Category Archives: தொடர்வினை

அழகே காதலே கடவுள் பணம் தருவாரா?

முன்னுரை முதிய உரையொன்றும் இல்லாமல் நேரடியாகப் பதிவிற்கு குதிக்கின்றேன்.

அழகு

ம்… பலபேரும் அழகென்றால் வெளி அழகல்ல, உள் மனதில் அழகே முக்கியம் என்பர். சிலரோ அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆகவே அகம் அழகாக இருந்தால முகம் அழகாக இருக்கும் என்று சொல்லுவர். இப்படி சொல்லுபவர்களை எங்கேயாவது கண்டால் நங்கு நங்கு என்று இரண்டு குத்துப் போட மறக்கவேண்டாம். உலகம் எப்போதும் (99 வீதம்) அழகென்று கணிப்பது வெளியழகைத்தான். இப்போதெல்லாம் பொடியள் பெண் தேடும் அம்மாவிடம் தனது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கொண்டிசன் போடுவினம்.

  1. மெல்லிசா இருக்கோணும்
  2. வெள்ளையா இருக்கோணும்
  3. தலைமயிர் நீளமா இருந்தால் நல்லம்
  4. ஒரு கிரஜூவேட் என்றால் நல்லம்
  5. இங்கிலீசு கதைக்கத் தெரிந்தால் நல்லம்

இப்பிடிப் பட்டியல் நீளும். ஆனாலும் ஒரு பெண் கொள்ளையழகாக இருந்துவிட்டால் எந்த கொண்டிசனும் இல்லாமல் கனடா மாப்பிள்ளைமார் கொத்திக்கொண்டு போடுவினம். 😉

வந்தி தன் பதிவில் ஜஸ்வர்யா ராயைப் போட்டு அழகு பற்றி எழுதியிருந்தார். எனக்கு அழகென்றால் கண்முன்னாலே வருவது யார் தெரியுமா???

ஜ லவ்யூடா செல்லம்
ஜ லவ்யூடா செல்லம்

மீரா ஜாஸ்மின்!

நான் O/L படித்துக் கொண்டிருக்கும் போது எனது வகுப்புத் தோழன் ஒருவன் மச்சான் நான் ஒரு பெட்டைய லவ்வு பண்ணுறண்டா என்றான். அவட பெயர் பாதி தமிழ்டா மீதி கிருஸ்தவப் பெயர்டா என்று வேற ஆப்பு வைத்தான். யாருடா அது எண்டு தேடிப் பார்த்தா, நேற்று இரவு ரண் திரைப்படம் பார்த்தானாம். அந்த நொடியில் இருந்து மீரா இரசிகன் ஆகிவிட்டானாம்.

இன்று கேரளத்துப் பைங்கிளிகள் பல வந்து தமிழ் சினிமாவை ஆட்டுவித்தாலும், என்றும் என் மனதில் மீரா மீரா மீரா.

டோய்! உனக்கு மீராவா.. ரொம்ப ஓவரா இல்லை? என்று நீங்கள் கேட்பது கேட்கின்றது.. கூல் டவுன் 😉

காதல்

இதால நல்லா வந்தவனும் இருக்கின்றான் நொந்து கெட்டவனும் இருக்கின்றான். எனக்கு காதல் அனுபவம் என்று பெரிதா இல்லாவிட்டாலும் கொஞ்சமா இருந்துச்சு. அதுவும் ஆங்கிலத்தில. நான் பேசுறது அந்த வெங்காயத்துக்கு விளங்காது, அந்த வெங்காயம் பேசுறது எனக்கு விளங்காது. இப்படியே அந்தக் காதலும் விளங்காம போயிட்டுது 😉

i love you so much

உண்மையில் காதல் என்பதை பலரும் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருத்தர் விரும்புதல் என்றே வகைப்படுத்துகின்றனர். ஆனால் ஆங்கிலத்தில் காதல் எனும் வார்த்தைக்கு ஒப்பான சொல் LOVE. அந்த சொல்லுக்கு வெறுமனே ஆண்-பெண் காதலை சாட்டி முடிக்கவில்லை. தாய்-சேய், தந்தை-சேய், ஆசிரியை-மாணவர் என்று அந்தப் பட்டியல் நீளும்.

