Category Archives: தொலைக்காட்சி

தி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்

தி ஏலியனிஸ்ட் எனும் ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடரை நேற்று நெட்பிளிக்சில் பார்த்தேன். சாதாரணமாக எனக்கு உளவியல் சார் பரபரப்புத் (psycho thriller) தொடர்களைப் பார்க்க விருப்பம் அதிகம். அதுவும் தொடர் கொலை போன்ற கதைகளை விடாமல் பார்த்துவிடுவேன். இவ்வகையில் யூனாபொம்பர்டெக்ஸ்டர், லூதர் போன்ற தொலைக்காட்சித் தொடர்களை விரும்பிப் பார்த்தேன்.

இந்த அனைத்துத் தொலைக்காட்சித் தொடர்களிலும் இருந்து இந்த தொலைக்காட்சித் தொடர் மிகவும் வேறுபடக் காரணம் இந்தத் தொலைக்காட்சித் தொடர் நடப்பதாகக் காட்டப்படும் காலம் இற்றைக்கு சுமார் 130 வருடங்களுக்கு முன்னராக காலப் பகுதி. நிவ் யோர்க் நகரத்தில் 1900 இன் ஆரம்பங்களில் நடப்பது போன்று திரைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் இருக்கும் நவீன நுட்பங்கள் மற்றும் profiling போன்ற எந்த வசதியும் இல்லாமலேயே கொலைகாரனைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

மேலும் இந்தத் தொலைக்காட்சித் தொடர் ஏலவே  1994 இல் வெளிவந்த ஒரு ஆங்கில நாவலைச் சார்ந்தே தயாரிக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

கதைச் சுருக்கம் (No spoilers)

பாலியல் தொழிலில் ஈடுபடும் சிறுவர்களை மர்மமான முறையில் ஒருவன் கொடூரமாகக் கொலை செய்கின்றான். யார் எவர் எதற்காக இப்படிச் செய்கின்றார்கள் என்பதை அறிய புதிதாக வந்த காவல்துறை ஆணையாளர் முயல்கின்றார்.

உளவியலாளரும் அவர் குழுவும்
உளவியலாளரும் அவர் குழுவும்

இதேவேளை நகரில் ஒரு பிரசித்தி பெற்ற உளவியலாளர் ஒருவரும் இருக்கின்றார். உளவியலாளர் மேலும் சிலரின் உதவியுடன் பொலீசாரிற்கு மேலதிகமாகத் துப்புத் துலக்கத் தொடங்குகின்றார். என்ன எது நடந்தது என்பதெல்லாம் நான் சொல்லப் போவதில்லை அவற்றை நீங்களே பார்த்து அறிந்தி கொள்ளலாம்.

நிவ் யோர்க் நகரம்

தொடரிலே நிவ்யோர்க் நகரத்தை 1900 அளவில் இருந்த வாறே காட்டியுள்ளார்கள். காங்ஸ் ஒப் நிவ்யோர்க் திரைப்படத்தில் நீங்கள் பார்த்த அதே போன்ற கட்டிட அமைப்புகளை இந்தத் தொடரிலும் பாவித்துள்ளார்கள். அக்காலத்தின் அமெரிக்காவில்ல இருந்த பணக்கார ஏழை வித்தியாசம் எவ்ளவு மோசமானது என்பதையும் ஊழல் காவல்துறையில் எவ்வாறு வேரூன்றி இருந்தது என்பதையும் காட்டியுள்ளார்கள்.

18ம் நூற்றாண்டில் நிவ் யோர்க் நகரம்
18ம் நூற்றாண்டில் நிவ் யோர்க் நகரம்

காட்சிக்கு காட்சி அக்காலத்தில் நாங்கள் வாழ்வது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகின்றார்கள். பெருமளவில் கணனி வரைகலையைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட எது உண்மை எது கணனி வரைகலை என்று புரியாதவாறு காட்சிகள் பிரமிப்பூட்டுவதாக இருந்தது.

உலகில் எந்த நகரமும் நிவ்யோர்க் அளவிற்கு திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்டப்படவில்லை என்று நினைக்கின்றேன்.

உண்மைக் கதை?

இதில் வரும் சில பாத்திரங்களைப் பார்த்தபோது இது உண்மைக் கதையாக இருக்குமோ என்ற ஒரு எண்ணம் ஏற்படவே கூகளில் தட்டியதில் உண்மையாக இருந்த சில பாத்திரங்களைக் கோர்த்து அமைக்கப்பட்ட ஒரு கற்பனைக் காவியம் இது என் புரிந்துகொண்டேன்.

