Category Archives: காமிக்ஸ்

Wild West ஸ்பெஷல் இலங்கையிலும்

பல இழுத்தடிப்புகள் கும்மிகள் வெட்டுக் குத்துகளுக்கு தாமதங்களின் பின்னர் வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் நேற்று இலங்கை மண்ணைத் தொட்டது. புத்தகத்தின் வெளி அட்டயே அத்தனை அட்டகாசமாக இருக்க பக்கத்தில் இருந்த சைவ உணவகத்தினுள் புகுந்து வெளியுறையை அகற்றி தட தடவென சித்திரங்களை மேலோட்டமாகப் பார்க்கத் தொடங்கினேன். அட அட அட! காத்திருந்தது வீண் போகவில்லை அப்படி ஒரு அருமையான சித்திரங்கள். வண்ணத்திலே ஜொலித்தது.

மொத்தம் 3 கதைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன

  1. மரண நகரம் மிசௌரி – கப்டன் டைகர்
  2. எமனில் திரை மேற்கு – கிராபிக் நாவல்
  3. ஒரு பனிவேட்டை – ஸ்டீவ்

மரண நகரம் மிசௌரி கப்டன் டைகர் ஏமாற்றாவிட்டாலும், கதை சாதா ரகமே. கபடன் டைகரின் முற்காலக் கதைசொல்லும் புத்தகத் தொடரில் இது 4ம் கதையாம். தொடர் என்றாலும் முன்னைய கதை வாசிக்காமல் இந்தக் கதை வாசித்தால் ஒன்றும் புரியாது என்று கவலைகொள்ள வேண்டாம். அப்படி எதுவும் இல்லை.

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் அமெரிக்காவின் வடக்கும் தெற்கும் உள்கோஷ்டி மோதலில் உக்கிரம் அடையும் வேளையில் டைகர் ஒரு படையணியை மிசௌரி கன்சாஸ் எல்லையில் உள்ள ஒரு இராணுவக் கோட்டைக்கு அழைத்து வருகின்றார். அங்கிருந்து ஒரு புரட்சி வேடம் இட்ட குள்ள நரியைத் தேடி மிசௌரி விரைகின்றார் டைகர். கதை அப்படியே அதைச் சுற்றி நகர்கின்றது. இறுதியில் என்ன ஆனது என்று நீங்களே வாசித்து அறிந்து கொண்டிருப்பீர்கள் அல்லது அறிந்து கொள்ளலாம் 😉 கதை சுமார் இரகம் என்றாலும் வண்ணத்தில் சித்திரங்கள் இலயிக்க வைக்கின்றன.

எமனின் திசை மேற்கு எனும் கிராபிக் நாவல் அப்படியே அசர வைத்துவிட்டது. கதையின் போக்கும் சித்திரங்களும் தூள் தூள். மங்கலான வெளிச்சத்தில் நடக்கும் காட்சிகள் எல்லாம் அப்படியே தூக்கி சாப்பிட்டுவிடுகின்றன. ஒற்றைக் கையுடன் அலையும் இந்த நபர் ஹீரோவாக முடியுமா என நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன் வாசித்து முடிந்த பின்னர்தான் அது எத்தனை முட்டாள் தனமான கேள்வி என்று புரிந்து கொண்டது. சில வேளைகளில் நீண்ட காலத்திற்கு ஓடக் கூடிய வரைகதை தொடர்களுக்கான ஹீரோ என்றால் அப்படி அங்க லட்சணத்துடன் அல்லது குறைந்த பட்சம் டைகர் மாதிரி அழுக்காக இருந்தாலும் வீரத்துடன் இருக்க வேண்டும். ஆனால் இது போன்ற கிராபிக் நாவல்களில் மாஸ் ஹீரோவிற்கான ஈகோ இல்லை தேவையும் இல்லை. அதுவேதான் இந்த கிராபிக் நாவலின் வெற்றி. கதை முடிந்து விட்டது என எண்ணும் போது எபிலொக் ஒன்று கூட உள்ளது.

