Category Archives: சிறுவர்

ஹரி பொட்டர் அன்ட் த டெத்லி ஹலோவ்ஸ் – விமர்சனம்

ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி……. கடைசியாக ஹரி பொட்டர் புத்தகத் தொடர் முடிவிற்கு வந்துவிட்டது. எதிர்பார்த்தது போலவே புத்தகம் செம ஹிட்டு. உலகம் முழுவது ஏங்கி ஏங்கித் தவமிருந்த ஹரி இரசிகர்களுக்கு (என்னையும் சேர்த்து) நல்ல ஒரு விருந்தாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. கடந்த வாரம் இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தேன். வாசித்து முடித்தவுடன் ரொம்பவே ஃபீலிங்கா இருந்திச்சு. ஹரியையும் அவரோட நண்பர்களையும் ஹொக்வாட்ஸ் பாடசாலையும், தும்புத்தடியில் பறந்து விளையாடும் குயிடிச் கேமையும் இனிக் காண முடியாது என்று நினைக்கின்றபோது நெஞ்செல்லாம் அடைத்து விட்டது.

 

சரி சரி.. என்னுடைய சுய புலம்பலை விட்டுவிட்டு கதையோட்டத்தை கொஞ்சம் அலசிப் பார்ப்போம். வழமையாக பிரைவெட் ரைவில் ஆரம்பிக்கும் கதை இந்த முறை மல்போய் குடும்பத்தில் வீட்டில் ஆரம்பிக்கின்றது. அங்கே குரங்குப் பயல் வொல்டமோட் ஒரு இரகசியக் கூட்டத்தை நடத்துகின்றதுடன், வழமைபோல அவாடா கெடாவ்றா (கொலை செய்யும் மந்திரம் – மந்திர உலகில் மன்னிக்கப்பட முடியாத மூன்று மந்திரங்களுள் ஒன்று) மந்திரத்தை வேறு பாவித்துத் தொலைக்கின்றார்.

 

முன்னய பாகத்தில் முடிவு செய்தபடியே ஹரி மீண்டும் பாடசாலைக்குச் செல்வதில்லை என்று முடிவெடுக்கின்றார். அது போல அந்த ஹேர்மானிப் பொண்ணும் ரொண்ணும் தாங்களும் ஹரி உடன் சேர்ந்து எஞ்சியிருக்கும் ஹொக்கிரஸ்சை (வால்டமோட்டின் உயிர் நிலைகள்) அழிக்க முடிவு செய்கின்றனர். இதனால் இவர்களும் ஹரியின் பாடசாலைக்கு செல்வதில்லை என்று முடிவு செய்கின்றனர்.

 

இதன் பின்னர் ஓடர் ஒஃப் பீனிக்ஸ் ஹரியை அவரது பிரவைட் ரைவ் வீட்டில் இருந்து பரோவிற்கு (ரொண்ணின் வீடு) அழைத்து வருகின்றர். வரும் வழியில் வானத்தில் பறந்தவாறே சண்டைபோட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. ஹரி மயிரிழையில் தப்பினாலும் முக்கியமான ஒரு ஓடர் அங்கத்தவர் இறந்துவிடுகின்றார். யார் எவர் இறந்தார் என்றெல்லாம் சொல்ல முடியாது தேவையானால் புத்தகத்தை வாசித்து ஹரி நட்புறவு மன்றத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

 

பாரோவில் மீண்டும் ஹரி, ரொண், ஹர்மானி, ஹரியின் டயல் ஜின்னி போன்றோர் சந்தித்துக் கொள்கின்றனர். கடந்த பாகத்திலேயே ஹரி ஜின்னியை விட்டுப் பிரிந்துவிட்டாலும் இன்னமும் காதலில் வயப்பட்டு தவிக்கிறார் பாவம், அந்தப் பெட்டை கூடத்தான்.

