Category Archives: தமிழ்

ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்


திருமணம் என்பது ஒரு அழகான நிகழ்வு. முன்னோர்கள் சொன்னபடி சொர்க்கத்திலே நிச்சயிக்கப்படுகின்றது. ஆனால் இன்றய பல திருமணங்கள் அரைவாசியில் ஃபாஸ்ட் ஃபூட் உணவுமாதிரி உடனடியாக உருவாகி உடனடியாக முடிவடைந்துவிடுகின்றன. Continue reading ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்

எனக்கு வெட்கம்

நாலரை மணி வகுப்பு
மூன்று மணிக்கே வகுப்பில்
காதலுக்காக
ஒரு மணி நேரம்
செலவழித்தால் என்ன?

நாலரை மணி
நத்தையாய் வருகின்றது
நாலரை வருடம்
கடந்துவிட்டதாய் உணர்வு
என்னவள் வரவில்லை

காத்திருக்கின்றேன்
காதலியே
காலமெல்லாம் காத்திருபராம்
காதலர்கள்
ஒரு மணிநேரம் காக்க
மாட்டேனே என்னவளே!

நாலரை மணிக்கு
நாதஸ்வர இசைபோல
நகர்ந்து வருகின்றாள்

வைத்த கண்ணை
எடுக்க முடியவி்ல்லை
என்னதான்
நவ நாகரீகப் பெண்கள்
புரட்சி படைத்தாலும்
இவளின்
பாவாடைத் தாவணியின்
பரம இரசிகன் நான்

ஒரு பார்வை வீசி
அப்பால் நகர்கின்றாள்
அது
அன்பா? பரிவா?
இல்லை
நக்கலா?
நிச்சயம் புரியவில்லை

உயிரியல் கற்பிற்கின்றார்
ஆசிரியர்
உயிர்தாண்டி வலிக்கின்றது
அவள் நினைவு

கவனமெல்லாம் அவள்மேல்
பாடம் பப்படம் ஆகின்றது
கனவில் படம்
அவள் என்னருகில்
என் கை அவள் தோள் மேல்
கை கோர்த்து நடக்கின்றோம்
பாபிலோன் தோட்டத்தில்
என் மார்பில் முகம் பதித்து
பல கதை பேசுகின்றாள்
விழிகளில் ஏக்கத்துடன்
நோக்குகி்ன்றாள்

கண்விழித்து எழுகின்றேன்
ஒலிக்கின்றது
ஆசிரியரின் திட்டல்
அதனாலும் ஒரு நன்மை
இப்போது அவள் பார்வை
நூறு வீதம் என்மேல்

ம்ஹூம்
துணிவில்லை
நேருக்கு நேர்
அவள் கண்ணைப் பார்க்க

ஓரக் கண்ணால்
ஓரமாய்ப் பார்க்கின்றேன்
அவளும்
ஒய்யாரமாய் உட்கார்ந்து
ஓரமாய்ப் பார்க்கின்றாள்

எப்போதும் பார்க்கின்றாள்
பேச மட்டும்
மறுக்கின்றாள்
ஒரு புன்னகையாவது
உதிரக் கூடாதா??
ஒரு நேர்ப் பார்வை
வீசக் கூடாதா??
நான் என்ன படுபாதகனா?
இல்லை கொலைகாரனா?

ஆசை அவளுக்குமோ?
மனம் படபடக்கின்றது
கைகள் வியர்க்கின்றது
இதயம் சில்லிடுகின்றது
இரத்தம் பாய்கின்றது
புதுவீச்சுடன்

இன்று எப்படியும்
பேசுவது
உள்மனது வீரியம் கொள்கின்றது
அருகில் நகர்கின்றேன்
தொண்டை குழியல்
அனைத்தும் வற்றிவிடுகின்றது

கண்ணாடி முன்னாடி நின்றபோது
பேசியவை
கண்ணடித்து விட்டு மறந்துவிட்டன
மீண்டும் அவ்விடம் விட்டு நகர்கின்றேன்

ஆனால் அவளிடம்
சென்று பேச மட்டும்
என்னால் முடியாது
மனதில் இருப்பதை
அவளிடம் சொல்ல முடியாது
ஏனெனில்
எனக்கு வெட்கம்
ஆனால் நண்பர்கள் பார்வையில்
எனக்கு ஈகோ!

சுமார் இரண்டு வருடங்களுக்கும் முன்பு எழுதியது. கவிதை போல இருந்தாலும் கவிதைதான் என்று உறுதி தரவேண்டியது உங்கள் பொறுப்பு. இப்போதெல்லாம் இப்படியான கவிதைகள் வருவதில்லை. வயதாகிவிட்டது போலும்.

இலங்கை பதிவர் சந்திப்பு – 2009

பல காலமாகவே பலராலும் விரும்ப பட்டாலும் காலத்தின் சில சில நெருக்கடிகளால் பலரும் இந்த முயற்சியை ஆரம்பிப்பதிலும் நடத்துவதிலும் பின்னடித்தனர். இப்போது இதற்கான கால நேரங்கள் கனிந்துவிட்டதால் இலங்கையில் நான்கு சிங்கங்கள் (அப்படித்தான் வந்தியத்தேவன் சொன்னார்) களத்தில் இறக்கி இந்த அருமையான நிகழ்வை நடத்திக் காட்டியுள்ளனர்.

Blogger Birthdayஇந்த நிகழ்விற்கு இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இன்றய தினத்தில்தான் பிளாக்கர் தளத்தின் 10ம் பிறந்தநாள். அடப்பாவமே அதுக்கும் கேக்கு வெட்டி கொண்டாடிட்டானுகள்.

பெரும்பாலம் பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் கலந்துகொண்டனர். பலரும் பிளாக்கரையே பயன்படுத்துவது அவர்கள் பேசும்போது தெரிந்த்து. இது என்போன்ற வேர்ட்பிரஸ் வலைப்பதிவருக்கு வருத்தமளிப்பதாக இருந்தாலும் பிளாக்கர்.காம் போல வேர்ட்பிரஸ்.காம் பல இலவச சேவைகளை தரவில்லை என்பது கவலையான உண்மையே!!! ஒரே தீர்வு தனித்தளத்தில் வேர்ட்பிரஸ் நிறுவுவதுதான்.

நிகழ்வு தொடங்கியதில் இருந்து முடியும் வரை புல்லட்டு வைத்த மொக்கைகள் தாங்காது. தொடங்கியதில் இருந்து வடை சாப்பிட வந்தவர்கள் முதல் உண்டியல் பெட்டி திறந்தமை வரை ஒரே சரவெடி. 😉

நிகழ்வில் நேரம் போதாமல் போனது கண்கூடு. நான்கூட சில கருத்துக்களைச் சொல்ல விழைந்தாலும் நேரம் இடம் கொடுக்கவில்லை. என்றாலும் அனைத்து சக வலைப்பதிவுலக உள்ளங்களை சந்தித்தமை பெரும் சந்தோஷமே.