மூன்றாவதாக உள்ள ஒரு பனி வேட்டை எனும் கதை பற்றி ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை. முன்னைய கதை இரண்டும் மெகா பட்ஜட் ரஜனி திரைப்படம் போலவும் மூன்றாம் கதை கறுப்புவெள்ளையில் வெற்றிடம் நிரப்ப வந்த ஒரு சிறு பட்ஜட் திரைப்படம் போலவும் இருந்தது.

தமிழ் காமிக்ஸ் பிரியர்கள் அனைவரும் கட்டாயம் வாசித்து கையகப் படுத்த வேண்டிய புத்தகம் இது.

இவற்றையும் வாசியுங்கள்

படங்கள் ஆசிரியர் விஜயனின் வலைப்பதிவில் அனுமதியின்றி சுடப்பட்டவை.

லக்கி லூக் துரத்தும் டால்ட்டன் சகோதரர்கள்

லக்கிலூக் கதைவாசிக்கும் பலரிற்கும் டால்ட்டன் சகோதரர்களைப் பற்றித் தெரியாமல் இருக்கச் சந்தர்ப்பம் இல்லை. ஆரோகணம் போல உயரத்தில் கூடிச்செல்லும் சகோதரர்கள் அவர்கள். சகோதரர்களில் மூத்தவர் மிகச் சிறியவர்தான் யோ டால்ட்டன். கடுகு சிறிது காரம் பெரிது என்பது போல அதி புத்திசாலியும், சிறை உடைப்புகளில் பல பூட்டுக்களை போட்டுத் தகர்ப்பவரும் இவர்தான். ஆனால் இவரிற்கு எதிர்மாறானவர் கடைக்குட்டியும் உயரமான தோற்றமும் உடைய அவ்ரல். கதையில் மிகப் பெரிய காமடிப் பீசாக இவர் வந்து பண்ணும் அட்டகாசங்கள் ஜோர். இவர்கள் இருவரையும் விட மற்றும் இரு சகோதரர்கள்.

உங்களுக்குத் தெரியுமா டால்ட்டன் சகோதரர்கள் வரலாற்றில் உண்மையாகவே இருந்தார்கள் என்பது?. வங்கி மற்றும் தொடரூந்து கொள்ளைகளில் சிறப்புற்று இருந்திருக்கின்றார்கள். காமிக்ஸ் கதைகளில் வரும் டால்ட்டன் சகோதரர்களுக்கு இவர்களே உத்வேகம் கொடுத்துள்ளனர்.

இவர்களின் தந்தை பெயர் லூயிஸ் டால்ட்டன் மற்றும் தாயார் பெயர் அடலீன் ஆகும். இவர்களுக்கு மொத்தம் 15 பிள்ளைகள் பிறந்திருக்கின்றன அதில் 2 குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துவிட்டன.

பிராங் டால்ட்டன் என்பவர் இவர்களில் மூத்த சகோதரன் ஆவார். சட்டதிட்டங்களைப் போற்றி அரச உத்தியோகத்தில் டெபுடி யு.ஸ் மார்சலாக வேலை செய்த இவர் ஒரு குதிரைத் திருட்டு சம்பந்தமான வழக்கை விசாரிக்கச்சென்ற இடத்தில் குதிரை களவாணிப் பயலால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆயினும் பின்னர் அந்த குதிரைக் களவானிப்பயலை சட்டம் இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது என்பது வேறு கதை.

கிராட், பாப் மற்றும் எம்மெட் ஆகிய மூன்று டால்ட்டன் சகோதரர்களும் மறைந்த அவர்கள் அண்ணன் வழியில் சட்டத்தின் மைந்தர்களாகப் பணிபுரிந்தனர் ஆயினும் சம்பள முரண்பாடு காரணமாக தமது தொழிலைவிட்டு நகர்ந்ததுடன் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளையும் செய்யத்தொடங்கினர். குதிரை கடத்தில், சட்ட விரோத மது கடத்தல் மற்றும் கொலை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள்மீது வந்து சேர்ந்தது.

