Category Archives: பொது

உலகம் 2012 இல்…

புது வருடத்தில் ஆரம்பத்தில் செய்யும் காரியங்களைத் தொடர்ந்தும் செய்வோம் என்பது ஐதீகம். அதனால் இன்று சனவரி முதலாம் திகதி ஒரு பதிவை இட்டுவிடுகின்றேன்.

புது வருடம் 2013

new year

இந்தப் பதிவை வாசிக்கும் அனைவரிற்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். மாயன் பெயரைச் சொல்லி இந்த வருடமே பிறக்காது என்று ஆரூடம் கூறிப் பலர் பிழைப்பு நடத்தி பேஸ்புக், ட்விட்டர் என்று ஸ்டேடஸ் மேல் ஸ்டேடஸ் போட்டு எங்களைப் பாடாகப் படுத்தினர். ஸ்பானிஸ் காரன் போய் ஒரு நாகரீகத்தையே அழித்துவிட அதன் எச்சகங்களில் இருந்து கிடைத்த தகவல்களை வைத்து உலகம் அழிந்துவிடும் என்று விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படாத தகவல்களைப் பரப்பிய அனைவரிற்கும் 2013 நல்ல செருப்படி கொடுத்திருக்கின்றது. ஆனாலும் பாருங்கள் 2013க்கு ஆயுசு கெட்டி. புதிய வருடத்தில் காற்றடம் பதித்து விட்டது. அனைத்து தடைகள், ஏளனங்கள் மற்றும் மிகைப்படுத்தல்களைத் தாண்டி இனிமையாகப் பிறந்த புத்தாண்டிற்குத்தான் நாம் வாழ்த்துக்கூற வேண்டும்.

2012 இல்…

விரும்பியோ விரும்பாமலோ 2012ல் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. உலக அரங்கிலும், உள்ளூர் அரங்கிலும், விஞ்ஞான சமூக தளங்களிலும் பல மாற்றங்கள் உருவாகிவிட்டன. கடந்த வருடத்தில் இதுவரை நான் கவனிக்காத அளவிற்கு பெண்கள் உரிமைகள் பற்றி பேச்சுக்கள் எழுந்த்துடன் பெண்களுக்கெதிரான பல வன்முறைகள் இலங்கை இந்தியாவில் கொடிகட்டப்பறந்தன. கடந்த வருடத்தில் உலகில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளைக் கீழே வாசிக்கலாம். எதையும் தவற விட்டிருந்தால் அறியத்தாருங்கள் அதையும் சேர்த்துவிடலாம்.

அயர்லாந்தில் ஒரு இந்திய பல் வைத்தியர் கூட இந்த வருடத்தில் மரணமாக கருவில் சிசு அழிப்பிற்கு அயர்லாந்தில் இருந்த தடை காரணமானது. ஆயினும் எழுந்த எதிர்ப்பலைகள் காரணமாக அயர்லாந்து தன் கொள்கையையே மாற்றிக்கொண்டது.

சனவரி முதலாம் திகதி 2012 இல் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் தம்மிடம் இருக்கும் அணு சக்தி சம்பந்தமான நிலைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதுடன் அந்த நிலைகளை இருவரும் தாக்குவதில்லை என்று முடிவிற்கு வந்தனர்.

sopa wiki
சனவரி 18ம் திகதி விக்கிப்பீடியா போன்ற பிரபல இணையத்தாளங்கள் அமெரிக்க அரசின் முன்மொழிந்த இணைய தணிக்கைச் சட்டத்தை எதிர்த்து தளத்தைக் கறுப்பாக்கி, நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

பெப்ரவரி 17ம் திகதி பாக்கிஸ்தானில் பின்லாடன் ஒழிந்து இருந்த வீட்டை பாக்கிஸ்தானிய அரசு இடித்து தரைமட்டமாக்கியது.

மார்ச் 15ம் திகதி சனல் போர் வெளியிட்ட காட்சிகாரமாக மீளவும் சர்ச்சை எழுகின்றது. ஆயினும் இலங்கை அரசு மீளவும் குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டது.

அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு வேலையையும் சீனா இக்காலப் பகுதியில் செய்த்து. ஜம்மு, காஷ்மீர் பகுதிகளில் இருந்து வரும் பயனிகளுக்கு சீனா தனது விசாவை வழங்கியது (Stapled Visa). ஆயினும் இந்த நடைமுறையை தான் தொடர்வதை நிறுத்திவிட்டதாக சீனா ஒத்துக்கொண்டது.

ஏபரல் 13ம் திகது இந்தி திரையுலகின் சுப்பர்ஸ்டார் ஷாருக்கானை அமெரிக்காவின் நிவ்யோர்க் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் 2 மணிநேரம் தடுத்துவைத்தனர். இதற்கு காரணம் அவர் முஸ்லிமாக இருந்தமையே என்று பின்னர் பத்திரிகைகளில் அறிவிக்கப்பட்டது.

Facebook_IPO
மே 18ம் திகதி பேஸ்புக் பங்குகள் பங்குச் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டன.

sarath-fonseka
மே 20ம் திகதி முன்னார் ஜெனரல் சரத்பொன்சேகா சிறையில் இருந்து அதிபர் மகிந்த இராஜபக்சவினால் விடுதலை செய்யப்படுகின்றார். ஆயினும் இராணுவத் தரங்கள் பறிக்கப்பட்டுள்ளதோடு அவர் தேர்தலில் போட்டியிடும் உரிமையும் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

vidya-ranbir-iifawinner
ஜூன் 9ல் நடந்த IIFA திரைப்பட விழாவில் வித்தியா பாலன் சிறந்த நடிகைக்கான விருதை டேர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் நடித்தமைக்காகவும் ரன்பிர் கபூர் சிறந்த நடிகரிற்கான விருதை ரொக்ஸ்டார் திரைப்படத்தில் நடித்தமைக்காகவும் பெற்றுக்கொண்டனர்.

