Category Archives: கூகிள்

YouTube ஐயும் நீக்கிய அப்பிள்

iOS6 இன் மென்பொருள் வல்லுனருக்கான சிறப்பு முன்னோட்ட பதிப்புகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றது. நீங்கள் ஒரு அப்பிள் மென்பொருள் வல்லுனராக இருந்தால் நீங்களும் இந்தப் பதிப்புக்களைப் பெற்று இருப்பீர்கள்.

இவ்வாறு அண்மையில் வெளிவந்து iOS6 பீட்டா பதிப்பில் யூடியூப் (YouTube) செயலி நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே போன்று அப்பிள் கூகிள் மப்ஸ் செயலியை நீக்கி அப்பிள் மப்ஸ் செயலியை நிறுவியமையைக் குறிப்பிட்டு இருந்தேன். இப்போது யூடியூப் செயலியும் அப்பிளின் டெஸ்க் டொப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

தீராமல் தொடரும் அப்பிள் கூகிள் பிரைச்சனையினால் அப்பிள் கூகிளின் பால் சார்ந்து இருக்கும் தன்மையை மெல்ல மெல்ல அகற்றி தனித்து இயக்கும் தன்மையை நோக்கிச் செல்கின்றது. எல்லாம் அன்ரொயிட் செய்த மாயம் அப்பா.

கூகிளின் புதிய படைப்புகள்

மைக்ரோசாப்ட் அப்பிளைத் தொடர்ந்து இந்த வருடம் கூகிளினது 5ம் கூகிள் ஐ/ஓ (Google I/O) நடைபெறத் தொடங்கயுள்ளது. நேற்றைய பிரதான உரையின் போது கூகிளின் புதிய படைப்புகள் அறிமுகப் படுத்தப்பட்டது.

கூகிள் ஐஓ இலச்சனை

வழமைபோல இம்முறையும் அன்ரொயிட்டின் சாதனைகளை கூறியே கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வருடம் நடந்த கருத்தரங்கில் சுமார் 100 மில்லியன் அன்ரொயிட் கருவிகள் பாவனையில் உள்ளதாக அறிவித்தது கூகிள். இம்முறை இந்த எண்ணிக்கை 400 மில்லியனாக அதிகரித்து விட்டதாகவும் அறியத்தருகின்றது. அத்துடன் ஒரு நாளைக்கு 1 மில்லியன் அன்ரொயிட் கருவிகள் உயிரூட்டப்படுவதாகவும் அறிவித்தது கூகிள். இந்தியா பிரேசில் போன்ற நாடுகளில் இந்த வளர்ச்சி வீதம் 500% மாக இருப்பதாகவும் இந்தக் கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது.

ஜெலி பீன் அன்ரொயிட் 4.1

இந்தக் கருத்தரங்கில் அன்ரொயிட்டின் புதிய இயங்குதளமான ஜெலி பீன் (jelly bean) அறிமுகம் செய்யப்பட்டது. அன்ரொயிட்டின் முன்னைய இயங்குதளமான ஐஸ்கிரீம் சான்விச்சின் மேல் சில மாற்றங்களை செய்து வழு வழுப்பாக இயங்கக்கூடி இந்த ஜெலி பீன் இயங்கு தளத்தை அமைத்ததாக கூகிள் அறிவித்தது. இந்த மாற்றங்களை “புரஜக்ட் பட்டர் (Project Butter)” என்று அறிவிக்கப்படுகின்றது.

அப்பிளினால் ஐபோன் 4எஸ் இல் பரபரப்பாக பேச வைக்கப்பட்ட சிறிக்குப் போட்டியாக கூகிளின் வொய்ஸ் அக்சன் களம் இறக்கப்பட்டுள்ளது இந்த புதிய இயங்கு தளத்தில். இணைய இணைப்பு இல்லாமலேயே ஒலி மூலம் கட்டளைகளை வழங்கவும், தட்டச்சிடவும் முடியும். இதில் முக்கியமான இந்திய பயனர்களைப் பரவசப்படுத்தக் கூடிய செய்தி என்னவெனில் ஹிந்தி மொழியில் ஒலி மூலம் தட்டச்சிடும் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளமையாகும். மேலும் பல மொழிகள் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் போன்ற மொழிகளும் விரைவில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

மேலும் கன்னடா, மலையாளம் போன்ற இந்திய மொழிகளுக்கான ஆதரவும் இந்த ஜெலி பீனில் வழங்கப்பட்டுள்ளது.

