Category Archives: தமிழ்மணம்

தமிழ் மணமும் கடுப்பேத்தும் செய்தித் தளங்களும்

அதிகமாகத் தமிழ் வாசகர்களை இழுக்க வலைப்பதிவுத் திரட்டிகள் ஒரு சிறந்த வழி என்பதை யாம் எல்லாரும் அறிவோம். திரட்டியில் சேர்த்தபின்னர் மொக்கைப் பதிவுகளுக்குக் கூட 100 ஹிட்சுக்கு அதிகமாகச் சம்பாதிக்கலாம்.

இதை நன்கே புரிந்து வைத்திருக்கும் செய்தி தளங்கள் தமிழ் மணத்தை கேவலமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. செய்தியின் ஒரு வரியைப் போட்டு மீதியை தளத்தில் படிக்கச் சொல்பவர்கள். அதாவது அசின் இன்று பிசினாகிவிட்டார். அவரின் மனேஜர் இது பற்றிக் கூறுகையில்.. என்று வாசிக்கும் போது <<மேலும்>> என்று ஒரு இணைப்பு இருக்கும். அதைக் கிளிக்கி மிகுதிச் செய்தியை அவர்களின் தளத்தில் வாசிக்க வேண்டும்.

2. இரண்டாம் இரகம் ரொம்பக் கேவலம். முன்பு கூறியபடி ஒரு செய்தியிருக்கும். மேலும் இணைப்பைக் கிளிக்கினால் ஒரு தளத்தின் முகப்பிற்கு எடுத்துச் செல்லும். அதாவது அந்த தளத்தின் சரியான செய்திக்கு இணைப்புத் தராமல் தளத்தின் ஹோம் பக்கத்திற்கு எங்களை எடுத்துச் செல்லும். தளத்தின் முகப்புப் பக்கதிற்கான வாகர் வரவை அதிகரிக்க ஒரு கேவலமான முயற்சி

தமிழ் மணத்திற்கு இது பற்றி அறிவித்தேன் ஆனாலும் அவர்களிற்கு இதுகளுக்கு நேரம் இல்லை போலும். இவ்வகையான தளங்களை இனம் கண்டி நீக்கி வாசகர்களின் வாசகப் பயனத்தை இலகுவாக்க தமிழ் மணம் நடவடிக்கை எடுக்க கோருகின்றேன்.

E.g

  1. ராஜ் தாக்ரேவை தாக்கும் மண்ணாங்கட்டி
  2. பார்த்தீபனின் வித்தகன்
  3. நமி நமி நமீதாஆஆஆஆ

சொல்லுறத சொல்லியாச்சு இனி தமிழ் மணமாச்சு தமிழ் செய்தித் தளங்களாச்சு.

தமிழ் மணத்தில் படம் காட்டுவது எப்படி???

தமிழ் மணத்தில் படம் காட்டினால்தான் நல்லா ஹிட்ஸ் எடுக்கலாம் என்று யாரோ ஒரு குருவி முன்னொரு காலத்தில சொல்லிச்சுது. நான் சொல்ல வர்றது அந்தப் படம் இல்லை. அது வேற இது வேற 😉

தமிழ் மணத்தில் உங்கள் பதிவை இணைத்தவுடன் உங்கள் பதிவு முகப்பு பக்கத்தில் தெரியுமல்லவா? அப்போது அதன் அருகே உங்கள் படம் தெரியவில்லையா??? அப்படியானால் எப்படி படம் காட்டுவது என்று கேட்கின்றீர்களா? தொடர்ந்து வாசியுங்கள்.

number

க்ரவட்டார் எனும் தளத்தில் (இப்போது க்ரவட்டாரை வேர்ட்பிரஸ் வாங்கிவிட்டது) உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்து அதற்கு ஒரு சின்னப் படத்தையும் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது தமிழ் மணம் மட்டும் அல்ல க்ரவட்டார் பயன்படுத்தும் பல ஆயிரம் வேர்ட்பிரஸ் தளங்கள் மற்றும் க்ரவட்டார் பயன்படுத்தும் ஏனைய தளங்களிலும் உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தினால் இந்த குட்டிப் படத்தைக் காட்டும்.

