Category Archives: சிறுகதை

ஈழத்துச் சிறுகதைகள் – கின்டில் பதிப்பு

ஈழத்துச் சிறுகதைகள் இப்போது கின்டில் பதிப்பாகவும் உலகமெங்கும் கிடைக்கின்றது. உங்கள் கின்டில் சாதனத்திலோ இல்லை கின்டில் ரீடர் மூலம் கணனி வழியாகவோ, நகர் பேசி (அன்ரொயிட், ஐஓஎஸ் இயங்கு தளங்கள்) போன்றவற்றிலும் வாசிக்க முடியும்.

நூல் பற்றிய ஆசிரியர் குறிப்பு

2008 இல் ஒரு ஜென் கதையினை எமது பாணியில் சீ துஷ்டனே எனும் தலைப்பிட்டு எழுதினேன். அதை வாசித்தோர் பெருமளவில் அதற்கு வரவேற்புத் தெரிவிக்கவே மேலும் பல சிறுகதைகளைத் தொடர்ச்சியாக எழுதத்தொடங்கினேன். அவ்வரிசையில் அன்று முதல் இன்றுவரை எழுதிய சுமார் 11 சிறுகதைகளின் தொகுப்பே இந்த இ-புத்தகம்.

கதையின் மாந்தர்கள் பொதுவாக ஈழத்தவர்களாக இக்கதைகளில் சித்தரித்துள்ளேன் ஆயினும் கதையில் களம் ஈழத்தில் இருந்து ரொடன்டோ வரை விரிந்திருக்கும். இதன் காரணமாகவே தொகுப்பிற்கு “ஈழத்து சிறுகதைகள்’ என்று தலைப்பிட்டேன். கதையில் ஈழத்துதுப் பேச்சு வழக்கும், சிங்கள உரையாடல்களும் ஆங்காங்கே கலந்திருக்கும். ஆயினும் அவை கதை சார்ந்த உங்கள் புரிதலுக்கு எந்த ஊறும் ஏற்படுத்தாது என்று நம்புகின்றேன்.

These are the collection of short stories that I first wrote on my personal blog “Tamizh Valaipathivu”. Since many people seem to have enjoyed these stories, I thought of releasing them as a book. Here I’m sharing the book with the rest of the world.

I hope you like the book and the stories. The story is mostly written in the Jaffna Tamil slang, but I hope you can understand it without much difficulty.

உஙகளிடம் கின்டில் அன்லிமிட்டட் (Kindle Unlimitted) இருக்குமாயின் இந்தப் புத்தகத்தை இலவசமாக வாசிக்கலாம்.

நீங்கள் அமேசனை வெளிநாட்டில் இருந்து வாசிப்பவராயின் அமெரிக்கா, ஐக்கிய இராசியம் போன்ற தளங்களில் இருந்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

கின்டில் இல்லாவிட்டால்

உங்களிடம் கின்டில் புத்தகங்களை படிக்கும் வசதி இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை. நீங்கள் ஈழத்துச் சிறுகதைகள் புத்தகத்தினை இணையத்தில் pdf, epub வடிவங்களிலும் கம் ரோட் தளத்தில் இருந்து பதிவிறக்கிப் படிக்கலாம்.

வினை விதைத்தவன் – சிறுகதை

வெளியே பனி மோசமாக வீசிக்கொண்டு இருந்த்து. சுந்தரம் தனது கம்பளிப் போர்வையை இறுக்கிப் போர்த்தவாறே யன்னல் அருகில் வந்து ரொறண்டோ நகரத்தை நோட்டம் இட்டார். மறை ஒன்று செல்சியஸ் வெப்பத்தில் நகரம் விறைத்துப்போய் இருந்தது. சுந்தரம் இருக்கும் தொடர்மாடியில் இருபதாம் அடுக்கில் சுந்தரத்தின் வீடு. யன்னல் அருகில் வந்து பார்த்தால் டொறண்டோ நகரின் பளபளக்கும் டவுன்டவுன் அழகாகக் காட்சியளிக்கும்.

எங்கும் பனிக் குவியல்களாக இருந்தன. வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து இருந்தது. ஆனாலும் வாகனங்கள் தமது ஒழுங்கையிலயே முன்னே இருக்கும் வாகனம் செல்லும் வரை பொறுமையாகக் காத்துக் கிடந்தது. சுந்தரம் முகத்தில் படர்ந்திருந்த கவலை ரேகைகளின் மத்தியிலும் மெல்லியதாய் ஒரு புன்முருவல்

“கொழும்பா இருந்தால் இந்நேரம் ஒரு வாகனத்துக்கு மேல மற்ற வாகனம் ஏத்தி ஓட்டியிருப்பாங்கள்” சுந்தரம் மனதினுள்.

“இன்றுடன் 10 நாள் ஆகுது விசயம் அறிஞ்சு. எத்தனைதரம் கோல் எடுத்தாலும் கதைக்கினம் இல்லையே” நினைக்கும் போதே சுந்தரம் கண்களில் இருந்து இரண்டுதுளிக் கண்ணீர் கன்னம் வழியே வழிந்தோடி நாடியில் முத்தமிட்டுக்கொண்டன. முத்தமிட்ட கண்ணீர் துளிகள் அப்படியே சங்கமித்து கார்பெட் நிலத்தில் வீழ்ந்து அப்படியே காணாமல் போயின.

சுந்தரம் குளிரிற்கு சிவந்திருந்த தன் மூக்கை கசக்கிக்கொண்டு மெல்ல முனகியவாறே வீட்டின் மண்டபத்தினுள்ளே நுழைந்து யாரும் இல்லாமல் தன் போக்கிற்கு தனியே ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்தார். “டப்” என்ற சத்தத்துடன் தொலைக்காட்சி வெட்கப்பட்ட பெண்போலத் தன் திரையை மறைத்துக்கொண்டது.

சுந்தரம் தொலைக்காட்சி அருகே இருந்த தனது கைத்தொலைபேசியை எடுத்து இறுதியாக அழைத்த இலக்கங்களைப் பெரு மூச்சுவிட்டவாறே பார்த்தார்.

“கடைசியில பிள்ளை குட்டிகள் எல்லாம் கையை விரிச்சுட்டுதுகள். அப்படி அதுகள் செஞ்சதிலையும் ஞாயம் இருக்குதுதானே. ஈஸ்வரா கெதியாக் கூப்பிடு என்னைய உன்னோட” மனதினுள் விசும்பத் தொடங்கினார் சுந்தரம். கையில் இருந்த கைத் தொலைபேசியை மேசைமேல் வைத்துவிட்டு கூரையைப் பார்த்தவாறே சில நிமிடங்கள் இருந்தார்.

ஏதோ நினைவு வந்தவராக சுந்தரம் மறுபடியும் தொலைபேசியை எடுத்து வேந்தன் என்று இருந்த இலக்கத்திற்கு அழைப்பை எடுத்தார். மறுமுனையில் தொலைபேசி அடிக்கத் தொடங்கி ஒரு குரல் பதில் சொன்னது.

“ஹல்லோ…” என்றது வேந்தனின் குரல்.

‘நான் சுந்தரம் கதைக்கிறன்’

“எந்த சுந்தரம்?” வேந்தன்

“இந்துக்கல்லூரியில படிச்சன் உன்னோட.. நினைவிருக்கா? ஒண்டா ஊர் எல்லாம் சுத்தியிருக்கம் மச்சான். பிறகு ரொறண்டோ வந்திட்டன்” என்றார் சுந்தரம்.

“ஓம் ஓம் ஞாபகம் இருக்கு. இப்ப எதுக்கு எனக்கு கோல் பண்ணுறாய்? நீ செய்திட்டுப் போன வேலையால உன்னோட சேர்ந்து திரிந்த என்ட பெயரும்தான் திருகோணமலையில கெட்டுப் போச்சு. தயவு செய்து கோல் எடுக்காதை. எக்கேடாவது கெட்டுப்போ” என்றான் வேந்தன்.

“இப்ப விசயம் கொஞ்சம் வித்தியாசம். நான் இலங்கைக்கு வரவேணும். ஏதாவது வீடு ஒண்டு அங்க எடுத்துத்தருவியா மச்சான்?” என்று கேட்டார் சுந்தரம்.

“ஐயோ!! சாமி!! ஆளவுடுப்பா. உன்னால பட்டது போதும்”

“மச்சான்… ஹல்லோ ஹல்லோ…. ஹல்லோ…” மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

நண்பனும் கைவிட்ட நிலையில் சுந்தரம் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். மெல்ல மெல்ல அவர் நினைவுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணமானது.

அப்போது சுந்தரத்திற்கு 27 வயது. திருமணத்திற்கு சரியான வயது என அனைவரும் கூறிப் பெண்பார்க்கத் தொடங்கினர். சுந்தரம் திருகோணமலை இந்துக்கல்லூரியில் உயர்தரம் முடித்து இப்போது கனடாவின் டொறன்டோ பல்கலைக்கழகத்தில் வைத்தியகலாநிதிப்படத்திற்காகப் படித்துக்கொண்டு இருக்கின்றான்.

வீட்டில் இருந்து சுந்தரத்திற்கு அடிக்கடி அழைப்பு எடுத்து கலியாணப் பேச்சுகளை வீட்டார் சொன்னதும் சுந்தரம் தனக்கு அப்படியாக எதுவும் வேண்டாம் என்று பலதடவை அடித்துக் கூறினான். இருந்தாலும் தாயார் தினமும் கண்ணீரும் கம்பலையுமாக தொல்லை தரவே சுந்தரம் அரை மனதாகத் திருமணத்திற்குச் சம்மதித்தான்.

பெற்றோர் முன்னிலையில் மல்லிகாவிற்கும் சுந்தரத்திற்கும் திருமணம் உறவினர் புடைசூழ ஜாம் ஜாம் என்று நடைபெற்றது. பெண்வீட்டார் மாப்பிள்ளையைப் பற்றி கேட்டபோது சுந்தரத்தின் உயிர் நண்பன் வேந்தன் சுந்தரம் போன்ற மாப்பிள்ளை உங்களுக்கு கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று சொல்லி பெண்வீட்டார் சம்மதத்தை இலகுவில் வாங்கிவிட்டான். வேந்தன் வாயிலிருந்து வந்த இந்த வார்த்தைகள் சில வருடங்களின் பின்னர் அவனுக்குப் பெரும் சங்கடத்தைக் கொடுக்கப் போகின்றது என்பது அப்போது வேந்தனுக்குத் தெரிந்திருக்கவாய்ப்பில்லை.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே சுந்தரத்திற்கு மேலைத்தேய வாழ்க்கையின் மோகமும் வாழ்க்கை முறையும் தன்னை நோக்கி வா வா என்று கம்பளம் விரித்து அழைக்கத் தொடங்கியது. திருமணமும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கைகளும் அவனுக்குப் பிடிக்கவில்லை. தினமும் மல்லிகாவுடன் சண்டை. ஒரு வருடம் மணவாழ்க்கை முடியும் தருவாயில் அவர்கள் தாம்பத்தியத்தின் பேறாய் மல்லிகா கருவுற்றுஇருந்தாள். சுந்தரம் அக்காலத்திலேயே வாழ்வின் மிகப்பெரிய முடிவொன்றை யாரும் எதிர்பாரா நேரத்தில் தனியே திட்டமிட்டு செயற்படுத்தினான்.

