52 : மண் திரை(ப)ப்படம்


அண்மையில் மண் எனும் ஈழத்தை சித்தரிக்க முயலும் திரைப்படம் ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது. படம் முடிந்தவுடன் சிந்தித்துப் பார்த்தேன் இது வரை எவ்விடத்தில் ஈழத்தமிழரின் வாழ்வியலை சரியாகச் சித்தரித்துள்ளார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒரு தடவை கூட அவர்கள் ஈழத்தமிழரையும் அவர்களில் வாழ்வியலையும் சரியாகப் படம் பிடித்துக் காட்டவில்லை.

இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் ஈழத்திற்குக் கொண்டுவரப்பட்டு தோட்டங்களில் கூலிக்கமர்த்தப்பட்ட தமிழர்களை இலங்கையின் பூர்வீகத்தமிழர்கள் கேவலமாக நடத்துவதாகப் படம் சித்தரிக்கின்றது.

நான் அறிந்தவரை நான் எண்னிலடங்காத அளவு மலையகத் தமிழர்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றேன். அவர்களுடன் படித்தேன் படிக்கின்றேன் எதிர்காலத்தில் வேலைசெய்வேன். இதில் எனக்கு எந்தத் தயக்கமோ குளப்பமோ இல்லை, பல தசாப்தங்களுக்கு முன்னே இருந்த விடயத்தை இப்போது இருப்பதாகக் காட்டியுள்ளார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஈழத்தை தாய்நாடாக ஏற்றுக்கொண்டு ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ள அவர்களும் இனிமேல் ஈழத்தமிழர்தான்.

திரைப்படத்தின்படி ஈழத்தமிழர்கள் பெரிய தோட்ட முதலாளிமார்களாகவும் மலையகத்தமிழர்கள் ஊரற்ற பிச்சைக்காரர்களாகவும் காட்டியுள்ளனர். நிஜத்தில் ஈழத்தமிழரிலும் ஆயிரத்தெட்டு ஜாதி வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. அவற்றை இந்தப்படம் பெருமளவில் இருட்டடிப்பு செய்துவிட்டது. அதைவிட மலையகத்தமிழர்கள் கொழும்பிலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் பிரபல முதலாளிமார்களாக இருக்கின்றனர். கொழும்பில் நான் இருக்கும் பகுதியான கொட்டஹேன பகுதியில் பணம் படைத்த மலையகத் தமிழர்களைக் காணலாம்.

அதைவிட வன்னியில் லண்டனில் இருந்து வந்தவர் ஒரு விருந்துபசாரம் வைப்பார் பாருங்கள், சொல்லி வேலையில்லை. ஆட்டமென்ன கூத்தென்ன பெண்களின் உடையென்ன… இதெல்லாம் என் ஈழம் இல்லை. அது போதாதென்று அங்கு ஒரு போராளியும் வந்து திடீரென்று தலையைக் காட்டிவிட்டு மறைவார். புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியில் இப்படியாக தமிழர்கள் தம் கலாச்சாரத்தை மறந்து கூத்தடிப்பதில்லை.

பலகாலத்திற்கு முன்பு இருந்ததும், ஈழப்போராட்டமெனும் பேரலையில் சிக்கி கலைந்து போய்விட்டதுமான சில கசப்பான நிகழ்வுகளுக்கு புது வடிவம் கொடுக்க முயலும் முட்டாள்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மொத்தத்தில் இந்த மண் திரைப்படம் என் மண்ணில்லை. ஈழத்தமிழரையும் அவர்களின் போராட்டமும் சோகமும் நிறைந்த வாழ்வையும் யாரும் தயவுசெய்து வியாபாரமாக்க நினைக்காதீர்கள். நாம் ஈழத்தமிழர் அதைவிட வேறெந்த பிரிவும் எம்மிடையே இல்லை.

ஓன்றே எம் இனம்
ஒருவனே எம் தேவன்
ஒன்றே எம் இலக்கு

அன்புடன்,
மயூரேசன்

10 thoughts on “52 : மண் திரை(ப)ப்படம்”

 1. மயூரேசன்,
  உங்கள் பார்வையைப் பதிந்ததுக்கு நன்றி.
  ஆனால் இதில் கண்டிக்க ஏதுமிருப்பதாக நினைக்கவில்லை.
  சில விசயங்களை விட்டுப் பார்ததால் கதைக்களம் என்னவோ யதார்த்தம்தான். மலையகத் தமிழர்கள் பலர் வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்தார்கள். இன்றும் நிறையப்பேர் இருக்கிறார்கள். இப்போது தங்கள் பேச்சுவழக்கைக்கூட பிரதேசத்தோடு ஒத்து மாற்றிக்கொண்டு அந்த மண்ணின் மைந்தர்களாகவே மாறிவிட்டார்கள்.
  அவர்கள் அடக்கப்பட்டதும், முதலாளியர்களால் துன்புறுத்தப்பட்டதும் உண்மை. படத்தில் சொல்லப்பட்ட காலப்பகுதியில்கூட அவை யாவும் யதார்த்தமானவைதாம்.

