Category Archives: பொது

68 : என்னருமைக் காதலி கணனி

அண்மையில் ஆதவா ஒரு கட்டுரையில் தானும் கணனி விளையாட்டுகளும் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப பிணைந்து இருந்தோம் என்று எழுதி இருந்தார். அதை வாசித்ததும் நானும் எனது கணனி அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இந்த எண்ணத்திற்கு வித்திட்ட ஆதவனிற்கு நன்றிகள்.

நான் முதன் முதலாகக் கணனியைக் கண்டது 1993 ல் அதாவது அப்போது ஆண்டு ஐந்து படித்துக்கொண்டு இருந்தேன். நான் இடைவேளை நேரத்தில் அடிக்கடி செல்வது கணனி அறை யன்னலோரம். அப்போது எமது பாடசாலையில் ஒரு கணனி இருந்தது. அதை என்ன தேவைக்காகப் பயன் படுத்தினார்கள் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. யன்னல் ஓரத்தில் நின்று கணனியை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். கணனி என்பது எமக்கெல்லாம் எட்டாக்கனி. பாடசாலையில் அதிகமாகப் பாதுகாக்கப்பட்ட அறைகளில் அதுவும் ஒன்று. இவ்வாறு அந்தக் கணனியைப் பார்த்துப் பார்த்து என் காலம் கழிந்தது. கணனி என்றால் ஏதோ மாயா ஜாலம் செய்யும் என்று பேசிக்கொண்டனர். நண்பர்கள் தம் பாட்டிற்கு ஏதேதோ சொல்லிக்கொண்டார்கள். இப்போதுதான் தெரிகின்றது அத்தனையும் பொய் கணனி ஒரு முட்டாள் கருவி என்பது.

இவ்வாறு காலம் செல்கையில் எமது பாடசாலை நூலகத்திற்கு தமிழ் கம்பியூட்டர் சஞ்சிகை எடுக்கத் தொடங்கினார்கள். தவறாமல் முதலாவதாக அந்த சஞ்சிகையை எடுத்து வாசிப்பேன். பெரும்பாலான கட்டுரைகள் விளங்குவதே இல்லை. சும்மா படங்களையாவது பார்த்து விட்டே வைப்பேன். என் ஆர்வம் தணியவே இல்லை. கடைசியாக 1999 ல் கணனியைத் தொடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

1999 ல் எனது கல்விப் பொதுத்தாராதரப்பத்திர சராதாரண தரப் பரீட்சையை எடுக்க வேண்டி ஏற்பட்டது. பரீட்சை டிசம்பரில் முடிந்ததும் வழமைபோல உயர் தர வகுப்பிற்கான தனியார் வகுப்புகள் ஆரம்பித்துவிடும். ஆயினும் பாடசாலை தொடங்க குறைந்தது மூன்று மாதங்களாவது கழியும். இந்த மூன்று மாத காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் கணனி வகுப்பிற்குச் செல்வார்கள். நானும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணனி கல்வி கற்றச் சென்றேன். நல்ல வேளையாக அப்போது பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஒரு கணனி ஆய்வு கூடத்தை பாடசாலைக்காகக் கட்டிக்கொடுத்து இருந்தது. ஆகவே குறைந்த செலவில் பாடசாலையில் கணனி வகுப்புகளை கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பாடசாலையில் முதன் முதலாக எம்மை அழைத்துச் சென்று கணனிக்கு அறிமுகம் என்று கணனியியலின் வரலாறு கணனியியலின் தந்தை என்று அறு அறு என்று அறுத்தார்கள் பின்பு ஒரு நாள் திடீர் என்று பாடசாலை கணனி ஆய்வு கூடத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். எனக்குக் கைகால் புரியாமல் இருந்தது. ஏதோ நாசா ஆய்வு கூடத்தினுள் நுழைந்து விட்டது போல மனதெல்லாம் பரபரப்பாக இருந்து. கணனி திரையில் சிவனும் பார்வதியும் இருப்பது போல இருக்கின்றது. அதாவது எங்கள் பாடசாலை இந்துப் பாரம்பரியத்தில் கண்ணாண பாடசாலை ஆகவே கணனி வோல் பேப்பரில் சிவன் பார்வதி படத்தைப் போட்டு இருந்தார்கள். அப்படியே மற்றக் கணனியைத் திரும்பிப் பார்க்கையில் சின்னது சின்னதாக பல ஜன்னல்கள் பறந்து கொண்டு இருக்கின்றன. விஷ் … விஷ… என அவை வரும் வேகத்தைப் பார்த்தால் கணனித் திரையினில் இருந்து வெளியே விழுந்துவிடும் போல இருந்தது (பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அதுதான் ஸ்கிரீன் சேவர் என்று).
இப்பிடியே மலைத்து மலைத்தே சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் கணனியில் எம்மை உட்கார வைத்தார்கள். பெயின்டில் படம் கீறிப் பழகுமாறும் கேட்டுக்கொண்டனர். இதன் மூலம் சுட்டி எமது கட்டுப் பாட்டுக்குள் வரும் என்பது அவர்களின் கணிப்பு. சில நாட்கள் இவ்வாறே படம் கீறுவதில் கழிந்தது. இரவில் தூக்கத்தில் கூட எம்.எஸ் பெயின்டில் படம் கீறுவேன். இப்போ நினைத்தால் சிரிப்பு வரும். பின்னர் மெல்ல மெல்ல ஆபீஸ் தொகுப்பு, வின்டோஸ் என்பனவும் கற்பிக்கப்பட்டன.