நெக்சஸ் தொடு பலகை

அடுத்து கூகிள் நெக்சஸ் 7 (Nexus 7) எனும் டாப்லட் பீசி அல்லது பலகைக் கணனி என்று அழைக்கப்படும் கருவியை வெளியிட்டு வைத்தது. இது அமசொன் சில காலங்களுக்கு முன்னர் வெளியிட்ட கின்டில் பயர் (Kindle Fire) என்ற பலகை கணனிக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. திரைப்படங்கள், இசை, புத்தகங்கள் போன்றவற்றை இந்த கருவியில் போகுமிடமெங்கும் எடுத்துச் சென்று பயனுறலாம்.

கவர்ச்சியான நெக்சஸ் கியூ இசைக் கருவி

இதைவிட் நெக்சஸ் கியூ (Nexus Q) எனும் இசை கருவியையும் கூகிள் வெளியிட்டு வைத்தது. இதன் மூலம் கூகிளின் முகிலத்தில்(Cloud) இருக்கும் இசைக் கோர்வைகளை நீங்கள் செல்லும் இடத்தில் எல்லாம் சிரீம் செய்து கேட்டுக் கொள்ளலாம். இந்ததக் கருவி முற்று முழுதாக அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் சீனாவில் செய்யப்பட்ட பொருட்கள் போல குறைந்த விலையில் கிடைக்காது. மாறாக $300 பெறுமதியில் சந்தையில் கிடைக்கும்.

கூகிள் கிளாஸ் அணிந்த அணங்கு

இறுதியாக மென்பொருள் கலைஞர் கருத்தரங்கை ஆட்டுவித்த பொருள்தான் கூகிள் மூக்குக்கண்ணாடி. கூகிளினால் இது புரஜக்ட் கிளாஸ் (Proejct Glass) என்று பெயரிடப்பட்டுள்ளது. விமானத்தில் பறந்த வந்த வான் குதிப்பர்கள் (Sky Divers) இந்தக் கண்ணாடி அணிந்த வாறு விமானத்தில் இருந்து குதித்து அதை நேரடியாக படமாக கூகிள் திரையில் காட்டினார்கள். இதைவிட நேரடியாகப் படம் எடுத்தல் போன்ற செயற்பாடுகளை இதன் மூலம் செய்யக்கூடியதாக உள்ளது.

மேலே உள்ள காணொளி மூலம் எவவாறு இதைச் செய்கின்றார்கள் என்று பார்க்கலாம். ஆயினும் இந்தக் கண்ணாடி எப்போது சந்தையில் கிடைக்கும் என்பது பற்றி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

வழமை போல கூகிளின் மென்பெருள் வல்லுனர் கருத்தரங்கு அட்டகாசமாக ஆரம்பித்துள்ளது. இனி வரும் நாட்களில் இது சம்பந்தமாக மேலும் செய்திகள் வெளியாகும்.

iOS6 இல் இருந்து நீக்கப்பட்ட Google Maps

பலராலும் போற்றப்படும் இரண்டு கைதொலைபேசி இயங்கு தளத்தின் உரிமையாளர்கள் கூகிள் மற்றும் அப்பிளாகும். அன்ரொயிட் இயங்குதளம் வெளியிடப்பட முன்னர் நண்பர்களாக இருந்த அப்பிளும் கூகிளும் இன்று ஒருத்தருடன் ஒருத்தர் முட்டி மோதும் நிகழ்வு நடந்தேறி வருகின்றது.

ஓயாத யுத்தம்

அப்பிளின் நெருங்கிய நண்பன் இடத்தில் இருந்த கூகிள் மெல்ல மெல்ல விலக அந்த இடத்தில் இப்போது பேஸ்புக் மெல்ல மெல்ல அடியெடுத்து நுழைவதைக் காணலாம்.

முதலாவது அப்பிள் ஐபோன் தொலைபேசி வெளியிடும் போது அப்பிள் கூகிள் நிலமை சுமூகமாக இருந்தது. இதன் காரணமாக அப்பிள் கூகிளின் பல்வெறு சேவைகளைப் பயன்படுத்தியது.

ஆயினும் கூகிளின் அன்ரொயிட் இயங்குதள வெளியாடு முன்னாள் அப்பிள் நிறைவேற்று அதிகாரி ஸரீவி ஜொப்ஸ் இதயத்தில் இடியாக இறங்கியது. இதனால் முறுகல் கூடிச்செல்ல செல்ல கூகிள் சேவைகளை தமது இயங்கு தளத்தில் இருந்து அப்பிள் ஓரம்கட்டத் தொடங்கியது. இந்த வரிசையில் அப்பிளினால் அவர்களது iOS 6 இல் ஒரம்கட்டப்பட்ட சேவை கூகிள் மப்ஸ் ஆகும்.

iOS6 இல் இருந்து அப்பிள் தன்னுடைய மப்ஸ் சேவையை வழங்க உள்ளது. இந்த மப்ஸ் செயலியை அண்மையில் நடைபெற்ற “Worldwide Developers Conference” இல் அறிமுகப்படுத்தியது.