தட்டச்சு முறைகள் பற்றி காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது மயூரன் சொன்னார், நயந்தாராவா நமீதாவா போன்ற தலைப்புகளுக்கு சமனாக பாமினியா, தமிழ் 99 ஆ என்ற தலைப்பும் பட்டை கிளப்பும் என்று. நான் பாமினியில் இருந்து தமிழ் 99க்கு மாறிய போது எழுதிய கட்டுரையை வாசியுங்கள் உண்மைபுரியும்.

இதைவிட யாழ்தேவி திரட்டி பற்றியும் காரசாரமாக வலைப்பதிவர்கள் முட்டி மோதிக்கொண்டார்கள். யாழ்தேவி என்ற பதம் ஒரு பிரதேசத்தை வட்டமிட்டுக் காட்டுவதாக பல வலைப்பதிவர்கள் முறைப்பட்டுக் கொண்டார்கள்.

இதைவிட வலைப்பதிவு எழுதி பொலீஸ் தன்னைப் பிடித்தது எனும் பகீர் தகவலையும் ஒரு நண்பர் வெளியிட்டு அடிவயிற்றில் புளியைக் கரைத்தார்.

இன்னுமொரு விடையம் ஆண்டு 6 கற்கும் ஒரு இளைய பதிவர் வந்து கலக்கினார். தந்தையைப் பின்பற்றி சிறுவர் வலைப்பதிவை ஆரம்பித்தாலும் இப்போது தந்தைக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிசெய்யுமளவிற்கு உயர்ந்துவிட்டாராம். பெயர் ஞாபகம் இல்லை. இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள்.

முக்கியமான இன்னுமொரு விடையம் ஊடக கல்லூரி மாணவர்கள் சிலர் வந்திருந்தனர். அனைவரும் வேர்ட்பிரஸ்.காம் தளத்தை வைத்திருந்தமை மனதிற்கு நிம்மதி. இணையத்தில் கட்டுரைகளை சுட்டுவிட்டு நன்றி இணையம் என்று மட்டும் போடும் பத்திரிகைகளையும் சாடி பேசிய மயூரன் இப்படி செய்யவேண்டாம் என்று ஊடக கல்லூரி மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

அடுத்த முறை வலைப்பதிவர் சந்திப்பு நடக்கும் போது லோஷன் சொன்னமாதிரி குளு குளு அறையில் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சந்திப்பாக இருக்கட்டும். இதன் மூலம் வலைப்பதிய புதிதாக வரும் பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதற்கான என் பங்களிப்புகள் அடுத்த முறையிருக்கும்.

பி.கு: கொட்டாஞ்சேனையில் இருந்து வெள்ளவத்தை தமிழ் சங்கம் மண்டபத்திற்கு இலவசமாக காரில் கூட்டிச்சென்ற சேது அவர்களுக்கு மிக்க நன்றி.

என் விருப்ப ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்

ஆங்கில தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் பழக்கம் எம்மில் பலருக்கும் உண்டு. உதாரணமாக சிறு வயதில் நைட் ரைடர், ரொபின் ஓப் ஷேர்வூட், டார்ஸான் போன்ற தொடர்களை எம்மில் பலர் பார்த்திருக்கின்றோம். சினிமாவிற்கு சமனான செலவு, தரத்துடன் ஆங்கிலத் தொலைக்காட்சித் தொர்களை எடுப்பது அவர்களின் சிறப்பு. துரதிஷ்ட வசமாக எங்கள் தமிழ் தொலைக்காட்சிகள் யாவும் ஒரு ஒப்பாரி வைக்கும் பெண்ணையும் அவரைச்சுற்றிய ஆண்களையும் பற்றியதாக அமைந்துவிட்டது. இன்னுமொரு நூற்றாண்டுக்கு அவை மாறப்போவதில்லை. அவற்றை மாற்றச்சொல்லிக் கேட்டு தாய்குலத்தில் சாபத்திற்கு ஆளாக எனக்கு விருப்பமில்லை.

இந்த செப்டம்பர் மாதத்தில் எனக்கு விருப்பமான மூன்று ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள் ஆரம்பிக்கின்றன அல்லது ஆரம்பித்துவிட்டன. இவை பற்றிய சுருக்கமான என் கருத்துக்களைத் தொடர்ந்து படியுங்கள்.

1. Prison Break

சாதாரண சிறையுடைப்புக்கதை என்று நினைத்துவிடாதீர்கள். மண்டையைக் காயப்போட்டுப் பார்க்குமளவிற்கு விறுவிறுப்பானதும் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதும்தான் இந்த தொலைக்காட்சித் தொடர். லிங்கன் பரோ எனும் அப்பாவி மனிதனை ஒரு கும்பல் பொய் சாட்சிகள் மூலம் சிறைக்கு அனுப்புகின்றது. லிங்கன் பரோவின் தம்பி மைக்கல் ஸ்கோபீல்ட், அண்ணாவைக் காப்பாற்ற திட்டம் தீட்டுவதே கதை.

சிறையை உடைக்க சிறைக்குள் புகுந்தாக வேண்டும், ஆகவே தான் வங்கியில் கொள்ளையடிப்பது போல ஒரு நாடகமாடி அண்ணா இருக்கும் அதே சிறைச்சாலைக்குச் செல்கின்றான். அங்கிருந்து தானும் தன் அண்ணனும் தப்புவதற்கு வழிகளைச் சமைக்கின்றான். இதில் விருப்பத்துடனும், விருப்பமில்லாமலும் பல நபர்கள் சேர்ந்து கொள்கின்றனர். பாகம் ஒன்றில் சிறைச்சாலையை உடைத்து இவர்கள் தப்புகின்றனர்.

பாகம் இரண்டில் சிறைச்சாலைக்கு வெளியே இவர்கள் தப்பி வாழுவதற்கு செய்யும் முயற்சிகள் பற்றியது. இவர்களை விடாமல் துரத்தும் அரசு ஒரு பக்கம், இவர்களை கொல்லத்துடிக்கும் கம்பனி எனும் கும்பல் மறுபக்கம் என இவர்களுக்கு இரு முனைத்தாக்குதல். இவற்றில் இருந்து எவ்வாறு தப்புகின்றனர் என்பதுதான் பாகம் இரண்டு.

பாகம் மூன்று பனாமாவில் உள்ள சொனா எனும் சிறைச்சாலையில் நடக்கின்றது. சட்டம் எதுவும் ஒழுங்காக இல்லாத சிறைச்சாலையில் மாட்டும் மைக்கல் ஸ்கோபீல்ட் அங்கிருந்து தப்ப முயற்சிப்பது பாகம் மூன்று.

