Category Archives: ஈழம்

சீனாவின் மடியில் தலை சாய்க்கும் இலங்கை

இலங்கை தற்போது சீனாவிடம் பெரும் கடனை வாங்கிவிட்டு அடைக்க வழிதெரியாமல் மீளவும் சீனாவிடமே கடன் வாங்கி விழி பிதுங்கி நிற்கின்றது. குறிப்பாக முன்னாள் அதிபர் இராஜபக்‌ஷ காலத்தில் பெரும் கடன்களை அவர் சீனாவிடம் இருந்து பெற்று இலங்கையின் உள்கட்டுமானத்தை விரிவாக்க முயன்றார். இதன் மூலம் துறைமுகங்கள், வான் ஊர்தி தளங்கள், அதிவேக சாலைகள், நிலக்கரி மின் பிறப்பாக்கி நிலையம் என்று பல கட்டுமானப் பணிகள் விறு வெறு வென நடக்கத் தொடங்கின. சுமார் $5 பில்லியன் பெறுமதியான கடன் இக்காலத்தின் போது இலங்கை சீனாவிடம் இருந்து பெற்றுக் கொண்டது.

இலங்கையின் மொத்த கடனில் சீனாவிடம் வாங்கிய கடன் சுமார் 10% மட்டுமே. ஆனாலும் சீனாவின் கடன்களுக்கான வட்டி வீதம் மிகவும் அதிகமானது. அண்ணளவாக சீன கடன்கள் சுமார் 6.3% வட்டி வீதத்தில் வழங்கப்படுகின்றது. இதே வேளை ஆசிய அபிவிருத்தி வங்கி தனது கடன்களை சுமார் 0.25% – 3% இடைப்பட்ட வட்டி வீதத்திலேயே வழங்குகின்றது. மேலும் இலங்கைக்காக இந்தியா சுமார் 1% என்ற வட்டி வீதத்திலேயே கடன்களை வழங்குகின்றது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) சுமார் 77% கடன் செலுத்தவே முடிந்துவிடுகின்றது. பாக்கிஸ்தான், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கூட இவ்வளவு கடன்சுமை கிடையாது. மொத்தமாக $55 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடனாக இப்போது இலங்கை செலுத்த வேண்டியுள்ளது என்று கணிக்கபட்டுள்ளது. இது குறையும் என்றே தெரியவில்லை. நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இது மெல்ல மெல்ல கூடிக் கொண்டே செல்கின்றது.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், வானூர்தி நிலையம்

இலங்கையின் முன்னாள் அதிபர் இராஜபக்‌ஷ காலத்தில் தென் இலங்கையில் ஹம்பாந்தோட்டை எனும் இடத்தில் சீனா ஒரு துறைமுகத்தையும், வான் ஊர்தி தளத்தையும் அமைத்தது. ஹம்பாந்தோட்டை இலங்கை அதிபர் இராஜபக்‌ஷவின் சொந்த ஊர் என்பதை இங்கே சொல்ல வேண்டும்.

மத்தளை வானூர்தி நிலையம்

இவை அமைக்கப்பட்ட பின்னர், இவை வணிக ரீதியில் இலாபம் ஈட்டவேயில்லை. இந்த இரண்டு முன்னெடுப்புகள் வெறும் வெள்ளை யானையாகி இலங்கை அரசிற்கு வெறும் வெட்டிச் செலவாக மாறியது. இவற்றை அமைக்க சீனா பெரும் கடன் வசதிகளை அரசிற்கு வழங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பில்லியன் அளவில் செலவு செய்து கட்டிய வானூர்தி நிலையத்திற்கு விமானங்களே வருவதில்லை என்றால் எவ்வளவு நகைப்பிற்கான விடயம் என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு நாளைக்கு ஒரு விமானம் வந்தாலே பெரும் விடயமாக உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு விமானம் வரும் வானூர்தி நிலையம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

துறை முகத்தை அமைக்க மட்டும் சுமார் $1.5 பில்லியன் செலவாகியது (Indiatimes.com, 2018). வெளிநாட்டு அரசொன்று இலங்கையில் முதலீடு செய்த அதிகமான தொகை இதுவென்பதும் குறிப்பிடத் தக்கது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம்

2015இல் இராஜபக்‌ஷ அரசு தோல்வியுற்று ரணில் விக்ரமசிங்க, மைத்ரிபால சிரிசேன தலமையிலான அரசு பதிவியேற்றது. கடும் சுமையில் இருந்த இலங்கை அரசின் கடன் சுமையைக் குறைக்க, 2017 இல் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் சுமார் 99 ஆண்டுகள் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் $1.5 பில்லியன் கடனில் சுமார் $1.1 பில்லியன் கடனை சீனா மீளப் பெற்றுக் கொண்டது. ஆக, வெறும் $0.4 பில்லியன் மட்டுமே இலங்கை மீளச் செலுத்த வேண்டும்.

துறைமுக நகரம் (தென் ஆசியாவின் வியாபார மையம்)

கொழும்புத் துறைமுக நகரம் வழமை போல முன்னாள் அதிபர் மகிந்த இராஜபக்‌ஷ காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயற்றிட்டமாகும். எத்தனை நாட்கள்தான் சின்ன சின்ன செயற்றிட்டமாகவே செய்வது என்றெண்ணி ஆரம்பித்த திட்டமாக இருக்க வேண்டும். 2014 அளவில் ஆரம்பிக்கபட்ட இந்த செயற்றிட்டத்தின் படி கொழும்புத் துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டு ஒரு துறைமுக நகரம் அமைக்கப்படும். அந்த நகரின் சிறப்பு என்னவென்றால், இந்த நகரம் இன்று கடலாக இருக்கும் பகுதியில் மண்ணை நிரப்பி அதில் அமைக்கப் படுவதே. இதன் மூலம் 2.33 சதுரக் கிலோமீட்டர் அளவான நிலப்பரப்பு கடலில் இருந்து மீள நிலத்துடன் இணைக்கப்படும்.

எல்லாம் சரி ஆனால் இதில் ஒரு இடக்கு முடக்கான விடயமும் உள்ளது. இவ்வாறு கடலை நிரப்பி அமைக்கப்படும் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட அரைப் பகுதி சீனாவிற்கு உரியதாக கையளிக்கப்படும். இதையறிந்ததும் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மிகவுமே கடுப்பாகிப் போயின.

