67 : ஹரி பொட்டர் 5 ம் புத்தகம் ஒரு பார்வை


உலகையே ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டு இருப்பதுதான் இந்த ஹரி பொட்டர் கதைகளும் திரைப்படங்களும். இது வரை ஆறு புத்தகங்களும் அவற்றில் முதல் நான்கு திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளது.பொதுவாக இயற்கையை மிஞ்சிய அபரிதமான கதைகளை (fairy tale, Fantasy)நான் அதிகம் விரும்பி வாசிப்பது வழக்கம். வாசிப்பது மட்டுமல்ல திரைப்படங்களிலும் இப்படியான திரைப்படங்களை மறக்காமல் பார்த்துவிடுவேன். உ+ம் த லேர்ட் ஒப் த ரிங்ஸ்.

அந்த வரிசையில் ஹரி போட்டர் கதைப் புத்தகத் தொடரின் ஐந்தாம் புத்தகத்தை (Harry Potter and the Order of the Phoenix)அண்மையில் வாசித்து முடித்தேன். அது பற்றி ஒரு கலந்துரையாடல். நீங்களும் வாசித்தவரானால் உங்கள் கருத்துக்களையும் அள்ளி வீசுங்கள்.

கதை வழமைபோல டட்லி குடும்பத்தில் வீட்டில் ஆரம்பிக்கின்றது. டட்லி குடும்பம் ஹரியிற்கு எஞ்சியிருக்கும் ஒரே இரத்த உறவுள்ள குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஹரியின் தாயாரும் திருமதி டட்லியும் சகோதரிகள்.

டட்லி வீட்டில் பாடசாலை லீவில் என்ன செய்வது என்று அறியாமல் பொழுது போகாமல் நம்ம ஹரி வெட்டிப்பொழுது போக்கிக்கொண்டு இருக்கின்றார். தீரச் செயல்கள் இல்லாமல் அன்றாட வாழ்க்கை மிகவும் அலுப்பாகக் கடந்துகொண்டு இருக்கின்றது. இந்த வேளையில் ஒரு நாள் இரவு இரண்டு டீமென்டொர்ஸ் (கறுப்பு பிசாசு என்று சொல்லலாம்) ஹரியைத் தாக்குகின்றன.வீரத்தில் குறைவில்லாத ஹரி பெட்ரோனம் மந்திரம் மூலம் அந்த டீமென்டோர்சை அடித்து விரட்டுகின்றார். மூன்றாம் பாகத்தில் சிரியஸ் பிளக்கைக் காப்பாற்ற இதே மந்திரத்தை டீமென்டொர்ஸ்சுக்கு எதிராக ஹரி பாவித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் ஹரியின் ஒன்றுவிட்ட முரட்டுச் சகோதரனான குட்டி டட்லி மயிரிழையில் ஹரியினால் காப்பாற்றப்படுகின்றார்.

சாதாரண மக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த மந்திர தந்திர ஜந்துகள் வந்தமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. அத்துடன் இந்த காவல்கார டீமென்டர்ஸ் (டீமென்டர்ஸ் பொதுவாக தப்பு செய்த மந்திரவாதிகளை அடைத்து வைத்திருக்கும் அஸ்கபான் சிறைச்சாலையைக் காவல் செய்ய மந்திர தந்திர அமைச்சினால் பயன்படுத்தப்படுகின்றது.) மாய தந்திர அமைச்சின் கட்டுப்பாட்டை மீறி ஒரு சக்தியினால் வழி நடத்தப்படுகின்றது என்பதும் தெரிய வருகின்றது.

ஒரு வழியாக ஹரி லீவு முடிய முன்னமே ஒரு தொகுதி மந்திர வாதிகள் துணையுடன் (மாட் ஐ மூடி போன்றவர்கள்) இலக்கம் 12, கிரிம்மோல்ட் பிளேஸ் என்ற முகவரிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். அங்கு சென்ற பின்னர் அதுதான் ஹரியின் காட் ஃபாதர் சிரியஸ் பிளக்கின் குடும்ப வீடு என்பதும் அந்த வீடு இருளின் தூதன் கெட்ட குரங்குப் பயலான வால்ட மோட்டுக்கு எதிராக இயங்கும் ஒரு இரகசிய அணியின் தலமைக் காரியாலயமாக இயங்குகின்றது. இந்த இரகசிய அணியில் ஹரியின் பாடசாலை தலமை ஆசரியர் டம்பிள்டோர் (கவனிக்கவும் டபுள் டோர் இல்லை), ஸ்னேப் (அந்த கறுப்பு கிறீஸ் தலைக்காரன்… அதுதான் சும்மா மந்திரக் கசாயம் காய்ச்சிக்கொண்டு இருப்பார்), சிரியஸ் பிளக், டாங்ஸ், கிங்ஸ்லி, வீஸ்லி குடும்பம் (ஹரியின் நண்பன் ரொன்னின் குடும்பம்), லூபின் (ஹரியின் மூன்றாம் ஆண்டில் தீய சக்திகளுக்கு எதிரான கலைகள் கற்பித்த ஆசிரியர். சிரியஸ், ஹரியின் அப்பா, லூபின் அந்தக் காலத்தில ஹாக்வார்ட்ஸ் பாடசாலையைக் கலக்கின பசங்க) போன்றவர்கள் இருக்கின்றார்கள்.