காவல்த்துறை ஆணையாளர்
காவல்த்துறை ஆணையாளர்

குறிப்பாக இக்கதையில் வரும் ரூஸ்வெல்ட் எனும் காவல்த்துறை ஆணையாளர் பின்னாளில் அமெரிக்காவின் அதிபராகியவர் என்பதைக் குறிப்பிடவேண்டும். இவ்வாறு சில உண்மைப் பாத்திரங்களைப் பாவித்துள்ளார்கள்.

நடிப்பு

நடிப்பு சிறப்பு அபத்தம் என்றெல்லாம் விமர்சனம் செய்யுமளவிற்கு நான் ஒன்றும் பெரிய துறைசார் அறிஞர் கிடையாது ஆயினும் ஒரு சராசரி இரசிகனாக டானியல் புருல், லூக் இவன்ஸ், டகோட்டா பான்னிங் ஆகியோரின் நடிப்பை இரசித்தேன்.

குறிப்பாக டகோட்டா பான்னிங் நடிப்பின் பின்னியெடுத்துவிட்டார். இந்தப் பாத்திரத்திற்காகவே பிறந்து வந்தாரோ என எண்ணுமளவிற்கு அவர் நடிப்பில் அசத்திவிட்டார்.

முடிவுரை

நீங்களும் உளவியல் சார் பரபர தொடர்களைப் பார்ப்பவரா? வரலாற்று சார் தொடர்களில் ஆர்வம் உள்ளவரா? அப்படியானால் உங்களுக்கும் இந்தத் தொடர் கட்டாயம் பிடிக்கும். தவறாமல் பார்த்து இரசியுங்கள்.

Stranger Things 2 – தமிழ் விமர்சனம்

கடந்த வருடம் (2016) Stranger Things முதலாம் பாகம் (Season 1) Netflix இல் வெளியாகி உலகம் முழுவதும் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகம் இந்த வருடம் ஹலோவீன் காலத்தில் வெளியாகியது.

ஸ்ரேஞ்சர் திங்க்ஸ் தொலைக்காட்சித் தொடரின் மிக முக்கியமான கருப்பொருளே 80 களில் அமைந்த கதைக் களம். Season 1 ஆனது 1983 இலும் Season 2 ஆனது 1984 இலும் நடப்பது போலவே கதைக் களம் அமைந்துள்ளது.

80களை மீட்ட வைக்கும்

80களில் ஏன் 90களில் சிறுவர்களாக இருந்தவர்கள் கூட இந்தத் தொடரைப் பார்க்கும் போது தங்கள் சிறுவயதில் செய்த பல காரியங்கள், பாவித்த பொருட்கள் என்பவற்றை இந்த திரைப்படத்தில் காணலாம். நகர்பேசி போன்ற புதிய தொடர்பாடல் முறைகள் இல்லாத காலத்தில் எமது வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது என்பதையும் இந்தக் கதை திரும்பிப் பார்க்க வைக்கின்றது.

தொலைக்காட்சித் தொடரெங்கும் 80களில் பிரபலமான ஆங்கிலப் பாடல்கள் மற்றும் திரைப்படங்களுக்கான reference நிறைந்திருக்கின்றன. Alien, Ghost Busters போன்ற திரைப்படங்களை உதாரணமாகக் கூறலாம்.

இதைவிட தொலைக்காட்சித் தொடர் முழுவதும் குறியீடுகள் நிறைந்துள்ளன. இவையனைத்திற்கும் காரணம் இந்தத் தொடரிற்கான கதையை எழுதும் டபர் சகோதர்கள் (Duffer brothers) 80களில் தாம் சிறுவர்களாக இருந்த போது அவர்கள் வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்திய பல விடயங்களை இங்கே இலாவகமாகப் பயன்படுத்தியுள்ளமையே ஆகும்.

கதைச் சுருக்கம் (No Spoilders)

அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நகரான ஹோகிங்ஸ் இல் ஒரு அறிவியல் கூடம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆராய்ச்சிகள் செய்து பூவுலகம் போல இன்னுமொரு பரிமாணத்தை ஒரு கதவு வழியாகத் திறந்து விடுகின்றார்கள். இன்னுமொரு பரிமாணத்தில் இருக்கும் இராட்சத மற்றும் கொடிய விலங்குகள் பூமியை அடைந்து விடுகின்றது.