2015 இல் அதிபர் இராஜபக்‌ஷ தோல்வியடைந்து ரணில், மைத்திரி அரசு பதவிக்கு வந்து இரண்டு மாதங்களில் (மார்ச் 2015), இந்தச் செயற்றிட்டதை இடை நிறுத்தி வைத்தனர். செயற்றிட்டத்தை ஆரம்பித்த விதம், நடத்திய விதம், சூழல் தாக்கங்கள் போன்றவற்றில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இந்தச் செய்றிட்டத்தை தற்காலிகமாக முடக்கினர்.

ஆனால் சீனத்து ட்ராகனின் முன்னால் சிறு பல்லி போன்ற சிறிய நாடு இலங்கையினால் ஒன்றும் செய்ய முடியாது. சிறிது நாட்களில் வாலை ஆட்டியவாறே இலங்கையினால் செயற்றிட்டம் மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது (Gbtimescom, 2019). இந்த செயற்றிட்டம் முடிந்தால் சுமார் $14 பில்லியன் அளவான முதலீடு இலங்கைக்கு கிடைப்பதுடன் 100,000 க்கும் அதிகமான இலங்கையரிற்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கட்டுரை எழுதும் போது (2019 பெப்ரவாரி) துறைமுக நகரத்தின் முதற் பகுதி வேலைகள் முடிவடைந்துள்ளன. அதாவது கடலில் மண் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளது, இனி மீதிக் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடன் மேல் கடன்

அந்நியன் படத்தில் சார்லி சொல்லுவார், “ரெஸ்ட் எடுத்து களைத்துப் போய் மீளவும் ரெஸ்ட் எடுக்கின்றேன்” என்று. அதைப் போலத்தான் கடன் வேண்டி வேண்டி அதைக் கட்ட மீளவும் கடன் வாங்கியவனிடமே மீளவும் கடன் வாங்கும் கதையாகிவிட்டது இலங்கையின் நிலமை. 2018இன் இறுதியில் சுமார் $1 பில்லியன் கடனை சீனாவின் மக்கள் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்றுக் கொண்டது. இதற்கு முன்னர் 2017, IMF இடம் இருந்து ஏலவே ஒரு $1 பில்லியன் கடனை இலங்கை வாங்கிக் கொண்டதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

தற்போது மீட்டர் வட்டிக்கு கடன் எடுத்தவன் நிலையில் இலங்கை கடன்களை சமாளிக்கத் திணறுகின்றது. தன்னை மீறிய நிலையில் EMI மூலம் பொருட்களை வாங்கும் எம்மைப் போன்ற பலரின் நிலையில்தான் தற்பொது இலங்கை உள்ளது.

இந்தியாவின் கவலை

இந்தியாவிற்கு மிக அருகில் வந்துவிட்ட சீனாவின் காரியத்தை இந்தியாவால் சீரணிக்க முடியவேயில்லை. இது பற்றி இலங்கை அரசிற்கும் இந்தியா தனது விசனத்தை அறிவித்ததாகக் கூறப்பட்டது. ஒரு தடவை சீனாவின் உளவுக் கப்பல் ஒன்றை இந்திய கடற்படை துரத்திச் செல்லவே அது கொழும்புத் துறைமுகத்தினுள் சென்று மறைந்து விட்டது என்றும் அரசல் புரசலான கதைகள் உலாவின (Ndtvcom, 2019).

சீனாவைத் தனது எல்லையின் ஒரத்திற்கே கூட்டி வந்த காரணத்தினாலேயே இந்தியா இராஜபக்‌ஷவை ஆட்சியில் இருந்து தூக்கிவிட்டதாக இராஜபக்சவே பொதுவில் குற்றம்சாட்டியிருந்தமையையும் இங்கே குறிப்பிட வேண்டும் (Indiatodayin, 2015). ஆயினும் இந்தியா இந்தக் குற்றச்சாட்டை அடியோடு அப்போது மறுத்து விட்டிருந்தது.

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள்

இந்திய அரசை சமாதானம் செய்ய இலங்கை அரசு உடனடியாக திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு வழங்க முன்வந்தது (Dailymirrorlk, 2019). ஆயினும் இந்த முயற்சி எந்தளவிற்கு வெற்றியடையும் என்று இப்போது சொல்ல முடியாது.

சீனாவின் மறுப்பு

சீனா தொடர்ந்து கடன் சுமை மூலம் இலங்கையின் போக்கை மாற்றியமைக்க முயல்கின்றது என்ற கூற்றை மறுத்து வருகின்றது. இலங்கையின் மொத்தக் கடன் தொகையில் சுமார் 10 வீதம் வரையே சீனா வழங்கிய கடன் உள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்கட்டுமானத்தை மீள அமைக்க முடியாமல் திணறிய இலங்கைக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தாம் உதவி செய்ததாகவும் சீனாவின் இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளர் லுவோ சொங் தெரிவித்தார் (Www.ft.lk, 2019).

மேலும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கை அரசின் பொறுப்பிலேயே உள்ளது ஆகவே இங்கிருந்து நாங்கள் இராணுவ நடவடிக்கைகளைச் செய்வோம் என்பது வெறும் பொய்யான கூற்று என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் வருமானம் இங்கை அரசுடனும் பகிரப்படும் என்றும் அறிவித்தார்.

 சீனாவின் கறுப்புப் பக்கம்

சீனாவின் பட்டுப் பாதை பற்றி நீங்கள் பள்ளிக் காலத்தில் படித்திருக்கலாம். பட்டுத் துணி தயாரிக்கும் முறையை பல நூற்றாண்டுகளாக சீனா இரகசியமாகப் பேணி வந்தது. பட்டுத் துணிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு மத்திய ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா வரை எடுத்துச் செல்லப் பட்ட பாதையே பின்னாளில் பட்டுப் பாதை என்று அழைக்கப்பட்டது. கடல் மூலம் எடுத்துச் செல்லும் பாதையும் உள்ளது அதைப் போல நிலம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட பாதையும் உள்ளது. இந்தப் பாதைகளினூடாக தனது பழைய போக்கு வரத்தை நிலைப்படுத்த சீனா தற்பொது முயன்று வருகின்றது. இதைச் சீனா “Belt and Road Initiative” (பெல்ட் அன் ரோட் இனிஷியேட்டிவ்) என்று அழைக்கின்றது.