இதே வேளை ஹரி டீமென்டர்ஸ்சுக்கு எதிராகப் மந்திரத்தைப் பாவித்தார் அல்லவா. அது சாதாரண மகிள்ஸ் (மந்திரம் தெரியாத உங்களைப் போன்றவர்கள்) இருக்கும் இடத்தில பாவித்தமை கடும் குற்றம் என்று மந்திர தந்திர அமைச்சில் ஹரிக்கு விசாரணை நடக்கின்றது. விசாரணையில் ஹரியைக் கவுக்க மந்திர தந்திர அமைச்சர் முயன்றாலும் இடையில் உள்ளே புகுந்த டம்புள்டோர் ஹரி மீது குற்றம் விழாமல் காப்பாற்றுகின்றார்.

கடைசியாக ஹரி தொடர்ந்து ஹாக்வார்ட்ஸ் பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுகின்றார். பாடசாலை செல்லும் நாளும் வருகின்றது ஹரி பாடசாலையும் செல்கின்றார். இம்முறை இரயிலில் ஹரி புதிய பாத்திரம் ஒன்றைச் சந்திக்கின்றது. அவர்தான் லூனா. லூனாவின் தந்தை மந்திர தந்திர உலகில் வெளிவரும் குயிப்லர் (The Quibbler)எனும் பத்திரிகையின் ஆசரியர். இதே வேளையில் மந்திர தந்திர அமைச்சின் தலையீட்டுடன் வெளிவரும் த புரபெட் (The prophet)என்று ஒரு பத்திரிகை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


ஹரி பாடசாலை சென்றது பலர் ஹரியை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கினர். இதற்குக் காரணம் மந்திர தந்திர அமைச்சும் த புரபெட் பத்திரிகையும் இல்லாதது பொல்லாதது பற்றி வதந்தி பரப்பிவிட்மையாகும். கடந்த வருடம் ஹரி கதையின் வில்லனும் இருளின் தூதனுமான லார்ட் வால்டமோர்ட்டைப் பார்த்தது பொய் என்றும் அவர் உண்மையில் திரும்பி வரவில்லை என்றும் அந்தப் பத்திரிகை எழுதித் தள்ளி இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் ஹரியை ஏதோ பொய்யனைப் பார்ப்பது போல் பார்க்கத் தொடங்கினர்.


இது போதாதென்று மந்திர தந்திர அமைச்சின் பரிந்துரையில் கெட்ட மந்திரக் கலைகளுக்கு எதிரான ஆசிரியராக உம்ப்ரிச் என்னும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுகின்றார். இவர் மெல்ல மெல்ல பாடசாலையின் கட்டுப்பாட்டை டம்பிள்டோரிடம் இருந்து தன்னிடம் மாற்றத் தொடங்கினார். இவர் பலதடவை லார்ட் வால்டமோர்ட் திரும்பியதாக பொய் சொல்வதாகக் கூறி ஹரியிற்கு தண்டனை வழங்கினார். அத்துடன் ஹரி குயிடிச் விளையாடத் தடை போடுகின்றார். வீஸ்லி இரட்டைச் சகோதரர்களை பாடசாலையில் இருந்து நீங்குகின்றார். இவர் அட்டகாசம் எதுவரை போனது என்பது கதையை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

இந்த உம்பிரிட்ச்சின் அட்டகாசங்களும், புதிய சட்டங்களும் அதிகரிக்கவே ஹரியும் அவரது சில நண்பர்களும் சேர்ந்து ஒரு சிறப்புப் வகுப்பை ஒழுங்குசெய்கின்றனர் அத்துடன் அங்கு ஹரி தான் அறிந்த மந்திர தந்திரங்களை மற்றயவர்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த குழுவினர் தம்மை டம்புள்டோரின் படை என்று பெயர் இட்டுக்கொள்வதையும் நான் சொல்லியே ஆகவேண்டும்.


கதை இப்படி மெல்ல மெல்ல சிக்கல் அடையும் நேரத்தில் ஹரியின் ஆசரியரும் நண்பருமான ஹக்ரிட் நீண்டநாளாகப் பாடசாலைக்கு வராமல் இருக்கின்றார். ஏன் வராமல் இருந்தார் என்னத்தைக் கூட்டிக்கொண்டு வந்தார் என்பதெல்லாம் நான் சொல்லப் போவதில்லை.

