என் விருப்ப ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்

ஆங்கில தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் பழக்கம் எம்மில் பலருக்கும் உண்டு. உதாரணமாக சிறு வயதில் நைட் ரைடர், ரொபின் ஓப் ஷேர்வூட், டார்ஸான் போன்ற தொடர்களை எம்மில் பலர் பார்த்திருக்கின்றோம். சினிமாவிற்கு சமனான செலவு, தரத்துடன் ஆங்கிலத் தொலைக்காட்சித் தொர்களை எடுப்பது அவர்களின் சிறப்பு. துரதிஷ்ட வசமாக எங்கள் தமிழ் தொலைக்காட்சிகள் யாவும் ஒரு ஒப்பாரி வைக்கும் பெண்ணையும் அவரைச்சுற்றிய ஆண்களையும் பற்றியதாக அமைந்துவிட்டது. இன்னுமொரு நூற்றாண்டுக்கு அவை மாறப்போவதில்லை. அவற்றை மாற்றச்சொல்லிக் கேட்டு தாய்குலத்தில் சாபத்திற்கு ஆளாக எனக்கு விருப்பமில்லை.

இந்த செப்டம்பர் மாதத்தில் எனக்கு விருப்பமான மூன்று ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள் ஆரம்பிக்கின்றன அல்லது ஆரம்பித்துவிட்டன. இவை பற்றிய சுருக்கமான என் கருத்துக்களைத் தொடர்ந்து படியுங்கள்.

1. Prison Break

சாதாரண சிறையுடைப்புக்கதை என்று நினைத்துவிடாதீர்கள். மண்டையைக் காயப்போட்டுப் பார்க்குமளவிற்கு விறுவிறுப்பானதும் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதும்தான் இந்த தொலைக்காட்சித் தொடர். லிங்கன் பரோ எனும் அப்பாவி மனிதனை ஒரு கும்பல் பொய் சாட்சிகள் மூலம் சிறைக்கு அனுப்புகின்றது. லிங்கன் பரோவின் தம்பி மைக்கல் ஸ்கோபீல்ட், அண்ணாவைக் காப்பாற்ற திட்டம் தீட்டுவதே கதை.

சிறையை உடைக்க சிறைக்குள் புகுந்தாக வேண்டும், ஆகவே தான் வங்கியில் கொள்ளையடிப்பது போல ஒரு நாடகமாடி அண்ணா இருக்கும் அதே சிறைச்சாலைக்குச் செல்கின்றான். அங்கிருந்து தானும் தன் அண்ணனும் தப்புவதற்கு வழிகளைச் சமைக்கின்றான். இதில் விருப்பத்துடனும், விருப்பமில்லாமலும் பல நபர்கள் சேர்ந்து கொள்கின்றனர். பாகம் ஒன்றில் சிறைச்சாலையை உடைத்து இவர்கள் தப்புகின்றனர்.

பாகம் இரண்டில் சிறைச்சாலைக்கு வெளியே இவர்கள் தப்பி வாழுவதற்கு செய்யும் முயற்சிகள் பற்றியது. இவர்களை விடாமல் துரத்தும் அரசு ஒரு பக்கம், இவர்களை கொல்லத்துடிக்கும் கம்பனி எனும் கும்பல் மறுபக்கம் என இவர்களுக்கு இரு முனைத்தாக்குதல். இவற்றில் இருந்து எவ்வாறு தப்புகின்றனர் என்பதுதான் பாகம் இரண்டு.

பாகம் மூன்று பனாமாவில் உள்ள சொனா எனும் சிறைச்சாலையில் நடக்கின்றது. சட்டம் எதுவும் ஒழுங்காக இல்லாத சிறைச்சாலையில் மாட்டும் மைக்கல் ஸ்கோபீல்ட் அங்கிருந்து தப்ப முயற்சிப்பது பாகம் மூன்று.

பாகம் நான்கு இப்போது ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டதி. எம்மைபோல இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ளோர் டொரன்ட் மூலம் இறக்கிப்பார்க்க வேண்டியதுதான். நான்காம் பாகம் மீள அமெரிக்காவில் நடக்கின்றது. கயவர் கும்பலான கம்பனி எனும் நிறுவனத்தில் இரகசிய தகவல்கள் அடங்கிய வட்டை மீட்டு எடுத்து அரசிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு மைக்கலின் குழுவினருக்கு வந்து சேர்கின்றது. இதை உத்தியோக பூர்வமற்ற முறையில் இவர்கள் செய்யவேண்டிய நிர்ப்பந்தம். இதை செய்து முடிப்பார்களா அல்லது செய்து முடிக்காமல் சிறை செல்வார்களா என்பதை இனி பார்த்து தெரிந்து கொள்ளவேண்டியதுதான்.

