கடுப்பேற்றும் இலங்கை வானொலிகள்

ஒரு காலத்தில் வானொலி என்றால் இலங்கை வானொலிதான். தமிழ் நாடு தொடக்கம் இலங்கைவரை வியாபித்திருக்கும் தமிழர் வீடுகளெங்கும் தூய தமிழில் இலங்கை வானொலி ஒலித்தது. பிலபல பட்டிமன்ற நடுவர் லியோனி கூட ஒரு முறை இலங்கை வானொலி கேட்டுத்தான் அக்காலத்தில் தாங்கள் பாட்டுக்களைத் தெரிந்துகொண்டதாக கூறுவார்.  ஆனால் இன்று இலங்கை வானொலி மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து வானொலிகளின் நிலமைதான் என்ன?

வானொலி

பொதுவாகவே தொலைக்காட்சியிடம் இல்லாத ஒன்று வானொலியிடம் இருக்கின்றது. வானொலி கேட்டுக்கொண்டு எமது நாளாந்த வேலைகளைச் செய்துவிடலாம் ஆனால் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இவற்றைச் செய்ய முடிவதில்லை. இதனால் தான் என்னவோ வானொலி எம்மவர் வாழ்க்கையில் மிகவும் பின்னிப் பிணைந்து இருந்தது.

இலங்கையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் (முன்னாள் இலங்கை வானொலி மாற்றங்கள் பல பெற்று இப்போது தென்றல் ஆகியது), வசந்தம் போன்றவையும் இதைவிட தனியார் வானொலிகளான வெற்றி, சூரியன், சக்தி போன்றவற்றையும் கூறலாம்.

தென்றல் வானொலிப் பாரம்பரியத்துடன் வளர்ந்து வந்தது. அரச வானொலி என்பதால் என்னவோ பல அரசியல் தலையீடுகள் அது இது என்று தன் தனித் தன்மையே என்றோ இழந்து விட்டது. இன்று எத்தனை பேர் தென்றல் இலங்கையில் கேட்கின்றார்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே இதைக் கேட்கக்கூடும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்னுமொரு வானொலி வசந்தம். இது அண்மைக் காலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. தனியார் வானொலிகளின் பாணியில் அறிவிப்பாளர்களைப் போட்டு அறுக்கும் பணியில் இந்த வானொலி சிறப்பாக ஈடுபட்டு வருகின்றது.

சக்தி FM

சக்தி, சூரியன் இரண்டும் தனியார் வானொலிகளைப் பொறுத்தவரையில் சிறப்பாக இயங்கிவந்தன. பின்னர் வெற்றி எப்.எம் உம் இந்த வரிசையில் இணைந்து கொண்டது. 1999 காலப்பகுதிகளில் சக்தி FM முதன் முறையாக நான் சிறுவயதில் வசித்து வந்த திருகோணமலைப் பகுதிக்கு வந்தது. இலங்கை வானொலியின் தரமற்ற நிகழ்ச்சிகளில் சோர்ந்திருந்த வானொலி ஆவலர்களுக்கு இந்த வானொலி மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. எழில்வேந்தன், லோஷன், வாணி, ரமணி என்று வானொலி அறவிப்பாளர்கள் எல்லாம் பெரும் நட்சத்திரப் பட்டாளமாக வலம் வந்தார்கள். அக்காலத்தில் சக்தி அறிவிப்பாளர்களுக்கு சினிமா நடிகர்கள் அளவிற்கு பிரபலம் இலங்கையில் இருந்தது.

பின்னர் 2000 களின் பின்னர் சூரியன் வானொலியும், பின்னர் வெற்றி வானொலியும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. 2004 பின்னர் நான் கொழும்பு நோக்கி வந்துவிட்டோம் அதனால் அனைத்து வானொலிகளையும் கேட்கும் வாய்ப்பு கிட்டியுது.

தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர்கள் போட்டி காரணமாக தம்மைத் தாமோ இலங்கையின் முதற்றர வானொலி இலங்கையில் அதிகமாக கேட்கப்படும் வானொலி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் காமடிகளும் நடந்தேறியது. காலம் செல்ல செல்ல இந்த வானொலிகளின் தரம் சாக்கடையாகத் தொடங்கியது.