இதேவேளை ஹரியிற்கு நெற்றியில் உள்ள அந்த வடு சில வேளைகளில கடுமையாக எரியத் தொடங்கியது அத்துடன் கெட்ட கனவுகளும் வரத் தொடங்குகின்றது. அந்த வடு வால்ட மோர்ட்டினால்தான் ஏற்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் வால்டமேர்ட்டின் உணர்வுகள் ஹரியிலும் பிரதிபலிக்கத் தொடங்குவதுடன் வால்டமோட் முன்நிலையில் நடப்பது ஹரிக்கு கனவாகத் தெரியத் தொடங்குகின்றது. இவ்வாறு கனவு மூலம் திரு.வீஸ்லி தாக்கப்படுவதை அறிந்து அந்த இரகசியக் குழுவின் உதவியுடன் வீஸ்லி காப்பாற்றப்படுகின்றார். இப்படிக் கனவு மூலம் வால்ட மோர்ட் பற்றி ஹரி அறியும் வல்லமை பெற்றது நன்மையாக முடிந்ததா என்பதை நான் சொல்லப் போவதில்லை அதையும் படத்திலேயோ அல்லது வாசித்தோ அறிந்துகொள்ளுங்கள்.

ஹரி இந்தக் கனவுகளை காணாமல் இருக்க பேராசிரியர் சினேப்பிடம் சிறப்பு வகுப்பு எடுக்கப் போகின்றார் அங்கு 15 வயதில் ஹரியின் அப்பாவும், சிரியஸ் பிளக்கும் ஸ்னேப்பைப் படுத்தும் பாட்டை சோல்லி மாளாது. வயிறு வலிக்கச் சிரித்தேன். ஆனாலும் ஹரிக்கு அவர் அப்பாவின் செயற்பாடு அவ்வளவாகப் பிடிக்காது போனதுதான் ஏன் என்று விளங்கவில்லை.

இக்கதையின் படி எங்கள் நாயகனுக்கு 15 வயது. அந்த வயதுக் குளப்பமும் அவருக்கு வந்து சேர்ந்து விடுகின்றது. அதுதான் காதல் காதல் காதலில் உள்ளம் கண்ணாம் மூச்சி ஆடத் தொடங்கியது. சோ எனும் சீனப் பெண்ணுடன் காதலில் விழும் படும் பாடு சொல்லி மாளாது. என்றாலும் அந்தப் பொண்டு ரொம்பவுமே மோசம். 4 ம் பாகத்தில் இந்தப் பெண்ணுடன்தான் கடைசியில் இறக்கும் செட்ரிக் டிகொரி போல் நடனத்திற்குச் செல்கின்றார்.

கதை இப்படியே நகர்ந்து கடைசி கிளைமாக்ஸ் மந்திர தந்திர அமைச்சுக் கட்டடத்துள் நடைபெறுகின்றது. சண்டைக் காட்சி வாசிக்கும் போதே நுனிக்கதிரையில் உட்கார வைத்துவிட்டது. அம்மாடியோவ்… என்னவொரு மயிர்கூச்செறியும் சண்டை அது. இந்தச் சண்டை இறுதியில் ஹரியின் உயிருக்குயிரான உறவு ஒன்று இழக்கப்டுகின்றது. அது யார் என்பதைச் சொல்ல முடியாது. ஆயினும் இன்று கதை வாசித்து முடிந்ததில் இருந்து எனக்கு மனம் சரியே இல்லை. ரெளலிங் என்ன மனது இல்லாதவங்களா என்று யோசிக்க வைத்தது.

இங்கு நான் சில கதை நிகழ்ச்சிகளைக் கூறியுள்ளேன். கதை வாசிக்கச் சந்தாப்பம் கிடைத்தால் வாசிக்கத் தவறாதீர்கள். என்னைப் பொறுத்தவரையில் நல்ல பொழுதுபோக்கு நாவல்.

பி.கு : 6ம் புத்தகம் கதை பற்றிய தகவல்களை இங்கே வெளியிடுவது கடுமையாகத் தடைசெய்யப்படுகின்றது. மீறி எழுதினால் பிரதீப் அண்ணா மூலம் நீக்கப்படும். (உன் மிரட்டலையும் மீறி இங்க எழுதுவதென்றால் அவராத்தான் இருக்கும் என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கின்றது.)

6 thoughts on “67 : ஹரி பொட்டர் 5 ம் புத்தகம் ஒரு பார்வை”

  1. தமிழன் புத்தி சொல்ல வேண்டாம் என்று சொன்னாலும் சொல்வதாக மிரட்டுகின்றீர்களே!!!

  2. //உள்ளேன் ஐயா…! (Present Sir)//
    சரி வரவேட்டில் உங்களுக்கு பதிவு போடப்பட்டுள்ளது!

  3. பலே பலே!!!!
    அடுத்த புத்தகத்தையும் விரைவில் வாசியுங்கோ!!!

  4. நன்றி விதுரன்…
    வாசிச்சு முடிச்சு விமர்சனமும் போட்டாச்சு பாருங்கள்!!!!

Leave a Reply