 

கொஞ்ச நாட்களில் ஹரியின் பிறந்தநாள் வருகின்றது, அதற்கு டொங்ஸ், அவர் கணவன் லூபின் (ஹரியின் முன்னய ஆசிரியர்), ஹக்ரிட் போன்றோர் வருகின்றனர். பிறந்த நாள் நடக்கும் போது மந்திர தந்திர அமைச்சர் வீஸ்லி வீட்டிற்கு வந்து ஹரி, ஹர்மாணி, ரொண் இந்த மூன்று பேருக்கும் டம்பிள்டோர் விட்டுச் சென்ற பொருட்கள் என்று சில பொருட்களைக் கொடுத்துவிடுகின்றார். ஆயினும் இந்தச் சந்திப்பு அவ்வளவு சந்தோஷமாக முடியவில்லை.

 

மறுநாள் பில் (ரொன்னின் சகோதரன் ஒருவர்), ஃபேளோரா இருவருக்கும் திருமணம் நடக்கின்றது. திருமணம் நடக்கும போது கிங்ஸ்லி போட்ட பட்ரோனம் மந்திரம் வந்து ஒரு செய்தியை கலியாண மண்டபத்தில் உதிர்க்கின்றது. அதாவது டெத் ஈட்டர்ஸ் (பிணம் தின்னிகள் என்று சொல்லலாம், அதாவது வொல்டமோட்டின் அடியாட்கள்) மந்திர தந்திர அமைச்சைக் கைப்பற்றிவிட்டதாகவும் அங்கிருந்த மந்திர தந்திர அமைச்சரை டெத் ஈட்டர்ஸ் கொலை செய்துவிட்டதாகவும் செய்தி வருகின்றது. உடனே அங்கிருந்து மற்றவர்கள் தப்பி ஓட ஆரம்பிக்கின்றனர்.

 

இந்தக் கட்டத்தில் இருந்து ஹரி, ஹர்மாணி, ரொண் மூவரும் ஓடுகின்றார்கள், ஓடுகின்றார்கள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடுகின்றார்கள். கடைசியில் பல பல விடயங்களை கண்டுபிடித்து வொல்டமோட்டின் உயிர்நிலைகளை ஒன்றொன்றாகக் கைப்பற்றுகின்றார்கள். மொத்தம் ஏழு உயர் நிலைகள் இருந்தாலும் அதில் எத்தனை கைப்பற்றப்பட்டது, எத்தனை அழிக்கப்பட்டது என்பதெல்லாம் நான் சொல்ல முடியாது.

 

மந்திர தந்திர அமைச்சைக் கைப்பற்றிய வொல்டமோட் அணியினர், மந்திர தந்திர அமைச்சில் மட்டுமல்ல, ஹாக்வாட்ஸ் பாடசாலையிலும் கடும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர். அதன்படி ஸ்னேப் பாடசாலை அதிபர் ஆகின்றார், பழையபடி அம்ரிச் மீண்டும பாடசாலைக்குள் நுழைகின்றார். இதைவிட மட்பிளட் (தூய்மையற்ற இரத்தம் என்று இகழப்படும் மந்தர குடும்பத்தில் பிறக்காமல் மந்தரம் கற்றோர்) மக்கள் மீது கடும் சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. பலர் அஸ்கபான் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகின்றனர்.

 

இதேவேளை டம்பிள்டேர் ஹரி, ரொண், ஹர்மாணிக்கு விட்டுச்சென்ற பொருட்களில் இருந்து அவர்கள் டெத்லி ஹலோவ்ஃஸ் எனம் விடயதானம் பற்றி அறிந்துகொள்கின்றனர். அதாவது ஒரு யாரையும் வெற்றி கொள்ளும் ஆற்றல் மிக்க மந்திக்கோல், ஒரு மறையவைக்கும் துணி (ஹரியிடம் இது ஏற்கனவே உள்ளது), இறந்தவர்களை மீட்டு எடுக்கும் ஒரு கல்லு. இந்த மூண்று பொருட்களும் சேர்ந்து ஒருவரிடம் இருந்தால் அந்த நபரை மரணம் வெல்ல முடியாது. இவற்றில் எத்தனையை ஹரியும் அவர் நண்பர்களும் கண்டு பிடித்தார்கள் என்பதையும் என்னால் சொல்ல முடியாது!!!! 😉

 

டொபி, ஸ்னேப் போன்றவர்கள் இங்கே கதையின் பெரும் பாகத்தில் வராவிட்டாலும் மனதில் ஒட்டிவிடும் பாத்திரங்கள். இங்கே ஸ்னேப்பின் காதல் கதைபற்றியும் காட்டப்படுகின்றது. அதாவது ஸ்னேப் லில்லியுடன் (ஹரியின் தாயார்) காதல் வயப்பட்டிருந்த விடயம் சொல்லப்படுகின்றது. ஆனால் சினோப்பின் காதல் ஒருதலை இராகமாக முடிந்ததுதான் சோகம், இடையில் வரும் ஜேம்ஸ் (ஹரியின் தந்தை) லில்லியை காதலித்துவிடுகின்றார்.