க்ரவட்டார் செய்துவிட்டு எனது தளத்தில் மறுமொழி போட்டுப் பாருங்கள் உங்கள் அவதாரம் தெரியும்.

தமிழ்ப் பதிவுலகமே… ஒரு நிமிடம்

உலகில் பல பிரைச்சனைகள் இருக்கின்றன. இவற்றில் பல எமக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத பிரைச்சனைகள். ஆயினும் இல்லாத பிரைச்சனைகளைக் கண்டுபிடித்து, அதை தலைமேல் தூக்கி ஆடி மற்றவர்களையும் வம்புக்கு இழுப்பதே இன்றய தமிழ் வலைப்பதிவுலகம்.

இப்படியாக ஒருவர் பதிவெழுதுவார், அவருக்கு என்னொருவர் பதில் பதிவு போடுவார். தமிழ் மணத்தில் பர பர என்று சூடுபறக்க இந்த நிகழ்வுகள் நடந்தேறும். இப்படியான் பக்கங்கள் பக்கம் நான் மறந்தும் போவதில்லை, ஆயினும் Google Readerஇல் அவ்வப்போது சில பதிவுகள் கண்களில் தட்டுப்படுவதுண்டு. ஏன் தமிழர்களே இந்த நிலமை? வலைப்பதிவது உங்ளுக்கு பொழுது போக்காக இருக்கலாம் ஆனால் இப்படியான பதிவுகளைப் பார்த்தால் தரமற்ற பதிவுகளைப் போடுவதே உங்கள் பொழுது போக்காகத் தோன்றுகின்றதே? பொழுது போக்கே தரமற்றுப் போகலாமா?
பேச்சுச் சுகந்திரம், எழுத்துச் சுகந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற துணிவு அல்லது அசட்டுத் துணிவு இன்று வலைப்பதிவர் மத்தியில்.

என் வலைப்பதிவிற்கு யார் வர முடியும் என்பதையெல்லாம் அசண்டை செய்யாமல் வயது வந்தோர் மட்டமே பார்க்க கூடிய படிமங்களைக் கூட பதிவுகளில் இட்டுவிடுகின்றீர்களே!! ஒரு எச்சரிக்கை வாக்கியம் கூட போட மாட்டீர்களா? இப்படியான ஒரு பதிவைப் பார்த்து நானே போனவாரம் அதிர்ந்து போனேன்.
சாதாரணமாக உங்கள் வலைப்பதிவிற்கு அதிகளவு நேயர்கள் வரவேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு இருப்பது இயல்பே. அதற்காக இப்படியான பிற்போக்குத் தனமான தரம் குறைந்த தனிமனிதத் தாக்குதல் பதிவுகளை இட்டு உங்கள் வலைப்பதிவின் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளலாமா?. ஒரு குறிப்பிட்ட வட்டத்தை தவிர வேறுயாரும் உங்கள் வலைப்பதிவிற்கு காலப் போக்கில் வராமல் விட வாய்ப்புள்ளது.
ஆரம்பகாலத்தில் எத்தனை பதிவுகள் எழுதுகின்றேன் என்பதிலேயே குறியாக இருந்தேன். பின்னர் காலப்போக்கில் உணர்ந்து கொண்டதின் படி ‘எத்தனை பதிவு எழுதுகின்றோம் என்பது முக்கியமில்லை, எத்தனை நபர்களை ஆக்கமுறையான பாதையில் எம் பதிவு மூலம் கவர்ந்திருக்கின்றோம் எனபதே.’

