தி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்

தி ஏலியனிஸ்ட் எனும் ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடரை நேற்று நெட்பிளிக்சில் பார்த்தேன். சாதாரணமாக எனக்கு உளவியல் சார் பரபரப்புத் (psycho thriller) தொடர்களைப் பார்க்க விருப்பம் அதிகம். அதுவும் தொடர் கொலை போன்ற கதைகளை விடாமல் பார்த்துவிடுவேன். இவ்வகையில் யூனாபொம்பர்டெக்ஸ்டர், லூதர் போன்ற தொலைக்காட்சித் தொடர்களை விரும்பிப் பார்த்தேன்.

இந்த அனைத்துத் தொலைக்காட்சித் தொடர்களிலும் இருந்து இந்த தொலைக்காட்சித் தொடர் மிகவும் வேறுபடக் காரணம் இந்தத் தொலைக்காட்சித் தொடர் நடப்பதாகக் காட்டப்படும் காலம் இற்றைக்கு சுமார் 130 வருடங்களுக்கு முன்னராக காலப் பகுதி. நிவ் யோர்க் நகரத்தில் 1900 இன் ஆரம்பங்களில் நடப்பது போன்று திரைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் இருக்கும் நவீன நுட்பங்கள் மற்றும் profiling போன்ற எந்த வசதியும் இல்லாமலேயே கொலைகாரனைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

மேலும் இந்தத் தொலைக்காட்சித் தொடர் ஏலவே  1994 இல் வெளிவந்த ஒரு ஆங்கில நாவலைச் சார்ந்தே தயாரிக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

கதைச் சுருக்கம் (No spoilers)

பாலியல் தொழிலில் ஈடுபடும் சிறுவர்களை மர்மமான முறையில் ஒருவன் கொடூரமாகக் கொலை செய்கின்றான். யார் எவர் எதற்காக இப்படிச் செய்கின்றார்கள் என்பதை அறிய புதிதாக வந்த காவல்துறை ஆணையாளர் முயல்கின்றார்.

உளவியலாளரும் அவர் குழுவும்
உளவியலாளரும் அவர் குழுவும்

இதேவேளை நகரில் ஒரு பிரசித்தி பெற்ற உளவியலாளர் ஒருவரும் இருக்கின்றார். உளவியலாளர் மேலும் சிலரின் உதவியுடன் பொலீசாரிற்கு மேலதிகமாகத் துப்புத் துலக்கத் தொடங்குகின்றார். என்ன எது நடந்தது என்பதெல்லாம் நான் சொல்லப் போவதில்லை அவற்றை நீங்களே பார்த்து அறிந்தி கொள்ளலாம்.

நிவ் யோர்க் நகரம்

தொடரிலே நிவ்யோர்க் நகரத்தை 1900 அளவில் இருந்த வாறே காட்டியுள்ளார்கள். காங்ஸ் ஒப் நிவ்யோர்க் திரைப்படத்தில் நீங்கள் பார்த்த அதே போன்ற கட்டிட அமைப்புகளை இந்தத் தொடரிலும் பாவித்துள்ளார்கள். அக்காலத்தின் அமெரிக்காவில்ல இருந்த பணக்கார ஏழை வித்தியாசம் எவ்ளவு மோசமானது என்பதையும் ஊழல் காவல்துறையில் எவ்வாறு வேரூன்றி இருந்தது என்பதையும் காட்டியுள்ளார்கள்.

18ம் நூற்றாண்டில் நிவ் யோர்க் நகரம்
18ம் நூற்றாண்டில் நிவ் யோர்க் நகரம்

காட்சிக்கு காட்சி அக்காலத்தில் நாங்கள் வாழ்வது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகின்றார்கள். பெருமளவில் கணனி வரைகலையைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட எது உண்மை எது கணனி வரைகலை என்று புரியாதவாறு காட்சிகள் பிரமிப்பூட்டுவதாக இருந்தது.

உலகில் எந்த நகரமும் நிவ்யோர்க் அளவிற்கு திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்டப்படவில்லை என்று நினைக்கின்றேன்.

உண்மைக் கதை?

இதில் வரும் சில பாத்திரங்களைப் பார்த்தபோது இது உண்மைக் கதையாக இருக்குமோ என்ற ஒரு எண்ணம் ஏற்படவே கூகளில் தட்டியதில் உண்மையாக இருந்த சில பாத்திரங்களைக் கோர்த்து அமைக்கப்பட்ட ஒரு கற்பனைக் காவியம் இது என் புரிந்துகொண்டேன்.

காவல்த்துறை ஆணையாளர்
காவல்த்துறை ஆணையாளர்

குறிப்பாக இக்கதையில் வரும் ரூஸ்வெல்ட் எனும் காவல்த்துறை ஆணையாளர் பின்னாளில் அமெரிக்காவின் அதிபராகியவர் என்பதைக் குறிப்பிடவேண்டும். இவ்வாறு சில உண்மைப் பாத்திரங்களைப் பாவித்துள்ளார்கள்.

நடிப்பு

நடிப்பு சிறப்பு அபத்தம் என்றெல்லாம் விமர்சனம் செய்யுமளவிற்கு நான் ஒன்றும் பெரிய துறைசார் அறிஞர் கிடையாது ஆயினும் ஒரு சராசரி இரசிகனாக டானியல் புருல், லூக் இவன்ஸ், டகோட்டா பான்னிங் ஆகியோரின் நடிப்பை இரசித்தேன்.

குறிப்பாக டகோட்டா பான்னிங் நடிப்பின் பின்னியெடுத்துவிட்டார். இந்தப் பாத்திரத்திற்காகவே பிறந்து வந்தாரோ என எண்ணுமளவிற்கு அவர் நடிப்பில் அசத்திவிட்டார்.

முடிவுரை

நீங்களும் உளவியல் சார் பரபர தொடர்களைப் பார்ப்பவரா? வரலாற்று சார் தொடர்களில் ஆர்வம் உள்ளவரா? அப்படியானால் உங்களுக்கும் இந்தத் தொடர் கட்டாயம் பிடிக்கும். தவறாமல் பார்த்து இரசியுங்கள்.

Summary
Review Date
Reviewed Item
The Alienist
Author Rating
41star1star1star1stargray

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.