All posts by Mayooresan

Wild West ஸ்பெஷல் இலங்கையிலும்

பல இழுத்தடிப்புகள் கும்மிகள் வெட்டுக் குத்துகளுக்கு தாமதங்களின் பின்னர் வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் நேற்று இலங்கை மண்ணைத் தொட்டது. புத்தகத்தின் வெளி அட்டயே அத்தனை அட்டகாசமாக இருக்க பக்கத்தில் இருந்த சைவ உணவகத்தினுள் புகுந்து வெளியுறையை அகற்றி தட தடவென சித்திரங்களை மேலோட்டமாகப் பார்க்கத் தொடங்கினேன். அட அட அட! காத்திருந்தது வீண் போகவில்லை அப்படி ஒரு அருமையான சித்திரங்கள். வண்ணத்திலே ஜொலித்தது.

மொத்தம் 3 கதைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன

  1. மரண நகரம் மிசௌரி – கப்டன் டைகர்
  2. எமனில் திரை மேற்கு – கிராபிக் நாவல்
  3. ஒரு பனிவேட்டை – ஸ்டீவ்

மரண நகரம் மிசௌரி கப்டன் டைகர் ஏமாற்றாவிட்டாலும், கதை சாதா ரகமே. கபடன் டைகரின் முற்காலக் கதைசொல்லும் புத்தகத் தொடரில் இது 4ம் கதையாம். தொடர் என்றாலும் முன்னைய கதை வாசிக்காமல் இந்தக் கதை வாசித்தால் ஒன்றும் புரியாது என்று கவலைகொள்ள வேண்டாம். அப்படி எதுவும் இல்லை.

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் அமெரிக்காவின் வடக்கும் தெற்கும் உள்கோஷ்டி மோதலில் உக்கிரம் அடையும் வேளையில் டைகர் ஒரு படையணியை மிசௌரி கன்சாஸ் எல்லையில் உள்ள ஒரு இராணுவக் கோட்டைக்கு அழைத்து வருகின்றார். அங்கிருந்து ஒரு புரட்சி வேடம் இட்ட குள்ள நரியைத் தேடி மிசௌரி விரைகின்றார் டைகர். கதை அப்படியே அதைச் சுற்றி நகர்கின்றது. இறுதியில் என்ன ஆனது என்று நீங்களே வாசித்து அறிந்து கொண்டிருப்பீர்கள் அல்லது அறிந்து கொள்ளலாம் 😉 கதை சுமார் இரகம் என்றாலும் வண்ணத்தில் சித்திரங்கள் இலயிக்க வைக்கின்றன.

எமனின் திசை மேற்கு எனும் கிராபிக் நாவல் அப்படியே அசர வைத்துவிட்டது. கதையின் போக்கும் சித்திரங்களும் தூள் தூள். மங்கலான வெளிச்சத்தில் நடக்கும் காட்சிகள் எல்லாம் அப்படியே தூக்கி சாப்பிட்டுவிடுகின்றன. ஒற்றைக் கையுடன் அலையும் இந்த நபர் ஹீரோவாக முடியுமா என நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன் வாசித்து முடிந்த பின்னர்தான் அது எத்தனை முட்டாள் தனமான கேள்வி என்று புரிந்து கொண்டது. சில வேளைகளில் நீண்ட காலத்திற்கு ஓடக் கூடிய வரைகதை தொடர்களுக்கான ஹீரோ என்றால் அப்படி அங்க லட்சணத்துடன் அல்லது குறைந்த பட்சம் டைகர் மாதிரி அழுக்காக இருந்தாலும் வீரத்துடன் இருக்க வேண்டும். ஆனால் இது போன்ற கிராபிக் நாவல்களில் மாஸ் ஹீரோவிற்கான ஈகோ இல்லை தேவையும் இல்லை. அதுவேதான் இந்த கிராபிக் நாவலின் வெற்றி. கதை முடிந்து விட்டது என எண்ணும் போது எபிலொக் ஒன்று கூட உள்ளது.

மூன்றாவதாக உள்ள ஒரு பனி வேட்டை எனும் கதை பற்றி ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை. முன்னைய கதை இரண்டும் மெகா பட்ஜட் ரஜனி திரைப்படம் போலவும் மூன்றாம் கதை கறுப்புவெள்ளையில் வெற்றிடம் நிரப்ப வந்த ஒரு சிறு பட்ஜட் திரைப்படம் போலவும் இருந்தது.

தமிழ் காமிக்ஸ் பிரியர்கள் அனைவரும் கட்டாயம் வாசித்து கையகப் படுத்த வேண்டிய புத்தகம் இது.

இவற்றையும் வாசியுங்கள்

படங்கள் ஆசிரியர் விஜயனின் வலைப்பதிவில் அனுமதியின்றி சுடப்பட்டவை.

Scarface விமர்சனம் (1983)

அல் பாசினோ ஹாலிவூட் கண்ட ஒரு பெருமகன் என்பதில் ஐயம் இல்லை. திரைப்படத்தைப் பற்றி எழுத முன்னர் அவரைப் பற்றி சில வரிகள் எழுதியே ஆக வேண்டும். நான் முதல் முதலாகப் பார்த்த அலபாசினோ திரைப்படம் ‘Scent of a Woman’ எனும் திரைப்படம். கண் தெரியாத ஒரு வயதான நபராக வந்து திரைப்பட முடிவில் அனைவர் மனதையும் அள்ளிச் செல்வார். சில ஆண்டுளின் பின்னர் இவர் நடித்த உலகப் புகழ் பெற்ற திரைப்படமான ‘The Godfather’ திரைப்படத்தைப் பார்த்தேன். இள வயதில் எத்தனை துடிப்பான ஆண் அழகுடன் மிடுக்காக நடித்து இருக்கின்றார். அதைத் தொடரந்து பார்த்ததே இந்த ‘Scarface’ திரைப்படம்.

எங்கள் கொலிவூட் அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த படம் பில்லா 2 கூட இந்த திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகவே கூறப்பட்டது. இன்னும் பில்லா 2 திரைப்படத்தைப் பார்க்காத காரணத்தால் அதை உறுதிசெய்ய முடியவில்லை.

