புத்தகங்களுடன் ஒரு பயணம்

கடவுளின் அற்புதப் படைப்புகள் பல பல இவ்வுலகில் இருக்கின்றது. இப்படியான அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் இந்தப் புத்தகங்கள். எனக்கும் புத்தகங்களுக்கும் இடையில் ஒரு இனம் புரியாத பிணைப்பு சிறுவயது முதலே இருந்து வந்துள்ளது என்பது வரலாறு. நான் சிறு வயதில் அம்மாவை அதிகமாக புத்தகங்கள் வாங்கித்தரச் சொல்லித்தான் அடம் பிடிப்பேனாம் :). இங்கே நான் வாசித்த புத்தகங்கள் சில பற்றியும் என் தனிப்பட்ட அனுபவங்கள் பற்றியும் ஏழுதுகின்றேன்.

எல்லாக் குளந்தைகளைப் போலவும் நானும் சிறுவயதில் அம்மா, அப்பா, சித்தி கதை சொல்லக் கேட்டுப் பின்னர் அதனால் உந்தப் பட்டு சிறு சிறு படம் பார் கதை படி புத்தகங்களைப் படித்து வந்தவன்தான். இதன் பின்னர் அம்புலிமாமா, பாலமித்ரா என்று ஒரு படி மேலே போனேன். பாலமித்ராவில் மினிநாவல் என்று ஒரு கதை வரும் அதைத் தவறாமல் படித்துவிடுவேன்.

இதன் பின்னர் ராணிக் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று சித்திரக் கதைப் புத்தகங்கள் பார் ஒரு ஈர்ப்பு வந்தது. அதிகளவில் பிடித்த கதைகள் என்றால் இரத்தப்படலம், கெள பாய் கதைகள் என்பனவே. இதே வேளையில் வாண்டு மாமா, பாலு 007 போன்ற கதைகளையும் வாசித்ததுண்டு. சுமார் 10 வயது இருக்கும் போது பொன்னியின் செல்வன் வாசிக்க முயற்சி செய்தேன். கதை அடியோடு விளங்காமல் போனதும் புத்தகத்தை தூக்கி ராக்கையில் போட்டுவிட்டேன். 🙂

11ம் வகுப்பு வரை பெரும்பாலும் சிறுவர் கதைகளையே வாசித்து வந்தேன். இப்போ நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது.. அதாவது 16 வயது வரைக்கும் சிறுவர் கதைகள் வாசித்து இருக்கின்றேன். 😉

இதன் பிறகு தமிழ் வாணனின் துப்பறியும் கதைகளுக்கு அடிமையாகி அவர் எழுதின புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன். புத்தக சாலையில் நான் படிக்காத தமிழ்வாணணின் புத்தகங்களே இல்லை என்னுமளவிற்கு அனைத்துப் புத்தகங்களையும் வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்தேன்.

தமிழ் வாணனின் புத்தகங்கள் முடிந்து விடவே ருசி விடாமல் போக ராஜேஷ் குமாரின் புத்தகங்களை வாசித்தேன். ஆக உருப்படியாக எந்தப் புத்தகமும் வாசிக்காமல் இந்தத் துப்பறியும் நாவல்களில் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் காலம் கழித்தேன். இதைவிட ஆனந்தவிகடனில் வந்த சில தொடர் கதைகளையும் வாசித்தேன்.

இதன் பின்னர் உயர்தரப் பரீட்சைகள் வர கதைப் புத்தக வரலாறு ஓய்ந்துவிட்டது. 2002 ல் உயர்தரம் மீண்டும் எடுப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றேன். அங்கே 60 களில் அம்மா வாசித்த பொன்னியின் செல்வன் புத்தகம் கிடைத்தது. அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் கல்கியின் எழுத்தின் மீது காதல் வந்தது. வாசிக்க வாசிக்க அந்த உலகில் நான் வாழ்வது போல உணர்ந்தேன். ஏதோ நானே போர்க்களத்தில் போராடியதாக உணர்ந்தேன். இப்போதும் அடித்துச் சொல்கின்றேன், பொன்னியின் செல்வனுக்கு நிகராக யாரும் இதுவரை கதை எழுதவில்லை. எங்கள் அம்மா வீட்டில் அனைவரும் பொன்னியின் செல்வன் இரசிகர்கள். நானும் அதே இரத்தம் தானே அதுதான் கடைசியல் நானும் ஒரு பொன்னியின் செல்வன் இரசிகனாகிவிட்டேன்.

