கல்லூரி விமர்சனம்

திரைப்படம் என்றால் அழகான ஹீரோ இருக்க வேண்டும், அழகான துணை நடிகர்கள் இருக்க வேண்டும், பெரிய செட்டுகள் இருக்க வேண்டும், ஹிப் ஹொப் பாடல்கள் இருக்க வேண்டும், நமீதா வந்து குத்துப் போட வேண்டும் என்றெல்லாம் நம்மவர்கள் எதிர்பார்ப்பர்.இப்படியான எதிர்பார்ப்புகளால் இத்தனை நாள் பார்க்காமல் இருந்த திரைப்படம்தான் கல்லூரி. நேற்று நேரம் போக்க சும்மா பார்ப்போம் என்று நினைத்து இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை நிறுத்த முடியாமல் பார்த்து முடித்தேன்.

கதைக்களம் சிறிய நகரம் ஒன்றில் உள்ள கல்லூரி. ஒரு நண்பர்கள் வட்டத்தைக் காட்டுவதுடன் ஆரம்பிக்கின்றது. இந்த நண்பர்கள் வட்டத்துடன் பெங்களூரில் வரும் கதையின் நாயகி ஷோபனா இணைந்து கொள்கின்றாள். இந்தக் குழுவில் இருக்கும் முத்து எனும் பையனுக்கும், இந்த அழகான நாயகி ஷோபனாக்கும் காதல் பிறக்கின்றது. இவர்களின் காதலுக்கு என்னானது என்பதே மீதிக்கதை.

கதையைப் பின்னிச்செல்லும் விதம் அருமை. திரைக் கதையுடன் நாம் இணைந்து விடுவது நிச்சயம். ஒவ்வொரு பாத்திரமும் அழகாக காட்டப் பட்டுள்ளது. காட்டப்பட்டுள்ளது என்பதை விட வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. நகைச்சுவைக் காட்சிகள் பரவாயில்லை. குறிப்பாக இரட்டைச் சகோதரர்கள் அடிக்கும் லூட்டி, ஆங்கில வாத்தியின் வியாபார முயற்சி.

சில இடங்களில் நாயகன் நடிப்பில் கொஞ்சம் திணறுகின்றார். என்றாலும் மொத்தத்தில் நல்ல நடிப்பு. ஷோபனா, முத்து காதல் வளரும் விதம் அழகாகக் காட்டப் பட்டுள்ளது. நட்பில் வரும் ஊடல்களும் விபரிக்கப் பட்டுள்ளது.

இசையமைப்பு சுமார், ஒரு பாடல் மட்டும் தேனாய் இனிக்கின்றது. உன்னருகில் வருகையில் என்பதே அந்தப்பாடல். இந்தப் பாடலில் தொகுப்பு சுமார் என்றாலும் காட்சிக் கோர்வை கலக்கலாக உள்ளது. மீராவிற்கு பின்னர் என்னைக் கவர்ந்த நாயகி இவர்தான். சிரிக்கும் போது அப்படியே மனதை வருடிச் செல்கின்றார்.

இவ்வழவு அழகாக திரைப்படத்தை எடுத்துவிட்டு அதில் இப்படி ஒரு சப்பை முடிவை வைத்திருக்க வேண்டாம். முடிவு படு சொதப்பல்.

இது வரை இத்திரைப்படத்தைப் பார்க்காவிட்டால் கட்டாயம் பாருங்கள். உங்கள் கல்லூரி வாழ்க்கையின் ஒரு அத்தியாயமாவது இருக்கும். நினைவுகளை மீட்ட வைக்கும் ஒரு அழகான திரைப்படம்.

10 thoughts on “கல்லூரி விமர்சனம்”

 1. உலகின் மிகச் சொதப்பலான முடிவுகள் கொண்ட முதல் 10 படங்களில் இது ஒன்று !