இதில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவெனில் முப்பரிமான வடிவில் நகரத்தின் கட்டங்களை விமானத்தில் பறக்கும் போது எப்படி இருக்குமோ அது போல பார்க்கமுடிவது.

இதற்குப் போட்டியாக அன்ரொயிட்டும் கடந்தவாரம் முப்பரிமான கூகிள் மப்சைக் காட்டியிருந்தமையையும் குறிப்பிட வெண்டும்.

தொழில்நுட்பத்தின் எதிர்காலம் கைத்தொலைபேசிகளை நோக்கி நகர்கின்றவேளையில் இரண்டு நிறுவனங்களும் முதல் நிலையைக் கைப்பற்ற முட்டி மோதுகின்றன. இந்த மோதலில் மப்ஸ் செயலி ஒரு முக்கிய பங்கு வகிக்கப்போகின்றது.

எதிர்காலத்தில் iOS6 பயனர்களுக்கு அப்பிள் மப்ஸ் மற்றும் கூகிள் மப்ஸ் இடையில் தெரிவுசெய்யும் அனுமதி கிடைத்தாலும் கூட பெரும்பாலான அப்பிள் இரசிகர்கள் அப்பிளின் மப்சை மட்டுமே பாவிக்கப்போகின்றார்கள் என்பதை கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம்.

முடியாமல் தொடரப்போகும் கூகிள் அப்பிளின் யுத்தத்தில் யார் வெல்லப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அன்ரொயிடும் தமிழ் மொழியும்

விளையாடு மங்காத்தா!

அப்பிள் நிறுவனம் ஐபோன் மூலம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கூகிள் அன்ரொயிட் மென்பொருளை வெளியிட்டது. உடனே கடுப்பாகிப் போனார் ஸ்டீவி ஜொப்ஸ். கூகிள் தமது பிரதான உற்பத்திப் பொருளைக் குறி வைப்பதாகக் கூறி கூச்சலிட்டார். கூகிள் நடத்துனர் சபையிலிருந்தும் வெளியேறினார். கூகிள் அப்பிள் மைக்ரோசாப்டிற்கு எதிராக செயற்பட்ட காலம் போய் கூகிளும் அப்பிளும் மோதத் தொடங்கியது இந்த நிகழ்வின் பின்னர்தான்.

மற்றைய பல கைபேசி இயங்கு தளங்கள் போல அன்ரொயிட்டிற்கு இது வரை இயல்பிருப்பான தமிழ் ஆதரவு இல்லை. ஆனால் பிந்தைய ஐ.ஓஸ் இயங்கு தளங்களில் தமிழ் ஆதரவு இருக்கின்றமை குறிப்பிடத் தக்கது. நீண்டகாலமாக இந்திய மொழி ஆர்வலர்கள் பல்வேறு வழு அறிக்கைகள் கூச்சல்கள் இட்டாலும் கூகிள் அசண்டை பண்ணவே இல்லை. வழு அறிக்கையில் உள்ள பின்னூட்டங்கள் நிறைந்து கொண்டே செல்கின்றன ஆனால் கூகிள் இது பற்றி அவ்வளவாக அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை.

அந்திரொயிட் இயங்கு தளம் ஒரு திறந்த மூல மென்பொருள். வேறு நிறுவனங்கள் இந்த மென் பொருளை எடுத்து தமது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. குறிப்பாக சாம்சுங், எச்.டி.சி, சொனி எரிக்சன், எல்.ஜி, மோட்டராலா போன்ற நிறுவனங்கள் இந்த அன்ரொயிட் மென்பொருளை எடுத்து தமது கைத் தொலைபேசிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து கைபேசிகளில் நிறுவி விற்கின்றார்கள். தற்போது மோட்டரோலா நிறுவனத்தை கூகிள் தாமே வாங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு கைத் தொலைபேசி நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அன்ரொயின் மென்பொருள் மீது கூகிள் எத்தனை நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதுவரை அன்ரொயிட்டில் தமிழ் ஆதரவை ஏற்படுத்த இரண்டு படிமுறை கொண்ட ஒரு செயலைச் செய்ய வேண்டியிருக்கின்றது.

