Category Archives: அனுபவம்

இந்தியா சுற்றிய தமிழ்ப் பாடல்

இசைஞாணி இளையராஜா 80களில் கொடுத்த ஒரு மெகா ஹிட் பாடல்தான் சங்கத்தில் பாடாத கவிதை. 84இல் வெளியான இந்தப்பாடல் கிட்டத்தட்ட என்னுடைய வயதை உடையது. காலத்தைத் தாண்டி இன்றும் கேட்போர் மனதைக்கொள்ளை கொள்ளும் இந்தப் பாடல் இந்தியா முழுவதும் பல மொழிகளில் பாடப்பட்டதை அறிவீர்களா.

முதலில் தமிழ்ப் பாடல் சங்கத்தில் பாடாத கவிதை
படம்: ஆட்டோ ராஜா

பாலு மகேந்திரா இசையால் மயங்கி இதை தனது மலையாளப்படத்தில் பாவிக்கின்றார். தும்பி வா என்று இன்றுவரை பலர் இந்தப்பாடலை சிலாகித்துக் கேட்பதைக் கேட்கலாம். அண்மையில் நீ தான் என் பொன்வசந்தம் திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழாவிலும் பாலுமகேந்திராவிடம் ராஜாவின் பிடித்த பாடல் ஒன்றைச் சொல்லுமாறு கேட்டதும் இந்தப்பாடலைத்தான் சொன்னார். அழகான மொழி மலையாளத்தில் அருமையாக ஒலிக்கின்றது ஜானகி அவர்களின் குரல். தமிழிற்கு முன்னர் மலையாளத்தில் இந்தப்பாடல் வெளியானது.

தெலுங்கில் ஆகாசம் ஏனாடிடோ என்று ஒலிக்கின்றது. சுந்தரத் தெலுங்கில் ஜானகி அவர்கள் குரலை ராஜா குழைத்து எடுத்தால் எப்படி இருக்கும்? நீங்களே கேட்டுப் பாருங்கள்.

மொழிமாற்றும் விளையாட்டுக்கள் அக்காலத்திலே தொடங்கிவிட்டது. அப்படியே அந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றும் போது மொழி மாறிய பாடல்தான் நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே. சுமார் 4 வருடங்களின் பின்னர் இந்த மெட்டு தமிழில் மீளவும் பிரசவிக்கின்றது.

இந்தியா முழுக்க சுற்றியதானால் ஹிந்தியிலும் வரவேண்டும் தானே? 1996 தென்னிந்தியாவின் ஒரு தலைசிறந்த இயக்குனரான பாலு மகேந்திராவின் ஹிந்தித் திரைப்படமான அவுர் ஏக் ப்ரேம் கஹானி எனும் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெறுகின்றது. ஹீரா, ரேவதி, ரமேஷ் அரவிந்த் போன்ற பல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் இந்த திரைப்படம் மூலம் ஹிந்தித்திரையுலகிற்கு அறிமுகம் ஆகினர்.

இதைத் தொடர்ந்து அண்மையில் வெளியான பா திரைப்படத்தில் இந்தப் பாடல் மறுபடியும். அமிதாப்பும் அவர் தனையன் அபிஷேக்கும் நடித்த பா திரைப்படத்தில் ஹிந்தியில் இந்தப் பாடல் கும் சும் கும். தற்காலத்திற்கு ஏற்ற மெருகூட்டப்பட்ட அமைப்புடன் லயிக்க வைக்கின்றது ஹிந்தியில்.

ஏனோ வயது ஏற ஏற மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை விட ராஜாவின் பாடல்கள் இலயிக்க வைக்கின்றது. மெல்ல நகர்ந்து செல்லும் இளமையை இரைமீட்க வைப்பது ராஜா பாடல்கள் மட்டுமே.

கடுப்பேற்றும் இலங்கை வானொலிகள்

ஒரு காலத்தில் வானொலி என்றால் இலங்கை வானொலிதான். தமிழ் நாடு தொடக்கம் இலங்கைவரை வியாபித்திருக்கும் தமிழர் வீடுகளெங்கும் தூய தமிழில் இலங்கை வானொலி ஒலித்தது. பிலபல பட்டிமன்ற நடுவர் லியோனி கூட ஒரு முறை இலங்கை வானொலி கேட்டுத்தான் அக்காலத்தில் தாங்கள் பாட்டுக்களைத் தெரிந்துகொண்டதாக கூறுவார்.  ஆனால் இன்று இலங்கை வானொலி மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து வானொலிகளின் நிலமைதான் என்ன?

வானொலி

பொதுவாகவே தொலைக்காட்சியிடம் இல்லாத ஒன்று வானொலியிடம் இருக்கின்றது. வானொலி கேட்டுக்கொண்டு எமது நாளாந்த வேலைகளைச் செய்துவிடலாம் ஆனால் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இவற்றைச் செய்ய முடிவதில்லை. இதனால் தான் என்னவோ வானொலி எம்மவர் வாழ்க்கையில் மிகவும் பின்னிப் பிணைந்து இருந்தது.

இலங்கையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் (முன்னாள் இலங்கை வானொலி மாற்றங்கள் பல பெற்று இப்போது தென்றல் ஆகியது), வசந்தம் போன்றவையும் இதைவிட தனியார் வானொலிகளான வெற்றி, சூரியன், சக்தி போன்றவற்றையும் கூறலாம்.

தென்றல் வானொலிப் பாரம்பரியத்துடன் வளர்ந்து வந்தது. அரச வானொலி என்பதால் என்னவோ பல அரசியல் தலையீடுகள் அது இது என்று தன் தனித் தன்மையே என்றோ இழந்து விட்டது. இன்று எத்தனை பேர் தென்றல் இலங்கையில் கேட்கின்றார்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே இதைக் கேட்கக்கூடும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்னுமொரு வானொலி வசந்தம். இது அண்மைக் காலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. தனியார் வானொலிகளின் பாணியில் அறிவிப்பாளர்களைப் போட்டு அறுக்கும் பணியில் இந்த வானொலி சிறப்பாக ஈடுபட்டு வருகின்றது.

சக்தி FM

சக்தி, சூரியன் இரண்டும் தனியார் வானொலிகளைப் பொறுத்தவரையில் சிறப்பாக இயங்கிவந்தன. பின்னர் வெற்றி எப்.எம் உம் இந்த வரிசையில் இணைந்து கொண்டது. 1999 காலப்பகுதிகளில் சக்தி FM முதன் முறையாக நான் சிறுவயதில் வசித்து வந்த திருகோணமலைப் பகுதிக்கு வந்தது. இலங்கை வானொலியின் தரமற்ற நிகழ்ச்சிகளில் சோர்ந்திருந்த வானொலி ஆவலர்களுக்கு இந்த வானொலி மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. எழில்வேந்தன், லோஷன், வாணி, ரமணி என்று வானொலி அறவிப்பாளர்கள் எல்லாம் பெரும் நட்சத்திரப் பட்டாளமாக வலம் வந்தார்கள். அக்காலத்தில் சக்தி அறிவிப்பாளர்களுக்கு சினிமா நடிகர்கள் அளவிற்கு பிரபலம் இலங்கையில் இருந்தது.

பின்னர் 2000 களின் பின்னர் சூரியன் வானொலியும், பின்னர் வெற்றி வானொலியும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. 2004 பின்னர் நான் கொழும்பு நோக்கி வந்துவிட்டோம் அதனால் அனைத்து வானொலிகளையும் கேட்கும் வாய்ப்பு கிட்டியுது.

தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர்கள் போட்டி காரணமாக தம்மைத் தாமோ இலங்கையின் முதற்றர வானொலி இலங்கையில் அதிகமாக கேட்கப்படும் வானொலி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் காமடிகளும் நடந்தேறியது. காலம் செல்ல செல்ல இந்த வானொலிகளின் தரம் சாக்கடையாகத் தொடங்கியது.

