கண்காட்சி (சிறுகதை)


எங்கோ ஒரு தூரத்து கூரையில் இருந்து சேவல் ஒன்று தன் முன்னங்காலில் எம்பி மிகுந்த பிராயத்தனத்துடன் ஒரு தடவை கூவியது. சூரியனின் கதிர் பட்டு அந்தச் சேவலின் சிறகுகள் பளபளத்தன. அங்கங்கே பறவைகள் தம்பாட்டுக்கு தாங்களும் “கீச்.. கீச்…” என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டிருந்தன. சூரியன் மேற்கில் அலுப்பு முறிக்கத் தொடங்கிவிட்டான்.

இத்தனையும் நிதானமாக நடக்க சுகுமார் மட்டும் பதறித் துடித்து நேரத்தைப் பார்த்தான். காலை நான்கு மணி இருக்கும், சுகுமார் எழுந்துவிட்டான். அருகிலே தூங்கிக்கொண்டு இருந்த தன் தந்தையாரையும் தாயாரையும் பார்த்தான், பின்னர் ஒரு தயக்கத்துடன் தந்தையாரை நெருங்கி.

“அப்பா.. அப்பா…”

“என்னடா தம்பி??” அரைத் தூக்கக் கலக்கத்தில் கேள்வி கேட்டார் சுந்தரேசன்.

“இண்டைக்கு நாங்கள் செய்த அந்த பொம்மை வீட்டை ஸ்கூலுக்குக் கொண்டு போகவேணும். இண்டைக்கு கொண்டு போகாட்டால் என்ட அந்த வீட்டை கண்காட்சியில வைக்கேலாது எண்டு ரீச்சர் சொன்னவர்” ஒருவிதப் பதட்டத்துடன் கூறினான் சுகுமார்.

“சரியடா.. இப்ப படடா! காலம்பிற பஸ் ஸ்டாண்டில கொண்டு வந்து எல்லாச் சாமானையும் தாறன்” புன்னகையுடன் கூறினார் சுந்தரேசன்.

அரைமனதுடன் மீள கண்களை மூடினான் சுகுமார். அவனால் தூங்க முடியவேயில்லை. கனவில் தான் பாடசாலைக்குக் கொண்டு சென்ற பொம்மை வீடு மழை நீர் பட்டு பழுதுபட்டுவிடுவது போன்ற நிகழ்வுகள் திரும்பத் திரும்ப வந்துகொண்டு இருந்தது.

கடைசியாக ஆறு மணியளவில் சுகுமார் தாயாரின் குரல் கேட்டு துகில் நீத்தான்.

சுகுமார் ஏழு வயதுப் பாலகன். இவன் கல்விகற்கும் பாடசாலை இவன் வீட்டில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. இவன் கிராமத்தில் இருந்து பாடசாலைக்குச் செல்வதென்றால் காலையில் ஏழு மணிக்கு வரும் அரச பேரூந்தில் செல்ல வேண்டும். தனியார் பேரூந்தில் செல்வதென்றால் பணம் அதிகம் செலவாகும், அதனால் இந்த ஏழைகளுக்கு அந்த அரச பேரூந்தே தஞ்சம்.

சில நாட்களுக்கு முன்னர் சுகுமாரின் வகுப்பாசிரியர் தனது மாணாக்கருடன் பேசத் தொடங்கினார்.

“பிள்ளைகளே!!! எங்கட பாடசாலையில ஒரு கண்காட்சி நடக்கப்போகுது.. அதுக்கு நீங்கள் உங்களுக்கு விருப்பமான கைவினைப் பொருட்களைக் கொண்டு வரலாம்”

அன்று முதல் சுகுமார் கனவெல்லாம் தானும் அந்தக் கண்காட்சியில் ஒரு கைவினைப் பொருளை வைக்கவேண்டும் என்பதே. வீடு திரும்பியதும் தன் தந்தையாரை நச்சரித்து ஒரு சிறிய பொம்மை வீடு செய்துகொண்டான்.

அழகான சிவப்பு நிறக் கூரை, பளீர் என்ற வெள்ளை நிறத்தில் சுவர்கள். வீட்டினுள்ளே பொம்மை மனிதர்கள், தளபாடங்கள், தொலைக்காட்சி, வீட்டின் வெளியே சின்னப் பூந்தோட்டம், கிணறு என்று அவன் வீடு கலாதியாக இருந்தது.

இத்தனை வேலையும் முடிய நாட்கள் நன்கு சென்றுவிட்டன. பொறுமை இழந்த ஆசிரியர் நாளை உன் கைவினைப் பொருளைக் கொண்டு வராவிட்டால் அதைக் கண்காட்சிக்குச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று வகுப்பில் சத்தமிட்டுவிட்டார். சுகுமாருக்கு அதைச் சகிக்கவேயில்லை. இவ்வளவு அழகான வீட்டை எப்படி கண்காட்சியில் வைக்காமல் விடுவது??? இன்று அவனுக்குக் கொடுக்கப்பட்ட தவணையின் கடைசிநாள்.

அதனால்தான் இவ்வளவு பதட்டத்துடன் காணப்படுகின்றான் சுகுமார்.

