காட்டப்படும் காட்சிகள்

 

  1. சுப்பீரியர் 3டி – இதுவே நான் குறிப்பிட்ட முப்பரிமான திரையரங்கம். சுமார் 150 பேர் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் நுழைவுக் கட்டனம் 600 ரூபா
  2. கோல்ட் – இது ஒரு மினிசினிமா. நுழைவுக் கட்டனம் 750 ரூபா. இலவச சிற்றுண்டி, குடிபாணம் வழங்கப்படும்.
  3. அல்ட்ரா – சாதாரண சினிமா நுழைவுக் கட்டனம் 400 ரூபா
  4. பிளாட்டினம் – பழைய மஜஸ்டிக் சினிமா
கொழும்பிற்கு ஒருவகையாக 3டியும் வந்தாச்சு விரைவில் iMax ஐயுக் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும். ஹைதராபாத்தில் 3டி ஐமாக்ஸில் திரைப்படம் பார்த்த அனுவத்தின் பின்னர் அப்படியான ஒரு திரைப்பட அனுபவம் இதுவரை அடியேனுக்கு கிடைக்கவேயில்லை.
விரைவில் நல்ல ஒரு ஐமாக்ஸ் தியட்டரும் இலங்கைக்கு கிடைக்கும் என்று நம்புவோமாக.

கொழும்பில் தாக்குதல் நடத்தும் புலிகளின் விமானம் – காணோளி

இலங்கை அரசு தனது தேசிய தொலைக்காட்சியில் வெளியிட்ட காணோளியை இங்கே காண்க

கொழும்பு 2019

இடம்: கொழும்பு
நேரம்: காலை 7.30
ஆண்டு: 2019

விந்தியா தனது கையில் இருக்கும் பையை இறுக்க அணைத்தபடி நடந்து கொண்டிருந்தாள். வீதி வெறிச்சோடிக் கிடந்தது. தனது நடையை மெல்ல மெல்ல வேகப்படுத்திக்கொண்டே வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

கையில் இருக்கும் அந்தப் பையின் பெறுமதி அவளுக்குத்தான் தெரியும். வீட்டில் அனைவரும் இந்தப் பையில் இருப்பதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். யார் கண்ணிலும் பட்டுவிடமால் சென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். பத்து ஆண்டுகளுக்கு முதல் இந்த இடத்தில் இந்நேரத்தில் சனம் சும்மா ஜே.. ஜே… என்று நடமாடும். இப்போ எல்லாம் தலைகீழ்.

சிந்தனைகளில் சுழன்றவாறு நடந்துகொண்டிருந்தாள் விந்தியா. அந்த சந்தியைக் கடந்துவிட்டால் தன் வீட்டை அடுத்த 5 நிமிடத்தில் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் நடையின் விரைவைக் கூட்டியவாறு சந்தியை நேக்கி நடக்கத் தொடங்கினாள்.

திடீர் என்று எங்கிருந்தோ ஒரு அடிபட்டு நெளிந்த டாடா இன்டிகா காரில் நான்கைந்து இளைஞர்கள். கார் சத்தைத்தை விட அவர்கள் போட்ட சத்தமே அதிகமாக இருந்தது. ஒருத்தன் காது குத்தியிருந்தான் மற்றவன் கண்இமையில் ஏதோ குத்தியிருந்தான்.

“டேய் அங்க பாருடா! ஏய்……….. என்ன கையில?” காரில் இருந்த ஒருத்தன் ஊளையிட்டான்.

குனிந்த தலை நிமிராமல் விந்தியா அந்த இடத்தில் இருந்து மெல்ல நகரத் தொடங்கினால். அவளை சிறிது கடந்து நின்று இருந்த கார் இப்போது, கிரீச் என்ற சத்ததோடு அவள் முன்னால் வந்து நின்றது. காரில் இருந்து நான்று இளைஞர்களும் தட தடவென இறங்கினர். ஒவ்வொருத்தன் கண்ணிலும் வெறி தாண்டவமாடியது.

ஒரு அடி முன்னுக்கு எடுத்து வைத்த ஒருத்தன் விந்தியா கையில் இருந்த பையை பறித்தான். பையை திறந்து உள்ளே பார்த்தவன், மற்றவர்களைப் பார்த்து புன்னகையுடன் தலையாட்டினான்.