இதன்படி பணத்தை வாரி இறைத்து பல நாடுகளைத் தன் வலையில் சீனா வீழ்த்தி வருகின்றது. இலங்கையைத் தவிர, டிஜிபோட்டி, டஜிகிஸ்தான், கிரிக்கிஸ்தான், லாவோஸ், மாலை தீவுகள், மொங்கோலியா, பாக்கிஸ்தான் மற்றும் மொன்டநீக்ரோ போன்ற நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கடன் சுமை சீனாவிடம் வாங்கிய அதிக வட்டிக் கடன்களினால் உயர்ந்து நிற்கின்றது (Qzcom, 2019). குறிப்பாக அதிக வட்டியுடன் கூடிய கடன் மற்றும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய உள்ளூர் அரசியல் வாதிகளுக்கு சலுகை, உள் குத்து நிறைந்த உடன்படிக்கைகள் என்று சீனாவின் திருகுதாளங்களை ஒரு பக்கம் நீட்டிக் கொண்டே செல்லலாம். இலங்கையைப் போல கடனைத் திருப்பித் தர முடியாமல் துறைமுகத்தைச் சீனாவிடம் குத்தகைக்கு விட்ட ஆபிரிக்க நாடும் உள்ளது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

இதைவிட சீனாவின் செயற்றிட்டங்களில் பெரும்பாலும் தொழிலாளர்கள் சீனாவில் இருந்தே கொண்டுவரப்படுவர். இதன் காரணமாக இலங்கையில் பெருமளவிலான சீனர்களை நீங்கள் காண முடியும். கொழும்பின் சில பகுதிகளில் (குறிப்பாக கொள்ளுப்பிட்டி) தனி சீன மொழியில் பெயர் எழுதப்பட்ட கடைகளைக் கூடக் காணலாம். மேலும் சினிமாக்களில் சீனத் திரைப்படங்களைக் இரவு நேரச் சிறப்புக் காட்சியாக இவர்களுக்காக காட்டுவதையும் காணலாம். இந்தச் சமூக மாற்றத்தால் உள்ளூர் மொழிகள் புறக்கணிக்கப்படுவது மட்டுமல்ல, உள்ளூர் வாசிகளின் வேலை வாய்ப்புகளும் தட்டிப் பறிக்கப்படுகின்றன.

ஏலவே சில வணிகப் பொருட்களில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு சீன மொழியினைச் சேர்த்துவிட்டனர். பொன்டேரா நிறுவனத்தின் அங்கர் பட்டர் கூட இவ்வாறு சீனத்தைச் சேர்த்து தமிழைப் புறக்கணித்து விட்டனர் (Colombogazettecom, 2018).

தமிழ் புறக்கணிப்பு

சீனர்களும் தம் பாட்டிற்கு செயற்றிட்ட அறிவிப்பு பலகையில் தனிச் சீனம், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் பொறித்து விடுகின்றார்கள். ஏற்கனவே அடிபட்டு தவிக்கும் தமிழ் மொழிக்கு இவர்கள் இங்கே மேலும் சமாதி கட்டும் வேலையைச் சிறப்பாகச் செய்கின்றார்கள்.

முடிவுரை

எது என்னவாயினும் இங்கை இப்போது பெரும் கடன் சுமையில் உள்ளது. உலகில் உள்ள பலவீனமான பொருளாதாரங்களில் இலங்கையும் பட்டியல் இடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ள இலங்கையில் சர்வதேச சக்திகள் தமது கைவரிசையைக் காட்ட முயல்வது சாதாரணமானது. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இதைத்தான் உலக வல்லரசுகள் செய்துள்ளன. பலவீனமான நாடுகளை நன்றாக ஆட்டுவித்து மேலும் பலவீனமாக்கி தமது கைங்காரியங்களை நிறவேற்றுவதைத்தான் அவர்கள் காலம் காலமாகச் செய்துள்ளார்கள்.

குறிப்பாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவு இலங்கை பால் உலக வல்லரசுகளுக்கு விருப்பை ஏற்படுத்தும் காரணியாகும். குறிப்பாக இலங்கையின் திருகோணமலை, கொழும்பு, பருத்தித்துறை போன்ற துறைமுகளங்களை கையில் எடுத்துவிட்டால் தெற்காசியாவின் கடல் வழிப் போக்குவரத்தை முற்றிலுமாகக் கையில் வைத்திருக்கலாம். சீனாவின் பிரசன்னம் இப்போது இலங்கையில் யாராலும் தடுக்க முடியாத ஒரு பாரிய சத்தியாக உருவெடுத்திருக்கின்றது. இன்னும் ஒரு 20 முதல் 30 ஆண்டுகளினுள் சீனர்கள் இலங்கையை முழுக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மகிந்த இராஜபக்ஷவின் கட்சி பெரும் வெற்றியீட்டியது. 2020 இல் மகிந்த இராஜபக்‌ஷ அதிபர் பதவிக்கு மீளவும் போட்டியிட முடியாத வாறு மீளவும் அரசியல் யாப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் மகிந்தவின் தம்பிகளில் ஒருவர் மகிந்த சார்பாக போட்டியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. மகிந்தவின் குழு மீளவும் ஆட்சிக்கு வந்தால், கட்டுப்பாடில்லாமல் சீனா இலங்கையில் உலா வரும்.

2015 இல் மகிந்த இராஷபக்‌ஷவை மீள அதிபராக்க சீனா பல மில்லியன் டாலர்களைச் செலவு செய்தது. இம்முறை மீளவும் அதையே செய்யும் அதற்கு காரணம் ரணில் அரசு அமெரிக்க, இந்திய சார்பான அரசென்ற கொள்கையையே சீனா கொண்டுள்ளது. சீனா இலங்கையில் கால் ஊன்றினால் நீண்ட காலத்து நோக்கில் இந்தியாவின் கடலாதிக்கத்தை இது மிகவும் மோசமாகப் பாதிக்கும் அத்துடன் அமெரிக்காவும் தனது செல்வாக்கை தெற்காசியாவில் மெல்ல மெல்ல இழக்கும்.