 2. ஒரு வெள்ளைத் தாளைக் காட்டினால்; அதில் எங்காவது மூலையில் ஒரு சிறு கறுப்புப்புள்ளி உள்ளதென
  பூதக்கண்ணாடி கொண்டு பார்த்துக் குறைகூறுவதில் சிலருக்கு மிகத் திருப்தி.
  அந்த வகையில் சிலர் “கல்லூரி”யைப் பார்க்கிறார்கள்.
  ஆனால் சமீபகாலங்களாக வந்த படங்களுடன் ஒப்பிடும் போது; இந்தப் படம் மிகச் சிறந்த படங்களில்
  ஒன்று.
  உங்களைப் போன்ற பல இளைஞர்களுக்கு பிடித்துள்ளது. இதே இப்படத்துக்குக் கிடைத்த பெரு வெற்றி;
  நான் வாழ்வில் மிக ஒன்றி ரசித்த படங்களில் ஒன்று.
  இன்றைய படங்களில் பாடல்களைப் பெரிதாக எதிர்பார்ப்பதில்லை.அதனால் இப்படத்தில் அது எனக்குக் குறையாகத் தெரியவில்லை.

 3. johan-paris –

  பாட்சா திரைப்படத்தில் இறுதிக் காட்சியில் சண்டை போடுவதற்காக பாட்சா வரும் ஆட்டோ விபத்துக்குள்ளாக, “பாட்சா இறந்தார், ஆன்டனி வென்றார்” என்று முடிவு வைத்தால் எப்படி சொதப்பலாக இருக்குமோ அவ்வளவு சொதப்பல் இந்தப் படத்தின் முடிவு…

  ஒரு திரைப்படத்துக்கு முடிவு என்பது மிக முக்கியமானது. அதனாலேயே இந்தப் படம் நிறைவு தராமல் போகிறது.

  இதை விட முக்கியம், முடிவில் காட்டப்படும் உண்மை நிகழ்வு இன்னும் வீரியத்துடன் விவரணப் படமாகவோ உண்மைக்கதையாகவோ எடுக்கப்பட வேண்டிய ஒன்று. இப்படி வணிக நோக்குக்கு ஊறுகாய் போல் பயன்படுத்தியது அவர்களை அவமானப்படுத்தியது போல் இருக்கிறது..

  எனக்கு ஏனோ இந்தப் படத்தைப் பார்க்கும்போது இயல்பாய் இருந்ததாய்த் தோன்றவில்லை. இயல்பாய் இருக்க இயக்குனர் மெனக்கெடுவது தான் தெரிந்தது. இதைவிடக் காதல் திரைப்படத்தை நன்றாகச் செய்து இருந்தார்..

 4. //பாட்சா திரைப்படத்தில் இறுதிக் காட்சியில் சண்டை போடுவதற்காக பாட்சா வரும் ஆட்டோ விபத்துக்குள்ளாக, “பாட்சா இறந்தார், ஆன்டனி வென்றார்” என்று முடிவு வைத்தால் //

  ரவி சங்கர்!
  இப்படி ஒரு முடிவு “பாட்சா” வுக்கு வைத்திருந்தால்; தமி்ழகம் எரிந்திருக்கும்..
  ஏதோ ஆண்டவன் எல்லோரையும் காப்பாற்றிவிட்டான்.
  படத்திலும் ரஜனி சாகக்கூடாதெனப் பக்குவப்படுத்தப்பட்ட ரசிகர்கள் ;அவர்களுக்காக எடுக்கும் படங்களுடன்; இவை சரிப்படாதுதான்.

 5. I disagree on all the comments on the ending of the movie.
  I think it was a very good ending for this movie. If the director wanted to create a true story he could have made a documentary. Not many movies in India and Tamilnadu are made with real life examples. I have seen many movies made in USA which are loosly based on real events and are very good. The ending had almost the same impact as the real life incident had on me. I would like to add that this was one of the best movies of last year.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.