வானொலிகளின் தரம் எப்போதும் அதன் அறிவிப்பாளரின் தரத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும். தரமற்ற வானொலி அறிவிப்பாளர்களின் காரணமாக இலங்கையின் வானொலிகள் இன்று பெரும் நாற்றமெடுக்கின்றது. வாய் நோகாமல் கதைத்தால் மட்டும் அறிவிப்பாளராகிவிட முடியுமா? ஆரம்பக்காலத்தில் மயில்வாகனம், கிளோட் செல்வரட்னம், பிந்தைய காலத்தில் கமலினி, ரேலங்கி, நடராஜசிவம், விஷ்வநாதன் பின்னர் எழில் வேந்தன், லோஷன் போன்றவர்கள் இருந்த / இருக்கும் இடத்தில் இக்கால அறிவிப்பாளர்களை வைக்கவே முடியவில்லை. எப்போதாவது எந்த வானொலி நிலையத்தைத் திருகினாலும் ஒரு அறிவிப்பாளர் நையி நையி என்று சண்டீவி பாணியில் அறிவித்தல் கொடுப்பார். மறுமுனையில் ஒரு நேயர் தொலைபேசி எடுத்து அவருடன் அவர் புகழ் பாடுவார். இல்லாவிட்டால் இரண்டு அறிவிப்பாளர்கள் சேர்ந்து காமடி செய்கின்றோம் போர்வையில் செம ஜொள்ளு விட்டு எம் உயிரை எடுப்பர். இந்த அறுவை காரணமாக வானொலி கேட்கும் பழக்கத்தையே கடந்த சில ஆண்டுகளாக குறைத்துவிட்டேன். கேட்பது வெற்றியின் விடியல் மட்டுமே. அது என்னுடைய தனிப்பட்ட தெரிவு மற்றவர்களுக்குப் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம்.

இதைவிட இலங்கை வானொலிகளில் கடுப்பேற்றும் மிக முக்கியமான விடையம் சண்டிவி பாணியிலான இந்திய உச்சரிப்பும், செயற்கைத் தனமான ஆங்கிலக் கலப்பும். Actually, But, So, Wow… போன்ற ஆங்கிலச் சொற்கள் இன்றைய வானொலியில் சரளமாக உலாவருகின்றன. சரி பரவாயில்லை அதை விட்டுத் தள்ளுங்கள் ஆனால் அதைவிட மிக முக்கியமான மன வருத்தத்தைத் தரும் விடையம் இலங்கை வானொலிகளில் இப்போது இலங்கைத் தமிழைக் கேட்க முடியாது.

ஆமா அப்பிடீங்களா? அச்சச்சோ ரொம்ப சாரிங்க! எங்க இருந்து பேசுறீங்க? போன்ற இந்திய உச்சரிப்புடைய வானொலி அறிவிப்பாளர்கள்தான் இன்று இலைங்கையின் தமிழ் வானொலிகளில். இயல்பாகவே எமக்கு அது ஒட்டாமல் போனதில் ஆச்சரியம் இல்லை. இந்திய தமிழில் பேசும் போது கேட்க அழகாக ஆரம்பத்தில் இருந்தாலும் போகப் போக புளித்து விட்டது.

அண்மையில் ஒருவர் தனக்கு கடுமையான யாழ்ப்பாண உச்சரிப்பு இருந்தமையினால் வானொலி நிலையத்தில் சேர்க்கவே மறுத்து விட்டார்களாம் என்று வலைப்பதிவு ஒன்றில் பின்னூட்டமிட்டு இருந்தார். சிலர் கஷ்ட்டபட்டு இந்தியத் தமிழில் பேச முயற்சிப்பதை பாருக்கும் போது பாவம் பிள்ளை என்றே எண்ணத் தோன்றும்.

ஏன் இந்தக் கொலைவெறி???

வடிவேல் அவ்…! என்றும் போது விழுந்து விழுந்து சிரிக்கும் நாங்கள் அவர் பாணியில் ஒருவர் வானொலியில் பேசத் தலைப்பட்டால் காமடிப் பீசு என்று சொல்லி வானொலியை மூடுவதைத் தவிர என்ன செய்யலாம்??

 

யாரையும் தனிப்பட்ட ரிதியில் தாக்கி இந்தப் பதிவு எழுதவில்லை. நான் ஒன்றும் சிறப்பான நபர் என்றும் கூற வரவில்லை. இலங்கையில் பொதுவாக வானொலிகள் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு பற்றிய ஒரு பதிவு மட்டுமே இது.

இலங்கையில் 3டி சினிமா

சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் காலத்தில் மைடியர் குட்டிச் சாத்தான் என்று ஒரு முப்பரிமானத் திரைப்படம் வெளியானது. இதுவே எனது வாழ்க்கையில் அல்லது பலரது வாழ்க்கையில் கண்ட முதலாவது முப்பரிமானத் திரைப்படம். ஆயினும் உலகம் முழுவதும் 3டி திரைப்படங்கள் சக்கை போடும் நேரத்தில் இலங்கையில் மட்டும் எப்போதும் 3டி திரைப்படங்கள் வெளியாவதே இல்லை.

இந்த நீண்டநாள் குறையை இலங்கையின் தலைநகரில் அமைந்துள்ள மஜஸ்டிக் சினிமா நீக்கியுள்ளது. இனிமேல் 3டி திரைப்படங்களைக் காட்டுவதற்காகவே என்று ஒரு திரையரங்கை மஜஸ்டிக் ஐந்தாம் மாடியில் அமைத்துள்ளனர். சுமார் 150 பேர் இருக்கக்கூடிய வசதி உள்ள இந்த திரையரங்கில் முப்பரிமானத் திரைப்படங்களைக் காட்டுவதாகவே உத்தேசம் செய்துள்ளனராம்.

தற்போது த்ரீ மஸ்கட்டீயர்ஸ் என்ற திரைப்படத்தைக் காட்டுகின்றார்கள். ஆரம்பக் காட்சிகளில் முப்பரிமானக் காட்சிகள் நிறைந்து இருந்தாலும் திரைப்படம் முழுவதும் 3டி காட்சிகள் இல்லை. அல்லது 3டி எபெக்டு குறைவாக இருந்தது. விரைவில் சிறப்பான 3டி திரைப்படங்களையும் இங்கே காட்டுவார்கள் என்று நம்புவோமாக.

மஜஸ்டிக் சிட்டியில் இப்போது மொத்தம் நான்கு திரையரங்குகள் நிறுவப்பட்டுள்ளன.

தற்போது காட்டப்படும் காட்சிகள்

 

 1. சுப்பீரியர் 3டி – இதுவே நான் குறிப்பிட்ட முப்பரிமான திரையரங்கம். சுமார் 150 பேர் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் நுழைவுக் கட்டனம் 600 ரூபா
 2. கோல்ட் – இது ஒரு மினிசினிமா. நுழைவுக் கட்டனம் 750 ரூபா. இலவச சிற்றுண்டி, குடிபாணம் வழங்கப்படும்.
 3. அல்ட்ரா – சாதாரண சினிமா நுழைவுக் கட்டனம் 400 ரூபா
 4. பிளாட்டினம் – பழைய மஜஸ்டிக் சினிமா
கொழும்பிற்கு ஒருவகையாக 3டியும் வந்தாச்சு விரைவில் iMax ஐயுக் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும். ஹைதராபாத்தில் 3டி ஐமாக்ஸில் திரைப்படம் பார்த்த அனுவத்தின் பின்னர் அப்படியான ஒரு திரைப்பட அனுபவம் இதுவரை அடியேனுக்கு கிடைக்கவேயில்லை.
விரைவில் நல்ல ஒரு ஐமாக்ஸ் தியட்டரும் இலங்கைக்கு கிடைக்கும் என்று நம்புவோமாக.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2010

ஒவ்வொரு வருடமும் கொழும்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதுண்டு. இம்முறையும் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகின்றது. செப்தெம்பர் 18 தொடக்கம் 26 வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

கொழும்பு புத்தக கண்காட்சி: நன்றி ரடித

ஒவ்வொரு வருடமும் சென்று ஏதாவது ஒரு ஆங்கிலப்புத்தகத்தை வாக்கிவரும் எனக்கு இம்முறை பெருமளவில் தமிழ் புத்தகங்களை வாங்க கிடைத்தமை பெரும் சந்தோசம். https://www.nhm.in/ தளத்தில் விற்பனைக்கு இருக்கும் பல புத்தகங்களை பார்த்து பல நாட்களாகக் கொட்டாவி விட்டாலும் இன்னமும் அந்தப் புத்தகங்களை இலங்கையில் இருக்கும் என்போன்றவர்கள் வாங்குவது நடைமுறைச் சாத்தியம் இல்லை. இதற்கு முக்கிய காரணம் அஞ்சல் வழியில் புத்தகங்களைப் பெற எடுக்கும் செலவேயாகும்.