1980ம் ஆண்டு கியூப அதிபர் பிடல் காஸ்டோ கியூபாவில் தங்க விருப்பம் இல்லாத அனைவரும் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று உத்தரவிட்டார். ஏப்ரல் 1980 முதல் அக்டோபர் 1980 வரை சுமார் 125,000 கியூபர்கள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை வந்தடைந்தனர். இந்த அகதிகள் வருகையை அமெரிக்கா அவரசமாக நிறுத்தியதன் காரணம் வந்து சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் சிறைச்சாலையில் இருந்து வெளியேறியவர்களும் மனோநிலை சரியில்லாதவர்களுமாவர்.

இந்த நிகழ்வை மையமாக வைத்து பல ஹாலிவூட் திரைப்படங்கள் இயக்கப்பட்டன (The Perez Family (1995), and Before Night Falls (2000)). இந்த ஸ்கார்பேஸ் திரைப்படமும் இவ்வாறு படகில் அமெரிக்கா வந்த ஒரு அகதியைச் சுற்றி நடக்கும் கதையையே களமாகக் கொண்டுள்ளது.

படகில் வரும் கியூப அகதிகள்

1980 இல் அகதியாக அமெரிக்க மண்ணில் கால் பதிக்கின்றார் டொனி (அன் பாசினோ) மற்றும் அவர் நண்பர்கள். பீரீடம்டவுன் எனும் அகதி முகாமில் அடைக்கப்படுகின்றான். போதைப் பொருள் கடத்தும் ஒருத்தன் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே அகதி முகாமிற்கு அடைக்கலம் தேடி வரும் முன்னாள் கியூப அரச அதிகாரி ஒருத்தரை கொலைசெய்கின்றான் டொனி. இதற்குப் பரிகாரமாக டொனிக்கும் அவன் நண்பனிற்கும் கிரீன் கார்ட் சட்டத்திற்குப் புறம்பாகக் கொடுக்கப்படுகின்றது.

இயக்கம் :Brian De Palma
தயாரிப்பு : Martin Bregman
வசனம் : Oliver Stone
நடிப்பு : Al Pacino
தொடுப்புகள் : IMDB
: Rotten Tomatoes
: Wiki

இதன் பின்னர் ஒரு உணவகத்தில் டொனியும் அவன் நண்பனும் வேலைசெகின்றனர். வாழ்க்கையில் பெரிதாக எதையும் செய்ய வேண்டும் என எண்ணும் டொனி தனது நண்பன் உதவியுடன் உணவக வேலையை விட்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றான்.

இந்த தொழிலில் மெல்ல மெல்ல உச்சிக்கு செல்லும் டொனி இறுதியில் என்ன ஆகின்றான். அவன் காதலித்த பெண், உறவினர்கள் கதி என்னாகின்றது என்பதை மிகுதிப் படம் காட்டுகின்றது.

வன்முறை வன்முறை வன்முறை

படம் தொடங்கும் போதும் முடியும் போதும் “”The World is Yours”” எனும் வார்த்தை படத்தில் வந்து போகும். உண்மையிலேயே இந்த உலகம் எங்களுடையது இல்லை என்று சொல்லாமல் சொல்கின்றார்கள் போலும்.

அந்த்காலத்திலேயே இத்தனை வன்முறைகளுடன் படம் எடுத்து சக்கை போட்டிருக்கின்றார்கள். நின்றால் குத்து இருந்தாள் துப்பாக்கிச்சூடு என படம் முழுக்க திரும்பும் இடம் எலாம் வெட்டுக் குத்தது மற்றும் கண்ணே காதலி என்று படம் இருக்கின்றது.

பணத்தால் வாங்கிய காதலி

இந்த திரைப்படம் வெளியான வேளையில் வன்முறைக்காக இந்த திரைப்படம் கடும் எதிர்ப்பை வாங்கிக்கட்டிக்கொண்டது. அத்துடன் மியாமியில் இருக்கும் கியூப குடியேற்ற வாசிகள் தங்கள் சமூகத்தை போதைப்பொருள் கடத்துபவராகவும் கொள்ளைக்காரர்களாகவும் காட்டுவதாகக் கூறி இந்தத் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

திரைபடம் வெளியிடப்பட்ட காலத்திலே அவ்வளவாகப் பெயர் பெறாவிட்டாலும் காலப்போக்கில் படத்திற்கு நல்ல பெயர் கிடைக்கத் தொடங்கியது. அந்தக்காலத்தில் சுமார் 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளது. இக்காலப் பெறுமதியில் இது 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிகம்.

சுமார் 30 வருடம் பழமையான திரைப்படம். ஆகவே திரைப்படம் பார்க்கும் போது இந்த வருடம் வெளியான அதிரடி திரைப்படம் போல வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஆனால் கிரைம் கதைகளை இரசிப்பவரானால் உங்களை ஏமாற்றாது இந்த திரைப்படம்.
.

Project X (2012) விமர்சனம்


காலம் காலமாக பதின்ம வயதுப் பசங்கள் அடிக்கும் கூத்தை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவருவது வழமை தானே. 70 வதுகளில் ஆரம்பித்த ‘American Graffiti’ தொடக்கம் 2000ம் களில் வெளிவந்து சக்கை போடு போட்ட ‘American Pie’ வரை இந்த இரக திரைப்படங்களே. இதில் வரும் நகைச்சுவைக் காட்சிகளை எல்லாரும் நகைச்சுவையாக ஏற்க்கொள்வதில்லை ஆனால் அந்த வயது உடையோரிற்கு மெகா ஹிட் திரைப்படம் அது.

இந்த வரிசையில் 2010 களில் கலக்கவென்றே வந்த திரைப்படம்தான் ‘Project X’. உயர் பள்ளியில் கல்விகற்கும் 3 மாணவர்கள். அவ்வளவாக பாடசாலையில் பிரபலம் இல்லாதவர்கள். தானுண்டு தன் படிப்பு உண்டு என்று இருக்கும் மாணவர்கள். இந்த மூன்று நண்பர்களில் ஒருத்தனிற்கு பிறந்தநாள் வருகின்றது. பிறந்தநாளைக் கொண்டாட முடிவெடுகின்றனர் நண்பர்கள்.