ஜெலி பீன் அன்ரொயிட் 4.1
ஜெலி பீன் அன்ரொயிட் 4.1

ஜூன் மாதம் நடைபெற்ற கருதரங்கில் கூகிள் தனது புதிய படைப்புகளை அறிமுகம் செய்துவைத்தது. இதன் போது தமது அன்ரொயிட் இயங்கு தளத்தின் புதிய பதிப்பான ஜெலிபீனையும் அறிமுகம் செய்து வைத்தமை முக்கியமான ஒரு நிகழ்வாகும்.

ipad mini
அக்டோபர் மாதம் அப்பிள் நிறுவனம் தமது புதிய ஐபாட் பதிப்பை அறிமுகம் செய்து வைத்தனர். குறைந்த விலையில் தொடுதிரை கணனிகள் சந்தையில் இது ஒரு புரட்சி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் கூகிளின் நெக்ஸஸ் 7 மற்றும் சாம்சுங் டப் போன்றவை விற்பனையில் கணிசமான பங்கைத் தொடர்ந்தும் கைப்பற்றி வருகின்றன.

ஸ்டீவ் சினோவ்ஸ்கி
முன்னாள் வின்டோஸ் தலைவர்

மைக்ரோசாப்டின் வின்டோஸ் பிரிவின் தலைவரான ஸ்டீபன் சினோவ்ஸ்கி நிறுவனத்தில் இருந்து விலகிக்கொண்டதும் இதே காலப்பகுதியில் நடந்தேறிய ஒரு முக்கிய நிகழ்வாகும்.

2012ம் ஆண்டில் அமெரிக்காவின் உள்ளூர் கச்சா எண்ணை தயாரிப்பு பல்மடங்கு பல்கிப் பெருகத் தொடங்கியது. இன்னும் இரண்டு வருடங்களில் சவுதிஅரேபியாவை விட அதிகமாக அமெரிக்கா எண்ணை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

obama
நவம்பர் மாதம் அமெரிக்காவின் அதிபராக மீளவும் ஒபாமா தெரிவு செய்யப்பட்டார். இவரிற்கு எதிராகப் போட்டியிட்ட மிட் ரொம்னி மண்ணைக் கவ்விக்கொண்டார். தேர்தலில் வெற்றிபெற்றாலும் ஒபாமாவிற்கு முன்னால் வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரப் பிரைச்சனை என பல பூதங்கள் பல்லைக்காட்டிச் சிரித்துக்கொண்டு இருக்கின்றன.

2013 ஐ நோக்கி…

2013ம் ஆண்டு பல வகையில் முக்கியம் பெறும் ஒரு ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. குறிப்பாக தொழில்நுட்பத்துறையில் பல முன்னேற்றங்களை நாம் காணலாம் என்பது என் கணிப்பு. அதை விட பொருளாதார நிலமைகள் தொடர்ந்தும் மந்தமாகவே இருக்கப்போகின்றன. இதைவிட ஈரானில் யுத்தம் மூண்டாலும் மூளலாம் அத்துடன் சிரிய யுத்தம் அமெரிக்க நேரடித் தலையீடுடன் முடிவடையலாம் அல்லது தொடர்ந்தும் பெரும் உயிர், பொருளாதாரச் சேதங்களை ஏற்படுத்தலாம்.

அதைவிட மிக முக்கியமான செய்தி 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி மயூரேசனின் திருமணவைபவம் கூட நடைபெற இருக்கின்றது. அனைவரும் வந்து சிறப்பித்திடவும். 🙂

அமெரிக்க இராணுவத்தின் கறுப்பு பக்கம்

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்கு மிக முன்பே 1700 களில் இருந்தே பெண்கள் அமெரிக்க இராணவத்தில் பணியாற்றுகின்றனர். ஆயினும் அப்போது அவர்கள் பெரும்பாலும் தாதிப்பெண்களாகவே பணியாற்றினர். 19ம் நூற்றாண்டின் பின்னர் பெண்கள் அமெரிக்க இராணுவத்தினுள் நேரடியாக உள்வாங்கப்பட்டனர். தற்போது அமெரிக்க இராணுவத்தில் சுமார் 14 வீதம் பெண்களே. ஆயினும் பிற் காலத்தில் பல கசப்பான உண்மைகள் வெளிவரத் தொடங்கியது.

பெண் வீராங்கனைகள்

அதாவது அமெரிக்க இராணுவத்தில் பணிபுரியும் பெண்களில் 20 வீதமான பெண் இராணுவ வீராங்கனைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர். சில ஆய்வுகள் இது 40 வீதம் வரை இருக்கலாம் என்றும் அதிர்ச்சியூட்டுகின்றது.

பாதிக்கப்பட்ட பல இராணுவ வீராங்கனைகளின் நீதி கோரல் நடவடிக்கைகள் வம்புக்கே காலதாமதம் செய்யப்பட்டுள்ளது அல்லது அதன் உச்சக்கட்டமாக இது வெறும் கட்டுக்கதை என்று கூறி புகார் செய்ய வந்தவரிற்கே எதிராக வழக்கு திசை திருப்பப்பட்ட விசித்திரங்களும் ஏற்பட்டுள்ளது.