சந்தோஷமான செய்தி என்னவெனில் புத்தக கண்காட்சியில் இந்தப் புத்தகங்களை வாங்க கிடைத்தமையே.  கிழக்குப் பதிப்பகத்தில் ஸ்டால்கள் A-40 மற்றும் D-203 ஆகிய இடங்களில் உள்ளன. மறக்காமல் சென்று புத்தகங்களை அள்ளிக் கொள்ளுங்கள். நான் வாங்கிய புத்தகங்களை கீழே காணலாம்.

நான் அள்ளிய புத்தகங்கள்

காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வு இரவு 9 மணிவரை தொடர்வதால் மக்கள் வேலை முடிந்த பின்னரும் சென்று பார்க்கலாம். கொழும்பை இரவு நகரமாக்க முயல்கின்றார்களாம் அதற்காகத்தான் என்னவோ இவ்வாறு 9 மணிவரை கண்காட்சியை நிகழ்த்துகின்றார்கள்.

மேலும் பிரபல இலங்கையின் புத்தக சாலைகளான ஜெயா புக்சென்டர், விஜித யாபா புக் சென்டர், எம்.டி. குணசேன போன்றவர்களும் தங்களது ஸ்டால்களை வைத்துள்ளார்கள். ஆங்கில நாவல்களை வாங்க விரும்புபவர்கள் விஜித யாப்பாவை நாடலாம். அதே போல மருத்துவப் புத்தகங்களை வாங்க நினைப்பவர்கள் மக்கீன் அல்லது ஜெயா புக் சென்டர்ரை நாடலாம்.

நிகழ்வில் பங்குகொள்வோரின் இலகு கருதி சிறப்பு இலவச வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதைக் கண்டேன்.

பல இந்திய பதிப்பகத்தாரும் தமது புத்தக ஸ்டால்களை வைத்துள்ளார்கள். புத்தகங்கள் எமது சொத்துக்கள். வாசிப்பு மனிதனைப் பூரணமாக்குகின்றது. நாமும் வாசித்து எதிர்காலச் சந்ததியும் வாசிக்க துணைபுரிவோம்.

பி.கு: உள் நுழைவதற்கு ரூபா 10 அறவிடப்படுகின்றது. மத குருமார், சீருடையில் வரும் மாணவர், பாதுகாப்பு படையினர் ஆகியோருக்கு அனுமதி இலவசம்.

Image via: Raditha’s Photo Blog

When Life Gives You Lemons, Make Limoncello – புத்தக விமர்சனம்

ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு “When life gives you lemons, make lemonade”. இத்தாலியில் இந்த லெமனேட்டை விட Limoncello எனும் குடிபானம் பிரபலமாம். அத்துடன் Limoncello செய்ய லெமன் தோலைப் பயன்படுத்துகின்றார்கள். ஆகவே ஆசிரியர் இந்தப் பெயரை சூட்டியுள்ளார் தன் முதலாவது புத்தகத்திற்கு.

முதலில் ஒரு விடயம். ஒரு சீரியசான புத்தகம் தேடி நீங்கள் அலைபவர் என்றால் இத்துடனே இந்த விமர்சனத்தை வாசிக்காமல் வெளியேறலாம். ஏன் எனில் இந்தப் புத்தகம் ஒரு ஆங்கில ஆசரியரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை தொகுத்த ஒரு கோவையே.

புத்தக முன் அட்டை
புத்தக முன் அட்டை

அண்மையில் ODEL பல்லங்காடியில் உலாவித் திரிந்த போது இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது. இந்தப் புத்தகம் பற்றி முன்பே சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நண்பன் சிலாகித்துக் கூறியிருந்த காரணத்தால் இரண்டு தடவை யோசிக்காமல் 750 ரூபா (Approx $7) கொடுத்து வாங்கிவிட்டேன். புத்தகம் வாசித்து முடிந்த பின்னர் கொடுத்த பணத்திற்காக வருந்தவில்லை. புத்தகத்தில் எழுத்தாளர் கைப்பட கையெழுத்திட்டு என்ஜாய் என்று எழுதியிருந்தார் 😉

அருண எனும் இலங்கையர் தனது 18வது வயதில் இலங்கையில் இருந்து மேற் படிப்பிற்காக அமெரிக்கா செல்கின்றார். அங்கே தனது பட்டப்படிப்புகளை முடித்தபின்னர் அங்கேயே ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார். செப்டம்பர் 11 தாக்குதலிற்குப் பின்னர் தனது தொழிலையும் இழந்து இருந்த அருண ஒரு நாள் New York Times இல் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்க்கின்றார்.

“இத்தாலியில் உள்ள ஒரு ஆங்கிலப் பள்ளிக்கு ஒரு ஆங்கில ஆசிரியர் தேவை” வேலையின்மை, விவாகரத்து என்று சலித்திருந்த அருண இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இத்தாலி செல்கின்றார். இங்கிருந்துதான் இந்த புத்தகம் சூடு பிடிக்கத் தொடங்குகின்றது.

முதல் சந்திப்பிலேயே தான் ஒரு முன்னாள் FBI Agent என்று புருடா விடும் ஆங்கிலப் பள்ளி முதலாளியுடன் கதை ஆரம்பிக்கின்றது. முதலில் அருண இத்தாலியை குறிப்பாக உரோமா புரி நகரை ஒரு வளர்ந்து வரும் நாட்டின் தலைநரத்துடன் ஒப்பிட்டு கடித்துக் குதறுகின்றார். ஆயினும் புத்தகம் முடியும் போது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இறவா வரம் பெற்ற இந்த நகரை ஏன் மக்கள் ஏற்றிப் புகழ்கின்றார்கள் என்று உணர்கின்றார்.

முதலே சொன்னபடி ஆசிரியர் மனதில் வந்த அனைத்தையும் எழுதி தள்ளியுள்ளார். இத்தாலியில் தனது காதலிகள், இத்தாலி மக்களின் மூடப் பழக்க வழக்கங்கள், தரமற்ற வைத்தியசாலைகள், மோசமான உணவு வகைகள், குளிக்காத ரோமாபுரி மக்கள் என்று நகைச்சுவைப் பட்டியள் நீள்கின்றது. ஆனாலும் சில இடங்களில் மனம் கனக்கும் வண்ணமான சம்பவங்களையும் இவர் குறிப்பிடத் தவறவில்லை.

தற்போது அருண ஒன்லைன் ஆங்கிலப் பாடசாலையினை நடத்தி வருகின்றார். சீனா, இத்தாலி, இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து இவரது தளத்திற்கு வந்து மாணவர்கள் பாடம் படிக்கின்றார்களாம்.

நீங்களும் என்னைப் போல மற்றவர் விடயங்களை அறியும் ஆர்வம் உள்ளவர் என்றால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துவிடுங்கள். இலங்கையில் விஜித யாப்பா, ஓடெல் போன்ற பிரபல புத்தக சாலைகளில் கிடைக்கும். நீங்கள் ஒன்லைனிலும் இந்தப் புத்தகத்தை வாங்கலாம் ஆனால் விலை அதிகமாக உள்ளது.

