47 : கணனிக் கன்னி

காலை 10 மணியளவில் குளியலறைக்குச் சென்று ஒரு குளியல் போட்டேன். மனது குதூகலமாகவே இல்லை. கண்கள் எரிந்து கொண்டே இருந்தன. வெளியே சூரிய தேவரும் தன் பாட்டுக்கு வெப்பத்தை இலவசமாக அள்ளி வாரிக்கொண்டு இருந்தார். நேற்று வரை வாட்டிய சிக்கண் குணியாவில் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. தலையும் தன் பாட்டுக்கு அப்பப்போ சுர் என்றது.

இன்னும் இரண்டு மணி நேரத்தில் புறப்பட்டால்தான் அங்குபோய்ச் சேரலாம் என்று யோசித்துக்கொண்டேன். குளித்து முடித்து வெளியில் வந்ததும் அம்மா வந்து முன்னால் நின்றார்.
“தம்பி! அப்ப நாங்கள் என்னமாதிரி வாறது?”

“அ…. நான் இப்ப போகோணும் பெற்றோர்மார் பிறகு வரலாம். முன்று மணிக்குத்தானே நிகழ்ச்சிகள் தொடங்கும்…” நான் சொன்னேன்.

“அப்ப சரி! நீ முன்னுக்குப் போ நாங்கள் பின்னால வாறம்”

அவசரம் அவசரமாக நீளக் காட்சட்டையை மாட்டிக்கொண்டேன். பின்பு டை, சப்பாத்து ஜெல் என அனைத்தையும் மறக்காமல் அணிந்துகொண்டேன். கண்ணாடி முன்னால் நின்று ஒரு தடவை பார்த்துக்கொண்டேன். “ம்… என்னதான் சொன்னாலும் என்ட பழைய பர்சனாலிட்டியை இந்தக் கோதாரி விழுந்த சிக்கன் குனியா அழிச்சுப் போட்டுது” மனதுக்குள் பொறுமிக்கொண்டேன். (டேய் அடங்குடா ஓவரா அறுக்காத என்று நீங்கள் சொல்வதும் கேட்கிறது)

அடுத்து கீழே வந்து கடிகாரத்தைப் பார்த்தபோது நேரம் 11:30 சாட்டுக்கு சோற்றை வாய்க்குள் தள்ளிவிட்டு கைகளை அலம்பிக்கொண்டு புறப்பட்டேன்.

பிருத்தானியக் கணனிச் சங்கம் வருடா வருடம் பட்டமளிப்பு விழாவை நடத்தும். பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக இந்த சங்கத்தின் பாடநெறியை நானும் படிக்கின்றேன். இறுதியில் நான் ஒரு லண்டன் பட்டதாரியாகும் வாய்ப்புக் கிடைக்கும். நான் இப்போது முதலாவது கட்டத்தில் சித்தியெய்தியுள்ளேன். பட்டம் பெற இன்னும் இரண்டு மட்டங்கள் தாண்ட வேண்டும். மாணவர்களைப் பாராட்டவும் மேலும் தொடர்ந்து படிக்க ஊக்குவிக்கவும் பட்டம் பெறுவோருடன் எமக்கும் சான்றிதள்கள் வழங்கவுள்னர். அதற்காகத்தான் நான் இந்தப் பறப்பு பறந்துகொண்டு இருந்தேன்.

வீதியால் நடக்கத் தொடங்கினேன். கடும் வெயில் ஆயினும் கவனம் முழுவதும் விரைவில் சென்று பஸ்தரிப்பு நிலையத்தை அடைந்து விட வேண்டும் என்பதுதான்.

நடந்துகொண்டு இருந்தபோதுதான் தெரிந்தது. அழைப்பிதழை எடுக்கும் அவசரத்தில் அடையாள அட்டையை விட்டுவிட்டு வந்துவிட்டேன். வீடு திரும்பிச் சென்று எடுத்து வருவது என்றால் இன்னுமொரு அரைமணிநேரம் அழிந்துவிடும். எடுக்காமல் சென்றால் எங்கயாவது நடுவழியில் படையினரின் சோதனை நடவடிக்கையில் மாட்டி சிறைச்சாலையில் இருக்கவேண்டியதுதான்.

எதற்கும் துணிந்துவிட்டேன்.. நடப்பது நடக்கட்டும். பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன்.

176 ம் இலக்க பஸ்சில் ஏறினேன் அது மரதானை வழியாகப் பொறளை சென்றது. பொறளையில் இறங்கி 154 எடுத்து பண்டாரநாயகா ஞாபகார்த்த மண்டபத்தை அடைந்தேன். நீளக்கைச் சட்டை டை என்பன ஏற்கனவே இருந்த வெப்பத்தை மேலும் ஒரு படி கூட்டியது. வியர்வை ஆறாக ஓடத்தொடங்கியது.

இந்த மண்டபம் இலங்கையில் ஒரு பிரபலமான மண்டபமாகும். மறைந்த முன்னாள் பிரதமரும் சிங்களச்சட்டத்தின் தந்தையுமானவரின் ஞாபகார்த்தமாக சீனா அரசு அமைத்துக்கொடுத்தது. பிரமாண்டமான கட்டிடத்துள் பல்வேறு மாநாட்டு மண்டபங்கள் இருக்கின்றன.

அன்று பார்த்து மண்டப வாயிலில் சோதனை கெடுபிடிகள் அதிகமாகவே இருந்தன. என்னிடம் அடையாள அட்டையும் இல்லாததால் பயத்துடனே மண்டபத்தின் நுழைவாயிலினுள் நுழைய முற்பட்டேன்.

“மல்லி!!! IC கோ (தம்பி அ.அ எங்கே)??” முறைப்பாகக் கேட்டான் இராணுவச் சிப்பாய். அவன் கண்களில் கோபம் மிளிர்கிறது.

ஏதோ ஒரு அசட்டுத்துணிவில் புறப்பட்டேன். இப்போது எனக்கு செய்வது தெரியவில்லை… கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை… விழிபிதுங்கத் தொடங்கினேன்.

(தொடரும்…)

4 thoughts on “47 : கணனிக் கன்னி”

  1. முதலில் இது கதையா, இல்லை உண்மை நிகழ்வா எனப்புரியவில்லை. இந்த இலங்கை தமிழ் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
    இந்த ஆக்கம் எனக்கு பலவிதமான யோசனைகளைத் தோற்றுவிக்கிறது…நடுராத்திரி 1 மணிவரை ஊரைச்சுற்றி – போலீசிடம் மாட்டினாலும் காரணம் சொல்லித் தப்பிக்கும் இளைஞர்கள் இங்கே, ஆனால் பட்டப்பகலில் அடையாள அட்டை இல்லாமல் கல்லூரிக்குக் கூட போகமுடியாத பாவப்பட்ட இளைஞர்கள் அங்கே.
    ஆண்டவா சீக்கிரம் இவர்களுக்கு ஒரு விடிவுகாலத்தைக்கொடு…

  2. //முதலில் இது கதையா, இல்லை உண்மை நிகழ்வா எனப்புரியவில்லை//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமசாமி அவர்களே!
    இது உண்மை சம்பவங்கள் பல கலந்த கற்பனைக் கதை…

Leave a Reply