பாகம் நான்கு இப்போது ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டதி. எம்மைபோல இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ளோர் டொரன்ட் மூலம் இறக்கிப்பார்க்க வேண்டியதுதான். நான்காம் பாகம் மீள அமெரிக்காவில் நடக்கின்றது. கயவர் கும்பலான கம்பனி எனும் நிறுவனத்தில் இரகசிய தகவல்கள் அடங்கிய வட்டை மீட்டு எடுத்து அரசிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு மைக்கலின் குழுவினருக்கு வந்து சேர்கின்றது. இதை உத்தியோக பூர்வமற்ற முறையில் இவர்கள் செய்யவேண்டிய நிர்ப்பந்தம். இதை செய்து முடிப்பார்களா அல்லது செய்து முடிக்காமல் சிறை செல்வார்களா என்பதை இனி பார்த்து தெரிந்து கொள்ளவேண்டியதுதான்.

2. Sarah Connor Chronicles – Terminator


டேர்மினேட்டர் திரைப்படத்தைப் பற்றித் தெரியாதவர்கள் இவ்வையகத்தில் இருக்க முடியாது. ஆர்னோல்ட் ஸ்வாஸ்னேகருக்கு புகழ்வாங்கிக் கொடுத்த்துடன் உலகறியச்செய்ததும் இந்த திரைப்படம்தான். கதை என்னவென்றால் எதிர்காலத்தில் உலகை இயந்திரங்கள் ஆக்கிரமிக்கின்றன. மனிதனை அவை அழித்தொழிக்கின்றன. அவற்றை எதிர்த்து மனிதர்கள் போராடுகின்றார்கள். இவ்வாறு போராடும் மனிதர்களின் தலைவர் ஜோன் கோனர். ஜோன் கோனரை அழிக்க முடியாத இயந்திரங்கள், ஜோன் கோனர் பிறக்க முன்னரே அவனது தாயாரைக் கொல்லத் திட்டமிட்டு பழைய காலத்துக்கு ஒரு இயந்திரத்தை அனுப்புகின்றனர். அந்த இயந்திரம் தன் தாயாரை கொல்லாமல் இருக்க ஒரு வீரனை ஜோன் கானரும் பழைய காலத்துக்கு (அதாவது எங்கள் நிகழ்காலம்) அனுப்பிவைக்கின்றார். இதில் யார் வென்றார் யார் தோற்றார் என்பதே பாகம் ஒன்று.

பாகம் இரண்டில் ஜோன் கோனர் சிறு பையனாக இருக்கும் போது மீண்டும் அவனை அழிக்க ஒரு இயந்திரத்தை இயந்திரங்கள் அனுப்புகின்றன. அந்த இயந்திரத்திடம் இருந்து தன்னைக் காப்பாற்ற ஜோன் கோனர் தான் ஒரு இயந்திரத்தை மீள் நிரலிட்டு அனுப்புகின்றான். இதில் எந்த இயந்திரம் வென்றது எந்த இயந்திரம் தோற்றது, ஜோன் கோனர் தப்பினாரா வென்றாரா என்பது மிகுதிக் கதை.

2ம் திரைப்படத்துக்கு பின்னர் 3ம் திரைப்படத்துக்கு முன்னர் நடப்பதாகவே இந்தத் தொலைக்காட்டசித் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த உலகை தம் கட்டுப்பாட்டுக்குள் இயந்திரங்கள் எடுக்கும் நாள் (Judgment Day) நெருங்காமல் இருக்க ஜோன் கானரும் இவர் தாயாரும் எடுக்கும் முயற்சிகள் பற்றியதே இந்த தொடர். இங்கும் வழமை போல எதிர்காலத்தில் இருந்து இயந்திர மனிதர்கள் வருகின்றார்கள். ஜோன் கானரைக் கொலைசெய்ய முயற்சிக்கின்றார்கள் ஆயினும் அவர்களிடம் இருந்து காப்பாற்ற கொமோடி எனும் இயந்திர மனுசி வருகின்றார்.

உலகின் எதிர்காலத்தை மாற்ற இவர்கள் போராடுவதுதான் இந்தக் கதை. இப்போது இந்த தொடரும் அமெரிக்காவில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டது. இரண்டாம் பாகம் ஆரம்பித்து அதில் இரண்டு அத்தியாயங்களும் முடிவடைந்துவிட்டது.

பி.கு: திரைப்படம் 4ம் பாகம் 2009 ஜூலையில் வெளிவர உள்ளது.

3. Heroes


இது மனிதனின் கூர்ப்பியலை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட தொலைக்காட்சித்தொடர். மொஹிந்தர் சுரேஷ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளர். இவரின் தந்தை மரபியலில் ஆர்வம் கொண்டு அமெரிக்கா சென்று பல ஆராய்ச்சிகள் செய்கின்றார். இவ்வாறு ஆராய்ச்சி செய்வதன் மூலம் கூர்ப்பின் மூலம் விஷேட திறமைகள் கொண்ட மனிதர்களை இனம் காண்கின்றார். இவர் திடீரென ஒருநாள் கொலை செய்யப்படுகின்றார்.

தந்தையார் கொலையுண்ட காரணத்தை அறிய சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லு சுரேஷ் அங்கு விஷேட திறமைகொண்ட பல மனிதரைக் காண்பதுடன் தன் தந்தையின் கனவுப் பயனத்தைத் தொடர்கின்றார். சுரேஷாக நடிப்பவர் செந்தில் ராமமூர்த்தி எனும் தமிழன். நம்மவர்கள் பெருமை பட வேண்டிய விசயம்தான். இதில் பயங்கர கடி என்னவென்றால், சென்னையும், சென்னைப் பல்கலைக்கழகமும் காட்டப்படும் போது சென்னை ஏதோ ஹிந்தி ஊர் போன்று காட்டுவார்கள். எங்கும் ஹிந்திப் பெயர்பலகைகள், ஹிந்தி பேசும் மக்கள் என பல பல.

இந்த தொடரில் விஷேட தன்மைகள் கொண்ட பலர் இருந்தாலும் என்னை நன்கு கவர்ந்தது பீட்டர் பெட்ராலி, ஹிரோ நக்கமுரா ஆகிய இரு பாத்திரங்களுமே. ஹிரோ நக்கமுரா ஒரு ஜப்பானியப் பாத்திரம் அத்துடன் அவருக்கு நேரத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை உண்டு. அதாவது எதிர்காலம், பழையகாலம் என்று சுற்றி சுற்றி வருவார். இது போல பல விஷேட சக்தியுள்ள பாத்திரங்கள் இந்த தொடரில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதையில் வரும் வில்லன் 2007ம் ஆண்டின் சிறந்த வில்லன் எனும் விருதைப் பெற்றான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எப்படியான வில்லன் என்று. அருமையான நடிப்பு. சைலார் என்ற பெயருடன் வரும் இவன் மற்றவர்களின் விஷேட சக்திகளைத் திருடுவதில் ஆர்வம் கொண்டவன். இவன் மற்றவர்களைக் கொன்று அவர்கள் மூளையை உண்பதன் மூலம் மற்றவர்களின் சக்தியைப் பெறுவான். இவனை எதிர்க்கும் வலிமை பீட்டர் பெட்ராலிக்கும், ஹிரோ நக்கமுராவிற்குமே உண்டு. மற்றவர்கள் இவனை எதிர்த்து நின்றால் ஒரு நிமிடம் தாக்குப்பிடிப்பதே கஷ்டம்.