இயக்கம் : Nima Nourizadeh
தயாரிப்பு : Todd Phillips
வசனம் : Matt Drake
: Michael Bacall
கதை : Michael Bacall
நடிப்பு : Thomas Mann
: Oliver Cooper
: Jonathan Daniel Brown
: Kirby Bliss Blanton
: Alexis Knapp
தொடுப்புகள் : IMDB
: Rotten Tomatoes
: Wiki

பொதுவாகவே பாடசாலையில் பிரபலம் இல்லாத இவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள். ஆகவே நண்பர்களை எல்லாம் அழைத்து பெரிய கொண்டாட்டம் ஒன்றை நடத்த இந்த மூன்று நண்பர்களும் திட்டம் போடுகின்றனர். இதை இன்னும் ஒரு நண்பர் தனது வீடியோ கமிராவினால் படம் பிடிப்பது போல காட்சிகள் அமைகின்றன. தோமசின் பிறந்தநாள் களியாட்டத்தை கொஸ்டா எனும் மற்றைய நண்பன் அமைக்கின்றான். ஆரம்பத்தில் பயந்தாலும் பிறகு தோமசும் ஒத்துக்கொள்ள களியாட்ட நிகழ்வுக்கான ஆரம்ப பணிகளை கொஸ்டா தொடங்குகின்றான்.

மும் மூர்த்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம் நினைத்தது போலவே நிதானமாக ஆரம்பித்து பின்னர் பிழையாகத் தொடர்கின்றது. கட்டுக்கடங்காமல் எல்லை மீறிப் போகின்றது. என்ன நடந்தது எப்படி நடந்தது என்று எதையுமே சொல்லப் போவதில்லை நீங்களாகவே பார்த்து இரசித்து சிரித்துக்கொள்ளுங்கள்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

இங்கே முக்கியமான விடையம் குடும்பத்தாருடன் பார்க்க முடியாத திரைப்படம் இது. கட்டாயமாக சிறுவர்களிற்கு ஏற்ற திரைப்படம் இல்லை.

இந்த திரைப்படத்தை பார்க்கும் போது அடிக்கடி ‘The Hangover’ திரைப்படம் ஞாபகத்திற்கு வருவதைத் தடுக்க முடியாது. என்ன காரணமாக இருக்கும் என்று தேடியபோதுதான் ஒரு குட்டு வெளிப்பட்டது. ‘The Hanover’ திரைப்பட இயக்குனர் ‘ Todd Phillips’ இந்தை திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பதே.

சுமார் 12 மில்லியன் பட்ஜட்டில் தயாரானாலும் வசூலில் 100 மில்லியனிற்கு மேல் சம்பாதித்து சாதனை புரிந்துள்ளது இந்த திரைப்படம். தயாரிப்பாளர் இந்த திரைப்படம் ஒரு பரிசோதனை முயற்சியே என்று கூறினார். தயாரிப்பு வேலைகளும் மிக இரகசியமாக நடத்தப் பட்டது. ஒரு பாத்திரத்தில் நடிப்பவரிற்கு அவர் பாத்திரம் சார்ந்த திரைக்கதை வசனம் என்பவை மட்டுமே பகிரப்பட்டது.

திரைப்படம் வெற்றியடைந்தாலும் திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் தாறுமாறாக அமைந்தன. பலர் இதை தனித்துவம் இல்லாத திரைப்படம் என்று திட்டித் தீர்த்துக் கூட இருந்தனர். எது என்னவாகினும் திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றியடைந்துள்ளது.
.

லக்கி லூக் துரத்தும் டால்ட்டன் சகோதரர்கள்

லக்கிலூக் கதைவாசிக்கும் பலரிற்கும் டால்ட்டன் சகோதரர்களைப் பற்றித் தெரியாமல் இருக்கச் சந்தர்ப்பம் இல்லை. ஆரோகணம் போல உயரத்தில் கூடிச்செல்லும் சகோதரர்கள் அவர்கள். சகோதரர்களில் மூத்தவர் மிகச் சிறியவர்தான் யோ டால்ட்டன். கடுகு சிறிது காரம் பெரிது என்பது போல அதி புத்திசாலியும், சிறை உடைப்புகளில் பல பூட்டுக்களை போட்டுத் தகர்ப்பவரும் இவர்தான். ஆனால் இவரிற்கு எதிர்மாறானவர் கடைக்குட்டியும் உயரமான தோற்றமும் உடைய அவ்ரல். கதையில் மிகப் பெரிய காமடிப் பீசாக இவர் வந்து பண்ணும் அட்டகாசங்கள் ஜோர். இவர்கள் இருவரையும் விட மற்றும் இரு சகோதரர்கள்.

உங்களுக்குத் தெரியுமா டால்ட்டன் சகோதரர்கள் வரலாற்றில் உண்மையாகவே இருந்தார்கள் என்பது?. வங்கி மற்றும் தொடரூந்து கொள்ளைகளில் சிறப்புற்று இருந்திருக்கின்றார்கள். காமிக்ஸ் கதைகளில் வரும் டால்ட்டன் சகோதரர்களுக்கு இவர்களே உத்வேகம் கொடுத்துள்ளனர்.

இவர்களின் தந்தை பெயர் லூயிஸ் டால்ட்டன் மற்றும் தாயார் பெயர் அடலீன் ஆகும். இவர்களுக்கு மொத்தம் 15 பிள்ளைகள் பிறந்திருக்கின்றன அதில் 2 குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துவிட்டன.

பிராங் டால்ட்டன் என்பவர் இவர்களில் மூத்த சகோதரன் ஆவார். சட்டதிட்டங்களைப் போற்றி அரச உத்தியோகத்தில் டெபுடி யு.ஸ் மார்சலாக வேலை செய்த இவர் ஒரு குதிரைத் திருட்டு சம்பந்தமான வழக்கை விசாரிக்கச்சென்ற இடத்தில் குதிரை களவாணிப் பயலால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆயினும் பின்னர் அந்த குதிரைக் களவானிப்பயலை சட்டம் இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது என்பது வேறு கதை.