காதல் என்று ஒன்று இல்லாவிட்டால் இவ்வுலகில் எந்த உயிரினமும் இருந்திருக்க முடியாது. அடப் போப்பா! எல்லாம் ஈஸ்ஜன், புரஜட்டோன், தெஸ்தெஸ்தரோன் செய்யிற வேலை. காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என்று நீங்கள் புலம்புவதும் எனக்கு கேட்காமல் இல்லை.

கடவுள்

மனிதன் தன் தேவைக்காக உருவாக்கிய மகப் பலம் பொருந்திய ஒரு கண்டுபிடிப்பு. ஆதிகாலத்தில் தன்னைச் சுற்றி நடப்பதைப் பற்றி சற்றும் அறிய முடியாத மனிதன் கடவுள் எனும் மாயையுள் வீழ்ந்து தன் மனதை தேற்றினான். காலப் போக்கில் கடவுள்கள் பல தோண்றி மதங்கள் பல தோண்றி ஒருத்தனை ஒருத்தன் மதங்களின் பெயரைச் சொல்லி கொண்று குவித்தமைதான் மிச்சம்.

சிலுவை யுத்தம் முதல் உலகெங்கும் இன்று இந்தப் பதிவை நான் எழுதும் நேரம் வரை மதங்களின் பெயரால் கொலை கொள்ளை.

சிலுவை யுத்தம்
சிலுவை யுத்தம்

இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் நான்தான் கடவுள் என்று கூறி ஊரை ஏமாற்றும் கூட்டம். அம்மா பகவான், ஆத்தா பகவான் அது இது என்று ஊரை ஏமாற்றும் பேர்வழிகள். இதில் பெரிய பகிடி என்னவென்றால் இவர்களிற்கு உலகம் எங்கும் கொழும்புக் கிளை, மலேசியக் கிளை, சிங்கப்பூர் கிளை. என்ன செய்வேன் இந்த தமிழ் இனத்தை.

அடியேன் கோவில் குளம் என்று அலைவதில்லை. கணக்கா பரீட்சைகள் வரும் போது மட்டும் டான் என்று கோவில் வாசலில் வந்து நிற்பேன். ஆத்தா ஆத்தா என்று உருகி உருகி வழிபடுவேன். தேர்வு முடிவுகள் வந்த உடனே ஆத்தாக்கு அரிச்சனை விழும். 😉

பணம்

பணம் பற்றி நான் கூறியா தெரிய வேண்டும். பணம் பாதாளம் வரை பாயும். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். ஆனால் என்ன செய்வது எனக்குத்தான் பணம் வருதில்லை. தளத்திற்கு வந்திருக்கிறவங்கள் யாராவது மனம் வைத்து இங்கயிருக்கிற விளம்பரங்களில கிளிக்கினால் தவிர பணம் எனக்கு வர சந்தர்ப்பமே இல்லை. ஹி..ஹி… சும்மா 😉

பணம் - கடத்தல் - கொள்ளை
பணம் - கடத்தல் - கொள்ளை

பெரிய பணக்காரணாக இல்லையே என்று அப்பப்ப கண்ணீர் வடித்தாலும் இருப்பதை வைத்து வாழப் பழகினால் அதுவே செல்வம். அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

இத்துடன் இந்த சிறிய பதிவை முடிப்பதுடன் அழைத்த வந்திக்கும் நன்றிகள். இப்போ நான் 5 பேரை அழைக்க வேண்டுமே. இதுதான் எனக்கு கஷ்டமான இடம்!!!