சில தரவுகள்

பல பெண்கள் போதையூட்டப்பட்டு வன்புணரப்பட்டுள்ளனர். சிலர் உயர் அதிகாரிகளால் வலக்கட்டாயமாக சாராயம் வகைகளை குடிக்க வைத்து அதன் மூலம் பெண் இராணுவ வீராங்கனைகளை தங்கள் இச்சைக்கு படிய வைத்தனர். ஒரு கொடூரன் தனது சக வீராங்கனையை ஹொட்டேல் அறையில் அடைத்து வைத்து இரண்டு வாரங்கள் வன்புணர்ந்த சம்பங்களும் நடந்துள்ளது. ஆனாலும் அந்த நபரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்க கடற்படை இரண்டு வருடங்களிற்கு மேல் எடுத்தது என்பது கொடுமையிலும் கொடுமை.

சரி பெண்களிற்குத்தான் இந்தக்கொடுமை என்று பார்த்தால் மறுபக்கம் ஆண்களும் வன்புணர்விற்கு உற்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மனோவியல் ரீதியாகப் பார்க்கும் போது இது ஓரினச்சேர்க்கையாளர்களின் வேலை என்று வகைப்படுத்த முடியாது என்று கூறப்படுகின்றது. மாறாக குரூரமும் ஆதிக்க மனப்பாண்மையும் கொண்ட ஆண்களால் இத்தகைய காரியங்கள் செய்யப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது.

இந்த நிகழ்வுகள் பற்றி வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டல்கள் வேறு.

மேலும் அதிர்ச்சியூட்டுகின்றது இன்னுமொரு புள்ளிவிபரம். அமெரிக்க கடற்படையில் புதிதாக இணைந்து கொள்ளும் வீரர்களில் சுமார் 15 வீதமானோர் படையில் இணையும் முன்னரே வன்புணர்வு அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்றால் பார்த்துகொள்ளுங்களேன். அப்புறம் எப்படி விளங்கும்??

சாதாரணமாக அமெரிக்க சிவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஒரு அமெரிக்க குடிமகனிற்கு எதிராக பாலியன் வன்முறை நிகழ்த்தப்பட்டால் அவர் நேரடியாக பொலீஸ் அல்லது நீதித்துறையை நாடி குற்றவாளியை நீதியின் முன் கொண்டுவரலாம். ஆனால் இராணுவத்தில் அவ்வாறல்ல. குற்றம் சுமத்தப்பட்டவரை என்ன செய்வது என்பதை கட்டளை அதிகாரிகளும் இராணுவ நீதி மன்றமுமே முடிவு செய்யும். சிவில் சட்டத்திட்டங்களுக்கு இராணுவத்தினுள் அவ்வளவாக அதிகாரம் கிடைப்பதில்லை என்பதே மேலும் பயங்கராமான தகவல்கள். இப்போது புரிகின்றதா உலகில் ஏன் இத்தனை இராணுவப் புரட்சி என்ற பேரில் கொடுமைகள் நடந்தேறுகின்றன என்று.

இது பற்றி அமெரிக்க ஊடங்களில் பெருமெடுப்பின் அவ்வப்போது கூறப்பட்டாலும் ஒசாமா பற்றிய நிகழ்வுகளிற்குத் தரும் முக்கியத்தை இது போன்ற நிகழ்வுகளுக்கு வழங்க அமெரிக்க ஊடகங்கள் அவ்வளவாக அக்கறை கொள்ளவில்லை. காங்கிரஸ் கூட இராணுவ அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரித்தது. ஆயினும் தாங்கள் இது பற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறி அவர்கள் தப்பித்துக்கொண்டனர். தொடர்ந்தும் தப்பித்து வருகின்றனர்.

உசாத்துணைகள்

கடுப்பேற்றும் இலங்கை வானொலிகள்

ஒரு காலத்தில் வானொலி என்றால் இலங்கை வானொலிதான். தமிழ் நாடு தொடக்கம் இலங்கைவரை வியாபித்திருக்கும் தமிழர் வீடுகளெங்கும் தூய தமிழில் இலங்கை வானொலி ஒலித்தது. பிலபல பட்டிமன்ற நடுவர் லியோனி கூட ஒரு முறை இலங்கை வானொலி கேட்டுத்தான் அக்காலத்தில் தாங்கள் பாட்டுக்களைத் தெரிந்துகொண்டதாக கூறுவார்.  ஆனால் இன்று இலங்கை வானொலி மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து வானொலிகளின் நிலமைதான் என்ன?

வானொலி

பொதுவாகவே தொலைக்காட்சியிடம் இல்லாத ஒன்று வானொலியிடம் இருக்கின்றது. வானொலி கேட்டுக்கொண்டு எமது நாளாந்த வேலைகளைச் செய்துவிடலாம் ஆனால் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இவற்றைச் செய்ய முடிவதில்லை. இதனால் தான் என்னவோ வானொலி எம்மவர் வாழ்க்கையில் மிகவும் பின்னிப் பிணைந்து இருந்தது.

இலங்கையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் (முன்னாள் இலங்கை வானொலி மாற்றங்கள் பல பெற்று இப்போது தென்றல் ஆகியது), வசந்தம் போன்றவையும் இதைவிட தனியார் வானொலிகளான வெற்றி, சூரியன், சக்தி போன்றவற்றையும் கூறலாம்.