1891ற்கும் 1892ற்கும் இடையில் சுமார் 4 தொடரூந்து வண்டிகளை டால்டன் சகோதரர்கள் கொள்ளையடித்தனர். இதைவிட கைது செய்த பொலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஆங்கிலப் பட பாணியில் ஓடும் இரயிலில் இருந்து குதித்து ஆற்றுநீரில் நீந்து சாகசத்தை எல்லாம் கிராட் டால்ட்டன் செய்திருக்கின்றார்.

தொடரூந்து வண்டிக் கொள்ளையில் கோலோச்சிக்கொண்டு இருந்த டால்ட்டன் குழு மெல்ல வங்கிக் கொள்ளைபக்கம் திரும்பியது. அக்டோபர் 5, 1982இல் கன்சாசில் உள்ள இரண்டு வங்கிகளை பட்டப்பகலில் கொள்ளையடிக்கு புறப்பட்டனர். இவர்களை அடையாளம் கண்டுகொண்ட ஊர் மக்கள் தாமும் துப்பாக்கிளை ஏந்தியவாறு இவர்களை சூழத்தொடங்கினர். கொள்ளையடித்து வெளியேறிய டால்ட்டன் சகோதரர்களுக்கும் மற்றவர்களுக்கும் துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில் எமெட் டால்ட்டன் தவிர அனைத்து டால்ட்டன் சகோதரர்களும் கொலைசெய்யப்பட்டனர். எமெட் டால்ட்டன் 23 துப்பாக்கி ரவைகள் துளைத்தும் உயிருடன் தப்பிப் பிழைத்தார் என்பதும் ஒரு கதை.

இதுதான் டால்ட்டன் சகோதரர்களின் கதை. அண்மையில் முந்திய லயன் பதிப்புகளில் ஒன்றான ஜாலி ஸ்பெஷல் ஐ கோகுலம் வாசகர் வட்டம் ஆதரவினால் கொழும்பில் வாங்கிக்கொண்டேன். அதனுடன் இலவச இணைப்பாக தாயில்லாமல் டால்ட்டன் இல்லை என்ற புத்தகமும் கிடைத்தது.

அதில் டால்ட்டன் சகோதரர்களுடன் டால்ட்டனின் தாயாரும் வந்து சேர்கின்றார். மா டால்ட்ன் என்ற இந்தப் பாத்திரமும் அமெரிக்க வரலாற்றில் புகழ்பெற்ற மா பாக்கர் என்பவரால் ஊக்கம் பெற்று படைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் எங்கள் லயனோ வேறுவிதமாகக் கதைசொல்கின்றது. கீழே உள்ள ஸ்கானில் லயன் மா டால்ட்டன் பற்றி என்ன சொல்கின்றது என்று பாருங்கள்.

குறிப்பு : கீழே உள்ள படங்களில் எழுத்துக்கள் தெளிவில்லாவிட்டால் படங்கள் மேல் சொடுங்கி படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கலாம்.

டால்ட்டன் சகோதரர்களைப் பிடித்திருந்தால் இந்தக்கதையும் உங்களுக்குப் பிடித்திருக்கும். லக்கிலூக்கின் லூட்டிகளும் ஜாலி ஜம்பரின் குட்டிக்கரணங்களுக்கும் இந்தக்கதையில் குறைவில்லை. வாசித்து பயனடையுங்கள் அனைவரும்.