நேரம் போக்காட்ட அருமையான ஒரு புத்தகம். அத்துடன் வாழ்வில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகள் எமது வாழ்க்கையை எவ்வாறெல்லாம் மாற்றம் போகின்றது என்பதற்கு இந்த சுயசரிதைப் புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு.

நினைவுகள் – வீதியோட்டம்

பல்கலையில் படிக்கும் போது நடந்த நிகழ்வு. ஒரு மீள் பதிவு.

அன்று மாலை ஜிம் கன்டீனீல் ஒய்யாரமான இருந்து இலங்கை இங்கிலாந்து கிரிக்கட் மாச் பார்த்துக்கொண்டு இருந்த போது யாரோ பின்னால் தோளில் கை போட்டார்கள்.

“நாளைக்கு ரோட் ரேஸ் ஓடப் போறம் வாறீங்களா?” ஜெஹான் ஐயா (அண்ணா) கேட்டார்.

“அதெல்லாம் பள்ளிக்கூடத்தில ஓடினதோட சரி… ஐயோ ஏலாது ஐயே”

“கமோன் மயூ… வன் லாஸ்ட் டைம்” தற்போது கேட்டது அயோமி. இதற்குப் பிறகு மறுக்க நான் என்ன முட்டாளா?

“ஓ.கே ஐம் இன்” கண் சிமிட்டி சரி என்று தெரிவித்ததுடன் அவர்களுடன் சென்று அடுத்தநாள் வீதி யோட்டத்திற்கு பதிவுசெய்து கொண்டேன்.

2000ம் ஆண்டில் பள்ளியில் படிக்கும் போது ஆண்டாண்டு நடக்குமம் ஓடியது அதற்குப் பிறகு எனக்்கும் விளையாட்டுகளுக்கும் எட்டாப் பொருத்தம். பள்ளியில் ஓடினதுக்குக் காரணம் அது கட்டாயம் எல்லாரும் ஓடவேண்டும் என்பதால். இப்போ ஓடுவது.. ஹி. ஹி…

காலை 6 மணிக்கு ஓட்டப் பந்தயம் தொடங்குவதாக இருந்தது. அப்படியானால் நான் 5.30 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து புறப்பட வேண்டும். காலையில் எழும்புவதே 8 மணிக்குத்தான்.. சரி பரவாயில்லை ஒரு நாள் தானே என்று மனைதைத் தேற்றிக்கொண்டேன்.

எனது வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த இன்னுமொரு பொடியனும் ஓடியதால் அவன் உதவியுடன் காலையில் நேரத்திற்கு எழும்பி பல்கலைக்கழகத்திற்கு சென்று விட்டேன்…

பல்கலை செல்லும் வழியில் பஸ்சில் வந்த மற்ற பொடியள் பெட்டையளைப் பற்றி ஒரே கொமன்ட் அடிச்சுக்கொண்டு வந்தம். அத்தோட புதிதாய் வாங்கிய சில்வர் சங்கிலி (நாய்ச் சங்கிலி மாதிரி இருக்கும்) அதையும் கழுத்தில் போட்டு வெள்ளோட்டம் விட்டேன்.

“அண்ணா சங்கிலியை உள்ள விடுங்கோ” என்னோட வந்த மற்றப் பொடியன் சொன்னான்

“ஏன்?? அவ்வளவு பயங்கரமா இருக்குதோ??” கேட்டவாறே எடுத்து என்னோட டீ-ஷர்ட்டுக்குள் விட்டேன். எல்லாருக்குள்ளும் இருக்கும் சின்ன சின்ன ஆசைகள். இது என்னோட ஒரு சின்ன ஆசை.

கடைசியாய் பல்கலைக்கழகம் வந்து சேர்ந்தோம். ஜிம்மில் சென்று என்னுடைய காற்சட்டையையும் போட்டு, மச்சானின் சப்பாத்தையும் மாட்டிக்கொண்டேன். டீ சர்ட்டில் என் இலக்கத்தையும் மாட்டிக்கொண்டேன்். இன்னமும் அயோமியைக் காணவில்லை.

6 மணிக்குத்தான் ஓட்டம் என்று சொன்னாலும் 6.30க்குத்தான் ஓட்டம் தொடங்கியது. என் நண்பன் பல்கலைக்கழக உதைபந்தாட்டா அணியில் இருப்பதால் நல்ல ஃபிட்.

“தம்பி நான் விழுந்து கிழுந்து போட்டன் எண்டால் தூக்கிக்கொண்டு ஓடுடா” அவனிடம் விண்ணப்பம் போட்டேன்.

“ஓ.கே அண்ணா” நக்கலாகப் பார்த்தான்.

இவ்வாறு பேசியவாறே விஞ்ஞாணப் பீடத்தினுள் நுழைந்து போட்டி ஆரம்பிக்கும் இடத்தை அடைந்தோம். இப்போ தூரத்தில் அயோமி… “ஹேய் படி… குட் லக்… சீ யா இன் அக்சன்”

அடிப் பாவி.. இப்பிடிக் கவுக்குறாளே!! ஓட வேற வைச்சுப் போட்டு இப்ப அக்சனில பாக்கிறாவாம். அதவிட என்னோட தலைலயிழுப்பு, நாய்ச் சங்கிலி பற்றி றேஸ் முடிய கொமன்ட் வேற தருறாவாம்.. யாருக்குத் தேவை இதெல்லாம்.. எங்க கிட்ட வேகாது இந்தப் பருப்பு.

எங்களுக்கு முன்னால பல்கலைக்கழக மரதன் அணயினர் பாதைகாட்டிக்கொண்டு ஓடுவதாக ஒழுங்கு பின்னால் நாங்கள் எல்லாரும் ஓட வேண்டும்.

அப்போ பல்கலைக் கழக மரதன் அணயினரைப் பார்த்து ஒருத்தன் நக்கலைப் போட்டான்.
“டேய் பெட்டைகளை பின்னால விட்டிட்டு, பொடியங்கள் முன்னால ஓடுறீங்களெடா வெக்கமில்லையா?. நீங்க புரோஸ் என்றால் பின்னால நின்று ஓடுங்கடா”

“அதுதானே வெக்கமில்லையாடா”நானும் பின்னால இருந்து சத்தம் இட்டன். இப்படியாக பின்னால் இருந்து தலைமறைவாகச் சத்தம் போடுவதில்நான் கில்லாடி.

நடுவர்கள் விசிலை வாயில் வைத்த ஊத தயார் ஆனார்

விசில் ஊதியதுதான் தாமதம் எல்லாப் பசங்களும் காற்றைப் போல விஷ்.. விஷ்.. என்று ஓடத் தொடங்கினார்கள். அடப் பாவி மயூரேசா.. ஓடுடா.. ஓடு என்று என்னை நானே உசார்ப்படுத்திக்கொண்டு ஓடத் தெடங்கினேன்.

பல்கலையைச் சுற்றி 5 வட்டங்கள் ஓடவேண்டும், பெண்கள் 2 வட்டம் ஓடவேண்டும் (அதாவது அயோமி மற்றும் சக நண்பிகள் ). முதல் வட்டம் ஓடி முடித்துவிட்டேன். மூச்சு வாங்குகின்றது பேசாமல் இருந்துவிடலாமா என்று தோண்றுகின்றது. முடியவேயில்லை. பெட்டைகள் எல்லாம் கூட என்னை ஓவர்டேக் பண்ணிக்கொண்டு போறாகள். அடக் கடவுளே என்ன கொடுமை இது. சீ.. என்ன கொடுமை சார்?

1.5 வட்டங்கள் ஓடிவிட்டேன் என் கூட ஓடிவந்த நண்பனைக் காணவில்லை அவன் எங்கேயோ ஓடிப்போய்விட்டான். நான் தனிமரமாக மூச்சு இழுத்து இழுத்து ஓடிக்கொண்டு இருந்தேன். குறைந்த பட்சம் பெண்களையாவத ஓவர்டேக் பண்ண விடக்கூடாது என்ற எண்ணத்தோடு தொடர்ந்து ஓடிக்கொண்டு இருந்தேன்.