கிராட், பாப் மற்றும் எம்மெட் ஆகிய மூன்று டால்ட்டன் சகோதரர்களும் மறைந்த அவர்கள் அண்ணன் வழியில் சட்டத்தின் மைந்தர்களாகப் பணிபுரிந்தனர் ஆயினும் சம்பள முரண்பாடு காரணமாக தமது தொழிலைவிட்டு நகர்ந்ததுடன் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளையும் செய்யத்தொடங்கினர். குதிரை கடத்தில், சட்ட விரோத மது கடத்தல் மற்றும் கொலை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள்மீது வந்து சேர்ந்தது.

1891ற்கும் 1892ற்கும் இடையில் சுமார் 4 தொடரூந்து வண்டிகளை டால்டன் சகோதரர்கள் கொள்ளையடித்தனர். இதைவிட கைது செய்த பொலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஆங்கிலப் பட பாணியில் ஓடும் இரயிலில் இருந்து குதித்து ஆற்றுநீரில் நீந்து சாகசத்தை எல்லாம் கிராட் டால்ட்டன் செய்திருக்கின்றார்.

தொடரூந்து வண்டிக் கொள்ளையில் கோலோச்சிக்கொண்டு இருந்த டால்ட்டன் குழு மெல்ல வங்கிக் கொள்ளைபக்கம் திரும்பியது. அக்டோபர் 5, 1982இல் கன்சாசில் உள்ள இரண்டு வங்கிகளை பட்டப்பகலில் கொள்ளையடிக்கு புறப்பட்டனர். இவர்களை அடையாளம் கண்டுகொண்ட ஊர் மக்கள் தாமும் துப்பாக்கிளை ஏந்தியவாறு இவர்களை சூழத்தொடங்கினர். கொள்ளையடித்து வெளியேறிய டால்ட்டன் சகோதரர்களுக்கும் மற்றவர்களுக்கும் துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில் எமெட் டால்ட்டன் தவிர அனைத்து டால்ட்டன் சகோதரர்களும் கொலைசெய்யப்பட்டனர். எமெட் டால்ட்டன் 23 துப்பாக்கி ரவைகள் துளைத்தும் உயிருடன் தப்பிப் பிழைத்தார் என்பதும் ஒரு கதை.

இதுதான் டால்ட்டன் சகோதரர்களின் கதை. அண்மையில் முந்திய லயன் பதிப்புகளில் ஒன்றான ஜாலி ஸ்பெஷல் ஐ கோகுலம் வாசகர் வட்டம் ஆதரவினால் கொழும்பில் வாங்கிக்கொண்டேன். அதனுடன் இலவச இணைப்பாக தாயில்லாமல் டால்ட்டன் இல்லை என்ற புத்தகமும் கிடைத்தது.

அதில் டால்ட்டன் சகோதரர்களுடன் டால்ட்டனின் தாயாரும் வந்து சேர்கின்றார். மா டால்ட்ன் என்ற இந்தப் பாத்திரமும் அமெரிக்க வரலாற்றில் புகழ்பெற்ற மா பாக்கர் என்பவரால் ஊக்கம் பெற்று படைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் எங்கள் லயனோ வேறுவிதமாகக் கதைசொல்கின்றது. கீழே உள்ள ஸ்கானில் லயன் மா டால்ட்டன் பற்றி என்ன சொல்கின்றது என்று பாருங்கள்.

குறிப்பு : கீழே உள்ள படங்களில் எழுத்துக்கள் தெளிவில்லாவிட்டால் படங்கள் மேல் சொடுங்கி படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கலாம்.

டால்ட்டன் சகோதரர்களைப் பிடித்திருந்தால் இந்தக்கதையும் உங்களுக்குப் பிடித்திருக்கும். லக்கிலூக்கின் லூட்டிகளும் ஜாலி ஜம்பரின் குட்டிக்கரணங்களுக்கும் இந்தக்கதையில் குறைவில்லை. வாசித்து பயனடையுங்கள் அனைவரும்.

வாழ்க தமிழ் வழர்க லயன் காமிக்ஸ் 😉

என் பெயர் லார்க்கோ வின்ஞ்

நேற்றைய தினம் வழமைபோல கதிரேசன் கோவில் சென்று திரும்பும் வழியில் பக்கத்தில் இருந்த பழக்கடை வாசலில் இங்கே லயன், முத்து காமிக்ஸ் கிடைக்கும் என்ற பள பள அட்டை தொங்கிக்கொண்டு இருந்தது. இதற்கு முன்னர் செல்லும் நேரம் எல்லாம் புத்தகம் முடிந்துவிட்டது இன்னும் இந்தியாவில் இருந்து வரவில்லை போன்ற சலிப்பான பதில்களே கிடைக்கும். நானும் வெறுத்துப் போய் வழமை போல ஆங்கில கொமிக்ஸ் புத்தகங்களை விஜித யாபா புத்தகசாலையில் வாங்கி படித்துக் கொள்ளுவேன்.

தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள்

நேற்று இந்த புத்தகம் உள்ளது அறிவிப்பைக் கண்டதும் சந்தோசமாகச் சென்று இரண்டு புத்தகங்களை கையகப்படுத்திக் கொண்டேன்.

  1. சாத்தானின் தூதன் டாக்டர் 7
  2. என் பெயர் லார்க்கோமுன்னையது லயன் காமிக்ஸ் பின்னையது முத்து காமிக்ஸ். சாத்தானின் தூதன் புத்தகம் பற்றி முதலில் பார்த்துவிடலாம் வழமையான சாணித் தாள் போன்ற அமைப்புடைய பக்கங்களில் அச்சிடப்பட்ட சுமார் இரகக் கதை. இரண்டாவதாக வந்துள்ள கன்னித் தீவில் ஒரு காரிகை என்ற கதை புதையலைப் பூதம் காக்கும் கதையொன்று. ஒப்பீட்டளவில் டாக்டர் 7 கதையை விட இந்தக் கதை அருமையாக இருந்தது என்பது அடியேனின் கருத்து. இலங்கை ரூபா 65 க்கு இந்தப்புத்தகம் இலங்கையில் கிடைக்கின்றது.