பொன்னியின் செல்வன் வாசிக்க முன்னரே பார்த்தீபன் கனவு, சிவகாமியின் சபதம் என்பவற்றை வாசித்து இருந்ததால் பொன்னியின் செல்வன் கதையைப் புரிந்துகொள்ள எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை. உலகத் தமிழர் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று. தற்போது ஆங்கிலத்திலும் உள்ளதென்று நினைக்கின்றேன்.

இதன் பின்னர் பல தமிழ் புத்தகங்கள் வாசித்தாலும் சொல்லிக்கொள்ளும் படியாக எந்தப் புத்தகமும் ஞாபகத்தில் இல்லை. இனி நானும் ஆங்கிலப் புத்தகங்களும் எப்படி நண்பர்களானோம் என்று பார்ப்போம்.

சிறு வயதில் உறவினர் ஒருவர் வாசித்துச் சொல்ல வாயைப் பிளந்து கொண்டு கேட்ட கதை என்றால் அது டின் டின் கதைதான். ஆனால் நான் பல தடவை வாசிக்க முயன்றாலும் எனக்கு விளங்கவில்லை காரணம் ஆங்கிலம் மட்டம். ஆயினும் பின்னர் 15 அல்லது 16 வயதளவில் சில இலகுவாக்கப்பட் ஆங்கிலப் புத்தகங்களின் பதிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். இதில் நான் வாசித்ததுதான் ஒலிவர் டுவிஸ்ட், டேவிட் கொப்பர் ஃபீல்ட், வூத்தரிங் கெயித்ஸ், ஜேன் அயர், டொம் சோயர் போன்றவை. இவற்றில் பெரும்பாலானவை ஆங்கில கிளாசிக் கதைகளே. இதன் பின்னர் எனிட் பிளைட்டனின் புத்தகங்கள் பால் ஆர்வம் திரும்பத் தொடங்கியது. அவர் எழுதிய நாவல்கள் மற்றும் ஃபேமஸ் ஃபைவ், சீக்ரட் செவன் புத்தகங்களை வாசித்துத் தள்ளினேன்.

பல்கலைக் கழகம் வரும்வரை இந்த சிறுவர் நாவல் வாசிக்கும் பழக்கம் விட வில்லை. முதற்காரணம் ஆங்கில நாவல்களை வாசிக்க ஆங்கில அறிவு பற்றாமையே.

பல்கலைக் கழகம் வந்தபின்னர் நான் கொழும்பு வந்தேன். அப்போது தற்செயலாக ஒரு ஹரிப் பொட்டர் புத்தகம் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அடே மயூரேசா உனக்கு ஆங்கில நாவல்கள் வாசிக்க முடியுமடா என்பது. பின்னர் என்ன ஹரி பொட்டர் இரசிகர் ஆனதுடன் ஹரி பொட்டர் புத்தகங்கள் அனைத்தையும் வாசித்துத் தள்ளிவிட்டேன். இதன் பின்னர்தான் ஹரி வெறியனாகி ஹரி பொட்டர் புத்தகங்கள் பற்றி விமர்சனங்களும் எழுதத் தொடங்கினேன்.

ஆனாலும் அந்த எழுத்தாளர் ரெளலிங் இருக்கிறாறே சொல்லி வேலையில்லை. அத்தனை திறமையான எழுத்தாளர். கற்பனையை எப்படி நிஜத்துடன் கோர்த்து நிசமாகக் காட்டுவது என்பதை அறிந்து அதன்படி கதை எழுதித் தள்ளியுள்ளர். இனி ஜூலையில் கடைசிப் புத்தகம் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான். பார்ப்போம் கதை என்ன ஆகின்றது என்று.