மேலே குறிப்பிட்ட செயற்பாடு இலகுவாக கடைநிலைப் பயனர்களால் செய்ய முடிவதில்லை. தொலைபேசியில் இந்த தமிழ் எழுத்துருவை நிறுவ முயன்று தமது தொலைபேசிகளின் மென்பொருளை நாசமாக்கியவர்களும் உண்டு.
சரி அனைத்தையும் தாண்டி சிறப்பாக தமிழ் எழுத்துருவை நிறுவி விட்டாலும் தமிழ் எழுத்துக்கள் சிதைந்து காணப்படும். சில பல வருடங்களிற்கு முன்னால் பயர்பொக்சில் சிதைந்த எழுத்துக்களைப் பார்த்த ஞாபகம் இருக்கின்றதா?? அதே நிலைதான் இங்கேயும். எழுத்துரு இருந்தாலும் கூகிள் அன்ரொயிட் இயங்கு தளத்திற்கு தமிழ் எழுத்துக்களை ரென்டரிங் செய்யத் தெரியாது.
கூகிளின் அன்ரொயிட் தொலைபேசியில் ஹார்வ்பஸ் எனும் ரென்டரிங் இயந்திரம் பாவிக்கப்படுகின்றது. புதிய பதிப்புகளில் இந்திய மொழிகள் பயன்பட்டாலும் அன்ரொயிடில் ஏன் இன்னமும் இது செயற்படவில்லை என்று தெரியவில்லை.
வாசிக்கவே இத்தனை திண்டாட்டம் என்றால் தமிழில் தட்டச்சிட எத்தனை திண்டாட்டமாக இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். அதுதான் இல்லை. தமிழாவின் தமிழ் விசை செயலி மூலம் தமிழில் தட்டச்சிடலாம். தட்டச்சிடும் எழுத்துக்கள் பெட்டி பெட்டியாகத் தெரிந்தாலும் ஒரு முன்னோட்டப் பெட்டியில் தமிழ் எழுத்துக்களை அழகாகக் காட்டுகின்றார்கள்.
தமிழ் விசை

அண்மையில் நான் Samsung Galaxy Ace எனும் சாம்சுங் இரக அன்ரொயிட் தொலைபேசியை வாங்கிக் கொண்டேன். இந்த தொலைபேசியில் இயல்பிருப்பாக அன்ரொயிட் பதிப்பு 2.2 நிறுவப்பட்டுள்ளது. வழமை போல தமிழ் ஆதரவு இல்லை. தமிழ் தளங்களை வாசிக்க ஒபேரா மினியைப் பயன்படுத்தினேன். செட் உலாவியும் சில காரணங்களால் சரிவரச் செயற்படவில்லை. என்ன கொடுமை சரவணா என்று இருந்த போது அன்ரொயிட் 2.3.4 க்கான பதிப்பு தரமுயர்த்தல் மென்பொருளை சாம்சுங் வெளியிட்டது. எனது தொலைபேசிக்கான இந்த மென்பொருளை நிறுவி உலாவியில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்த்தால் ஒரே ஆச்சர்யம்.

ஆமாம் 2.3.4 பதிப்பை நிறுவிய பின்னர் இயல்பிருப்பு தமிழ் ஆதரவு இருந்தது. இனி தமிழ் மொழியில் செயலிகளை நேரடியாக தயாரிக்கலாம். TSCII, பாமினி எழுத்துருக்களைப் பயன்படுத்தி சுத்தி மூக்கத் தொட வேண்டிய தேவை இல்லை.

அன்ரொயிட்டில் தமிழ் ஆதரவு

 

Samsung Galaxy வகைத் தொலைபேசிகளில் இந்திய மொழி ஆதரவு இப்போது கிடைப்பதாகத் தெரிகின்றது. தமிழ் எழுத்துரு இருப்பதுடன் தமிழை சிதைக்காமல் அழகாகக் காட்டுகின்றது.

நிற்க, இந்த இயல்பிருப்பு தமிழ் ஆதரவு சில (கவனிக்கவும்: சில மட்டுமே) சாம்சுங், சொனி எரிக்சன், எல்.ஜி தொலைபேசிகளிலேயே அவதானிக்கப்பட்டுள்ளது. முன்பே குறிப்பிட்டபடி அன்ரொயிட் திறந்த மூலம் மென்பொருள் என்பதால், அன்ரொயிட் மூலத்தை எடுத்து இந்த நிறுவனங்கள் இந்திய மொழிகளிற்கான ஆதரவை  வழங்கி உள்ளன.