 

ஆறாம் பாகம் போலவே இந்தப் பாகத்திலும் கடைசிக் காட்சிகள் ஹாக்வார்ட்ஸ் பாடசாலையில் நடக்கின்றது. சண்டையில் ஹரியனால் தாபிக்கப்பட்ட டம்பிள்டோர் ஆமி, ஓடர் ஒஃப் பீனிக்ஸ், ஹாக்வார்ட்ஸ் பாடசாலை ஆசிரியர்கள், பல நலன் விரும்பிகள் என்போர் சேர்ந்து டெத் ஈட்டர்சை எதிர்க்கின்றனர். இராட்சத மனிதர்களும் டெத் ஈட்டர்சுடன் இணைந்து பாடசாலையைகத் தாக்குகின்றனர்.

 

சண்டையோ சண்டை அப்படி ஒரு சண்டை. பச்சை நிற ஒளியும், சிவப்பு நிற ஒளியும் எங்கும் பறக்கின்றது. இந்த இறுதி யுத்தம் மிக முக்கியமானது. கதையின் மிக இறுக்கமான கட்டத்தில சில பல முக்கியமான பாத்திரங்கள் இங்கே இறந்துவிடுகின்றனர். மனதைக் கனக்கவைக்கும் நிகழ்வுகள் பல நடந்தேறுகின்றன. மொத்தம் 50 பேர் இந்த யுத்ததில் தன்னுயிரை தியாகம் செய்கின்றனர்.

 

திருமதி.வீஸ்லி அவர்கள் பெலாட்ரிக்சை (ஹரியின் காட் ஃபாதரைக் கொலை செய்த பெண்) மந்திரத்தால் எதிர்கொள்கின்றார். இதன் போது ஒரு வார்த்தையால் பெலாட்ரிக்சைத் திட்டுவார் பாருங்கள், இவரா அது என்று நினைக்க வைக்கும்.

 

இவ்வாறு யுத்தத்தின் முடிவு பிராபசியில் எதிர்வு கூறப்பட்டவாறு நடந்தேறுகின்றது. அதாவது ஹரி அல்லது வொல்டமோட் சாக வேண்டும். யார் இறந்தார்? அல்லது இருவரும் இறந்தனரா என்பதெல்லாம் நீங்கள் வாசித்து அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்.

 

ரெளலிங் முன்பு கூறியவாறு டம்பிள்டோர் சாவில் இருந்து மீண்டுவரவில்லை, அது போல ஸ்னேப்பு நல்லவரா கெட்டவரா என்ற ஆராய்ச்சிக்கும் கடைசியில் விடை கிடைக்கும், வீஸ்லி குடும்பத்தில் யார் இறந்தார் என்பதை வாசித்து அறியுங்கள்.

 

எதிர்வு கூறப்பட்டவாறு கதையின் கடைசி வசனம் ஸ்கார் என்ற சொல்லுடன் உள்ளது. கதையின் கடைசி அத்தியாயம் 19 ஆண்டுகளின் பின்னர் நடக்கும் சில நிகழ்வுகளைக் காட்டுகின்றது. வாசிக்க வாசிக்க மனம் நிறைந்துவிட்டது. ஆனாலும் ஹர்மானியை இவ்வளவு வயதாக்கிக் காட்டியிருக்க வேண்டாம். என் இதயம் சுக்கு நூறாக உடைந்துவிட்டது போங்கள்!!!. எங்கிருந்தாலும் வாழ்க……. 😉

ஹரி வெறியர்களுக்கு மீண்டும் நல்ல ஒரு விருந்து. கடைசி விருந்து என்று நினைக்கும் போதுதான் மனம் கனத்துவிடுகின்றது.