இந்த மாதம் இந்த தொடர் 3ம் பாகம் ஆரம்பிக்க உள்ளது. டொரன்ட் மென்பொருளை இதற்கா துடைத்து வைத்துள்ளேன் இறக்க வேண்டியதுதான்.

இதைவிட மேலும் பல தொடர்களைப் பார்ப்பேன், ஆனாலும் மனதில் நச்சென்று நிலைத்து நிற்பது ஏனோ இந்த தொடர்கள் மட்டும்தான்.

ஓர்கூட் கொள்கை கொடுமை

ஓர்குட்டில் ஒருத்தர் என்பெயரையும் ஒரு புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தியிருந்தார். இது பற்றி ஆர்கூட்டுக்கு நான் அறிவித்திருந்தேன். அது பற்றி ஓர்கூட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைப்பற்றி கிட்டத்தட்ட இப்ப நான் மறந்தே விட்ட நிலையில் ஓர்கூட்டிடம் இருந்து ஒரு மெயில்.

ஹாய் Mayu,

orkut இல் முறைகேடு என்று “2007-10-02” தேதியில் புகார் அளித்ததற்கு நன்றி.

எங்கள் மதிப்பாய்வு மற்றும் orkut சேவை விதிமுறைகளை பரிசீலித்து பார்த்த பின், இந்த உள்ளடக்கம் தற்போது orkut இல் எந்த கொள்கையையும் மீறவில்லை என்று புரிந்து கொண்டோம். இது தவறு என்று நீங்கள் கருதினால், கூடுதல் விவரங்களுடன் உங்கள் புகாரை மீண்டும் சமர்ப்பிக்கவும். இதனால் எங்களுடைய ஆதரவு குழு இந்த உள்ளடக்கத்தைப் பற்றிய உங்கள் கருத்தை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

orkut இல் முறைகேடுகள் பற்றிய எங்கள் கொள்கைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்பைக் காணவும்.
http://help.orkut.com/support/bin/answer.py?answer=16198&hl=ta

மதிப்பாய்வு செய்யப்பட்ட உள்ளடக்கம்: “தமிழ்மன்றம்”

என்ன கொடுமை சார்? என் புகைப்படத்தை மற்றவர் பயன்படுத்துவது ஓர்கூட் கொள்கையா? சரி அதைவிடுங்க என் புகாருக்கு பதில் அளிக்க ஒரு வருடமாச்சா? வாழ்க கூகிள் வாழ்க ஓர்குட்.

இதைவிட வினோதமான நிகழ்வு ஓன்று பேஸ்புக்கில் நடந்தது. சமூக வலைப்பின்னல் தளங்களில் தேவையில்லாமல் எங்கள் படங்கள், தனிப்பட்ட தகவல்களை பகிராமல் விடுவதே நன்று.

கொழும்பு 2019

இடம்: கொழும்பு
நேரம்: காலை 7.30
ஆண்டு: 2019

விந்தியா தனது கையில் இருக்கும் பையை இறுக்க அணைத்தபடி நடந்து கொண்டிருந்தாள். வீதி வெறிச்சோடிக் கிடந்தது. தனது நடையை மெல்ல மெல்ல வேகப்படுத்திக்கொண்டே வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

கையில் இருக்கும் அந்தப் பையின் பெறுமதி அவளுக்குத்தான் தெரியும். வீட்டில் அனைவரும் இந்தப் பையில் இருப்பதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். யார் கண்ணிலும் பட்டுவிடமால் சென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். பத்து ஆண்டுகளுக்கு முதல் இந்த இடத்தில் இந்நேரத்தில் சனம் சும்மா ஜே.. ஜே… என்று நடமாடும். இப்போ எல்லாம் தலைகீழ்.

சிந்தனைகளில் சுழன்றவாறு நடந்துகொண்டிருந்தாள் விந்தியா. அந்த சந்தியைக் கடந்துவிட்டால் தன் வீட்டை அடுத்த 5 நிமிடத்தில் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் நடையின் விரைவைக் கூட்டியவாறு சந்தியை நேக்கி நடக்கத் தொடங்கினாள்.

திடீர் என்று எங்கிருந்தோ ஒரு அடிபட்டு நெளிந்த டாடா இன்டிகா காரில் நான்கைந்து இளைஞர்கள். கார் சத்தைத்தை விட அவர்கள் போட்ட சத்தமே அதிகமாக இருந்தது. ஒருத்தன் காது குத்தியிருந்தான் மற்றவன் கண்இமையில் ஏதோ குத்தியிருந்தான்.

“டேய் அங்க பாருடா! ஏய்……….. என்ன கையில?” காரில் இருந்த ஒருத்தன் ஊளையிட்டான்.

குனிந்த தலை நிமிராமல் விந்தியா அந்த இடத்தில் இருந்து மெல்ல நகரத் தொடங்கினால். அவளை சிறிது கடந்து நின்று இருந்த கார் இப்போது, கிரீச் என்ற சத்ததோடு அவள் முன்னால் வந்து நின்றது. காரில் இருந்து நான்று இளைஞர்களும் தட தடவென இறங்கினர். ஒவ்வொருத்தன் கண்ணிலும் வெறி தாண்டவமாடியது.

ஒரு அடி முன்னுக்கு எடுத்து வைத்த ஒருத்தன் விந்தியா கையில் இருந்த பையை பறித்தான். பையை திறந்து உள்ளே பார்த்தவன், மற்றவர்களைப் பார்த்து புன்னகையுடன் தலையாட்டினான்.

“டேய்… தாடா!!!” விந்தியா பறித்தவன் கன்னத்தில் சடார் என்று ஒரு அறை விட்டாள். அறைந்த சத்தம் ஓய்வதற்குள் ஒரு சத்தம் ‘டுமீல்’. விந்தியாவின் உடல் கீழே சரிய அவள் உடலில் இருந்து இரத்தன் குபு குபு என வெளியேறத் தொடங்கியது.