2. Sarah Connor Chronicles – Terminator


டேர்மினேட்டர் திரைப்படத்தைப் பற்றித் தெரியாதவர்கள் இவ்வையகத்தில் இருக்க முடியாது. ஆர்னோல்ட் ஸ்வாஸ்னேகருக்கு புகழ்வாங்கிக் கொடுத்த்துடன் உலகறியச்செய்ததும் இந்த திரைப்படம்தான். கதை என்னவென்றால் எதிர்காலத்தில் உலகை இயந்திரங்கள் ஆக்கிரமிக்கின்றன. மனிதனை அவை அழித்தொழிக்கின்றன. அவற்றை எதிர்த்து மனிதர்கள் போராடுகின்றார்கள். இவ்வாறு போராடும் மனிதர்களின் தலைவர் ஜோன் கோனர். ஜோன் கோனரை அழிக்க முடியாத இயந்திரங்கள், ஜோன் கோனர் பிறக்க முன்னரே அவனது தாயாரைக் கொல்லத் திட்டமிட்டு பழைய காலத்துக்கு ஒரு இயந்திரத்தை அனுப்புகின்றனர். அந்த இயந்திரம் தன் தாயாரை கொல்லாமல் இருக்க ஒரு வீரனை ஜோன் கானரும் பழைய காலத்துக்கு (அதாவது எங்கள் நிகழ்காலம்) அனுப்பிவைக்கின்றார். இதில் யார் வென்றார் யார் தோற்றார் என்பதே பாகம் ஒன்று.

பாகம் இரண்டில் ஜோன் கோனர் சிறு பையனாக இருக்கும் போது மீண்டும் அவனை அழிக்க ஒரு இயந்திரத்தை இயந்திரங்கள் அனுப்புகின்றன. அந்த இயந்திரத்திடம் இருந்து தன்னைக் காப்பாற்ற ஜோன் கோனர் தான் ஒரு இயந்திரத்தை மீள் நிரலிட்டு அனுப்புகின்றான். இதில் எந்த இயந்திரம் வென்றது எந்த இயந்திரம் தோற்றது, ஜோன் கோனர் தப்பினாரா வென்றாரா என்பது மிகுதிக் கதை.

2ம் திரைப்படத்துக்கு பின்னர் 3ம் திரைப்படத்துக்கு முன்னர் நடப்பதாகவே இந்தத் தொலைக்காட்டசித் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த உலகை தம் கட்டுப்பாட்டுக்குள் இயந்திரங்கள் எடுக்கும் நாள் (Judgment Day) நெருங்காமல் இருக்க ஜோன் கானரும் இவர் தாயாரும் எடுக்கும் முயற்சிகள் பற்றியதே இந்த தொடர். இங்கும் வழமை போல எதிர்காலத்தில் இருந்து இயந்திர மனிதர்கள் வருகின்றார்கள். ஜோன் கானரைக் கொலைசெய்ய முயற்சிக்கின்றார்கள் ஆயினும் அவர்களிடம் இருந்து காப்பாற்ற கொமோடி எனும் இயந்திர மனுசி வருகின்றார்.

உலகின் எதிர்காலத்தை மாற்ற இவர்கள் போராடுவதுதான் இந்தக் கதை. இப்போது இந்த தொடரும் அமெரிக்காவில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டது. இரண்டாம் பாகம் ஆரம்பித்து அதில் இரண்டு அத்தியாயங்களும் முடிவடைந்துவிட்டது.

பி.கு: திரைப்படம் 4ம் பாகம் 2009 ஜூலையில் வெளிவர உள்ளது.

3. Heroes


இது மனிதனின் கூர்ப்பியலை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட தொலைக்காட்சித்தொடர். மொஹிந்தர் சுரேஷ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளர். இவரின் தந்தை மரபியலில் ஆர்வம் கொண்டு அமெரிக்கா சென்று பல ஆராய்ச்சிகள் செய்கின்றார். இவ்வாறு ஆராய்ச்சி செய்வதன் மூலம் கூர்ப்பின் மூலம் விஷேட திறமைகள் கொண்ட மனிதர்களை இனம் காண்கின்றார். இவர் திடீரென ஒருநாள் கொலை செய்யப்படுகின்றார்.