 

I’m gonna miss you Harry!!!!! Smiley

ஹரி பொட்டர் 5 – திரைப்படம்

 

 

ஹரி பொட்டர் புத்தகம்தான் வாசிச்சுமுடிந்த பாடாய் இல்லை (70 வீதம் வாசிச்சாகிவிட்டது) சரி படத்தையாவது பார்த்து தொலைப்போம் என்று நேற்று டிவிடிக் கடைக்குப் போக முடிவெடுத்தேன்.

 

இங்க இருக்கிற தமிழ் பொடியள் ஹரி பெயரைக் கேட்டாலே ஓடிவிடுவாங்கள், இருக்கிற சில சிங்களப் பொடியளும் பெட்டயளும்தான் ஹரி புத்தகம் படம் என்று பைத்தியமா இருக்குங்கள். ஏற்கனவே படம் பார்த்த சில நண்பர்களிடம் கருத்துக் கேட்டபோது… It’s ok.. It’s ok macho! என்றே அவர்களது பதில் வந்தது. என்னானாலும் பார்ப்பது என்று நான் ஏற்கனவே முடிவெடுத்ததால் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

 

இருந்தாலும் மனம் கேட்காமல் ஒரு ஹரி இரசிகையிடம் படம் எப்படி என்று கேட்டபோது.

“Oh… Mayu… Don’t watch it, it’s a total disaster. This is not what we have expected in the movie”

 என்று சொன்னார்.

 

என்னடா இது, இப்படிக் கரைச்சலாகிட்டுதே என்று நான் அரை மனதுடன் டிவிடிக் கடைக்குச் சென்று டிவிடியையும் பெற்றுக்கொண்டேன்.

 

இதற்கு முன்பு வந்த பாகங்கள் படம் பார்த்தபின்பே புத்தகம் வாசித்தேன், ஆனாலும் இந்தப் பாகம் மட்டுமே புத்தகம் வாசித்து விட்டு படம் பார்க்கப் போகின்றேன். கடைசிப் புத்தகத்தை தவிர மற்றயபுத்தகங்களுடன் ஒப்பிட்டால் 5ம் பாகமே பரபரப்புக் கூடிய பாகம். உணர்ச்சிவசப்பட வைக்கும் சம்பவங்களுக்கும் குறைவில்லை.

 

படம் தொடங்கி படபடவென்று சென்றுவிடுகின்றது. எதிர்பார்த்த பல காட்சிகள் நிறைவாக இல்லை. உதாரணத்திற்கு டிமென்டருக்கு ஹரி பெட்ரானம் மந்திரத்தைப் பாவிக்கும் காட்சிகள் ஏதோ சும்மா வந்து போனது போல இருக்கின்றது. புத்தகம் வாசிக்கும் போது நாம் ஏதோ அளவிற்கு மிஞ்சிக் கற்பனை பண்ணிவிட்டோமோ என்று எண்ணத் தோண்றுகின்றது.

 

இதைவிட படத்தில் ஹரி அதிபராக்கிரமசாலி போன்று ஒரு மாயை ஏற்படுத்தப் படுகின்றது. ஆனால் புத்தகத்தில் ஹரியை அவ்வளவு பராக்கிரமசாலியாகக் காட்டவில்லை. ஸ்னேப்புடன் எடுக்கும் ஒக்லமென்சி (மற்றவரின் ஞாபகத்தில் இருப்பவற்றை துளாவிப் பார்ப்பது, அவர் நினைவின் ஆளுமையை தன் வயப்படுத்துவது போன்ற விடயங்கள்) வகுப்பில் ஸ்னேப்பின் நினைவில் இருந்து அந்த கசப்பான நிகழ்வுகளை ஹரி காண்பதாகக் காட்டுப்படுகின்றது. ஆனால் புத்தகத்தில் டம்பிள்டோரின் நினைவுப் பேளை பென்சீவில் இருந்து களவாக ஹரி எடுத்துப் பார்ப்பதாகவே காட்டப்படுகின்றது. புத்தகம் வாசிக்கும் போது விழுந்து விழுந்து சிரிக்க வைத்த காட்சியது. ஆனால் படத்தில் சும்மா ஏதோ சாட்டுக்கு வந்து போகின்றது.