“டேய்… தாடா!!!” விந்தியா பறித்தவன் கன்னத்தில் சடார் என்று ஒரு அறை விட்டாள். அறைந்த சத்தம் ஓய்வதற்குள் ஒரு சத்தம் ‘டுமீல்’. விந்தியாவின் உடல் கீழே சரிய அவள் உடலில் இருந்து இரத்தன் குபு குபு என வெளியேறத் தொடங்கியது.

விந்தியாவிற்கு சுய நினைவு மெல்ல மெல்ல அகலத் தொடங்கியது. கண்கள் இருட்டத் தொடங்கியது. கடைசியாக கண் மூட முன்னர், தன் பையில் இருந்த பாண் துண்டை அந்தக் கயவர்கள் விலங்குகளைப் போல பிய்த்து உண்பதைக் கண்டாள். மெல்ல மெல்ல அவள் உலகம் இருளத் தொடங்கியது.

பி.கு: யுத்தம் விரைவில் ஓயாவிட்டால் ஒருநாள் ஸ்ரீ லங்காவில் இது நடக்கப் போவது நிச்சயம

இலவச SMS அனுப்புதல்

பல தளங்களில் SMS இலவசமாகவும் பணம் வசூலித்துக்கொண்டும் பெறுவதைக் காணலாம். இந்த சேவையை உங்கள் தளத்தில் நீங்களும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டுரை இலங்கையின் மொபிடல் வலைப்பின்னலை மையமாக வைத்தே எழுதப் பட்டுள்ளது இந்திய நண்பர்கள் கீழுள்ள விபரங்களைப் பாருங்கள். Continue reading இலவச SMS அனுப்புதல்

கலைஞரில் மண் திரைப்படம்

இன்று மாலை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, வரும் ஞாயிற்றுக் கிழமை கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். வழமையான பீடிகையுடன் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக…. என்று தொடங்கினார்கள்.

ஏற்கனவே இந்த மண் திரைப்படத்தின் விமர்சனம் எழுதியிருந்தேன். சிலர் ஆமோதித்தனர் சிலர் இல்லை என்றிருந்தனர். இதைவிடப் பலர் குறுவட்டு கிடைக்காத காரணத்தால் திரைப்படத்தைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் இந்த அர்த்தமற்ற அல்லது காலத்தின் தேவைக்கு உதவாத தமிழ் திரைப்படத்தினை உலகத் தமிழர்கள் பார்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அனைவரும் பாருங்கள், ஆனால் அதில் வருவதை பார்த்து படத்தில் என்ன கருத்து சொல்ல வருகின்றார்கள் என்று குழம்பாதீர்கள்!! 😯

அன்புடன்,
மயூ

இலங்கையின் உயர்கல்வி பற்றி ஒரு பார்வை

1950 களில் சிங்கபூர் பிரதமர் இலங்கை வந்ததும், பின்னர் கொழும்பைப் பார்த்து பிரமித்து என் நாட்டையும் இது போல மாற்ற வேண்டும் என்று சபதம் போட்டதும் நீங்கள் அறிந்திருக்கக் கூடிய பழைய கதையே. இன்று இந்து சமுத்திரத்தின் முத்து என்ற பெயரும் கொழும்பு ஆசியாவின் பூந்தோட்டம் என்ற பெயரும் பெயரளவில்தான் உள்ளது. கொழும்பு போல நாற்றம் எடுக்கும் ஊரும், இலங்கையைப் போல கேட்பவரைக் கிலி கொள்ளச் செய்யும் நாடுகளும் உலகில் எத்தனை உண்டென்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.

 

நாட்டில் எந்தத் துறை சீர் கெட்டு உள்ளது என்று பார்ப்பதைவிட எந்தத்துறை சீராக உள்ளது என்று பார்த்தால் மிக்க நன்று. நான் அறிந்த வரையில் எந்தத் துறையும் சீராக இல்ல. இலஞ்சம் ஊழல், அரசியல் செல்வாக்கு என்று இலங்கை தன் பெயரை தானே கெடுத்துக்கொண்டு இருக்கின்றது. இந்தக் கட்டுரையில் நான் இலங்கையில் உயர் கல்விபற்றி ஒரு அலசல் அலசப் போகின்றேன்.