உசாத்துணை

  • Indiatimes.com. 2018. The Economic Times. Online. 17 February 2019. Available from: https://economictimes.indiatimes.com/news/international/world-news/new-chinese-loan-may-further-plunge-sri-lanka-into-debt-trap/articleshow/65659719.cms
  • Dailymirrorlk. 2019. Dailymirrorlk. Online. 17 February 2019. Available from: http://www.dailymirror.lk/article/Govt-planning-to-hand-over-Trinco-oil-farm-to-India-Anura-155849.html
  • Indiatodayin. 2015. India Today. Online. 17 February 2019. Available from: https://www.indiatoday.in/world/story/sri-lanka-president-mahinda-rajapaksa-blames-india-raw-for-his-election-defeat-244216-2015-03-13
  • Ndtvcom. 2019. NDTVcom. Online. 17 February 2019. Available from: https://www.ndtv.com/india-news/china-ship-with-22-labs-spied-on-india-466101
  • Www.ft.lk. 2019. Wwwftlk. Online. 17 February 2019. Available from: http://www.ft.lk/front-page/No-debt-trap–China-says-its-loans-are-10-6–of-SL-s-total-and-over-60–concessionary/44-658460
  • Gbtimescom. 2019. Gbtimescom. Online. 17 February 2019. Available from: https://gbtimes.com/sri-lanka-resumes-14bn-port-city-project
  • Qzcom. 2019. Quartz. Online. 17 February 2019. Available from: https://qz.com/1223768/china-debt-trap-these-eight-countries-are-in-danger-of-debt-overloads-from-chinas-belt-and-road-plans/
  • Colombogazettecom. 2018. Colombo Gazette. Online. 17 February 2019. Available from: http://colombogazette.com/2018/09/08/fonterra-defends-having-chinese-and-not-tamil-on-anchor-butter-packs/

ஈழத்துச் சிறுகதைகள் – கின்டில் பதிப்பு

ஈழத்துச் சிறுகதைகள் இப்போது கின்டில் பதிப்பாகவும் உலகமெங்கும் கிடைக்கின்றது. உங்கள் கின்டில் சாதனத்திலோ இல்லை கின்டில் ரீடர் மூலம் கணனி வழியாகவோ, நகர் பேசி (அன்ரொயிட், ஐஓஎஸ் இயங்கு தளங்கள்) போன்றவற்றிலும் வாசிக்க முடியும்.

நூல் பற்றிய ஆசிரியர் குறிப்பு

2008 இல் ஒரு ஜென் கதையினை எமது பாணியில் சீ துஷ்டனே எனும் தலைப்பிட்டு எழுதினேன். அதை வாசித்தோர் பெருமளவில் அதற்கு வரவேற்புத் தெரிவிக்கவே மேலும் பல சிறுகதைகளைத் தொடர்ச்சியாக எழுதத்தொடங்கினேன். அவ்வரிசையில் அன்று முதல் இன்றுவரை எழுதிய சுமார் 11 சிறுகதைகளின் தொகுப்பே இந்த இ-புத்தகம்.

கதையின் மாந்தர்கள் பொதுவாக ஈழத்தவர்களாக இக்கதைகளில் சித்தரித்துள்ளேன் ஆயினும் கதையில் களம் ஈழத்தில் இருந்து ரொடன்டோ வரை விரிந்திருக்கும். இதன் காரணமாகவே தொகுப்பிற்கு “ஈழத்து சிறுகதைகள்’ என்று தலைப்பிட்டேன். கதையில் ஈழத்துதுப் பேச்சு வழக்கும், சிங்கள உரையாடல்களும் ஆங்காங்கே கலந்திருக்கும். ஆயினும் அவை கதை சார்ந்த உங்கள் புரிதலுக்கு எந்த ஊறும் ஏற்படுத்தாது என்று நம்புகின்றேன்.

These are the collection of short stories that I first wrote on my personal blog “Tamizh Valaipathivu”. Since many people seem to have enjoyed these stories, I thought of releasing them as a book. Here I’m sharing the book with the rest of the world.

I hope you like the book and the stories. The story is mostly written in the Jaffna Tamil slang, but I hope you can understand it without much difficulty.

உஙகளிடம் கின்டில் அன்லிமிட்டட் (Kindle Unlimitted) இருக்குமாயின் இந்தப் புத்தகத்தை இலவசமாக வாசிக்கலாம்.

நீங்கள் அமேசனை வெளிநாட்டில் இருந்து வாசிப்பவராயின் அமெரிக்கா, ஐக்கிய இராசியம் போன்ற தளங்களில் இருந்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

கின்டில் இல்லாவிட்டால்

உங்களிடம் கின்டில் புத்தகங்களை படிக்கும் வசதி இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை. நீங்கள் ஈழத்துச் சிறுகதைகள் புத்தகத்தினை இணையத்தில் pdf, epub வடிவங்களிலும் கம் ரோட் தளத்தில் இருந்து பதிவிறக்கிப் படிக்கலாம்.

இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்

இதயத்தின் துடிப்பினில் எனும் பாடலை இலங்கையைச் சேர்ந்த ஹார்ட் பிரேக்கர்ஸ் எனும் நிறுவனத்தை சேர்ந்த கலைஞர்கள் படைத்துள்ளனர். முதலில் பாடலைப் பார்த்துவிடுங்கள்

இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தமைக்கு காரணம் நான் சிறுவயதில் வளர்ந்த திருமலையில் பல இடங்களில் காடசிப்படுத்தப்பட்டுள்ளமையாகும்.

பாடல் விமர்சனம் எல்லாம் செய்யுமளவிற்கு நான் ஒன்றும் வித்தகன் அல்ல ஆயினும் என் சிற்றறிவிற்கு எட்டிய சில கருத்துக்கள். பாடல் காட்சிகளை தமக்கிருக்கும் குறுகிய தொழில்நுட்ப வளங்களுடன் அருமையாக அமைத்துள்ளார்கள். மேலும் பாடல் காட்சியில் வரும் முக்கிய பாத்திரங்கள் இரண்டும் அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நாயகன், நாயகி பின்னால் போகும் எத்தனை பாடல்கள் வந்தாலும் சலிக்காது போல எமக்கு 😉

இசை அருமையாக உள்ளது. சாதாரணமாக அமைக்கப்படும் பாடல்களை விடப் பல மடங்கு சிறப்பாக அமைத்துள்ளார்கள். இசைக்கு ஒரு சபாஷ் போடலாம்.