 

படத்திற்காக சில மாற்றங்களைக் கதையில் செய்துள்ளார்கள். டொலாரஸ் அம்ரிஜ் நச்சென்று நடித்திருக்கின்றார். அவர் பாத்திரம் நான் கற்பனை செய்தவாறு அவ்வாறே பொருந்தியுள்ளது. ஹக்ரிட் சும்மா வந்து தலைகாட்டிவிட்டுச் செல்கின்றார். வீஸ்லி சகோதரர்களின் கூத்துக்குக் குறைவில்லை.

 

கதையில் எதிர்பார்த்த பல விடயங்களைக் காணக்கிடைக்கவில்லை. உதாரணத்திற்கு ரீட்டாவுடனான ஹரியின் நேர்முகம், குபிலர் பத்திரிகை போன்றவை.

 

ஹரியிற்கும் சோ விற்கும் இடையிலான அந்தக் குளப்பமான காதலை இங்கே காட்டவில்லை. சும்மா அவர்கள் முத்தமிடுவதை மட்டும் காட்டி அலுப்படிக்கின்றார்கள். கதையில் சோவுடன் டேடிங் போக விரும்பி எவ்வளவு கஷ்டப்படுகின்றார் என்பதும். அதற்கு ஹர்மானியுடன் பெண்கள் பற்றிய சைக்கலாஜி படிப்பதும் என்று கலாதியாக இருக்கும்.

 

படம் பார்த்து முடித்த பின் முன்பு குறிப்பிட்ட அந்த ஹரி இரசிகைக்கு ஒரு குறுஞ்செய்தி எழுதி அனுப்பினேன்.


”As you said, it is indeed a total disaster”

 

படம் லயிக்கவில்லை. புள்ளியிடச் சொன்னால் 10 க்கு வெறும் 4 புள்ளிகளே நான் இந்தப் படத்திற்குக் கொடுப்பேன். புத்தகம் வாசித்துப் படம் பார்த்தால் இப்படியாக ஏற்படுமோ என்னவோ தெரியவில்லை!!! 🙁

 

70 : ஹரி பொட்டர் அன் த ஹாவ் பிளட் பிரின்ஸ் – விமர்சனம்


மயூரேசனின் பதிவா??? ஐயோ ஹரியைப் பற்றி ஏதாவது எழுதித் தொலைத்திருக்கப் போகின்றான் என்று நீங்கள் முணு முணுப்பது எனக்குக் கேட்கின்றது. ஆயினும் என்ன செய்ய வாசித்து முடித் புத்தகத்திற்கு ஒரு விமர்சனம் போட வேண்டாமா?

The Harry Potter and the Half Blood Prince ஹரி பொட்டர் தொடரில் கடைசியாக வந்ததும், ஒப்பீட்டளவில் கொஞ்சம் அலட்டல் நிறைந்த புத்தகமும் கூட. புத்தகத்தின் முதல் அரைப் பகுதி வெறுமனே சம்பவங்களைக் கோர்த்துக் கோர்த்து நகர்த்தப் படுகின்றது. வழமை போல கடைசி 200 பக்கங்களில் பொறி பறக்கின்றது. பக்கங்களைப் புரட்டும் போது கையும் புத்தகத்தின் பக்கமும் உரசிப் பொறி பறக்கும்மளவிற்கு வேகமாக பக்கங்களைத் திருப்பித் திருப்பிப் படித்தேன்.

கதையின் ஆரம்பம் பிருத்தானிய பிரதமரைக் காட்டுவதுடன் தொடங்குகின்றது. அதாவது மகிள்ஸ்சின் (மந்திரம் தெரியாத சாதாரண மக்கள்) பிரதமருக்கு மந்திர தந்திர அமைச்சு எவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டது. அவருடன் தொடர்பு கொள்ளும் முறை பற்றிக் கூறுகின்றனர். நாட்டில் பல பிரதேசங்களில் இயற்கை அழிவுகள் நடைபெறுகின்றன. இதை இயற்கை அழிவில்லை டெத் ஈட்டர்ஸ் (பிணத் தின்னிகள் என்று சொல்லலாம், வால்டமோட்டின் படையணி) நடத்திய முடித்த நாசகார வேலை என்று சொல்கின்றனர். விரைவில் அனைத்தும் தீர்க்க முயற்சிப்பதாகவும் மந்திர தந்திர அமைச்சு தெரிவிக்கின்றது. இதே வேளை பழைய மந்திர தந்திர அமைச்சர் நீக்கப்பட்டு புதிய அமைச்சர் பதவி ஏற்கின்றார்.