ஒருவர் உங்கள் கருத்துக்கு எதிராக எழுதுகின்றாரா?அவருக்குப் பின்னூட்டமிடுங்கள், எதற்காக அதற்குப் பதில் பதிவு எழுதுகின்றீர்கள். சில வேளைகளில் உங்கள் தரப்பு வாத்த்தை அவர் பதிய மறுப்பதால் எழுதுகின்றேன் என்கிறீர்களா? அப்படியானால் எழுதிவிட்டு அத்துடன் அதை முடித்து விடுங்கள். பதிலுக்குப் பதில், இரத்தத்திற்கு இரத்தம் என்று புறப்பட்டு இவ்வாறான பதில் பதிவுகளே தமிழ் வலைப்பதிவுகளாகிவிடும்.

இவ்வாறாக பின்னூட்டமிட்டு குட்டையைக் குழப்பும் ஒரு கும்பலும் இருக்கின்றது. குறிப்பாக அனனானியாக வந்து கலக்குவார்கள். என்பதிவுகளில் அனானி மறுமொழிகளைப் பதிவதுண்டு ஆனால் அவர்களின் அர்த்தமற்ற கேள்விகளுக்குப் பதில் போடுவதில்லை. அதில் எனக்கு இஷ்டமும் இல்லை. இவர்களுக்குப் பதில் எழுதி பத்தோடு பதினொன்றாகும் எண்ணமும் எனக்கில்லை.

ஒவ்வொரு தடவையும் பதிவெழுதும் போதும் யோசித்துப் பாருங்கள், “

1.நான் எழுதும் இந்தப் பதிவு சமுதாயத்திற்கு நல்ல கருத்தைக் கொண்டு சேர்க்கின்றதா?
2.வாசகர்களை சங்கடப் படுத்தாத பதிவா?
3. தனிமனிதத் தாக்குதல் இல்லையே?
4. வார்த்தைப் பிரயோகங்கள் ஒழுங்காகவா உள்ளது?”

இந்தக் கேள்விகளுக்குச் சாதகமான் பதில் உங்களிடம் இருக்கின்றதானால் நன்று உங்கள் பதிவைப் பதிந்து விடுங்கள். இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடுங்கள்! தயவு செய்து வேண்டாம்.

மற்றவர்கள் என்ன குப்பைப் பதிவு வேண்டுமானாலும் போடட்டும். ஆனால் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள். அப்படியான் பதிவுகளைப் வாசித்து அதற்கு பதில் எழுதப் போய் வீணான ஒரு குழப்பத்தில் மாட்டிக் கொள்ளாதீர்.

அண்மையில் ஒரு தமிழ் வலைப்பதிவருடன் அரட்டை அடிக்கும் போது தன் பதிவுகள் இப்போது தமிழ் மணத்தில் திரட்டப்படுவதில்லை என்று கூறினார். ரொம்பவுமே வருத்தப்பட்டுப் பேசினார். இப்ப கவலைப்பட்டு என்ன பிரயோசனம்? வெள்ளம் தலைக்கு மேலாகப் போய் விட்டதே?

தமிழ் மணம் காரங்க பாவம் எத்தனைப் பதிவுகளை மொத்தமாகக் கண்காணிப்பது? கணிமை வலைப்பதிவில் பரிந்துரைத்த படி தமிழ் மணத்திற்கு பதிவைச் சேர்க்கும் போது, அதன் உள்ளடக்கத்தைப் பற்றியும் எழுத்தாளரின் உள்ளீட்டை வாங்கினால் வகைப்படுத்த வசதியாக இருக்கும். தமிழ் மண முகப்பில் திறந்த உடனேயே இப்படியான தரமற்ற பதிவுகளைக் காணத் தேவலையில்லை.

எழுதுங்கள் அது உங்கள் சுகந்திரம் ஆனால் எதையும் எழுதலாம் என்ற ஆணவத்தில் கண்ட கண்ட குப்பைகளை எழுதி உங்கள் வலைப்பதிவின் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர். இது ஒரு பணிவான வேண்டுகோள்.