இவ்வாறு கணனி பற்றிய அடிப்படை அறிவு வந்ததும் கணனி சஞ்சிகைகள் குறிப்பாக தமிழ் கம்பியூட்டர் போன்றவற்றில் கணிசமாக பகுதி விளங்கத் தொடங்கியது. பாடசாலையில் சஞ்சிகையை நேரம் கழித்தே சஞ்சிகை வாங்குவார்கள் என்பதால் நானே வாங்கத் தொடங்கினேன். நானும் எனது நண்பன் பிரசாந்தும் (இப்போ ஒரு தொண்டர் நிறுவனத்தில் கணனி வலைப்பின்னல் மேலாளராகப் பணி புரிகின்றான்) எம்மிடையே கணனி நோக்கிய ஆர்வம் பொங்கி வழிவதை இனம் கண்டுகொண்டோம். இந்த கணனியே இருவரையும் நல்ல நண்பர்களாக மாற்றிவிட்டது.

இதே வேளை இணையம் பற்றிய ஆர்வமும் மெல்ல மெல்ல பற்றத் தொடங்கியது. இணையம் என்பது அப்போது மிக மிக பெறுமதியான பொருள். திருகோணமலையில் இணையம் பார்க்க நிமிடத்திற்கு ரூபா 4 முதல் ரூபா 7 வரை வசூலிப்பார்கள் (மணிக்கு கிட்டத்தட்ட 240 ரூபா). அப்போது ஒரு மின்னஞ்சல் முகவரி தொடங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. ஹாட்மெயிலில் ஒரு மின்னஞ்சல் கணக்குத் தொங்கிக்கொண்டேன். இன்று வரை அந்த கணக்கைப் பாதுகாத்து வருகின்றேன். இப்போ அந்த மின்னஞ்சல் கணக்கிற்கு ஏழு வயது ஆகின்றது. இணையம் சம்பந்தமான தமிழ் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டேன். ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்க விரும்பினாலும் ஆங்கிலம் மட்டம். அதனால் தமிழ் புத்தகங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. நான் வாசித்த புத்தகங்களில் பிரபலமானது என்று சொன்னால் அது Internet என்கிற சுந்தர்ராஜன் எழுதிய புத்தகம்.

இவ்வாறு பல முயற்சிகளில் நான் இறங்கினாலும் என்னிடம் என்று ஒரு கணனி இருக்கவில்லை. என்னுடைய நண்பன் ஒருவனுக்கு சுவிற்சர்லாந்தில் இருக்கும் அவன் மாமனார் ஒரு 486 கணனியை அனுப்பியிருந்தார். அந்தக் கணனியிலேயே நாம் பல டாஸ் கேம்களை விளையாடினோம். விளையாடிய விளையாட்டுகளில் எனக்குப் பெயர் ஞாபகம் இருப்பதென்றால் 3D Wolf. ஒரு கை வந்து கணனித் திரையில் தெரியும் முன்னால்வரும் எதிரிகளைச் சுட்டு விட்டு சிறைச்சாலையில் இருந்து நான் தப்ப வேண்டும் இதுதான் கதை. இந்த கணனி விளையாட்டை அரைமணி நேரம் விளையாடினால் பின்னர் ஒரு மணிநேரம் எனக்குத் தலை சுற்றும். அந்தளவு ஈடுபாட்டுடன் விளையாடுவேன். இதைவிட ஒரு ஹெலி விளையாட்டு மற்றது Dogs என்னுமொரு விளையாட்டு என்பனவே நான் அவன் கணனியில் விளையாடியது.