களனிப் பல்கலைக்கழகம்

ஒரு காலத்தில் இலங்கை உயர்கல்விப் பீடங்கள் நன்மதிப்புப் பெற்றிருந்தன. இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் இலங்கைக்கு வந்து உயர்கல்வி பெற்றுச் சென்றார்கள். இன்று நிலமை என்ன??? இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றே பலர் உயர் கல்விபெறவேண்டியதாக உள்ளது. வெறும் 5 சதவீதமான மாணவர்களுக்கே உயர்கல்வி வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது.

 

அரசினால் இதற்குச் சொல்லப்படும் காரணம் பல்கலைக் கழகங்களில் அனுமதி வழங்க போதுமான இடம் இல்லை என்பதே. அப்போ புதுப் பல்கலைக்கழகங்களைக் கட்ட வேண்டியதுதானே?. அதற்கு அரசின் பதில் போதிய நிதி இல்லை என்பதே.

 

இன்று அரச பல்கலைக்கழகங்களை எடுத்து நோக்கினால் தெரியும் எவ்வளவு மோசமாக உள்ளன என்பது. செயன்முறை ரீதியான அறிவு மாணவர்களுக்கு மிகக் குறைவாகவே உள்ளது. கல்வி வெறுமனே எழுத்தளவில் கற்பிற்பதில் முடிந்து விடுகின்றது. இது பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்குப் பெரிய பின்னடைவாகும். பட்டம் பெற்றுக்கொண்டு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும்போதே அவர்கள் தம்மிடம் உள்ள குறைகளை உணர்ந்துகொள்வர். ஆனால் நிறுவனங்கள் அதுவரை பொறுமையாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

 

இதைவிட மாணவர்கள் தாமே தேடிக் கற்கும் (Self Driven) ஆற்றலை பல்கலைக்கழகங்களில் வளர்த்துவிடுவதில் பேராசிரியர்கள் பங்காற்றுவதில்லை. அனைத்தையும் வந்து கற்பிற்பார்கள், மாணவர்கள் படித்துவிட்டு கிளிப்பிள்ளை போல திரும்பி பரீட்சைத் தாளில் வாந்தியெடுத்துவிட்டால் அவர்களுக்குச் சந்தோசம். அதுவே அவர்களின் கற்பித்தலின் உச்சக்கட்டம். வெளியூர் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தேடிக்கற்கும் ஆற்றல் ஊக்குவிக்கப்படுகின்றது. உதாரணமாக நாளை ஜாவா நிரல்மொழியில் இந்தப் பகுதியைப் படிப்போம் என்று ஆசிரியர் சொல்வார். மாணவர்கள் தாம் அந்தப் பகுதியை மறுநாள் படித்துவிட்டு வருவார்கள். பின்னர் வகுப்பு ஒரு கலந்துரையாடலாக அமையும். மாணவர்களின் கேள்விக் கணைகளுடன் வகுப்பு அமோகமாக நடக்கும். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இப்படியான பேராசிரியர்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

 

சரி… இந்தக் குறைகளை நீக்குவதற்கு என்ன செய்யலாம் என்றால் என்னுடைய முதல் பதில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதே. இலங்கை சட்டத்தின் படி இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க முடியாது. அமைத்தால் அது சட்டப்படிக் குற்றமாகும்.

 

ஆனாலும் சாதாரண வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஏஜென்டுகள் சிலர் இங்கே இருக்கின்றார்கள். அவர்களிடம் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் படித்துவிட்டு மிகுதியை வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் சென்று படிக்கலாம். இவ்வாறு இலங்கையின் அந்நியச் செலாவணி அழிக்கப்படுகின்றது.

 

ஜே.வி.பி போன்ற கட்சிகளும், அவர்கள் பின்னால் இயங்கும் மாணவர்கள் அமைப்புகளும் தனியார் பல்கலைக்கழகங்களை கடுமையாக எதிர்க்கின்றன. சில வருடங்களுக்கு முன்னர் அரசு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுக்க முனைந்தபோது அதை பெரிய விடயமாக்கி அதில் குளிர் காய்ந்தன இந்த தூர நோக்கற்ற சுயநலவாத அரசியல் கட்சிகள்.