வீட்டில் நண்பர்களுடன் இன்பச்சுற்றுலா செல்வதாகச் சொல்லிவிட்டு மீளக் கனடா வந்துசேர்ந்துவிட்டான். வந்தாரை வாழவைக்கும் டொறண்டோவும் சுந்தரத்தை மீள அணைத்துக்கொண்டது. வீட்டாருடன், மனைவி மக்களுடன் இருந்த தொடர்புகளை சுந்தரம் விட்டு எறிந்தான். மனம் போன போக்கில் வாழ்க்கையை நடத்தினான். அவன் படிப்பு மட்டும் கைநிறைய பணத்தை வாரி இறைக்கவே வாழ்கை பற்றிய கவலை ஏதும் இல்லாமல் வாழ்க்கையை இன்பமாகக் கடத்தினான்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்ட சுந்தரம் சுதாகரித்து எழுந்துகொண்டே மூலையில் இருந்த அலுமாரியை நோக்கி நடக்கத் தொடங்கினார். அலுமாரியின் கதவைத் திறந்து உள்ளேயிருந்து ஒரு கோப்புறையை எடுத்தார். அதனுள்ளே பல மருத்துவச் சான்றிதள்கள் இருந்தன.

அதில் ஒரு பத்திரத்தில் “Diagnosed with cancer” (கான்சர் இருப்பது அறியப்பட்டுள்ளது) என இருந்த்து. அதைப் பார்த்த மாத்திரத்தில் ஏதோ வெறி கொண்டவர் போல சுந்தரம் அந்தக் கோப்பையும் பத்திரங்களையும் தூக்கி எறிந்தார்.

இன்னுமொரு பத்திரத்தை எடுத்து அதை நிரப்பி நஷனல் பாங் ஒப் கனடா என விலாசமிடப்பட்ட உறையினுள் இட்டார்.

சுந்தரம் எதையும் இரசிக்கும் மனநிலையில் இல்லாமல் இருந்தாலும் மறுபடியும் வந்து கதிரையில் உட்கார்ந்து ரொன்டோ நகரின் அழகை பனி மூட்டத்தினூடே வெறித்தும் பார்த்தவண்ணம் அசையாமல் உட்கார்ந்து இருந்தார்.


இரண்டு வாரங்களின் பின்னர்
மல்லிகா வீட்டிற்கு தபால்காரன் இலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தான்.

அன்புடையீர்,
உங்கள் கணக்கிற்கு கனடா தேசிய வங்கியில் இருந்து 20 மில்லியன் ரூபா பணம் வந்து சேர்ந்துள்ளது.

இதற்கான உள்நாட்டு வரி மற்றும் மேலதிக விடையங்களை ஆலோசிக்க அண்மையில் உள்ள வங்கிக்கிளைக்கு வருகைதரவும்

அன்புடன்,
தேசிய சேமிப்பு வங்கி

என இருந்தது அந்தக் கடிதம்.

கொழும்பு 2019

இடம்: கொழும்பு
நேரம்: காலை 7.30
ஆண்டு: 2019

விந்தியா தனது கையில் இருக்கும் பையை இறுக்க அணைத்தபடி நடந்து கொண்டிருந்தாள். வீதி வெறிச்சோடிக் கிடந்தது. தனது நடையை மெல்ல மெல்ல வேகப்படுத்திக்கொண்டே வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

கையில் இருக்கும் அந்தப் பையின் பெறுமதி அவளுக்குத்தான் தெரியும். வீட்டில் அனைவரும் இந்தப் பையில் இருப்பதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். யார் கண்ணிலும் பட்டுவிடமால் சென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். பத்து ஆண்டுகளுக்கு முதல் இந்த இடத்தில் இந்நேரத்தில் சனம் சும்மா ஜே.. ஜே… என்று நடமாடும். இப்போ எல்லாம் தலைகீழ்.

சிந்தனைகளில் சுழன்றவாறு நடந்துகொண்டிருந்தாள் விந்தியா. அந்த சந்தியைக் கடந்துவிட்டால் தன் வீட்டை அடுத்த 5 நிமிடத்தில் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் நடையின் விரைவைக் கூட்டியவாறு சந்தியை நேக்கி நடக்கத் தொடங்கினாள்.

திடீர் என்று எங்கிருந்தோ ஒரு அடிபட்டு நெளிந்த டாடா இன்டிகா காரில் நான்கைந்து இளைஞர்கள். கார் சத்தைத்தை விட அவர்கள் போட்ட சத்தமே அதிகமாக இருந்தது. ஒருத்தன் காது குத்தியிருந்தான் மற்றவன் கண்இமையில் ஏதோ குத்தியிருந்தான்.

“டேய் அங்க பாருடா! ஏய்……….. என்ன கையில?” காரில் இருந்த ஒருத்தன் ஊளையிட்டான்.

குனிந்த தலை நிமிராமல் விந்தியா அந்த இடத்தில் இருந்து மெல்ல நகரத் தொடங்கினால். அவளை சிறிது கடந்து நின்று இருந்த கார் இப்போது, கிரீச் என்ற சத்ததோடு அவள் முன்னால் வந்து நின்றது. காரில் இருந்து நான்று இளைஞர்களும் தட தடவென இறங்கினர். ஒவ்வொருத்தன் கண்ணிலும் வெறி தாண்டவமாடியது.

ஒரு அடி முன்னுக்கு எடுத்து வைத்த ஒருத்தன் விந்தியா கையில் இருந்த பையை பறித்தான். பையை திறந்து உள்ளே பார்த்தவன், மற்றவர்களைப் பார்த்து புன்னகையுடன் தலையாட்டினான்.

“டேய்… தாடா!!!” விந்தியா பறித்தவன் கன்னத்தில் சடார் என்று ஒரு அறை விட்டாள். அறைந்த சத்தம் ஓய்வதற்குள் ஒரு சத்தம் ‘டுமீல்’. விந்தியாவின் உடல் கீழே சரிய அவள் உடலில் இருந்து இரத்தன் குபு குபு என வெளியேறத் தொடங்கியது.

விந்தியாவிற்கு சுய நினைவு மெல்ல மெல்ல அகலத் தொடங்கியது. கண்கள் இருட்டத் தொடங்கியது. கடைசியாக கண் மூட முன்னர், தன் பையில் இருந்த பாண் துண்டை அந்தக் கயவர்கள் விலங்குகளைப் போல பிய்த்து உண்பதைக் கண்டாள். மெல்ல மெல்ல அவள் உலகம் இருளத் தொடங்கியது.

பி.கு: யுத்தம் விரைவில் ஓயாவிட்டால் ஒருநாள் ஸ்ரீ லங்காவில் இது நடக்கப் போவது நிச்சயம

இரவுகள் தோறும்தனது கார் கண்ணாடியை சற்றே கீழிறக்கிப் பார்த்தான் குகன். சில் என்று காற்று வீசிக்கொண்டு இருந்தது. இவனது டொயோட்டா ப்ராடோ சத்தமில்லாமல் காற்றைக் கிழித்துக்கொண்டு எ-9 வீதியில் பயனித்துக்கொண்டிருந்தது. பூச்சிகளின் சங்கீத ஒலியும் அவ்வப்போது எதுவென்றே தெரியாத சத்தங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. தூக்கம் கண்களை மெல்லக் கட்டத்தொடங்கியது.

“ம்ஹூம்…. நித்திரையோடு ஓடக்கூடாது” என்று நினைத்துக்கொண்டான். காரில் இருந்த கருவி இன்னமும் 5 நிமிடத்தில் ஒரு சிற்றுண்டி சாலை வருவதாக சைகை காட்டியது. வேகத்தை மள மளவென்று குறைத்தவாறு சிற்றுண்டி சாலை வாசலில் தனது வாகனத்தை நிறுத்தினான்.

ஜன்னலை மூடிவிட்டு, தானியக்க பாதுகாப்பு கருவியையும் உயிர்ப்பூட்டிவிட்டு குகன் சிற்றுண்டிசாலையை நோக்கி நடக்கத்தொடங்கினான். சிற்றுண்டி சாலை என்று சொல்வதைவிட அதை ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் என்றும் சொல்லலாம். வாசலில் ஒரு பழைய எரிபொருள் நிரப்பும் இயந்திரம் இருந்தது. அந்தப் பழைய உணவகத்தின் கதவை அனாயசமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் குகன்.

“வாங்க ஐயா, பெற்றோல் போடோனுமா இல்லை சாப்பிட ஏதாவது வேணுமோ?” கேள்வி கேட்டான் உணவு விடுதிக்காரன்.

“பெற்றோல் இருக்கு, எனக்கு ஒரு கோப்பி தாங்கோ”

“ஐயா எங்கயிருந்து வாரியள், இந்த நேரத்தில தனியாப் போறியள் போல இருக்கு”

“ஹா.. நான் கொழும்பில இருந்து வாறன். ஒரு தனியார் கொம்பனியில வேலை செய்யிறன். நாளைக்கு வருசப்பிறப்புதானே. அதுதான் வீட்ட போயிடோனும் என்ற நினைப்பில இரவோட இரவாக் கிளம்பிட்டன்”

“எல்லாருக்கும் இருக்கிற ஆசைதான்” என்று கூறியவாறு அந்தக் கடை ஊழியன் ஒரு கோப்பை கோப்பியை எடுத்துக்கொடுத்தான்.

கடுங்குளிருக்கு அந்த கோப்பி இதமாக இருந்தது. தனது கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். சரியாக இரவு 12.05 ஆகிவிட்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகனங்கள் மிக மிக அரிதாக ஒளியைப் பாய்சிக் கண்சிமிட்டிக்கொண்டு வீதியில் சென்றுகொண்டிருந்தன.

தனது பையிலுந்து பணத்தை எடுத்து ஊழியனிடம் கொடுத்துவிட்டு குகன் தனது காரை நோக்கி நடக்கத் தொடங்கினான். உள்ளே ஏறி உட்கார்ந்ததும் ரேடியோவைப் போட்டுத் திருப்பி திருப்பு என்று திருப்பினான். ம்ஹூம் ஒரு அலைவரிசை கூட இழுக்குதில்லை. செல்லிடத் தொலைபேசி பயனற்றுக் கிடந்தது. ஆ… என்று ஒரு பெரு மூச்சு விட்டவாறு தன் காரின் இயந்திரத்தை உயிர்ப்பூட்டினான் குகன். அந்த சொகுசு வாகசனம் மீண்டும் அதிக இரைச்சல் போடாமல் காற்றைக் கிழித்துக்கொண்டு பயனிக்கத் தொடங்கியது.

