கூகிளின் புதிய படைப்புகள்

மைக்ரோசாப்ட் அப்பிளைத் தொடர்ந்து இந்த வருடம் கூகிளினது 5ம் கூகிள் ஐ/ஓ (Google I/O) நடைபெறத் தொடங்கயுள்ளது. நேற்றைய பிரதான உரையின் போது கூகிளின் புதிய படைப்புகள் அறிமுகப் படுத்தப்பட்டது.

கூகிள் ஐஓ இலச்சனை

வழமைபோல இம்முறையும் அன்ரொயிட்டின் சாதனைகளை கூறியே கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வருடம் நடந்த கருத்தரங்கில் சுமார் 100 மில்லியன் அன்ரொயிட் கருவிகள் பாவனையில் உள்ளதாக அறிவித்தது கூகிள். இம்முறை இந்த எண்ணிக்கை 400 மில்லியனாக அதிகரித்து விட்டதாகவும் அறியத்தருகின்றது. அத்துடன் ஒரு நாளைக்கு 1 மில்லியன் அன்ரொயிட் கருவிகள் உயிரூட்டப்படுவதாகவும் அறிவித்தது கூகிள். இந்தியா பிரேசில் போன்ற நாடுகளில் இந்த வளர்ச்சி வீதம் 500% மாக இருப்பதாகவும் இந்தக் கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது.

ஜெலி பீன் அன்ரொயிட் 4.1

இந்தக் கருத்தரங்கில் அன்ரொயிட்டின் புதிய இயங்குதளமான ஜெலி பீன் (jelly bean) அறிமுகம் செய்யப்பட்டது. அன்ரொயிட்டின் முன்னைய இயங்குதளமான ஐஸ்கிரீம் சான்விச்சின் மேல் சில மாற்றங்களை செய்து வழு வழுப்பாக இயங்கக்கூடி இந்த ஜெலி பீன் இயங்கு தளத்தை அமைத்ததாக கூகிள் அறிவித்தது. இந்த மாற்றங்களை “புரஜக்ட் பட்டர் (Project Butter)” என்று அறிவிக்கப்படுகின்றது.

அப்பிளினால் ஐபோன் 4எஸ் இல் பரபரப்பாக பேச வைக்கப்பட்ட சிறிக்குப் போட்டியாக கூகிளின் வொய்ஸ் அக்சன் களம் இறக்கப்பட்டுள்ளது இந்த புதிய இயங்கு தளத்தில். இணைய இணைப்பு இல்லாமலேயே ஒலி மூலம் கட்டளைகளை வழங்கவும், தட்டச்சிடவும் முடியும். இதில் முக்கியமான இந்திய பயனர்களைப் பரவசப்படுத்தக் கூடிய செய்தி என்னவெனில் ஹிந்தி மொழியில் ஒலி மூலம் தட்டச்சிடும் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளமையாகும். மேலும் பல மொழிகள் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் போன்ற மொழிகளும் விரைவில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

மேலும் கன்னடா, மலையாளம் போன்ற இந்திய மொழிகளுக்கான ஆதரவும் இந்த ஜெலி பீனில் வழங்கப்பட்டுள்ளது.

நெக்சஸ் தொடு பலகை

அடுத்து கூகிள் நெக்சஸ் 7 (Nexus 7) எனும் டாப்லட் பீசி அல்லது பலகைக் கணனி என்று அழைக்கப்படும் கருவியை வெளியிட்டு வைத்தது. இது அமசொன் சில காலங்களுக்கு முன்னர் வெளியிட்ட கின்டில் பயர் (Kindle Fire) என்ற பலகை கணனிக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. திரைப்படங்கள், இசை, புத்தகங்கள் போன்றவற்றை இந்த கருவியில் போகுமிடமெங்கும் எடுத்துச் சென்று பயனுறலாம்.

கவர்ச்சியான நெக்சஸ் கியூ இசைக் கருவி

இதைவிட் நெக்சஸ் கியூ (Nexus Q) எனும் இசை கருவியையும் கூகிள் வெளியிட்டு வைத்தது. இதன் மூலம் கூகிளின் முகிலத்தில்(Cloud) இருக்கும் இசைக் கோர்வைகளை நீங்கள் செல்லும் இடத்தில் எல்லாம் சிரீம் செய்து கேட்டுக் கொள்ளலாம். இந்ததக் கருவி முற்று முழுதாக அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் சீனாவில் செய்யப்பட்ட பொருட்கள் போல குறைந்த விலையில் கிடைக்காது. மாறாக $300 பெறுமதியில் சந்தையில் கிடைக்கும்.

கூகிள் கிளாஸ் அணிந்த அணங்கு

இறுதியாக மென்பொருள் கலைஞர் கருத்தரங்கை ஆட்டுவித்த பொருள்தான் கூகிள் மூக்குக்கண்ணாடி. கூகிளினால் இது புரஜக்ட் கிளாஸ் (Proejct Glass) என்று பெயரிடப்பட்டுள்ளது. விமானத்தில் பறந்த வந்த வான் குதிப்பர்கள் (Sky Divers) இந்தக் கண்ணாடி அணிந்த வாறு விமானத்தில் இருந்து குதித்து அதை நேரடியாக படமாக கூகிள் திரையில் காட்டினார்கள். இதைவிட நேரடியாகப் படம் எடுத்தல் போன்ற செயற்பாடுகளை இதன் மூலம் செய்யக்கூடியதாக உள்ளது.

மேலே உள்ள காணொளி மூலம் எவவாறு இதைச் செய்கின்றார்கள் என்று பார்க்கலாம். ஆயினும் இந்தக் கண்ணாடி எப்போது சந்தையில் கிடைக்கும் என்பது பற்றி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

வழமை போல கூகிளின் மென்பெருள் வல்லுனர் கருத்தரங்கு அட்டகாசமாக ஆரம்பித்துள்ளது. இனி வரும் நாட்களில் இது சம்பந்தமாக மேலும் செய்திகள் வெளியாகும்.

One thought on “கூகிளின் புதிய படைப்புகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.