வழமையாக வித்தியாசமான முறையில் டட்லி வீட்டில் இருந்து வெளியேறும் ஹரியை இம்முறை டம்பிள்டோர் நேரடியாக வந்து அழைத்துச் செல்கின்றார். அத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும் வரை டட்லி வீட்டில் அவனுக்கு இடம் வழங்க வேண்டும் என்று மிரட்டாத குறையாகச் சொல்லி விட்டுச் செல்கின்றார். மந்திர உலகில் 17 வயதானதும் வயது வந்தவராகக் கணிக்கப்படுகின்றனர். ஆகவே அடுத்த வருடத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும். எனவே இந்த முறையும் பாடசாலை முடிந்ததும் டம்பிள்டோரின் வேண்டுதலின் படி மீண்டும் டட்லி வீட்டிற்கு செல்ல வேண்டிய தேவை ஹரியிற்கு இருக்கின்றது.

ஹரியை அழைத்துச் செல்லும் டம்பிள்டோர் அவனை பரோவிற்கு (வீஸ்லி குடும்பத்தின் வீடு) அழைத்துச் செல்ல முன்பு வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கின்றார். ஹாக்வாட்சில் இப்போது ஒரு ஆசிரியர் தேவைப்படுவது நீங்கள் அறிந்ததே. அதாவது தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பித்த உம்பிரிச் இப்போது பாடசாலையில் இல்லாததால் புதிய ஆசிரியரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அதனால் டம்பிள்டோர் புதிய ஆசிரியரைத் தேடி ஹரியுடன் செல்கின்றார். அந்தப் புதிய ஆசிரியர் பாடசாலைக்குத் திரும்ப ஹரியே முழுமுதற் காரணமாக அமைகின்றான்.

பின்பு வீஸ்லி குடும்பத்தின் வீடு செல்லும் ஹரி அங்கு புதிதாக வந்து சேர்ந்திருக்கும் Fலோர் டெலகோர் (Tri Wizard championship – ரை விசார்ட் சம்பியன்சிப்பில் வந்த பெண்) பில்லை காதலிப்பதாகவும் விரைவில் மணம் முடிக்க இருப்பதாகவும் அறிகின்றார். இதே வேளை fலோர் இல் அவ்வளவாக நாட்டம் இல்லாத திருமதி வீஸ்லி டாங்ஸ்சை தன் பையன் பில்லுடன் சேர்த்துவைக்க விரும்புகின்றார். எது எதுவாயினும் அனைவரும் விரும்புவது நடப்பதில்லையே!! இதே வேளை பிரட்டும், ஜோர்ஜ்ஜூம் டயகன் அலியி
ல் ஒரு கடை போட்டு நல்ல வருமானம் ஈட்டுகின்றார்கள். இம்முறை கதையில் இவர்களின் பங்கு மிகக் குறைவு. இவர்களின் குறும்புகளைப் பாடசாலை மிஸ் பண்ணுகின்றது என்றே சொல்ல வேண்டும்.

குறிப்பு : நீங்கள் Harry Potter and the Order of Phoenix திரைப்படம் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்காதீர்கள். அந்தக் கதையின் சில முடிவுகளை இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.

டாங்ஸ் வேறு ஒருவர் மேல் காதல் கொண்டிருப்பதை ஹரி தெரிந்துகொள்கின்றான். அது சிரியஸ் பிளக்காக இருக்குமோ என்று ஹரி சந்தேகப் படுகின்றான். ஆயினும் கதையின் இறுதியிலேயே அது யார் என்று தெரியவருகின்றது.

