லக்கி லூக் துரத்தும் டால்ட்டன் சகோதரர்கள்

லக்கிலூக் கதைவாசிக்கும் பலரிற்கும் டால்ட்டன் சகோதரர்களைப் பற்றித் தெரியாமல் இருக்கச் சந்தர்ப்பம் இல்லை. ஆரோகணம் போல உயரத்தில் கூடிச்செல்லும் சகோதரர்கள் அவர்கள். சகோதரர்களில் மூத்தவர் மிகச் சிறியவர்தான் யோ டால்ட்டன். கடுகு சிறிது காரம் பெரிது என்பது போல அதி புத்திசாலியும், சிறை உடைப்புகளில் பல பூட்டுக்களை போட்டுத் தகர்ப்பவரும் இவர்தான். ஆனால் இவரிற்கு எதிர்மாறானவர் கடைக்குட்டியும் உயரமான தோற்றமும் உடைய அவ்ரல். கதையில் மிகப் பெரிய காமடிப் பீசாக இவர் வந்து பண்ணும் அட்டகாசங்கள் ஜோர். இவர்கள் இருவரையும் விட மற்றும் இரு சகோதரர்கள்.

உங்களுக்குத் தெரியுமா டால்ட்டன் சகோதரர்கள் வரலாற்றில் உண்மையாகவே இருந்தார்கள் என்பது?. வங்கி மற்றும் தொடரூந்து கொள்ளைகளில் சிறப்புற்று இருந்திருக்கின்றார்கள். காமிக்ஸ் கதைகளில் வரும் டால்ட்டன் சகோதரர்களுக்கு இவர்களே உத்வேகம் கொடுத்துள்ளனர்.

இவர்களின் தந்தை பெயர் லூயிஸ் டால்ட்டன் மற்றும் தாயார் பெயர் அடலீன் ஆகும். இவர்களுக்கு மொத்தம் 15 பிள்ளைகள் பிறந்திருக்கின்றன அதில் 2 குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துவிட்டன.

பிராங் டால்ட்டன் என்பவர் இவர்களில் மூத்த சகோதரன் ஆவார். சட்டதிட்டங்களைப் போற்றி அரச உத்தியோகத்தில் டெபுடி யு.ஸ் மார்சலாக வேலை செய்த இவர் ஒரு குதிரைத் திருட்டு சம்பந்தமான வழக்கை விசாரிக்கச்சென்ற இடத்தில் குதிரை களவாணிப் பயலால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆயினும் பின்னர் அந்த குதிரைக் களவானிப்பயலை சட்டம் இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது என்பது வேறு கதை.

கிராட், பாப் மற்றும் எம்மெட் ஆகிய மூன்று டால்ட்டன் சகோதரர்களும் மறைந்த அவர்கள் அண்ணன் வழியில் சட்டத்தின் மைந்தர்களாகப் பணிபுரிந்தனர் ஆயினும் சம்பள முரண்பாடு காரணமாக தமது தொழிலைவிட்டு நகர்ந்ததுடன் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளையும் செய்யத்தொடங்கினர். குதிரை கடத்தில், சட்ட விரோத மது கடத்தல் மற்றும் கொலை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள்மீது வந்து சேர்ந்தது.

1891ற்கும் 1892ற்கும் இடையில் சுமார் 4 தொடரூந்து வண்டிகளை டால்டன் சகோதரர்கள் கொள்ளையடித்தனர். இதைவிட கைது செய்த பொலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஆங்கிலப் பட பாணியில் ஓடும் இரயிலில் இருந்து குதித்து ஆற்றுநீரில் நீந்து சாகசத்தை எல்லாம் கிராட் டால்ட்டன் செய்திருக்கின்றார்.

தொடரூந்து வண்டிக் கொள்ளையில் கோலோச்சிக்கொண்டு இருந்த டால்ட்டன் குழு மெல்ல வங்கிக் கொள்ளைபக்கம் திரும்பியது. அக்டோபர் 5, 1982இல் கன்சாசில் உள்ள இரண்டு வங்கிகளை பட்டப்பகலில் கொள்ளையடிக்கு புறப்பட்டனர். இவர்களை அடையாளம் கண்டுகொண்ட ஊர் மக்கள் தாமும் துப்பாக்கிளை ஏந்தியவாறு இவர்களை சூழத்தொடங்கினர். கொள்ளையடித்து வெளியேறிய டால்ட்டன் சகோதரர்களுக்கும் மற்றவர்களுக்கும் துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில் எமெட் டால்ட்டன் தவிர அனைத்து டால்ட்டன் சகோதரர்களும் கொலைசெய்யப்பட்டனர். எமெட் டால்ட்டன் 23 துப்பாக்கி ரவைகள் துளைத்தும் உயிருடன் தப்பிப் பிழைத்தார் என்பதும் ஒரு கதை.

இதுதான் டால்ட்டன் சகோதரர்களின் கதை. அண்மையில் முந்திய லயன் பதிப்புகளில் ஒன்றான ஜாலி ஸ்பெஷல் ஐ கோகுலம் வாசகர் வட்டம் ஆதரவினால் கொழும்பில் வாங்கிக்கொண்டேன். அதனுடன் இலவச இணைப்பாக தாயில்லாமல் டால்ட்டன் இல்லை என்ற புத்தகமும் கிடைத்தது.

அதில் டால்ட்டன் சகோதரர்களுடன் டால்ட்டனின் தாயாரும் வந்து சேர்கின்றார். மா டால்ட்ன் என்ற இந்தப் பாத்திரமும் அமெரிக்க வரலாற்றில் புகழ்பெற்ற மா பாக்கர் என்பவரால் ஊக்கம் பெற்று படைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் எங்கள் லயனோ வேறுவிதமாகக் கதைசொல்கின்றது. கீழே உள்ள ஸ்கானில் லயன் மா டால்ட்டன் பற்றி என்ன சொல்கின்றது என்று பாருங்கள்.

குறிப்பு : கீழே உள்ள படங்களில் எழுத்துக்கள் தெளிவில்லாவிட்டால் படங்கள் மேல் சொடுங்கி படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கலாம்.

டால்ட்டன் சகோதரர்களைப் பிடித்திருந்தால் இந்தக்கதையும் உங்களுக்குப் பிடித்திருக்கும். லக்கிலூக்கின் லூட்டிகளும் ஜாலி ஜம்பரின் குட்டிக்கரணங்களுக்கும் இந்தக்கதையில் குறைவில்லை. வாசித்து பயனடையுங்கள் அனைவரும்.

வாழ்க தமிழ் வழர்க லயன் காமிக்ஸ் 😉

7 thoughts on “லக்கி லூக் துரத்தும் டால்ட்டன் சகோதரர்கள்”

  1. அருமை நண்பா! நான் ஜான் சைமன் என்கிற கயவன். உங்க நண்பன். சரியா?

  2. இலங்கையில் இப்படியொரு நண்பர் காமிக்ஸ் ஒன்றை விமர்சித்து எழுதியது நல்ல விடயம். தாயில்லாமல் டால்டனில்லை லக்கிலூக்கின் ஒரு அக்மார்க் காமெடி ரகம். லக்கிலூக்கிற்கு காமிக்ஸ்ல் வேலை கம்மி!

    ஜேன் இருக்க பயமேன்,மனதில் உறுதி வேண்டும் போன்ற லக்கிலூக் காமிக்ஸ்களை படித்துப் பாருங்கள் அவை இன்னும் டக்கர் ரகம்

Leave a Reply