எனக்கு இந்தப்பாடலில் அவ்வளவாக இலயிக்காத விடையம் என்றால் நடனக் காட்சியமைப்புகள். அவ்வளவாக சிறப்பாக அமையவில்லை. சரியாக வராத அந்த நடனத்தை தவிர்த்திருந்தால் பாடல் பார்க்கும் போது இன்னும் நல்ல உணர்வு (அதாங்க பீலிங்) அமைந்திருக்குமோ என்று தோன்றுகின்றது.

அடுத்து மிக முக்கியமான விடையம், பாடகர் ழ,ள,ல க்களில் கோட்டை விடுகின்றாரோ எனத் தோன்றுகின்றது.

மட்டுப்பட்டுத்தப்பட வளங்களுடன் இப்படியாக சிறப்பான பாடலை அமைத்துள்ள ஹார்ட் பிரேக்கர்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

அப்படியே பேஸ்புக்கிலும் அவர்களை லயிக்கிடுங்கள்

கடுப்பேற்றும் இலங்கை வானொலிகள்

ஒரு காலத்தில் வானொலி என்றால் இலங்கை வானொலிதான். தமிழ் நாடு தொடக்கம் இலங்கைவரை வியாபித்திருக்கும் தமிழர் வீடுகளெங்கும் தூய தமிழில் இலங்கை வானொலி ஒலித்தது. பிலபல பட்டிமன்ற நடுவர் லியோனி கூட ஒரு முறை இலங்கை வானொலி கேட்டுத்தான் அக்காலத்தில் தாங்கள் பாட்டுக்களைத் தெரிந்துகொண்டதாக கூறுவார்.  ஆனால் இன்று இலங்கை வானொலி மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து வானொலிகளின் நிலமைதான் என்ன?

வானொலி

பொதுவாகவே தொலைக்காட்சியிடம் இல்லாத ஒன்று வானொலியிடம் இருக்கின்றது. வானொலி கேட்டுக்கொண்டு எமது நாளாந்த வேலைகளைச் செய்துவிடலாம் ஆனால் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இவற்றைச் செய்ய முடிவதில்லை. இதனால் தான் என்னவோ வானொலி எம்மவர் வாழ்க்கையில் மிகவும் பின்னிப் பிணைந்து இருந்தது.

இலங்கையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் (முன்னாள் இலங்கை வானொலி மாற்றங்கள் பல பெற்று இப்போது தென்றல் ஆகியது), வசந்தம் போன்றவையும் இதைவிட தனியார் வானொலிகளான வெற்றி, சூரியன், சக்தி போன்றவற்றையும் கூறலாம்.

தென்றல் வானொலிப் பாரம்பரியத்துடன் வளர்ந்து வந்தது. அரச வானொலி என்பதால் என்னவோ பல அரசியல் தலையீடுகள் அது இது என்று தன் தனித் தன்மையே என்றோ இழந்து விட்டது. இன்று எத்தனை பேர் தென்றல் இலங்கையில் கேட்கின்றார்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே இதைக் கேட்கக்கூடும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்னுமொரு வானொலி வசந்தம். இது அண்மைக் காலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. தனியார் வானொலிகளின் பாணியில் அறிவிப்பாளர்களைப் போட்டு அறுக்கும் பணியில் இந்த வானொலி சிறப்பாக ஈடுபட்டு வருகின்றது.

சக்தி FM

சக்தி, சூரியன் இரண்டும் தனியார் வானொலிகளைப் பொறுத்தவரையில் சிறப்பாக இயங்கிவந்தன. பின்னர் வெற்றி எப்.எம் உம் இந்த வரிசையில் இணைந்து கொண்டது. 1999 காலப்பகுதிகளில் சக்தி FM முதன் முறையாக நான் சிறுவயதில் வசித்து வந்த திருகோணமலைப் பகுதிக்கு வந்தது. இலங்கை வானொலியின் தரமற்ற நிகழ்ச்சிகளில் சோர்ந்திருந்த வானொலி ஆவலர்களுக்கு இந்த வானொலி மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. எழில்வேந்தன், லோஷன், வாணி, ரமணி என்று வானொலி அறவிப்பாளர்கள் எல்லாம் பெரும் நட்சத்திரப் பட்டாளமாக வலம் வந்தார்கள். அக்காலத்தில் சக்தி அறிவிப்பாளர்களுக்கு சினிமா நடிகர்கள் அளவிற்கு பிரபலம் இலங்கையில் இருந்தது.

பின்னர் 2000 களின் பின்னர் சூரியன் வானொலியும், பின்னர் வெற்றி வானொலியும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. 2004 பின்னர் நான் கொழும்பு நோக்கி வந்துவிட்டோம் அதனால் அனைத்து வானொலிகளையும் கேட்கும் வாய்ப்பு கிட்டியுது.

தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர்கள் போட்டி காரணமாக தம்மைத் தாமோ இலங்கையின் முதற்றர வானொலி இலங்கையில் அதிகமாக கேட்கப்படும் வானொலி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் காமடிகளும் நடந்தேறியது. காலம் செல்ல செல்ல இந்த வானொலிகளின் தரம் சாக்கடையாகத் தொடங்கியது.