இப்போ 2 வட்டங்கள் ஓடி முடித்துவிட்டேன். “அடோவ் மே பலபங். ஷேர்ட் கட் எகக் தியனவா” (இங்க பாருடா குறுக்கு வழி ஒன்று இருக்குது) எனக் கத்தியவாறு குறுக்கு வழியால் சிலர் பாய்ந்தனர். அதாவது கிட்டத்தட்ட ஒவொரு வட்டத்திலும் 200 மீட்டர் வரை அந்த குறுக்குப் பாதையால் மிச்சமாகும்…

என்மனம் அலை பாய்ந்தது குறுக்கு வழியா.. நேர் வழியா????

நேர் வழி குறுக்கு வழி பிரைச்சனையில் கடைசியாக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கும் கட்டாய நிலைக்கு என்னுடைய மூச்சு வாங்கல் தள்ளியது. வேறு வழியில்லாமல் குறுக்கு வழியில் ஓடத் தொடங்கினேன். கால்கள் தள்ளாடியது கண்கள் இருண்டது என்றாலும் உள்ளிருந்து ஒரு சக்தி உந்தித்தள்ளவே தொடர்ந்து ஓடத் தொடங்கினேன்.

கடைசியாக என்னைப் போல இழுத்து இழுத்து ஓடிய சில நண்பர்களுடன் 5ம் வட்டத்தையும் ஓடி முடித்தேன். ஓடி முடித்து எனது இலக்கத்தை அவர்கள் வைத்திருந்த பெட்டியுள் போட்டு விட்டு அருகில் இருந்த நீர் குளாயில் நீர் அருந்திவிட்டு, சும்மா இருக்காமல் தலையை குனிந்து குளாயில் பிடித்தேன். தலை முற்றும் ஈரமாகிவிட்டது. பின்னர் நிமிர்ந்ததும் ரீ-ஷர்ட் முழுவதும் ஈரமாகிவிட்டது.

போதுமடா சாமி.. வீட்ட போய் நீட்டி நிமிர்ந்து படுக்கலாம் என்று நினைத்தபோது. தூரத்தில் அயோமி. அருகில் சென்று பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன். பொதுவாக அவர்களுக்கு தமிழ் தெரியாததால் சிங்கிலீசில்தான் கதைப்போம்.

“ஹல்லோ… என்ன ஓடி முடிச்சீரா?”

“கமான்… நான் முடிச்சன்… நாக்கை வெளியே தள்ளிக்கொண்டு ஓடினதையும் பார்த்தன்”

“ஓ… ஷட்டப் வில் யூ?” செல்லமாகக் கடிந்துகொண்டேன்.

“பை தி வே கென்சிடர் எ ஹெயார் கட், அன் துரோ தட் செய்ன் நவ் இட் செல்ப்” இது அவ அட்வைசு. அட்வைசு யாருக்குத் தேவை. வீட்டில அப்பா அம்மா சொல்லியே கேக்கிறதில்லை இவ சொல்லித்தான் கேக்கப் போறமாக்கும். அப்படியே இவ்வளத்திற்கும் காரணமான அழகிய அரக்கி அயோமியிடம் விடைபெற்றுக்கொண்டு ஜிம்மிற்கு உடைமாற்றத் திரும்பினேன்.

அங்கே சென்றதும் தான் உறைத்தது. என் ரீ-ஷர்ட் ஈரம் இப்படியே பஸ்சில் செல்ல முடியாது. அப்படி சென்றாலும் கல்லால் விட்டு துரத்தி துரத்தி அடிப்பார்கள். ஏற்கனவே நல்லா நோண்டியாகி இருக்கிறம், இது என்னடா இது அநியாயம் என்று சிந்தித்துக் கொண்டேன்.

எப்போதும் பிரைச்சனையில் நண்பர்கள் கை நீட்டுவது சகஜம்தானே, அவ்வாறுதான் ஜெகான் மீண்டும் வந்து என்ன பிரைச்சனை என்றான். நானும் என் நிலமையை எடுத்துச் சொன்னேன்.

“ஐயோ அவ்வளவுதானா.. என்னோட ரூம் கீயைத் தாறன் அங்க போய் ஒரு ரீஷர்ட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு போடாப்பா. ஆனா திரும்பித் தரேக்க துவைத்துத் தரோணும் சரியா?” என்று சிரிப்புடன் சொன்னான் நண்பன்.

நானும் அவன் ரூமிற்குச் சென்று உடைமாற்றிக்கொண்டு பல்கலை வீதியில் இறங்க நடக்கத் தொடங்கினேன். இப்போது ஒரு பெட்டை என்னையே முறைத்து முறைத்துப் பார்க்கிறாள். கண்களில் ஏதோ பயங்கரமான நெருப்புத் தெரிகின்றது.

“ஹேய்.. வட்ஸ் ரோங்” தேவையில்லாமல் வாயைக் கொடுத்தேன்.

“ஒன்றும் இல்லை இந்த ரீ ஷர்ட் யாரிண்டது?”

“ஆ… என்ன இது என்னோடதுதான்” என்று கலாதியாகச் சொன்னேன்.

“ஓ.கே” என்று சொல்லியவாறே அந்த நண்பி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். சிறிது நேரத்தில்தான் எனக்கு மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது. இந்தப் பெட்டை ஜெகானிட காதலியல்லவா???

மாலை 6 மணிக்கு ஜெகான் அழைப்பு மேற்கொண்டான்.
“டெய்! நீ அந்த நீல ரீ-ஷர்ட்டா போட்டனி?”

“ஓம்”

“அடப் பாவி… எல்லாத்தையும் கெடுத்திட்டியே… அது என்ட கேள்ஃபிரண்ட் வாங்கித்தந்த ரீ-ஷர்ட். எதுக்கு கண்டவங்களுக்கெல்லாம் கொடுக்கிறாய் என்று பெண்டை நிமிர்த்திப் போட்டாள்.. மவனே வாடா வா.. கம்பசுக்கு வருவாய்தானே!!”

“ஹல்லோ… ஹல்லோ. மச்சான் கதைக்கிறது விளங்கேல.. சிக்னல் வீக்கா இருக்கிடா மச்சான்… ஹல்லோ..” அப்படியே இணைப்பைத் துண்டித்தேன்!!!

(முற்றியது..)

அழகே காதலே கடவுள் பணம் தருவாரா?

முன்னுரை முதிய உரையொன்றும் இல்லாமல் நேரடியாகப் பதிவிற்கு குதிக்கின்றேன்.

அழகு

ம்… பலபேரும் அழகென்றால் வெளி அழகல்ல, உள் மனதில் அழகே முக்கியம் என்பர். சிலரோ அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆகவே அகம் அழகாக இருந்தால முகம் அழகாக இருக்கும் என்று சொல்லுவர். இப்படி சொல்லுபவர்களை எங்கேயாவது கண்டால் நங்கு நங்கு என்று இரண்டு குத்துப் போட மறக்கவேண்டாம். உலகம் எப்போதும் (99 வீதம்) அழகென்று கணிப்பது வெளியழகைத்தான். இப்போதெல்லாம் பொடியள் பெண் தேடும் அம்மாவிடம் தனது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கொண்டிசன் போடுவினம்.

 1. மெல்லிசா இருக்கோணும்
 2. வெள்ளையா இருக்கோணும்
 3. தலைமயிர் நீளமா இருந்தால் நல்லம்
 4. ஒரு கிரஜூவேட் என்றால் நல்லம்
 5. இங்கிலீசு கதைக்கத் தெரிந்தால் நல்லம்

இப்பிடிப் பட்டியல் நீளும். ஆனாலும் ஒரு பெண் கொள்ளையழகாக இருந்துவிட்டால் எந்த கொண்டிசனும் இல்லாமல் கனடா மாப்பிள்ளைமார் கொத்திக்கொண்டு போடுவினம். 😉

வந்தி தன் பதிவில் ஜஸ்வர்யா ராயைப் போட்டு அழகு பற்றி எழுதியிருந்தார். எனக்கு அழகென்றால் கண்முன்னாலே வருவது யார் தெரியுமா???