வானொலிகளின் தரம் எப்போதும் அதன் அறிவிப்பாளரின் தரத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும். தரமற்ற வானொலி அறிவிப்பாளர்களின் காரணமாக இலங்கையின் வானொலிகள் இன்று பெரும் நாற்றமெடுக்கின்றது. வாய் நோகாமல் கதைத்தால் மட்டும் அறிவிப்பாளராகிவிட முடியுமா? ஆரம்பக்காலத்தில் மயில்வாகனம், கிளோட் செல்வரட்னம், பிந்தைய காலத்தில் கமலினி, ரேலங்கி, நடராஜசிவம், விஷ்வநாதன் பின்னர் எழில் வேந்தன், லோஷன் போன்றவர்கள் இருந்த / இருக்கும் இடத்தில் இக்கால அறிவிப்பாளர்களை வைக்கவே முடியவில்லை. எப்போதாவது எந்த வானொலி நிலையத்தைத் திருகினாலும் ஒரு அறிவிப்பாளர் நையி நையி என்று சண்டீவி பாணியில் அறிவித்தல் கொடுப்பார். மறுமுனையில் ஒரு நேயர் தொலைபேசி எடுத்து அவருடன் அவர் புகழ் பாடுவார். இல்லாவிட்டால் இரண்டு அறிவிப்பாளர்கள் சேர்ந்து காமடி செய்கின்றோம் போர்வையில் செம ஜொள்ளு விட்டு எம் உயிரை எடுப்பர். இந்த அறுவை காரணமாக வானொலி கேட்கும் பழக்கத்தையே கடந்த சில ஆண்டுகளாக குறைத்துவிட்டேன். கேட்பது வெற்றியின் விடியல் மட்டுமே. அது என்னுடைய தனிப்பட்ட தெரிவு மற்றவர்களுக்குப் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம்.

இதைவிட இலங்கை வானொலிகளில் கடுப்பேற்றும் மிக முக்கியமான விடையம் சண்டிவி பாணியிலான இந்திய உச்சரிப்பும், செயற்கைத் தனமான ஆங்கிலக் கலப்பும். Actually, But, So, Wow… போன்ற ஆங்கிலச் சொற்கள் இன்றைய வானொலியில் சரளமாக உலாவருகின்றன. சரி பரவாயில்லை அதை விட்டுத் தள்ளுங்கள் ஆனால் அதைவிட மிக முக்கியமான மன வருத்தத்தைத் தரும் விடையம் இலங்கை வானொலிகளில் இப்போது இலங்கைத் தமிழைக் கேட்க முடியாது.

ஆமா அப்பிடீங்களா? அச்சச்சோ ரொம்ப சாரிங்க! எங்க இருந்து பேசுறீங்க? போன்ற இந்திய உச்சரிப்புடைய வானொலி அறிவிப்பாளர்கள்தான் இன்று இலைங்கையின் தமிழ் வானொலிகளில். இயல்பாகவே எமக்கு அது ஒட்டாமல் போனதில் ஆச்சரியம் இல்லை. இந்திய தமிழில் பேசும் போது கேட்க அழகாக ஆரம்பத்தில் இருந்தாலும் போகப் போக புளித்து விட்டது.

அண்மையில் ஒருவர் தனக்கு கடுமையான யாழ்ப்பாண உச்சரிப்பு இருந்தமையினால் வானொலி நிலையத்தில் சேர்க்கவே மறுத்து விட்டார்களாம் என்று வலைப்பதிவு ஒன்றில் பின்னூட்டமிட்டு இருந்தார். சிலர் கஷ்ட்டபட்டு இந்தியத் தமிழில் பேச முயற்சிப்பதை பாருக்கும் போது பாவம் பிள்ளை என்றே எண்ணத் தோன்றும்.

ஏன் இந்தக் கொலைவெறி???

வடிவேல் அவ்…! என்றும் போது விழுந்து விழுந்து சிரிக்கும் நாங்கள் அவர் பாணியில் ஒருவர் வானொலியில் பேசத் தலைப்பட்டால் காமடிப் பீசு என்று சொல்லி வானொலியை மூடுவதைத் தவிர என்ன செய்யலாம்??