வானொலிகளின் தரம் எப்போதும் அதன் அறிவிப்பாளரின் தரத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும். தரமற்ற வானொலி அறிவிப்பாளர்களின் காரணமாக இலங்கையின் வானொலிகள் இன்று பெரும் நாற்றமெடுக்கின்றது. வாய் நோகாமல் கதைத்தால் மட்டும் அறிவிப்பாளராகிவிட முடியுமா? ஆரம்பக்காலத்தில் மயில்வாகனம், கிளோட் செல்வரட்னம், பிந்தைய காலத்தில் கமலினி, ரேலங்கி, நடராஜசிவம், விஷ்வநாதன் பின்னர் எழில் வேந்தன், லோஷன் போன்றவர்கள் இருந்த / இருக்கும் இடத்தில் இக்கால அறிவிப்பாளர்களை வைக்கவே முடியவில்லை. எப்போதாவது எந்த வானொலி நிலையத்தைத் திருகினாலும் ஒரு அறிவிப்பாளர் நையி நையி என்று சண்டீவி பாணியில் அறிவித்தல் கொடுப்பார். மறுமுனையில் ஒரு நேயர் தொலைபேசி எடுத்து அவருடன் அவர் புகழ் பாடுவார். இல்லாவிட்டால் இரண்டு அறிவிப்பாளர்கள் சேர்ந்து காமடி செய்கின்றோம் போர்வையில் செம ஜொள்ளு விட்டு எம் உயிரை எடுப்பர். இந்த அறுவை காரணமாக வானொலி கேட்கும் பழக்கத்தையே கடந்த சில ஆண்டுகளாக குறைத்துவிட்டேன். கேட்பது வெற்றியின் விடியல் மட்டுமே. அது என்னுடைய தனிப்பட்ட தெரிவு மற்றவர்களுக்குப் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம்.

இதைவிட இலங்கை வானொலிகளில் கடுப்பேற்றும் மிக முக்கியமான விடையம் சண்டிவி பாணியிலான இந்திய உச்சரிப்பும், செயற்கைத் தனமான ஆங்கிலக் கலப்பும். Actually, But, So, Wow… போன்ற ஆங்கிலச் சொற்கள் இன்றைய வானொலியில் சரளமாக உலாவருகின்றன. சரி பரவாயில்லை அதை விட்டுத் தள்ளுங்கள் ஆனால் அதைவிட மிக முக்கியமான மன வருத்தத்தைத் தரும் விடையம் இலங்கை வானொலிகளில் இப்போது இலங்கைத் தமிழைக் கேட்க முடியாது.

ஆமா அப்பிடீங்களா? அச்சச்சோ ரொம்ப சாரிங்க! எங்க இருந்து பேசுறீங்க? போன்ற இந்திய உச்சரிப்புடைய வானொலி அறிவிப்பாளர்கள்தான் இன்று இலைங்கையின் தமிழ் வானொலிகளில். இயல்பாகவே எமக்கு அது ஒட்டாமல் போனதில் ஆச்சரியம் இல்லை. இந்திய தமிழில் பேசும் போது கேட்க அழகாக ஆரம்பத்தில் இருந்தாலும் போகப் போக புளித்து விட்டது.

அண்மையில் ஒருவர் தனக்கு கடுமையான யாழ்ப்பாண உச்சரிப்பு இருந்தமையினால் வானொலி நிலையத்தில் சேர்க்கவே மறுத்து விட்டார்களாம் என்று வலைப்பதிவு ஒன்றில் பின்னூட்டமிட்டு இருந்தார். சிலர் கஷ்ட்டபட்டு இந்தியத் தமிழில் பேச முயற்சிப்பதை பாருக்கும் போது பாவம் பிள்ளை என்றே எண்ணத் தோன்றும்.

ஏன் இந்தக் கொலைவெறி???

வடிவேல் அவ்…! என்றும் போது விழுந்து விழுந்து சிரிக்கும் நாங்கள் அவர் பாணியில் ஒருவர் வானொலியில் பேசத் தலைப்பட்டால் காமடிப் பீசு என்று சொல்லி வானொலியை மூடுவதைத் தவிர என்ன செய்யலாம்??

 

யாரையும் தனிப்பட்ட ரிதியில் தாக்கி இந்தப் பதிவு எழுதவில்லை. நான் ஒன்றும் சிறப்பான நபர் என்றும் கூற வரவில்லை. இலங்கையில் பொதுவாக வானொலிகள் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு பற்றிய ஒரு பதிவு மட்டுமே இது.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2010

ஒவ்வொரு வருடமும் கொழும்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதுண்டு. இம்முறையும் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகின்றது. செப்தெம்பர் 18 தொடக்கம் 26 வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

கொழும்பு புத்தக கண்காட்சி: நன்றி ரடித

ஒவ்வொரு வருடமும் சென்று ஏதாவது ஒரு ஆங்கிலப்புத்தகத்தை வாக்கிவரும் எனக்கு இம்முறை பெருமளவில் தமிழ் புத்தகங்களை வாங்க கிடைத்தமை பெரும் சந்தோசம். https://www.nhm.in/ தளத்தில் விற்பனைக்கு இருக்கும் பல புத்தகங்களை பார்த்து பல நாட்களாகக் கொட்டாவி விட்டாலும் இன்னமும் அந்தப் புத்தகங்களை இலங்கையில் இருக்கும் என்போன்றவர்கள் வாங்குவது நடைமுறைச் சாத்தியம் இல்லை. இதற்கு முக்கிய காரணம் அஞ்சல் வழியில் புத்தகங்களைப் பெற எடுக்கும் செலவேயாகும்.

சந்தோஷமான செய்தி என்னவெனில் புத்தக கண்காட்சியில் இந்தப் புத்தகங்களை வாங்க கிடைத்தமையே.  கிழக்குப் பதிப்பகத்தில் ஸ்டால்கள் A-40 மற்றும் D-203 ஆகிய இடங்களில் உள்ளன. மறக்காமல் சென்று புத்தகங்களை அள்ளிக் கொள்ளுங்கள். நான் வாங்கிய புத்தகங்களை கீழே காணலாம்.

நான் அள்ளிய புத்தகங்கள்

காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வு இரவு 9 மணிவரை தொடர்வதால் மக்கள் வேலை முடிந்த பின்னரும் சென்று பார்க்கலாம். கொழும்பை இரவு நகரமாக்க முயல்கின்றார்களாம் அதற்காகத்தான் என்னவோ இவ்வாறு 9 மணிவரை கண்காட்சியை நிகழ்த்துகின்றார்கள்.

மேலும் பிரபல இலங்கையின் புத்தக சாலைகளான ஜெயா புக்சென்டர், விஜித யாபா புக் சென்டர், எம்.டி. குணசேன போன்றவர்களும் தங்களது ஸ்டால்களை வைத்துள்ளார்கள். ஆங்கில நாவல்களை வாங்க விரும்புபவர்கள் விஜித யாப்பாவை நாடலாம். அதே போல மருத்துவப் புத்தகங்களை வாங்க நினைப்பவர்கள் மக்கீன் அல்லது ஜெயா புக் சென்டர்ரை நாடலாம்.