ஹரி பொட்டருக்கு அப்பால் நான் வாசித்த ஆங்கில நாவல் என்றால் டான் பிரவுணின் சில புத்தகங்கள். முதலாவது டா வின்சி கோடு, அடுத்து ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ். இதன் பின்னர் மூண்றாவதாக டிசெப்சன் பொயின்ட் புத்தகத்தை வாசித்தேன் ஒரே அலட்டல்.. அலுப்படிக்கவே புத்தகத்தை தூக்கி மூலையில் போட்டுவிட்டேன். டான் பிரவுணின் புத்தகத்தை வாசிக்கும் போது புரியம் ஆங்கில ஆசிரியர்கள் கதை எழுதுவதற்காக எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்கின்றார்கள் என்பது. நல்ல உதாரணம் டான் பிரவுண்தான்.. அரசியல், நுட்பம், அறிவியல், புவியியல், வரலாறு என்று அனைத்துத் துறைத் தகவல்களையும் அவரது நாவலில் போட்டுத் தூளாவியிருப்பார். விரைவில் இவர் எழுதிய டிஜிட்டல் ஃபோட்ரஸ் வாசிக்கும் எண்ணம் உள்ளது.

தற்போது வாசித்துக் கொண்டு இருப்பது சிட்னி ஷெல்டனின் புத்தகம் ஒன்று. மாஸ்டர் ஒப் த கேம். கதை சொல்லி வேலையில்லை. இந்த எழுத்தாளர் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கின்றேன். அண்மையில் காலமாகிவிட்டாலும் இவரின் எழுத்துக்கள் காலா காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஒரு பெண்ணின் கதையை அருமையாக மெல்ல மெல்ல ஆரம்பித்து எழுதி வருகின்றமை சிறப்பு. திடீரென கதை ஓரிடத்தில் தொடங்காமல் மெல்ல மெல்ல பழைய காலத்தில் இருந்து தொடங்குகின்றது. வாசித்து முடிந்ததும் வலைப்பதிவில் வரிவான விமர்சனம் போடுகின்றேன்.

சில புத்தகங்களை இங்கே தவற விட்டிருக்காலாம் ஆனாலும் இவைதான் என் நினைவில் நீங்கா இடம் பிடித்த புத்தகங்கள். இத்துடன் என் சுய புராணத்தை முடித்துக்கொள்கின்றேன். நீங்கள் ரசித்த புத்தகம் ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் விட்டுச் செல்லுங்களேன்.

அன்புடன்,
மயூரேசன்.

26 thoughts on “புத்தகங்களுடன் ஒரு பயணம்”

 1. ஹாரி பாட்டர் புத்தகம் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். ஒரு நண்பன் படிச்சுப்பாருன்னு மொதப் புத்தகம் குடுத்த்தான். பத்துப் பதினைஞ்சு பக்கம் படிச்சிருப்பேன். புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துட்டேன். ஏன்? நானே வாங்கிப் படிக்கத்தான் 🙂

  டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ், டிசப்ஷன் பாயிண்ட்..ரெண்டுமே இன்னும் படிக்கலை. ஏஞ்சல்ஸ் அண்டு டெமன்ஸ் புக்கே கொஞ்சம் டூ மச்.

  கல்கியின் பொன்னியின் செல்வன் மிகச் சிறந்த புத்தகங்களில் ஒன்று. மறுப்பே இல்லை.

 2. உங்கள் வாசிப்பு அனுபவம் பார்த்ததும் எனக்கும் எனது வாசிப்பு அனுபவம் எழுத வேண்டும் போலுள்ளது :). ஆனந்த விகடன் 3 ஆம் வகுப்பில் வாசிக்க தொடங்கி விட்டேன். 5 ஆம் வகுப்பு வருகின்ற அளவில் பெரிய பெரிய கதைகள் எல்லாம் வாசிப்பேன். சிலவேளை விடயங்கள் புரியாது. இருந்தாலும் யாரிடமும் கேட்க மாட்டேன். வகுப்பில் பாடம் நடக்கும்போது புத்தகத்திற்குள் ஒளித்து வைத்து கதைப் புத்தகம் வாசித்திருக்கின்றேன். பரீட்சைக்கு போய் பரீட்சை hall இல் உட்கார்ந்து கதை வாசித்து பேச்சு வாங்கிய அனுபவமும் உண்டு. சில கதை வாசித்து விட்டு, வாய் விட்டு பெரிதாக அழுத அனுபவமும் உண்டு.