அரைமணி நேரத்தில் மீண்டும் குகனுக்குக் கண்ணைக் கட்டத் தொடங்கியது. அரைக்கலக்கத்தில் யாரோ வாகனத்தை மறைப்பது தெரிகின்றது. நன்கு அருகில் வந்ததும் குகன், திடுக்கிட்டு கார் பிரேக்கைப் போடுகின்றான். வெளியே நின்ற பெண் போட்ட கீ என்ற சத்தம் குகனின் வாகனக் கண்ணாடியூடு கேட்டது.

“கூ ட ஹெல் இஸ் திஸ்?” கடுப்புடன் கூறியவாறே குகன் தனது வாகனக் கண்ணாடியை கீழிறக்கினான்.

“என்ன தங்கச்சி என்ன விசயம்”

“இண்டைக்கு இரவு வேலை முடிய லேட்டாகிட்டுது. 20 மைல் தள்ளித்தான் எங்கட வீடு இருக்குது. அங்க கொண்டுபோய் இறக்கிவிடுவியளோ?”

என்ன கரைச்சலடா இது?. முன்னப்பின்னத் தெரியாத பொம்பிள தன்னைக் காரில ஏத்தச் சொல்லுறாள். இவளை ஏத்திப் பின்னால இங்கிலீசுப் படங்களில வர்றமாதிரி என்னைக் கொலை செய்திடுவாங்களோ?? என்று பலவாறும் குளம்பியவாறே தன் காரின் கதவைத் திறந்தான்.

“நான் காரில பின்னால ஏறுறன்” என்கிறாள் அவள்.

“அப்ப நான் என்ன உங்களிட ட்ரைவரோ?, முன்னால ஏறுங்கோப்பா. உம்மை என்ன நான் பிடித்துச் சாப்பிடப்போறனோ?”

அவள் ஏறி குகனுக்குப் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் அமர்ந்துவிடுகின்றாள். இப்போதுதான் குகன் அருகில் பக்கத்தில் அந்தப் பெண்ணைப் பார்க்கின்றான். பார்த்த மாத்திரத்திலேயே அவன் இதயம் பட படவென அடித்துக்கொண்டது. கொழும்பில இருக்கிற சிங்களப் பெட்டையளெல்லாம் இவள் கால் தூசிக்குத் தேறமாட்டாளுகளே. கடைக்கண்ணாலும் தன் முன்னால் இருந்த கண்ணாடியிலும் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“றோட்டப் பார்த்து ஓடுங்கோ…” நமட்டுப் புன்னகையுடன் கூறினாள் அந்தப் பெண்.

“ஆ…. நக்கலு. சரி சரி உங்கட பெயர் என்னண்டு சொல்லேலயே?” மெதூவகக் கதையைத் தொடங்கினான் குகன்.
“ஏன் பெயர்?”

“உங்களை ஏத்திக்கொண்டு போய் இறக்கிவிடுறன் பெயர் எல்லாம் சொல்ல மாட்டியளோ?, பெரிய வில்லாதி வில்லியாக இருப்பியள் போல இருக்குது”

இப்படியே கதை தொடர்ந்தது. குகனை அறியாமலே அவன் வாகனம் ஓட்டும் வேகத்தைக் குறைத்துவிட்டிருந்தான். அவளை விட்டுப் பிரிய அவ்வளவு மனமில்லை. இப்போது இருவரும் நல்ல சகவாசமாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஒரே சிரிப்பொலி அங்கு மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.

ஒரு மணி நேரத்தில் குகன் அந்தப் பெண் இறங்க வேண்டிய இடத்தில் அவளை இறக்கிவிட்டான். நன்றி சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தாவாறே அந்தப்பெண் நகரத் தொடங்கினாள்

“ஹல்லோ.. இந்தாங்கோ என்னுடைய விசிட்டிங் கார்ட். கொழும்புப் பக்கம் வந்தால் சந்தியுங்கோ. அதுதானே உங்கட வீடு?” தூரத்தில் தனியாக இருந்த ஒரு வீட்டைக் காட்டிக்கேட்டான் குகன். அவளும் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு மீண்டும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். குகன் அந்த இடத்தின் அடையாளங்களை நன்கு மனதில் பதித்து வைத்துக் கொண்டான். குறிப்பாக அந்த மைல்கல்லும். அதற்கு அருகில் இருந்த மாமரமும் இந்த இடத்தை மறக்காமல் ஞாபகம் வைத்திருக்க உதவும்.

அக்சிலரேட்டரை மனமில்லாமல் அழுத்தியவாறே அங்கிருந்து நகர்ந்தான் குகன்.

வீடு சென்றாகிவிட்டபோதும் குகனின் மனம் முழுவதும் நேற்றய நிகழ்வில்தான் இருந்தது. அவளை மறக்க இவனால் முடியவில்லை. தான் தன் நண்பன் வீட்டிற்குச் செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு தனது ப்ராடோவில் ஏறி மீண்டும் அந்தக் கனவுக் கன்னி வீடு நோக்கிப் பயனமானான்.

ஒரு மணி நேரத்தில் அந்த இடத்தை குகன் வந்தடைந்துவிட்டான். அப்போது பெரும் அதிர்ச்சி அவனுக்குக் காத்திருந்தது. அங்கே நேற்றிரவு கண்ட வீடு இப்போது இல்லை. அதே மைல் கல்லு அதே மாமரம் ஆனால் வீடு மட்டும் இல்லை. அவன் முள்ளந்தண்ணூடாக ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ச்சியதைப் போன்று ஒரே அதிர்ச்சியாக இருந்தது. அந்நேரம் அப் பாதையினூடாக ஒரு முதியவர் வரவே அவரிடம் குகன் மெல்லப் பேச்சுக்கொடுத்தான்.

“ஐயா! இந்தப் பக்கம் வீடு ஒன்று இருந்ததில்லோ?”

”என்ன தம்பி நக்கலா? இங்க நான் 50 வருசமா இருக்கிறன். இந்த இடத்தில வீடு ஒன்றும் இருக்கேல. தண்ணி கிண்ணி போட்டியளோ?” ஒரு சங்கேதப் பார்வையுடன் அங்கிருந்து நகர்ந்தார் அந்த முதியவர்.

குகன் மீது 1000 மின்னல்கள் ஒரேயடியாக விழுந்தது போல உணர்ந்தான். மெல்ல தனது வாகனத்தை நோக்கி நடக்கத் தொடங்கிவன் மனதினுள் நினைத்துக்கொண்டான்.
“இனிமேல் இரவில் தனியாகப் பிரயாணம் செய்வதில்லை”

குகனின் வாகனம் மெல்ல மெல்ல தன்பாதையில் செல்கின்றது. சூரியன் மெல்ல மெல்ல மறைந்து எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது. அன்றிரவு அப்பாதையால் ஒரு டோயோட்டா கொரால்லா வருகின்றது. அதில் இருந்து நன்றி சொல்லியவாறே அதே அழகிய நங்கை இறங்குகின்றாள்.

கண்காட்சி (சிறுகதை)


எங்கோ ஒரு தூரத்து கூரையில் இருந்து சேவல் ஒன்று தன் முன்னங்காலில் எம்பி மிகுந்த பிராயத்தனத்துடன் ஒரு தடவை கூவியது. சூரியனின் கதிர் பட்டு அந்தச் சேவலின் சிறகுகள் பளபளத்தன. அங்கங்கே பறவைகள் தம்பாட்டுக்கு தாங்களும் “கீச்.. கீச்…” என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டிருந்தன. சூரியன் மேற்கில் அலுப்பு முறிக்கத் தொடங்கிவிட்டான்.

இத்தனையும் நிதானமாக நடக்க சுகுமார் மட்டும் பதறித் துடித்து நேரத்தைப் பார்த்தான். காலை நான்கு மணி இருக்கும், சுகுமார் எழுந்துவிட்டான். அருகிலே தூங்கிக்கொண்டு இருந்த தன் தந்தையாரையும் தாயாரையும் பார்த்தான், பின்னர் ஒரு தயக்கத்துடன் தந்தையாரை நெருங்கி.

“அப்பா.. அப்பா…”

“என்னடா தம்பி??” அரைத் தூக்கக் கலக்கத்தில் கேள்வி கேட்டார் சுந்தரேசன்.

“இண்டைக்கு நாங்கள் செய்த அந்த பொம்மை வீட்டை ஸ்கூலுக்குக் கொண்டு போகவேணும். இண்டைக்கு கொண்டு போகாட்டால் என்ட அந்த வீட்டை கண்காட்சியில வைக்கேலாது எண்டு ரீச்சர் சொன்னவர்” ஒருவிதப் பதட்டத்துடன் கூறினான் சுகுமார்.

“சரியடா.. இப்ப படடா! காலம்பிற பஸ் ஸ்டாண்டில கொண்டு வந்து எல்லாச் சாமானையும் தாறன்” புன்னகையுடன் கூறினார் சுந்தரேசன்.

அரைமனதுடன் மீள கண்களை மூடினான் சுகுமார். அவனால் தூங்க முடியவேயில்லை. கனவில் தான் பாடசாலைக்குக் கொண்டு சென்ற பொம்மை வீடு மழை நீர் பட்டு பழுதுபட்டுவிடுவது போன்ற நிகழ்வுகள் திரும்பத் திரும்ப வந்துகொண்டு இருந்தது.

கடைசியாக ஆறு மணியளவில் சுகுமார் தாயாரின் குரல் கேட்டு துகில் நீத்தான்.

சுகுமார் ஏழு வயதுப் பாலகன். இவன் கல்விகற்கும் பாடசாலை இவன் வீட்டில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. இவன் கிராமத்தில் இருந்து பாடசாலைக்குச் செல்வதென்றால் காலையில் ஏழு மணிக்கு வரும் அரச பேரூந்தில் செல்ல வேண்டும். தனியார் பேரூந்தில் செல்வதென்றால் பணம் அதிகம் செலவாகும், அதனால் இந்த ஏழைகளுக்கு அந்த அரச பேரூந்தே தஞ்சம்.

சில நாட்களுக்கு முன்னர் சுகுமாரின் வகுப்பாசிரியர் தனது மாணாக்கருடன் பேசத் தொடங்கினார்.

“பிள்ளைகளே!!! எங்கட பாடசாலையில ஒரு கண்காட்சி நடக்கப்போகுது.. அதுக்கு நீங்கள் உங்களுக்கு விருப்பமான கைவினைப் பொருட்களைக் கொண்டு வரலாம்”

அன்று முதல் சுகுமார் கனவெல்லாம் தானும் அந்தக் கண்காட்சியில் ஒரு கைவினைப் பொருளை வைக்கவேண்டும் என்பதே. வீடு திரும்பியதும் தன் தந்தையாரை நச்சரித்து ஒரு சிறிய பொம்மை வீடு செய்துகொண்டான்.

அழகான சிவப்பு நிறக் கூரை, பளீர் என்ற வெள்ளை நிறத்தில் சுவர்கள். வீட்டினுள்ளே பொம்மை மனிதர்கள், தளபாடங்கள், தொலைக்காட்சி, வீட்டின் வெளியே சின்னப் பூந்தோட்டம், கிணறு என்று அவன் வீடு கலாதியாக இருந்தது.