சாம்சுங்கால் செய்ய முடியுமென்றால் கூகிளால் நிச்சயமாக ஒரு இன்ஜினியரை அமர்த்தி ஒரு மாதத்திற்குள் இந்த வேலையைச் செய்து முடிக்க முடியும். இந்திய மொழிகள் மீதான குறிப்பாக பிராந்திய மொழிகள் மீதான வழமையான அசண்டையீனத்தையே இது காட்டுகின்றது.

இது தொடர்பான ரவியின் ஆங்கிலப்பதிவையும் எனது ஆங்கிலப் பதிவையும் காண்க.

கூகிள் தளத்திற்கு பிண்ணனி படம் அமைத்தல்

கூகிள்.காம் தளத்தின் பக்கத்திற்கு பிண்ணனிப் படம் போட பல்வேறு நிரல்களும் தளங்களும் இருகின்றன. இப்போது கூகிளே இந்த வசதியை உத்தியோக பூர்வமாக தானே அறிவித்துள்ளது.

படிமுறை மிக இலகுவானது.

  1. http://www.google.com/addphoto என்ற தொடுப்பிற்குச் செல்க
  2. ஒரு படிமத்தைப் பதிவேற்றுக அல்லது இருக்கும் படிமங்களில் ஒன்றைத் தெரிவுசெய்க.

அனைத்தும் சரி. இந்த புதிய பிண்ணனி போடும் வசதி உங்களுக்குப் பிடித்துள்ளது என்று நம்புகின்றேன்.

Google Buzz இல் நண்பர்களை வதைப்பதெப்படி!

1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள்

2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள்

3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!)

4. அப்புறம் என்ன, கலாயுங்க

எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள்.  எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்! 😉

Google Buzz பாவிக்கிறீங்களோ???

Google Buzz பற்றி நேற்று மற்றும் இன்று இணையத்தில் பர பரப்பாகப் பேசப் படுகின்றது. அனைவரும் தமக்கும் Google Buzz உயிர்ப்பூட்டப்பட்டுவிட்டது என்று பிதற்றுவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைய முயலும் போது கூகிள் Buzz ஐ உயிர்ப்பூட்டுமாறு ஒரு செய்தி உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.

கூகிள் வேவ் பற்றி பயங்கரமாக கூகிள் பிரச்சாரம் செய்தது ஆனால் அது அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. இம்முறை சிறிய குறுகிய அறிவித்தலுடன் கூகிள் இந்த Buzz சேவையை ஜிமெயிலினுள் அனுமதித்துள்ளது.

கூகிள் Buzz என்றால் என்ன?

கூகிள் Buzz எனப் படுவது Twitter, FaceBook, Friendfeed போன்றவற்றை பிரதி செய்து (அதாங்க, காப்பி அடிச்சு) ஜிமெயில், கூகிள் ரீடர் போன்ற கூகிளின் சேவைகளுக்குள் உள்ளமைக்கப்பட்ட ஒரு சேவையே ஆகும்.

உங்களுக்கு ட்விட்டர் பரிச்சயம் என்றால் கூகிள் பஸ் பற்றிப் புரிவதற்கு அவ்வளவு நேரம் ஆகாது. நீங்கள் இணையத்தில் பார்க்கும் விடையம் ஒன்றையோ அல்லது உங்கள் மனதில் தோன்றும் ஒரு கருத்தையோ நீங்கள் வெளியிட அதில் மற்றவர்கள் பதில் போட்டு தங்கள் கருத்தையும் தெரிவிக்க கூடிய ஒரு மேடையை அமைத்துத் தரும் தன்மையே இதன் அடிப்படைச் செயற்பாடு.

இதைவிட Flickr, Twitter போன்ற தளங்களில் நீங்கள் செய்யும் மாற்றங்களையும் நிகழ் நேரத்தில் இங்கே காட்டமுடியும்.

மேலதிக தகவலிற்கு இந்த யூடியூப் காணொளியைக் காணுங்கள்

எனக்கு இன்னும் Buzz இல்லையே??

நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் புகுபதிகை செய்யும் போது Google Buzz ஐ உயிர்ப்பிக்குமாறு ஒரு வேண்டுகோள் வரவில்லையாயின் உங்கள் கணக்கிற்கு இன்னமும் கூகிள் பஸ் வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.

வரும் நாட்களில் அனைவருக்கும் இந்த வசதி வழங்கப்படும் என்று எண்ணலாம்.

