Category Archives: அனிமேசன் திரைப்படம்

Castlevania – தமிழ் விமர்சனம்

அனிம் தொலைக்காட்சித் தொடர்களில் அத்தனை ஆர்வம் எனக்கு இல்லை. ஆயினும் அண்மையில் நெட்பிளிக்சில் என்ன பார்க்கலாம் என்று யோசித்தபோது இந்த காசில்வேனியா எனும் அனிம் தொடர் எனது கண்ணில் பட்டது. சரி என்னதான் இருக்கின்றது பார்த்துவிடுவோமே என்று முதலாவது அத்தியாயம் பார்த்ததும் அடடா என்று அந்தத் தொடருடன் ஒட்டிக்கொண்டேன்.

காசில்வேனியாத் தொடரின் கதை பெல்மொன்ட் எனும் குடும்ப வாரிசுகளுக்கும் இரத்தக்காட்டேரி (ட்ரகுலா)விற்கும் இடையில் நடக்கும் சண்டையை மையமாக வைத்தே தயாரித்துள்ளார்கள். இது வெறும் அனிம் தொடர் மட்டுமல்ல, இதன் பின்னால் பல வீடியோ விளையாட்டுக்கள் புத்தகங்கள் போன்றனவும் வெளியாகியுள்ளன.

முதல் நான்கு அத்தியாயங்களும் அருமையாக இருக்கின்றது ஆயினும் எதிர்காலத்தில் இது எவ்வாறு அமையப் போகின்றது என்பதை இரண்டாம் பாகம் வெளியாகியதும்தான் நாங்கள் தீர்மானிக்கலாம்.

உங்களுக்கு fantacy வகையறாத் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் பிடிக்குமென்றால் கட்டாயம் இந்தத் தொடரைப் பாருங்கள். சிறுவர்களுடன் பார்க்க அவ்வளவாக உவந்ததில்லை. இரத்தமும் சதையும் தெறிக்கும் காட்சிகள் தொடரெங்கும் நிறைந்திருக்கின்றன.

இந்தத் தொடரில் வெறும் நான்கு அத்தியாயங்கள் மட்டுமே உள்ளன. இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளது என்பது மகிழ்ச்சியான விடயம். இரண்டாம் பாகத்தில் எட்டு அத்தியாயங்கள் இருக்கும் என்றும் அறவிக்கப்பட்டுள்ளது.

A Cat in Paris (2010)

கார்டூன் திரைப்படங்களை நாம் பொதுவாக இரசித்துப் பார்ப்பதுண்டு. இன்று வெளியாகும் பல ஹாலிவூட் திரைப்படங்கள் கார்ட்டூன் திரைப்படங்களாக இருப்பதை நாம் காணலாம். குங்பு பண்டா, டின் டின், டோய் ஸ்டோரி, ஷ்ரெக் என்று பட்டியல் நீளம்.

ஆனால் இந்த அ கட் இன் பரிஸ் எனும் கார்ட்டூன் திரைப்படம் வித்தியாசமானது. சிறுவயதில் இரசிய மொழிபெயர்ப்பு சிறுவர் புத்தகங்கள் படித்திருகின்றீர்களா? உ+ம் நெருப்புப் பறவை போன்றவை?? இந்த பிரஞ்சுக் கார்ட்டூனில் வரும் சித்திர அமைப்பு ஏனோ அதையே எனக்கு ஞாபகப் படுத்தியது.

ஒரு தொழில்முறை திருடன் அவனுடன் ஒரு பூனை அவன் செல்லும் இடம் எல்லாம் செல்கின்றது. நகரின் மறுபக்கம் ஒரு பொலீஸ் அதிகாரியும் அவளின் மகளும். இந்தப் பெண் பொலீஸ் காரியையும் சிறுமியையும் வில்லனையும் திருடனையும் ஒரு கோட்டில் இணைப்தற்கு இந்தப் பூனை பயன்படுகின்றது.

வித்தியாசமான சித்திரங்களையும் அதனோடு ஒட்டிச் செல்லும் கதையும் மனதை வருடிச் செல்கின்றது.