தென்றல் வானொலிப் பாரம்பரியத்துடன் வளர்ந்து வந்தது. அரச வானொலி என்பதால் என்னவோ பல அரசியல் தலையீடுகள் அது இது என்று தன் தனித் தன்மையே என்றோ இழந்து விட்டது. இன்று எத்தனை பேர் தென்றல் இலங்கையில் கேட்கின்றார்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே இதைக் கேட்கக்கூடும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்னுமொரு வானொலி வசந்தம். இது அண்மைக் காலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. தனியார் வானொலிகளின் பாணியில் அறிவிப்பாளர்களைப் போட்டு அறுக்கும் பணியில் இந்த வானொலி சிறப்பாக ஈடுபட்டு வருகின்றது.

சக்தி FM

சக்தி, சூரியன் இரண்டும் தனியார் வானொலிகளைப் பொறுத்தவரையில் சிறப்பாக இயங்கிவந்தன. பின்னர் வெற்றி எப்.எம் உம் இந்த வரிசையில் இணைந்து கொண்டது. 1999 காலப்பகுதிகளில் சக்தி FM முதன் முறையாக நான் சிறுவயதில் வசித்து வந்த திருகோணமலைப் பகுதிக்கு வந்தது. இலங்கை வானொலியின் தரமற்ற நிகழ்ச்சிகளில் சோர்ந்திருந்த வானொலி ஆவலர்களுக்கு இந்த வானொலி மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. எழில்வேந்தன், லோஷன், வாணி, ரமணி என்று வானொலி அறவிப்பாளர்கள் எல்லாம் பெரும் நட்சத்திரப் பட்டாளமாக வலம் வந்தார்கள். அக்காலத்தில் சக்தி அறிவிப்பாளர்களுக்கு சினிமா நடிகர்கள் அளவிற்கு பிரபலம் இலங்கையில் இருந்தது.

பின்னர் 2000 களின் பின்னர் சூரியன் வானொலியும், பின்னர் வெற்றி வானொலியும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. 2004 பின்னர் நான் கொழும்பு நோக்கி வந்துவிட்டோம் அதனால் அனைத்து வானொலிகளையும் கேட்கும் வாய்ப்பு கிட்டியுது.

தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர்கள் போட்டி காரணமாக தம்மைத் தாமோ இலங்கையின் முதற்றர வானொலி இலங்கையில் அதிகமாக கேட்கப்படும் வானொலி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் காமடிகளும் நடந்தேறியது. காலம் செல்ல செல்ல இந்த வானொலிகளின் தரம் சாக்கடையாகத் தொடங்கியது.

வானொலிகளின் தரம் எப்போதும் அதன் அறிவிப்பாளரின் தரத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும். தரமற்ற வானொலி அறிவிப்பாளர்களின் காரணமாக இலங்கையின் வானொலிகள் இன்று பெரும் நாற்றமெடுக்கின்றது. வாய் நோகாமல் கதைத்தால் மட்டும் அறிவிப்பாளராகிவிட முடியுமா? ஆரம்பக்காலத்தில் மயில்வாகனம், கிளோட் செல்வரட்னம், பிந்தைய காலத்தில் கமலினி, ரேலங்கி, நடராஜசிவம், விஷ்வநாதன் பின்னர் எழில் வேந்தன், லோஷன் போன்றவர்கள் இருந்த / இருக்கும் இடத்தில் இக்கால அறிவிப்பாளர்களை வைக்கவே முடியவில்லை. எப்போதாவது எந்த வானொலி நிலையத்தைத் திருகினாலும் ஒரு அறிவிப்பாளர் நையி நையி என்று சண்டீவி பாணியில் அறிவித்தல் கொடுப்பார். மறுமுனையில் ஒரு நேயர் தொலைபேசி எடுத்து அவருடன் அவர் புகழ் பாடுவார். இல்லாவிட்டால் இரண்டு அறிவிப்பாளர்கள் சேர்ந்து காமடி செய்கின்றோம் போர்வையில் செம ஜொள்ளு விட்டு எம் உயிரை எடுப்பர். இந்த அறுவை காரணமாக வானொலி கேட்கும் பழக்கத்தையே கடந்த சில ஆண்டுகளாக குறைத்துவிட்டேன். கேட்பது வெற்றியின் விடியல் மட்டுமே. அது என்னுடைய தனிப்பட்ட தெரிவு மற்றவர்களுக்குப் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம்.

இதைவிட இலங்கை வானொலிகளில் கடுப்பேற்றும் மிக முக்கியமான விடையம் சண்டிவி பாணியிலான இந்திய உச்சரிப்பும், செயற்கைத் தனமான ஆங்கிலக் கலப்பும். Actually, But, So, Wow… போன்ற ஆங்கிலச் சொற்கள் இன்றைய வானொலியில் சரளமாக உலாவருகின்றன. சரி பரவாயில்லை அதை விட்டுத் தள்ளுங்கள் ஆனால் அதைவிட மிக முக்கியமான மன வருத்தத்தைத் தரும் விடையம் இலங்கை வானொலிகளில் இப்போது இலங்கைத் தமிழைக் கேட்க முடியாது.