விந்தியாவிற்கு சுய நினைவு மெல்ல மெல்ல அகலத் தொடங்கியது. கண்கள் இருட்டத் தொடங்கியது. கடைசியாக கண் மூட முன்னர், தன் பையில் இருந்த பாண் துண்டை அந்தக் கயவர்கள் விலங்குகளைப் போல பிய்த்து உண்பதைக் கண்டாள். மெல்ல மெல்ல அவள் உலகம் இருளத் தொடங்கியது.

பி.கு: யுத்தம் விரைவில் ஓயாவிட்டால் ஒருநாள் ஸ்ரீ லங்காவில் இது நடக்கப் போவது நிச்சயம

இலவச SMS அனுப்புதல்

பல தளங்களில் SMS இலவசமாகவும் பணம் வசூலித்துக்கொண்டும் பெறுவதைக் காணலாம். இந்த சேவையை உங்கள் தளத்தில் நீங்களும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டுரை இலங்கையின் மொபிடல் வலைப்பின்னலை மையமாக வைத்தே எழுதப் பட்டுள்ளது இந்திய நண்பர்கள் கீழுள்ள விபரங்களைப் பாருங்கள். Continue reading இலவச SMS அனுப்புதல்

தமிழ்ப் பதிவுலகமே… ஒரு நிமிடம்

உலகில் பல பிரைச்சனைகள் இருக்கின்றன. இவற்றில் பல எமக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத பிரைச்சனைகள். ஆயினும் இல்லாத பிரைச்சனைகளைக் கண்டுபிடித்து, அதை தலைமேல் தூக்கி ஆடி மற்றவர்களையும் வம்புக்கு இழுப்பதே இன்றய தமிழ் வலைப்பதிவுலகம்.

இப்படியாக ஒருவர் பதிவெழுதுவார், அவருக்கு என்னொருவர் பதில் பதிவு போடுவார். தமிழ் மணத்தில் பர பர என்று சூடுபறக்க இந்த நிகழ்வுகள் நடந்தேறும். இப்படியான் பக்கங்கள் பக்கம் நான் மறந்தும் போவதில்லை, ஆயினும் Google Readerஇல் அவ்வப்போது சில பதிவுகள் கண்களில் தட்டுப்படுவதுண்டு. ஏன் தமிழர்களே இந்த நிலமை? வலைப்பதிவது உங்ளுக்கு பொழுது போக்காக இருக்கலாம் ஆனால் இப்படியான பதிவுகளைப் பார்த்தால் தரமற்ற பதிவுகளைப் போடுவதே உங்கள் பொழுது போக்காகத் தோன்றுகின்றதே? பொழுது போக்கே தரமற்றுப் போகலாமா?
பேச்சுச் சுகந்திரம், எழுத்துச் சுகந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற துணிவு அல்லது அசட்டுத் துணிவு இன்று வலைப்பதிவர் மத்தியில்.

என் வலைப்பதிவிற்கு யார் வர முடியும் என்பதையெல்லாம் அசண்டை செய்யாமல் வயது வந்தோர் மட்டமே பார்க்க கூடிய படிமங்களைக் கூட பதிவுகளில் இட்டுவிடுகின்றீர்களே!! ஒரு எச்சரிக்கை வாக்கியம் கூட போட மாட்டீர்களா? இப்படியான ஒரு பதிவைப் பார்த்து நானே போனவாரம் அதிர்ந்து போனேன்.
சாதாரணமாக உங்கள் வலைப்பதிவிற்கு அதிகளவு நேயர்கள் வரவேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு இருப்பது இயல்பே. அதற்காக இப்படியான பிற்போக்குத் தனமான தரம் குறைந்த தனிமனிதத் தாக்குதல் பதிவுகளை இட்டு உங்கள் வலைப்பதிவின் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளலாமா?. ஒரு குறிப்பிட்ட வட்டத்தை தவிர வேறுயாரும் உங்கள் வலைப்பதிவிற்கு காலப் போக்கில் வராமல் விட வாய்ப்புள்ளது.
ஆரம்பகாலத்தில் எத்தனை பதிவுகள் எழுதுகின்றேன் என்பதிலேயே குறியாக இருந்தேன். பின்னர் காலப்போக்கில் உணர்ந்து கொண்டதின் படி ‘எத்தனை பதிவு எழுதுகின்றோம் என்பது முக்கியமில்லை, எத்தனை நபர்களை ஆக்கமுறையான பாதையில் எம் பதிவு மூலம் கவர்ந்திருக்கின்றோம் எனபதே.’

ஒருவர் உங்கள் கருத்துக்கு எதிராக எழுதுகின்றாரா?அவருக்குப் பின்னூட்டமிடுங்கள், எதற்காக அதற்குப் பதில் பதிவு எழுதுகின்றீர்கள். சில வேளைகளில் உங்கள் தரப்பு வாத்த்தை அவர் பதிய மறுப்பதால் எழுதுகின்றேன் என்கிறீர்களா? அப்படியானால் எழுதிவிட்டு அத்துடன் அதை முடித்து விடுங்கள். பதிலுக்குப் பதில், இரத்தத்திற்கு இரத்தம் என்று புறப்பட்டு இவ்வாறான பதில் பதிவுகளே தமிழ் வலைப்பதிவுகளாகிவிடும்.

இவ்வாறாக பின்னூட்டமிட்டு குட்டையைக் குழப்பும் ஒரு கும்பலும் இருக்கின்றது. குறிப்பாக அனனானியாக வந்து கலக்குவார்கள். என்பதிவுகளில் அனானி மறுமொழிகளைப் பதிவதுண்டு ஆனால் அவர்களின் அர்த்தமற்ற கேள்விகளுக்குப் பதில் போடுவதில்லை. அதில் எனக்கு இஷ்டமும் இல்லை. இவர்களுக்குப் பதில் எழுதி பத்தோடு பதினொன்றாகும் எண்ணமும் எனக்கில்லை.

ஒவ்வொரு தடவையும் பதிவெழுதும் போதும் யோசித்துப் பாருங்கள், “

1.நான் எழுதும் இந்தப் பதிவு சமுதாயத்திற்கு நல்ல கருத்தைக் கொண்டு சேர்க்கின்றதா?
2.வாசகர்களை சங்கடப் படுத்தாத பதிவா?
3. தனிமனிதத் தாக்குதல் இல்லையே?
4. வார்த்தைப் பிரயோகங்கள் ஒழுங்காகவா உள்ளது?”

இந்தக் கேள்விகளுக்குச் சாதகமான் பதில் உங்களிடம் இருக்கின்றதானால் நன்று உங்கள் பதிவைப் பதிந்து விடுங்கள். இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடுங்கள்! தயவு செய்து வேண்டாம்.

மற்றவர்கள் என்ன குப்பைப் பதிவு வேண்டுமானாலும் போடட்டும். ஆனால் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள். அப்படியான் பதிவுகளைப் வாசித்து அதற்கு பதில் எழுதப் போய் வீணான ஒரு குழப்பத்தில் மாட்டிக் கொள்ளாதீர்.