இந்த கிருஸ்மஸ் விடுமுறைக்கு குடும்பமாக இருந்த டிவிடியில் போட்டுப் பார்க்க ஒரு நல்ல திரைப்படம். கட்டாயம் பார்க்க வேண்டிய கார்ட்டூன் திரைப்படம்.

புள்ளி 80/100

Kung Fu Panda 2: விமர்சனம்

2008 வெளி வந்த குங்பு பண்டா திரைப்படத்தை வெறுத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. திரையரங்குகளில் சக்கை போடு போட்ட திரைப்படம் அது. எந்த திரைப்படம் வெற்றி பெற்றாலும் அதைத் தொடர்ந்து இன்னுமொரு திரைப்படம் எடுப்பது ஹாலிவூட் வழமை. அவ்வகையில் இந்த குங்பு பண்டா 2 வெளிவந்திருக்கின்றது. குங்கு பண்டா கதை என்னவெனில் ஒரு நூடில் கடையில் பிறந்து (அப்படித்தான் முதல் நினைத்தோம் ஆனால் தத்தெடுக்கப்பட்டது) வளர்ந்த ஒரு பண்டா பெரிய குங்பு சண்டைக்காரனாக வர விரும்புகின்றது.  அதன் ஆசையும் முதலாம் பாகம் நிறைவில் முற்றும் பெறுகின்றது. அதாவது சீரோ டு ஹூரோ கதை 😉

இரண்டாம் பாகத்தில் புதியதாக ஒரு கதை முளைத்து விடுகின்றது. பண்டாவின் குடும்பம் ஒன்று இருப்பதாகவும் அதற்கு ஏதோ நடந்ததாகவும் அதற்கு ஒரு வெள்ளை மயிலே காரணம் என்றும் மெல்ல மெல்ல தெரியவருகின்றது. பண்டா தன் பூர்வீகத்தை அறிந்து கொண்டதா மயிலிற்கு என்ன ஆனது போன்ற விடையங்களுடன் திரைப்படம் நிறைவு பெறுகின்றது.

எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் அனிமேசன் திரைப்படங்களின் கதையமைப்பும் காட்சியமைப்புகளும் நாளுக்கு நாள் சிறப்பாகிக்கொண்டே வருகின்றது. நிறம் மொழி மதம் அவை எல்லாவற்றையும் விட வயது போன்றவற்றைக் கடந்து எங்களை இரசிக்க வைக்கின்றது.

Jennifer Yuh நிச்சயமாக கடும் முயற்சியையும் உழைப்பையும் இந்த திரைப்படத்தில் சிந்தி இருக்கின்றார். காட்சிக்கு காட்சி வரும் பண்டாவின் சேஷ்டைகளும், வார்த்தைக்கு வார்த்தை வரும் பகிடிகளும் படத்தை தூக்கி நிறுத்துகின்றது.

திரைப்படத்தின் முடிவு ஒரே கூத்தாக இருக்கும். பூவின் (அதான் பண்டாவின் பெயர் பூ) உள்மன அமைதியும் அதைத்தொடர்ந்த விளைவுகளும் துறைமுகத்தில் எதிரி யுத்தக்கப்பல்கள் முன்னாடி.. அட்ரா சக்கை அட்ரா சக்கை.. அதை நீங்களே பார்த்துக் கொள்ளவும்.

குடும்பத்துடன் சென்று இரசிக்க நிச்சயமாகத் தரமான ஒரு திரைப்படம். கட்டாயமாகத் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மூன்றாம் பாகத்தின் தொடக்கப் புள்ளியை இரண்டாம் பாகத்தின் முடிவில் காட்டிவிட்டார்கள்.