  1. ரவிசங்கர்
  2. அஷோக்பரன்
  3. ஊரோடி பகீ
  4. புல்லட்டு
  5. நிமல்

நண்பர்களே மானத்தை கப்பலேற்றாமல் ஒருத்தராவது ஒரு பதிவு போடுங்கையா 😉

71 : நாடு நல்ல நாடு (தொடர்வினை – Meme)

நாடு நல்ல நாடு என்ற தொடர்வினையில் அண்மையில் திரு.ரவி அவர்கள் என்னை அழைத்து இருந்தார். தமிழ் வலைப்பதிவு உலகம் தடம் மாறிச் செல்கின்றதோ என்று அனைவரும் கலங்கும் நேரத்தில் ரவி போன்ற அன்பர்கள் அதைப் பொய்ப்பித்து வருகின்றனர். அவர் அழைப்பை ஏற்று நான் இலங்கை பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன். இலங்கையில் இனப் பிரச்சனை போன்ற கசப்பான விடையங்களை இங்கே தவிர்த்து விடுவதாக முடிவெடுத்துள்ளேன். அது பற்றி பல பதிவுகள் இணையம் முழுவதும் இறைந்து கிடப்பதால் இந்தப் பதிவில் அது பற்றிய விடயங்களை நான் அவ்வளவாகத் தொடப்போவதில்லை. மேலும் இங்குள்ள விடயங்கள் பல கலைக்களஞ்சியத்தில் இல்லாத சுவையான தகவல்களாக இருக்கும் என்று நம்புகின்றேன். சரி இனிப் பதிவிற்குப் போவோம்!!!!

இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என்று பலராலும் அறியப்பட்ட அழகிய நாடாகும். இலங்கை என்று தமிழில் வழங்கப்ட்டாலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் நாட்டின் பெயர் ஸ்ரீ லங்கா என்று வழங்கப்படுகின்றது. இதன் அர்த்தம் சுபீட்சமான எதிர்காலம் என்பதாகும். ஆயினும் இவ்வாறு பெயர் மாற்றிய காலத்தில் இருந்து நாட்டின் எதிர்காலம் மிகவும் மோசமாகிப் போனது.

இந்த நாட்டின் தலைநகரமாக கொழும்பு திகழ்கின்றது. அத்துடன் கொழும்பு மாநகரே நாட்டின் பெரிய நகரமாகவும் வர்த்தகத் தலை நகரமாகவும் திகழ்கின்றது. கொழும்பு நகரம் 15 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கொழும்பு 6 (வெள்ளவத்தை) மற்றும் கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை) ஆகிய இரு பகுதிகளிலும் தமிழர்களே அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். கொழும்பு நகரின் பெரும்பாண்மையான மக்கள் தமிழ் மொழி பேசுவோர் என்பதும், தற்போதைய உப மேயர் தமிழர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இலங்கையின் தேசிய கீதம் சிங்களத்தில் இருந்தாலும் தமிழிலும் அதன் மொழி பெயர்ப்பு இருக்கின்றது. அத்துடன் தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக அரச வைபவங்களில் பெரும்பாலும் தமிழிலேயே தேசிய கீதம் இசைக்கப்படும். நான் அறிந்த வரை இலங்கையில் மட்டுமே இரண்டு மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. உங்களுக்குத் தெரிந்த வேறு நாடு இருந்தால் இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள்.

இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதி எனும் போது நாட்டின் வடக்கு – கிழக்குப் பகுதி, மத்திய மலைநாட்டுப்பகுதி, கொழும்பு மற்றும் அதை அண்டிய புறநகர்ப் பகுதி என்பனவே. இதில் வடக்கு – கிழக்கு பகுதிகளில் தமிழர் அறுதிப் பெரும்பாண்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியையே இவர்கள் தமிழீழ மாநிலமாக்குமாறு வேண்டி வருகின்றனர். மத்திய மலை நாட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சில நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் ஆங்கிலேயரால் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்து வரப்பட்ட மக்களாவர், இன்று இவர்கள் நாடு முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் தற்போதும் தோட்டங்களில் பெரும்பாலானாவர்கள் அடிப்படை வசதி இன்றி அல்லல் பட்டே தமது வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

இலங்கை என்றால் அனைவரது எண்ணத்திலும் வருவது இலங்கைத் தேயிலை. இலங்கையின் மத்திய மலைநாட்டில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. சில ஆண்டுகள் முன்பு வரை தேயிலையே நாட்டுக்கு அதிகூடிய வருமானத்தை ஈட்டித் தரும் துறையாக இருந்தது. ஆயினும் தற்போது தைத்த ஆடைகள் பெருமளது லாபத்தை ஈட்டித்தருகின்றது.

