சீனாவின் மடியில் தலை சாய்க்கும் இலங்கை

இலங்கை தற்போது சீனாவிடம் பெரும் கடனை வாங்கிவிட்டு அடைக்க வழிதெரியாமல் மீளவும் சீனாவிடமே கடன் வாங்கி விழி பிதுங்கி நிற்கின்றது. குறிப்பாக முன்னாள் அதிபர் இராஜபக்‌ஷ காலத்தில் பெரும் கடன்களை அவர் சீனாவிடம் இருந்து பெற்று இலங்கையின் உள்கட்டுமானத்தை விரிவாக்க முயன்றார். இதன் மூலம் துறைமுகங்கள், வான் ஊர்தி தளங்கள், அதிவேக சாலைகள், நிலக்கரி மின் பிறப்பாக்கி நிலையம் என்று பல கட்டுமானப் பணிகள் விறு வெறு வென நடக்கத் தொடங்கின. சுமார் $5 பில்லியன் பெறுமதியான கடன் இக்காலத்தின் போது இலங்கை சீனாவிடம் இருந்து பெற்றுக் கொண்டது.

இலங்கையின் மொத்த கடனில் சீனாவிடம் வாங்கிய கடன் சுமார் 10% மட்டுமே. ஆனாலும் சீனாவின் கடன்களுக்கான வட்டி வீதம் மிகவும் அதிகமானது. அண்ணளவாக சீன கடன்கள் சுமார் 6.3% வட்டி வீதத்தில் வழங்கப்படுகின்றது. இதே வேளை ஆசிய அபிவிருத்தி வங்கி தனது கடன்களை சுமார் 0.25% – 3% இடைப்பட்ட வட்டி வீதத்திலேயே வழங்குகின்றது. மேலும் இலங்கைக்காக இந்தியா சுமார் 1% என்ற வட்டி வீதத்திலேயே கடன்களை வழங்குகின்றது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) சுமார் 77% கடன் செலுத்தவே முடிந்துவிடுகின்றது. பாக்கிஸ்தான், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கூட இவ்வளவு கடன்சுமை கிடையாது. மொத்தமாக $55 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடனாக இப்போது இலங்கை செலுத்த வேண்டியுள்ளது என்று கணிக்கபட்டுள்ளது. இது குறையும் என்றே தெரியவில்லை. நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இது மெல்ல மெல்ல கூடிக் கொண்டே செல்கின்றது.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், வானூர்தி நிலையம்

இலங்கையின் முன்னாள் அதிபர் இராஜபக்‌ஷ காலத்தில் தென் இலங்கையில் ஹம்பாந்தோட்டை எனும் இடத்தில் சீனா ஒரு துறைமுகத்தையும், வான் ஊர்தி தளத்தையும் அமைத்தது. ஹம்பாந்தோட்டை இலங்கை அதிபர் இராஜபக்‌ஷவின் சொந்த ஊர் என்பதை இங்கே சொல்ல வேண்டும்.

மத்தளை வானூர்தி நிலையம்

இவை அமைக்கப்பட்ட பின்னர், இவை வணிக ரீதியில் இலாபம் ஈட்டவேயில்லை. இந்த இரண்டு முன்னெடுப்புகள் வெறும் வெள்ளை யானையாகி இலங்கை அரசிற்கு வெறும் வெட்டிச் செலவாக மாறியது. இவற்றை அமைக்க சீனா பெரும் கடன் வசதிகளை அரசிற்கு வழங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பில்லியன் அளவில் செலவு செய்து கட்டிய வானூர்தி நிலையத்திற்கு விமானங்களே வருவதில்லை என்றால் எவ்வளவு நகைப்பிற்கான விடயம் என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு நாளைக்கு ஒரு விமானம் வந்தாலே பெரும் விடயமாக உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு விமானம் வரும் வானூர்தி நிலையம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

துறை முகத்தை அமைக்க மட்டும் சுமார் $1.5 பில்லியன் செலவாகியது (Indiatimes.com, 2018). வெளிநாட்டு அரசொன்று இலங்கையில் முதலீடு செய்த அதிகமான தொகை இதுவென்பதும் குறிப்பிடத் தக்கது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம்