இரண்டாவது புத்தகம் என் பெயர் லார்க்கோ என்பது. Surprise Special என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம் Surprise indeed. புத்தகத்தின் தரம், அச்சின் தரம் என்பவை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வைத்தன. சிறப்பான அச்சு, பக்கத்துடன் வந்துள்ள புத்தகத்தின் கதை மொக்கையாக இருக்கக்கூடாதே என்று வேண்டிக்கொண்டே வாசிக்கத் தொடங்கியதும் மனதுக்கு நிம்மதி. லார்க்கோ புதிதாக தமிழிற்கு வந்திருக்கின்றார் நிச்சயமாக ஒரு பெரிய வலம் வருவார் என்று தெரிகின்றது.

சித்திரங்களின் நேர்த்தியும் கதையில் அடிக்கடி நிகழும் அதிரடிகளும் லார்க்கோவை தமிழில் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன். இதே தரத்தில் தொடர்ந்தும் பல புத்தகங்கள் வர வேண்டும் என்பது அடியேனின் விருப்பம். இந்தப் புத்தகத்தில் 1986 இல் வெளியான திகில் காமிக்ஸ் மறுபதிப்பு இரண்டாம் பாகமாக இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறு சிறு அனுமாஷ்ய கதைகள் இணைக்கப்பட்டுள்ளது. திகில் காமிக்ஸ் வாசிக்கும் போது ஏதோ 20 வயது குறைந்திட்ட மாதிரி ஒரு உணர்வு. இலங்கை ரூபா 435 க்கு இந்தப் புத்தகம் கிடைக்கின்றது.

இலங்கையில் இருக்கும் நண்பர்கள் கதிரேசன் கோவிலிற்குப் பக்கத்தில் இருக்கும் பழக்கடையில், வெள்ளவத்தை HSBC வங்கியிலிருந்து வெள்ளவத்தை சந்தி நோக்கி நடக்கும் போது கடற்கரைப்பக்கம் அமைந்திருக்கும் DOT MUSIC மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பஸ் தரிப்பிடத்திற்கு பின்னால் இருக்கும் சிறிய பத்திரிகைக் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்.

கொழும்பில் இல்லாத கொமிக்ஸ் இரசிகர்கள் கோகுலம் வாசகர் வட்டத்தை 077-5143907, kogulamrc@gmail என்ன முகவரியினூடு தொடர்புகொண்டு புத்தகங்களை தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் காமிக்ஸ் புத்தகங்கள் குதிரைக் கொம்பாக இருந்த காலம் மாறி பரந்தளவில் கிடைக்கச் செய்யும் கோகுலம் வாசகர் வட்டத்திற்கு மிக்க நன்றிகள்.

இன்று மாலை சென்று தலைவாங்கிக் குரங்கு வாங்க இருக்கின்றேன். இதைவிட கம்பக் ஸ்பெஷல் இந்தியாவில் இருந்து வருவித்துத்தர முடியுமா என்று கோகுலம் வா.வ கேட்டுள்ளேன் பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

The Hunger Games (2012) விமர்சனம்

The Hunger Games புத்தகத்தை கடந்த வருடம் வாசித்து முடித்தேன். ஹரி போட்டர் விட்ட இடத்தை ட்வைலைட் நிரப்ப பின்னர் ட்வைலைட் விட்ட இடத்தை இந்த ஹங்கர் கேம்ஸ் தொடர் நிரப்பியது என்பதே அடியேனின் எண்ணம். இந்த ஹங்கர் கேம்ஸ் திரைப்படம்/புத்தகத்தின் கதைகள் எதிர்காலத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது வட அமெரிக்கா சின்னாபின்னப்பட்டு பல பாகங்களாகப் பிரிகின்றது. அழிவின் மத்தியில் இருந்து புதிய நாடு ஒன்று பிறக்கின்றது. அதுவே பனம் (பிணம் இல்லை) ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு பெயர் டிஸ்ரிக்ட் 1 – 12 வரை மாவட்டங்கள். இத்தனை மாவட்டங்களின் தலையாய மாவட்டம் மற்றும் தலைநகரம் கபிடொல் (Capitol). தலைநகர் கப்படிட்டலுக்கு எதிராக நடந்த புரட்சி முரட்டுத் தனமாக அடக்கப்படுகின்றது. இனி இவ்வாறு ஒரு தப்பை மாவட்டங்கள் செய்யாது தடுப்பதற்காக புரட்சி நசுக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்க ஹங்கர் கேம்ஸ் எனும் இந்த விபரீத விளையாட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது.


சரி ஹங்கர் கேம்ஸ் என்றால் என்ன?? அதாவது 12 மாவட்டங்களிலும் இருந்து ஒரு ஆண், ஒரு பெண் வீதம் மொத்தம் 24பேர் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்படுவர். இந்த 24 பேரும் தலைநகர் கபிடோலிற்கு அழைத்துவரப்பட்டு அங்கே ஒரு மூடபட்ட காடு போன்ற அமைப்புடைய அரங்கில் விடப்படுவர். 24 பேரும் ஒருத்தருடன் ஒருத்தர் மோதிக் கொலை செய்ய வேண்டும் மற்றப் போட்டியாளரை. எஞ்சும் ஒரு போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். இந்தப் போட்டி நாங்கள் பார்க்கும் எயார்டெல் சுப்பர் சிங்கர் போல பனமின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். தமது உறவுகள் ஒன்றொன்றாக கொல்லப்படுவதை தொலைக்காட்சியில் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு டிஸ்ரிக்ட் 1 தொடக்கம் 12 வரையான மக்கள் கட்டாயப்படுத்தப்படுவர். இதுதான் கதையின் பின்ணனி.