அண்மையில் ஒரு தமிழ் வலைப்பதிவருடன் அரட்டை அடிக்கும் போது தன் பதிவுகள் இப்போது தமிழ் மணத்தில் திரட்டப்படுவதில்லை என்று கூறினார். ரொம்பவுமே வருத்தப்பட்டுப் பேசினார். இப்ப கவலைப்பட்டு என்ன பிரயோசனம்? வெள்ளம் தலைக்கு மேலாகப் போய் விட்டதே?

தமிழ் மணம் காரங்க பாவம் எத்தனைப் பதிவுகளை மொத்தமாகக் கண்காணிப்பது? கணிமை வலைப்பதிவில் பரிந்துரைத்த படி தமிழ் மணத்திற்கு பதிவைச் சேர்க்கும் போது, அதன் உள்ளடக்கத்தைப் பற்றியும் எழுத்தாளரின் உள்ளீட்டை வாங்கினால் வகைப்படுத்த வசதியாக இருக்கும். தமிழ் மண முகப்பில் திறந்த உடனேயே இப்படியான தரமற்ற பதிவுகளைக் காணத் தேவலையில்லை.

எழுதுங்கள் அது உங்கள் சுகந்திரம் ஆனால் எதையும் எழுதலாம் என்ற ஆணவத்தில் கண்ட கண்ட குப்பைகளை எழுதி உங்கள் வலைப்பதிவின் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர். இது ஒரு பணிவான வேண்டுகோள்.

நன்றி

பாமினியிலிருந்து தமிழ் 99 நோக்கி

2008 ல் செய்ய வேண்டிய வேலைகளுள் ஒன்றாக, பாமினி முறையில் இருந்து தமிழ் 99 முறைக்கு மாறுவது என்று முடிவு செய்தேன்.

 மாற நினைத்ததற்கு முதல் காரணம், அனைத்திற்கும் தமிழில் ஒரு நியமமான முறை இருக்க வேண்டும் என்று நினைத்ததுதான். ஒன்று பட்டால்தான் உண்டு வாழ்வு, இல்லாவிட்டால் வீழ்வுதான். அதைவிட தமிழைத்த தமிழாய் தட்டச்சிட வேண்டும் என்பதும்தான். இம் முயற்சியில் ஈடுபட ரவியின் பல கட்டுரைகளும், தமிழ்99.org என்ற தளமும் உந்துதலாக இருந்தன. 

ஆரம்பத்தில் தமிங்கிலீஸ் முறையில் இருந்து பாமினி முறைக்கு மாறியதால் இந்த முறையும் மாறுவது அவ்வளவு கடினமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் மாற முயற்சித்த போதுதான் நினைத்தளவிற்கு இலகுவான காரியமல்ல என்று புரிந்தது. நான் கடந்து வந்த போது ஏற்பட்ட தடங்கல்களையும் அவற்றை எவ்வாறு எதிர்கொண்டேன் என்பதையும் எழுதி வைத்தால் மற்றவர்களுக்கும் பயன்படும் என்று முடிவு செய்தேன்.

  

ஆரம்பத்தில் பாமினி, தமிழ் 99 ஆகிய இரண்டு முறைகளிலும் தட்டச்சிட்டேன். ஆனால் இதில் நடந்தது என்வென்றால் பெரும்பாலான நேரங்களில் பாமினியிலேயே தட்டச்சிட்டேன். இந்தக்கட்டத்தில் பாமினியை ஒரேயடியாக விடாவிட்டால் தமிழ் 99 பழக முடியாது என்று உணர்ந்து கொண்டேன்.

 

இக்கால கட்டத்தில் NHM Writer, மூலம் தமிழ் 99 முறையிலும் இ-கலப்பை மூலம் பாமினி முறையிலும் தட்டச்சிட்டுக் கொண்டிருந்தேன். அதிரடியாக NHM writer நீக்கி விட்டு தமழ் 99 இ-கலப்பையை கணனியில் பதிந்து கோண்டேன். இப்போது நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழ் 99 ல்தான் தட்டச்சிட்ட வேண்டும்.

 

NHM writer பாவிப்பதில் இரண்டு பிரைச்சனைகள் இருந்தன.

  1. இதில் பல தட்டச்சு முறைகள் இருப்பதால், மனக்கட்டப்பாடு இல்லாமல் பழைய முறையில் தட்டச்சிடுவீர்கள். காரணம் முன்பு பாமினியில் நிமிடத்திற்கு 40 சொற்களுக்கு மேல் தட்டச்சிடுவேன். இப்போது நிமிடத்திற்கு 4-8 வரை தட்டச்சிடும் போது கடுப்பேறி பழைய முறைக்கு மாறத்துடிப்பீர்கள்.

  

  1. NHM writer ல் ஒரு எழுத்தை எழுதினால் எழுதினதுதான். மாற்ற முழு எழுத்தையும் மாற்ற வேண்டும்.

 

உ+ம்: த + இ = தி

 

இங்கே நீங்கள் தவறுதலாக க்குப் பதிலாக யை அமுக்கி விட்டால் தீ கிடைத்துவிடும். மீண்டும் தி யாக மாற்ற முழு எழுத்தையும் அழிக்க வேண்டும். பின்பு முதலில் இருந்து + என்று தட்டச்சிட வேண்டும். ஆனால் இ-கலப்பையில் தீ இருக்கும் போது Backspace ஐத் தட்டினால் மீண்டும் கிடைக்கும். பின்னர் யைத்தட்ட தி கிடைக்கும்.

 முறை மாறுபவர்கள் கடும் வெறுப்படன் புதிய முறையில் தட்டச்சிட்டுக் கொண்டிருப்பார்கள். இ-கலப்பை அவர்கள் மர விரக்தியைக்குறைக்க உதவும். NHM கடுமையாக கடுப்பேற்றும். புதிய முறையில் பரீச்சயமான பின்பு NHM Writer க்கு மாறலாம் என்பது என் தாழ்மையான பரிந்துரை. 

தமிழ் 99 ல் தட்டச்சிடும் போது On-Screen விசைப்பலகை ஒன்று இருந்தால் நல்லம் என்று தேடிய போது யாகூ widget கிடைத்தது. ஏற்கனவே ஆங்கல தட்டச்சு தெரியும் என்பதால் இதில் பார்த்துக் கொண்டு 3 வாரங்கள் வரை தட்டச்சிட்டேன். அதன் பின்னர் எழுத்துக்கள் மனதில் பதிந்த பின்னர் இதன் தேவை அகன்று விட்டது. ஆரம்ப பயனர்களுக்கு இரு ஒரு அருமையான கருவி.