2015இல் இராஜபக்‌ஷ அரசு தோல்வியுற்று ரணில் விக்ரமசிங்க, மைத்ரிபால சிரிசேன தலமையிலான அரசு பதிவியேற்றது. கடும் சுமையில் இருந்த இலங்கை அரசின் கடன் சுமையைக் குறைக்க, 2017 இல் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் சுமார் 99 ஆண்டுகள் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் $1.5 பில்லியன் கடனில் சுமார் $1.1 பில்லியன் கடனை சீனா மீளப் பெற்றுக் கொண்டது. ஆக, வெறும் $0.4 பில்லியன் மட்டுமே இலங்கை மீளச் செலுத்த வேண்டும்.

துறைமுக நகரம் (தென் ஆசியாவின் வியாபார மையம்)

கொழும்புத் துறைமுக நகரம் வழமை போல முன்னாள் அதிபர் மகிந்த இராஜபக்‌ஷ காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயற்றிட்டமாகும். எத்தனை நாட்கள்தான் சின்ன சின்ன செயற்றிட்டமாகவே செய்வது என்றெண்ணி ஆரம்பித்த திட்டமாக இருக்க வேண்டும். 2014 அளவில் ஆரம்பிக்கபட்ட இந்த செயற்றிட்டத்தின் படி கொழும்புத் துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டு ஒரு துறைமுக நகரம் அமைக்கப்படும். அந்த நகரின் சிறப்பு என்னவென்றால், இந்த நகரம் இன்று கடலாக இருக்கும் பகுதியில் மண்ணை நிரப்பி அதில் அமைக்கப் படுவதே. இதன் மூலம் 2.33 சதுரக் கிலோமீட்டர் அளவான நிலப்பரப்பு கடலில் இருந்து மீள நிலத்துடன் இணைக்கப்படும்.

எல்லாம் சரி ஆனால் இதில் ஒரு இடக்கு முடக்கான விடயமும் உள்ளது. இவ்வாறு கடலை நிரப்பி அமைக்கப்படும் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட அரைப் பகுதி சீனாவிற்கு உரியதாக கையளிக்கப்படும். இதையறிந்ததும் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மிகவுமே கடுப்பாகிப் போயின.

2015 இல் அதிபர் இராஜபக்‌ஷ தோல்வியடைந்து ரணில், மைத்திரி அரசு பதவிக்கு வந்து இரண்டு மாதங்களில் (மார்ச் 2015), இந்தச் செயற்றிட்டதை இடை நிறுத்தி வைத்தனர். செயற்றிட்டத்தை ஆரம்பித்த விதம், நடத்திய விதம், சூழல் தாக்கங்கள் போன்றவற்றில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இந்தச் செய்றிட்டத்தை தற்காலிகமாக முடக்கினர்.

ஆனால் சீனத்து ட்ராகனின் முன்னால் சிறு பல்லி போன்ற சிறிய நாடு இலங்கையினால் ஒன்றும் செய்ய முடியாது. சிறிது நாட்களில் வாலை ஆட்டியவாறே இலங்கையினால் செயற்றிட்டம் மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது (Gbtimescom, 2019). இந்த செயற்றிட்டம் முடிந்தால் சுமார் $14 பில்லியன் அளவான முதலீடு இலங்கைக்கு கிடைப்பதுடன் 100,000 க்கும் அதிகமான இலங்கையரிற்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கட்டுரை எழுதும் போது (2019 பெப்ரவாரி) துறைமுக நகரத்தின் முதற் பகுதி வேலைகள் முடிவடைந்துள்ளன. அதாவது கடலில் மண் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளது, இனி மீதிக் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடன் மேல் கடன்

அந்நியன் படத்தில் சார்லி சொல்லுவார், “ரெஸ்ட் எடுத்து களைத்துப் போய் மீளவும் ரெஸ்ட் எடுக்கின்றேன்” என்று. அதைப் போலத்தான் கடன் வேண்டி வேண்டி அதைக் கட்ட மீளவும் கடன் வாங்கியவனிடமே மீளவும் கடன் வாங்கும் கதையாகிவிட்டது இலங்கையின் நிலமை. 2018இன் இறுதியில் சுமார் $1 பில்லியன் கடனை சீனாவின் மக்கள் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்றுக் கொண்டது. இதற்கு முன்னர் 2017, IMF இடம் இருந்து ஏலவே ஒரு $1 பில்லியன் கடனை இலங்கை வாங்கிக் கொண்டதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