  சில மலையகத் தமிழர்கள் கொழும்பில் முதலாளிகளாக இருக்கிறார்களென்பது படத்துக்குச் சம்பந்தமில்லாதது. கனகராயன்குளத்தில் அந்தநேரத்தில் மலையகத்தவர் யாரும் முதலாளியில்லையென்பதும், மலையகத்தவர்கள் கூலிகளாவே மாரடித்தார்கள் என்பதும்தான் உண்மை, அதைத்தான் படமும் சொல்கிறது.

  வன்னியில் ஆட்டம் போடுவதைப் பற்றிச் சொல்லியிருந்தீர். வன்னியர்கள் வேண்டுமானால் ஆட்டம் போடுவதில்லையென்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால் லண்டனிலிருந்து வந்த ஒருத்தர் அப்படி ஆட்டம் போடுவது யதார்த்தத்துக்குப் புறம்பானது என்று சொல்ல முடியாது (அது காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் விமர்சனம் இருந்தாலும்).

  படம் பற்றி என் கருத்தையும் பதிவாக்கும் சூழல் எழுந்துள்ளதென்று நினைக்கிறேன். பார்ப்போம்.

 2. கனகராயன்குளத்தில் பொலிஸ் station இருந்ததோ???

 3. ம் மயூரேசன் உங்கள் பதிவு படித்தேன். அதற்கு வந்த வசந்தனின் பின்னூட்டத்தையும் படித்தேன். பெரிதும் வசந்தனின் கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன். தோட்டத்தொழிலாளர்களை தோட்டக்காட்டார் என்று சொல்லி ஒதுக்கி வைத்ததும்.
  யாழ்ப்பாணத்து வீடுகளுக்கு சின்னப்பையன்கள் பிள்ளைகளை வேலைக்காரர்களாக கொண்டு போனதையும் ஞாபகப்படுத்த முயலவேண்டும் மயூரேசன்.

 4. மேலே இடப்பட்ட என்னுடைய பின்னுட்டத்தில் நான் BBQ பாடற்காட்சிக்கு வக்காலத்து வாங்குவதாக ஒரு தோற்றம் வருகிறது.
  என்னுடைய கருத்தை என் பதிவிலேயே விரிவாக எழுதுகிறேன்.

 5. நான் உங்கள் பதிவைப் பார்த்தேன் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது!

 6. ஏன் பிரியா உங்களை நாங்கள் அப்படியா பார்க்கின்றோம்?

  நீங்கள் என் நண்பி தானே!

 7. மயூரேசன்,
  வசந்தன் அண்ணை சொல்லுறதில பிழை ஒண்டும் இருக்கிறதா தெரியேல்லயே?
  (அப்பாடி நான் சின்னப்பெடியன் ஆயிற்றன்)
  ரெண்டு சமூகத்துக்கிடயில இருக்கிற பிரச்சினைகளக்காட்டேக்க யதார்த்தமா அங்க இருந்த
  ஏற்றத்தாழ்வுகளையும் காட்டத்தானே வேணும்?
  இல்லாட்டிக்கு கதையில சொல்ல வந்த முக்கியமான பிரச்சினைய என்னண்டு காட்டலாம் எண்டு சொல்லுறியள்?
  1983 கலவரத்தோட இடம்பெயர்ந்த கனபேர் வன்னிக்குப் போய் இப்பவும் அங்க இருக்கிறது வெ.ப.உ 🙂
  தனியா வடக்குகிழக்கு தமிழரை மட்டும் கருதாம எல்லாரையும் கதைக்குள்ள கொண்டுவர நினச்சிருக்கலாம்தானே?
  எனக்கும் நிறைய மலையக நண்பர்கள் இருக்கினம், உண்மயைச்சொல்லப்போனா அவையோட பழகேக்க ஒரு வித்தியாசமும் வாறதுமில்ல.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.