கூகுளும் தமிழ் இடைமுகங்களும்

கூகிள் அதன் முதற் பக்கத்திற்கு தமிழில் இடைமுகம் வழங்குவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆயினும் ஜிமெயில் போன்ற சேவைகளுக்கு இது வரை இடைமுகம் வழங்கப்படவில்லை. ஹிந்திக்குப் பல காலங்களுக்கு முன்பே வழங்கிய பின்னரும் தமிழுக்கு இன்னமும் வழங்கப்படாமை வருத்திற்கு உரிய விடயமே.

 

இன்று காலை கூகுள் கணக்குகள் பகுதியில் உட்புக முயன்றபோது தமிழ் இடைமுகம் முற்றாக வழங்கப்பட்டிருந்ததைக் கண்டு ஆனந்தப்பட்டேன். உடனே ஓடிச்சென்று ஜிமெயிலில் பார்த்தால் இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படவில்லை.

ஏன் இன்னமும் வழங்கப்படவிலலை என்றால் அதற்குச் சில காரணங்கள் எனக்குத் தெரிந்தன அவற்றை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். காரணம் மறந்துவிட்டுப் போவதற்கல்ல நிவர்த்தி செய்து தமிழை கணனியில் வாழவைக்க.

 • கூகிள் தமிழுக்கு உரிய அந்தஸ்து வழங்காமை – அதாவது தமிழ் மொழிமாற்றப்பணிகளுக்கு கூகிள் பணியாளர்களை அமர்த்தாமை.
 • நம் மக்கள் மொழிமாற்ற உதவி செய்யாமை – அதாவது Google in your language என்றொரு செயற்திட்டம் உள்ளது. இதில் தமிழர் பங்களிப்பு குறைவாக உள்ளமை.
 • தரம் குறைவான மொழிமாற்றம் – சரி மொழி மாற்றம் செய்தவற்றையாவது சரியாகச் செய்ய வேண்டாமோ?? அஞ்சல் அனுப்புக என எழுத வேண்டிய இடத்தில் Anjal anuppuga என்று தங்கிலீசில் எழுதி வைத்துள்ளமை.
 • ஒருங்கிணைக்காமை –  புதுச் சொற்களுக்கு என்ன தமிழ் சொல் பாவிப்பது என்று மொழி மாற்றுபவர்களுக்குத் தெரியாது. அவரவர் தன்பாட்டுக்கு ஏதாவது போட்டு மொழி மாற்றிவிடுவது. இதனால் கடைசியில் பலவேறு தமிழ் சொற்கள் ஒரு சொல்லுக்கு வந்து சேரும்.

மைக்ரோசாப்டினால் தமிழ் இடைமுகம் வழங்க முடியுமானால் கூகிளாலும் இது வழங்க முடியும். ஆயினும் கூகிள் செய்து முடிக்கும் வரை காத்திருப்பதை விட நாங்களே ஒரு கூட்டமைப்புடன் செயற்பட்டு ஒரு நோக்குடன் கூகிள் சேவைகளை தமிழ் மயப்படுத்த வேண்டும். இதன் மூலம் பல்வேறு ஆங்கிலம் தெரியாத பாமரரும் பயன்பெற வழிசமைக்கும்.

தமிழாக்கப் பணியில் இணைய இங்கே செல்லுங்கள் 

சில திரைக்காட்சிகள்

6 thoughts on “கூகுளும் தமிழ் இடைமுகங்களும்”

 1. மயூ, கூகுளில் தமிழ் இடைமுகப்பு எல்லா சேவையிலும் இல்லை என்பதை விட இந்த அரை குறை கண்றாவி மொழிபெயர்ப்பு கவலை அளிக்கிறது. account = கணக்கு என்று கூடவா மொழிபெயர்த்தவருக்குத் தெரியாது? anjal anuappuga போன்ற தமிழ் கொலைகள் வேறு. இந்த சொதப்பலுக்கு கூகுளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதன் மொழிமாற்ற platform சுத்த வீண். மொழிபெயர்ப்பாளர்களிடையே ஒருங்கிணைப்புக்கு ஒரு வழியும் இல்லை. 6 கோடி தமிழர் உள்ளதுக்கு நியாயப்படி பார்த்தால் கூகுள் இந்த மொழியாக்கத்தை காசு கொடுத்தே செய்திருக்க வேண்டும். குறைந்தது, அதன் மொழிக் கோப்புகளை .po வடிவில் தந்தாலாவது நாமாவது செய்யலாம். அது வரை ஆர்வம் இருந்தாலும், அதன் மொழிபெயர்ப்புத் தளம் ஒருங்கிணைப்புக்கு உகந்ததாய் இல்லை