 

பாமினி பயனர்களுக்கு இதற்கு மாறுவதால் முன்பு இருந்ததை விட அதிக வேகம் எடுத்தாலும் ஒப்பீட்டளவில் பெரிய வித்தியாம் இருக்கப் போவதில்லை. ஆனால் தமிங்கல முறையில் இருந்து மாறுபவர்களுக்கு கடும் வித்தியாசம் தெரியும்.

  

சரி இப்போ தமிழ் 99 க்கு மாறி விட்டேன் என்னால் பாமினியில் தட்டச்சிட முடியுமா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கின்றது. அடித்துச் சொல்கின்றேன் சத்தியமாக முடியாது. எந்த விசைக்கு எந்த எழுத்து என்பதை மறந்தே விட்டேன். இனிமேல் விரும்பினாலும் அதற்கு மாற முடியாது. அதையிட்டு கவலையும் இல்லை.

 

இதற்கான காரணம், தமிங்கல முறையில் ஆங்கிலத்தில் யோசித்து தமிழைத் தட்டச்சிடுகின்றோம். ஆனால் தமிழ் 99, பாமினி முறைகளில் தமிழாகவே தட்டச்சிடுகின்றோம். எனவே பாமினி, தமிழ் 99 இரண்டிலும் ஒருவர் தட்டச்சிடுவது சாத்தியம் இல்லை.

 

மாறியதால் மாற்றங்கள் என்ன என்று கேட்கின்றீர்களா?

  1. இப்போது நானும் வினைத்திறனாக குறைந்த விசை அமுக்கத்துடன் அதிகளவு எழுத்துக்களைத் தட்டச்சிடுகின்றேன்.
  2. தமிழை ஒரு நியமத்திற்கு கொண்டுவருவதில் என்னாலான ஒரு சிறிய பங்களிப்பு.
  3. பொங்குதமிழ் எழுதிக்குப் பதிலாக, தமிழ99.org எழுதியைப் பயன்படுத்துகின்றேன்.
  4. சாதித்த பெருமை 😉

 

இப்படிப்பல….!!! பாமினி, தங்கிலீஸ் பயனர்களே… தமிழை தமிழாகத் தட்டச்சிட வாருங்கள். நினைத்தால் முடியாத்து எதுவும் இல்லை. 2 மாதங்களில் பழைய வேகத்தை அடையலாம். தமிழுக்காக 2 மாதங்கள் கஷ்டப்பட முடியாதா என்ன?

 

தமிழ் 99 உடன்,

மயூரேசன் 

இக்கட்டுரை தமிழ் 99 ஊக்குவிக்க எழுத்தப்பட்டுள்ளதால் இதன் உள்ளடக்கத்தை மாற்றாமல் எங்கு வேண்டுமானாலும் என் அனுமதியில்லாமல் பாவிக்கலாம்.

 

இரவுகள் தோறும்தனது கார் கண்ணாடியை சற்றே கீழிறக்கிப் பார்த்தான் குகன். சில் என்று காற்று வீசிக்கொண்டு இருந்தது. இவனது டொயோட்டா ப்ராடோ சத்தமில்லாமல் காற்றைக் கிழித்துக்கொண்டு எ-9 வீதியில் பயனித்துக்கொண்டிருந்தது. பூச்சிகளின் சங்கீத ஒலியும் அவ்வப்போது எதுவென்றே தெரியாத சத்தங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. தூக்கம் கண்களை மெல்லக் கட்டத்தொடங்கியது.

“ம்ஹூம்…. நித்திரையோடு ஓடக்கூடாது” என்று நினைத்துக்கொண்டான். காரில் இருந்த கருவி இன்னமும் 5 நிமிடத்தில் ஒரு சிற்றுண்டி சாலை வருவதாக சைகை காட்டியது. வேகத்தை மள மளவென்று குறைத்தவாறு சிற்றுண்டி சாலை வாசலில் தனது வாகனத்தை நிறுத்தினான்.

ஜன்னலை மூடிவிட்டு, தானியக்க பாதுகாப்பு கருவியையும் உயிர்ப்பூட்டிவிட்டு குகன் சிற்றுண்டிசாலையை நோக்கி நடக்கத்தொடங்கினான். சிற்றுண்டி சாலை என்று சொல்வதைவிட அதை ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் என்றும் சொல்லலாம். வாசலில் ஒரு பழைய எரிபொருள் நிரப்பும் இயந்திரம் இருந்தது. அந்தப் பழைய உணவகத்தின் கதவை அனாயசமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் குகன்.

“வாங்க ஐயா, பெற்றோல் போடோனுமா இல்லை சாப்பிட ஏதாவது வேணுமோ?” கேள்வி கேட்டான் உணவு விடுதிக்காரன்.

“பெற்றோல் இருக்கு, எனக்கு ஒரு கோப்பி தாங்கோ”

“ஐயா எங்கயிருந்து வாரியள், இந்த நேரத்தில தனியாப் போறியள் போல இருக்கு”

“ஹா.. நான் கொழும்பில இருந்து வாறன். ஒரு தனியார் கொம்பனியில வேலை செய்யிறன். நாளைக்கு வருசப்பிறப்புதானே. அதுதான் வீட்ட போயிடோனும் என்ற நினைப்பில இரவோட இரவாக் கிளம்பிட்டன்”

“எல்லாருக்கும் இருக்கிற ஆசைதான்” என்று கூறியவாறு அந்தக் கடை ஊழியன் ஒரு கோப்பை கோப்பியை எடுத்துக்கொடுத்தான்.

கடுங்குளிருக்கு அந்த கோப்பி இதமாக இருந்தது. தனது கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். சரியாக இரவு 12.05 ஆகிவிட்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகனங்கள் மிக மிக அரிதாக ஒளியைப் பாய்சிக் கண்சிமிட்டிக்கொண்டு வீதியில் சென்றுகொண்டிருந்தன.

தனது பையிலுந்து பணத்தை எடுத்து ஊழியனிடம் கொடுத்துவிட்டு குகன் தனது காரை நோக்கி நடக்கத் தொடங்கினான். உள்ளே ஏறி உட்கார்ந்ததும் ரேடியோவைப் போட்டுத் திருப்பி திருப்பு என்று திருப்பினான். ம்ஹூம் ஒரு அலைவரிசை கூட இழுக்குதில்லை. செல்லிடத் தொலைபேசி பயனற்றுக் கிடந்தது. ஆ… என்று ஒரு பெரு மூச்சு விட்டவாறு தன் காரின் இயந்திரத்தை உயிர்ப்பூட்டினான் குகன். அந்த சொகுசு வாகசனம் மீண்டும் அதிக இரைச்சல் போடாமல் காற்றைக் கிழித்துக்கொண்டு பயனிக்கத் தொடங்கியது.