பகுதி ஒன்று மற்றும் இரண்டு இந்த புதிய பரிமாணத்தின் கதவுகள் திறக்கப்பட்டதால் எற்படும் விளைவுகளைச் சுற்றியே அமைகின்றது.

கதையில் முக்கிய கதாபாத்திரங்களாக பாடசாலையில் கற்கும் நான்கு சிறுவர்கள் மற்றும் இயற்கையை விஞ்சிய சக்தியுடய ஒரு சிறுமியும் அமைந்துள்ளனர். கதையில் எனக்குப் பிடித்த பாத்திரம் டஸ்டின் எனும் சிறுவனே. அவன் வெகுளிப் பேச்சும் அட்டகாசமான பகிடிகளும் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும்.

பிரதான கதையில் இருந்து ஒரு கிளைக் கதையையும் இம்முறை அமைத்துள்ளார்கள். அனுமாஷ்ய சக்தி படைத்த எலெவென் (அல்லது ஜேன்) எனும் சிறுமி தனது பால்ய வயது நண்பியைத் தேடி ஹாக்கின்ஸ் நகரை விட்டுச் செல்கின்றார். அதைச் சுற்றி இந்தக் கிளைக்கதை அமைந்துள்ளது. இந்த அத்தியாயம் (episode 7) அவ்வளவாக சிறப்பாக அமையவில்லை என்று பலர் நினைத்தானுலும் Season Finale க்கான தளம் இங்கேயே அமைகின்றது என்பதை நாம் மறக்கக் கூடாது.

ஒவ்வொரு கதாபாத்திரமும் அழகாக அவர்களுக்குரிய ஆளுமையுடன் அருமையாகப் படைத்துள்ளார்கள். இதற்குமேல் நான் கதையைச் சொல்லப் போவதில்லை. 😉

விமர்சனம்

உங்களுக்கு பாகம் ஒன்று பிடித்திருந்தால் இந்தப் பாகம் உங்களிற்குப் பெரும்பாலும் பிடித்தே தீரும். நீங்கள் இதுவரை இந்தத் தொடரைப் பார்க்காதவர் எனில் காட்டாயம் பாருங்கள். உங்களை ஏமாற்றாது.

குறிப்பாக Mystery மற்றும் அறிவியல் புதினம் போன்ற துறையில் ஆர்வம் உள்ளவராயின் கட்டாயம் இந்தத் தொடர் உங்களைத் தொடலைக்காட்சியுடன் அப்படியே கட்டிப்போட்டுவிடும்.

Ajin: Demi-Human – தமிழ் விமர்சனம்

அண்மையில் காசில்வேனியா பார்த்த பின்னர் இன்னுமொரு அனிம் தொடரை நெட்பிளிக்சில் பார்க்கலாம் என்று எனத் தேடியபோது கண்ணில் பட்ட தொடர்தான், அஜின் – டெமி ஹியூமன் எனும் தொடர்.

புத்தகம் & மற்றும் திரைப்படங்கள்

இந்தத் தொடர் உண்மையிலேயே முதலில் அனிம் புத்தகங்களாக 2015 காலப்பகுதியில் வெளி வந்துள்ளன. பின்னர் அதை சார்ந்து இரண்டு திரைப்படங்களை எடுத்துள்ளனர். திரைப்படங்கள் எடுத்தவர்கள் அத்துடன் நிறுத்தவில்லை, தொலைக்காட்சித் தொடர்களையும் எடுத்துத் தள்ளியுள்ளனர்.

இந்த ஜப்பான் கார்ட்டூன்களுக்கு இருக்கும் பிரமாண்டமான சந்தை உண்மையிலேயே பிரமிக்க வைக்கின்றது.

கதை சிறு அறிமுகம் (No Spoilers)

சில மனிதர்கள் இறவா வரமுடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் பலர் தாமும் மனிதர்களுடன் இணைந்து வாழ விரும்பினாலும் ஜப்பான், அமெரிக்கா போன்ற அரசுகள் அவர்களைப் பிடித்து அவர்களை வைத்து மனிதத்திற்கு விரோதமான ஆராய்ச்சிகளைச் செய்கின்றது. இதனால் கோவமடையும் அஜின்கள் ஜப்பான் அரசிற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு கதையைப் பின்னியுள்ளார்கள்.