நிகழ்வில் பங்குகொள்வோரின் இலகு கருதி சிறப்பு இலவச வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதைக் கண்டேன்.

பல இந்திய பதிப்பகத்தாரும் தமது புத்தக ஸ்டால்களை வைத்துள்ளார்கள். புத்தகங்கள் எமது சொத்துக்கள். வாசிப்பு மனிதனைப் பூரணமாக்குகின்றது. நாமும் வாசித்து எதிர்காலச் சந்ததியும் வாசிக்க துணைபுரிவோம்.

பி.கு: உள் நுழைவதற்கு ரூபா 10 அறவிடப்படுகின்றது. மத குருமார், சீருடையில் வரும் மாணவர், பாதுகாப்பு படையினர் ஆகியோருக்கு அனுமதி இலவசம்.

Image via: Raditha’s Photo Blog

இலங்கை பதிவர் சந்திப்பு – 2009

பல காலமாகவே பலராலும் விரும்ப பட்டாலும் காலத்தின் சில சில நெருக்கடிகளால் பலரும் இந்த முயற்சியை ஆரம்பிப்பதிலும் நடத்துவதிலும் பின்னடித்தனர். இப்போது இதற்கான கால நேரங்கள் கனிந்துவிட்டதால் இலங்கையில் நான்கு சிங்கங்கள் (அப்படித்தான் வந்தியத்தேவன் சொன்னார்) களத்தில் இறக்கி இந்த அருமையான நிகழ்வை நடத்திக் காட்டியுள்ளனர்.

Blogger Birthdayஇந்த நிகழ்விற்கு இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இன்றய தினத்தில்தான் பிளாக்கர் தளத்தின் 10ம் பிறந்தநாள். அடப்பாவமே அதுக்கும் கேக்கு வெட்டி கொண்டாடிட்டானுகள்.

பெரும்பாலம் பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் கலந்துகொண்டனர். பலரும் பிளாக்கரையே பயன்படுத்துவது அவர்கள் பேசும்போது தெரிந்த்து. இது என்போன்ற வேர்ட்பிரஸ் வலைப்பதிவருக்கு வருத்தமளிப்பதாக இருந்தாலும் பிளாக்கர்.காம் போல வேர்ட்பிரஸ்.காம் பல இலவச சேவைகளை தரவில்லை என்பது கவலையான உண்மையே!!! ஒரே தீர்வு தனித்தளத்தில் வேர்ட்பிரஸ் நிறுவுவதுதான்.

நிகழ்வு தொடங்கியதில் இருந்து முடியும் வரை புல்லட்டு வைத்த மொக்கைகள் தாங்காது. தொடங்கியதில் இருந்து வடை சாப்பிட வந்தவர்கள் முதல் உண்டியல் பெட்டி திறந்தமை வரை ஒரே சரவெடி. 😉

நிகழ்வில் நேரம் போதாமல் போனது கண்கூடு. நான்கூட சில கருத்துக்களைச் சொல்ல விழைந்தாலும் நேரம் இடம் கொடுக்கவில்லை. என்றாலும் அனைத்து சக வலைப்பதிவுலக உள்ளங்களை சந்தித்தமை பெரும் சந்தோஷமே.

தட்டச்சு முறைகள் பற்றி காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது மயூரன் சொன்னார், நயந்தாராவா நமீதாவா போன்ற தலைப்புகளுக்கு சமனாக பாமினியா, தமிழ் 99 ஆ என்ற தலைப்பும் பட்டை கிளப்பும் என்று. நான் பாமினியில் இருந்து தமிழ் 99க்கு மாறிய போது எழுதிய கட்டுரையை வாசியுங்கள் உண்மைபுரியும்.

இதைவிட யாழ்தேவி திரட்டி பற்றியும் காரசாரமாக வலைப்பதிவர்கள் முட்டி மோதிக்கொண்டார்கள். யாழ்தேவி என்ற பதம் ஒரு பிரதேசத்தை வட்டமிட்டுக் காட்டுவதாக பல வலைப்பதிவர்கள் முறைப்பட்டுக் கொண்டார்கள்.

இதைவிட வலைப்பதிவு எழுதி பொலீஸ் தன்னைப் பிடித்தது எனும் பகீர் தகவலையும் ஒரு நண்பர் வெளியிட்டு அடிவயிற்றில் புளியைக் கரைத்தார்.

இன்னுமொரு விடையம் ஆண்டு 6 கற்கும் ஒரு இளைய பதிவர் வந்து கலக்கினார். தந்தையைப் பின்பற்றி சிறுவர் வலைப்பதிவை ஆரம்பித்தாலும் இப்போது தந்தைக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிசெய்யுமளவிற்கு உயர்ந்துவிட்டாராம். பெயர் ஞாபகம் இல்லை. இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள்.

முக்கியமான இன்னுமொரு விடையம் ஊடக கல்லூரி மாணவர்கள் சிலர் வந்திருந்தனர். அனைவரும் வேர்ட்பிரஸ்.காம் தளத்தை வைத்திருந்தமை மனதிற்கு நிம்மதி. இணையத்தில் கட்டுரைகளை சுட்டுவிட்டு நன்றி இணையம் என்று மட்டும் போடும் பத்திரிகைகளையும் சாடி பேசிய மயூரன் இப்படி செய்யவேண்டாம் என்று ஊடக கல்லூரி மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

அடுத்த முறை வலைப்பதிவர் சந்திப்பு நடக்கும் போது லோஷன் சொன்னமாதிரி குளு குளு அறையில் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சந்திப்பாக இருக்கட்டும். இதன் மூலம் வலைப்பதிய புதிதாக வரும் பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதற்கான என் பங்களிப்புகள் அடுத்த முறையிருக்கும்.

பி.கு: கொட்டாஞ்சேனையில் இருந்து வெள்ளவத்தை தமிழ் சங்கம் மண்டபத்திற்கு இலவசமாக காரில் கூட்டிச்சென்ற சேது அவர்களுக்கு மிக்க நன்றி.