  தற்போது வாசிப்பில் இருப்பது The Da Vinci Code.

 3. //ஹாரி பாட்டர் புத்தகம் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.//
  ஹி.. ஹி… 🙂 அது தெரியும்… அப்புறம் நம்ம பிரதீப்பு அண்ணா கூடத்தான்!!!

  //ஏஞ்சல்ஸ் அண்டு டெமன்ஸ் புக்கே கொஞ்சம் டூ மச்//
  அப்போ டிசெப்சன் பொயின்ட் வாசிக்கறதப் பற்றி நினைக்கவே வேண்டாம்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராகவன் அண்ணா! 🙂

 4. தற்போது நீங்கள் வாசிக்கும் புத்தகம் நல்ல புத்தகமே… ஆனாலும் அனைவருக்கும் இரசிக்கும் புத்தகம் என்ற சொல்வதற்கில்லை. அதே போல உங்கள் வாசிப்பனுவம் நன்றாக உள்ளது. உதாரணமாக பரீட்சை அறையில் கதைப் புத்தகம் வாசித்தது 🙂

  உங்களனுபவத்தையும் தனிப் பதிவாகப் போடுங்களேன்!!!

 5. உங்கள் வாசிப்பும் என்னை போன்றே இருந்திருக்கிறது. அதுவும் 16வயது வரை பாலர் புத்தகங்கள 😉

  என்னமோ Harry Potter படம் பார்க்கத்தான் பிடித்தது. படிக்க வாய்க்கவில்லை. Dan Brown ஐ பொருத்தவரை Da Vince Code, Angels and Deamons. இரண்டுமே நல்லதாகவே இருந்தது. கிட்டதட்ட Sidney Sheldonனின் அனைத்தையும் படித்த பிறகு, அலுப்பு தட்ட ஆரம்பித்துவிட்டது. இப்போது எல்லாமே கொஞ்சம் சீரியஸ் ரகம். இதோ சில வித்தியாசமாக படித்தது. http://msathia.blogspot.com/2007/06/blog-post_2839.html

  \இப்போதும் அடித்துச் சொல்கின்றேன், பொன்னியின் செல்வனுக்கு நிகராக யாரும் இதுவரை கதை எழுதவில்லை. \
  நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். என்னதான் ஆயிரம் புத்தகம் படித்தாலும் பொன்னியின் செல்வன் எல்லாவற்றையும் தாண்டி ஒரு படி மேலே தான் நிற்கிறது என்னளவில்.

 6. நான் கல்லூரிக்கு வந்த பிறகும் கூட ஊருக்கப் போகிற நாட்களில் தினமணிச் சுடர் (சிறுவர் இதழ்) படித்ததுண்டு. இன்னிக்கும் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் எங்கள் வீட்டில் மொய்ப்பதற்கு இந்த சிறுவர் நூல்கள் திரட்டு ஒரு காரணம். பள்ளி நாட்களில் தினமலர் சிறுவர் மலரை நூலக இடுக்குகளில் யாருக்கும் கிடைக்காமல் ஒளித்து வைக்க முந்துவது உண்டு. ஆனா, விகடன், ராணி காமிக்ஸ் , துப்பறியும் நாவல்கள் வகையறாக்களை கண்டாலே கிழித்து எறிந்து விடுவார் அப்பா. அதைப் படித்தால் மூளை corrupt ஆகி விடும் என்பார்.

  da vinci code வராட்டி dan brown யாருன்னே தெரிஞ்சிருக்காது. அதுக்கப்புறம் அவரது நான்கு நூல்களையும் வாங்கிப் படித்து விட்டேன். angels and demonsஏ அதிகம் என்போருக்கு deception point பிடிக்காதோருக்கு digital fortress சப்பென்று போய் விடும். மூன்று புதினங்கையும் படிச்சா நான்காவது புதினத்தில் களம், முடிச்சு எல்லாவற்றையும் எளிதில் ஊகிக்க முடியும் அளவுக்கு ஒரே பாணி.