இத்தனை வேலையும் முடிய நாட்கள் நன்கு சென்றுவிட்டன. பொறுமை இழந்த ஆசிரியர் நாளை உன் கைவினைப் பொருளைக் கொண்டு வராவிட்டால் அதைக் கண்காட்சிக்குச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று வகுப்பில் சத்தமிட்டுவிட்டார். சுகுமாருக்கு அதைச் சகிக்கவேயில்லை. இவ்வளவு அழகான வீட்டை எப்படி கண்காட்சியில் வைக்காமல் விடுவது??? இன்று அவனுக்குக் கொடுக்கப்பட்ட தவணையின் கடைசிநாள்.

அதனால்தான் இவ்வளவு பதட்டத்துடன் காணப்படுகின்றான் சுகுமார்.

ஆறு முப்பதுக்கே சாப்பாடு முடித்து பாடசாலை செல்லத் தயாராகிவிட்டான். தந்தையார் சுந்தரேசனும் பொம்மை வீட்டை தன் கைகளில் ஏந்தியவாறு தன் புத்திரனுடன் பஸ் தரிப்பிடத்திற்குச் சென்றனர்.

6.45 க்கு வரவேண்டிய தனியார் பேரூந்து இவர்களைக் கடந்து சென்றது. பேரூந்து கடந்து செல்லும் போது சுகுமாரின் கண்கள் சிறிய ஏக்கத்துடன் தந்தையாரைப் பார்த்தது. அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் புரியாதது போல தந்தையார் அமைதியாக இருந்துவிட்டார்.

சுகுமாரைப் பொறுத்தவரை நேரம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தது. அந்தப் பொம்மை வீட்டை ஆசிரியரிடம் ஒப்படைக்கும் வரை அவனுக்கு நிம்மதி இல்லை.

கடைசியாக இப்போது ஏழு மணியாகிவிட்டது. இன்னமும் பேரூந்து வரவில்லை. சுகுமார் கலக்கம் அடையத் தொடங்கினான். தந்தையின் கையில் இருந்த மணிக்கூட்டை அடிக்கடி பார்த்துக்கொண்டான்.

“அப்பா..! ஏன் இன்னும் பஸ் வரேல?”

“அடேய்..!! அரசாங்க பஸ்சுகள் எண்டைக்கடா நேரத்துக்கு வந்திருக்குது?” மகனைத் தேற்றினார் தந்தையார். என்றாலும் அவர் மனதின் அடியிலும் இப்போது சந்தேகம் துளிரிவிடத் தொடங்கியிருந்தது.

நேரம் மெல்ல மெல்ல ஓடத் தொடங்கியிருந்தது. ஏழு மணி மெல்ல மெல்ல நகர்ந்து ஏழு முப்பது ஆகிவிட்டது. சுகுமார் கண்களில் இப்போது கண்ணீர்த் துளிகள்.

மற்றய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

“சுந்தரேசன்… கார்த்திக் சொன்னவன், சீ.டி.பி பஸ் இண்டைக்கு பிரேக் டவுனாம். வராதாம், பொடியைக் கூட்டிக்கொண்டு வீட்ட போங்கோ” சொல்லிக்கொண்டே நகர்ந்தார் சுந்தரேசனின் அயல் வீட்டுக்காரன் கதிரேசன்.

“தம்பி நீ நாளைக்கு இத பள்ளிக்கூ……” சொல்லிக் கொண்டே சுந்தரேசன் திரும்பிப் பார்த்தார், அவர் மகன் பேரூந்து செல்ல வேண்டிய திசையில் நடந்துகொண்டு இருந்தான். அவனுக்குத் தெரியும அடுத்துவரும் தனியார் பஸ்சில் தன்னை அனுப்பத் தன் தந்தையிடம் பணம் இல்லை என்பது.

கண்ணில் ஒரு துளி கண்ணீர் ததும்ப, அதை தன் பின்னங்கையால் துடைத்துவிட்டுக்கொண்டே கதிரேசன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். கதிரேசனிடம் ஒரு பழைய சைக்கிள் உள்ளது சுந்தரேசனுக்குத் தெரியும்.

நியன்டதாலின் காதல் -சிறுகதை

இன்றிலிருந்து சுமார் 28,000 ஆண்டுகள் பின்னோக்கிச் வரலாறு திரும்பிப் பார்க்கின்றது. தற்போதைய பிரான்சு, ஸ்பெயின் இடையில் உள்ள அந்தப் பரந்த சமவெளியில் ஒரு உருவம் நிலை குலைந்து நிலத்தில் குப்புறப் படுத்துக்கிடக்கின்றது.. அதுதான் நம் கதையின் நாயகன். ஒரு நியன்டதால் இனத்தை சேர்ந்த அரைமனிதன்.

ஓ..ஜீ…!!!! அந்த உருவத்தின் வாயில் இருந்து அடக்க முடியாத வேதனையுடன் பிளிரல் ஒன்று மேல் எழும்புகின்றது. பின்னர் அது மெல்ல மெல்ல அடங்கி முனகல் ஆகின்றது. அதில் அவன் இயலாமையும், வெறுப்பும், இழப்பும் கலந்து ஒலிக்கின்றது. மார்பில் ஆழமாக ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து குருதி இன்னமும் கசிந்துகொண்டே இருக்கின்றது.

இது எங்கள் பூமி.. நாங்கள் வேட்டையாடிப் பிழைத்த பூமி.. மந்தைகளையும், குதிரைகளையும், மான்களையும் நாம் வேட்டையாடிய பூமி. இடையில் வந்தவர்கள் எம்மை அழிப்பதா? அவன் மனது பதைபதைத்தது. வேதனை மிகுதியில் மெல்ல மெல்ல வார்த்தைகள் அடங்கி அரை மயக்கத்தின் பிடியில் மாட்டிவிடுகின்றான். நினைவுகள் மெல்ல மெல்ல சுழல்கின்றன.

பச்சிளம் புல்வெளியினூடே அழகிய நியன்டதால் மங்கை ஓடிவருகின்றாள். கையிலே அன்றலர்ந்த சூரியகாந்திப் பூ. அவள் முகத்தின் முன்னே அந்தச் சூரிய காந்திப்பூ களையிளந்துவிடுகின்றது. அவள் கூந்தல் காற்றிலே அங்குமிங்குமாய் அலைபாய்ந்துகொண்டு இருந்தது. அலை பாயும் அந்தக் கூந்தல் அவளுக்கு மேலும் அழகு சேர்ப்பதை கா தன் கண்களால் இரசித்துச் சிரித்துக் கொண்டு இருந்தான்.

ஏய்.. கா..!!! என்ன? கண்களால் தன் காதலனைப் பார்த்து கேள்வி கேட்டாள் ஜீ. ஏக்கமும் ஏளனமும் அவள் கண்களில் தெறிப்பதை புரியாதது போல புன்னகை பூத்தான் கா.

இவர்கள் இருவரும் இந்த சமவெளியில்தான் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். இருவரும் வெவ்வேறு நியன்டதால் குழுவைச் சேர்ந்தவர்கள். காதல் யாரைத்தான் விட்டது. குழு குழுவாக பரந்த நிலப்பரப்பினூடே இரையைத் தேடி அலைந்து திரிந்த நியன்டதால் மக்கள் இடையிடையே சந்தித்து உறவு பாராட்டுவதும் மோதிக்கொள்வதும் இந்தப் பகுதியில் சர்வசாதாரணமாக நடந்துவருகின்றது. ஜீயைச் சந்தித்த கா அவளைக் கவர்ந்து வந்து தன்னுடைய குழுவுடன் சேர்த்துக்கொண்டான். அத்துடன் குழுவில் உள்ள மற்ற ஆண்கள் யாரும் அவளை அண்டாமல் கவனமாகவும் கவனித்துக்கொண்டான்.

சில காலங்கள் இருவரும் எந்தப் பிரைச்சனையும் இல்லாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தனர். ஆனாலும் இவர்கள் சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

கா ஒரு நாள் காலை தன் குழுவுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். தான் கடைசியாகத் தங்கியிருந்த குகையில் ஜீ மற்றும் ஏனைய நங்கைகளை விட்டுவிட்டு கா தன் கூட்டத்துடன் வேட்டைக்குப் புறப்பட்டான். அவன் கையில் மரப் பிடியுடன் அமைந்த கோடாலி இருந்தது. கோடாலியின் வெட்டும் பகுதி கல்லினால் செய்யப்பட்டிருந்தது. அதே போல அவன் நண்பர்கள் ஈட்டி போன்ற அமைப்பைத் தம் கையில் வைத்திருந்தனர்.

நேற்று இவர்கள் வேட்டையாடிய காட்டு எருமையின் எலும்புகள் குகை வாயிலில் கிடந்தது. அவற்றை ஒரு தடவை பார்த்து சிரித்துக்கொண்ட கா சத்தமிட்டு தன் நண்பர்களுடன் பேசத் தொடங்கினான். வார்த்தைகளை விட அங்கங்களே அதிகமாகப் பேசின.

நேற்று காட்டு எருமை, இன்று மான் அல்லது குதிரையை வேட்டையாட வேண்டும் அவன் பேச்சின் பின்னர் எல்லோரும் தம் கையில் இருந்த ஆயுதங்களை உயர்த்தி சத்தம் இட்டனர்.

பின்னே திரும்பிய கா தன் அருமை ஜீயைப் பார்த்து தீ மூட்டத் தயாராகுமாறு கூறிவிட்டுச் செல்லத் தொடங்கினான். அன்றுதான் கா தன் வாழ்க்கையில் முதல் தடவையாக அந்த வித்தியாசமான விலங்குகளைக் கூட்டமாகப் பார்த்தான். தன்னைப் போலவே உருவமாக இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அவர்கள் முகங்கள் தட்டையாக இருந்தது. உயரத்திலே கொஞ்சம் அதிக உயரமாக இருந்தார்கள்.

யார் இவர்கள்? எம் பூமியில் இவர்களுக்கு என்ன வேலை?. காவின் மூளையைக் கேள்விகள் துளைக்கத் தொடங்கின. உடனடியாக அவர்களைத் தாக்குவது என்று கா முடிவு செய்தான். தன் கூட்டத்தினருக்கு சைகையால் பதில் சொல்லிவிட்டு எல்லோரும் ஓ….!!!!!!!!!!!!!!!!!!!!!! என்று கூக்குரல் இட்டவாறே தங்கள் பூமியுள் புதிதாக கண்ட அந்த விலங்குகளை நோக்கி ஓடத் தொடங்கினர்.

அருகே சென்றதும்தான் அவர்களுக்கு புரிந்தது. தாங்கள் மோதிக்கொண்டிருப்பது தங்களிலும் பார்க்க கொஞ்சம் புத்திசாதூர்யம் கூடியதும், பலம் கொண்டதுமான மனிதர்களுடன் என்பது.

