இலங்கையின் உயர்கல்வி பற்றி ஒரு பார்வை

1950 களில் சிங்கபூர் பிரதமர் இலங்கை வந்ததும், பின்னர் கொழும்பைப் பார்த்து பிரமித்து என் நாட்டையும் இது போல மாற்ற வேண்டும் என்று சபதம் போட்டதும் நீங்கள் அறிந்திருக்கக் கூடிய பழைய கதையே. இன்று இந்து சமுத்திரத்தின் முத்து என்ற பெயரும் கொழும்பு ஆசியாவின் பூந்தோட்டம் என்ற பெயரும் பெயரளவில்தான் உள்ளது. கொழும்பு போல நாற்றம் எடுக்கும் ஊரும், இலங்கையைப் போல கேட்பவரைக் கிலி கொள்ளச் செய்யும் நாடுகளும் உலகில் எத்தனை உண்டென்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.

 

நாட்டில் எந்தத் துறை சீர் கெட்டு உள்ளது என்று பார்ப்பதைவிட எந்தத்துறை சீராக உள்ளது என்று பார்த்தால் மிக்க நன்று. நான் அறிந்த வரையில் எந்தத் துறையும் சீராக இல்ல. இலஞ்சம் ஊழல், அரசியல் செல்வாக்கு என்று இலங்கை தன் பெயரை தானே கெடுத்துக்கொண்டு இருக்கின்றது. இந்தக் கட்டுரையில் நான் இலங்கையில் உயர் கல்விபற்றி ஒரு அலசல் அலசப் போகின்றேன்.

களனிப் பல்கலைக்கழகம்

ஒரு காலத்தில் இலங்கை உயர்கல்விப் பீடங்கள் நன்மதிப்புப் பெற்றிருந்தன. இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் இலங்கைக்கு வந்து உயர்கல்வி பெற்றுச் சென்றார்கள். இன்று நிலமை என்ன??? இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றே பலர் உயர் கல்விபெறவேண்டியதாக உள்ளது. வெறும் 5 சதவீதமான மாணவர்களுக்கே உயர்கல்வி வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது.

 

அரசினால் இதற்குச் சொல்லப்படும் காரணம் பல்கலைக் கழகங்களில் அனுமதி வழங்க போதுமான இடம் இல்லை என்பதே. அப்போ புதுப் பல்கலைக்கழகங்களைக் கட்ட வேண்டியதுதானே?. அதற்கு அரசின் பதில் போதிய நிதி இல்லை என்பதே.

 

இன்று அரச பல்கலைக்கழகங்களை எடுத்து நோக்கினால் தெரியும் எவ்வளவு மோசமாக உள்ளன என்பது. செயன்முறை ரீதியான அறிவு மாணவர்களுக்கு மிகக் குறைவாகவே உள்ளது. கல்வி வெறுமனே எழுத்தளவில் கற்பிற்பதில் முடிந்து விடுகின்றது. இது பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்குப் பெரிய பின்னடைவாகும். பட்டம் பெற்றுக்கொண்டு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும்போதே அவர்கள் தம்மிடம் உள்ள குறைகளை உணர்ந்துகொள்வர். ஆனால் நிறுவனங்கள் அதுவரை பொறுமையாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

 

இதைவிட மாணவர்கள் தாமே தேடிக் கற்கும் (Self Driven) ஆற்றலை பல்கலைக்கழகங்களில் வளர்த்துவிடுவதில் பேராசிரியர்கள் பங்காற்றுவதில்லை. அனைத்தையும் வந்து கற்பிற்பார்கள், மாணவர்கள் படித்துவிட்டு கிளிப்பிள்ளை போல திரும்பி பரீட்சைத் தாளில் வாந்தியெடுத்துவிட்டால் அவர்களுக்குச் சந்தோசம். அதுவே அவர்களின் கற்பித்தலின் உச்சக்கட்டம். வெளியூர் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தேடிக்கற்கும் ஆற்றல் ஊக்குவிக்கப்படுகின்றது. உதாரணமாக நாளை ஜாவா நிரல்மொழியில் இந்தப் பகுதியைப் படிப்போம் என்று ஆசிரியர் சொல்வார். மாணவர்கள் தாம் அந்தப் பகுதியை மறுநாள் படித்துவிட்டு வருவார்கள். பின்னர் வகுப்பு ஒரு கலந்துரையாடலாக அமையும். மாணவர்களின் கேள்விக் கணைகளுடன் வகுப்பு அமோகமாக நடக்கும். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இப்படியான பேராசிரியர்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

 

சரி… இந்தக் குறைகளை நீக்குவதற்கு என்ன செய்யலாம் என்றால் என்னுடைய முதல் பதில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதே. இலங்கை சட்டத்தின் படி இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க முடியாது. அமைத்தால் அது சட்டப்படிக் குற்றமாகும்.