ஜ லவ்யூடா செல்லம்
ஜ லவ்யூடா செல்லம்

மீரா ஜாஸ்மின்!

நான் O/L படித்துக் கொண்டிருக்கும் போது எனது வகுப்புத் தோழன் ஒருவன் மச்சான் நான் ஒரு பெட்டைய லவ்வு பண்ணுறண்டா என்றான். அவட பெயர் பாதி தமிழ்டா மீதி கிருஸ்தவப் பெயர்டா என்று வேற ஆப்பு வைத்தான். யாருடா அது எண்டு தேடிப் பார்த்தா, நேற்று இரவு ரண் திரைப்படம் பார்த்தானாம். அந்த நொடியில் இருந்து மீரா இரசிகன் ஆகிவிட்டானாம்.

இன்று கேரளத்துப் பைங்கிளிகள் பல வந்து தமிழ் சினிமாவை ஆட்டுவித்தாலும், என்றும் என் மனதில் மீரா மீரா மீரா.

டோய்! உனக்கு மீராவா.. ரொம்ப ஓவரா இல்லை? என்று நீங்கள் கேட்பது கேட்கின்றது.. கூல் டவுன் 😉

காதல்

இதால நல்லா வந்தவனும் இருக்கின்றான் நொந்து கெட்டவனும் இருக்கின்றான். எனக்கு காதல் அனுபவம் என்று பெரிதா இல்லாவிட்டாலும் கொஞ்சமா இருந்துச்சு. அதுவும் ஆங்கிலத்தில. நான் பேசுறது அந்த வெங்காயத்துக்கு விளங்காது, அந்த வெங்காயம் பேசுறது எனக்கு விளங்காது. இப்படியே அந்தக் காதலும் விளங்காம போயிட்டுது 😉

i love you so much

உண்மையில் காதல் என்பதை பலரும் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருத்தர் விரும்புதல் என்றே வகைப்படுத்துகின்றனர். ஆனால் ஆங்கிலத்தில் காதல் எனும் வார்த்தைக்கு ஒப்பான சொல் LOVE. அந்த சொல்லுக்கு வெறுமனே ஆண்-பெண் காதலை சாட்டி முடிக்கவில்லை. தாய்-சேய், தந்தை-சேய், ஆசிரியை-மாணவர் என்று அந்தப் பட்டியல் நீளும்.

காதல் என்று ஒன்று இல்லாவிட்டால் இவ்வுலகில் எந்த உயிரினமும் இருந்திருக்க முடியாது. அடப் போப்பா! எல்லாம் ஈஸ்ஜன், புரஜட்டோன், தெஸ்தெஸ்தரோன் செய்யிற வேலை. காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என்று நீங்கள் புலம்புவதும் எனக்கு கேட்காமல் இல்லை.

கடவுள்

மனிதன் தன் தேவைக்காக உருவாக்கிய மகப் பலம் பொருந்திய ஒரு கண்டுபிடிப்பு. ஆதிகாலத்தில் தன்னைச் சுற்றி நடப்பதைப் பற்றி சற்றும் அறிய முடியாத மனிதன் கடவுள் எனும் மாயையுள் வீழ்ந்து தன் மனதை தேற்றினான். காலப் போக்கில் கடவுள்கள் பல தோண்றி மதங்கள் பல தோண்றி ஒருத்தனை ஒருத்தன் மதங்களின் பெயரைச் சொல்லி கொண்று குவித்தமைதான் மிச்சம்.

சிலுவை யுத்தம் முதல் உலகெங்கும் இன்று இந்தப் பதிவை நான் எழுதும் நேரம் வரை மதங்களின் பெயரால் கொலை கொள்ளை.

சிலுவை யுத்தம்
சிலுவை யுத்தம்

இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் நான்தான் கடவுள் என்று கூறி ஊரை ஏமாற்றும் கூட்டம். அம்மா பகவான், ஆத்தா பகவான் அது இது என்று ஊரை ஏமாற்றும் பேர்வழிகள். இதில் பெரிய பகிடி என்னவென்றால் இவர்களிற்கு உலகம் எங்கும் கொழும்புக் கிளை, மலேசியக் கிளை, சிங்கப்பூர் கிளை. என்ன செய்வேன் இந்த தமிழ் இனத்தை.

அடியேன் கோவில் குளம் என்று அலைவதில்லை. கணக்கா பரீட்சைகள் வரும் போது மட்டும் டான் என்று கோவில் வாசலில் வந்து நிற்பேன். ஆத்தா ஆத்தா என்று உருகி உருகி வழிபடுவேன். தேர்வு முடிவுகள் வந்த உடனே ஆத்தாக்கு அரிச்சனை விழும். 😉

பணம்

பணம் பற்றி நான் கூறியா தெரிய வேண்டும். பணம் பாதாளம் வரை பாயும். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். ஆனால் என்ன செய்வது எனக்குத்தான் பணம் வருதில்லை. தளத்திற்கு வந்திருக்கிறவங்கள் யாராவது மனம் வைத்து இங்கயிருக்கிற விளம்பரங்களில கிளிக்கினால் தவிர பணம் எனக்கு வர சந்தர்ப்பமே இல்லை. ஹி..ஹி… சும்மா 😉

பணம் - கடத்தல் - கொள்ளை
பணம் - கடத்தல் - கொள்ளை

பெரிய பணக்காரணாக இல்லையே என்று அப்பப்ப கண்ணீர் வடித்தாலும் இருப்பதை வைத்து வாழப் பழகினால் அதுவே செல்வம். அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

இத்துடன் இந்த சிறிய பதிவை முடிப்பதுடன் அழைத்த வந்திக்கும் நன்றிகள். இப்போ நான் 5 பேரை அழைக்க வேண்டுமே. இதுதான் எனக்கு கஷ்டமான இடம்!!!

 1. ரவிசங்கர்
 2. அஷோக்பரன்
 3. ஊரோடி பகீ
 4. புல்லட்டு
 5. நிமல்

நண்பர்களே மானத்தை கப்பலேற்றாமல் ஒருத்தராவது ஒரு பதிவு போடுங்கையா 😉

ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்


திருமணம் என்பது ஒரு அழகான நிகழ்வு. முன்னோர்கள் சொன்னபடி சொர்க்கத்திலே நிச்சயிக்கப்படுகின்றது. ஆனால் இன்றய பல திருமணங்கள் அரைவாசியில் ஃபாஸ்ட் ஃபூட் உணவுமாதிரி உடனடியாக உருவாகி உடனடியாக முடிவடைந்துவிடுகின்றன. Continue reading ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்

இலங்கை பதிவர் சந்திப்பு – 2009

பல காலமாகவே பலராலும் விரும்ப பட்டாலும் காலத்தின் சில சில நெருக்கடிகளால் பலரும் இந்த முயற்சியை ஆரம்பிப்பதிலும் நடத்துவதிலும் பின்னடித்தனர். இப்போது இதற்கான கால நேரங்கள் கனிந்துவிட்டதால் இலங்கையில் நான்கு சிங்கங்கள் (அப்படித்தான் வந்தியத்தேவன் சொன்னார்) களத்தில் இறக்கி இந்த அருமையான நிகழ்வை நடத்திக் காட்டியுள்ளனர்.

Blogger Birthdayஇந்த நிகழ்விற்கு இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இன்றய தினத்தில்தான் பிளாக்கர் தளத்தின் 10ம் பிறந்தநாள். அடப்பாவமே அதுக்கும் கேக்கு வெட்டி கொண்டாடிட்டானுகள்.