வாழ்க தமிழ் வழர்க லயன் காமிக்ஸ் 😉

என் பெயர் லார்க்கோ வின்ஞ்

நேற்றைய தினம் வழமைபோல கதிரேசன் கோவில் சென்று திரும்பும் வழியில் பக்கத்தில் இருந்த பழக்கடை வாசலில் இங்கே லயன், முத்து காமிக்ஸ் கிடைக்கும் என்ற பள பள அட்டை தொங்கிக்கொண்டு இருந்தது. இதற்கு முன்னர் செல்லும் நேரம் எல்லாம் புத்தகம் முடிந்துவிட்டது இன்னும் இந்தியாவில் இருந்து வரவில்லை போன்ற சலிப்பான பதில்களே கிடைக்கும். நானும் வெறுத்துப் போய் வழமை போல ஆங்கில கொமிக்ஸ் புத்தகங்களை விஜித யாபா புத்தகசாலையில் வாங்கி படித்துக் கொள்ளுவேன்.

தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள்

நேற்று இந்த புத்தகம் உள்ளது அறிவிப்பைக் கண்டதும் சந்தோசமாகச் சென்று இரண்டு புத்தகங்களை கையகப்படுத்திக் கொண்டேன்.

  1. சாத்தானின் தூதன் டாக்டர் 7
  2. என் பெயர் லார்க்கோமுன்னையது லயன் காமிக்ஸ் பின்னையது முத்து காமிக்ஸ். சாத்தானின் தூதன் புத்தகம் பற்றி முதலில் பார்த்துவிடலாம் வழமையான சாணித் தாள் போன்ற அமைப்புடைய பக்கங்களில் அச்சிடப்பட்ட சுமார் இரகக் கதை. இரண்டாவதாக வந்துள்ள கன்னித் தீவில் ஒரு காரிகை என்ற கதை புதையலைப் பூதம் காக்கும் கதையொன்று. ஒப்பீட்டளவில் டாக்டர் 7 கதையை விட இந்தக் கதை அருமையாக இருந்தது என்பது அடியேனின் கருத்து. இலங்கை ரூபா 65 க்கு இந்தப்புத்தகம் இலங்கையில் கிடைக்கின்றது.

இரண்டாவது புத்தகம் என் பெயர் லார்க்கோ என்பது. Surprise Special என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம் Surprise indeed. புத்தகத்தின் தரம், அச்சின் தரம் என்பவை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வைத்தன. சிறப்பான அச்சு, பக்கத்துடன் வந்துள்ள புத்தகத்தின் கதை மொக்கையாக இருக்கக்கூடாதே என்று வேண்டிக்கொண்டே வாசிக்கத் தொடங்கியதும் மனதுக்கு நிம்மதி. லார்க்கோ புதிதாக தமிழிற்கு வந்திருக்கின்றார் நிச்சயமாக ஒரு பெரிய வலம் வருவார் என்று தெரிகின்றது.

சித்திரங்களின் நேர்த்தியும் கதையில் அடிக்கடி நிகழும் அதிரடிகளும் லார்க்கோவை தமிழில் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன். இதே தரத்தில் தொடர்ந்தும் பல புத்தகங்கள் வர வேண்டும் என்பது அடியேனின் விருப்பம். இந்தப் புத்தகத்தில் 1986 இல் வெளியான திகில் காமிக்ஸ் மறுபதிப்பு இரண்டாம் பாகமாக இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறு சிறு அனுமாஷ்ய கதைகள் இணைக்கப்பட்டுள்ளது. திகில் காமிக்ஸ் வாசிக்கும் போது ஏதோ 20 வயது குறைந்திட்ட மாதிரி ஒரு உணர்வு. இலங்கை ரூபா 435 க்கு இந்தப் புத்தகம் கிடைக்கின்றது.

இலங்கையில் இருக்கும் நண்பர்கள் கதிரேசன் கோவிலிற்குப் பக்கத்தில் இருக்கும் பழக்கடையில், வெள்ளவத்தை HSBC வங்கியிலிருந்து வெள்ளவத்தை சந்தி நோக்கி நடக்கும் போது கடற்கரைப்பக்கம் அமைந்திருக்கும் DOT MUSIC மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பஸ் தரிப்பிடத்திற்கு பின்னால் இருக்கும் சிறிய பத்திரிகைக் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்.