 2. ஆமாம் ரவி.. நான் பரவலாகச் சாட்டிய குற்றத்தை நீங்கள் ஒரேயடியாக கூகிள் மீது சாத்திவிட்டீர்கள். 😯

  கூகிள் காரர்களுக்கு தமிழ் மேல் அப்படி என்ன எரிச்சலோ தெரியாது… வேர்ட்பிரஸ் போன்று .po கோப்புகளை வழங்குவார்களாயின் நாமே ஒரு குழு அமைத்து மொழிபெயர்த்து இருக்கலாம். அதற்கும் அவர்களுக்கு விருப்பம் இல்லை…!!! 🙄

 3. உண்மையில் கூகிள் பல மொழிகளை கவனிப்பதே இல்லை. இதில் தமிழும் அடங்கும். ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதுவதும் தமிழ்ச் சொற்கள் என்று பல கொச்சை சொற்களும் ஆங்கில எழுத்துக்களில் தமிழ்ச் சொற்களும் நிறைந்துள்ளது. நான் பலமணி நேரம் செலவிட்டு எழுதிய சொற்களை கூகிள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. இவ்வளவிற்கும் நான் எழுதிய அனைத்துச் சொற்களுக்கும் விளக்கத்துடன் அகரமுதலியின் சுட்டியும் கொடுத்திருந்தேன்.
  பலமுறை எழுதி கேட்ட பின் ஒரு முறை எங்கள் மொழி பெயர்ப்பாளர்கள் மீது எங்களுக்கு மிக்க நம்பிக்கை இருக்கிறது. எனவே அவர்களால் மொழிமாற்ற முடியாத சொற்களை மட்டுமே ஏற்போம் என்பது போன்ற ஒரு மின்னஞ்சல் வந்தது. அதிலிருந்து என் நேரத்தை வீணடிப்பதை நிறுத்திவிட்டேன்.
  தமிழ் மட்டுமல்ல இன்னும் பல மொழியினர் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.
  மேலும் கூகிளைப் பொறுத்தவரை இந்தியாவின் மொழி இந்தி மட்டுமே என்ற கருத்து வலுவாக இருப்பதாகத் தோன்றுகிறது.

 4. //கூகிள் பல மொழிகளை கவனிப்பதே இல்லை//
  ஆமாம் ஏற்றுக்கொள்கின்றேன் 😕

  //இந்தியாவின் மொழி இந்தி மட்டுமே என்ற கருத்து வலுவாக இருப்பதாகத் தோன்றுகிறது.//
  பார்ப்போம்… என்ன நடந்து முடியப்போகின்றது என்று. கடைசியாக யாகூ காரர் ஏதாவது செய்து முடிக்கத்தான் இவர்கள் ஓடி முழித்து ஏதாவது செய்ய முனைவார்கள்.

 5. கூகுளில் அதிக இந்தி பேசும் இந்தியர்கள் வேலை பார்ப்பதால் அவர்களின் பார்வையும் இந்தி வழியாகவே இருக்கலாம். தமிழ் மாணவர்கள் எல்லாம் நல்லா படிச்சு போய் கூகுளில் சேருங்கய்ய 🙂

  மயூரேசன், நீங்கள் சொல்வது போல் இந்திய மொழிகள் மேல் யாகூ கூடுதல் கவனம் செலுத்தி வருகிறதாம். சுந்தர் மூலம் அறிந்த தகவல். கூகுள் விழித்துக் கொண்டால் சரி

 6. //யாகூ கூடுதல் கவனம் செலுத்தி வருகிறதாம//
  ஆமாம் அவர்களின் கட்டுரை ஒன்று வாசித்த ஞாபகம். அதில் இந்தியாவின் மொழி ஹிந்தி மட்டுமல்ல அங்கு ஹிந்தி தெரியாத பலர் உள்ளனர். அதனால் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தனியே கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தனர். 😛

  //மிழ் மாணவர்கள் எல்லாம் நல்லா படிச்சு போய் கூகுளில் சேருங்கய்ய//
  அது சரி…. :mrgreen:

Leave a Reply