ஆமா அப்பிடீங்களா? அச்சச்சோ ரொம்ப சாரிங்க! எங்க இருந்து பேசுறீங்க? போன்ற இந்திய உச்சரிப்புடைய வானொலி அறிவிப்பாளர்கள்தான் இன்று இலைங்கையின் தமிழ் வானொலிகளில். இயல்பாகவே எமக்கு அது ஒட்டாமல் போனதில் ஆச்சரியம் இல்லை. இந்திய தமிழில் பேசும் போது கேட்க அழகாக ஆரம்பத்தில் இருந்தாலும் போகப் போக புளித்து விட்டது.

அண்மையில் ஒருவர் தனக்கு கடுமையான யாழ்ப்பாண உச்சரிப்பு இருந்தமையினால் வானொலி நிலையத்தில் சேர்க்கவே மறுத்து விட்டார்களாம் என்று வலைப்பதிவு ஒன்றில் பின்னூட்டமிட்டு இருந்தார். சிலர் கஷ்ட்டபட்டு இந்தியத் தமிழில் பேச முயற்சிப்பதை பாருக்கும் போது பாவம் பிள்ளை என்றே எண்ணத் தோன்றும்.

ஏன் இந்தக் கொலைவெறி???

வடிவேல் அவ்…! என்றும் போது விழுந்து விழுந்து சிரிக்கும் நாங்கள் அவர் பாணியில் ஒருவர் வானொலியில் பேசத் தலைப்பட்டால் காமடிப் பீசு என்று சொல்லி வானொலியை மூடுவதைத் தவிர என்ன செய்யலாம்??

 

யாரையும் தனிப்பட்ட ரிதியில் தாக்கி இந்தப் பதிவு எழுதவில்லை. நான் ஒன்றும் சிறப்பான நபர் என்றும் கூற வரவில்லை. இலங்கையில் பொதுவாக வானொலிகள் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு பற்றிய ஒரு பதிவு மட்டுமே இது.

தமிழ் மணமும் கடுப்பேத்தும் செய்தித் தளங்களும்

அதிகமாகத் தமிழ் வாசகர்களை இழுக்க வலைப்பதிவுத் திரட்டிகள் ஒரு சிறந்த வழி என்பதை யாம் எல்லாரும் அறிவோம். திரட்டியில் சேர்த்தபின்னர் மொக்கைப் பதிவுகளுக்குக் கூட 100 ஹிட்சுக்கு அதிகமாகச் சம்பாதிக்கலாம்.

இதை நன்கே புரிந்து வைத்திருக்கும் செய்தி தளங்கள் தமிழ் மணத்தை கேவலமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. செய்தியின் ஒரு வரியைப் போட்டு மீதியை தளத்தில் படிக்கச் சொல்பவர்கள். அதாவது அசின் இன்று பிசினாகிவிட்டார். அவரின் மனேஜர் இது பற்றிக் கூறுகையில்.. என்று வாசிக்கும் போது <<மேலும்>> என்று ஒரு இணைப்பு இருக்கும். அதைக் கிளிக்கி மிகுதிச் செய்தியை அவர்களின் தளத்தில் வாசிக்க வேண்டும்.

2. இரண்டாம் இரகம் ரொம்பக் கேவலம். முன்பு கூறியபடி ஒரு செய்தியிருக்கும். மேலும் இணைப்பைக் கிளிக்கினால் ஒரு தளத்தின் முகப்பிற்கு எடுத்துச் செல்லும். அதாவது அந்த தளத்தின் சரியான செய்திக்கு இணைப்புத் தராமல் தளத்தின் ஹோம் பக்கத்திற்கு எங்களை எடுத்துச் செல்லும். தளத்தின் முகப்புப் பக்கதிற்கான வாகர் வரவை அதிகரிக்க ஒரு கேவலமான முயற்சி

தமிழ் மணத்திற்கு இது பற்றி அறிவித்தேன் ஆனாலும் அவர்களிற்கு இதுகளுக்கு நேரம் இல்லை போலும். இவ்வகையான தளங்களை இனம் கண்டி நீக்கி வாசகர்களின் வாசகப் பயனத்தை இலகுவாக்க தமிழ் மணம் நடவடிக்கை எடுக்க கோருகின்றேன்.

E.g

  1. ராஜ் தாக்ரேவை தாக்கும் மண்ணாங்கட்டி
  2. பார்த்தீபனின் வித்தகன்
  3. நமி நமி நமீதாஆஆஆஆ

சொல்லுறத சொல்லியாச்சு இனி தமிழ் மணமாச்சு தமிழ் செய்தித் தளங்களாச்சு.

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் இலங்கை வென்றது

இன்று நீண்ட நாட்களின் பின்னர் கிரிக்கட் ஆட்டத்தை ஆபீஸில் ஆணிபுடுங்கும் நேரத்தில் இருந்து பார்த்தேன். மட மட என விக்கட்டுளைச் சாய்த்த இலங்கை இந்தியாவை 200 ஆட்டங்களுக்கு முன்னரே சுருட்டும் என்று எதிர்பாரத்தாலும் எதிர்பாராவண்ணம் றைனா இலங்கைக்கு பால் காய்ச்சினார்.

ஒருவாறாக 100 எடுத்து றைனா வெளியேற மிஞ்சியிருந்தவர்கள் சுமார் 245 வரை இழுத்து இழுத்து சென்றுவிட்டார்கள். இலங்கை துடுப்பாட்டம் சொதப்பக்கூடியது என்பதால் நான் அவளவாக எதிர்பார்ப்பு வைத்திருக்கவில்லை. ஆயினும் காங்கோன் இலங்கை அணி வெல்லும் என்றும் சங்க்காரவை புகழ்ந்தும் ட்விட்டரில் ட்விட்டிக்கொண்டிருந்தார்.