இந்தக் கதை வழமையான கதைகள் போல ஒரு கதாநாயகன் பின்பு அவர் காதலிப்பதற்காக ஒரு கதாநாயகி என்று அமையவில்லை. கதையின் மையைப் பாத்திரம் ஒரு பெண். ஒரு இளம் வயது யுவதி. ஒரு வேளை உணவிற்காக ஏங்கும் தனது குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு வீராங்கனை. விதியின் விளையாட்டால் இந்தப் பெண்ணும் ஹங்கர் கேம்சிற்காக டிஸ்டிக்ட் 12 இல் இருந்து தெரிவு செய்யப்படுகின்றார். கதையின் மிகுதி இந்தப் பெண்ணையும் அவருடன் டிஸ்ரிக்ட் 12 இல் இருந்து தெரிவு செய்யப்படும் மற்றய ஆடவனையும் சுற்றி நிகழ்கின்றது. ஹங்கர் கேம்சில் என்ன நடந்தது அதில் இந்த கன்டனிஸ் எனும் பெண் வென்றாளா இல்லையா என்பதை மிகுதிக் கதை சொல்கின்றது. அடுத்து வரப் போகும் இரண்டு பாகங்களிற்கும் இங்கே சிறப்பான அடித்தளம் இடப்படுகின்றது.

The Girl on Fire

கதைக்காக புத்தகத்தின் பல பாகங்களை கத்தரித்திருகின்றார்கள். புத்தகம் வாசித்து விட்டு திரைப்படம் பார்ப்பவர்களுக்கு சிறிது ஏமாற்றம் இருந்தாலும், நேரடியாக திரைப்படத்தைப் பார்ப்போரிற்கு சிறந்த ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம். வெறுமனே அம்புலிமாமா கதை என்று நினைத்துவிட வேண்டாம் விஞ்ஞான புனைகதைகளுக்கு ஒத்த கதையோட்டம் உண்டு. ஜப்பர்ஜே, ட்ரக்கர் ஜக்கட் அப்பிடி இப்படி என்றெல்லாம் மரபுரிமை மாற்றம் செய்யப்பட்ட விலங்குகள் எல்லாம் கதையில் வந்து போகும். கிளைமாக்ஸ்சில் கூட ஒரு மரபியல் விகாரம் அடைந்த (mutation) விலங்குகள் வந்து போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

முக்கோணக் காதல்

அது சரி பாஸ், காதல் ரொமான்ஸ் எல்லாம் படத்தில் இல்லையா? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கின்றது. அது இல்லாமலா? 😉 சாதாரண காதல் இல்லை முக்கோணக் காதல் இருக்கின்றது. ஒரு நாயகி இரண்டு நாயகன்கள்.. மிகுதியை நீங்களே யோசித்துக் கொள்ளலாம். காதல் தேசம் அளவிற்கு அப்பாஸ், வினித் மாதிரி இருவரும் அடித்துக் கொள்ளமாட்டாகர்கள் என்பது ஒரு ஆறுதலான தகவல் 😀

மொத்தத்தில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான திரைப்படம். இளவட்டங்களுக்கு மிகவும் பிடித்துப் போகும் இந்த திரைப்படம்.

IMDB Rating 76/100
My Rating 85/100
.

Mission: Impossible – Ghost Protocol

மிசன் இம்பொசிபிள் திரைப்படங்கள் உலகப் புகழ் பெற்றவை. ஈதன் ஹன்ட் எனும் துப்பறிவாளனையும் அவனைச் சுற்றி இருப்போரையும் சுற்றிக் கதைகள் நகரும். உலகின் பெரும் நகரங்களில் கதைகளின் களம் அமையும். முதல் மூன்று பாகங்களும் உலக ரீதியில் வர்த்தக ரீதியில் வெற்றியடையவே இப்போது நான்காம் பாகத்தையும் வெளியிட்டுள்ளனர். வழமை போல டொம் குரூஸ் திரைப்படத்தின் நாயகன்.

அமெரிக்க ருசியா உறவு முறை இப்போது ஒரளவு நன்றாக இருந்தாலும் பனிப் போர் காலத்தில் மிக மோசமாக இருந்த்து. குறிப்பாக ருசியா கியூபாவில் ஏவுகணைத் தளங்களை அமைத்த போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக மிக மோசமான நிலையை அடைந்தது. ருசிய கப்பல்கள் பசிபிக் கடலைத் தாண்டி வரும் போது தாக்குதல் நடத்துமாறு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக உத்தரவிடுமளவிற்கு நிலமை தலைகீழாய் இருந்தது.

தற்போது MI4 திரைப்படத்தில் மீண்டும் அமெரிக்க உருசிய உறவுகள் மோசமடைகின்றது. இதற்கு முக்கியகாரணமாக கிரெம்பிளின் மாளிகையில் நடக்கும் குண்டுவெடிப்பும் அதற்கு பொறுப்பாக்கப்பட்ட டொம்குரூஸ் மற்றும் அவர் குழுவினருமாகும் (IMF).

துபாய்

அமெரிக்க அரசு IMF ஐ இடை நிறுத்துகின்றது. தற்போது டொம் குரூசும் அவர் குழுவினரும் கிரம்ளின் மாளிகையில் தொலைந்த ஆவணங்களை மீளக் கைப்பற்றி நடக்க இருக்கும் அணுகுண்டு ஏவுகணைத் தாக்குதலைத் தவிர்க்க முயல்கின்றனர்.

சாதாரணமான கதை ஆனால் சிறப்பான நடிப்பு அருமையான சண்டைக் காட்சிகள் படத்தை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. குறிப்பாக டுபாயின் உயர்ந்த கட்டிடத்தில் நடக்கும் காட்சிகள், மண் புயலினூடு நடக்கும் கார் துரத்தல் காட்சிகள் எல்லாம் அபாரம். டிவிடியில் இந்த திரைப்படம் பார்ப்பதெல்லாம் வேஸ்ட்டு, கட்டாயம் திரையரங்கில் பார்த்துவிடுங்கள்.