இரு தரப்பும் மோசமாக மோதிக்கொண்டனர். மனிதர்கள் கொஞ்சம் முன்னேற்றமான ஆயுதங்களினால் ஆக்ரோஷமாகத் தாக்கினர். ஆயினும் கா தரப்பில் அதிகமான நபர்கள் இருந்ததினால் காயப்பட்ட தம் இனத்தவரைவிட்டுவிட்டு மனிதர்கள் ஓடத் தொடங்கினர்.

கா தன் கையில் இருந்த கோடாரியை உயற்றி.. வெறியுடன் உச்ச ஸ்தாயியில் சத்தம் இட்டான். அவனைத் தொடர்ந்து அவன் குழுவினரும் தம் ஆயுதங்களை உயர்த்திச் சத்தமிட்டனர். இவ்வாறாக சில ஆண்டுகள் மனிதர்களும் நியன்டதாலும் மோதிக்கொண்டு இருந்தனர். சுமார் 10000 ஆண்டுகள் நியன்டதாலும் மனிதர்களும் ஒரே காலப்பகுதியில் ஐரோப்பாவில் இருந்துள்ளனர்.

கடைசியாக ஒரு நாள் வேட்டையாடிவிட்டு காவும் குழுவினரும் தாங்கள் கடைசியாக அமைத்துத் தங்கியிருந்த குடில் நோக்கி வருகின்றனர். தூரத்திலேயே அவர்களின் குடிலில் இருந்து புகை மண்டலமாக எழும்புவது தெரிந்தது.

ஜீ…!! காவின் வாயில் இருந்து மீண்டும் பிளிரல். வேட்டையாடும் போது அந்த றெயின்டீரினால் காலில் ஏற்பட்ட காயத்தையும் அதன் ரணத்தையும மறந்து தங்களின் குடிலை நோக்கி ஓடத் தொடங்கினான் ஜீ.

அங்கே சென்ற போது அனைத்தும் முடிந்திருந்தது. அவர்களின் குடிலில் இருந்த பெண்கள் யாவரும் கொலை செய்யப்பட்டு குடிலில் போட்டு எரிக்கப்பட்டிருந்தார்கள். நெருப்பாக எரிந்துகொண்டிருந்த காவிற்கு கண்முண்னே தெரிந்த நெருப்பு நெருப்பாகவே புரியவில்லை. எரிந்த குடிலினுள்ளே புகுந்து தன் காதலி ஜீயை மட்டும் தன் கைகளிலே தூக்கிவந்தான்.

கா.. கா.. மனிதர்கள்….. அத்துடன் அந்த முனகலுடன் அவனருமைக் காதலியின் ஆத்மா அவளுடல் விட்டுப் பிரிந்துவிடுகின்றது. காவின் குழுவினருக்கு அன்றயதினம் ஒரு கறுப்பு நாள். பரந்து வாழ்ந்து வந்த நியன்டதால் இனத்தினர் பல்வேறு காரணங்களால் அழியத்தொடங்கியிருந்தனர். அவற்றில் மனிதர்களின் தாக்குதலும் ஒரு காரணம்.

அவளின் உடலை தூக்கிச் சென்று அருகில் இருந்த பசுந்தரையில் அடக்கம் செய்தான் கா. எந்தக் காதலனுக்கும் வரக்கூடாத பயங்கரமான நிலை. தன் காதலியை தானே அடக்கம் செய்வதா?. நினைக்கயிலேயே ரணமாக வலிக்கிறதல்லவா?

காவின் குழுவினர் பழிக்குப் பழி வாங்குவது என்று முடிவு செய்தனர். காவிற்குத் தெரியும் எங்கே மனிதர்கள் முகாமிட்டு வாழ்கின்றார்கள் என்பது. கா முடிவு செய்துவிட்டான், இனிப் பழிக்குப் பழிதான்.

மறுநான் நியன்டதால் குழு மனிதர்களின் முகாமை நோக்கி நகர்கின்றன. அவர்களுக்குத் தெரியும் இதில் இருந்து தாம் மீண்டு வரப்போவதில்லை என்று. ஆனாலும் பழிவேண்ட வேண்டும் குறைந்தது ஒரு மனிதனது குரல்வளையையாவது பிடுங்க வேண்டும் என்பதில் அனைவரும் குறியாக இருந்தனர்.

மெல்ல மெல்ல முகாமை நோக்கி நகரத் தொடங்கினர். இரவு நேரம் பால் நிலவொளியில் மனிதர்களின் முகாம் கண்முன்னே விரியத் தொடங்கியது. கிட்ட நெருங்க நெருங்க இவர்களிடம் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. முகாமை அடைந்ததும் தம் சம்ஹார வேலையைத் தொடங்கினர் நியன்டதால் இனத்தின் கடைசி மைந்தர்கள்.

நரமாமிசம் உண்ணும் அழுக்கர்கள் கத்தியவாறே ஒரு மனிதன் ஓடினான். மறு நிமிடம் காவின் கையில் இருந்து பறந்த கோடாரி அவன் இதயத்தை துளைத்து அவனை அமைதியாக்கியது. ஆனாலும் அவன் குரல் கேட்டு பல மனிதர்கள் தங்கள் ஆயுதங்களைத் தூக்கியவாறு வெளியே வந்தனர். மனிதர்களுக்கும் நியன்டதாலுக்குமான இறுதி யுத்தம் ஆரம்பமாகியது.

இரு தரப்பும் மோசமாக மோதிக்கொண்டனர். அந்தப் பிரதேசம் எங்கும் பெண்களின் அலறலும், ஆண்களின் உறுமல்களும் மாறி மாறி யும் ஒன்று சேரவும் ஒலித்துக்கொண்டிருந்தன. இரு தரப்பிலும் பலர் காயம் அடைகின்றனர். ஆனாலும் 10 நிமிடங்களில் நிலமை மாறத் தொடங்குகின்றது. நியன்டதால் மைந்தர்கள் ஒவ்வெருத்தராக வீழத் தொடங்கினர். கா தன் கண்முன்னே மடியும் தன் சகோதரர்களைப் பார்க்கின்றான். வேதனையும், திருப்பிதியும் ஒன்றுசேர்ந்த ஒரு உணர்வு அவன் இதயம் எங்கும். இதே வேளை எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு கோடாலி காவின் மார்பில் ஆழமாகப் பாய்கின்றது.

கண்கள் இருள்கின்றன. உதடுகள் ஏதோ முணு முணுக்கின்றன.. காவின் கால்கள் தள்ளாடிவாறே நடக்கின்றன. அருகில் இருந்த ஆற்றில் அப்படியெ வீழ்கின்றான் கா.

சிறிது நேரத்தில் கண்விழிக்கின்றான் கா. ஆற்றுவெள்ளத்தில் அடிபட்டு தன் காதலியை முதலில் கண்ட அதே சமவெளியில் குற்றுயிராய்க்கிடக்கின்றான். ஓ..ஜீ…!!!! அந்த உருவத்தின் வாயில் இருந்து அடக்க முடியாத வேதனையுடன் பிளிரல் ஒன்று மேல் எழும்புகின்றது. பின்னர் அது மெல்ல மெல்ல அடங்கி முனகல் ஆகின்றது. அதில் அவன் இயலாமையும், வெறுப்பும், இழப்பும் கலந்து ஒலிக்கின்றது. மார்பில் ஆழமாக ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து குருதி கசிந்து கொண்டு இருந்தது.

அவனுக்குத் தெரியும் தான் தப்பிப்பிழைக்கப் போவதில்லை என்பது. கண்களைத் திறந்து சூரியனைப் பார்த்து ஒரு தடவை தன் வணக்கத்தை செலுத்துகின்றான். சூரியனை இவன் பரம்பரையினர் பக்தியுடன் பார்த்து வந்தனர். அவனால் கண்களைத் திறக்கும் வலிமைகூட இப்போது இல்லை. கண்களை மூடியதும் அவன் கண்முன்னே ஜீ.. நினைவில்… இனி அவளுடன் தான் இவன் வாழப் போகின்றான்.

ஜீ.. அவன் உதடுகள்  கடைசியாக உச்சரித்த வார்த்தை. அத்துடன் கடைசி நியன்டதால் மனிதனின் உயிரும் இந்தப் பூமித்தாயின் வயிற்றில் இருந்து பிரிந்தது. தாங்காத பூமித்தாய் மழையாகத் தன் கண்ணீரை தன் மைந்தன் மீது சொரிந்தாள். அவனின் இரத்தம் மழை நீரில் கரைந்து மண்ணுடன் இரண்டறக் கலந்தது.

பி.கு: இதைக் கதை என்பதை விட கதை மூலம் நம் மக்களுக்கு அறிவியல் உண்மைகளை அறிவிக்க முயன்றுள்ளேன். இங்கு நான் பயன்படுத்திய தகவல்கள் பெரும்பாலும் நியன்டதாலின் வாழ்க்கை முறையைப் பின்பற்றியதே. உதாரணமாக அவர்களின் ஆயுதங்கள், உணவு முறை, மனிதருடனான சண்டை, வாழ்க்கை அமைப்பு, வாழிடம் என்பன. இனி உங்கள் பின்னூட்ட நேரம். 🙂

அவளைக் காண (நிமிடக் கதை)

ஜன்னலினூடாக எட்டிப் பார்க்கின்றான். எங்கும் கருமேகங்கள் இராஜகம் பண்ணிக்கொண்டிருந்தன். அதைப்பற்றி அலட்டும் மனநிலையில் அவன் இல்லை. இன்றில்லாவிட்டால் என்றுமே முடியாது மனதுக்குள் எண்ணிக்கொண்டான். நான் நிச்சயம் போகவேண்டும். முதலில் மனதைத் திடமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.

மனதில் திடம் இல்லாவிட்டால் எப்படி அவள் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பது. வெள்ளை நிற ஷேர்ட்டை அணிந்து கறுப்பு நிறக் கேர்ட்டையும் அணிந்து கொண்டு புறப்படுகின்றான். அவளுக்கு கறுப்பு நிறம் மிகவும் பிடிக்கும். அவள் கூட இன்று வெள்ளை நிறத்தில்தான் உடுத்தி இருப்பாள்.

கற்பனைகளுடன் அவனது சுசூகியில் அவள் வீடு நோக்கிப் பயனமாகின்றான். வீதியில் கவனம் செல்ல மறுக்கின்றது. பத்து நிமிடத்தில் அவள் வீட்டை அடைந்துவிட்டான். அங்கே வழமையைவிட அதிகளவு சனமாக இருக்கின்றது. அவன் எதிர்பார்த்ததுதான்.

மீண்டும் கூறிக்கொண்டான்…டேய் திடமாக இருடா. உறுதி சொல்ல யாரும் இல்லை, திடப்படுத்த யாரும் இல்லை ஆதலால் அன்னை தானே திடப்படுத்திக்கொண்டான்.