நல்லவிதமாக சங்கா மற்றும் மஹேல சேர்ந்து இலங்கையை வெற்றைவாகை சூட வைத்தனர். இந்தியா தோற்றதில் மகிழ்ச்சி 😉

இலங்கை தோற்றதில் கிளு கிளுப்பான சிலர் வீதியில் இனிப்பு வழங்கச் சென்று அடிவாங்கியதாக அரசல் புரசலாக ட்விட்டரில் செய்திகள் அடிபடுகின்றது.

பொங்கல் சிறப்பு அவதார்

இன்று இலங்கையில் இருக்கும் அன்பு உள்ளங்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களும் தமிழகத்தில் இருக்கும் கருனாநிதி பக்தர்களுக்கு புத்தாண்டுவாழத்துக்களையும் சொல்லிக்கொள்கின்றோம்.

புது வருடம் புது களங்கள் பல கண்டு வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பி.கு: மேலே உள்ள பொங்கல் சிறப்புப் பட உபயம் யாகூ அவதார்

ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்


திருமணம் என்பது ஒரு அழகான நிகழ்வு. முன்னோர்கள் சொன்னபடி சொர்க்கத்திலே நிச்சயிக்கப்படுகின்றது. ஆனால் இன்றய பல திருமணங்கள் அரைவாசியில் ஃபாஸ்ட் ஃபூட் உணவுமாதிரி உடனடியாக உருவாகி உடனடியாக முடிவடைந்துவிடுகின்றன. Continue reading ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்

மன்னிப்பு கேட்கும் விகடன்.காம்

அண்மையில் விகடன்.காம் ஐ அணுக முயன்றபோது பயர்பாக்ஸ் உலாவி கடும் எச்சரிக்கை பண்ணியது. என்னை மீறிப் போய் ஏதாவது ஆனால் நான் பொறுப்பல்ல என்றெல்லாம் பயமூட்டியது பயர்பாக்ஸ் உலாவி. இதற்கு காரணம் விகடன்.காம் பயன்படுத்தியிருக்கும் நிரலில் சில ட்ரோஜன் வகை நிரல்கள் இருக்கிறதாம். இந்த ட்ரோஜன் எனப்படுபவை தம்மை வேறு பொருட்களாக அடையாளம் காட்டி எமது கணனியில் நுழைந்து எமது கணனியின் சில தகவல்களைத் திருடி எசமானருக்கு அனுப்பிவிடும். உதாரணமாக கடன்அட்டை இலக்கம் போன்றவற்றை இந்த ட்ரோஜன் மூலம் கடத்த முடியும்.

எப்படி இந்த ட்ரோஜன் என்ற பெயர் வந்த்து என்று நினைக்கின்றீர்களா??? ட்ரோஜனத்துக் குதிரை என்று சிறுவயதில் படித்த கிரேக்க கதை ஞாபகம் இருக்கின்றதா??? அதன்படி ஒரு மரக்குதிரையைசெய்து கோட்டைக்கு வெளியே வைக்க, அதை கோட்டைக்குள் இருக்கும் முட்டாள்கள் உள்ளே எடுத்து செல்ல மரக் குதிரையின் உள்ளே இருக்கும் அக்கிலீஸ் போன்ற வீரர்கள் கொமாண்டோ பாணியில் தாக்குதல் நடத்தி கோட்டைக் கதவுகளை தகர்க்கின்றார்கள்!!!

இன்று விகடன்.காம் தளத்திற்கு செல்ல முடிகின்றது. அத்துடன் இன்று காலை விகடன்.காம் ஒரு மன்னிப்பு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

Vikatan Sorry Letter

நன்றி 2007

ஒருவாறாக ஆண்டு 2007 நிறைவடைந்து விட்டது. இன்றிரவு புத்தாண்டு மலரப்போகின்றது. இதற்காக ஒரு பெரிய பதிவை எழுதத்தான் முதலி்ல் நினைத்தேன் என்றாலும் எல்லாரும் எழுதும் போது எதற்காக நானும் பெரிதாக எழுத வேண்டும் என்று விட்டுவிட்டேன்.

2007 ல் நடந்தவற்றை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். நல்லவை கெட்டவை எல்லாம் நடந்தேறிவிட்டது. எது நடந்ததோ அது நடந்ததே. புத்தாண்டிற்கான திட்டங்களைத் தீட்டிக்கொள்ளுங்கள். 2008 முடியும் போது உங்கள் இலக்கு என்ன என்பதை உங்கள் டைரியின் முன் பக்கத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். 2008 முடியும் போது கடைசியாக ஒரு தடவை உங்களை நீங்கள் பரீட்சித்துப் பார்க்கலாம்.

மலரும் புத்தாண்டு அனைவருக்கும் சுபீட்சத்தை பெற்றுத்தரட்டும்.

அன்புடன்,
மயூரேசன்

Prison Break தொலைக்காட்சித் தொடர்

பிரிசின் பிரேக் எனும் தொடரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது வரை நான் பார்த்த ஆங்கிலத் தொலைக்காட்சிச் தொடர்களில் X-Files க்குப் பிறகு அதிகமாக இரசித்துப் பார்த்த தொடர் என்றால் இந்த Prison Break தான்.