கொழும்பில் இல்லாத கொமிக்ஸ் இரசிகர்கள் கோகுலம் வாசகர் வட்டத்தை 077-5143907, kogulamrc@gmail என்ன முகவரியினூடு தொடர்புகொண்டு புத்தகங்களை தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் காமிக்ஸ் புத்தகங்கள் குதிரைக் கொம்பாக இருந்த காலம் மாறி பரந்தளவில் கிடைக்கச் செய்யும் கோகுலம் வாசகர் வட்டத்திற்கு மிக்க நன்றிகள்.

இன்று மாலை சென்று தலைவாங்கிக் குரங்கு வாங்க இருக்கின்றேன். இதைவிட கம்பக் ஸ்பெஷல் இந்தியாவில் இருந்து வருவித்துத்தர முடியுமா என்று கோகுலம் வா.வ கேட்டுள்ளேன் பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

The Walking Dead

அண்மையில் AMC தொலைக்காட்சியில் த வோல்க்கிங் டெட் என்கிற தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியது. ஏற்கனவே பாகம் ஒன்று முடிவடைந்து பாகம் இரண்டு ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்தது. நண்பன் தயவில் பாகம் ஒன்று டிவிடி கையில கிடைக்கவே ஆறு எபிசொட்டுகளையும் ஒரே நாளில் பார்த்து முடித்தேன்.

Walking Dead Poster

சாதாரண சொம்பி (Zombie) கதைகளில் இருந்து வித்தியாசமாகவும் கொஞ்சம் கிலி ஊட்டுவதாகவும் இருந்தது. அதன் பின்னர் கட்டாயம் இரண்டாம் பாகத்தையும் பார்க்கவேண்டும் என்று எண்ணி அமெரிக்காவில் ஒலிபரப்பாகி சில மணி நேரத்தில் இலங்கையில் இருந்து பதிவிறக்கிப் பார்க்கத் தொடங்கினேன்.

த வோக்கிங் டெட் கதை ஒரு பொலீஸ் காரனைச் சுற்றி நடக்கின்றது. ஒரு சிறய நகரத்தில் பொலீஸ் செரீப்பாக வேலை செய்கின்றார் ரிக். ஒரு நாள் சட்டத்தை மீறும் நபர்களை மடக்கும் நிகழ்வில் காயப்பட்டு உயிர் நண்பன் சோன் இனால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகின்றார். சில நாள் கழித்து விழித்துப் பார்க்கும் ரிக்கிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது. அவர் காயப்படும் போது இருந்த உலகமும் இப்போது இருக்கும் உலகமும் இரண்டு துருவங்களாக இருந்தன. வைத்திய சாலை எல்லாம் அடித்து நொருக்கப்பட்டு சொம்பிகள் அலைந்து திரிகின்றன. அவற்றில் இருந்து தப்பி தனது குடும்பத்தைத் தேடி தனது பயனத்தை ஆரம்பிக்கின்றார். இதற்கு மேல் கதையை சொல்ல விருப்பமில்லை. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம். 😉

வோல்க்கிங் டெட் அரிப்பு அதிகரிக்கத் தொடங்கவே அது பற்றி ஆராயத் தொடங்கியதில் இன்னுமொரு இனிப்பான செய்தி கிடைத்தது. அதாவது வோக்கிங் டெட் என்பது ஒரு கிராபிக் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆக்கியிருக்கின்றார்கள். இதற்கும் மேலும் தாங்குமா இந்த உயிர். உடனே இணைய வழி காமிக்சுகளை இறக்கியாச்சு. பாகம் பாகமாக வாசிக்கத் தொடங்கினால் அடேங்கப்பா, தொலைக்காட்சித் தொடரை விட மிகவும் அருமை. புத்தகத்திற்கு புத்தகம் அலுப்பத் தட்டாமல் வாசிக்க வேண்டும் என்று வெறி அதிகமாகி எனது அன்ரொயிட் தொலைபேசி, டாப்லெட் என்று அனைத்திலும் நிரப்பி பயன நேரங்களில் கூட வாசித்துக் கொண்டு இருக்கின்றேன்.