அவனைக் கண்டதும் சனங்கள் தமக்குள் ஏதோ குசு குசுவென்று பேசுவது அவன் காதுகளுக்கு எட்டாமல் இல்லை என்றாலும் அதைக் கண்டு அலட்டவா அவனால் இப்போ முடியும். அவனுக்கு அதைவிட முக்கியமான வேலை உள்ளதே!!!

அவன் கூடத்தினுள் சென்றதும் அவள் அப்பா மற்றவர்களைப் பார்த்து சொன்னார். சரி அவரும் வந்திட்டார் இனியும் ஏன் பொறுப்பான்??. அவள் தாயார் கலங்கிய விழிகளுடன் அவனை நோக்கி வருகின்றார். மார்போடு அணைத்துக் கொள்கின்றான்.

அவனை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென ஊற்றுகின்றது. சிலர் வந்து முதுகில் வந்து தட்டி அவனை ஆசுவாசப் படுத்துகின்றனர். அவனுக்கு எதுவும் தெரியவில்லை, அல்லது உறைக்கவில்லை. தன் உலகத்தில் அழுதுகொண்டு இருக்கின்றான். இப்போ அவள் முகத்தை கடைசியாக ஒரு தடவை பார்க்கின்றான், ஏனெனில் இது அவளின் இறுதி ஊர்வலம்.

64 : முதுமையின் உறவு

மாலை ஐந்து மணி இருக்கும். சூரியன் தன் வேலையை முடிப்பதற்காக முஸ்தீபு போட ஆரம்பித்த நேரம். மணியம்மா மட்டும் யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து வீட்டின் பின் பக்கம் சென்றுகொண்டு இருந்தார். யாரும் கண்டு விடுவார்களோ என்று அவர் மனம் படபடத்துக் கொண்டு இருந்தது. அவர் கையில் ஒரு பிஸ்கட் துண்டுகள். எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் கையெங்கும் முதுமை தந்த பரிசுகளான சுருக்கங்கள். அதனிடையே அழகாக அந்த சிறிய பிஸ்கட் துண்டு மினு மினுத்துக்கொண்டு இருந்தது.

வீட்டின் பின்புறம் இருந்த ஒரு சிறிய கொட்டிலினுள் சென்றார். ஐந்து நிமிடம் ஏதோ உருட்டும் சத்தம் உள்ளே கேட்டது. பின்பு பொக்கை வாய் நிறைய சிரிப்புடன் வெளியே வந்தார் மணியம்மா. எதையோ சாதித்த வெறி அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஏனண! உள்ளுக்க என்ன செய்தனியள்?” நெற்றியில் சுருக்கம் விழக் கோபமாகக் கேள்விக்கணை தொடுத்தாள் வாசலில் காத்திருந்த புத்திரி மங்களம்.

“நான் சும்மா போய் உள்ளுக்க என்ன இருக்குதெண்டு பார்த்தனான்” சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். அதற்கு மேல் மங்களத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லவோ அவள் முகத்தைப் பார்க்கவோ மணியம்மாவிற்கு விருப்பம் இல்லை.

“பெத்தாலும் பெத்தன் ஒரு பிசாசத்தான் பெத்து வைச்சிருக்கிறன்” மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.

“கீழ விழுந்து கிழுந்து போகப் போறாயண!. வயசு போன காலத்தில நாங்கள் சொல்லுறதக் கேட்டு நட எண்டா நீ உன்ட பாடு”

“நான் ஒண்டும் கீழ விழ சின்னப் பிள்ளை இல்லை. சரியே?. சும்மா அரியண்டம் பிடியாத”

“அது சரி. அதுதான் போன மாசம் விழுந்து பரியாரியாரிட்ட கொண்டுபோய் பத்து கட்டினியளாக்கும்” கூறியவாறே அதற்கு மேல் பேச விரும்பாதவளாக மங்களமும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.

மணியம்மாவும் மெல்ல மெல்ல தத்தித் தத்தி நடந்து அவருக்காக மருமகனார் வாங்கிக்கொடுத்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டார். நினைவுகள் பலவாறு வட்டம் போடத்தொடங்கியது. தன் கணவரை பருத்துறை கறிக்கடையில் முதல் முதலில் தான் சந்தித்தது, சாரம் கட்டிக்கொண்டு அவர் நின்ற தோற்றம் முதல் மகள் மங்களம் பிறந்தது வரை அவர் மனக் கண்ணில் நிகழ்வுகள் ஓடத்தொடங்கியது.

“அப்பனே முருகா!” வாய் நிறையச் சொல்லிவிட்டு கதிரையில் கண்ணயரத் தொடங்கினாள் மணியம்மா. வயதானாலும் பார்ப்பதற்கு சாந்தியான முகம் யாருடனும் அவ்வளவாகக் கோவிக்காத தன்மை என்பன மணியம்மாவின் இயல்புகள்.

முதுமையில் ஆகக் கொடுமையான விடையம் தனிமை. மணியம்மாவையும் அந்த துன்பக் கடலில் கலக்க வைத்த காலம் கொடுமையானதுதான். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரின் கணவரும் இறைவனடி சேர்ந்துவிட இவருக்குப் பேசுவதற்குக் கூட யாரும் கிடைப்பதில்லை.

மகளும் மருமகனும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். நான்கு வயதாகும் பேரப் பொடியனைப் பார்ப்பதற்காக ஒரு வேலைக்காரி என குடும்பம் பரபரப்பாக நகர்ந்து கொண்டு இருந்தது. இதனிடையே மணியம்மாவுடன் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச யாருக்கும் முடியவில்லை என்பதைவிட நேரம் இல்லை என்றே சொல்லலாம்.

மறுநாளும் அதே நேரம் மணியம்மா தத்தி தத்தி நடந்து சமையலறைக்குள் சென்றார். அவருக்குத் தெரியாது அவரை இரண்டு கண்கள் நோட்டம் விடுவது. சமையல் அறையில் வழமை போல இறாக்கையில் இருந்த போத்தலைத் திறந்து அதில் இருந்து இரண்டு பிஸ்கட் துண்டுகளை எடுத்துக் கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கட கட என வீட்டுக் கொல்லையில் உள்ள கொட்டிலை நோக்கி நடக்கத்தொடங்கினார்.

அன்றிர

63 : என் காதல் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)


இது பல மாதங்களுக்கு முன்பு எழுதிய கதை!! இன்று காதலர் தினம் என்பதால் இதைப் பதிக்கலாம் என்று தோன்றியது.. ஏற்கனவே வாசித்தவர்கள் பொறுமை காத்தருளவும்.

என்னால் ஏனோ நித்திரைகொள்ள முடியவேயில்லை. கண்களை மூடியவாறு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எவ்வளவுதான் முயன்றாலும் நேற்றய நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியவில்லை.

அவள் நேற்றுப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தச் சிரிப்பு! தலையை அடிக்கடி கொதும் விரல்கள்! நெற்றியில் விழும் அந்த ஒரு தொகுதி கூந்தல்! கண்களை அகல விரித்தவாறு பேசும் அந்தத் தோறனை! எந்தப் பையனும் இதை மறக்கவே மாட்டான். சிங்களத்தை வெறுத்தாலும் இந்த சிங்களத்தியை மட்டும் என்னால் வெறுக்க முடிய வில்லையே.

அது போதாதென்று சிங்கள நண்பர்கள் என்னையும் இனோக்காவையும் ஒன்றாகக் கண்டதும் “ஆகா… அப்பிடியா விசயம் போகுது” என்று சத்தமிட்டது…. நினைத்து மீண்டும் ஒரு தடவை புன்முறுவல் பூத்துக்கொண்டேன்.

காலை கதிரவன் தன் கதிர்களை பரப்பி என் முதுகில் சூடு போடும் வரையில் நித்திரை கலையாத எனக்கு இன்று காலை நான்கு மணிக்கே விழப்பு வந்து விட்டது. ம்… எல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கட கட வென காலைக் கடன்களை முடித்து காலை 6.45 க்கே வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் புறப்பட்டு விட்டேன்.

போகும் வழியில் எப்பிடி இந்த அழகுப் பிசாசு என் வாழ்வில் வந்து நர்த்தனம் ஆடத்தொடங்கியது என்று நினைத்துப் பார்த்தேன்.

நான் படிப்பது விஞ்ஞாண பீடத்தில் அவள் கற்பது முகாமைத்துவ பீடத்தில். பல்கலைக்கழக டோஸ்ட் மாஸ்டர் கிளப்பில்தான் அவளின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் நல்ல நண்பியாக இருந்தாலும் காலப்போக்கில் ஒருவரை ஒருவர் அறியாமல் ஒருவரில் ஒருவர் அதிக உரிமை எடுக்க தொடங்கிவிட்டோம். உச்சக்கட்டமாக நேற்று தர்மாலோக ஹோலில் எல்லார் முன்னிலையிலும் என்னோடு ரெம்ப நெருக்கமாக உட்கார்ந்து விட்டாள். விசயம் கிசு கிசு என காட்டுத் தீ போல எனது டிப்பார்ட்மென்ட் முழுவதும் பரவிவிட்டது.

சுகததாஸ ஸ்டேடியம் பின் பக்கத்தில் உள்ள அந்த பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டு இருக்கின்றேன்.
தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த, கடவத்த, கடவத்த…. பஸ் நடத்துனர்கள் கூவிக்கொண்டு இருந்தனர். முதலாவது இரண்டாவது மூண்றாவது பஸ்சும் போய்விட்டது. மனது மிகவும் குளப்பமாக இருந்தது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

இன்றைக்கு கம்பஸ் போவதா? வேண்டாமா? போனால் அவளைக் கட்டாயம் சந்திக்க வேண்டுமே?
போகாவிட்டால் பாவம் அவள் டிபார்ட்மென்ட் வாசலில் காத்துக்கொண்டு நிற்பாளே எனக்காக?

இன்னும் குளப்பம் தீரவில்லை. கீழ் உதட்டை மேவாய் பற்களால் அழுத்தியவாறு கண்களை மூடிப் பார்த்தேன் ஏதாவது முடிவு தெரிகின்றதா என்று!!!!

தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த………..

மீண்டும் ஒரு தடவை இன்னுமொரு பஸ் வந்து விட்டது. சரி இப்ப முதலில பஸ்சில ஏறுவம் பேற வழியில என்ன செய்வது என்டு முடிவு செய்வம். பஸ்சில் ஏறிக்கொண்டேன்

“தம்பி எங்க?” சிங்களத்தில் கேட்டான் நடத்துனர்

“கம்பஸ் எக்கெனாய்” (கம்பஸ் ஒருவர்) சிங்களத்திலேயே பதில் கூறினேன்.

சட்டைப் பையில் இருந்து 12 ரூபாயை கணக்காக எடுத்து அவனிடம் கொடுத்தேன். இல்லாவிட்டால் என்ன மாத்தின காசு இல்லையா என்று வழமை போல பிளேடு போடுவான். டிக்கட் ஒன்றை கிழித்து கையில் திணித
்து விட்டு

“இஸ்சரா சல்லி கண்ண” (முன்னே இருப்பவர்களே பணத்தை தாருங்கள்) கூவிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்தான்.