தற்போது மீட்டர் வட்டிக்கு கடன் எடுத்தவன் நிலையில் இலங்கை கடன்களை சமாளிக்கத் திணறுகின்றது. தன்னை மீறிய நிலையில் EMI மூலம் பொருட்களை வாங்கும் எம்மைப் போன்ற பலரின் நிலையில்தான் தற்பொது இலங்கை உள்ளது.

இந்தியாவின் கவலை

இந்தியாவிற்கு மிக அருகில் வந்துவிட்ட சீனாவின் காரியத்தை இந்தியாவால் சீரணிக்க முடியவேயில்லை. இது பற்றி இலங்கை அரசிற்கும் இந்தியா தனது விசனத்தை அறிவித்ததாகக் கூறப்பட்டது. ஒரு தடவை சீனாவின் உளவுக் கப்பல் ஒன்றை இந்திய கடற்படை துரத்திச் செல்லவே அது கொழும்புத் துறைமுகத்தினுள் சென்று மறைந்து விட்டது என்றும் அரசல் புரசலான கதைகள் உலாவின (Ndtvcom, 2019).

சீனாவைத் தனது எல்லையின் ஒரத்திற்கே கூட்டி வந்த காரணத்தினாலேயே இந்தியா இராஜபக்‌ஷவை ஆட்சியில் இருந்து தூக்கிவிட்டதாக இராஜபக்சவே பொதுவில் குற்றம்சாட்டியிருந்தமையையும் இங்கே குறிப்பிட வேண்டும் (Indiatodayin, 2015). ஆயினும் இந்தியா இந்தக் குற்றச்சாட்டை அடியோடு அப்போது மறுத்து விட்டிருந்தது.

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள்

இந்திய அரசை சமாதானம் செய்ய இலங்கை அரசு உடனடியாக திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு வழங்க முன்வந்தது (Dailymirrorlk, 2019). ஆயினும் இந்த முயற்சி எந்தளவிற்கு வெற்றியடையும் என்று இப்போது சொல்ல முடியாது.

சீனாவின் மறுப்பு

சீனா தொடர்ந்து கடன் சுமை மூலம் இலங்கையின் போக்கை மாற்றியமைக்க முயல்கின்றது என்ற கூற்றை மறுத்து வருகின்றது. இலங்கையின் மொத்தக் கடன் தொகையில் சுமார் 10 வீதம் வரையே சீனா வழங்கிய கடன் உள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்கட்டுமானத்தை மீள அமைக்க முடியாமல் திணறிய இலங்கைக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தாம் உதவி செய்ததாகவும் சீனாவின் இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளர் லுவோ சொங் தெரிவித்தார் (Www.ft.lk, 2019).

மேலும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கை அரசின் பொறுப்பிலேயே உள்ளது ஆகவே இங்கிருந்து நாங்கள் இராணுவ நடவடிக்கைகளைச் செய்வோம் என்பது வெறும் பொய்யான கூற்று என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் வருமானம் இங்கை அரசுடனும் பகிரப்படும் என்றும் அறிவித்தார்.

 சீனாவின் கறுப்புப் பக்கம்

சீனாவின் பட்டுப் பாதை பற்றி நீங்கள் பள்ளிக் காலத்தில் படித்திருக்கலாம். பட்டுத் துணி தயாரிக்கும் முறையை பல நூற்றாண்டுகளாக சீனா இரகசியமாகப் பேணி வந்தது. பட்டுத் துணிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு மத்திய ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா வரை எடுத்துச் செல்லப் பட்ட பாதையே பின்னாளில் பட்டுப் பாதை என்று அழைக்கப்பட்டது. கடல் மூலம் எடுத்துச் செல்லும் பாதையும் உள்ளது அதைப் போல நிலம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட பாதையும் உள்ளது. இந்தப் பாதைகளினூடாக தனது பழைய போக்கு வரத்தை நிலைப்படுத்த சீனா தற்பொது முயன்று வருகின்றது. இதைச் சீனா “Belt and Road Initiative” (பெல்ட் அன் ரோட் இனிஷியேட்டிவ்) என்று அழைக்கின்றது.