  ஏதேதோ பின்நவீனத்துவ நூல்களை அலசி மிரட்டும் பதிவுலகில் சிறுவர் நூல்கள் பத்தி எழுதி இருக்கீங்க..ஜாக்கிரதை 🙂 நீங்க ஹாரி பாட்டர் ரசிகரானதால் தமிழ் விக்கிபீடியாவுக்கு தான் லாபம். lord of the ringsக்கு புத்தக வடிவு இல்லையா?

  கலை – தேர்வறைக்குள் நீங்களாவது கதைப் புத்தகம் படிச்சீங்க..நாங்க பாடப் புத்தகத்தையே ஒளிச்சு வைச்சுப் படிப்போம்..ஆனா, அதுக்கும் திட்டுனாங்களே ஏன் 😉

 7. Before Dan Brown, Frederick Forsyth was famous in researching a subject before he presents it in his fiction. His best so far is “The fourth Protocal”. In the beginning he would go through meticulously how a thief is disabling an alarm and steal and in the climax he will detail how a commando force (not like Schwarznegger movie) will storm into a terrorist house with the available resources.

  Your reading habits are the same as mine. I am still a big fan of “Irumbukkai Mayaavi” and the anti-hero “Spiderman” series from Lion comics. Those are not available today:(.

  Though moved on to non-fiction world, still fondly remember Forsyth, Wallace and Clancy days.

 8. முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள் மயூரேசன்!

  தமிழ் எழுத வேண்டும் என்று தொடங்குவோர் பலரது பயணமும் பெரும்பாலும் பாரதியிடம் இருந்தும், பொன்னியின் செல்வன்-இடம் இருந்து தான் தொடங்குகின்றன.
  பொன்னியின் செல்வனுக்குப் பிற்சேர்க்கையாக வந்த பாலகுமாரனின் உடையார் நாவல் வாசித்து உள்ளீர்களா? கல்கியின் காட்சி மாற்றங்கள் போல் அவ்வளவு சுவை இல்லை என்றாலும் கூட, அருண்மொழியின் தொடர்ச்சிக் கதையாக வாசிக்கலாம்!

  படமாக வரும் என்றே தெரியாமல் வாசிக்கும் சில புத்தகங்கள்…சில சமயம் அப்படி லயித்து விடும். சான்றாக The Lord of the Rings – J. R. R. Tolkien
  அதே போல் The Da Vinci Code
  Douglas Adams-உம் நல்ல வாசிப்பே! – Last Chance to See

 9. //பல்கலைக் கழகம் வரும்வரை இந்த சிறுவர் நாவல் வாசிக்கும் பழக்கம் விட வில்லை//

  அட என்ன இப்படிச் சொல்லிட்டீங்க! சில சமயம் இப்பக் கூட Hardy Boys படிச்சாக்கா….அப்படியே இலகுவாகி விடுவோம்! இளமை திரும்பி விடும்! :-)))
  முக்கியமான விடயம் என்னன்னா, ஒரே மூச்சாகப் படித்து விடலாம், சோர்வான நேரத்தில் ஒரு கப் காபி போல!

 10. வணக்கம் மயூரேசன்,
  நட்சத்திர வாரத்திற்கு வழ்த்துக்கள். ரவிஷங்கர் சொன்னது போல பின் நவீனத்துவ கதைகளை பட்டியலிடும் காலகட்டத்தில் சிறுவர் புத்தகங்களை சொல்லி மீண்டும் பின்னோக்கிப் போக வைத்து விட்டீர். இப்போதும் கூட ஒரு சில சிறுவர் புத்தகங்களை படிக்கையில் ஒட்டு மொத்தமாய் எல்லாமே மறந்து போய், சின்னஞ் சிறு பையனாகவே மாறிடும் ரகசியம் மட்டும் ஏனோ புரிவதே இல்லை. எல்லாம் புத்தகங்கள் செய்யும் வேலை. இதோ என்னுடைய வாசிப்பனுபவம்.
  http://nandhakumaran.blogspot.com/2007/05/blog-post.html

 11. //கலை – தேர்வறைக்குள் நீங்களாவது கதைப் புத்தகம் படிச்சீங்க..நாங்க பாடப் புத்தகத்தையே ஒளிச்சு வைச்சுப் படிப்போம்..ஆனா, அதுக்கும் திட்டுனாங்களே ஏன்//

  :))))))))

  அம்புலி மாமா, சிரித்திரன் எல்லாம் நான் ரசித்த புத்தகங்கள்.