 

அமெரிக்க அரச இயந்திரத்தை கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு அப்பாவி நபரைப் பழிவாங்கத் துடிக்கிறார் ஒரு பெண். இவர் இதற்குத் துணையாக எப்.பி.ஐ ஏஜென்டுகளையெல்லாம் பணிக்கமர்த்துகின்றார். ஏதோ கத்தரிக்காய் வெட்டுவது போல டப்பு டப்பு என்று தன் எதிரிகளை கொலை செய்கின்றார். இது போதாதென்று கதைக்காமல் கடதாசியில் எழுதிக் கட்டளையிடும் என்னொரு நபர்.

 

ஒருத்தரைப் பணிய வைக்கவென்று அவரின் மகனை ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக்கி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அவனைக் காப்பாற்ற அவனின் தம்பி தானும் ஒரு வங்கியில் கொள்ளை அடிப்பது போல நாடகமாடி சிறைச்சாலைக்குச் செல்கின்றார். இதற்குள் அண்ணாவின் முன்னாள் காதலி அதைவிட மனைவி மேலும் ஒரு மகன் என்று குடும்ப சென்டிமென்டு வேற இருக்குது.

 

தொடரின் நாயகன் ஸ்கோஃபீல்ட் நல்ல நடிப்பு அமைதியான நடிப்பு. அவர் பாத்திரத்திற்கு ஏற்ற தோற்றம். அவருக்கு ஒரு டாக்டர் காதலி, சாரா டங்கிரிட்டி.  அதாவது சிறைச்சாலையில் வைத்தியராகப் பணிபுரியும் பெண் டாக்டருடன் நம்ம நாயகன் காதலில் வீழ்ந்துவிடுவார். அந்தப் பெண்ணும் ஒரு முக்கியமான கட்டத்தில் அவருக்கு உதவித் தொலைக்கின்றது. Smiley

 

இப்படியே பின்னிப் பின்னி கதை நீண்டு செல்கின்றது. கார் ஓட்டம், மனித வேட்டை என்று ஒவ்வொரு அங்கமும் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு அங்கம் முடிவிலும் அடுத்த அங்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு கொழுக்கி வைத்திருப்பார்கள். நீங்கள் இதை டிவிடியில் பார்க்க நேர்ந்தால் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பீர்கள். நிறுத்த முடியாது அத்தனை விறு விறுப்பு. Smiley

 

சீசன் 1, சீசன் 2 முடிந்துள்ளது விரைவில் மற்ற சீசன் வரும் என்று எதிர் பார்க்கின்றேன். இலங்கையில் இப்போது ஆர்ட் டீவியில் சீசன் ஒன்று போடுகின்றார்கள். கேபிள் அல்லது செய்மதித்தொலைக் காட்சி இருந்தால் 3ம் சீசன் தொடங்கும் போதே நேரடியாகப் பார்க்கலாம். என்னுடைய வீட்டில் இரண்டும் இல்லை ஆயினும் இணையத்தில் இறக்கிப் பார்க்கின்ற யாரிடமாவது வாங்கிப் பார்க்க வேண்டியதுதான்.

 

இலங்கையின் உயர்கல்வி பற்றி ஒரு பார்வை

1950 களில் சிங்கபூர் பிரதமர் இலங்கை வந்ததும், பின்னர் கொழும்பைப் பார்த்து பிரமித்து என் நாட்டையும் இது போல மாற்ற வேண்டும் என்று சபதம் போட்டதும் நீங்கள் அறிந்திருக்கக் கூடிய பழைய கதையே. இன்று இந்து சமுத்திரத்தின் முத்து என்ற பெயரும் கொழும்பு ஆசியாவின் பூந்தோட்டம் என்ற பெயரும் பெயரளவில்தான் உள்ளது. கொழும்பு போல நாற்றம் எடுக்கும் ஊரும், இலங்கையைப் போல கேட்பவரைக் கிலி கொள்ளச் செய்யும் நாடுகளும் உலகில் எத்தனை உண்டென்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.

 

நாட்டில் எந்தத் துறை சீர் கெட்டு உள்ளது என்று பார்ப்பதைவிட எந்தத்துறை சீராக உள்ளது என்று பார்த்தால் மிக்க நன்று. நான் அறிந்த வரையில் எந்தத் துறையும் சீராக இல்ல. இலஞ்சம் ஊழல், அரசியல் செல்வாக்கு என்று இலங்கை தன் பெயரை தானே கெடுத்துக்கொண்டு இருக்கின்றது. இந்தக் கட்டுரையில் நான் இலங்கையில் உயர் கல்விபற்றி ஒரு அலசல் அலசப் போகின்றேன்.

களனிப் பல்கலைக்கழகம்

ஒரு காலத்தில் இலங்கை உயர்கல்விப் பீடங்கள் நன்மதிப்புப் பெற்றிருந்தன. இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் இலங்கைக்கு வந்து உயர்கல்வி பெற்றுச் சென்றார்கள். இன்று நிலமை என்ன??? இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றே பலர் உயர் கல்விபெறவேண்டியதாக உள்ளது. வெறும் 5 சதவீதமான மாணவர்களுக்கே உயர்கல்வி வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது.

 

அரசினால் இதற்குச் சொல்லப்படும் காரணம் பல்கலைக் கழகங்களில் அனுமதி வழங்க போதுமான இடம் இல்லை என்பதே. அப்போ புதுப் பல்கலைக்கழகங்களைக் கட்ட வேண்டியதுதானே?. அதற்கு அரசின் பதில் போதிய நிதி இல்லை என்பதே.