இதன்படி பணத்தை வாரி இறைத்து பல நாடுகளைத் தன் வலையில் சீனா வீழ்த்தி வருகின்றது. இலங்கையைத் தவிர, டிஜிபோட்டி, டஜிகிஸ்தான், கிரிக்கிஸ்தான், லாவோஸ், மாலை தீவுகள், மொங்கோலியா, பாக்கிஸ்தான் மற்றும் மொன்டநீக்ரோ போன்ற நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கடன் சுமை சீனாவிடம் வாங்கிய அதிக வட்டிக் கடன்களினால் உயர்ந்து நிற்கின்றது (Qzcom, 2019). குறிப்பாக அதிக வட்டியுடன் கூடிய கடன் மற்றும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய உள்ளூர் அரசியல் வாதிகளுக்கு சலுகை, உள் குத்து நிறைந்த உடன்படிக்கைகள் என்று சீனாவின் திருகுதாளங்களை ஒரு பக்கம் நீட்டிக் கொண்டே செல்லலாம். இலங்கையைப் போல கடனைத் திருப்பித் தர முடியாமல் துறைமுகத்தைச் சீனாவிடம் குத்தகைக்கு விட்ட ஆபிரிக்க நாடும் உள்ளது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

இதைவிட சீனாவின் செயற்றிட்டங்களில் பெரும்பாலும் தொழிலாளர்கள் சீனாவில் இருந்தே கொண்டுவரப்படுவர். இதன் காரணமாக இலங்கையில் பெருமளவிலான சீனர்களை நீங்கள் காண முடியும். கொழும்பின் சில பகுதிகளில் (குறிப்பாக கொள்ளுப்பிட்டி) தனி சீன மொழியில் பெயர் எழுதப்பட்ட கடைகளைக் கூடக் காணலாம். மேலும் சினிமாக்களில் சீனத் திரைப்படங்களைக் இரவு நேரச் சிறப்புக் காட்சியாக இவர்களுக்காக காட்டுவதையும் காணலாம். இந்தச் சமூக மாற்றத்தால் உள்ளூர் மொழிகள் புறக்கணிக்கப்படுவது மட்டுமல்ல, உள்ளூர் வாசிகளின் வேலை வாய்ப்புகளும் தட்டிப் பறிக்கப்படுகின்றன.

ஏலவே சில வணிகப் பொருட்களில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு சீன மொழியினைச் சேர்த்துவிட்டனர். பொன்டேரா நிறுவனத்தின் அங்கர் பட்டர் கூட இவ்வாறு சீனத்தைச் சேர்த்து தமிழைப் புறக்கணித்து விட்டனர் (Colombogazettecom, 2018).

தமிழ் புறக்கணிப்பு

சீனர்களும் தம் பாட்டிற்கு செயற்றிட்ட அறிவிப்பு பலகையில் தனிச் சீனம், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் பொறித்து விடுகின்றார்கள். ஏற்கனவே அடிபட்டு தவிக்கும் தமிழ் மொழிக்கு இவர்கள் இங்கே மேலும் சமாதி கட்டும் வேலையைச் சிறப்பாகச் செய்கின்றார்கள்.

முடிவுரை

எது என்னவாயினும் இங்கை இப்போது பெரும் கடன் சுமையில் உள்ளது. உலகில் உள்ள பலவீனமான பொருளாதாரங்களில் இலங்கையும் பட்டியல் இடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ள இலங்கையில் சர்வதேச சக்திகள் தமது கைவரிசையைக் காட்ட முயல்வது சாதாரணமானது. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இதைத்தான் உலக வல்லரசுகள் செய்துள்ளன. பலவீனமான நாடுகளை நன்றாக ஆட்டுவித்து மேலும் பலவீனமாக்கி தமது கைங்காரியங்களை நிறவேற்றுவதைத்தான் அவர்கள் காலம் காலமாகச் செய்துள்ளார்கள்.