 

ஆனாலும் சாதாரண வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஏஜென்டுகள் சிலர் இங்கே இருக்கின்றார்கள். அவர்களிடம் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் படித்துவிட்டு மிகுதியை வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் சென்று படிக்கலாம். இவ்வாறு இலங்கையின் அந்நியச் செலாவணி அழிக்கப்படுகின்றது.

 

ஜே.வி.பி போன்ற கட்சிகளும், அவர்கள் பின்னால் இயங்கும் மாணவர்கள் அமைப்புகளும் தனியார் பல்கலைக்கழகங்களை கடுமையாக எதிர்க்கின்றன. சில வருடங்களுக்கு முன்னர் அரசு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுக்க முனைந்தபோது அதை பெரிய விடயமாக்கி அதில் குளிர் காய்ந்தன இந்த தூர நோக்கற்ற சுயநலவாத அரசியல் கட்சிகள்.

 

பணம் உள்ளவர்கள் தம் பணத்தை செலவழித்து இந்தியா, மலேசியா, ரசியா, பிருத்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தம் உயர்கல்வியைக் கற்கின்றனர். இதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணி இழக்கபபடுகின்றது. இது இந்த நபர்களுக்கு உறைக்கவில்லை. இலங்கையில் தனியார் உயர்கல்விக் கூடங்கள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அது பற்றி இந்த மேல் தட்டு வர்க்கம் அலட்டப் போவதில்லை. அவர்கள் பெருமளவு பணத்தை முதலிட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தம் உயர்கல்வியை முடித்துவிடுவர்.

 

இலங்கையில் தனியார் கல்லூரிகள் இருக்குமானால் இந்த பணத்தை சேமித்து இலங்கை நாட்னின் அபிவிருத்திக்கே பயன்படுத்த முடியும். ஆனால் இதெல்லாம் எங்கே இவர்களுக்கு உறைக்கப்போகின்றது.

 

இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனியார் கல்லூரிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எந்தளவு பங்காற்றின பங்காற்றுகின்றன என்பதை நாம் கண்கூடாகக் காணுகின்றோம். இன்று இலங்கையும் தனியார் கல்லூரிகள் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகம் ஒரு பாதையில் போகும் போது இலங்கை மட்டும் தன் பாதையில் குருட்டுத் தனமாக நகர்வது கவலை தரும்விடயமே.

 

இவற்றைச் சிந்தித்து நடைமுறைப்படுத்த நல்ல தூரநோக்குள்ள தலைவர்கள் நாட்டுக்கு வரவேண்டும். இலங்கையில் இலவசக் கல்வியின் தந்தையாரான கன்னங்கரா உண்மையில் ஒரு தூரநோக்குடையவர் அவரால்தான் நாட்டின் கல்வியறிவு வீதம் 90 விழுக்காடாக உள்ளது. இவர்போன்ற ஒரு நபர் மீண்டும் இலங்கை வரலாற்றில் பிறந்து வந்தால் தவிர இலங்கை உயர்கல்வித் துறை வெறும் குப்பையாகப் போவதை யாராலும் தடுக்க முடியாது.

8 thoughts on “இலங்கையின் உயர்கல்வி பற்றி ஒரு பார்வை”

 1. Education should never be left in the hands of the private sector, yes there are some problems with the current system. but most of these will be solved once peace comes.