தொலைக்காட்சிக் கதைக்கும், காமிக்ஸ் புத்தகத்தின் கதைக்கும் ஒற்றுமை இருந்தாலும் பல இடங்களில் புத்தகம் நிமிர்ந்து நிற்கின்றது. காமிக்சையும் தொலைக்காட்சித் தொடரையும் ஒப்பிடுவது தப்புத்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் காமிக்ஸ் உயர்ந்து நிற்கின்றது. தொலைக்காட்சியில் காட்ட முடியாத பல கோணங்களில் அபூர்வமாகச் சித்திரம் தீட்டியுள்ளார்கள். தொலைக்காட்சித் தொடரில் வரும் பொலீஸ் அதிகாரியை விட காமிக்சில் வரும் ரிக்கை மிகவும் பிடித்து விட்டது. 🙂

தொலைக்காட்சி Vs காமிக்ஸ்

நீங்கள் காமிக்ஸ் பிரியரானால் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகத் தொடர். உங்களுக்காக புத்தக அட்டைகள் சில இங்கே.

தொலைக்காட்சித் தொடர் 85/100
காமிக்ஸ் புத்தகம் 90/100

பி.கு: இவற்றை எல்லாம் 7ம் அறிவு எடுத்து எங்கள் 6ம் அறிவையும் கேள்விக்குறியாக்குபவர்கட்கு போட்டுக் காட்டவேண்டும். 😉
 

மரண மாளிகை – ரிப்போட்டர் ஜானி

புத்தக அட்டை

அண்மையில் சில காமிக்ஸ் புத்தகங்களை கையகப்படுத்தியிருந்தேன். அவற்றை ஒன்று ஒன்றாக வாசித்து இங்கே குறும் பதிவுகளாக இடும் உத்தேசம். அவ்வகையில் இன்று வாசித்துப் பதிவு இடப் போகும் புத்தகம் ரிப்போட்டர் ஜானி தோன்றும் மரண மாளிகை.

நாம் பல ரியாலிட்டி ஷோக்களைப் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு சொல்லப்போனால் ஜோடி நம்பர் வன், சுப்பர் சிங்கர் என்று பல. அதே போல வெளி நாடுகளிலும் ரியாலிட்டி ஷோக்கள் பிரபலம். அண்மையில் நம் ஷில்பா ஷெட்டி பிக் பிரதர் எனும் நிகழ்ச்சியில் கலந்து கண்ணீரும் கம்பலையுமாக இருந்தார் ஞாபகமா?? அது கூட ஒரு ரியாலிட்டி ஷோவேதான். எங்கள் கதையும் இப்படியான ஒரு ரியாலிட்டி ஷோவை சுற்றியே நடக்கின்றது.

பெந்தோசு மாளிகையில் ஒரு ரியாலிட்டி ஷோ அங்கே அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலைகள். இதைத் துப்பறிய எங்கள் ரிப்போட்டர் ஜானி களம் இறங்குகின்றார். மெல்ல மெல்லமாக முடிச்சுகளை அவிழ்கின்றார். இறுதியில் எதிர் பாரா ஒரு வில்லன் வந்து அமைந்து விடுகின்றான்.