பெரும்பாலம் பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் கலந்துகொண்டனர். பலரும் பிளாக்கரையே பயன்படுத்துவது அவர்கள் பேசும்போது தெரிந்த்து. இது என்போன்ற வேர்ட்பிரஸ் வலைப்பதிவருக்கு வருத்தமளிப்பதாக இருந்தாலும் பிளாக்கர்.காம் போல வேர்ட்பிரஸ்.காம் பல இலவச சேவைகளை தரவில்லை என்பது கவலையான உண்மையே!!! ஒரே தீர்வு தனித்தளத்தில் வேர்ட்பிரஸ் நிறுவுவதுதான்.

நிகழ்வு தொடங்கியதில் இருந்து முடியும் வரை புல்லட்டு வைத்த மொக்கைகள் தாங்காது. தொடங்கியதில் இருந்து வடை சாப்பிட வந்தவர்கள் முதல் உண்டியல் பெட்டி திறந்தமை வரை ஒரே சரவெடி. 😉

நிகழ்வில் நேரம் போதாமல் போனது கண்கூடு. நான்கூட சில கருத்துக்களைச் சொல்ல விழைந்தாலும் நேரம் இடம் கொடுக்கவில்லை. என்றாலும் அனைத்து சக வலைப்பதிவுலக உள்ளங்களை சந்தித்தமை பெரும் சந்தோஷமே.

தட்டச்சு முறைகள் பற்றி காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது மயூரன் சொன்னார், நயந்தாராவா நமீதாவா போன்ற தலைப்புகளுக்கு சமனாக பாமினியா, தமிழ் 99 ஆ என்ற தலைப்பும் பட்டை கிளப்பும் என்று. நான் பாமினியில் இருந்து தமிழ் 99க்கு மாறிய போது எழுதிய கட்டுரையை வாசியுங்கள் உண்மைபுரியும்.

இதைவிட யாழ்தேவி திரட்டி பற்றியும் காரசாரமாக வலைப்பதிவர்கள் முட்டி மோதிக்கொண்டார்கள். யாழ்தேவி என்ற பதம் ஒரு பிரதேசத்தை வட்டமிட்டுக் காட்டுவதாக பல வலைப்பதிவர்கள் முறைப்பட்டுக் கொண்டார்கள்.

இதைவிட வலைப்பதிவு எழுதி பொலீஸ் தன்னைப் பிடித்தது எனும் பகீர் தகவலையும் ஒரு நண்பர் வெளியிட்டு அடிவயிற்றில் புளியைக் கரைத்தார்.

இன்னுமொரு விடையம் ஆண்டு 6 கற்கும் ஒரு இளைய பதிவர் வந்து கலக்கினார். தந்தையைப் பின்பற்றி சிறுவர் வலைப்பதிவை ஆரம்பித்தாலும் இப்போது தந்தைக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிசெய்யுமளவிற்கு உயர்ந்துவிட்டாராம். பெயர் ஞாபகம் இல்லை. இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள்.

முக்கியமான இன்னுமொரு விடையம் ஊடக கல்லூரி மாணவர்கள் சிலர் வந்திருந்தனர். அனைவரும் வேர்ட்பிரஸ்.காம் தளத்தை வைத்திருந்தமை மனதிற்கு நிம்மதி. இணையத்தில் கட்டுரைகளை சுட்டுவிட்டு நன்றி இணையம் என்று மட்டும் போடும் பத்திரிகைகளையும் சாடி பேசிய மயூரன் இப்படி செய்யவேண்டாம் என்று ஊடக கல்லூரி மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

அடுத்த முறை வலைப்பதிவர் சந்திப்பு நடக்கும் போது லோஷன் சொன்னமாதிரி குளு குளு அறையில் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சந்திப்பாக இருக்கட்டும். இதன் மூலம் வலைப்பதிய புதிதாக வரும் பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதற்கான என் பங்களிப்புகள் அடுத்த முறையிருக்கும்.

பி.கு: கொட்டாஞ்சேனையில் இருந்து வெள்ளவத்தை தமிழ் சங்கம் மண்டபத்திற்கு இலவசமாக காரில் கூட்டிச்சென்ற சேது அவர்களுக்கு மிக்க நன்றி.

என் விருப்ப ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்

ஆங்கில தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் பழக்கம் எம்மில் பலருக்கும் உண்டு. உதாரணமாக சிறு வயதில் நைட் ரைடர், ரொபின் ஓப் ஷேர்வூட், டார்ஸான் போன்ற தொடர்களை எம்மில் பலர் பார்த்திருக்கின்றோம். சினிமாவிற்கு சமனான செலவு, தரத்துடன் ஆங்கிலத் தொலைக்காட்சித் தொர்களை எடுப்பது அவர்களின் சிறப்பு. துரதிஷ்ட வசமாக எங்கள் தமிழ் தொலைக்காட்சிகள் யாவும் ஒரு ஒப்பாரி வைக்கும் பெண்ணையும் அவரைச்சுற்றிய ஆண்களையும் பற்றியதாக அமைந்துவிட்டது. இன்னுமொரு நூற்றாண்டுக்கு அவை மாறப்போவதில்லை. அவற்றை மாற்றச்சொல்லிக் கேட்டு தாய்குலத்தில் சாபத்திற்கு ஆளாக எனக்கு விருப்பமில்லை.

இந்த செப்டம்பர் மாதத்தில் எனக்கு விருப்பமான மூன்று ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள் ஆரம்பிக்கின்றன அல்லது ஆரம்பித்துவிட்டன. இவை பற்றிய சுருக்கமான என் கருத்துக்களைத் தொடர்ந்து படியுங்கள்.

1. Prison Break

சாதாரண சிறையுடைப்புக்கதை என்று நினைத்துவிடாதீர்கள். மண்டையைக் காயப்போட்டுப் பார்க்குமளவிற்கு விறுவிறுப்பானதும் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதும்தான் இந்த தொலைக்காட்சித் தொடர். லிங்கன் பரோ எனும் அப்பாவி மனிதனை ஒரு கும்பல் பொய் சாட்சிகள் மூலம் சிறைக்கு அனுப்புகின்றது. லிங்கன் பரோவின் தம்பி மைக்கல் ஸ்கோபீல்ட், அண்ணாவைக் காப்பாற்ற திட்டம் தீட்டுவதே கதை.

சிறையை உடைக்க சிறைக்குள் புகுந்தாக வேண்டும், ஆகவே தான் வங்கியில் கொள்ளையடிப்பது போல ஒரு நாடகமாடி அண்ணா இருக்கும் அதே சிறைச்சாலைக்குச் செல்கின்றான். அங்கிருந்து தானும் தன் அண்ணனும் தப்புவதற்கு வழிகளைச் சமைக்கின்றான். இதில் விருப்பத்துடனும், விருப்பமில்லாமலும் பல நபர்கள் சேர்ந்து கொள்கின்றனர். பாகம் ஒன்றில் சிறைச்சாலையை உடைத்து இவர்கள் தப்புகின்றனர்.

பாகம் இரண்டில் சிறைச்சாலைக்கு வெளியே இவர்கள் தப்பி வாழுவதற்கு செய்யும் முயற்சிகள் பற்றியது. இவர்களை விடாமல் துரத்தும் அரசு ஒரு பக்கம், இவர்களை கொல்லத்துடிக்கும் கம்பனி எனும் கும்பல் மறுபக்கம் என இவர்களுக்கு இரு முனைத்தாக்குதல். இவற்றில் இருந்து எவ்வாறு தப்புகின்றனர் என்பதுதான் பாகம் இரண்டு.

பாகம் மூன்று பனாமாவில் உள்ள சொனா எனும் சிறைச்சாலையில் நடக்கின்றது. சட்டம் எதுவும் ஒழுங்காக இல்லாத சிறைச்சாலையில் மாட்டும் மைக்கல் ஸ்கோபீல்ட் அங்கிருந்து தப்ப முயற்சிப்பது பாகம் மூன்று.