சிரியஸ் பிளாக்கின் (ஹரியின் காட் fபாதர்) மரணம் ஹரியின் மனதில் தொடர்ந்தும் துன்ப அலைகளைத் தோற்றுவித்தவாறே இருக்கின்றது. இதற்கு மத்தியில் ஆச்சரியத்திற்கு ஏணி வைத்தாற் போல புதிய ஆசிரியரான ஸ்லொக்கன் மந்திரக் கசாயம் காய்ச்சும் பாடத்திற்கு அமர்த்தப்படுகின்றார். அப்போ தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பிக்கப் போவது யார்??? ஸ்னேப் அந்தப் பதவியைப் பெற்றுள்ளார் என்பதை அறிந்ததும் ஹரியின் உள்ளம் கொதிக்கின்றது.

மந்திரக் கசாயம் காய்ச்சும் வகுப்பில் ஹரியிற்கு புதிய புத்தகம் ஒன்று இல்லாததால், பழைய புத்தகம் ஒன்றை ஆசரியர் ஸ்லோகனிடம் வாங்கி படிக்கின்றான். அந்தப் புத்தகம் தன்னை ஹாஃப் பிளட் பிரின்ஸ் (The Half Blood Prince) என அடையாளப்படுத்திக் கொண்டவரின் புத்தகமாகும். அந்த ஹாவ் பிளட் பிரின்சின் உதவியுடன் ஹரி பல்வேறு கசாயங்களை மிக இலகுவாகக் காய்ச்சி விடுகின்றான். வழமை பேல ஹர்மானிக்கு அந்தப் புத்தகத்தின் மேல் கடும் வெறுப்பு. குறுக்கு வழியில் இவ்வாறு செய்வது ஆபத்து என்றும், அந்தப் புத்தகத்தை எவ்வாறு நம்புவது என்றும் ஹர்மானி அடிக்கடி ஹரியை நச்சரித்தாலும் ஹரி மசியவில்லை. கதையில் கடைசி நிமிடங்களிலேயே யார் அந்த ஹாஃப் பிளட் பரின்ஸ் என்பது தெரியவருகின்றது.
இதே வேளை ஸ்னேப் பற்றி ஒரு தெளிவின்மை கதைகளில் தொடர்ந்து வருகின்றது. அவர் வால்டமோட் பக்கமா இல்லை டம்பிள்டோர் பக்கமா என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. ஆயினும் இந்தக் கதை தொடக்கத்தில் அந்தப் பிரச்சனை தெளிவாக்கப்படுகின்றது. ஸ்னேப் எப்படிப்பட்ட நபர் என்பதை நீங்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் (அல்லது 2008 வரை பொறுத்திருங்கள் திரைப்படம் வரும்வரை).

மால்ஃபோய் இந்தக் கதையில் முழு டெத் ஈட்டராக வடிவம் கொள்கின்றான். மல்ஃபோயின் மேல் சந்தேகம் கொள்ளும் ஹரி அவனைத் தொடர்ந்து கவனித்தாலும் அவனை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கின்றது. ரூம் ஆப் ரிக்குயார்மென்ட் (Room of requirement) இல் ஏதோ கள்ள வேலை செய்யும் மால்ஃபோயை உள்சென்று ஹரியால் மடக்க முடியாமல் இருக்கின்றது. இந்த அறையையே முன்பு ஹரி டம்பிள்டோர் ஆமி என்ற குழுவைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தினார்.

கதையின் முக்கியமான விடையம் டம்பிள்டோருடனான ஹரியின் வகுப்புகள். டம்பிள்டோர் தான் அறிந்த, அதாவது தனது வால்டமோட்டுடனான சந்திப்பு, வால்டமோட்டின் வாழ்க்கையில் நடந்த சில நினைவுகள் என்பவற்றை பென்சீவின் (நினைவுகளைச் சேமித்து வைக்க உதவும் பேளை) உதவியுடன் காட்டுகின்றார். இதன் மூலம் அவர் ஹரியை இறுதி யுத்தத்திற்குத் தயார் படுத்துகின்றார்.