மண் புயலினூடு வில்லனைத் தேடும் ஈதன் ஹன்ட்

கதை என்னவோ அமெரிக்காவில் ஆரம்பித்தாலும் இறுதியில் முடிவடைவது இந்தியாவின் ஒரு தானியங்கி கார் தரிப்பிடத்தில். மும்பாய் என்று அவர்கள் சொன்னாலும் கட்டடங்கள் எங்கும் சண் டீவி இலச்சினையும் தெலுங்கு எழுத்துக்களுமே தெரிகின்றன. ஹைதராபாத்தில் காட்சிகளைச் சுட்டிருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

ஜெரமி ரைன்னர் காட்சிகள் எங்கும் நடிப்பில் கலக்குகின்றார். வழமையாக ஹீரோ மட்டும் செய்யும் சாகச காரியங்களை அவரும் செய்கின்றார். அதே வேளை சிமொன் பெக் கல கல திணைக்களத்தை குத்தகைக்கு எடுத்து சிரிக்க வைக்கின்றார். மொக்கை காமடிகள் இல்லாமல் போனமை மனதிற்கு ஆறுதல். போலா பட்டன் அழகுப் பதுமையாக வருகின்றார். சண்டைக் காட்சிகளில் சீற்றம் கொண்ட வேங்கையாக மோதுகின்றார். பிறகு அணில் கபூரை பேச்சில் மயக்கி படுக்கை வரை அழைத்து அங்கே வைத்து மொத்துகின்றார். பாவம் அணில் கபூர் ஒரு மொக்கை இந்தியப் பணக்காரன் வேடத்தில் வந்து சில நிமிடங்கள் சிரிக்கவைத்து விட்டுப் போகின்றார்.

டொம் குரூசின் முகம் எங்கும் வயதான ரேகைகள் வெளிப்படையாவே தெரிகின்றது. எமது அபிமான நடிகர்கள் பலரும் வயதாகிப் போனது என்னவோ கவலைதான் தருகின்றது. ஆனால் அவர்களுக்கு வயதாகி விட்டது என்று கவலை பட உலகமே இருக்கின்றது, அவர்களுடன் சேர்ந்து எங்களுக்கும் வயதாகிக் கொண்டே போகின்றது என்று நினைக்கும் போது பக் என்கிறது இதயம் 😉

புள்ளி 70/100

மயூரேசன்


.

3.5

A Cat in Paris (2010)

கார்டூன் திரைப்படங்களை நாம் பொதுவாக இரசித்துப் பார்ப்பதுண்டு. இன்று வெளியாகும் பல ஹாலிவூட் திரைப்படங்கள் கார்ட்டூன் திரைப்படங்களாக இருப்பதை நாம் காணலாம். குங்பு பண்டா, டின் டின், டோய் ஸ்டோரி, ஷ்ரெக் என்று பட்டியல் நீளம்.

ஆனால் இந்த அ கட் இன் பரிஸ் எனும் கார்ட்டூன் திரைப்படம் வித்தியாசமானது. சிறுவயதில் இரசிய மொழிபெயர்ப்பு சிறுவர் புத்தகங்கள் படித்திருகின்றீர்களா? உ+ம் நெருப்புப் பறவை போன்றவை?? இந்த பிரஞ்சுக் கார்ட்டூனில் வரும் சித்திர அமைப்பு ஏனோ அதையே எனக்கு ஞாபகப் படுத்தியது.

ஒரு தொழில்முறை திருடன் அவனுடன் ஒரு பூனை அவன் செல்லும் இடம் எல்லாம் செல்கின்றது. நகரின் மறுபக்கம் ஒரு பொலீஸ் அதிகாரியும் அவளின் மகளும். இந்தப் பெண் பொலீஸ் காரியையும் சிறுமியையும் வில்லனையும் திருடனையும் ஒரு கோட்டில் இணைப்தற்கு இந்தப் பூனை பயன்படுகின்றது.

வித்தியாசமான சித்திரங்களையும் அதனோடு ஒட்டிச் செல்லும் கதையும் மனதை வருடிச் செல்கின்றது.

இந்த கிருஸ்மஸ் விடுமுறைக்கு குடும்பமாக இருந்த டிவிடியில் போட்டுப் பார்க்க ஒரு நல்ல திரைப்படம். கட்டாயம் பார்க்க வேண்டிய கார்ட்டூன் திரைப்படம்.

புள்ளி 80/100

The Walking Dead

அண்மையில் AMC தொலைக்காட்சியில் த வோல்க்கிங் டெட் என்கிற தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியது. ஏற்கனவே பாகம் ஒன்று முடிவடைந்து பாகம் இரண்டு ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்தது. நண்பன் தயவில் பாகம் ஒன்று டிவிடி கையில கிடைக்கவே ஆறு எபிசொட்டுகளையும் ஒரே நாளில் பார்த்து முடித்தேன்.

Walking Dead Poster

சாதாரண சொம்பி (Zombie) கதைகளில் இருந்து வித்தியாசமாகவும் கொஞ்சம் கிலி ஊட்டுவதாகவும் இருந்தது. அதன் பின்னர் கட்டாயம் இரண்டாம் பாகத்தையும் பார்க்கவேண்டும் என்று எண்ணி அமெரிக்காவில் ஒலிபரப்பாகி சில மணி நேரத்தில் இலங்கையில் இருந்து பதிவிறக்கிப் பார்க்கத் தொடங்கினேன்.