 

Corpse Bride (2005) விமர்சனம்

திருமணத்திற்கு நிச்சயம் செய்தாகிவிட்டது. ஆனால் இப்போது தேவாலயத்தில் அருட் தந்தை முன்னால் ஒத்திகை பார்க்கவேண்டும். அங்கேதான் நம்ம ஹீரோ வீக்!. ஒத்திகையில் தாறுமாறாக சொதப்பும் இந்த ஹீரோ வெட்டவெளியில் பனி மூட்டத்தில் மூடுபனியில் ஒரு மரக்கொப்பில் மோதிரத்தைப் போட்டு தன் திருமண ஒத்திகையை நடத்துகின்றார். இங்கேதான் காரியம் கெட்டு குட்டிச்சுவரானது. மரக்கொப்பென்று நினைத்து அவர் மோதிரத்தைப் போட்டது ஒரு இறந்த பெண்ணின் எலும்புக்கூட்டு விரலுக்கு. ப்பூ…! இப்ப செத்த சவம் எழும்பி வந்துட்டுதுங்கோ!


Johnny Depp கதையின் நாயகனுக்கு குரல் கொடுத்திருந்த காரணத்தால் இந்த திரைப்படத்தை நான் பார்த்தேன். ஆனாலும் இந்த அனிமேசன் திரைப்படம் என்னை ஏமாற்றவில்லை. அருமையான கதையமைப்பு, வசனங்கள், காட்சியமைப்புகள் என்று அற்புதமான திரைக்காவியம்.

முன்பு ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு இறந்துபோன ஒரு மணப்பெண் தற்செயலாக நம் ஹீரோவிற்கு மனைவியாகிவிட நம் ஹீரோவை இழுத்துக்கொண்டு இந்த பேய்ப் பெண் தம் பேய் உலகத்திற்கு சென்றுவிடுகின்றாள். அங்கே நம் மனித நாயகனுடன் புதிய வாழ்க்கை ஒன்றை ஆரம்பிக்க நினைக்கின்றாள்.

இதேவேளை தன் அருமை காதலியைப் பிரிந்து வாடும் காதலன் மீள அவளுடன் சேர முயற்சிக்கின்றான். இவர்கள் சேர்ந்தார்களா இல்லை நம் ஹீரோ ஜீரோவாகி இறுதிவிரை பேய் பெண்ணுடன் வாழ்க்கை நடத்தினாரா என்பதை DVD இல் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


திரைப்படத்தில் மற்றுமொரு சிறப்பான அம்சம் இசை. ஓபேரா ரக இசையை இரசிப்பவர்கள் நிச்சயமாக இந்த திரைப்படத்துடன் காதல் கொள்வர். அதைவிட நாயகியின் உணர்வுகள் அவர் பியானோ வாசிப்பதன் மூலம் காட்டுவார்கள். ஆஹா.. அருமை. வேட்டைக் காரன்கள் எல்லாரும் எப்ப இப்படி சிந்திப்பார்களோ???

இது ஒரு நாடோடிக் கதையை மையமாக கொண்டு எழுதிய திரைப்படமாம். நீங்களும் அந்த நாடோடிக் கதையை வாசித்துப் பார்க்கலாம்.


அருமையான அனிமேசன் திரைப்படம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இந்த திரைப்படத்தைக் கட்டாயம் பாருங்கள். குடும்பத்துடன் பார்த்து இரசிக்க கூடிய திரைப்படம்.

RATING : 85/100

புல்லட்டின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இப் பதிவில் இருந்து ரேட்டிங் முறமையும் அறிமுகப் படுத்தப்படுகின்றது.

BEOWULF – விமர்சனம்

BEOWULF என்ற திரைப்படத்தைப் பார்க்க கிடைத்தது. படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போதுதான் திடீர் என்று உறைத்தது, அட.. இது அனிமேஷன் திரைப்படம். என்னானாலும் பார்ப்பது என்ற முடிவுடன் பார்த்தேன். திரைப்படம் முடிந்த பின்னர் யோசித்துப் பார்த்தால், ஒரு அனிமேஷன் திரைப்படம் பார்த்த உணர்வே இல்லை. ஏதோ உண்மையான திரைப்படத்தைப் பார்த்த உணர்வே மேலோங்கி இருந்தது.

கதை அம்புலிமாமா கதைதான். ஒரு ஊரில் ஒரு இராட்சத ஜந்து இருக்கின்றது. அது ஊருக்குள் புகுந்து கொலைகளைச் செய்கின்றது, மனிதரை சப்பி சப்பிச் சாப்பிடுகின்றது. இதை தடுக்க முடியாமல் மன்னன் கலக்கமடைந்து இருக்கின்றார்.