 

யாரையும் தனிப்பட்ட ரிதியில் தாக்கி இந்தப் பதிவு எழுதவில்லை. நான் ஒன்றும் சிறப்பான நபர் என்றும் கூற வரவில்லை. இலங்கையில் பொதுவாக வானொலிகள் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு பற்றிய ஒரு பதிவு மட்டுமே இது.

10 thoughts on “கடுப்பேற்றும் இலங்கை வானொலிகள்”

 1. மிக்க நன்று சகோதரா. இன்னும் கொஞ்சம் விலாவாரியாக வானொலிகளை வேறுபடித்தி சொல்லியிருகலாம்….

 2. ஃஃஃஃகேட்பது வெற்றியின் விடியல் மட்டுமே. அது என்னுடைய தனிப்பட்ட தெரிவு மற்றவர்களுக்குப் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம்.ஃஃஃ

  ஏனோ தெரியல பெண் அறிவிப்பாளர்களின் குரலைக் கேட்டாலே கடுப்பேறுது.. ஏன் சிரிக்கிறாங்க எதுக்கு சிரிக்கிறாங்கண்ணே தெரியல…

  என் தெரிவும் விடியல் தான் சகோ…

  அன்புச் சகோதரன்…
  ம.தி.சுதா
  மதியோடை(28.11.2011-5.12.2011)

 3. @Dina
  மறுமொழிக்கு நன்றி

  @மானிக்கம்
  மறுமொழிக்கு நன்றி. நான் கூறியபடி வானொலிகளைக் கேட்பதே குறைவு இதனால் தனியாக ஒவ்வொரு வானொலி பற்றியும் எழுதுமளவிற்கு எனக்கு தரவில்லை. அதைவிட இப்போதெல்லாம் அறிவிப்பாளர்களின் பெயரே எனக்குத் தெரியாது. 🙂

  @மதிசுதா
  ஆமாம் பெண் அறிவிப்பாளர்கள்தான் செயற்கைத் தனமான ஆங்கிலக் கலப்பில் முதலிடம். வெறுப்பு ஏற்றுகின்றார்கள் சகோதரா.

  இருவர் தெரிவும் ஒத்திருப்பது சந்தோசம். மறுமொழிக்கு நன்றி நண்பா.

 4. என்னைப் பற்றி ஏதோ கொஞ்சம் நல்லா எழுதி இருக்கு என்பதற்காக முழுக்க ஏற்றுக் கொள்கிறேன் என்றும் இல்லை ; நானும் இன்னும் ஒரு ஒலிபரப்பாளனாக இருக்கிறேன் என்பதற்காக முற்றாக மறுதலிக்கிறேன் என்றும் இல்லை.
  குறைகள் திருத்தப்பட வேண்டியவை.
  விமர்சனங்களை எப்போதும் மறுப்பவன் அல்ல நான்.
  என் தரப்பில் குறைகள் முற்றாக இல்லாவிடினும் குறைத்துக் கொண்டே இருக்கிறேன் 🙂

 5. //ஆமா அப்பிடீங்களா? அச்சச்சோ ரொம்ப சாரிங்க! எங்க இருந்து பேசுறீங்க? போன்ற இந்திய உச்சரிப்புடைய வானொலி அறிவிப்பாளர்கள்தான் இன்று இலைங்கையின் தமிழ் வானொலிகளில். இயல்பாகவே எமக்கு அது ஒட்டாமல் போனதில் ஆச்சரியம் இல்லை. //
  😉

  உங்கள் இடுகையை மீள ஒருமுறை வாசித்துப்பாருங்கள். இந்தியக் கதையாடல்கள் சில இருக்கின்றன. காமடி, செம ஜொள்ளு போன்றவை உங்களிடமிருந்து வந்த சொற்களே.

  பாரம்பரிய இலங்கை வானொலியிற்கூட நகைச்சுவை நேரத்தில் இந்தியத் தமிழிலேயே கதைத்து நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துவார்கள். வானொலியாவது பரவாயில்லை, இந்தியத் தமிழ்பேசும் மக்களையும் நேயராகக் கொண்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் மட்டுமே வாசிக்கப்ட்டுக்கொண்டிருந்த உதயன் நாளிதழ் இந்தியச் சொற்களை வலிந்து புகுத்தி செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது, ‘மண்ணெண்ணெய் அபேஸ்; குமுறினார் மகேஸ்’ என்பது போன்று.