ஆறு முப்பதுக்கே சாப்பாடு முடித்து பாடசாலை செல்லத் தயாராகிவிட்டான். தந்தையார் சுந்தரேசனும் பொம்மை வீட்டை தன் கைகளில் ஏந்தியவாறு தன் புத்திரனுடன் பஸ் தரிப்பிடத்திற்குச் சென்றனர்.

6.45 க்கு வரவேண்டிய தனியார் பேரூந்து இவர்களைக் கடந்து சென்றது. பேரூந்து கடந்து செல்லும் போது சுகுமாரின் கண்கள் சிறிய ஏக்கத்துடன் தந்தையாரைப் பார்த்தது. அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் புரியாதது போல தந்தையார் அமைதியாக இருந்துவிட்டார்.

சுகுமாரைப் பொறுத்தவரை நேரம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தது. அந்தப் பொம்மை வீட்டை ஆசிரியரிடம் ஒப்படைக்கும் வரை அவனுக்கு நிம்மதி இல்லை.

கடைசியாக இப்போது ஏழு மணியாகிவிட்டது. இன்னமும் பேரூந்து வரவில்லை. சுகுமார் கலக்கம் அடையத் தொடங்கினான். தந்தையின் கையில் இருந்த மணிக்கூட்டை அடிக்கடி பார்த்துக்கொண்டான்.

“அப்பா..! ஏன் இன்னும் பஸ் வரேல?”

“அடேய்..!! அரசாங்க பஸ்சுகள் எண்டைக்கடா நேரத்துக்கு வந்திருக்குது?” மகனைத் தேற்றினார் தந்தையார். என்றாலும் அவர் மனதின் அடியிலும் இப்போது சந்தேகம் துளிரிவிடத் தொடங்கியிருந்தது.

நேரம் மெல்ல மெல்ல ஓடத் தொடங்கியிருந்தது. ஏழு மணி மெல்ல மெல்ல நகர்ந்து ஏழு முப்பது ஆகிவிட்டது. சுகுமார் கண்களில் இப்போது கண்ணீர்த் துளிகள்.

மற்றய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

“சுந்தரேசன்… கார்த்திக் சொன்னவன், சீ.டி.பி பஸ் இண்டைக்கு பிரேக் டவுனாம். வராதாம், பொடியைக் கூட்டிக்கொண்டு வீட்ட போங்கோ” சொல்லிக்கொண்டே நகர்ந்தார் சுந்தரேசனின் அயல் வீட்டுக்காரன் கதிரேசன்.

“தம்பி நீ நாளைக்கு இத பள்ளிக்கூ……” சொல்லிக் கொண்டே சுந்தரேசன் திரும்பிப் பார்த்தார், அவர் மகன் பேரூந்து செல்ல வேண்டிய திசையில் நடந்துகொண்டு இருந்தான். அவனுக்குத் தெரியும அடுத்துவரும் தனியார் பஸ்சில் தன்னை அனுப்பத் தன் தந்தையிடம் பணம் இல்லை என்பது.

கண்ணில் ஒரு துளி கண்ணீர் ததும்ப, அதை தன் பின்னங்கையால் துடைத்துவிட்டுக்கொண்டே கதிரேசன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். கதிரேசனிடம் ஒரு பழைய சைக்கிள் உள்ளது சுந்தரேசனுக்குத் தெரியும்.

9 thoughts on “கண்காட்சி (சிறுகதை)”

 1. மயூர் கதையை நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.
  கதையின் முடிவு சுபம்தானே?

  இதே போன்று ஒரு சிறுகதையை நானும் எழுதியுள்ளேன்.
  (திருச்சி – தினபூமி தினசரியில் வெளியானது)
  அதில் சினிமா பாக்க ஆசைப்படும் சிறுமி படும் பாடுபட்டு
  அப்பாவிடம் அனுமதி வாங்கி, அனைவரும் சினிமாவிற்கு கிளம்பும் சமயம்
  அவளது பாட்டி இறந்து விடுகிறாள் (கதையின் பெயர் – தடை..!)

  இந்த விதமான கதைகள் நம் உள் மனதின் வெளிப்பாடுதான் என்று எங்கேயோ படித்த ஞாபகம்.

 2. முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் சாமி!!!!

  அட.. இருவருக்கும் என்ன ஒற்றுமை பார்த்தீர்களா சாமி!!! ஹி.. ஹி…

  கதை முடிவு சுபம் என்று வைத்துக்கொள்வோம் என்ன!!!! 😀

  தாக்கம் என்று எப்படி வந்ததோ தெரியவில்லை…. சிறுவயதில் பள்ளிக்கூடம் வீட்டிற்குப் பக்கத்தில்தான் இருந்தது…. அதிகமாகப் பஸ்சில் பயனிக்கத்தொடங்கியதே கொழும்பு வந்தபின்புதான்!!!! 🙄

 3. நன்றாக எழுதியுள்ளீர்கள். அந்த பிஞ்சு உள்ளத்திற்கு வந்த பொறுப்புணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. தந்தையின் உணர்வு மதிக்கத்தக்கது… இரண்டையும் சிறப்புற கலந்து கதையாக தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் மயூரேசா…

 4. நன்றி இரசிகரே!!! உங்கள் கதைபற்றிய புரிவு மகிழ்வைத்தருகின்றது!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.