புதிய திரைப்படம்

தொடரின் மூன்றாம் பாகம் வெளிவருமா என்று தெரியவில்லை ஆனால் புதியதாக 2017இல் தொலைக்காட்சித் தொடரின் அதே பெயரில் ஒரு ஜப்பானியத் திரைப்படம் வெளியாகியுள்ளதாகத் தெரிகின்றது. விரைவில் அதைப் பதிவிறக்கிப் பார்க்க வேண்டும்.

விமர்சனம்

நான் அனிம் தொடர்களுக்கு புதியவன் என்பதனால் இதைப் பற்றி பெரியளவில் என்னால் கருத்துக் கூற முடியாவிட்டாலும் பொதுவாக மிகவும் இரசித்துப் பார்த்தேன். குறிப்பாக IBM எனும் மனிதப்போலி திடப் பொருட்கள் மிகவும் அருமையாக காட்டியிருந்தார்கள்.

பாத்திரங்கள் மற்றும் கதை வடிவமைப்பை மிகவும் அழகாகச் செய்துள்ளார்கள். ஒரு வாரத்தினுள்ளேயே நான் மொத்த இரண்டு பாகங்களையும் பார்த்து முடித்துவிட்டேன். Fantasy மற்றும் Sci-Fi வகையாறாத் தொலைக்காட்சித்தொடர்கள் பிடிக்குமென்றால் கட்டாயம் இந்த Ajin எனும் அனிம் தொடரையும் பார்த்துவிடுங்கள்.

விரைவில் இன்னுமொரு அனிம் தொடரைப் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக உள்ளது. பார்ப்போம் 😉

Castlevania – தமிழ் விமர்சனம்

அனிம் தொலைக்காட்சித் தொடர்களில் அத்தனை ஆர்வம் எனக்கு இல்லை. ஆயினும் அண்மையில் நெட்பிளிக்சில் என்ன பார்க்கலாம் என்று யோசித்தபோது இந்த காசில்வேனியா எனும் அனிம் தொடர் எனது கண்ணில் பட்டது. சரி என்னதான் இருக்கின்றது பார்த்துவிடுவோமே என்று முதலாவது அத்தியாயம் பார்த்ததும் அடடா என்று அந்தத் தொடருடன் ஒட்டிக்கொண்டேன்.

காசில்வேனியாத் தொடரின் கதை பெல்மொன்ட் எனும் குடும்ப வாரிசுகளுக்கும் இரத்தக்காட்டேரி (ட்ரகுலா)விற்கும் இடையில் நடக்கும் சண்டையை மையமாக வைத்தே தயாரித்துள்ளார்கள். இது வெறும் அனிம் தொடர் மட்டுமல்ல, இதன் பின்னால் பல வீடியோ விளையாட்டுக்கள் புத்தகங்கள் போன்றனவும் வெளியாகியுள்ளன.

முதல் நான்கு அத்தியாயங்களும் அருமையாக இருக்கின்றது ஆயினும் எதிர்காலத்தில் இது எவ்வாறு அமையப் போகின்றது என்பதை இரண்டாம் பாகம் வெளியாகியதும்தான் நாங்கள் தீர்மானிக்கலாம்.

உங்களுக்கு fantacy வகையறாத் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் பிடிக்குமென்றால் கட்டாயம் இந்தத் தொடரைப் பாருங்கள். சிறுவர்களுடன் பார்க்க அவ்வளவாக உவந்ததில்லை. இரத்தமும் சதையும் தெறிக்கும் காட்சிகள் தொடரெங்கும் நிறைந்திருக்கின்றன.

இந்தத் தொடரில் வெறும் நான்கு அத்தியாயங்கள் மட்டுமே உள்ளன. இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளது என்பது மகிழ்ச்சியான விடயம். இரண்டாம் பாகத்தில் எட்டு அத்தியாயங்கள் இருக்கும் என்றும் அறவிக்கப்பட்டுள்ளது.

13 Reasons why – விமர்சனம்

Netflix நிறுவனத்தின் 13 Reasons why எனும் தொலைக்காட்சித் தொடரைக் காணக் கிடைத்தது. நீண்ட நாட்களின் பின்னர் இப்படி ஒரு தொடரைப் பார்த்ததும் அப்படியே அசந்து போனேன்.

