என் பெயர் லார்க்கோ வின்ஞ்

நேற்றைய தினம் வழமைபோல கதிரேசன் கோவில் சென்று திரும்பும் வழியில் பக்கத்தில் இருந்த பழக்கடை வாசலில் இங்கே லயன், முத்து காமிக்ஸ் கிடைக்கும் என்ற பள பள அட்டை தொங்கிக்கொண்டு இருந்தது. இதற்கு முன்னர் செல்லும் நேரம் எல்லாம் புத்தகம் முடிந்துவிட்டது இன்னும் இந்தியாவில் இருந்து வரவில்லை போன்ற சலிப்பான பதில்களே கிடைக்கும். நானும் வெறுத்துப் போய் வழமை போல ஆங்கில கொமிக்ஸ் புத்தகங்களை விஜித யாபா புத்தகசாலையில் வாங்கி படித்துக் கொள்ளுவேன்.

தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள்

நேற்று இந்த புத்தகம் உள்ளது அறிவிப்பைக் கண்டதும் சந்தோசமாகச் சென்று இரண்டு புத்தகங்களை கையகப்படுத்திக் கொண்டேன்.

  1. சாத்தானின் தூதன் டாக்டர் 7
  2. என் பெயர் லார்க்கோமுன்னையது லயன் காமிக்ஸ் பின்னையது முத்து காமிக்ஸ். சாத்தானின் தூதன் புத்தகம் பற்றி முதலில் பார்த்துவிடலாம் வழமையான சாணித் தாள் போன்ற அமைப்புடைய பக்கங்களில் அச்சிடப்பட்ட சுமார் இரகக் கதை. இரண்டாவதாக வந்துள்ள கன்னித் தீவில் ஒரு காரிகை என்ற கதை புதையலைப் பூதம் காக்கும் கதையொன்று. ஒப்பீட்டளவில் டாக்டர் 7 கதையை விட இந்தக் கதை அருமையாக இருந்தது என்பது அடியேனின் கருத்து. இலங்கை ரூபா 65 க்கு இந்தப்புத்தகம் இலங்கையில் கிடைக்கின்றது.

இரண்டாவது புத்தகம் என் பெயர் லார்க்கோ என்பது. Surprise Special என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம் Surprise indeed. புத்தகத்தின் தரம், அச்சின் தரம் என்பவை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வைத்தன. சிறப்பான அச்சு, பக்கத்துடன் வந்துள்ள புத்தகத்தின் கதை மொக்கையாக இருக்கக்கூடாதே என்று வேண்டிக்கொண்டே வாசிக்கத் தொடங்கியதும் மனதுக்கு நிம்மதி. லார்க்கோ புதிதாக தமிழிற்கு வந்திருக்கின்றார் நிச்சயமாக ஒரு பெரிய வலம் வருவார் என்று தெரிகின்றது.

சித்திரங்களின் நேர்த்தியும் கதையில் அடிக்கடி நிகழும் அதிரடிகளும் லார்க்கோவை தமிழில் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன். இதே தரத்தில் தொடர்ந்தும் பல புத்தகங்கள் வர வேண்டும் என்பது அடியேனின் விருப்பம். இந்தப் புத்தகத்தில் 1986 இல் வெளியான திகில் காமிக்ஸ் மறுபதிப்பு இரண்டாம் பாகமாக இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறு சிறு அனுமாஷ்ய கதைகள் இணைக்கப்பட்டுள்ளது. திகில் காமிக்ஸ் வாசிக்கும் போது ஏதோ 20 வயது குறைந்திட்ட மாதிரி ஒரு உணர்வு. இலங்கை ரூபா 435 க்கு இந்தப் புத்தகம் கிடைக்கின்றது.

இலங்கையில் இருக்கும் நண்பர்கள் கதிரேசன் கோவிலிற்குப் பக்கத்தில் இருக்கும் பழக்கடையில், வெள்ளவத்தை HSBC வங்கியிலிருந்து வெள்ளவத்தை சந்தி நோக்கி நடக்கும் போது கடற்கரைப்பக்கம் அமைந்திருக்கும் DOT MUSIC மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பஸ் தரிப்பிடத்திற்கு பின்னால் இருக்கும் சிறிய பத்திரிகைக் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்.

கொழும்பில் இல்லாத கொமிக்ஸ் இரசிகர்கள் கோகுலம் வாசகர் வட்டத்தை 077-5143907, kogulamrc@gmail என்ன முகவரியினூடு தொடர்புகொண்டு புத்தகங்களை தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் காமிக்ஸ் புத்தகங்கள் குதிரைக் கொம்பாக இருந்த காலம் மாறி பரந்தளவில் கிடைக்கச் செய்யும் கோகுலம் வாசகர் வட்டத்திற்கு மிக்க நன்றிகள்.

இன்று மாலை சென்று தலைவாங்கிக் குரங்கு வாங்க இருக்கின்றேன். இதைவிட கம்பக் ஸ்பெஷல் இந்தியாவில் இருந்து வருவித்துத்தர முடியுமா என்று கோகுலம் வா.வ கேட்டுள்ளேன் பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

Leave a Reply