த வோக்கிங் டெட் கதை ஒரு பொலீஸ் காரனைச் சுற்றி நடக்கின்றது. ஒரு சிறய நகரத்தில் பொலீஸ் செரீப்பாக வேலை செய்கின்றார் ரிக். ஒரு நாள் சட்டத்தை மீறும் நபர்களை மடக்கும் நிகழ்வில் காயப்பட்டு உயிர் நண்பன் சோன் இனால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகின்றார். சில நாள் கழித்து விழித்துப் பார்க்கும் ரிக்கிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது. அவர் காயப்படும் போது இருந்த உலகமும் இப்போது இருக்கும் உலகமும் இரண்டு துருவங்களாக இருந்தன. வைத்திய சாலை எல்லாம் அடித்து நொருக்கப்பட்டு சொம்பிகள் அலைந்து திரிகின்றன. அவற்றில் இருந்து தப்பி தனது குடும்பத்தைத் தேடி தனது பயனத்தை ஆரம்பிக்கின்றார். இதற்கு மேல் கதையை சொல்ல விருப்பமில்லை. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம். 😉

வோல்க்கிங் டெட் அரிப்பு அதிகரிக்கத் தொடங்கவே அது பற்றி ஆராயத் தொடங்கியதில் இன்னுமொரு இனிப்பான செய்தி கிடைத்தது. அதாவது வோக்கிங் டெட் என்பது ஒரு கிராபிக் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆக்கியிருக்கின்றார்கள். இதற்கும் மேலும் தாங்குமா இந்த உயிர். உடனே இணைய வழி காமிக்சுகளை இறக்கியாச்சு. பாகம் பாகமாக வாசிக்கத் தொடங்கினால் அடேங்கப்பா, தொலைக்காட்சித் தொடரை விட மிகவும் அருமை. புத்தகத்திற்கு புத்தகம் அலுப்பத் தட்டாமல் வாசிக்க வேண்டும் என்று வெறி அதிகமாகி எனது அன்ரொயிட் தொலைபேசி, டாப்லெட் என்று அனைத்திலும் நிரப்பி பயன நேரங்களில் கூட வாசித்துக் கொண்டு இருக்கின்றேன்.

தொலைக்காட்சிக் கதைக்கும், காமிக்ஸ் புத்தகத்தின் கதைக்கும் ஒற்றுமை இருந்தாலும் பல இடங்களில் புத்தகம் நிமிர்ந்து நிற்கின்றது. காமிக்சையும் தொலைக்காட்சித் தொடரையும் ஒப்பிடுவது தப்புத்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் காமிக்ஸ் உயர்ந்து நிற்கின்றது. தொலைக்காட்சியில் காட்ட முடியாத பல கோணங்களில் அபூர்வமாகச் சித்திரம் தீட்டியுள்ளார்கள். தொலைக்காட்சித் தொடரில் வரும் பொலீஸ் அதிகாரியை விட காமிக்சில் வரும் ரிக்கை மிகவும் பிடித்து விட்டது. 🙂

தொலைக்காட்சி Vs காமிக்ஸ்

நீங்கள் காமிக்ஸ் பிரியரானால் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகத் தொடர். உங்களுக்காக புத்தக அட்டைகள் சில இங்கே.

தொலைக்காட்சித் தொடர் 85/100
காமிக்ஸ் புத்தகம் 90/100

பி.கு: இவற்றை எல்லாம் 7ம் அறிவு எடுத்து எங்கள் 6ம் அறிவையும் கேள்விக்குறியாக்குபவர்கட்கு போட்டுக் காட்டவேண்டும். 😉
 

Kung Fu Panda 2: விமர்சனம்

2008 வெளி வந்த குங்பு பண்டா திரைப்படத்தை வெறுத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. திரையரங்குகளில் சக்கை போடு போட்ட திரைப்படம் அது. எந்த திரைப்படம் வெற்றி பெற்றாலும் அதைத் தொடர்ந்து இன்னுமொரு திரைப்படம் எடுப்பது ஹாலிவூட் வழமை. அவ்வகையில் இந்த குங்பு பண்டா 2 வெளிவந்திருக்கின்றது. குங்கு பண்டா கதை என்னவெனில் ஒரு நூடில் கடையில் பிறந்து (அப்படித்தான் முதல் நினைத்தோம் ஆனால் தத்தெடுக்கப்பட்டது) வளர்ந்த ஒரு பண்டா பெரிய குங்பு சண்டைக்காரனாக வர விரும்புகின்றது.  அதன் ஆசையும் முதலாம் பாகம் நிறைவில் முற்றும் பெறுகின்றது. அதாவது சீரோ டு ஹூரோ கதை 😉

இரண்டாம் பாகத்தில் புதியதாக ஒரு கதை முளைத்து விடுகின்றது. பண்டாவின் குடும்பம் ஒன்று இருப்பதாகவும் அதற்கு ஏதோ நடந்ததாகவும் அதற்கு ஒரு வெள்ளை மயிலே காரணம் என்றும் மெல்ல மெல்ல தெரியவருகின்றது. பண்டா தன் பூர்வீகத்தை அறிந்து கொண்டதா மயிலிற்கு என்ன ஆனது போன்ற விடையங்களுடன் திரைப்படம் நிறைவு பெறுகின்றது.

எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் அனிமேசன் திரைப்படங்களின் கதையமைப்பும் காட்சியமைப்புகளும் நாளுக்கு நாள் சிறப்பாகிக்கொண்டே வருகின்றது. நிறம் மொழி மதம் அவை எல்லாவற்றையும் விட வயது போன்றவற்றைக் கடந்து எங்களை இரசிக்க வைக்கின்றது.

Jennifer Yuh நிச்சயமாக கடும் முயற்சியையும் உழைப்பையும் இந்த திரைப்படத்தில் சிந்தி இருக்கின்றார். காட்சிக்கு காட்சி வரும் பண்டாவின் சேஷ்டைகளும், வார்த்தைக்கு வார்த்தை வரும் பகிடிகளும் படத்தை தூக்கி நிறுத்துகின்றது.

திரைப்படத்தின் முடிவு ஒரே கூத்தாக இருக்கும். பூவின் (அதான் பண்டாவின் பெயர் பூ) உள்மன அமைதியும் அதைத்தொடர்ந்த விளைவுகளும் துறைமுகத்தில் எதிரி யுத்தக்கப்பல்கள் முன்னாடி.. அட்ரா சக்கை அட்ரா சக்கை.. அதை நீங்களே பார்த்துக் கொள்ளவும்.

குடும்பத்துடன் சென்று இரசிக்க நிச்சயமாகத் தரமான ஒரு திரைப்படம். கட்டாயமாகத் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மூன்றாம் பாகத்தின் தொடக்கப் புள்ளியை இரண்டாம் பாகத்தின் முடிவில் காட்டிவிட்டார்கள்.