 12. டான் ப்ரவுனின் நான்கு நாவல்களையும் படித்திருக்கிறேன்.டா வின்சி கோடை விட ஏன்ஜல்ஸ் அண்ட் டீமனே சிறப்பான படைப்பு என்று கருதுபவர்கள் பலர் உண்டு. டிஜிட்டல் போர்ட்ரெஸ் ஏன்ஜல்ஸ் அண்ட் டீமன் அளவுக்கு இல்லாவிட்டாலும், படிக்கலாம்!! டிசெப்ஷன் பாயின்ட் உங்களுக்கு பிடிக்காமல் போனதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. அவரின் நான்கு நாவல்களில் என்னை பெரிதும் கவராதது டிசெப்ஷன் பாயின்ட் தான்.
  சிட்னி ஷெல்டன் பற்றி சொல்லவே வேண்டாம்.அவரின் எழுத்துக்களின் எனக்கு அளவற்ற மதிப்பு உண்டு.சக்தி வாய்ந்த பெண் பாத்திரங்கள் படைப்பதிலும்,பத்திரங்களை மிக தத்ரூபமாக சித்தரிப்பதிலும் நான் படித்தவரை அவரை மிஞ்சியவர் யாரும் கிடையாது.
  நான் பெரிதும் ரசித்த இன்னொரு எழுத்தாளர் Michael Crichton.
  Timeline,Disclosure,Airframe போன்ற நாவல்கள் நான் அவரின் படைப்புகளில் பெரிதும் ரசித்துப்படித்தவை. சந்தர்ப்பம் கிடைத்தால் தவறாமல் படித்து பாருங்கள். அதுவும் Timeline என்கிற நாவல் நான் மிகவும் ரசித்த கதை. இந்த கதை ஒரு ஆலிவுட் படமாகவும் வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  இப்பொழுது அவரின் State of fear என்ற புத்தகத்தை நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருக்கிறேன். படித்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன்!! 🙂

  நட்சத்திர வார வாழ்த்துக்கள்!! 🙂

 13. அது சரி மயூரேசன், 16 வயதுவரை சிறுவர் புத்தகத்திலேயே கழித்திருக்கிறீர்கள் பரவாயில்லை ஆனால் இன்னும் சிறுகதை மற்றும் வணிக நாவல்களையே அதிகம் படித்துக் கொந்டிருக்கிறீர்களே! 🙂 இலக்கியம், தத்துவம் என்றெல்லம் இறங்கலாமே? சுந்தர ராமசமி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன் , எஸ்.ராமகிருஷ்ணன் என்ட்ரெல்லம் வாசிக்கத் தொடங்கினால் புத்தகங்கலின் சுவையை இன்னும் அதிகமாய் உணர்வீர்கள். வாழ்த்துக்கள்!

 14. மேலே என் மறுமொழியில் உள்ள எழுத்துப் பிழைகளை பொருத்தருள்க! நீண்ட நாள் இடைவெளிக்குப் பின்னர் தட்டச்சு செய்ததால் வந்த வினை

 15. //நல்ல வாசிப்பு அனுபவம்தான்,நட்சத்திர வாழ்த்துகள்.//
  நன்றி ஜெஸிலா!!

 16. சத்தியா.. நீங்கள் சொன் மாதிரி பலபேருடைய வாசிப்பு அனுபவம் ஒன்றாகவே இருந்திருக்கின்றது….!!!

