இரவுகள் தோறும்தனது கார் கண்ணாடியை சற்றே கீழிறக்கிப் பார்த்தான் குகன். சில் என்று காற்று வீசிக்கொண்டு இருந்தது. இவனது டொயோட்டா ப்ராடோ சத்தமில்லாமல் காற்றைக் கிழித்துக்கொண்டு எ-9 வீதியில் பயனித்துக்கொண்டிருந்தது. பூச்சிகளின் சங்கீத ஒலியும் அவ்வப்போது எதுவென்றே தெரியாத சத்தங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. தூக்கம் கண்களை மெல்லக் கட்டத்தொடங்கியது.

“ம்ஹூம்…. நித்திரையோடு ஓடக்கூடாது” என்று நினைத்துக்கொண்டான். காரில் இருந்த கருவி இன்னமும் 5 நிமிடத்தில் ஒரு சிற்றுண்டி சாலை வருவதாக சைகை காட்டியது. வேகத்தை மள மளவென்று குறைத்தவாறு சிற்றுண்டி சாலை வாசலில் தனது வாகனத்தை நிறுத்தினான்.

ஜன்னலை மூடிவிட்டு, தானியக்க பாதுகாப்பு கருவியையும் உயிர்ப்பூட்டிவிட்டு குகன் சிற்றுண்டிசாலையை நோக்கி நடக்கத்தொடங்கினான். சிற்றுண்டி சாலை என்று சொல்வதைவிட அதை ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் என்றும் சொல்லலாம். வாசலில் ஒரு பழைய எரிபொருள் நிரப்பும் இயந்திரம் இருந்தது. அந்தப் பழைய உணவகத்தின் கதவை அனாயசமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் குகன்.

“வாங்க ஐயா, பெற்றோல் போடோனுமா இல்லை சாப்பிட ஏதாவது வேணுமோ?” கேள்வி கேட்டான் உணவு விடுதிக்காரன்.

“பெற்றோல் இருக்கு, எனக்கு ஒரு கோப்பி தாங்கோ”

“ஐயா எங்கயிருந்து வாரியள், இந்த நேரத்தில தனியாப் போறியள் போல இருக்கு”

“ஹா.. நான் கொழும்பில இருந்து வாறன். ஒரு தனியார் கொம்பனியில வேலை செய்யிறன். நாளைக்கு வருசப்பிறப்புதானே. அதுதான் வீட்ட போயிடோனும் என்ற நினைப்பில இரவோட இரவாக் கிளம்பிட்டன்”

“எல்லாருக்கும் இருக்கிற ஆசைதான்” என்று கூறியவாறு அந்தக் கடை ஊழியன் ஒரு கோப்பை கோப்பியை எடுத்துக்கொடுத்தான்.

கடுங்குளிருக்கு அந்த கோப்பி இதமாக இருந்தது. தனது கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். சரியாக இரவு 12.05 ஆகிவிட்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகனங்கள் மிக மிக அரிதாக ஒளியைப் பாய்சிக் கண்சிமிட்டிக்கொண்டு வீதியில் சென்றுகொண்டிருந்தன.

தனது பையிலுந்து பணத்தை எடுத்து ஊழியனிடம் கொடுத்துவிட்டு குகன் தனது காரை நோக்கி நடக்கத் தொடங்கினான். உள்ளே ஏறி உட்கார்ந்ததும் ரேடியோவைப் போட்டுத் திருப்பி திருப்பு என்று திருப்பினான். ம்ஹூம் ஒரு அலைவரிசை கூட இழுக்குதில்லை. செல்லிடத் தொலைபேசி பயனற்றுக் கிடந்தது. ஆ… என்று ஒரு பெரு மூச்சு விட்டவாறு தன் காரின் இயந்திரத்தை உயிர்ப்பூட்டினான் குகன். அந்த சொகுசு வாகசனம் மீண்டும் அதிக இரைச்சல் போடாமல் காற்றைக் கிழித்துக்கொண்டு பயனிக்கத் தொடங்கியது.

அரைமணி நேரத்தில் மீண்டும் குகனுக்குக் கண்ணைக் கட்டத் தொடங்கியது. அரைக்கலக்கத்தில் யாரோ வாகனத்தை மறைப்பது தெரிகின்றது. நன்கு அருகில் வந்ததும் குகன், திடுக்கிட்டு கார் பிரேக்கைப் போடுகின்றான். வெளியே நின்ற பெண் போட்ட கீ என்ற சத்தம் குகனின் வாகனக் கண்ணாடியூடு கேட்டது.

“கூ ட ஹெல் இஸ் திஸ்?” கடுப்புடன் கூறியவாறே குகன் தனது வாகனக் கண்ணாடியை கீழிறக்கினான்.

“என்ன தங்கச்சி என்ன விசயம்”

“இண்டைக்கு இரவு வேலை முடிய லேட்டாகிட்டுது. 20 மைல் தள்ளித்தான் எங்கட வீடு இருக்குது. அங்க கொண்டுபோய் இறக்கிவிடுவியளோ?”

என்ன கரைச்சலடா இது?. முன்னப்பின்னத் தெரியாத பொம்பிள தன்னைக் காரில ஏத்தச் சொல்லுறாள். இவளை ஏத்திப் பின்னால இங்கிலீசுப் படங்களில வர்றமாதிரி என்னைக் கொலை செய்திடுவாங்களோ?? என்று பலவாறும் குளம்பியவாறே தன் காரின் கதவைத் திறந்தான்.

“நான் காரில பின்னால ஏறுறன்” என்கிறாள் அவள்.

“அப்ப நான் என்ன உங்களிட ட்ரைவரோ?, முன்னால ஏறுங்கோப்பா. உம்மை என்ன நான் பிடித்துச் சாப்பிடப்போறனோ?”