கதை வேகம் என்னவோ மிகவும் மந்தம்தான்.  நான் ரிப்போட்டர் ஜானியின் கதைகளுக்கு பெரிய விசிரியாக இருந்ததில்லை. ஆனாலும் கிடைக்கும் போது வாசித்துவிடுவேன். ரிப்போட்டர் ஜானி மார்ச் 3, 1955 இல் பிறப்பெடுத்திருகின்றார். ரின் ரின் எனும் காமிக்ஸ் புத்தகத்தில் இவர் வந்திருகின்றார் முதன் முதலாக. தமிழில் ரிப்போட்டர் ஜானி என்று அறியப்பட்டாலும் தலை ஆங்கிலத்தில் Ric Hochet என்றே அறியப்படுகின்றது.

இப்படியான காமிக்ஸூகளை ஆங்கிலத்தில் கூடத் தேடிப் பிடிப்பது கடினம். எங்கள் பாக்கியம் லயன் முத்து காமிக்ஸ் பதிப்பகத்தார் தமிழில் வெளியிடுகின்றமை.

டெக்ஸ் தோன்றும் இரத்த ஒப்பந்தம்

டெக்ஸ் வில்லரின் சாகசங்களை வாசிப்பதில் கிடைக்கும் திருப்தியே தனிதான். அவ்வகையின் அண்மையில் டெக்சின் ஒரு சாகசத்தை வாசிக்க கிடைத்தது. வருந்தத்தக்க விடையம் என்னவெனில் இந்தப் புத்தகம் மொத்தம் மூன்று பாகங்களாக வந்துள்ளது. அடியேன் கையின் சிக்கியதோ இந்த முதற் பாகம் மட்டுமே.

இந்தக் கதையின் சிறப்பு என்னவெனில் டெக்சின் வரலாற்றைப் படம் போட்டுக் காட்டுவதே. டெக்சின் செவ்விந்திய மனைவி, மகன் என்று கதை நீள்கின்றது.

இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களாக தணியாத தணல், காலன் தீர்த்த கணக்கு என்று தொடர்ந்திருக்கின்றன. கடைகளில் தேடியும் இன்னமும் இந்தப் பாகங்கள் கிடைக்கவில்லை.

நீண்ட நாளாக காமிக்ஸ் பதிவு இடாத காரணத்தால் இந்த சிறிய காமிக்ஸ் பதிவு 😉

கொசுறுத் தகவல்: நம் பலரும் விரும்பி வாசிக்கும் லயன் ஆசிரியர் திரு. விஜயனின் “சிங்கத்தின் சிறுவயதில்” தொடரும் இந்த இதழில்தான் ஆரம்பமாகின்றது.

டெக்ஸ் வில்லர் தோண்றும் The Lonesome Rider

புத்தக அட்டை

காமிக்ஸ் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள் என்றால் நிச்சயமாக டெக்ஸ் வில்லரைத் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது. டெக்ஸ் குதிரையேறி வேட்டையாடும் காட்சியை லயன், முத்து காமிக்ஸில் படித்து திளைத்த காலம் ஒரு பொற்காலம்.

டெக்சின் கதைகள் 1948ல் முதன் முதலாக வெளியாகத் தொடங்கியிருக்கின்றது. இதே ஆண்டில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தது. அதைவிட எனது தாயாரும் தந்தையாரும் பிறந்ததும் இதே ஆண்டுதான். என் வாழ்வில் முக்கியமான ஆண்டாக இருக்கும் 1948ல் டெக்ஸ் பிறந்தமை மேலும் பெருமையே எனக்கு. 😉

காலம் பல கடந்தாலும் டெக்ஸ்சின் காமிக்சுகள் என்றும் இளமையானவையே. இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த கௌபாய் நாயகனின் கதையொன்றை லக்கி லிமட் ஆதரவில் இணையத்தின் வழி படிக்க முடிந்தமை பெரும் மகிழ்ச்சியான விடையம். Tex – The Lonesome Rider என்கிற இந்தக் கதை நான் கடைசியாகப் படிந்த டெக்சின் கதையாகும்.