வழமைபோல ஜந்தை அடக்க கடல்தாண்டி வருகின்றார் நாயகன் பியோவூல்ஃப். ஒருநாள் இரவு ஜந்தை மடக்கி அதனுடன் சண்டைபோட்டு அந்த ஜந்தை வெற்றிகொள்கின்றார். இதனால் கோவம் அடையும் அந்த ஜந்தின் தாயார், ஊரினுள் புகுந்து அங்கிருந்த பியோவூல்ஃப்இன் வீரர்களை கொலை செய்கின்றது.

தாய் ஜந்தை பழிவாங்க அதன் குகைக்குள் நுழையும் பியோவூல்ஃப் அங்கே ஒரு வீரன் செய்ய்க் கூடாத செயல்களை செய்வதுடன், எதிர்காலத்தில் தன்னை பெரிய அரசனாக மாற்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார். இதையறியாத மன்னன் இவரை அரசனாக்குவதுடன் தன்னை மாய்த்துக் கொள்கின்றான்.

காலம் ஓடுகின்றது, மீண்டும் இவரால் உருவான புதிய ஜந்து ஒன்று (இம்முறை ட்ரகன்) ஊரினுள் புகுந்து அட்டகாசம் செய்கின்றது. இதை தற்போதைய மன்னனான பியோவூல்ஃப் எதிர்க்கின்றார். என்ன ஆனது என்பதுதான் மிகுதிக் கதை.

அனிமேஷன் அட்டகாசமாக இருக்கின்றது. அதைவிட அம்மா ஜந்து உண்மையில் ஒரு அழகான பெண். இதில் அஞ்சலீனா ஜூலி அந்தப் பாத்திரத்தை நடித்துள்ளார்.

குளந்தைகள் விரும்பி பார்க்கூடி திரைப்படமாயினும், அவர்களை திடுக்கிட வைக்கும் காட்சிகளும் இருக்கின்றது. PG 13 என்று தரப்படுத்தியிருக்கின்றார்கள். சிறுவர் போல மனம் கொண்டவர்களும், அனிமேஷனில் மனதைப் பறிகொடுத்திருப்பவர்களும் இந்த திரைப்படத்தைப் பார்க்கலாம்.

அனிமேஷனில் இத்தனை வித்தைகள் செய்யலாம் என்று கலக்கியிருக்கின்றார்கள். ஜந்துகளுடனான யுத்தம் புல்லரிக்க வைக்கின்றது.

பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.

Bee Movie, IT

பீ மூவி சிறுவர்களுக்கான அனிமேஷன் திரைப்படமாகும். பீ மூவி திரைப்படத்தின் விமர்சனம் காண விமர்சனம் வலைப்பதிவு செல்க.

IT என்ற பெயரில் ஸ்டீபன் கீங் எழுதிய நாவலின் திரையாக்கம். IT விமர்சனத்தையும் விமர்சனம் தளத்தில் காண்க.

18 : Shrek the Third வெளிவர உள்ளது


சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பிப் பார்த்த அனிமேசன் திரைப்படம்தான் ஷிரேக் (Shrek). ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளி வந்துள்ள வேளையில் இப்போது ஷிரெக் மூன்றாம் பாகமும் (Shrek the Third) வெளிவர உள்ளது.

18 ம் திகதி மே மாதம் இந்தத் திரைப்படம் வெளியிடப் பட உள்ளது. இங்கு fபியோனாவின் அப்பாவான அரசர் நோய்வாய்ப் படுகின்றார். இதனால் ஷிரெக் அரசருக்கு அடுத்த வாரிசைக் கண்டு பிடிக்க வேண்டும் அல்லது அவர் புதிய அரசனாக வேண்டும். இவ்வேளையில் வில்லன் கூட்டமும் அரசைக் கைப்பற்ற முயல்கின்றது. பின்னர் என்ன நடக்கின்றது என்பதை திரைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலதிக தகவலுக்கு உத்தியோக பூர்வ தளத்தைப் பார்க்கவும்.