கொழும்பில் தாக்குதல் நடத்தும் புலிகளின் விமானம் – காணோளி

இலங்கை அரசு தனது தேசிய தொலைக்காட்சியில் வெளியிட்ட காணோளியை இங்கே காண்க

கொழும்பில் கரும்புலித் தாக்குதல்

நேற்று இரவு 9.30 அளவில் திடீரென மின்சாரம் அணைக்ககப்பட்டுது. மின்சாரம் அணைந்தவுடன் புலிகளின் விமானங்கள் ஊடுருவுகின்றன என்ற சந்தேகம் எம் அனைவருக்கும் உருவாகிவிட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கையடக்க தொலைபேசியில் செய்தி வந்து சேர்ந்தது. அதாவது கொழும்பில் உள்ள விமான எதுர்ப்பு பீரங்கிகள் உயிர்ப்பாகிவிட்டன. தாக்குதல் ஒன்று நடக்கலாம் என்றும் எதிர்வு கூறுவதாக அதில் கூறப்ப்பட்டிருந்தது.

Tracker bullets
Tracer bullets

அதை உறுதிப் படுத்தும் முகமாக சில நிமிடங்களில் இலங்கைப் படையினர் வானத்தில் சுடத் தொடங்கினர். Tracer Bullets வானமெங்கும் சர சர என்று பறந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மஞ்சள் வெளிச்சம் ஒன்று ஏற்பட்டது. அதன் பின்னர் ‘பூம்’ என்ற ஒரு சத்தமும் கேட்டது.

அதன் பிறகு வந்த செய்தியறிக்கைகள் மூலம் கொழும்பு மத்தியில் உள்ளதும், இலங்கை விமானப் படைத் தளத்திற்கு அருகில் உள்ளதுமான உள்நாட்டு வரித்திணைக்களத்தில் குண்டு வீழ்ந்ததாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

இதே நேரம் ஒரு விமானத்தை கட்டுநாயகா விமான நிலையத்தில் சுட்டு வீழ்த்தியதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. பின்னர் சிறிது நேரத்தில் கொழும்பு, உள்ளாநாட்டு வரித்திணைக்களத்தின் உள்ளே இருந்தும் புலிகளின் விமானத்தின் பாகங்களை ஒத்த பகுதிகளை மீட்டதாக அரசு அறிவித்தது. இதன் படி இரண்டு விமானங்களும் திரும்பிப் போகவில்லை என்பது உறுதியானது.

இன்று காலை தமிழ் நெட்டில் வான் கரும்புலிகள் வெற்றிகரமாக கொழும்பு விமானப்படைத் தலமையகத்திலும், கட்டுநாயகா விமானப்படைத்தளத்திலும் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர். புலிகளின் கரும்புலி விமான ஒட்டிகளின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு வரித்திணைக்களம்
உள்நாட்டு வரித்திணைக்களம்

இதேவேளை இலங்கை அரசு, தாமே இரண்டு விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளனர். இலங்கை அரசின் டிபன்ஸ்.lk தளமும் தாக்குதலில் சேதமாகிய உள்நாட்டு வரித்திணைக்களத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

கத்தரிக்கை முத்தினால் சந்தைக்கு வந்தாகவேண்டும் என்பது போல விரைவில் உண்மைத் தகவல்கள் வெளியே வரும்.

கலைஞரில் மண் திரைப்படம்

இன்று மாலை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, வரும் ஞாயிற்றுக் கிழமை கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். வழமையான பீடிகையுடன் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக…. என்று தொடங்கினார்கள்.

ஏற்கனவே இந்த மண் திரைப்படத்தின் விமர்சனம் எழுதியிருந்தேன். சிலர் ஆமோதித்தனர் சிலர் இல்லை என்றிருந்தனர். இதைவிடப் பலர் குறுவட்டு கிடைக்காத காரணத்தால் திரைப்படத்தைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் இந்த அர்த்தமற்ற அல்லது காலத்தின் தேவைக்கு உதவாத தமிழ் திரைப்படத்தினை உலகத் தமிழர்கள் பார்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அனைவரும் பாருங்கள், ஆனால் அதில் வருவதை பார்த்து படத்தில் என்ன கருத்து சொல்ல வருகின்றார்கள் என்று குழம்பாதீர்கள்!! 😯

அன்புடன்,
மயூ

கொழும்பில் குண்டு வெடிப்பு

இன்று கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. குண்டு இராணுவத்தினர் சென்ற ஒரு பஸ் வண்டியை இலக்கு வைத்துத் தாக்கப்பட்டுள்ளது. இதில் 6 நபர்கள் காயம் அடைந்ததாகவும் அதில் இருவர் பொதுமக்கள் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.

குண்டு எங்கே வெடித்தது என்று பார்த்தால் நான் அடிக்கடி சென்று வரும் பாதை. மாலுக்கடை பஸ் தரிப்பிடத்திற்கு அடுத்த தரிப்பிடத்திற்கு சற்றே முன்பாக வெடித்துள்ளது. அங்கு நிறையத் தமிழர்கள் குறிப்பாக வேலைதேடி தம் சொந்த இடம் விட்டு வந்த தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எல்லாருக்கும் இனி ஆப்புத்தான்..

கொழும்பு மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத பிரதேசமாக மாறப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நினைக்கின்றேன். இதற்குப் பதில் தாக்குதலாக இலங்கை அரச என்ன செய்யும் என்று யோசித்துப் பார்த்தேன் அனேகமாக வன்னிப் பகுதியில் அவர்களில் மிக், புக்காரா விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிவார்கள் என்பதே என் சிந்தனை.

இதே வேளை புலிகளி்ன் கடற்படைப் பிரிவு நெடுந்தீவு கடற்படைத் தளத்தை தாக்கி அழித்துள்ளதாகத் தெரிகின்றது. 34 கடற்படையினர் மரணம் அடைந்துள்ளதுடன் 4 புலிகளும் வீரச்சாவடைந்துள்ளதாகத் தமிழ் தளங்கள் தெரிவிக்கின்றன.

என்று முடியுமோ இந்த மனித அவலம். தமிழர்களில் பிரைச்சனைகளை அடிப்படைச் சிங்களவர் உணர்ந்து அதை சிங்கள அரசுக்கு உணர்த்தும் வரை இந்தப் பிரைச்சனை தீரப் போவதில்லை. சிங்களவர்களும் இதை உணரப் போவதும் இல்லை….