வழமையான டெக்சின் சித்திரங்களில் இருந்து மாறி வித்தியாசமான சித்திரப் பாணியில் இந்தக் கதை அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம். இதற்கு முக்கியமான காரணம் இந்த காமிக்சின் ஓவியர் ஜோ குபேர்ட். காலப் பகுதியில் எழுதப்பட்ட & வரையப்பட்ட இந்தக் கதை முந்தய டெக்ஸ்வில்லர் ஓவியங்களில் இருந்து வேறுபட்டிருக்கின்றமை வெள்ளிடைமலை. அதைவிட இந்த லோன்சம் ரைடர் கதையில் டெக்சின் வழமையான தோழனான கிட் கார்சன் மற்றும் டைகர் ஜக் போன்றவர்களைக் காண முடியாது. இதனால் இந்தக் கதையில் டெக்ஸ் தனியாளாக சுப்பர் ஸ்டார் போல சண்டை போடுகின்றார்.

எனக்கென்ன்னவோ கதையை வாசிக்கும் போது டெக்சின் ஓவியங்களில் டிசி காமிக்சின் பனிஷர் ஓவியப் பாணியின் தாக்கத்தைப் பார்க்க கூடியதாகவிருந்தது. சில வேளை ஓவியர் தன் பாணியில் வரைய அப்படிச் செய்திருக்கலாம்.

யோ குபேர்ட் - ஓவியர்

சரி கதையில் என்ன நடக்கிறது என்று மேலோட்டமாக சொல்கின்றேன். தனது நண்பர் குடும்பத்தைப் பார்க்க நீண்ட காலத்தின் பின்னர் செல்லும் டெக்சிற்கு அங்கே அதிர்ச்சி காத்திருக்கின்றது.

ஊர் மேய்ந்து கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் டெக்சின் குடும்ப நண்பர்களின் குடும்பத்தை வேட்டையாடிவிடுகின்றது.

இந்த படுகொலைகளுக்குப் பழி வாங்குவதாக இவர்களின் கல்லறையில் சத்தியம் புரிந்து புறப்படுகின்றார் அகில உலக காமிக்ஸ் சுப்பர் ஸ்டார் டெக்ஸ்.

அப்புறம் என்ன மீதிக் கதையைச் சொல்வது அழகல்லவே. டெக்ஸ் மெல்ல மெல்ல முடிச்சுகளை அவிழ்த்து நரிகளை வேட்டையாடுவதுதான் கதை.

இவ்வளவு சிறப்பான இந்த டெக்ஸ் கூட அமெரிக்காவில் பிரபலமாகாமை ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. சில வேளை சூப்பர் மேனும், பட் மேனும்தான் அவர்கள் உலகம் போல.

நீங்கள் டெக்ஸ் இரசிகரா?? அப்படியானால் கட்டாயம் இந்தக் கதையைப் படித்துவிடுங்கள்.

அமேசனில் வாங்க


New
தமிழில் இந்தக் கதையை லயன் காமிக்ஸ் நிறுவனத்தினர் “சாத்தான் வேட்டை” என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

தகவல் உதவி: Siv, King Viswa, Mathu

பட உதவி: கிங் விஷ்வா

முன் அட்டை
பின் அட்டை

காமிக்ஸ் பதிவுகள் தொடர்ந்து எழுதும் ஆசை வந்துவிட்டது. ஆனால் அதற்கு ஒரு தனி வலைப்பதிவு திறக்க நினைத்தாலும் அளவிற்கு மிஞ்சி எதற்கு ஆயிரம் வலைப்பதிவு திறக்கவேண்டும் என்று நினைத்த காரணத்தால் இந்த ஹொலிவூட் பார்வை வலைத்தளத்திலேயே காமிக்ஸ் பதிவுகளையும் இடுவதாக முடிவு செய்துள்ளேன். இவ்வாறு செய்வது பிடிக்காதுவிட்டார் அறியத் தாருங்கள் நிச்சயமாக புது வலைப்பதிவு ஆரம்பித்துவிடலாம்.