அவள் ஏறி குகனுக்குப் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் அமர்ந்துவிடுகின்றாள். இப்போதுதான் குகன் அருகில் பக்கத்தில் அந்தப் பெண்ணைப் பார்க்கின்றான். பார்த்த மாத்திரத்திலேயே அவன் இதயம் பட படவென அடித்துக்கொண்டது. கொழும்பில இருக்கிற சிங்களப் பெட்டையளெல்லாம் இவள் கால் தூசிக்குத் தேறமாட்டாளுகளே. கடைக்கண்ணாலும் தன் முன்னால் இருந்த கண்ணாடியிலும் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“றோட்டப் பார்த்து ஓடுங்கோ…” நமட்டுப் புன்னகையுடன் கூறினாள் அந்தப் பெண்.

“ஆ…. நக்கலு. சரி சரி உங்கட பெயர் என்னண்டு சொல்லேலயே?” மெதூவகக் கதையைத் தொடங்கினான் குகன்.
“ஏன் பெயர்?”

“உங்களை ஏத்திக்கொண்டு போய் இறக்கிவிடுறன் பெயர் எல்லாம் சொல்ல மாட்டியளோ?, பெரிய வில்லாதி வில்லியாக இருப்பியள் போல இருக்குது”

இப்படியே கதை தொடர்ந்தது. குகனை அறியாமலே அவன் வாகனம் ஓட்டும் வேகத்தைக் குறைத்துவிட்டிருந்தான். அவளை விட்டுப் பிரிய அவ்வளவு மனமில்லை. இப்போது இருவரும் நல்ல சகவாசமாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஒரே சிரிப்பொலி அங்கு மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.

ஒரு மணி நேரத்தில் குகன் அந்தப் பெண் இறங்க வேண்டிய இடத்தில் அவளை இறக்கிவிட்டான். நன்றி சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தாவாறே அந்தப்பெண் நகரத் தொடங்கினாள்

“ஹல்லோ.. இந்தாங்கோ என்னுடைய விசிட்டிங் கார்ட். கொழும்புப் பக்கம் வந்தால் சந்தியுங்கோ. அதுதானே உங்கட வீடு?” தூரத்தில் தனியாக இருந்த ஒரு வீட்டைக் காட்டிக்கேட்டான் குகன். அவளும் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு மீண்டும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். குகன் அந்த இடத்தின் அடையாளங்களை நன்கு மனதில் பதித்து வைத்துக் கொண்டான். குறிப்பாக அந்த மைல்கல்லும். அதற்கு அருகில் இருந்த மாமரமும் இந்த இடத்தை மறக்காமல் ஞாபகம் வைத்திருக்க உதவும்.

அக்சிலரேட்டரை மனமில்லாமல் அழுத்தியவாறே அங்கிருந்து நகர்ந்தான் குகன்.

வீடு சென்றாகிவிட்டபோதும் குகனின் மனம் முழுவதும் நேற்றய நிகழ்வில்தான் இருந்தது. அவளை மறக்க இவனால் முடியவில்லை. தான் தன் நண்பன் வீட்டிற்குச் செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு தனது ப்ராடோவில் ஏறி மீண்டும் அந்தக் கனவுக் கன்னி வீடு நோக்கிப் பயனமானான்.

ஒரு மணி நேரத்தில் அந்த இடத்தை குகன் வந்தடைந்துவிட்டான். அப்போது பெரும் அதிர்ச்சி அவனுக்குக் காத்திருந்தது. அங்கே நேற்றிரவு கண்ட வீடு இப்போது இல்லை. அதே மைல் கல்லு அதே மாமரம் ஆனால் வீடு மட்டும் இல்லை. அவன் முள்ளந்தண்ணூடாக ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ச்சியதைப் போன்று ஒரே அதிர்ச்சியாக இருந்தது. அந்நேரம் அப் பாதையினூடாக ஒரு முதியவர் வரவே அவரிடம் குகன் மெல்லப் பேச்சுக்கொடுத்தான்.

“ஐயா! இந்தப் பக்கம் வீடு ஒன்று இருந்ததில்லோ?”

”என்ன தம்பி நக்கலா? இங்க நான் 50 வருசமா இருக்கிறன். இந்த இடத்தில வீடு ஒன்றும் இருக்கேல. தண்ணி கிண்ணி போட்டியளோ?” ஒரு சங்கேதப் பார்வையுடன் அங்கிருந்து நகர்ந்தார் அந்த முதியவர்.

குகன் மீது 1000 மின்னல்கள் ஒரேயடியாக விழுந்தது போல உணர்ந்தான். மெல்ல தனது வாகனத்தை நோக்கி நடக்கத் தொடங்கிவன் மனதினுள் நினைத்துக்கொண்டான்.
“இனிமேல் இரவில் தனியாகப் பிரயாணம் செய்வதில்லை”

குகனின் வாகனம் மெல்ல மெல்ல தன்பாதையில் செல்கின்றது. சூரியன் மெல்ல மெல்ல மறைந்து எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது. அன்றிரவு அப்பாதையால் ஒரு டோயோட்டா கொரால்லா வருகின்றது. அதில் இருந்து நன்றி சொல்லியவாறே அதே அழகிய நங்கை இறங்குகின்றாள்.

5 thoughts on “இரவுகள் தோறும்”

  1. தம்பி எதாவது பிரயோசனமாய் எழுதலாமே. உந்த பேய் கதையை விட்டுவிட்டு மாவீரர் வாரத்தில நல்ல ஆரோக்கியமான விசயத்தோட வாரும்.

  2. புரிந்த மாதிரியும் இருக்கு… விளங்காத மாதிரியும் இருக்கு…
    ஆனா நல்லா இருக்கு… 😉

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.