 

இன்று அரச பல்கலைக்கழகங்களை எடுத்து நோக்கினால் தெரியும் எவ்வளவு மோசமாக உள்ளன என்பது. செயன்முறை ரீதியான அறிவு மாணவர்களுக்கு மிகக் குறைவாகவே உள்ளது. கல்வி வெறுமனே எழுத்தளவில் கற்பிற்பதில் முடிந்து விடுகின்றது. இது பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்குப் பெரிய பின்னடைவாகும். பட்டம் பெற்றுக்கொண்டு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும்போதே அவர்கள் தம்மிடம் உள்ள குறைகளை உணர்ந்துகொள்வர். ஆனால் நிறுவனங்கள் அதுவரை பொறுமையாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

 

இதைவிட மாணவர்கள் தாமே தேடிக் கற்கும் (Self Driven) ஆற்றலை பல்கலைக்கழகங்களில் வளர்த்துவிடுவதில் பேராசிரியர்கள் பங்காற்றுவதில்லை. அனைத்தையும் வந்து கற்பிற்பார்கள், மாணவர்கள் படித்துவிட்டு கிளிப்பிள்ளை போல திரும்பி பரீட்சைத் தாளில் வாந்தியெடுத்துவிட்டால் அவர்களுக்குச் சந்தோசம். அதுவே அவர்களின் கற்பித்தலின் உச்சக்கட்டம். வெளியூர் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தேடிக்கற்கும் ஆற்றல் ஊக்குவிக்கப்படுகின்றது. உதாரணமாக நாளை ஜாவா நிரல்மொழியில் இந்தப் பகுதியைப் படிப்போம் என்று ஆசிரியர் சொல்வார். மாணவர்கள் தாம் அந்தப் பகுதியை மறுநாள் படித்துவிட்டு வருவார்கள். பின்னர் வகுப்பு ஒரு கலந்துரையாடலாக அமையும். மாணவர்களின் கேள்விக் கணைகளுடன் வகுப்பு அமோகமாக நடக்கும். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இப்படியான பேராசிரியர்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

 

சரி… இந்தக் குறைகளை நீக்குவதற்கு என்ன செய்யலாம் என்றால் என்னுடைய முதல் பதில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதே. இலங்கை சட்டத்தின் படி இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க முடியாது. அமைத்தால் அது சட்டப்படிக் குற்றமாகும்.

 

ஆனாலும் சாதாரண வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஏஜென்டுகள் சிலர் இங்கே இருக்கின்றார்கள். அவர்களிடம் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் படித்துவிட்டு மிகுதியை வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் சென்று படிக்கலாம். இவ்வாறு இலங்கையின் அந்நியச் செலாவணி அழிக்கப்படுகின்றது.

 

ஜே.வி.பி போன்ற கட்சிகளும், அவர்கள் பின்னால் இயங்கும் மாணவர்கள் அமைப்புகளும் தனியார் பல்கலைக்கழகங்களை கடுமையாக எதிர்க்கின்றன. சில வருடங்களுக்கு முன்னர் அரசு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுக்க முனைந்தபோது அதை பெரிய விடயமாக்கி அதில் குளிர் காய்ந்தன இந்த தூர நோக்கற்ற சுயநலவாத அரசியல் கட்சிகள்.

 

பணம் உள்ளவர்கள் தம் பணத்தை செலவழித்து இந்தியா, மலேசியா, ரசியா, பிருத்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தம் உயர்கல்வியைக் கற்கின்றனர். இதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணி இழக்கபபடுகின்றது. இது இந்த நபர்களுக்கு உறைக்கவில்லை. இலங்கையில் தனியார் உயர்கல்விக் கூடங்கள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அது பற்றி இந்த மேல் தட்டு வர்க்கம் அலட்டப் போவதில்லை. அவர்கள் பெருமளவு பணத்தை முதலிட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தம் உயர்கல்வியை முடித்துவிடுவர்.

 

இலங்கையில் தனியார் கல்லூரிகள் இருக்குமானால் இந்த பணத்தை சேமித்து இலங்கை நாட்னின் அபிவிருத்திக்கே பயன்படுத்த முடியும். ஆனால் இதெல்லாம் எங்கே இவர்களுக்கு உறைக்கப்போகின்றது.

 

இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனியார் கல்லூரிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எந்தளவு பங்காற்றின பங்காற்றுகின்றன என்பதை நாம் கண்கூடாகக் காணுகின்றோம். இன்று இலங்கையும் தனியார் கல்லூரிகள் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகம் ஒரு பாதையில் போகும் போது இலங்கை மட்டும் தன் பாதையில் குருட்டுத் தனமாக நகர்வது கவலை தரும்விடயமே.

 

இவற்றைச் சிந்தித்து நடைமுறைப்படுத்த நல்ல தூரநோக்குள்ள தலைவர்கள் நாட்டுக்கு வரவேண்டும். இலங்கையில் இலவசக் கல்வியின் தந்தையாரான கன்னங்கரா உண்மையில் ஒரு தூரநோக்குடையவர் அவரால்தான் நாட்டின் கல்வியறிவு வீதம் 90 விழுக்காடாக உள்ளது. இவர்போன்ற ஒரு நபர் மீண்டும் இலங்கை வரலாற்றில் பிறந்து வந்தால் தவிர இலங்கை உயர்கல்வித் துறை வெறும் குப்பையாகப் போவதை யாராலும் தடுக்க முடியாது.