இந்தப் பாடங்களின் மூலம் வால்டமேர்ட் தனது உயிரை ஏழு இடங்களில் வெவ்வேறு பொருட்களில் மறைத்து வைத்துள்ளதாக நினைக்கின்றனர். அதில் ஒன்று ஏற்கனவே ஹரியினால் அழிக்கப்பட் டயரியாகும். அதாவது அந்த டயரியே சேம்பர் ஒவ் சீக்ரட்டைத் திற

69 : ஹரி பொட்டர் கடைசிப் புத்தகம்

ஹரி பொட்டர் தொடரில் கடைசியும் ஏழாவதுமான ஹரி பொட்டர் அன்ட் டெத்லி ஹலோவ்ஸ் வரும் ஜூலை மாதத்தில் வெளி வர உள்ளமை அனைவரும் அறிந்ததே. இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை இணைத்துள்ளேன் பாருங்கள்.

இந்தப் புத்தகத்தில் ஹரி கொலை செய்யப்படுவார் என்று பலர் பேசிக்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் எழுத்தாளர் ரெளலிங் தான் இந்தக் ஹரி பொட்டர் தொடரை இதற்கு மேல் தொடர விருப்பம் இல்லை என்று சொல்லியுள்ளார். அத்துடன் இக் கதையை எதிர்காலத்தில் வேறு யாரும் தொடராமல் இருக்க ஹரியின் பாத்திரத்தைக் கொலை செய்வது அவசியம் ஆகின்றது.

ரெளலிங் மேலும் கூறுகையில் இந்தக் கதையின் கடைசிச் சொல்லு Scar என்று முடியும் என்பதாகும். அதாவது ஹரியின் நெற்றியிலே இருக்கும் வடுவைக் குறிப்பிடுவதாக இருக்குமோ என்று பலர் எண்ணுகின்றனர். எது எதுவாயினும் என்னையும் சேர்த்து உலகெங்குமுள்ள ஹரி இரசிகர்கள் ஹரி இறப்பதை விரும்ப மாட்டார்கள்.

இது இப்படி இருக்க கதையின் வில்லனான வால்டமோட்டின் உயிருடன் ஹரியின் உயர் கலப்பதாகக் கதை முடியும் என்று இன்னுமொரு பக்கம் சில விசர் சனங்கள் கதைத்துத் திரிகின்றது!!!!

நீங்களும் ஹரியிற்காக இறைவனை வேண்டுங்கள்.!!!!!!

60 : ஜூலை மாதத்தில் கடைசி ஹரிபோட்டர் புத்தகம்

“Harry Potter and the Deathly Hallows,” என்ற கடைசிப் புத்தகத்துடன் ரெளவ்லிங்கின் பிரபலமான ஹரிபோட்டர் கதை முடிவிற்கு வருகின்றது. இந்த கடைசிக் கதைப்புத்தகம் ஜூலை 21 ல் வெளிவரும் என எழுத்தாளர் ரெளலிங் தெரிவத்தார்.

இத்தகவலை ரெளலிங் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் வெளியீட்டாளரான புளூம்பரி நிறுவனம் கருத்துத் தெரிவிக்கைளில் இவர்கள் சிறுவருக்கான பதிப்பு, வயது வந்தவருக்கான பதிப்பு மற்றும் ஒலிபுத்தகம் என்பவற்றை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வெளியீட்டாளர் கருத்துத் தெரிவிக்கையில் இந்தப் புத்தம் $34.99 விலைக்குக் கிடைக்கும் என்று கூறினார். டிலுக்ஸ் பதிப்பு 65 அமெரிக்க டாலருக்கும்.. ஹார்ட் பக் லைப்ரரிப் பதிப்பு 39.99 அமெரிக்க டாலருக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.

முதலாவது பாகம் வெளியிட்டு இன்றுடன் 10 வருடங்கள் முடிவடைவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது 325 மில்லியன் வரை பொட்டர் புத்தகங்கள் விற்றுத் தீர்த்துள்ளன. இது 64 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது (சிங்களம் உட்பட).

கடைசியாக வெளிவந்த புத்தகமான “Harry Potter and the Half-Blood Princes,” என்ன புத்தகம் பிருத்தானியாவில் மட்டும் 2 009 574 பிரதிகள் விற்றுத் தீர்த்துள்ளன.

புத்தகம் வெளிவரும் விடையம் லண்டன் பங்குச் சந்தைக்கு அறிவிக்கப்பட்டுள்னது என்றால் பாருங்கள் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு இது வளர்ந்துள்ளது.

மேலும் தகவல்களுக்குப் எழுத்தாளரின் தளத்தைப் பார்க்க….