பாகம் நான்கு இப்போது ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டதி. எம்மைபோல இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ளோர் டொரன்ட் மூலம் இறக்கிப்பார்க்க வேண்டியதுதான். நான்காம் பாகம் மீள அமெரிக்காவில் நடக்கின்றது. கயவர் கும்பலான கம்பனி எனும் நிறுவனத்தில் இரகசிய தகவல்கள் அடங்கிய வட்டை மீட்டு எடுத்து அரசிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு மைக்கலின் குழுவினருக்கு வந்து சேர்கின்றது. இதை உத்தியோக பூர்வமற்ற முறையில் இவர்கள் செய்யவேண்டிய நிர்ப்பந்தம். இதை செய்து முடிப்பார்களா அல்லது செய்து முடிக்காமல் சிறை செல்வார்களா என்பதை இனி பார்த்து தெரிந்து கொள்ளவேண்டியதுதான்.

2. Sarah Connor Chronicles – Terminator


டேர்மினேட்டர் திரைப்படத்தைப் பற்றித் தெரியாதவர்கள் இவ்வையகத்தில் இருக்க முடியாது. ஆர்னோல்ட் ஸ்வாஸ்னேகருக்கு புகழ்வாங்கிக் கொடுத்த்துடன் உலகறியச்செய்ததும் இந்த திரைப்படம்தான். கதை என்னவென்றால் எதிர்காலத்தில் உலகை இயந்திரங்கள் ஆக்கிரமிக்கின்றன. மனிதனை அவை அழித்தொழிக்கின்றன. அவற்றை எதிர்த்து மனிதர்கள் போராடுகின்றார்கள். இவ்வாறு போராடும் மனிதர்களின் தலைவர் ஜோன் கோனர். ஜோன் கோனரை அழிக்க முடியாத இயந்திரங்கள், ஜோன் கோனர் பிறக்க முன்னரே அவனது தாயாரைக் கொல்லத் திட்டமிட்டு பழைய காலத்துக்கு ஒரு இயந்திரத்தை அனுப்புகின்றனர். அந்த இயந்திரம் தன் தாயாரை கொல்லாமல் இருக்க ஒரு வீரனை ஜோன் கானரும் பழைய காலத்துக்கு (அதாவது எங்கள் நிகழ்காலம்) அனுப்பிவைக்கின்றார். இதில் யார் வென்றார் யார் தோற்றார் என்பதே பாகம் ஒன்று.

பாகம் இரண்டில் ஜோன் கோனர் சிறு பையனாக இருக்கும் போது மீண்டும் அவனை அழிக்க ஒரு இயந்திரத்தை இயந்திரங்கள் அனுப்புகின்றன. அந்த இயந்திரத்திடம் இருந்து தன்னைக் காப்பாற்ற ஜோன் கோனர் தான் ஒரு இயந்திரத்தை மீள் நிரலிட்டு அனுப்புகின்றான். இதில் எந்த இயந்திரம் வென்றது எந்த இயந்திரம் தோற்றது, ஜோன் கோனர் தப்பினாரா வென்றாரா என்பது மிகுதிக் கதை.

2ம் திரைப்படத்துக்கு பின்னர் 3ம் திரைப்படத்துக்கு முன்னர் நடப்பதாகவே இந்தத் தொலைக்காட்டசித் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த உலகை தம் கட்டுப்பாட்டுக்குள் இயந்திரங்கள் எடுக்கும் நாள் (Judgment Day) நெருங்காமல் இருக்க ஜோன் கானரும் இவர் தாயாரும் எடுக்கும் முயற்சிகள் பற்றியதே இந்த தொடர். இங்கும் வழமை போல எதிர்காலத்தில் இருந்து இயந்திர மனிதர்கள் வருகின்றார்கள். ஜோன் கானரைக் கொலைசெய்ய முயற்சிக்கின்றார்கள் ஆயினும் அவர்களிடம் இருந்து காப்பாற்ற கொமோடி எனும் இயந்திர மனுசி வருகின்றார்.

உலகின் எதிர்காலத்தை மாற்ற இவர்கள் போராடுவதுதான் இந்தக் கதை. இப்போது இந்த தொடரும் அமெரிக்காவில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டது. இரண்டாம் பாகம் ஆரம்பித்து அதில் இரண்டு அத்தியாயங்களும் முடிவடைந்துவிட்டது.

பி.கு: திரைப்படம் 4ம் பாகம் 2009 ஜூலையில் வெளிவர உள்ளது.

3. Heroes


இது மனிதனின் கூர்ப்பியலை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட தொலைக்காட்சித்தொடர். மொஹிந்தர் சுரேஷ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளர். இவரின் தந்தை மரபியலில் ஆர்வம் கொண்டு அமெரிக்கா சென்று பல ஆராய்ச்சிகள் செய்கின்றார். இவ்வாறு ஆராய்ச்சி செய்வதன் மூலம் கூர்ப்பின் மூலம் விஷேட திறமைகள் கொண்ட மனிதர்களை இனம் காண்கின்றார். இவர் திடீரென ஒருநாள் கொலை செய்யப்படுகின்றார்.

தந்தையார் கொலையுண்ட காரணத்தை அறிய சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லு சுரேஷ் அங்கு விஷேட திறமைகொண்ட பல மனிதரைக் காண்பதுடன் தன் தந்தையின் கனவுப் பயனத்தைத் தொடர்கின்றார். சுரேஷாக நடிப்பவர் செந்தில் ராமமூர்த்தி எனும் தமிழன். நம்மவர்கள் பெருமை பட வேண்டிய விசயம்தான். இதில் பயங்கர கடி என்னவென்றால், சென்னையும், சென்னைப் பல்கலைக்கழகமும் காட்டப்படும் போது சென்னை ஏதோ ஹிந்தி ஊர் போன்று காட்டுவார்கள். எங்கும் ஹிந்திப் பெயர்பலகைகள், ஹிந்தி பேசும் மக்கள் என பல பல.

இந்த தொடரில் விஷேட தன்மைகள் கொண்ட பலர் இருந்தாலும் என்னை நன்கு கவர்ந்தது பீட்டர் பெட்ராலி, ஹிரோ நக்கமுரா ஆகிய இரு பாத்திரங்களுமே. ஹிரோ நக்கமுரா ஒரு ஜப்பானியப் பாத்திரம் அத்துடன் அவருக்கு நேரத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை உண்டு. அதாவது எதிர்காலம், பழையகாலம் என்று சுற்றி சுற்றி வருவார். இது போல பல விஷேட சக்தியுள்ள பாத்திரங்கள் இந்த தொடரில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதையில் வரும் வில்லன் 2007ம் ஆண்டின் சிறந்த வில்லன் எனும் விருதைப் பெற்றான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எப்படியான வில்லன் என்று. அருமையான நடிப்பு. சைலார் என்ற பெயருடன் வரும் இவன் மற்றவர்களின் விஷேட சக்திகளைத் திருடுவதில் ஆர்வம் கொண்டவன். இவன் மற்றவர்களைக் கொன்று அவர்கள் மூளையை உண்பதன் மூலம் மற்றவர்களின் சக்தியைப் பெறுவான். இவனை எதிர்க்கும் வலிமை பீட்டர் பெட்ராலிக்கும், ஹிரோ நக்கமுராவிற்குமே உண்டு. மற்றவர்கள் இவனை எதிர்த்து நின்றால் ஒரு நிமிடம் தாக்குப்பிடிப்பதே கஷ்டம்.

இந்த மாதம் இந்த தொடர் 3ம் பாகம் ஆரம்பிக்க உள்ளது. டொரன்ட் மென்பொருளை இதற்கா துடைத்து வைத்துள்ளேன் இறக்க வேண்டியதுதான்.

இதைவிட மேலும் பல தொடர்களைப் பார்ப்பேன், ஆனாலும் மனதில் நச்சென்று நிலைத்து நிற்பது ஏனோ இந்த தொடர்கள் மட்டும்தான்.