மயூரேசனை Google Buzz இல் பின் தொடர

கூகிள் – சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா??

இதற்கு முன்னர் கூகிள் மற்றும் சீனா இடையில் ஏற்பட்ட கசப்பு பற்றி இரண்டு பதிவுகள் இட்டேன். இப்போது புதிய தகவல்கள் வந்துள்ளதால் மூன்றாவது பதிவும் தயார். கூகிள் மற்றும் சீன அரசுக்கிடையிலான தகராறு பற்றித் தெரியாதவர்கள் பின்வரும் இரண்டு பதிவுகளையும் வாசித்துவிட்டு இந்தப் பதிவை வாசிக்கவும்.

  1. தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்
  2. கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது

அண்மையில் கூகிளின் மின்னஞ்சல் சேவைக் கணக்கில் கைவைக்க முயன்ற சீன ஹக்கர்சால் பிரச்சனை ஆரம்பமாகியது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கூகிள் கடந்த டிசம்பர் மாதம் சீன மனித உரிமைக்காகப் போராடும் தனி நபர்களின் மின்னஞ்சல் கணக்குகளை சீன Hackers கைப்பற்ற முயன்றதாகத் தெரிவித்துள்ளது. இதன் விழைவாக தமது செயற்பாட்டை சீனாவில் நிறுத்த வேண்டி ஏற்பட்டாலும் அதற்கும் எதிர்பார்ப்பதாக கூகிள் அறிவித்தது.

பின்னர் டிசம்பர் 15ம் திகதி இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் தன் பங்கிற்கு சீனாவைச் சாடினார். இந்திய அரசின் கணனிகளை சீன ஹக்கர்கள் PDF கோப்புகள் மூலம் Trojan முறையில் ஹக் செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார்.

இரண்டு குற்றச்சாட்டுகளையும் சீன அரசு வழமைபோல மறுத்திருந்தது. ஆனாலும் பின்னர் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக அறியக் கிடைக்கின்றது. கூகிள் ஒரு அமெரிக்க கம்பனி என்பதாலும் அமெரிக்க அரசுடன் இணைந்து கூகிள் நடவடிக்கை எடுத்த காரணத்தாலும் அமெரிக்கா இவ் விடையம் சம்பந்தமாக சீனாவுடன் மிக கடுமையான தொனியில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகின்றது.

இது சம்பந்தமாக ஏற்கனவே ஹில்லாரி கிளிண்டன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

“It is also the case that we take this matter very seriously and, as Secretary of State Hillary Clinton said last week

இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்தாலும் இதற்கு சரியான பதிலைத் தரக்கூடிய பொறுப்பு சீனாவிடமே உள்ளது என்று அமெரிக்கா விடாப்பிடியாக உள்ளது. தொடர்ந்து அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்து வருகின்றது. இதன் விபரங்கள் வரும் வாரங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

கூகிளின் Nexus One தொலைபேசி

இதேவேளை தனது புதிய இரண்டு வகை கையடக்க தொலைபேசியை சீனாவில் வெளியிட்டு வைப்பதை கூகிள் தள்ளிவைத்துள்ளது. கூகிளின் எதிர்காலம் சீனாவில் என்ன வென்று தெரியாத இந்த நிலையில் பெரும் செலவில் வெளியிட்டுவைப்பதை கூகிள் விரும்பாமல் போனமை அதிசயம் இல்லை. சீனாவில் 700 மில்லியன் கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்கள் இருப்பதையும், சீனா இந்த துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றது என்பது இங்கே குறிப்பிடப் படவேண்டிய விடையம்.

இந்த பிரைச்சனையில் கூகிளுக்கு யாகூ ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளை மைக்ரோசாப்ட் இவ்வாறு கூகிள் வெளியேறுவதை அவ்வளவு நல்ல விடையமாகப் பார்க்கவில்லை என்றும் தொழில் நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் கம்பனிகளின் உட்கட்டுமானங்களை கைப்பற்ற ஹக்கர்ஸ் முயல்வது வழமைதான் என்று கூறியுள்ளது.