2000 ம் ஆண்டும் பிறந்தது எல்லாரும் Y2K என்றொரு பிரைச்சனை வர உள்ளதாகப் பேசிக்கொண்டனர். நானும் இது பற்றி பல இடங்களில் வாசித்து அறிந்து கொண்டேன் கடைசியாக எதுவும் நடக்கவில்லை. அதே வேளை வின்டோஸ் 2000 வெளியிடப்பட்டது. பில்கேட்சை தொலைக்காட்சியில் பார்த்து ஹாய்….!!!! என்று சத்தம் இட்டுச் சிரித்துக்கொண்டேன். அம்மா அப்பாவிற்கு வின்டோஸ் பற்றி நான் அறிந்தவற்றை எடுத்து விளாசினேன். இவ்வாறு என் கணனிப் பயனம் அழகாக அரங்கேறிக்கொண்டே இருந்தது. காலமும் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டு இருந்தது.

எது எப்படி இருந்தாலும் காலம் எம்மோடு விளையாடுவது நடந்தே தீரும் அல்லவா?. அவ்வாறு எனக்கும் காலத்துடன் நகர்ந்து உண்மையை நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதாவது கணனியிற்கும் எனக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. அதிகரிக்கத் தொடங்கியது என்பதைவிட அதிகரிக்கப் பட வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

(தொடரும்…..)

51 : தமிழர் கப்பற்கலை


தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் ஈடுபாட்டைக் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். “தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்” என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.

தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரை ஒன்றின் ஒரு பகுதி இது. தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்த ஆர்வம் உள்ளவர்கள் தயவு செய்து இந்த சுட்டியைக் சொடுக்கி இந்தக் கட்டுரையை மேலும் பெரிதாக்கவும்.

17. ஆவிகள் பற்றி கண்ணதாசன்

(1).மொபைல் கோர்ட் நீதிபதிகள்.

உலவும் ஆவிகள் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே ‘குட்டிச் சாத்தான்’ போன்றவை.

ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து.

ஒரு சில சாத்தான்கள் நல்லது செய்கின்றன.

பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன.

சத்திய சாயிபாபா என்பவசைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்;;; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகிவிடுமாம்.

திடீரெண்டுஅவர் விபூதி கொடுப்பாராம்;;;;;;;;, வெறும் கையிலேயே விபூதி வருமாம்

குட்டிச் சாத்தான்கள் மூலமாகவே அப்படி ஊடுருவ முடிகிறது என்று நான் நம்புகிறேன்.

என்னுடைய கனவிலும் அவர் இரண்டு முறை ஊடுருவினார்.

முதல் முறை வந்த கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கிறார், நான் கைகளால் ஊர்ந்து அவர் அருகே செல்கிறேன்.

இரண்டாவது கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்கிருக்கும் கட்டத்துக்குள் ஒரு கரண்ட் என்னை இழுக்கிறது, நான் அதை எதிர்த்துப் போராடுகிறேன். ‘கிருஷ்ணா !; ‘கிருஷ்ணா !; என்று சத்தமிடுகிறேன். அந்தக் கரண்ட் என்னை விட்டுவிடுகிறது.

சத்திய சாயிபாபா செய்வதாகச் சொல்லப்படும் காரியங்கள் அனைத்துமே, சித்து வேலையாகவே எனக்குத் தோன்றுகின்றன.

இதே போல் பன்றிமலை சவாமிகளைப் பற்றியும் ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன.

அவசை ஒரு நாள் பார்க்கப் போனேன்.

அங்கிருந்த ஒரு மலர் மாலையிலிருந்து ஏழு எட்டு மலர்களை உருவிக் கைக்குள் தேய்த்தார். உடனே அனைத்தும் திருப்பதி அட்சதைகளாக மாறின.

அவர் பாம்பு என்று ஒரு காகிதத்தில் எழுதி வைக்கிறார். அதை நீங்கள் விரலால் தொட்டால் விஷம் ஏறுகின்றது.

நெருப்பு என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் சுடுகிறது.

சந்தனம் என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் மணக்கின்றது.

ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் அளவு அவர் வல்லுநர் அல்ல.

நீங்கள் ஏதாவது விஷயம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதித் தரும்படி அவரிடம் கேட்டால் அவர் ‘முருகா’ என்பார். எங்பிருந்தோ டைப் அடிக்கப்பட்ட காகிதங்கள் வந்துவிடுகின்றன.