அரைமணி நேரத்தில் மீண்டும் குகனுக்குக் கண்ணைக் கட்டத் தொடங்கியது. அரைக்கலக்கத்தில் யாரோ வாகனத்தை மறைப்பது தெரிகின்றது. நன்கு அருகில் வந்ததும் குகன், திடுக்கிட்டு கார் பிரேக்கைப் போடுகின்றான். வெளியே நின்ற பெண் போட்ட கீ என்ற சத்தம் குகனின் வாகனக் கண்ணாடியூடு கேட்டது.

“கூ ட ஹெல் இஸ் திஸ்?” கடுப்புடன் கூறியவாறே குகன் தனது வாகனக் கண்ணாடியை கீழிறக்கினான்.

“என்ன தங்கச்சி என்ன விசயம்”

“இண்டைக்கு இரவு வேலை முடிய லேட்டாகிட்டுது. 20 மைல் தள்ளித்தான் எங்கட வீடு இருக்குது. அங்க கொண்டுபோய் இறக்கிவிடுவியளோ?”

என்ன கரைச்சலடா இது?. முன்னப்பின்னத் தெரியாத பொம்பிள தன்னைக் காரில ஏத்தச் சொல்லுறாள். இவளை ஏத்திப் பின்னால இங்கிலீசுப் படங்களில வர்றமாதிரி என்னைக் கொலை செய்திடுவாங்களோ?? என்று பலவாறும் குளம்பியவாறே தன் காரின் கதவைத் திறந்தான்.

“நான் காரில பின்னால ஏறுறன்” என்கிறாள் அவள்.

“அப்ப நான் என்ன உங்களிட ட்ரைவரோ?, முன்னால ஏறுங்கோப்பா. உம்மை என்ன நான் பிடித்துச் சாப்பிடப்போறனோ?”

அவள் ஏறி குகனுக்குப் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் அமர்ந்துவிடுகின்றாள். இப்போதுதான் குகன் அருகில் பக்கத்தில் அந்தப் பெண்ணைப் பார்க்கின்றான். பார்த்த மாத்திரத்திலேயே அவன் இதயம் பட படவென அடித்துக்கொண்டது. கொழும்பில இருக்கிற சிங்களப் பெட்டையளெல்லாம் இவள் கால் தூசிக்குத் தேறமாட்டாளுகளே. கடைக்கண்ணாலும் தன் முன்னால் இருந்த கண்ணாடியிலும் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“றோட்டப் பார்த்து ஓடுங்கோ…” நமட்டுப் புன்னகையுடன் கூறினாள் அந்தப் பெண்.

“ஆ…. நக்கலு. சரி சரி உங்கட பெயர் என்னண்டு சொல்லேலயே?” மெதூவகக் கதையைத் தொடங்கினான் குகன்.
“ஏன் பெயர்?”

“உங்களை ஏத்திக்கொண்டு போய் இறக்கிவிடுறன் பெயர் எல்லாம் சொல்ல மாட்டியளோ?, பெரிய வில்லாதி வில்லியாக இருப்பியள் போல இருக்குது”

இப்படியே கதை தொடர்ந்தது. குகனை அறியாமலே அவன் வாகனம் ஓட்டும் வேகத்தைக் குறைத்துவிட்டிருந்தான். அவளை விட்டுப் பிரிய அவ்வளவு மனமில்லை. இப்போது இருவரும் நல்ல சகவாசமாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஒரே சிரிப்பொலி அங்கு மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.

ஒரு மணி நேரத்தில் குகன் அந்தப் பெண் இறங்க வேண்டிய இடத்தில் அவளை இறக்கிவிட்டான். நன்றி சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தாவாறே அந்தப்பெண் நகரத் தொடங்கினாள்

“ஹல்லோ.. இந்தாங்கோ என்னுடைய விசிட்டிங் கார்ட். கொழும்புப் பக்கம் வந்தால் சந்தியுங்கோ. அதுதானே உங்கட வீடு?” தூரத்தில் தனியாக இருந்த ஒரு வீட்டைக் காட்டிக்கேட்டான் குகன். அவளும் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு மீண்டும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். குகன் அந்த இடத்தின் அடையாளங்களை நன்கு மனதில் பதித்து வைத்துக் கொண்டான். குறிப்பாக அந்த மைல்கல்லும். அதற்கு அருகில் இருந்த மாமரமும் இந்த இடத்தை மறக்காமல் ஞாபகம் வைத்திருக்க உதவும்.

அக்சிலரேட்டரை மனமில்லாமல் அழுத்தியவாறே அங்கிருந்து நகர்ந்தான் குகன்.

வீடு சென்றாகிவிட்டபோதும் குகனின் மனம் முழுவதும் நேற்றய நிகழ்வில்தான் இருந்தது. அவளை மறக்க இவனால் முடியவில்லை. தான் தன் நண்பன் வீட்டிற்குச் செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு தனது ப்ராடோவில் ஏறி மீண்டும் அந்தக் கனவுக் கன்னி வீடு நோக்கிப் பயனமானான்.

ஒரு மணி நேரத்தில் அந்த இடத்தை குகன் வந்தடைந்துவிட்டான். அப்போது பெரும் அதிர்ச்சி அவனுக்குக் காத்திருந்தது. அங்கே நேற்றிரவு கண்ட வீடு இப்போது இல்லை. அதே மைல் கல்லு அதே மாமரம் ஆனால் வீடு மட்டும் இல்லை. அவன் முள்ளந்தண்ணூடாக ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ச்சியதைப் போன்று ஒரே அதிர்ச்சியாக இருந்தது. அந்நேரம் அப் பாதையினூடாக ஒரு முதியவர் வரவே அவரிடம் குகன் மெல்லப் பேச்சுக்கொடுத்தான்.

“ஐயா! இந்தப் பக்கம் வீடு ஒன்று இருந்ததில்லோ?”

”என்ன தம்பி நக்கலா? இங்க நான் 50 வருசமா இருக்கிறன். இந்த இடத்தில வீடு ஒன்றும் இருக்கேல. தண்ணி கிண்ணி போட்டியளோ?” ஒரு சங்கேதப் பார்வையுடன் அங்கிருந்து நகர்ந்தார் அந்த முதியவர்.

குகன் மீது 1000 மின்னல்கள் ஒரேயடியாக விழுந்தது போல உணர்ந்தான். மெல்ல தனது வாகனத்தை நோக்கி நடக்கத் தொடங்கிவன் மனதினுள் நினைத்துக்கொண்டான்.
“இனிமேல் இரவில் தனியாகப் பிரயாணம் செய்வதில்லை”

குகனின் வாகனம் மெல்ல மெல்ல தன்பாதையில் செல்கின்றது. சூரியன் மெல்ல மெல்ல மறைந்து எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது. அன்றிரவு அப்பாதையால் ஒரு டோயோட்டா கொரால்லா வருகின்றது. அதில் இருந்து நன்றி சொல்லியவாறே அதே அழகிய நங்கை இறங்குகின்றாள்.