  டான் பிரவுண் கதைகள்… டாவின்சி கோடுக்குப் பின்னரே பிரபலமானது என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்…

  உங்கள் அனுபவத்தையும வாசித்தேன் அருமை! 🙂
  சிட்னி ஷெல்டன் இப்போதுதான் ஆரம்பித்துள்ளார் … பார்ப்போம் அவருடன் பயணம் எவ்வாறு அமைகின்றது என்பதை 😉

 17. ரவி.. பின்னூட்டம் போடுற இடத்தில் உங்க புத்தகங்களுடன் பயணம் எனும் தலைப்பில் ஒரு குறுங்கட்டுரை போட்டுவிட்டீங்க!!!! 🙂

  நான் வாசித்த ராணிகாமிக்ஸ், லயன்காமிக்ஸ் எங்க வீட்டிலயும் இருக்கு என் பெறாமக்கள் இப்போது எங்க வீட்ட வந்தா அந்தப் புத்தகங்களை வாசித்துக்கொண்டு இருப்பானுக. என் பெரியப்பா கூட அப்படித்தான் சித்திரக்கதைகளை வாசிக்க விடமாட்டார் காரணம் ஏழுத்தாற்றல் மங்கிவிடும் என்று கூறுவார்.

  LOTR புத்தகம் இன்னமும் வாசிக்கவில்லை…!! எதிர்காலத்தில் வாசிக்கும் உத்தேசம் உண்டு.. திரைப்படம் பார்தகாரணத்தால் புத்தகம் வாசிக்க வேண்டும என்பதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை..!!!

 18. ராஜேஸ் சந்திரா.. நீங்கள் சொன்ன எழுத்தாளரை இன்றுதான் நான் கேள்விப்பட்டேன்… சந்தர்ப்பம் கிடைத்தால் வாசிக்கலாம்…!!! பாருங்கள் பலரின் வாசிப்பு அனுபவம் ஒன்றாகத்தான் இருக்கின்றது..!!!

 19. KRS அவர்களே… பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி.!!!
  சிறுவர் நாவல்கள் எம்மை சிறுவர் ஆக்குவதில் எந்த அதிசயமும் இல்லையே 🙂

  நீங்கள் சொன்ன பாலகுமாரணின் புத்தகம் நான் வாசிக்கவில்லை இன்றுதான் அப்படி ஒன்று உள்ளது என்று கேள்விப்பட்டேன்…!!!

  சிலவேளைகளில் நாம் புத்தகம் வாசித்து ஒன்றை கற்பனை பண்ண திரைப்படத்தில் இன்னுமொன்றைக்காட்ட சீ.. என்றாகும் தருணங்களும் உண்டல்லவா????

 20. நன்றி நந்தா…
  பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம்.. இவையெல்லாம் எனக்குப் புரியாத வார்த்தைகள்… 🙁
  ஏதோ என்னாலானதை வாசித்து இங்கே எழுதினேன்…!!! டான் பிரவுண்… சிட்னி ஷெல்டன் கூட சிறுவர் நாவல்களா எழுதினார்கள் நந்தா 😉

 21. CVR ஒவ்வொருத்தருக்கும் வாசிப்பு விருப்புகள் வேறுபடுகின்றன.. அதுதான் எனக்குப் பிடிக்காத நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கின்றதன…. டைம் லைன் திரைப்படம் பார்த்தேன்.. அருமை, அவரின் மற்றய புத்தகங்களையும் விரைவில் படிக்கவேண்டும்.!

 22. ஆமாம் சாணக்கியரே.. நீங்கள் சொல்வது சரி எந்த வாசீப்பாளனும் தன்னை ஒரு துறைக்குள் சுருக்கிவிடக்கூடாது..!!! விரைவில் அவற்றையும் வாசிக்கத் தொடங்கவேண்டும்!!!

 23. உங்கள் நட்சத்திர வார (இத்)தலைப்பு தமிழ் வலையுலகில் வித்தியாசமானது… இதுவரை புத்தக வாசிப்பு அனுபவம் பற்றி யாரும் (நட்சத்திர வாரத்தில்) எழுதவில்லை. (??)

  நானும் “பொன்னியின் செல்வன்” இரசிகனாக்கும்…

 24. ஜெய் இந்த தளம் முன்பே அறிமுகம். அத்துடன் நூலகம் தளத்தில் ஈழத்துப் படைப்புகளை வாசிக்கலாம்.

Leave a Reply