நன்றி

அடக் கடவுளே நானுமா???

ஒரு நாள் எனது மின்னஞ்சலுக்கு தமிழ் மணத்தில் இருந்து ஒரு வேண்டுகோள் என்னவோ எதுவோ என்று எடுத்துப் பார்த்த போது என்னை நட்டசத்திரமாக அழைத்திருந்தார்கள். யாருக்குத்தான் நட்சத்திரமாக விருப்பம் இருக்காது. அட சரி நான் நட்சத்திரம் ஆகச் சம்மதம் என்று மறு அஞ்சல் போட்டேன்.

என்னையும் ஒரு நபராக மதித்து நட்சத்திரமாக்கிய தமிழ் மணத்திற்கும் என் வலைப்பதிவையும் ஒரு பதிவாக மதித்து வாசித்த, வாசிக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வலையில் சிதறிக் கிடந்த சில வலைப்பதிவுகளைப் பார்த்து ஆர்வத்தால் உந்தப் பட்டு வலைப்பதிய ஆரம்பித்தவனே இந்த மயூரேசன். இன்று கிட்டத்தட்ட வலைப்பதிவுடன் ஓராண்டு கடந்துவிட்டது. இது வரை சிறுகதை, கவிதை, கட்டுரைகள் என்று பல்வேறு முயற்சிகளில் இறங்கினேன். அவற்றை பொறுமையுடன் வாசித்த உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஆரம்பத்தில் அரசியல் கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதி வந்தேன். ஆயினும் வேறுவிதமான சங்கடங்களை எதிர்நோக்கியதால் இப்போது அரசியல் கட்டுரைகளுக்கு வணக்கம் சொல்லி அனுப்பிவிட்டேன்.

வலைப்திய ஆரம்பித்த போது தமிழ் தட்டச்சு என்பது பெரிய பிரைச்சனையாக எனக்கு இருக்கவில்லை காரணம் ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதி யுனித் தமிழுடன் கை கோர்த்துவிட்டதால் வலைப்பதிவு இனிய பயனமாகவே அமைந்தது. அஞ்சல் முறையில் தட்டச்சு செய்து இன்று பாமினி முறையில் தட்டச்சு செய்கின்றேன். விரைவில் தமிழ் 99 க்கு மாற வேண்டும் என்பது இப்போதைய சிந்தனை.

ஒரு மாதத்திற்கு முன்னர் ஏன் நான் என் டொமைனில் ஒரு வலைப்பதிவை வைத்திருக்கக் கூடாது என்று யோசித்ததன் விழைவாகத்தான் இந்த புதிய டொமைனில் வேர்ட்பிரஸ் நிறுவி பயன்படுத்துகின்றேன். சும்மா சொல்லக் கூடாது வேர்ட்பிரஸ் மென்பொருள் அந்தமாதிரி!!! :). நீங்க பிளாக்கரோடு மாரடிப்பவரானால் வேர்ட்பிரஸ் உங்களுக்கு நல்ல ஒரு மாற்று.

தமிழ் வலைப்பதிவு நன்கு வளர வேண்டும், தமிழில் வேர்ட்பிரஸ் மென்பொருள் விரைவில் கிடைக்கவேண்டும். முட்டி மோதிக்கொள்ளும் தமிழ் வலைப்பதிவர்கள் விரைவில் நல்ல நண்பர்களாக வேண்டும். மொத்தத்தில் தமிழ் வலைப்பதியும் உலகம் ஒரு முற்போக்காக மாற வேண்டும் என்பதே என் விருப்பம்.

இவ்வேளையில் எனக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்த பல வலைப்பதியும் நண்பர்களுக்கும் இங்கே நன்றி சொல்லிக்கொள்கின்றேன். 😉

வலைப்பதிந்து தமிழ் வளர்ப்போம் வாரீர்!!!

அன்புடன்,
மயூரேசன்.