இதே வேளை சீனாவின் பிரபலமான தேடல் இயந்திர சேவை வழங்குனர் Baidu அமெரிக்க டொமைன் பதிவு செய்யும் கம்பனி ( Register.com Inc) மீது வழக்கைத் தொடுத்துள்ளது. சனவரி 12ம் திகதி இராணிய இராணுவம் என்ற பெயரில் இவர்களின் தளத்திற்கு வரும் பயனர்களை சில ஹக்கர்ஸ் திசை திருப்பி வேறு தளத்திற்கு அனுப்பினர். இவ்வாறு அனுப்ப Register.com தளத்தின் கவனையீனமே காரணம் என்று பாய்டு அறிவித்துள்ளது. Baidu விடம் சீனாவின் தேடல் பொறி சந்தையின் 60 வீதம் உள்ளது. சுமார் 30 வீதத்தையே கூகிள் தன் வசம் வைத்துள்ளது. ஆனாலும் கூகிள் வேகமாக ஆண்டுதோறும் வளர்ந்து வந்துள்ளமையையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

எது என்ன ஆனாலும் கூகிளின் பங்குகள் நல்ல நிலையிலேயே பங்குச் சந்தையில் உள்ளனவாம். தொடர்ந்தும் விலை சரியாமல் உள்ளமையுடன் 1.6% பங்கு விலைகள் கூடியுள்ளனவாம்.

உலகுடன் சேர்ந்து ஓட தயங்கும் சீனாவிற்கு எதிர் காலம் அவ்வளவாக சிறப்பாக அமையும் என்று தெரியவில்லை. தகவல்களைப் பெறுவது ஒரு மனிதனில் தனிமனித உரிமை. இதைக்கூட ஏற்க மறுக்கும் சீனாவை என்ன வென்பது?? அவதார் திரைப்படம் மூலம் மக்கள் தூண்டப்படலாம் என்று அந்த திரைப்படங்களையே தூக்கிய மகா மக்களாட்சி நடக்கிறது சீனாவில்.

மக்களை ஏமாற்றி மக்களாட்சி நடத்துவதாக பீற்றும் எந்த அரசும் நிலைத்து நீடித்ததாக சரித்திரம் இல்லை. சீனப் பேரரசு இதை உணரப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது

தனது ஜிமெயில் வழங்கிகளை சீனாவில் இருந்து கொந்தளர்கள் (Hackers) கைப்பற்ற முயன்றதாகவும் அதன் மூலம் இனி தங்கள் அலுவலகம் சீனாவில் மூடபட்டாலும் மூடப்படாலாம் என்றெல்லாம் கூகிள் பேசியதைப் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தேன். இப்போது கூகுளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. டிசம்பர் 15ம் திகதி இந்திய அரசின் வழங்கிகளையும் கைப்பற்ற சீனாவில் இருந்து ஹக்கர்ஸ் முயன்றதான நாராயணன் தெரிவித்துள்ளார்.

இது போல பலதடவை இந்தியாவின் மீது சைபர் யுத்தம் நடத்தப்பட்டுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார். இதைவிட தற்போது பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இணைந்து இப்படியான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எதிர்க்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஒரு மின்னஞ்சலில் PDF கோப்பாக இணைக்கப்பட்டிருந்த ட்ரோஜன் வகை வைரசு ஒன்றைக் கண்டுபிடித்ததாகவும் அந்த PDF கோப்பு மூலம் தமது கணனிகளைக் கைப்பற்று முயன்றதாகவும் நாராயணன் தெரிவித்தார்.

இப்படியாக இந்திய கணனிகளைக் கைப்பற்ற வேண்டிய தேவை தமக்கு இல்லை என்றும், சீனாவில் ஹக் செய்வது சட்டப்படி குற்றம் என்றும் சீனா பதிலுக்கு அறிவித்துள்ளது. சீனாவே ஹக்கிக்கிற்கு அடிக்கடி இலக்காகுவதாகவும் சீனா தெரிவுத்துள்ளது.

1962ல் நடந்த இந்தோ சீனா யுத்தத்தில் இந்திய மொக்கையடி வாங்கியபின்னர் அண்மைய காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பகை மெல்ல மெல்ல மூண்டுவருகின்றது. அண்மையில் தனது இரண்டு இராணுவ டிவிசன்களை இந்தியா நிறுத்தியுள்ளதுடன் ஜெட்விமானங்களையும் கிழக்கு எல்லைக்கு இந்தியா நகர்த்தியுள்ளது.

ஒரு யுத்தம் மூண்டால் இந்தியாவிற்கு உதவி செய்யக்கூடிய அமெரிக்க தலமையிலான மேற்குலகமும் பொருளாதார நெருக்கடியில் உழல்கின்றவேளையில் இந்தியாவை வாட்ட சீனாவிற்கு இது மிகப்பெரிய பொருத்தமான தருணம் என்பதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பதிவு எழுதிய பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து அடுத்த பதிவும் எழுதியாகிவிட்டது. கூகிள் – சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா?? என்ற பதிவையும் வாசித்துப் பயன்பெறுங்கள்.

தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்

பேச்சுரிமை, தகவல் உரிமை போன்ற விடயங்களைக் கேட்டால் சீனாவிற்கு ஆகாது. எதையும் முளையிலேயே கிள்ளி எறியும் பழக்கம் உடையது சீனா. உலகம் எங்கும் சீனாவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சீனா எது பற்றியும் கவலைப் படுவதில்லை.

கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வு சீனா மற்றும் கூகிள் இடையில் கடும் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மனித உரிமைக்கு மீறலுக்கு எதிராகச் செயற்படும் நபர்களின் ஜிமெயில் கணக்குகளைக் கூறிவைத்து சீனாவில் இருந்து இணையத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் மிகவும் சீற்றம் அடைந்துள்ள கூகிள் நிறுவனம் தன் சீன அலுவலகத்தை மூட வேண்டி வந்தாலும் அதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

2006இல் சீனாவில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த கூகிள் 10 மில்லியன் பயனர்களில் இருந்து 340 மில்லியன் பயனர்களை தன்பால் மிக குறுகிய காலத்தில் ஈர்த்துக்கொண்டது. சீன அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சில தகவல்களை தேடல் முடிவுகளில் காட்டாமல் கூகிள் கவனித்துக் கொண்டது.

ஆயினும் டிசம்பர் நடுப் பகுதியில் நடந்த நிகழ்வுகள் நிலைமையைத் தலைகீழாக மாற்றியுள்ளன. இது பற்றி கூகிள் கூறுகையில்

we have evidence to suggest that a primary goal of the attackers was accessing the Gmail accounts of Chinese human rights activists. Based on our investigation to date we believe their attack did not achieve that objective. Only two Gmail accounts appear to have been accessed, and that activity was limited to account information (such as the date the account was created) and subject line, rather than the content of emails themselves.

கூகிளின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சீன ஹக்கர்களால் ஜிமெயில் கணக்குகளை அணுக முடியாமல் போய்விட்டாலும் இதே மாதிரியான தாக்குதல் ஏனைய நிறுவனங்கள் மீதும் நடத்தப்பட்டதாக கூகிள் கூறுகின்றது.

this attack was not just on Google. As part of our investigation we have discovered that at least twenty other large companies from a wide range of businesses–including the Internet, finance, technology, media and chemical sectors–have been similarly targeted.

பெரும் தர்மசங்கடத்தை தோற்றுவித்த இந்த நிகழ்வில் சீன அரசின் நேரடிப் பங்கு இருக்கின்றதா என்று கேட்டதற்கு பதில் ஏதும் சொல்ல கூகிள் மறுத்துவிட்டது.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் பழக்கம் உடைய அமெரிக்காவும் தன் பாட்டிற்கு இந்த நிகழ்வு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துவதுடன் இது பற்றி சீன அரசிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார் ஹல்லாரி கிளிண்டன்.

இந்த நிகழ்வுகளின் பின்னர் கூகிள் இனிமேல் சீனா கூகிள் நிறுவனம் தணிக்கைகள் எவற்றிலும் ஈடுபடாது எனவும் இது சம்பந்தமாக சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. பேச்சு வார்தை முடிவில் தமது அலுவலகத்தையும் மூடிக்கொண்டு புறபட நேரிட்டாலும் அதற்கும் தயாராக இருப்பதான தோறணையில் கூகிள் கருத்து வெளியிட்டுள்ளது.

“If, as seems likely, the government refuses to allow it to operate an uncensored service, then Google will pull out.

தகவல் சுதந்திரம் எனபது ஒவ்வொரு மனிதனிற்கும் இருக்கவேண்டியது. யாரும் சொல்பவற்றை மட்டுமே நாங்கள் நம்பவேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். சீன அரசும் ஒரு மக்கள் அரசு இப்படியான செயல்களில் இறங்கி மக்கள் எதிர்ப்பைச் சம்பாதிக்குமா?

இவ்விடயம் சம்பந்தமாக எழுதிய புதிய தகவல்களைக் கொண்ட பின்வரும் பதிவுகளையும் காணவும்.

  1. சீனாவை கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீண்டியது
  2. தொடரும் சீனா – கூகிள் பனி யுத்தம்

P.S: சீன அரசு பேசாமல் Cowboy மதுவை நாடியிருந்தால் பிஷ்ஷிங் முறையில் ஹக் செய்து கொடுத்திருப்பார். 😉