Theyre-from-13-Reasons-Why

பாடசாலையில் மாணவர்களின் இன்றய நிலை மற்றும் ஒருத்தரை ஒருத்தர் எவ்வாறு மனதைத் துன்புறுத்தும் விதமாக எள்ளி நகையாடுகின்றார்கள் என்பதைப் பற்றிப் பேசுகின்றது. அதைவிட இவ்வாறு நடப்பதன் விளைவு என்ன என்பதையும் காட்டுகின்றார்கள். தொலைக்காட்சித் தொடரின் 13 அங்கங்களையும் பார்த்த்த பின்னர் மனதை மிகவும் பாதித்த தொடராக இது இருந்தது என்றால் மிகையாகாது.

ஹன்னா பேக்கரின் கதை

3270

பதின்ம வயதைச் சேர்ந்த ஹன்னா பேக்கர் அமெரிக்காவின் உயர் பள்ளியொன்றில் கல்விபயில நுழைகின்றார். அந்த வயதில் இருக்கும் அன்பிற்கான ஏக்கம், காதல், நட்பு போன்றவற்றைக் கடந்து போகின்றார். இந்த நேரத்தில் இவற்றைக் கடக்கும் போது ஏற்பட்ட விளைவுகள் அவரை தற்கொலைக்குத் தூண்டி விடுகின்றது. தற்கொலை செய்ய முன்னர் சிறிய வயதில் நாங்கள் பயன்படுத்திய காசட் பீஸ் இல் தான் ஏன் தற்கொலை செய்தேன் என்று ஒலிப் பதிவு செய்து விட்டுத் தற்கொலை செய்து கொள்கின்றார். தற்கொலை செய்ய முன்னர் அந்த ஒலிப் பதிவுகள் தான் இறக்கக் காரணமாக இருந்தவர்களிடம் சென்றடையவும் வழி சமைகின்றார். இந்த ஒலிப் பதிவுகளைக் கேட்கும் நபர்களின் நிலை என்ன? இந்த ஒலிப்பதிவு பற்றி அவர் பெற்றோரிற்குத் தெரிந்தாதா? பள்ளி நிர்வாகம் என்ன செய்தது போன்ற விடயங்களை இந்தத் தொடர் அலசுகின்றது.

தற்கொலை

இந்தத் தொடரைப் பார்த்த போது தற்கொலைகளைத் தடுக்க நாம் கட்டாயம் முயற்சிக்க வேண்டும் என்பதும் அதை ஒரு முக்கிய பிரச்சனையாக நாங்கள் பார்ப்பதில்லை என்பதும் எனக்கு உறைத்தது.

பதின்ம வயதுகள் வாழ்க்கையில் மிகவும் ஒரு மிக முக்கியமான தருணம். அந்த வயதில் பெரும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டி வரும். குறிப்பாக அடுத்து உயல் கல்விக்காக தயார் செய்ய வேண்டிய நிலை, பெற்றோரின் பண நெருக்கடி என்று பல விடயங்கள் உள்ளன. இந்த மன அழுத்தத்தை எங்கனம் எதிர்கொள்வதென்பது சிலரிற்குத் தெரிவதில்லை. இதன் காரணமாக மன அழுத்தத்தின் உச்சத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பெற்றோர் குறிப்பாக தமது குளந்தைகளோடு மனம் விட்டுப் பேச வேண்டும் அவர்களுடம் நேரம் செலவு செய்ய வேண்டும் அத்துடன் அவர்களை வெறும் சிறுவர்களாகப் பார்க்காமல் அவர்கள் உலகத்தில் என்ன நடக்கின்றது என்பதனையும் அறிய வேண்டும். தனியே உங்கள் தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டு அடுத்த பதவியுயர்வை பெற்றுவிட்டேன் என்று பெருமைப் படுவதில் என்ன இருக்கின்றது? அனைத்தும் இருந்தும் பிள்ளைகள் கூடவே இல்லை என்றால் அதில் என்ன இன்பம் இருக்கின்றது? சிந்தியுங்கள் பெற்றோர்களே!

தொடர் பற்றிய குறைகள்

தொடர் ஒரு பக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் மறு பக்கத்தில் பெரும் எதிர்ப்புகளையும் சந்தித்தது. அதாவுது தற்கொலை செய்த பின்னர் ஒலிப்பதிவுகள் மூலம் பழி வாங்குவதைப் போல காட்டுவது ஒரு பிழையான முன்னுதாரணம் என்றும் இதனை நாளை மேலும் பல சிறார்கள் முயற்சிக்கலாம் என்றும் கூறி தமது கண்டனங்களைச் சிலர் தெரிவித்தனர்.