 6. சகோதரரே ! தங்கள் வலைப்பதிவில் தாங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான ஒன்று அல்ல..இலங்கையில் ஒலிபரப்பாகும் வானொலிகள் நிச்சயம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயம்.பெரும்பாலான இன்றைய வானொலி அறிவிப்பாளர்கள் சரி தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் சரி தமிழின் சரியான உச்சரிப்புக்களை தள்ளி வைத்து நாகரிக தமிழ் என்ற பொய்யான போர்வையில் நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள் .அறிவிப்பு என்பது எல்லோராலும் இலகுவாக பெற்று கொள்ள கூடிய கலை அல்ல..அவ்வாறன கலையை தன்னுள் கொண்ட ஒருவர் நிச்சயம் தமிழை வளர்க்க வேண்டும்.

  நான் பெரியவள் அல்ல..ஆனாலும் எனக்கு இலங்கையின் பிரபலமான சில மூத்த அறிவிப்பாளர்களை சந்தித்து உரையாடும் ஒரு அருமையான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.அவ்வாறு நான் சந்தித்த அறிவிப்பாளர்களில் இருவர் இன்றைய கால வானொலிகளின் தொலைக்காட்சிகளின் தமிழின் போக்கு பற்றி மிகுந்த கவலை கொண்டனர் … ஏன் எனில் ஆரம்ப காலங்களில் வானொலிகளில் அவர்களால் வளர்க்கப்பட்ட பேசப்பட்ட தமிழ் உண்மையிலே உன்னதமானது .இன்றைய காலங்களில் அது சற்றே குறைவடைந்து இனி வரும் காலம் எவ்வாறு ஆகுமோ என்பது கேள்வி குறியான ஒன்றுதான்.

  தமிழ் என்பது தமிழர்கள் ஆகிய எங்களால் வளர்க்கப்பட வேண்டிய ஒன்று அவ்வாறான எம் தமிழை வானலையில் தவழவிட்டு அவரவர் வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்த்து வைக்கும் தனித்தன்மை வாய்ந்த திறனை கொண்டு உள்ள இன்றைய இளம் அறிவிப்பாளர்கள் தமிழை வளர்ப்பது எம் பொறுப்பு என்பதை அவரவர் சிந்தையில் எடுத்து கொண்டால் எங்கும் வாழும் எம் தமிழ் என்பதில் ஐயமில்லை. என் தெரிவும் விடியல் தான்.

 7. எனக்கும் விடியல் தான் பிடிக்கும் ஆனால் நேர வித்தியாசத்தால் இப்பொழுது என்னால் கேட்கமுடிவதில்லை

 8. @Loshan
  நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு. Constructive Criticism ஐ ஏற்றுக் கொள்வதற்கு பக்குவம் வேண்டும். அது உங்களிடம் இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி 🙂

  இவ்வுலகில் யாரும் 100 வீதம் கச்சிதமான மனிதர்கள் இல்லைதானே. உங்கள் பணிவான மறுமொழிக்கு நன்றி அண்ணா.

  @வசந்தன்
  இந்திய தமிழ் சொற்களை அவ்வப்போது கலந்து பேசுவது சாதாரணமாக மக்கள் கதைக்கும் போது கூட நடப்பது தானே. ஆனால் இந்தியத் தமிழில் மட்டுமே இப்போது வானொலி அறிவிப்பாளர்கள் பேசுவது அல்லது பேச வைப்பது அவ்வளவாக ஒட்டவில்லை. முன்பே என் பதிவில் கூறியிருக்கின்றேன், நான் அப்படி ஒன்றும் சிறப்பான ஆள் இல்லை என்று ;).

  உதயன் ஏதோ செய்கின்றது என்பதற்காக அதைக் காரணம் காட்டி மற்றவர்களும் அதையே செய்வது நியாயம் ஆகாது. அனைவரிற்கும் சொந்த புத்தியும் முடிவெடுக்கும் உரிமையும் இருக்கின்றது தானே?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.