 2. மயூரேசன்,

  //இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனியார் கல்லூரிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எந்தளவு பங்காற்றின பங்காற்றுகின்றன என்பதை நாம் கண்கூடாகக் காணுகின்றோம்.//

  இந்தக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் கல்லூரிகள் & பல்கலைக்கழகங்கள் வெறும் வியாபார நோக்கில் மட்டுமே செயல்படுகின்றன. தரமான கல்வி தரும் தனியார் கல்லூரிகள் மிக மிகக் குறைவே

  //இலங்கையில் தனியார் கல்லூரிகள் இருக்குமானால் இந்த பணத்தை சேமித்து இலங்கை நாட்னின் அபிவிருத்திக்கே பயன்படுத்த முடியும்//
  அரசு தனியார் கல்லூரிகள் மூலம் வரும் பணத்தை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துமா என்பது கேள்விக்குறியே

 3. தனியார் கல்வி தீர்வு இல்லை மயூரேசன். போருக்குச் செலவழிக்கும் காசில் 10 வீதமாவது கல்விக்குச் செலவழிக்க இலங்கை அரசு முன்வர வேண்டும். இந்தியா, சிங்கப்பூரிலும் உயர்கல்வியில் அரசு பல்கலைக்கழகங்களே முன்னணியில் உள்ளன. அதில் இடம் கிடைக்காமல் போகும் மாணவர்கள் தான் தனியார் கல்லூரிக்குப் போகிறார்கள். தனியார் கல்லூரிகள் குறுகிய காலத்தில் நன்மை பயப்பது போல் தோன்றினாலும் நாளடைவில் அது அரசு கல்லூரிகள், பள்ளிகளின் தரமிழப்புக்கும் புறக்கணிப்புக்குமே வழி வகுக்கும். பிறகு, காசில்லாதவன் கல்வி கற்க இயலாத நிலை வரும். ஐரோப்பா, அமெரிக்க என்று பார்த்தாலும் அரசு கல்லூரிகளில் தான் நல்ல கல்வி கிடைக்கிறது.

 4. மயூரேசன்,
  என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏதாவது சொல்லப்போனால் அரசியலை தொடவேண்டி இருக்கும். ஒன்று மட்டும் நிச்சயம் எந்த அரசாங்கமுமே கல்விக்கு செலவழிப்பதில் சரியான அக்கறை எடுப்பதில்லை போல இருக்கிறது. இக்கரைக்கு அக்கரை பச்சை. நான் படித்தது தனியார் கல்லூரியில். . பல சிந்தனைகளை கிளரிவிட்டீர்கள். இதை பற்றி பெரிய பதிவே போடவேண்டும். நல்ல வேளை எனக்கு அரசாங்க இடம் கிடைத்தது. இல்லையெனில் தனியார்களின் பேராசைக்கும் தரம் தாழந்த ஆசிரியர்களுக்கும் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டி இருக்கும். இப்படி புரிந்துகொள்ளுங்கள். ஏற்கனவே ஊழல்வாதிகள் அவர்களுக்கு தனியார் கல்வி எனும் அட்சய பாத்திரம் கிடைத்தால்?
  இலங்கையிலோ இன்னும் சிக்கல் நிறைந்ததாய் இருக்கறது அரசியல் நிலவரம். பாருங்கள் அரசியலுக்கு வந்துவிட்டேன்.
  வேண்டாம். இல்லாத தேவதையை விட இருக்கும் பேயே பரவாயில்லை என்று நினைத்து மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.

 5. தனியார் பல்கலைக் கழகங்கள் நல்லதுதான், அதில் மாற்று கருத்து இல்லை.

  ஆனால் அவற்றை – கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு கவனிக்க நல்ல ஒரு அரசு யந்திரம் தேவை.

  இல்லையெனில கல்வி வியாபாரமாக்கப் பட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

 6. //Education should never be left in the hands of the private sector, yes there are some problems with the current system. but most of these will be solved once peace comes.//
  It’s so amazing that you still believe that we’ll make peace in the near future.. for me, it’s only a dream.. This land gonna kill itself. I don’t say we should leave the whole education system to private sector.. What I want is government has to approve private universities and also gov should operate state universities Para rally.

 7. கதிரவன் உங்கள் கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டி விடுகின்றன.. நல்ல ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதம்!!!

 8. ரவி, சாமி உங்கள் கருத்துக்கு நன்றி… நான் ஒரேயடியாக அரச கல்விப்பீடங்களை தனியாரிடம் ஒப்ப்டைக்க வேண்டும் என்று சொல்லவில்லை… என்னுடைய கருத்துப்படி தனியாருக்கும் இடம்தரப்படவேண்டும் என்பதே!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.