தற்கொலை செய்யும் காட்சி மற்றும் வன்புணர்வு போன்ற காட்சிகள் மிகவும் நீளமாக காட்சிப்படுத்தி பார்ப்பவரை மிகவும் சங்கடமாக உணர வைப்பதாகவும் கூறி தமது வெறுப்புகளை மேலும் சிலர் வெளியிட்டனர்.

நியூசிலாந்து அரசு இந்தத் தொடரை 18 வயதிற்குக் குறைந்தயாரும் பெற்றோர் இல்லாமல் பார்க்கக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளது.

ஆனால் நான் நினைக்கின்றேன் இந்தத் தொடர் சமூகத்தில் உள்ள ஒரு முக்கியமான பிரச்சனையை நிதானமாக ஆராய்ந்துள்ளது. இப்படியான காட்சிகள் இருந்தமையினால்தான் இந்தத் தொடர்பற்றியும் அதில் பேசப்பட்ட விடயங்கள் பற்றியும் இத்தனை தூரம் பல ஊடங்களிலும் பேசப்பட்டது என்பது என் கணிப்பு.

யார் பார்க்கலாம்?

இந்தத் தொடரில் வரும் காட்சிகள் சிலது சிறுவர்களுக்கு பொருத்தமானது என்று நினைக்கவில்லை. ஆயினும் 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் பெற்றோருடன் சேர்ந்து இதைப் பார்க்கலாம் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம். இதைப் பார்க்கும் போது முடிந்தால் அவர்கள் மனதில் உள்ள குறைகளை கேட்டறிய உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கக்கூடும்.

Season 2

இரண்டாம் பாகம் இதன் தொடர்ச்சியாக வெளிவர இருப்பதாகக் கூறப்படுகின்றது. இது பற்றிய மேலதிக தகவல்களை இங்கே படிக்கலாம். ஆயினும் முதல் பாகம் அளவிற்கு இது இருக்குமா என்றால் இல்லை என்றுதான் நான் கூறுவேன். இரண்டாம் பாகம் பெருமளவில் நீதிமன்றை சுற்றியமையும் என்பது என் கணிப்பு.

ரொபின் ஓஃப் ஷேர்வூட்


ரொபின் கூட் பார்க்காமல் வளர்ந்த குழந்தைகள் என்றால் இலங்கையில் மிக மிக குறைவாகவே இருக்கும். ஒவ்வோரு காலப்பகுதியிலும் பல விதமான ரொபின் கூட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வந்தன ஆயினும் இன்றும் என் மனதில் பதிந்து இருப்பது Robin of Sherwood எனும் தொடரே.

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு ஞாபகம் வருதா???

லொக்ஸ்லி எனும் கிராமத்தை படைகள் வந்து அழிக்கின்றன இதில் இருந்து ரொபினின் தந்தை தன் மகனைக் காப்பாற்றி விட்டு தன் உயிரை நீக்கின்றார். வளர்ந்து வரும் ரொபின் சில நலன் விரும்பிகளுடன் சேர்ந்து நொட்டிங்கம் செரீப்பை எதிர்ப்பதுதான் கதை. கதையில் இங்கிலாந்து அரசன் சிறு பாகத்திற்கு வந்து சென்றாலும் பெரும்பகுதியும் ரொபின், செரீப் இடையான போராட்டத்தை சித்தரிப்பதாகவே இருக்கின்றது.

ரொபினின் கூட்டத்திலே இருக்கும் அங்கத்தவர்களும் ஒவ்வொரு பண்பு கொண்டவர்கள். லிட்டில் ஜோன் பலசாலியும் எதையும் தூக்கியடிக்க கூடியவருமானவர். மாச் ரொபினின் உடன் பிறவா சகோதரன் கூட்டத்தில் சிறய பையன் ரொபினின் காதலியின் அன்புக்கு உரியவன். டக் என்பவர் ஒரு முந்தைய பாதிரியார் பிந்தைய போராளி அடுத்து வில் இவன் அளவுக்கதிகமாக கோவப்படக் கூடியவன். தற்போது பல ஹொலிவூட் திரைப்படங்களில் நடித்து வருகின்றான். அண்மையில் வெளிவந்த BEOWULF என்ற திரைப்பட நாயகனுக்கு இவர்தான் உருவ அசைவு கொடுத்தார்.