தந்தையார் கொலையுண்ட காரணத்தை அறிய சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லு சுரேஷ் அங்கு விஷேட திறமைகொண்ட பல மனிதரைக் காண்பதுடன் தன் தந்தையின் கனவுப் பயனத்தைத் தொடர்கின்றார். சுரேஷாக நடிப்பவர் செந்தில் ராமமூர்த்தி எனும் தமிழன். நம்மவர்கள் பெருமை பட வேண்டிய விசயம்தான். இதில் பயங்கர கடி என்னவென்றால், சென்னையும், சென்னைப் பல்கலைக்கழகமும் காட்டப்படும் போது சென்னை ஏதோ ஹிந்தி ஊர் போன்று காட்டுவார்கள். எங்கும் ஹிந்திப் பெயர்பலகைகள், ஹிந்தி பேசும் மக்கள் என பல பல.

இந்த தொடரில் விஷேட தன்மைகள் கொண்ட பலர் இருந்தாலும் என்னை நன்கு கவர்ந்தது பீட்டர் பெட்ராலி, ஹிரோ நக்கமுரா ஆகிய இரு பாத்திரங்களுமே. ஹிரோ நக்கமுரா ஒரு ஜப்பானியப் பாத்திரம் அத்துடன் அவருக்கு நேரத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை உண்டு. அதாவது எதிர்காலம், பழையகாலம் என்று சுற்றி சுற்றி வருவார். இது போல பல விஷேட சக்தியுள்ள பாத்திரங்கள் இந்த தொடரில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதையில் வரும் வில்லன் 2007ம் ஆண்டின் சிறந்த வில்லன் எனும் விருதைப் பெற்றான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எப்படியான வில்லன் என்று. அருமையான நடிப்பு. சைலார் என்ற பெயருடன் வரும் இவன் மற்றவர்களின் விஷேட சக்திகளைத் திருடுவதில் ஆர்வம் கொண்டவன். இவன் மற்றவர்களைக் கொன்று அவர்கள் மூளையை உண்பதன் மூலம் மற்றவர்களின் சக்தியைப் பெறுவான். இவனை எதிர்க்கும் வலிமை பீட்டர் பெட்ராலிக்கும், ஹிரோ நக்கமுராவிற்குமே உண்டு. மற்றவர்கள் இவனை எதிர்த்து நின்றால் ஒரு நிமிடம் தாக்குப்பிடிப்பதே கஷ்டம்.

இந்த மாதம் இந்த தொடர் 3ம் பாகம் ஆரம்பிக்க உள்ளது. டொரன்ட் மென்பொருளை இதற்கா துடைத்து வைத்துள்ளேன் இறக்க வேண்டியதுதான்.

இதைவிட மேலும் பல தொடர்களைப் பார்ப்பேன், ஆனாலும் மனதில் நச்சென்று நிலைத்து நிற்பது ஏனோ இந்த தொடர்கள் மட்டும்தான்.

6 thoughts on “என் விருப்ப ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்”

 1. இப்போதெல்லாம் ஒரு போல்டை பார்த்தாலும் கை ஊறுகிறது. 🙂
  பிரிசன் பிரேக் அருமையான தொடர்.

 2. எனக்கு மிகவும் பிடித்த ஆங்கிலத்தொடர் “FRIENDS” தான்.
  இது நியூயார்க் – மன்-ஹாத்தனில் ஒன்றாக வசிக்கும் ஒரு நண்பர்கள் குழுவைச் சுற்றிய காமெடித்தொடர்…

  இந்தத்தொடர் உலகம் முழுவதும் நூறு நாடுகளுக்கும் மேல் காண்பிக்கப் பட்டுள்ளது என்பது செய்தி.

 3. @வடுவூர் குமார்
  :mrgreen:

  @சாமி
  இதை நான் பல தடவை பார்த்தேன். பழைய தொடர் என்றாலும் எப்போதும் பார்க்கலாம். பாத்திரங்கள் அனைத்தும் ஏதோ நமது சொந்த பந்தம் என்ற ஒரு மாயையை உருவாக்கும் தொடர். பிடித்த பாத்திரம் ஜோயி. 😎

 4. நீங்கள் சொல்லிய 3 தொடர்களையும் நானும் தவறாமல் download செய்து பார்ப்பவன். தெிலும் prison Break 4 க்காக mininova வில் தவம் கிடக்கிறேன். இன்னும் 2-3 எபிசோட் டவுண்லோட் செய்ததும் பார்க்க துவங்கலாமென இருக்கிறேன்.
  டேமனீட்டரும் அப்படியே.

 5. Ya mayu..i also used 2 watch these series whn i was small..Robin hood is my all time favourite… Tarzan,Night rider,X files etc..
  Afterwords couldnt watch anythin continuously..recently got to know abt “Prison Break” n finished da first 3 parts in a row..
  I think it tops all da series which r on air..
  It is like reading a “DAN BROWN” novel….there’s a twist n a turn at every step..makes u glued to da tv…
  Michael Scofield is just “AWESOME”!!!!:-)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.