 

பணம் உள்ளவர்கள் தம் பணத்தை செலவழித்து இந்தியா, மலேசியா, ரசியா, பிருத்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தம் உயர்கல்வியைக் கற்கின்றனர். இதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணி இழக்கபபடுகின்றது. இது இந்த நபர்களுக்கு உறைக்கவில்லை. இலங்கையில் தனியார் உயர்கல்விக் கூடங்கள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அது பற்றி இந்த மேல் தட்டு வர்க்கம் அலட்டப் போவதில்லை. அவர்கள் பெருமளவு பணத்தை முதலிட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தம் உயர்கல்வியை முடித்துவிடுவர்.

 

இலங்கையில் தனியார் கல்லூரிகள் இருக்குமானால் இந்த பணத்தை சேமித்து இலங்கை நாட்னின் அபிவிருத்திக்கே பயன்படுத்த முடியும். ஆனால் இதெல்லாம் எங்கே இவர்களுக்கு உறைக்கப்போகின்றது.

 

இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனியார் கல்லூரிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எந்தளவு பங்காற்றின பங்காற்றுகின்றன என்பதை நாம் கண்கூடாகக் காணுகின்றோம். இன்று இலங்கையும் தனியார் கல்லூரிகள் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகம் ஒரு பாதையில் போகும் போது இலங்கை மட்டும் தன் பாதையில் குருட்டுத் தனமாக நகர்வது கவலை தரும்விடயமே.

 

இவற்றைச் சிந்தித்து நடைமுறைப்படுத்த நல்ல தூரநோக்குள்ள தலைவர்கள் நாட்டுக்கு வரவேண்டும். இலங்கையில் இலவசக் கல்வியின் தந்தையாரான கன்னங்கரா உண்மையில் ஒரு தூரநோக்குடையவர் அவரால்தான் நாட்டின் கல்வியறிவு வீதம் 90 விழுக்காடாக உள்ளது. இவர்போன்ற ஒரு நபர் மீண்டும் இலங்கை வரலாற்றில் பிறந்து வந்தால் தவிர இலங்கை உயர்கல்வித் துறை வெறும் குப்பையாகப் போவதை யாராலும் தடுக்க முடியாது.

கொழும்பில் குண்டு வெடிப்பு

இன்று கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. குண்டு இராணுவத்தினர் சென்ற ஒரு பஸ் வண்டியை இலக்கு வைத்துத் தாக்கப்பட்டுள்ளது. இதில் 6 நபர்கள் காயம் அடைந்ததாகவும் அதில் இருவர் பொதுமக்கள் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.

குண்டு எங்கே வெடித்தது என்று பார்த்தால் நான் அடிக்கடி சென்று வரும் பாதை. மாலுக்கடை பஸ் தரிப்பிடத்திற்கு அடுத்த தரிப்பிடத்திற்கு சற்றே முன்பாக வெடித்துள்ளது. அங்கு நிறையத் தமிழர்கள் குறிப்பாக வேலைதேடி தம் சொந்த இடம் விட்டு வந்த தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எல்லாருக்கும் இனி ஆப்புத்தான்..

கொழும்பு மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத பிரதேசமாக மாறப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நினைக்கின்றேன். இதற்குப் பதில் தாக்குதலாக இலங்கை அரச என்ன செய்யும் என்று யோசித்துப் பார்த்தேன் அனேகமாக வன்னிப் பகுதியில் அவர்களில் மிக், புக்காரா விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிவார்கள் என்பதே என் சிந்தனை.

இதே வேளை புலிகளி்ன் கடற்படைப் பிரிவு நெடுந்தீவு கடற்படைத் தளத்தை தாக்கி அழித்துள்ளதாகத் தெரிகின்றது. 34 கடற்படையினர் மரணம் அடைந்துள்ளதுடன் 4 புலிகளும் வீரச்சாவடைந்துள்ளதாகத் தமிழ் தளங்கள் தெரிவிக்கின்றன.

என்று முடியுமோ இந்த மனித அவலம். தமிழர்களில் பிரைச்சனைகளை அடிப்படைச் சிங்களவர் உணர்ந்து அதை சிங்கள அரசுக்கு உணர்த்தும் வரை இந்தப் பிரைச்சனை தீரப் போவதில்லை. சிங்களவர்களும் இதை உணரப் போவதும் இல்லை….

இலங்கை கிரிக்கட்

இந்தியாவைப் போலல்லாமல் இலங்கை அணி தாயகம் திரும்பியதும் பலமான வரவேற்பு வழங்கி கெளரவிக்கப்பட்டது. வெற்றியோ தோல்வியோ அவர்கள் கடைசிவரை போராடியமை இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது.