கடைசியாக நசீர். அரபு தேசத்தை சேர்ந்த இஸ்லாமியன். சிலுவை யுத்தம் நடந்த காலத்தில் நடந்த கதையாக சித்தரிப்பதால் பலஸ்தீனத்துக்கு சண்டையிடச் செல்வதைப் பற்றி பல பேச்சுக்கள் கதையிடையிடையே வரும். இரட்டை வாள் கொண்டு அவன் போடும் சண்டையை இரசிப்பதே தனி சுகம். மரியன் எனும் ரொபினில் காதலியை மந்திர வாதி ஒருத்தனில் கோட்டையில் இருந்த காப்பாற்றிக் கூட்டிக் கொண்டு ஓடும் போது இடை மறித்து நசீர் போடும் சண்டை இன்றும் கண் முன்னே. கறுப்பு உடையில் வரும் நசீர் மிடுக்காக வாள்வீசுவதைப் பார்த்து வீட்டில் இருக்கும் பாண் வெட்டும் கத்தியையும், மீன் வெட்டும் கத்தியையும் ஒன்றாக தூக்கிப் பிடித்து சுத்திய காலங்களை நினைத்துப் பார்க்கின்றேன்.

இதைவிட செரீப், இரக்கமில்லாத ஒரு அடக்குமுறை செய்பவன் அவனுக்கு ஒரு தளபதி கிஸ்பன். செரீப்பின் கெட்டித்தனத்திற்கு மறுபக்கமாக இருக்கும் அடி முட்டாள். முட்டாள் வேலை பார்த்து பலதடவை ரொபினிடம் அடி படுவான். எத்தனையோ தடவை ரொபின் கிஸ்பனை உயிருடன் பிடித்தாலும் ஏன் பின்னர் உயிருடன் விட்டுவிடுகின்றானோ தெரியாது.

பாடசாலையில் (இரண்டாம் ஆண்டு ??) படிக்கும் போது தொலைக்காட்சியில் மறக்காமல் பார்ப்போம். வீட்டில் எல்லாரும் இருந்து பார்க்கும் தொலைக்காட்சித் தொடர். என்னதான் தமிழ் மெகா தொடரை வீட்டில் இருந்து குடும்பமாக கும்மியடித்துப் பார்த்தாலும் இப்படியான தொடர்களை குடும்பத்தோடு இருந்து பார்ப்பதே தனி சுகம்தான்.

இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த தொடரின் முதல் இரண்டு பாகங்களிலும் ஒரு ஹீரோவும் அடுத்த பாகங்களில் வேறு ஒரு ஹீரோவும் வருவார். முதல் பாகத்தில் வரும் ஹீரோ இறந்து போய் அடுத்த ஹீரோ வருவார். ஆனால் எங்கள் பள்ளியில் நடந்த பேச்சின் படி முதல் பாகத்தில் நடித்த ஹீரோ நிசத்திலேயே இறந்துவிட்டதால் இந்த இரண்டாம் ஹீரோ வந்துள்ளார். ஆனால் நிசத்தில் அவர் இறக்கவும் இல்லை மரணிக்கவும் இல்லை. என்றாலும் IMDB யில் நடிகரின் இன்றைய தோற்றத்தைப் பார்த்தால் ஏமாற்றமாக இருக்கின்றது. எப்படி இருந்தவர் இப்ப இப்படி ஆகிட்டார்.

அண்மையில் நண்பன் டொரன் மூலம் இந்த தொடரை பதிவிறக்கி தந்தான் 2 பாகங்கள் பார்த்து முடித்தாகிவிட்டது. இனி மூன்றாம் பாகத்தைப் பார்க்கத் தொடங்க வேண்டும். மூன்றாம் பாகத்தில் இருந்து அடுத்த ஹீரோ வருகின்றார். அவர் பெயர் ரொபர்ட். செரீப்பின் தளபதி கிஸ்பனுக்கு ஒரு முறையில் சகோதரன்.

Robert of Huntingdon (Jason Connery) and his

மீண்டும் இந்த தொடர் தொடர வாய்ப்பில்லை. கடைசி அத்தியாயம் வெளியாகி இப்போது 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. என்றாலும் என்றும் இனிமையான நினைவுகளை மீட்டுத்தரக் கூடிய இந்த ரொபின் என்றும் என் மனதில் பசுமரத்தாணியாக இருப்பான்.

“ஹேர்ண் புரட்டக்ட் அஸ்”