திட்டவட்டமாகக் குட்டிச் சாத்தான் ஏவல் கொண்டவர் என்றே நான் கருதுகிறேன்.

கோவை ஜெயில் ரேடில் 1950 ம் ஆண்டில் நான் கங்கியிருந்தபோது, என்னிடம் ஒரு சாமியார் வந்தர். அவர் இரண்டு ரூபாய்கள்தாம் என்னிடம் கேட்டார், கொடுத்தேன். அவர் ஒரு தாயத்துக் கொடுத்தார். அவர் காகிதத்தில் ‘கெட்டது நடக்கும்’ என்றும், ஒரு காகிதத்தில் ‘நல்லது நடக்கும்’ என்றும் எழுதித் தூரத்தில் வைத்தார். நாலடி தூரத்தில் தாயத்தை வைத்தார். தாயத்து ஊர்ந்து சென்று ‘நல்லது நடக்கும’ என்ற காகிதத்தில் ஏறிற்று.

ஏதோ ஒரு ஆவியை அடக்கி வைத்திருப்பவர் போலிருந்தது அவர் செய்கை.

வீதியிலே வித்தை காட்டுகிறவன். உரு துணிப் பொம்மையின் தலையில் அடித்தால், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய தலையிலும் அடி விழுகிறது. மேலும் அவன் செய்யும் குட்டிச் சாக்கான் வித்தைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்.

மாஜிக் நிபுணர்களும் குட்டிச் சாத்தான்களை அடக்கியாள்பவர்களே.

இந்தச் சாத்தான்களை எதிரியின் மேல் ஏவ முடியும் என்கிறார்கள் சிலர்.

எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

‘சோற்றிலே மலம் வந்து விழுந்தது, வீட்டிலே கல் வீழுந்தது., எல்லாம் குட்டிச் சாத்தான் வேலை’ என்று சொல்வோர் உண்டு. இவை எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது.

ஆனால், ஆவிகள் உலவுவதும், அவையே குட்டிச் சாத்தான்கள் என்று அழைக்கப்படுவதும், அசைக்க முடியாத உண்மை.

இந்த ஆவிகளை எப்படிச் சிலர் அடக்கியாளுகின்றனர் என்ற வித்தைதான் எனக்குத் தெரியவில்லை.

குட்டிச் சாத்தான்கள் நல்லவர்களுக்கு வழித் துணையாக விளங்குகின்றன.

கீயவர்களுக்குத் தீங்கு செய்கின்றன.

இந்தச் சாத்தான்கள் வயல்களைக் காவல் செய்கின்றன.

இறைவனிடமும் மனிதனிடமும் பேசுகின்றன.

இரு குறிப்பிட்ட காலத்தில், இவை மீண்டும் பிறக்கின்றன.

மனிதர்களாகவோ, மிருகங்கடாகவோ தோன்றுகின்றன.

ஏழைகளுக்கு உணவு வழங்குகிறவாகள் வீட்டையும், பிறர் கஷ்டத்தில் உதவுகின்றவர்கள் வீட்டையும், இவை காவல் காக்கின்றன.

உண்மையில், இவை மொபைல் கோட் நீதிபதிகளாகவே விளங்குகின்றன.

மூலம் : கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்

இதில் என்னுடைய எந்த தனிப்பட்ட கருத்தும் இல்லை. அனைத்தும் கண்ணதாசன் கூறியவை.

தம்மை கடவுளாக மக்கள் முன் அடையாளப்படுத்துபவர்கள் பற்றி எனக்கும் அவ்வளவு நம்பிக்கை இல்லை ஆனால் பலர் இப்படியானவர்களை நம்பியே தீருவோம் என்று அலைகின்றனர். இலங்கையில் இருந்து கூட பெட்டி கட்டிக்கொண்டு வருவார்கள். இதில் பிரபல சிங்கள அரசியல் வாதிகள் கூட அடக்கம் என்பதுதான் நகைப்பான விடையம்.

நான் இப்படி என் நண்பனிடம் அலுத்துக்கொண்டபோது அவன் கூறினான். இந்துக்களை வேற்று மதக்காரர் மதமாற்றம் செய்வதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை. சுத்தி சுத்தி சுப்பற்ற கொட்டிலுக்குத்தான் வரவேணும் என்றது போல அவயள் எப்பிடியும் இந்துவாத்தானே இருக்கப்போகினம். என்னிடம் அப்போது அவனுக்கு கொடுக்க பதில் இருக்கவில்லை உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ என்ன தயக்கம் பகிர்ந்து கொள்ளுங்கள்………..