குறிப்பாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவு இலங்கை பால் உலக வல்லரசுகளுக்கு விருப்பை ஏற்படுத்தும் காரணியாகும். குறிப்பாக இலங்கையின் திருகோணமலை, கொழும்பு, பருத்தித்துறை போன்ற துறைமுகளங்களை கையில் எடுத்துவிட்டால் தெற்காசியாவின் கடல் வழிப் போக்குவரத்தை முற்றிலுமாகக் கையில் வைத்திருக்கலாம். சீனாவின் பிரசன்னம் இப்போது இலங்கையில் யாராலும் தடுக்க முடியாத ஒரு பாரிய சத்தியாக உருவெடுத்திருக்கின்றது. இன்னும் ஒரு 20 முதல் 30 ஆண்டுகளினுள் சீனர்கள் இலங்கையை முழுக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மகிந்த இராஜபக்ஷவின் கட்சி பெரும் வெற்றியீட்டியது. 2020 இல் மகிந்த இராஜபக்‌ஷ அதிபர் பதவிக்கு மீளவும் போட்டியிட முடியாத வாறு மீளவும் அரசியல் யாப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் மகிந்தவின் தம்பிகளில் ஒருவர் மகிந்த சார்பாக போட்டியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. மகிந்தவின் குழு மீளவும் ஆட்சிக்கு வந்தால், கட்டுப்பாடில்லாமல் சீனா இலங்கையில் உலா வரும்.

2015 இல் மகிந்த இராஷபக்‌ஷவை மீள அதிபராக்க சீனா பல மில்லியன் டாலர்களைச் செலவு செய்தது. இம்முறை மீளவும் அதையே செய்யும் அதற்கு காரணம் ரணில் அரசு அமெரிக்க, இந்திய சார்பான அரசென்ற கொள்கையையே சீனா கொண்டுள்ளது. சீனா இலங்கையில் கால் ஊன்றினால் நீண்ட காலத்து நோக்கில் இந்தியாவின் கடலாதிக்கத்தை இது மிகவும் மோசமாகப் பாதிக்கும் அத்துடன் அமெரிக்காவும் தனது செல்வாக்கை தெற்காசியாவில் மெல்ல மெல்ல இழக்கும்.

உசாத்துணை

  • Indiatimes.com. 2018. The Economic Times. Online. 17 February 2019. Available from: https://economictimes.indiatimes.com/news/international/world-news/new-chinese-loan-may-further-plunge-sri-lanka-into-debt-trap/articleshow/65659719.cms
  • Dailymirrorlk. 2019. Dailymirrorlk. Online. 17 February 2019. Available from: http://www.dailymirror.lk/article/Govt-planning-to-hand-over-Trinco-oil-farm-to-India-Anura-155849.html
  • Indiatodayin. 2015. India Today. Online. 17 February 2019. Available from: https://www.indiatoday.in/world/story/sri-lanka-president-mahinda-rajapaksa-blames-india-raw-for-his-election-defeat-244216-2015-03-13
  • Ndtvcom. 2019. NDTVcom. Online. 17 February 2019. Available from: https://www.ndtv.com/india-news/china-ship-with-22-labs-spied-on-india-466101
  • Www.ft.lk. 2019. Wwwftlk. Online. 17 February 2019. Available from: http://www.ft.lk/front-page/No-debt-trap–China-says-its-loans-are-10-6–of-SL-s-total-and-over-60–concessionary/44-658460
  • Gbtimescom. 2019. Gbtimescom. Online. 17 February 2019. Available from: https://gbtimes.com/sri-lanka-resumes-14bn-port-city-project
  • Qzcom. 2019. Quartz. Online. 17 February 2019. Available from: https://qz.com/1223768/china-debt-trap-these-eight-countries-are-in-danger-of-debt-overloads-from-chinas-belt-and-road-plans/
  • Colombogazettecom. 2018. Colombo Gazette. Online. 17 February 2019. Available from: http://colombogazette.com/2018/09/08/fonterra-defends-having-chinese-and-not-tamil-on-anchor-butter-packs/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.