வழமைபொல சாலை நெருக்கடி. பஸ் வண்டி நின்று நின்று அரங்கி அரங்கிச் சென்று கொண்டு இருந்தது. வழமையாக ஐந்து நிமிடத்தில் வந்து விடும் பாலிய கொட சந்தியை இன்று 10 நிமிடத்தில வந்து சேர்ந்தது.

பஸ் நின்றதும் இன்னுமொரு தொகுதி கூட்டம் பஸ்சினுள் அடைபடத்தொடங்கியது. எனக்கு பக்த்தில் ஒரு ஆசனம் ஒருவரும் இல்லாமல் இருந்தது.

“ஹலோ மச்சான்!” இப்ப எனக்கு பக்கத்து ஆசனத்திலிருந்து ஒரு குரல்

“ஆ… ரொமேஸ்” என்னுடன் படிக்கும் சிங்கள நண்பன் ஒருவன்.

இருவருக்குமிடையில் ஆங்கிலத்தில் சம்பாசனை தொடங்கியது

“என்னப்பா நீ நாங்களெல்லாம் எதிர்பார்க்காத காரியத்தில இறங்கிட்டாய். நீ இப்பிடி காதலில விழுவாயெண்டு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கேல” நக்கலாக கூறினான் அவன்

“டேய்! உங்களுக்கு என்ன விசராடா?. அப்பிடி ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல”.

“ஓ………! ஒரு மண்ணாங்கட்டியும் இல்லாமத்தான் நேற்று தர்மாலோக ஹோலில அவளோட கதைச்சுக்கொண்டு இருந்தனியாக்கும்”

“ஏனடா! கம்பஸ்ல ஒரு பெட்டையோட கதைச்சா அதுக்குப் பெயர் காதலா?” கொஞ்சம் கோவமாகவே கேட்டேன்.

“நாங்களெல்லாம் எவ்வளவு கதைச்சும் அவள் எங்களோட அவ்வளவு கதைக்கேலயே?. உன்னோட தானே ஒட்டிக்கொண்டு இருந்தவள். நீயும் தானே முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி வழிஞ்சு வழிஞ்சு கதைச்சுக்கொண்டு இருந்தனி”

“ரொமெஸ் ஏன் தேவையில்லாத கதையிப்ப?”

“டேய்! டேய்! மனசுக்குள்ள ஆசையை வைச்சுக்கொண்டு மனதுக்கு துரொகம் செய்யாதடா…. எல்லா தமிழ் பொடியங்கள் மாதிரி நீயும் உனக்கு நீயே வேலி போட முயற்சிக்கிறாய்! சரியா?”

“இல்ல மச்சான்……..”

“சரி சரி! இப்ப நீ சொல்லு அவளில உனக்கு விருப்பமில்லையா? அவளுக்கு என்ன குறைச்சல் நல்ல வடிவுதானே? அவள் சிங்களம் எதிர்காலம் கஷ்டம் எண்டு மட்டும் யோசிக்காத. நாங்க ஃபுல் சப்போட்ட தருவம்”

“டேய்… இருந்தாலும் என்ற அப்பா அம்மாவுக்கு என்ன… பதில்….”

“நீ என்ன அப்பா அம்மாவை விட்டுட்டு ஓடவா போறாய்? அவையள் இத புரிஞ்சு கொள்ளுவினம். காதலிக்கிறது ஒண்டும் தப்பில்லையே! மற்றது நீ ஒண்டும குட்டி பபா இல்லையே! அம்மா அப்பா என்டு திரிய”

குளம்பி இருந்த குட்டையை நல்லா குளப்பி விட்டான். ஆனால் பாவம் அவன் அதில மீன் பிடிக்க மட்டும் முயலவில்லை. ஏதோ எனக்கு உதவி செய்ய முயலுகின்றான் என்று மட்டும் தெரிந்தது.

“ரொமேஸ்…. இண்டைக்கு காலையில டிப்பார்ட்மென்ட் வாசலில நிக்கிறதா சொன்னவள்டா! தனக்கு கடைசி முடிவை இண்டைக்கு சொல்லோனும் எண்டும் சொன்னவள்டா!”

“அதுக்கென்ன இப்ப? ஏன்தான் இப்பிடி பயந்து சாகிறியோ தெரியாது??” சலித்துக்கொண்டான்.

“அதில்ல மச்சான்….. சரி… நான் எனக்கும் சம்மதம் எண்டு சொல்லுறன்…”

“நான் சொல்லுறன் எண்டு சொல்லாத. நீ விரும்பிறாய் தானே அவள?” நெற்றியை சுருக்கியவாறே கேட்டான்.

“ஓம்!”

“எலகிரி மச்சான்!” அவன் முகத்தில் சந்தோசப் புன்னகை. அட என்முகத்திலும் தான்.

பஸ் கம்பஸ் வாசலில் வந்து நின்றது. நானும் ரொமேசும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினோம்.

“மச்சான் சொதப்பிடாத!!!!. நான் பின்னால வாறன் ஏதும் ஹெல்ப் எண்டா உடனே கூப்பிடு” கண்களை அகல விரித்தவாறு மிகவும் உற்சாகமாய் கூறினான்.

கம்பஸ் வாசலில் இருந்து நடக்க தொடங்கினேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் டிப்பார்ட்மென்டை அடைந்து விடுவேன்.

தூரத்தில் அவள் நிற்பது தெரிந்தது. வெள்ளை நிற ஸ்கேட்டும் பிளவுசும் போட்டு அழகான தேவதைபோல இருந்தாள். எனக்கு வாய்
நிறைய கொள்ளை சிரிப்பு ஆனால் நெஞ்சு மட்டும் படக் படக் என்று அடித்துக்கொண்டது.

“மம ஒயாட ஆதரேய்…..” (சிங்களத்தில் நான் உன்னைக் காதலிக்கின்றேன்) ஒரு தடவை எனக்குள் கூறிப்பார்த்துக் கொண்டேன்.

இதே வேளை எனது டிப்பார்ட்மென்ட் பெட்டையள் இரண்டு பேர் என்னையும் இனோக்காவையும் பார்த்து விட்டு “குட் லக்……..!” எனச் சத்தமாக கூறி சிரித்துக் கொண்டு சென்றனர்.

மேலும் இரண்டடி எடுத்து வைத்திருப்பேன் எனது செல்லிடத் தொலைபேசி சிணுங்கத் தொடங்கியது. எரிச்சலுடன் வெளியே எடுத்துப் பார்த்தேன் அம்மா கோலிங்…. சி.எல்.ஐ காட்டியது!!

உடனே தொலைபேசிக்கு பதில் அளித்தேன். மறு முனையில் அம்மா.

“தம்பி! நீ கேட்டனியெல்லே பி.சி.எஸ் பரீட்சைக்கு 30,000 ரூபா வேணும் எண்டு. நான் என்னோட வேலை செய்யிற ஜெயமாலாட்ட கடனா அந்தக்காச வேண்டி உண்ட கணக்கில பாங்கில போட்டிட்டன். காசை எடுத்து பரீட்சை காசைக் கட்டு. நீ படிக்க வேணும் அதுதான் எங்களுங்கு முக்கியம். உன்ன நம்பி இருக்கிற அந்த பொம்பிளப் பிள்ளயள மறந்திடாத”

“ஏன் அம்மா! நான் இங்க யாராவது சிங்களப் பெட்டைய பாத்திடுவன் எண்டு பயந்திட்டீங்களோ?” புன்னைகையுடன் கூறிவிட்டு அம்மா பதில் அளிக்க முன்னரே தொலைபேசி இணைப்பை துண்டித்தேன்.

சில அடி முன்னுக்கு இனோக்கா நின்று கொண்டு இருந்தாள். நான் பேசியது அவளிற்கு விளங்காது காரணம் அவளிற்கு சத்தியமாகத் தமிழ் தெரியாது.

கிட்ட நெருங்கியதும் அதே வழமையான உள்ளம் கொள்ளைகொள்ளும் புன்னகையுடன் கண்களை அகல விரித்து இமைகளை மேலே உயர்த்தி என்ன பதில் என்று கண்களாலே கேட்டாள். அவளிடம் கடும் நம்பிக்கை இருப்பதை அவள் நின்ற நிலை காட்டியது. கொஞ்சமும் படபடப்பில்லாம் நின்ற கொண்டுடிருந்தாள்.

“ஐம் சாரி இனோக்கா”

“வட்?” சில நாழிகைகள் அதிர்ச்சியில் நின்றிருந்தாள். பிறகு கண்களை மெல்ல புறங்கையால் தடவியவாறு அவ்விடத்தில் இருந்து கட கட என நடக்கத் தொடங்கினாள்.

“இனோக்கா….வெய்ட்…!!!” எதையும் கேட்கும் நிலையில் அவள் இப்போ இல்லை.

பின்னே திரும்பிப் பார்த்தேன் ரொமேஸ் தனது தலையை இது உருப்படாத பயல் என்று பொருள்படும் வண்ணம் ஆட்டியவாறு என்னைக் கடந்து டிப்பார்ட்மென்ட்டுக்குள் சென்று கொண்டு இருந்தான்.

யாவும் கற்பனை

45 : யாருக்கு இலவசம் (சிறுகதை) – தேன்கூடு போட்டிக்காக

Photobucket - Video and Image Hostingவானம் எங்கும் கரிய பெரிய மேகங்கள் உருண்டு திரண்டு நகர்ந்து கொண்டு இருந்தன. அப்பப்போ கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும் கேட்டுக்கொண்டே இருந்தது. மழை சாதுவாகத் தூறத் தொடங்கிவிட்டது. அந்தப் பழைய சுண்ணாம்பு வீட்டிலிருந்து சலிப்புடன் ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. இன்றும் இப்படிப் சில பழைய சுண்ணாம்பு வீடுகளை யாழ்பாணத்தின் புறநகர்ப்பகுதிகளில் காணலாம்.

அந்தக் கலைந்த கேசமும் இளமையிலேயே முதுமை தோன்றிய அந்த முகமும் முதற் பார்வையிலேயே காட்டிக்கொடுத்துவிடும் இவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவியென்று. கண்களை சுருக்கி மழைத் தூறலூடு யாரையோ தேடினாள். அவளுக்குத் தெரியும் மழையென்றால் இவன் நனையவென்றே வெளியில் ஓடிவிடுவான்.

“டேய்! சின்னத்தம்பி…..! எங்கையடா நிக்கிறாய்?” தன் கடைக்குட்டியைச் சற்றே உரிமையோடு அதட்டிக் கூப்பிட்டாள்.

“ஓம் அம்மா! வாறேன்!!” பக்கத்துக் காணிக்குள் இருந்து சத்தம் வந்தது.

வரட்டும் இண்டைக்கு நல்ல முறி முறிச்சு விடுறன். எத்தின தரம் சொன்னாலும் இவன் தான் நினைச்சதத்தான் செய்யிறான் என மனதுக்குள் நெறுவிக்கொண்டாள் அன்புத்தாயார் கண்ணம்மா.