நாட்டில் இரண்டு பிரதான இயற்கைத் துறைமுகங்கள் உள்ளன. முதலாவது காலி துறைமுகம். இது தென் மாகாணத்தின் தலைநகரில் அமைந்துள்ளது. இரண்டாவது திருகோணமலை துறைமுகம்.
இது முன்பு இணைந்து இருந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தின் தலைநகரில் உள்ளது. இந்த துறைமுகம் வலையத்தில் ஒரு பெரிய மற்றும், பாதுகாப்பான துறைமுகமாக இருந்து வருகின்றது. இதனால் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தத் துறைமுகத்தில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயல்கின்றன. சிங்கப்பூர் ஜப்பானியரிடம் வீழ்ந்த பின்பு இந்தத் துறைமுகமே றோயல் நேவியின் பிராந்தியத் தலமையகமாகச் செயற்பட்டது.

இயற்கை அழகிற்கு இலங்கை பெயர் போனது. அழகிய மலைகள் நிறைந்த மத்திய பகுதியும், மணற் கடற்கரை நிறைந்த கிழக்கு, தெற்குப் பகுதிகள் சுற்றுலாத்துறைக்கு உயிரூட்டுகின்றன. நாட்டின் தற்போதைய யுத்த சூழ்நிலையிலும் பல உல்லாசப் பயனிகள் நாடடைச் சுற்றிப் பார்க்க வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் 100 வீதம் இலவசமாகும். ஒருவர் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை அரச செலவில் கற்பிக்கப்படுகின்றார். அத்துடன் குறைந் வருமானம் உடைய பல்கலைக்கழக மாணவர்களின் பணத் தேவைக்கா 2500 ரூபா உதவிப்பணமும் வழங்கப்படுகின்றது. அத்துடன் நாடெங்கிலும் உள்ள அரச வைத்திய சாலைகளில் மருத்துவம் முற்றிலும் இலவசமாகும். ஆயினும் இவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக மேற்தட்டு வர்க்கத்தினர் தனியார் பாடசாலைகள், மருத்துவ மனை என்பவற்றை நாடுகின்றனர். ஆயினும் இதுவரை தனியார் கல்லூரிகள் அமைப்பதற்கு இலங்கையில் தடை நிலவிவருகின்றது.

நாட்டில் வாழ்ந்து வரும் முஸ்லீம்கள் பெரும்பாண்மையானவர்கள் தமிழைப் பேசக் கூடியவராகவோ அல்லது தாய்மொழியாகக் கொண்டவராகவோ காணப்படுகின்றனர் ஆயினும் இவர்கள் தமிழர்கள் என்று வகைப்படுத்தப்படுவதில்லை. நாட்டில் முஸ்லீம்கள் தனி ஒரு இனமாக கணிக்கப்பட்டு வருகின்றனர்.

நாட்டில் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. நாட்டிற்குள் வரவேண்டுமானால் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாகவே வரவேண்டிய தேவை உள்ளது. அத்துடன் வர்த்த நடவடிக்கைகளுக்காக கொழும்புத் துறைமுகமே பயன்படுகின்றது.

சரி இனி மெமெ கொள்கையின் படி யாரையாவது நான் அழைக்க வேண்டும். யாரை நான் அழைப்பது என்றே புரியவில்லை!!!!. எது எவ்வாறாயினும் ரவி அவர்களின் வேண்டுகோளினை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைக்கின்றேன்.

நீங்கள் உங்கள் நாடு பற்றி எழுத விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவித்து விட்டு எழுதுங்கள்…!!!!