இங்கே டோனி வீட்டு சுவரை இடிப்பது போல ஜயசூர்யா வீட்டுச் சுவரை உடைப்பதில்லை, கங்குலி வீட்டுக்கு கல்லெறிவது போல முரளி வீட்டுக்கு கல்லெறிவதில்லை.

கீழே உள்ளது இலங்கை அணியைப் பாராட்டி பாத்தியா சத்துஸ் என்ற பாடகர்கள் பாடிய பாடலை போட்டுள்ளேன் பாருங்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடல் வருகின்றது!!!

71 : நாடு நல்ல நாடு (தொடர்வினை – Meme)

நாடு நல்ல நாடு என்ற தொடர்வினையில் அண்மையில் திரு.ரவி அவர்கள் என்னை அழைத்து இருந்தார். தமிழ் வலைப்பதிவு உலகம் தடம் மாறிச் செல்கின்றதோ என்று அனைவரும் கலங்கும் நேரத்தில் ரவி போன்ற அன்பர்கள் அதைப் பொய்ப்பித்து வருகின்றனர். அவர் அழைப்பை ஏற்று நான் இலங்கை பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன். இலங்கையில் இனப் பிரச்சனை போன்ற கசப்பான விடையங்களை இங்கே தவிர்த்து விடுவதாக முடிவெடுத்துள்ளேன். அது பற்றி பல பதிவுகள் இணையம் முழுவதும் இறைந்து கிடப்பதால் இந்தப் பதிவில் அது பற்றிய விடயங்களை நான் அவ்வளவாகத் தொடப்போவதில்லை. மேலும் இங்குள்ள விடயங்கள் பல கலைக்களஞ்சியத்தில் இல்லாத சுவையான தகவல்களாக இருக்கும் என்று நம்புகின்றேன். சரி இனிப் பதிவிற்குப் போவோம்!!!!

இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என்று பலராலும் அறியப்பட்ட அழகிய நாடாகும். இலங்கை என்று தமிழில் வழங்கப்ட்டாலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் நாட்டின் பெயர் ஸ்ரீ லங்கா என்று வழங்கப்படுகின்றது. இதன் அர்த்தம் சுபீட்சமான எதிர்காலம் என்பதாகும். ஆயினும் இவ்வாறு பெயர் மாற்றிய காலத்தில் இருந்து நாட்டின் எதிர்காலம் மிகவும் மோசமாகிப் போனது.

இந்த நாட்டின் தலைநகரமாக கொழும்பு திகழ்கின்றது. அத்துடன் கொழும்பு மாநகரே நாட்டின் பெரிய நகரமாகவும் வர்த்தகத் தலை நகரமாகவும் திகழ்கின்றது. கொழும்பு நகரம் 15 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கொழும்பு 6 (வெள்ளவத்தை) மற்றும் கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை) ஆகிய இரு பகுதிகளிலும் தமிழர்களே அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். கொழும்பு நகரின் பெரும்பாண்மையான மக்கள் தமிழ் மொழி பேசுவோர் என்பதும், தற்போதைய உப மேயர் தமிழர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இலங்கையின் தேசிய கீதம் சிங்களத்தில் இருந்தாலும் தமிழிலும் அதன் மொழி பெயர்ப்பு இருக்கின்றது. அத்துடன் தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக அரச வைபவங்களில் பெரும்பாலும் தமிழிலேயே தேசிய கீதம் இசைக்கப்படும். நான் அறிந்த வரை இலங்கையில் மட்டுமே இரண்டு மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. உங்களுக்குத் தெரிந்த வேறு நாடு இருந்தால் இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள்.

இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதி எனும் போது நாட்டின் வடக்கு – கிழக்குப் பகுதி, மத்திய மலைநாட்டுப்பகுதி, கொழும்பு மற்றும் அதை அண்டிய புறநகர்ப் பகுதி என்பனவே. இதில் வடக்கு – கிழக்கு பகுதிகளில் தமிழர் அறுதிப் பெரும்பாண்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியையே இவர்கள் தமிழீழ மாநிலமாக்குமாறு வேண்டி வருகின்றனர். மத்திய மலை நாட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சில நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் ஆங்கிலேயரால் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்து வரப்பட்ட மக்களாவர், இன்று இவர்கள் நாடு முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் தற்போதும் தோட்டங்களில் பெரும்பாலானாவர்கள் அடிப்படை வசதி இன்றி அல்லல் பட்டே தமது வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

இலங்கை என்றால் அனைவரது எண்ணத்திலும் வருவது இலங்கைத் தேயிலை. இலங்கையின் மத்திய மலைநாட்டில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. சில ஆண்டுகள் முன்பு வரை தேயிலையே நாட்டுக்கு அதிகூடிய வருமானத்தை ஈட்டித் தரும் துறையாக இருந்தது. ஆயினும் தற்போது தைத்த ஆடைகள் பெருமளது லாபத்தை ஈட்டித்தருகின்றது.

நாட்டில் இரண்டு பிரதான இயற்கைத் துறைமுகங்கள் உள்ளன. முதலாவது காலி துறைமுகம். இது தென் மாகாணத்தின் தலைநகரில் அமைந்துள்ளது. இரண்டாவது திருகோணமலை துறைமுகம்.
இது முன்பு இணைந்து இருந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தின் தலைநகரில் உள்ளது. இந்த துறைமுகம் வலையத்தில் ஒரு பெரிய மற்றும், பாதுகாப்பான துறைமுகமாக இருந்து வருகின்றது. இதனால் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தத் துறைமுகத்தில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயல்கின்றன. சிங்கப்பூர் ஜப்பானியரிடம் வீழ்ந்த பின்பு இந்தத் துறைமுகமே றோயல் நேவியின் பிராந்தியத் தலமையகமாகச் செயற்பட்டது.

இயற்கை அழகிற்கு இலங்கை பெயர் போனது. அழகிய மலைகள் நிறைந்த மத்திய பகுதியும், மணற் கடற்கரை நிறைந்த கிழக்கு, தெற்குப் பகுதிகள் சுற்றுலாத்துறைக்கு உயிரூட்டுகின்றன. நாட்டின் தற்போதைய யுத்த சூழ்நிலையிலும் பல உல்லாசப் பயனிகள் நாடடைச் சுற்றிப் பார்க்க வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் 100 வீதம் இலவசமாகும். ஒருவர் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை அரச செலவில் கற்பிக்கப்படுகின்றார். அத்துடன் குறைந் வருமானம் உடைய பல்கலைக்கழக மாணவர்களின் பணத் தேவைக்கா 2500 ரூபா உதவிப்பணமும் வழங்கப்படுகின்றது. அத்துடன் நாடெங்கிலும் உள்ள அரச வைத்திய சாலைகளில் மருத்துவம் முற்றிலும் இலவசமாகும். ஆயினும் இவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக மேற்தட்டு வர்க்கத்தினர் தனியார் பாடசாலைகள், மருத்துவ மனை என்பவற்றை நாடுகின்றனர். ஆயினும் இதுவரை தனியார் கல்லூரிகள் அமைப்பதற்கு இலங்கையில் தடை நிலவிவருகின்றது.

நாட்டில் வாழ்ந்து வரும் முஸ்லீம்கள் பெரும்பாண்மையானவர்கள் தமிழைப் பேசக் கூடியவராகவோ அல்லது தாய்மொழியாகக் கொண்டவராகவோ காணப்படுகின்றனர் ஆயினும் இவர்கள் தமிழர்கள் என்று வகைப்படுத்தப்படுவதில்லை. நாட்டில் முஸ்லீம்கள் தனி ஒரு இனமாக கணிக்கப்பட்டு வருகின்றனர்.

நாட்டில் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. நாட்டிற்குள் வரவேண்டுமானால் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாகவே வரவேண்டிய தேவை உள்ளது. அத்துடன் வர்த்த நடவடிக்கைகளுக்காக கொழும்புத் துறைமுகமே பயன்படுகின்றது.

சரி இனி மெமெ கொள்கையின் படி யாரையாவது நான் அழைக்க வேண்டும். யாரை நான் அழைப்பது என்றே புரியவில்லை!!!!. எது எவ்வாறாயினும் ரவி அவர்களின் வேண்டுகோளினை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைக்கின்றேன்.

நீங்கள் உங்கள் நாடு பற்றி எழுத விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவித்து விட்டு எழுதுங்கள்…!!!!