“இஞ்சருங்கோ இண்டைக்கும் இவன் மழையில நனைஞ்சு போட்டு வாறான். நீங்கள் தேப்பன் எண்டு இருக்கிறியள் அவனக் கொஞ்சம் கண்டிக்க மாட்டியளே?” விறாந்தையோரத்தில் கதிரையில் இருந்து வெத்திலை சப்பிக்கொண்டிருந்த தன் கணவனைக் கடிந்து கொண்டாள்.

“நீங்கள் மட்டும் அவனுக்கு அடிக்கிறியளே? சும்மா வாய் கிழியக் கத்திறது அவன் வந்து முன்னால நிண்டதும் முறிச்சுப் போடுவன் என்டு வெருட்டுறது. இதவிட்டா வேற என்ன செய்யிறியள். சும்மா என்னையும் அவனையும் ஏத்திவிடப் பார்க்காதையுங்கோ” தகப்பனார் தன் மகனுடன் கண்டிப்பாக இருக்க மாட்டேன் என்பதைத் தெளிவாகக் கூறினார்.

கண்ணம்மா சுந்தரேசன் தம்பதியர் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 10 மைல் தூரத்தில் உள்ள அந்த சிறியக் கிராமத்தில் வசிக்கின்றனர். ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். மூத்தவள் பிறந்து ஏழு வருடங்களின் பின்னர் சின்னத்தம்பி பிறந்தான். இயல்பாகவே வீட்டில் செல்லம். அவன் செய்யும் அடாவடியை யாரும் தட்டிக் கேட்பதில்லை. பாவம் பிஞ்சு மழலை என்று தாயும் தந்தையும் கண்டிக்காமல் விட அன்பு அக்காவோ அதைவிட ஒரு படி மேல் சென்று தன் தம்பிமேல் அளவு கடந்த அன்பு காட்டுவாள். மொத்தத்தில் இந்த ஐந்து வயதுப் பாலகனுக்குக் கட்டுப்பாடு எதுவும் இல்லை.

சின்னத்தம்பி இப்போ மழைச் சாரலில் நனைந்தபடி விட்டினுள் நுழைந்தான். வழமைபோல தாயார் தன் பாணியிலான வசைபாடிள் தகப்பனாரும் தன் பங்கிற்கு பொறுமையாக தன் பாணியில் சும்மா ஒப்புக்கு புத்திமதி கூறினார். சின்னத்தம்பிக்குத் தெரியும் அவ்வளவுதான் பின்னர் அனைத்தையும் இவர்கள் மறந்து விட்டு தன்னுடன் செல்லம் கொட்டுவார்கள் என்று.

“சரி போய் தலையை துடைச்சுக் கொண்டு வா! குசினிக்குள்ள தேத்தண்ணி போட்டு வைச்சிருக்கிறன் எடுத்துக் குடி”

“ஏன் அம்மா இண்டைக்கு சீனி போட்ட தேத்தண்ணியோ இல்லாட்டி இண்டைக்கும் சீனி இல்லையோ? சீனி இல்லாட்டி எனக்கு தேத்தண்ணி வேண்டாம்”.

“என்னப்பு நீ! உனக்குத் தெரியும்தானே இப்ப யாழ்ப்பாணத்திற்கு சாப்பாடுச் சாமான் ஒன்டும் வாறதில்லை எண்டு” பொறுமை இழக்காமல் கூறினார் சுந்தரேசன்.

“அப்பா அப்ப நாங்கள் கொழும்புக்குப் போவமே! அங்கையெண்டால் சீனி இருக்கும் தானே”

“ஓமடா தம்பி கொழும்பில சீனி இருக்கும் ஆனால் நிம்மதி இருக்காதுடா. செத்தாலும் இங்க இருந்து செத்தால் தூக்கிப்போடவாவது யாராவது வருவாங்கள்” மனவிரக்தி யாருடன் பேசுகின்றோம் என்பதைக் கூட யோசிக்காமல் அவரைப் பேச வைத்தது.

இதே வேளையில் பக்கத்தது வீட்டுக் கமலா வேலிக்குள்ளால் எட்டிப் பார்த்தாள்.

“கண்ணம்மா அக்கா! நேற்று கொழும்பில இருந்து வந்த கப்பலில கொஞ்சம் சாமான் வந்திருக்காம். இண்டைக்கு சங்கக்கடையில சாமான் குடுக்கிறாங்களாம். இப்பத்தான் எங்கட இவர் போய் சீனி எடுத்துக் கொண்டு வந்தவர். 3 கிலோ சீனி குடுத்து இருக்கிறாங்கள் அக்கா. சனம் நிரம்ப முதல் போய் லைனில இடத்தப் பிடியுங்கோ” சட சடவெனக் கூறிவிட்டு மழையில் தன் தலை நனையாதிருக்க கைகளை தலைக்கு மேலே பிடித்தவாறு வீட்டினுள் ஓடினாள் கமலா.

கணவனுக்கோ கடும் காய்ச்சல் இன்று வேலைக்கும் போகவில்லை. மழையில் எப்படி அவரை நனைந்து கொண்டு போகச் சொல்லுவது. அவளிற்கு இப்போ தெரிந்தது கண்முன்னே நின்ற சின்னத் தம்பிதான்.

“டேய் சின்னத்தம்பி! ஓடிப்போய் சங்கக்கடைக்கு முன்னால நிக்கிற லைனில இடத்தைப் பிடி நான் வந்ததும் நீ வீட்ட திரும்பலாம். அம்மா சாறியக் கட்டிக் கொண்டு கெதியாவாறன்”

சின்னத் தம்பிக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலானது. இப்போது ஆசைக்கு மழையில் நனையலாம்.

“பீப் பீப் பீப்….” தான் ஏதோ கார் ஓடுவது போன்று பாவனை செய்து கொண்டே சாட்டுக்குக் குடையையும் பிடித்துக் கொண்டு சந்தியில் இருக்கும் சங்கக் கடையை நோக்கி ஓடத் தொடங்கினான் சின்னத்தம்பி.

ஐந்து நிமிடங்களில் அவன் கடைவாயிலில் நின்றிருந்தான். வரிசை அவ்வளவு நீளமாக இல்லை. உணவுப் பஞ்சம் மீண்டும் ஒரு தடவை யாழ்ப்பாணத்தில் தலைவிரித்து ஆடத் தொங்கிவிட்டதை நினைவு படுத்தும் முகமாக சங்கக் கடை வாசலில் மக்கள் மெல்ல மெல்ல வந்து நிறையத் தொடங்கினர். மூன்று கிலோ சீனிக்கு மூன்று மணிநேரம் காத்திருக்கவும் இவர்கள் இப்போது தயாராக இருந்தார்கள்.

அடுத்த சில நிமிடத் துளிகளில் சின்னத்தம்பியின் அன்புத்தாயார் கண்ணம்மாவும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள்.

“சின்னத்தம்பி.. நல்ல காலம் நீ வந்து இடம் பிடிச்சாய்! இல்லாட்டி இப்ப நானும் லைனில பின்னாலதான் நிண்டிருக்கோணும்” பரிவுடன் கூறினாள் தாயார். வாய் நிறையச் சிரிப்புடன் தாயாரின் பாராட்டை ஏற்றுக்கொண்டான் அந்தப் பாலகன்.

அடுத்து சில நிமிங்களில் இவர்களுக்கான மூன்று கிலோ சீனி இலவசமாகக் கிடைத்துவிட்டிருந்தது. கண்ணம்மா அதை கவனமாக இரு கைகளாலும் ஏந்தியபடி கடையை விட்டு இறங்கினாள்.

கடவுளே இத்தனை நாட்களிற்குப் பின்னர் இன்றுதான் மீண்டும் சீனித் தேத்தண்ணி குடிக்கப் போறம்… மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

“அம்மா! பையை என்னட்ட தானே! நான் கொண்டு வாறன்”

“சும்மா இருடா உன்னோட பெரும் கரைச்சல்” நோகாமல் கடிந்து கொண்டாள் கண்ணம்மா.

“அம்மா! நான் கவனமாக் கொண்டருவன்… தாங்கோ!!!”

இரட்டை மனத்துடன் கண்ணம்மா தன் மகனிடம் பையைக் கொடுத்தாள். பையை வேண்டியதுதான் தாமதம் மீண்டும் பீப் பீப் எனச் சத்தம் இட்டவாறு ஓடத்தொடங்கினான் சின்னத்தம்பி.

“டேய்.. டேய்.. பார்த்துடா! பை கிழிஞ்சு போகப்போகுது…..”

அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பை கிழிந்து சீனி அவ்வளவும் காலை பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அருகாமையில் விழுந்து விட்டது.

இரண்டடி முன்னே சென்ற கண்ணம்மா பளீர் எனச் சின்னத்தம்பியின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். பாலகனோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாங்காமல் ஒரு வினாடி சிலையாய் நின்றிருந்தான். மறு கணம் கண்ணீர் மல்க வீடு நோக்கிக் கட கடவென நடக்கத் தொடங்கினான்.

“போ போ வீட்ட வைச்சு உனக்கு நல்ல முறி தாறன்” சீனித் தேத்தண்ணி கனவு கலைந்த கோபத்துடன் கூறிய கண்ணம்மா சின்னத்தம்பியின் பின்னால் நடக்கத் தொடங்கினாள். சற்றே நடந்தவள் மனம் கேட்காமல் சீனி கொட்டுப்பட்ட இடத்தை திரும்பிப் பார்த்தாள்.

மழை வெள்ளத்திற்கு அப்பால் இருந்த குடிசை வீட்டில் இருந்த ஒரு சின்னப் பெண் எப்பிடியும் சின்னத் தம்பியிலும் இரண்டு வயசு அதிகமாக இருக்கலாம், மட மட என கொட்டுப் பட்ட சீனியை தன் கிழிந்த பாவாடைத் துணியில் போட்டுக் கொண்டு இருந்தாள். மழை வெள்ளம் நன்கு ஊற முதல் சீனியை அள்ளிவிட வேண்டும் என்பதில் அவள் குறியாக இருந்தாள். அவள் வாடிய முகம் சாப்பிட்டு சில நாட்களாவது இருக்கும் என்று சொல்லாமல் சொல்லியது.

இப்போது கண்ணம்மாவின் கண்களில் இருந்து சில சொட்டுக் கண்ணீர்த் துளிகள் வழிந்தோடி வந்து அந்த இரத்தம் தோய்ந்த வரலாறு கொண்ட மண்ணில் விழுந்தது. அவள் வலிமைக்கு முடிந்தது சில கண்ணீர் துளிகளை அந்த அபலைச் சிறுமிக்காகச் சிந்துவதுதான்.

பி.கு (தமிழக உறவுகளுக்காக) : சீனி எனப்படுவது தமிழகத்தில் சர்க்கரை என நீங்கள் அறிந்த பண்டத்தையே!